தோட்டம் வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் கருவேப்பிலை செடிகளின் கிளைகளை முறிக்க முறிக்கத்தான் புதிய கிளைகள் புசு புசுவென்று வேகமாக வளரும் என்று. கிளைகளின் முனைகளை வெட்டுவதை கவாத்து செய்தல் என்பார்கள். ரோஜா செடிகளில்கூட ஆண்டுக்கொருமுறை கவாத்து செய்வது நல்லது. அப்போதுதான் புதிய கிளைகள் தோன்றும்.

ஏற்கனவே தோன்றிவிட்ட கிளைகள் அதற்குப் பிறகு தோன்ற முயலும் புதிய குழந்தை கிளை மொட்டுகளை வளரவிடாமல் அதிகாரம் செலுத்துகின்றன. ஒரு சுயநலம்தான். செடிகளுக்குக்கூட சுயநலம் உண்டு. எது அதிகாரம் செலுத்துகிறதோ அதன் தலையை கிள்ளியெடுத்து விட்டால் கீழே புதிய கிளைகள் மொட்டு விட ஆரம்பிக்கின்றன.

நீங்கள் பரிதாப்பட்டு காப்பாற்றி முளைக்க வைத்த மொட்டுகள் சாமானியமானவை அல்ல: அவை வளந்ததும் உடனே மற்ற மொட்டுகளை அதிகாரம் செலுத்த ஆரம்பிக்கின்றன.

கைகட்டி சேவகம் செய்து வந்த ஊழியர், அவரது அதிகாரி  ஓய்வுபெற்றுச் சென்றதும் அந்த இடத்தை இவர் அடைகிறார். உடனே முன்னவரைவிட அதிகமாக தனக்குக் கீழ் உள்ளவர்களை அவர் அதிகாரம் செலுத்துவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம் அல்லவா.  செடிகளும் மரங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

கிளைகளின் முனைகளிலிருந்து வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் உற்பத்தியாகின்றன. இவை புதிதாக பிறக்க முயலும் மொட்டுகள் முகிழாதபடி தடுக்கின்றன. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் எது என்பது தெரிந்துவிட்டது. ஸ்ட்ரைகோலேக்டோன் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இனி கவாத்து செய்யாமல் எப்படி புதிய கிளைகளை தூண்டுவது என்பதை பயிரியல் அறிஞர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

-முனைவர் க.மணி ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Pin It

மனிதர்களுக்குப்பிடித்தமான உணவுப்பட்டியலில் இப்போது தவளையின் கால்களும் சேர்ந்து கொண்டன. விளைவு.....தவளையினம் அழிந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் சொல்கிறது அடிலெய்டு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள்.

நோய்களின் தாக்கம், வாழ்விடங்கள் இழப்பு, புவிவெப்ப உயர்வு போன்ற அச்சுறுத்தல்களினால் தவளையினம் ஏற்கனவே அழிந்து கொண்டிருக்கிறது. இப்போது உணவிற்காக அவை கொல்லப்படுவது அதிகரித்து வருவதாகவும், சட்டபூர்வமாக இது தடுக்கப்பட வேண்டும் என்றும் அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களை வரைமுறையின்றி உணவிற்காக அழிக்கும் போக்கு இயற்கைச் சமநிலையை சீர்குலைக்கும். உணவுச்சங்கிலியின் ஒரு கண்ணியை அறுக்கும் இந்த செயல் சட்டத்தின் இரும்புக்கரங்களால் தடுக்கப்படவேண்டிய நேரம் வந்துவிட்டது.

பிரெஞ்சுக்காரர்கள் மட்டுமே தவளையின் கால்களை விரும்பிச் சாப்பிடுவார்கள் என்கிற காலம் மலையேறிப் போய்விட்டது. ஐரோப்பாவின் பள்ளிக்கூட சிற்றுண்டிச் சாலைகளில் கூட தவளைக்கால்கள் விற்கப்படுகின்றன. பெரும்பாலான ஆசிய நாட்டவர்கள் தவளைக்கால்களின் ரசிகர்களாக மாறிப் போயிருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஒபாமா கூட தவளைக்கால்களை விரும்பிச் சாப்பிடுவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு பில்லியன் தவளைகள் உண்ணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெல்லாம் ஒரு குத்துமதிப்பான தகவல்தான். இந்தோனேசியா மட்டுமே தவளைகளை அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தோனேசியாவின் உள்ளூர் பயன்பாடு ஏற்றுமதியைக் காட்டிலும் ஏழு மடங்கு அதிகம். ஓர் ஆண்டின் சில பருவங்களில் உள்ளூர்த் தேவைகளுக்காக தவளை பிடித்த காலம் மலையேறிப் போய்விட்டது. இப்போது ஆண்டு முழுவதும் சர்வதேச சந்தையில் தவளைக்கால் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.

இன்னும் படிக்க:

http://www.sciencedaily.com/releases/2009/01/090120195731.htm

தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

வளிமண்டலத்தில் உள்ள காற்று மாசடைந்துவிட்டதால் பூக்களின் மணம் பரவும் தூரம் பாதிக்கப்பட்டிருப்பதாக உயிரி வேதியியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். வாசனை மூலக்கூறுகள் காற்றில் எளிதாக பரவக்கூடியவை. ஆனால் மாசடைந்த காற்று வாசனை மூலக்கூறுகளுக்கிடையே அதிக இடைவெளியை ஏற்படுத்திவிடுகின்றன. இதன் விளைவாக மகரந்தச்சேர்க்கை ஏற்படுத்தும் பூச்சியினங்கள் பூக்களின் மிகஅருகில் சென்றால் மட்டுமே வாசனையை உணரமுடிகிறது. இனப்பெருக்கத்திற்கு உதவும் பூச்சியினங்களை ஈர்க்கும் வாசனை தூரம் மூன்றில்  ஒரு பங்கு குறைந்துபோய்விட்டது.

poo_00பத்தடி தூரத்தில் பூக்களின் மணத்தை நுகர்ந்த வண்டினம் இப்போது மூன்றடி தொலைவு சென்றால் மட்டுமே பூக்களின் மணத்தை நுகரமுடியும். பூக்கள் என்றுமே ஐ லவ் யூ சொன்னதில்லை. பூக்களை வைத்துக்கொண்டு மனிதன் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி பல்லைக் காட்டுகிறான். அவனுடைய செயல்பாடுகளால் பூக்கள் மணமிழந்து வருகின்றன.

காற்று மாசடைவது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தால் வெகுவிரைவில் நாம் ரோஜாக்களின் மணத்தை அறியமுடியாமல் போகலாம் என்கிறார் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ் என்பவர். வளிமண்டல மாசுகள் பூக்களின் மணம் பரவும் விதத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆராய்ந்து வருகிறார் இந்த அறிஞர். கார்கள், தொழிற்சாலைகள் இவையெல்லாம் புகையை காறி உமிழ்கின்றன. தொழிலகங்களும், கார்களும் காறித்துப்பும் புகை காற்றில் கலந்து வாசனை மூலக்கூறுகளின் வில்லனாக மாறிவிடுகின்றன என்பது இவரது கண்டுபிடிப்பு.

நமக்கு பூக்களின் மணம் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் பூச்சியினங்களுக்கு...? மனிதர்கள் பூக்களை முகரமுடியாவிட்டால், பூக்களுக்கு ஏதும் இழப்பில்லை. ஆனால் பூச்சியினங்கள் பூக்களின் வாசனையை முகருவதில் இடையூறு ஏற்படுமானால் பூக்களின் குலம் அழிந்துபோகுமல்லவா? பூச்சியினங்கள் பூக்களை கண்டறிய அதிகநேரம் எடுத்துக்கொள்கின்றன. வாசனை மிகுந்த பூக்களை தேடியலைவதில் மிகுந்த நேரத்தை செலவிடும் பூச்சியினங்கள், மிகக் குறைந்த நேரம் மட்டுமே பூந்தேனை உட்கொள்ளுவதற்கு செலவிடும். இதனால் மகரந்தச்சேர்க்கை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துபோகும். இதற்கு மாற்றுவழி என்ன? தூய்மையான சுற்றுப்புறத்தை பராமரிப்பதுதான் ஒரே வழி என்கிறார் வளிமண்டல இயல் அறிஞர் ஜோஸ் ஃப்யூண்டிஸ்.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/videos/2008/0807-pollution_killing_flowers_fragrance.htm

-தகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

dolphinகொஞ்ச நேரம் நிதானமாக யோசிக்கிறார், சாதக பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்தபிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று வேலையை ஆரம்பிக்கிறார். இதை சிந்தித்து முடிவெடுத்தல் என்கிறோம். மிருகங்கள் இப்படி சிந்தித்து முடிவெடுக்கின்றனவா அல்லது எந்திரம் போல வெளியிலிருந்து வரும் தூண்டுதலுக்கு ஏற்ப ஆட்டோமேட்டிக்காக முடிவெடுக்கின்றனவா என்பது பெரும் சர்ச்சையாக இருந்து வருகிறது. யூனிவர்சிட்டி ஆஃப் பஃப்பெல்லோவைச் சேர்ந்த டேவிட் ஸ்மித் என்பவர் டால்ஃபின், குரங்குகள், புறாக்கள் போன்ற எளிய மிருகங்களும் தம்மை உணர்கின்றன, யோசிக்கின்றன, மனத்தில் தீர்மானம் செய்தபிறகு செயலில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்.

டால்ஃபினுக்கு ஒரு சோதனை தந்தபோது அது சிறிது நேரம் நிதானித்து அடுத்து செய்ய வேண்டிய காரியங்களை முடிவு செய்துவிட்டு பின் செயலில் இறங்குவதை அவர் குறிப்பிடுகிறார். பரிணாமத்தில் ஏதோ ஒரு விலங்குக் கூட்டத்தில்தான் உணர்வு பிறந்திருக்கிறது. அதன் காரணமாக சிந்தனையும் தோன்றியிருக்கிறது என்று அவர் தெரிவிக்கிறார். பறவை பாலூட்டிகளிடம் அது இருப்பதால் அதற்கும் முந்தைய ஊர்வனவற்றில் அது தோன்றியிருக்கலாம் என்று தெரிகிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It