‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே’ என்றும், ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்றும், கவிதை பாடி ஐந்தறிவு உயிரினங்களைச் சொந்தம் கொண்டாடினான் மகாகவி பாரதி. புத்தனும், காந்தியும், அகிம்சையை வாழ்க்கை முறையாக போதித்த நாடு இது. இவர்களின் வழியில் விலங்குகளின் நலனைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்.

நமது நாட்டில் விலங்குகள் நல இருவாரம்  ஜனவரி 14-ம்  தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விலங்குகள் நலன் தொடர்பான விஷயங்களில் கவனம்  செலுத்துவதும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதும்தான் இதன் நோக்கமாகும்.

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகளின் மீது அக்கறை செலுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் .இந்த விலங்குகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனித வாழ்க்கைக்கு உதவி செய்கின்றன. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கின்றன. தாவரங்களுக்கு உறுதுணையாக உள்ளன.

இந்த வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் நிச்சயம் உதவ முடியும், எப்படி? இந்திய விலங்குகள் நல வாரியம்  வெளியிட்டுள்ள இந்தக் குறிப்புகள் நாம்  செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்துகின்றன.

• உங்கள் பகுதியில் நோய் வாய்ப்பட்டிருக்கும் விலங்குகளை, விலங்குகள் நல மருத்துவரிடம்  அழைத்துச் செல்லலாம். ஆதரவற்ற தெரு நாய், பூனைகளைத் தத்தெடுத்து உங்கள் வீட்டில் வளர்ப்பதன் மூலம் ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம் .

• ஆதரவற்ற விலங்குகளுக்கான ஒரு சிறு உறைவிடத்தை உருவாக்கி அவைகளுக்கான உணவளித்து கவனித்து வரலாம்.

• பறவைகளுக்கு உணவு, குடிநீர் அளிப்பதற்காக சிறு, சிறு மண்குவளைகளை உங்களின் வீட்டுக்கு அருகில் ஆங்காங்கே வையுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அவர்கள் விரும்பும் போது உணவுத் தானியங்களையும், நீரையும்  இந்த குவளையில் வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள்,

• ஒரு விலங்கு சிரமப்படும்  போது அதற்கு எப்படி உதவுவது என்று உங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு முதலுதவி வகுப்புகளை நடத்தலாம்.

• பறவைகளுக்குப் புகலிடமாக உள்ள வேப்பமரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை அதிக எண்ணிக்கையில் நட்டு வளர்க்கலாம்.

• பிளாஸ்டிக் கவர்களுக்கு எதிராக உங்கள் பகுதி மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம்  செய்யுங்கள். பிளாஸ்டிக் பைகள் தெருக்களில் அலட்சியமாக எறியப்படுவதால் பசுக்களும், எருமைகளும்  அவற்றைச் சாப்பிட்டு இறந்து போகின்றன. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பையைப் பயன்படுத்தச் சொல்லி மக்களிடமும், வியாபாரிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

• ஆதரவில்லாமல் தெருக்களில் சுற்றித் திரியும்  பல குதிரைகளுக்கும், கழுதைகளுக்கும்  மருத்துவ உதவி தேவைப்படுகிறது. இந்த விலங்குகளுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம். இவைகளுக்கு உணவையும், மருந்தையும்  தொடர்ந்து அளிக்கலாம் .

• பள்ளிகளில் விலங்குகளை அறுத்துக் கூறுகளாக்கி ஆராய்ச்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். .உயிருள்ள விலங்ககளுக்குப் பதிலாக கணினியில் தவளை, எலி, மண்புழு, கரப்பான்பூச்சி, புறா ஆகியவற்றின் ரத்த நாளங்கள், ஜீரண அமைப்பு, பிற உடல் பாகங்களை உருவாக்கி மாணவர்களுக்குக் கற்றுத் தரலாம் . பள்ளிகள் இது தொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உதவியை நாடலாம் .

• சாலையோரங்களில் அடிபட்டும், நோயுற்றும்  உள்ள விலங்குகளைக் காப்பதற்காகப், பல்வேறு இடங்களில் சிறு முதலுதவி முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.

• தெருவோர விலங்குகளுக்கு உங்களால் முடிந்த உணவளிக்கலாம். அருகில் உள்ள இறைச்சிக் கூடங்களுக்குச் சென்று, விலங்குகளை சித்தரவதை செய்யாமல் மனிதாபிமான முறையில் கொல்வது குறித்து அறிவுறுத்தலாம். இறைச்சிக் கூட விதிகள் பற்றிய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துங்கள்.

• மிக இளம் வயதில் குழந்தைகளை இறைச்சிக் கூடப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க வேண்டும்,

• பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், மாடுகள், எருமைகளுக்கு ஆக்சிடாக்சின் ஊசி போடக்கூடாது. இது உணவு, மருந்து கலப்படத்தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்ட விரோதமான செயலாகும்,. இதனைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

• தெரு நாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டம், ராபிஸ் நோய்த் தடுப்புத் திட்டம் ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் உங்கள் பகுதிகளில் செயல்படுத்தலாம்,

நமது நாட்டின் பாரம்பரியத்தில், கலாச்சாரத்தில் அகிம்சைக்கு முக்கிய இடமுண்டு. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 51 ஏ பிரிவில், வனங்கள், ஏரிகள், வன உயிரினங்கள் ஆகியவை உள்ளிட்ட இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதும், உயிருள்ள ஜீவன்களிடம் பரிவு காட்டுவதும் இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறப்பட்டுள்ளது.

விலங்குகளுக்கு எதிரான சித்தரவதைத் தடுப்புச் சட்டத்தை முதன் முதலில் கொண்டு வந்த மிகச் சில உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1890-ம் ஆண்டு இச்சட்டம் நமது நாட்டில் கொண்டு வரப்பட்டது. 1960-ல் இச்சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. கொடுமைகள், சித்தரவதைகளில் இருந்து விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் பல்வேறு விதிமுறைகள் இதில் படிப்படியாக சேர்க்கப்பட்டன.

மத்திய அரசு 1962-ம் ஆண்டில் இந்திய விலங்குகள் நல வாரியத்தை ஏற்படுத்தியது. இந்த வாரியம் 28 உறுப்பினர்களுடன், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

விளையாட்டுகள், பொழுதுபோக்கு, விளம்பரப் படங்கள், திரைப்படங்கள், சர்க்கஸ் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் விலங்குகளைப் பாதுகாப்பதற்காகப் ‘பெர்ஃபார்மிங் அனிமல்ஸ் சட்டம் - 2001’-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. பொழுதுபோக்கிற்காக விலங்குகளைப் பயன்படுத்துவதை இந்தச் சட்டம்  நெறிப்படுத்துகிறது. பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளை இச்சட்டத்தின் கீழ்  இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் .

கரடி, குரங்கு, புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய ஐந்து விலங்குகளையும் காட்சிப்பொருளாக எந்தப் பொழுதுபோக்கு ஊடகத்திலும், விளையாட்டிலும், செயல்முறையிலும் பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. மாட்டு வண்டிப் பந்தயம், குதிரைப் பந்தயம், நாய்ச்சண்டை, சேவல் சண்டை, காளைகள் சண்டை, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுக்களில் அப்பாவி விலங்குகள் கொடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவற்றைக் காப்பதற்காக இந்திய விலங்குகள் நல வாரியம் சட்ட ரீதியாகப் போராடி வருகிறது.

நம்மைச் சுற்றியுள்ள வாயில்லா இந்த அப்பாவி ஜீவன்களிடம் சற்றே பரிவு காட்டுவோம். எதிர்க்க முடியாது என்ற ஒரே காரணத்தால் விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதும், சித்தரவதை செய்வதும்  நியாயமற்றது.

நீங்கள் மனது வைத்தால் உங்களைச் சுற்றியுள்ள சிறு சிறு விலங்குகளைக் காப்பாற்றலாம். சுற்றுச் சூழல் சமநிலையைத் தக்க வைக்கலாம்.

(அறிவியல் ஒளி ஜனவரி 2012 இதழில் வெளியானது)

Pin It