லெம்மிங்ஆர்க்டிக் பகுதிகளில் பெரிய மரம் செடி கொடிகள் கிடையாது. ஏதோ கொஞ்சம் குற்றுச் செடிகள், பூண்டுகள், சின்ன சின்ன மூலிகைகள், லைக்கன்ஸ் மற்றும் பாசிகள் நிறைய உண்டு. இவைகள் இணைந்ததுதான் துந்திரா பிரதேசம். வடக்கே செல்லச் செல்ல, தாவரங்களைப் பராமரிக்க வேண்டிய வெப்பம் மிகக் குறைவு. அதன் அளவு, அடர்வு, உற்பத்தி, வகைகள் என அனைத்தையும் குளிர் காலி செய்து விடுகிறது. இங்கு வளரும் குற்றுச் செடிகளும் கூட அதிக பட்சம் 2 மீ உயரம் வரைதான் இருக்கும். லைக்கன்ஸ் மற்றும் பாசிகள்தான் அடர்வாக உருவாகின்றன. அதன் பெயர் செட்ஜ்ஜஸ்(sedges). ரொம்ப குளிரான பகுதிகளில், தரை மொட்டையாய் இருக்கும் சில புற்கள் இருக்கலாம். ஆர்க்டிக் பாப்பி என்ற மஞ்சள் நிற பூ பூக்கும் செடி உண்டு.

துந்திரா பகுதியில் தாவர உண்ணிகளும் உண்டு. துருவ முயல், லெம்மிங் (Lemming), புனுகு எருது, கலைமான்கள் உண்டு. துருவ முயல் குளிர் அதிகமாகும் காலங்களில் தரைக்கு அடியில் குழிபறித்து உறங்கும். காது மட்டும் கொஞ்சம் நீளமாக இருக்கும். புனுகு எருதின் உடலிலிருந்து புனுகு வாசனை வரும். இந்த வாசனை பெண்ணைக் கவருவதற்காகவே. ஆனால் இந்த விலங்குகளை எல்லாம், ஆர்க்டிக் நரியும், ஓநாயும் வேட்டையாடி உண்ணும். துருவக்கரடியும் கூட மற்ற விலங்குகளை அடித்து உண்ணும். ஆனாலும் கூட பொதுவாக துருவக்கரடிக்கு, கடல் வாழ் விலங்கினங்களின் மேல்தான் கொள்ளைப் பிரியம். கடலிலும், பனிப்பகுதிக்குள்ளும் நுழைந்தே வேட்டையாடும்.

white_fox_370ஆர்க்டிக் நரி வெள்ளையாகவே இருக்கும். பொதுவாக ஆர்க்டிக் பகுதியில் வாழும் அனைத்து விலங்குகளும் வெள்ளையாகத்தான் இருக்கின் றன. துருவ நரிக்கு அடர்த்தியான தோலும், அதன் கீழே கொழுப்பும், தோலின் மேல் அடர்வான நீண்ட முடியும், குளிர் மற்றும் பனிக்குப் பாதுகாப்பாக இருக்கிறது. இது பொதுவாக லெம்மிங் (lemming), வோல் என்னும் சிறிய கொரிப்பான், முட்டைகள், போன்றவற்றை சாப்பிடும். சமயத்தில் தாவரங்களையும், பெர்ரியையும் விதைகளையும் கூட உண்ணும். உணவு அதிகம் கிடைத்தால் பனித் தரையில் பதுக்கி, பாதுகாப்பாக வைத்திருந்து உண்ணும். அதே சமயம் உணவுத் தட்டுப்பாடு என்றால், மற்ற விலங்குகள் விட்டுச் சென்ற உணவையும், பெரிய விலங்குகளின் கழிவுப் பொருட்களையும்/மலத்தையும் கூட சாப்பிடும்.

ஆர்க்டிக்கில் வாழும் லெம்மிங் என்னும் கொரிப்பான் சிறியது. 30 -110 கிராம் எடைதான் இருக்கும். 7 -15 செ. மீ நீளம் இதன் உடல். உடல் சிறிதாக வால் நீளமானதாக இருக்கும். இவை தாவர உண்ணிகள். மற்ற துந்திர விலங்குகள் போல இவை குளிர்கால உறக்கம் மேற்கொள்வதில்லை. எந்த நேரமும் துறுதுறுதான். புல்லைப் பறித்து முன்னெச்சரிக்கையாக சேமித்து வைத்துக் கொள்கிறது. ஆர்க்டிக் பகுதியில் பறவைகளும் காணப்படுகின்றன. இங்குள்ள கடல் வாழ் விலங்குகள் இப்பகுதிகளுக்கு மட்டுமே உரித்தானவை. வேறு எந்த பகுதியிலும் காணப்படுவதில்லை. சீல், (கடல் பசு ) வால்ரஸ்(கடல் சிங்கம்), பலீன் திமிங்கலம், வெள்ளைத் திமிங்கலம் நீலத் திமிங்கலம் என்ற பெரிய கொலைகார திமிங்கலம் மற்றும் மேல்தாடை நீண்டு தந்தமான நார் திமிங்கலம் என ஏராளமான விலங்குகள் ஆர்க்டிக் கடலில் வாழ்கின்றன. நார்த்திமிங்கலத்தின் உடல் 5 மீ நீளம். ஆனால் இதன் தந்தம் சுமார் 3 மீ நீளம் உள்ளது.

அண்டார்க்டிகாவில் வாழும் வளர்ந்த நீலத் திமிங்கலம் சாப்பிடத் துவங்கினால் ஒரு நாளில் சுமார் 3.6 - 4 டன் உணவு உட்கொள்ளும். தொடர்ந்து 6 மாதம் சாப்பிட்டு விட்டுப் பின்னர் 6 மாதம் பட்டினி கிடக்கும். இது ஒரு நாளில் உண்பதை, ஒரு மனிதன் 4 ஆண்டுகள் நிறைவாக உண்ண முடியும். இங்கு ஒரு வினோதமான மீன் உள்ளது. அதன் பெயர் ஐஸ் மீன் ( Ice Fish). இதன் இரத்தத்தில் சிவப்பணு கிடையாது. இங்குள்ள குளிர்ச் சூழலில் எளிதில் நீரிலேயே ஆக்சிஜன் கரைந்து விடுவதால் அப்படியே ஆக்சிஜனை இந்த மீன் எடுத்துக் கொள்கிறது. இது மனத்தைக் கொள்ளை கொள்ளும் வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் செவுள் கூட வெள்ளைதான். அண்டார்க்டிகாவின் தரை விலங்கில் மிகப் சிறியது என்று சொல்லிக்கொள்ளக் கூடியது ஒரு பூச்சிதான். அதன் அளவு 1.3 செ. மீ தான். அதனால் பறக்க முடியாது. அண்டார்க்டிக்காவில் எல்லா விலங்கினங்களும் கடலில்தான் வசிக்கின்றன.

அண்டார்க்டிக்காவில் 17 வகை பென்குவின்களும், 35 வகை பறவைகளும், 11 வகை டால்பின்களும், 6 வகை சீல்களும், 8 வகை திமிங்கலங்களும் கடலில் வாழ்கின்றன. இந்த விலங்குகள் எல்லாவற்றையும் நீங்கள் அருகில் போய் பார்க்கலாம். மனிதனைப் பார்த்து பயந்து ஓடிவிடாது. இதனைப் போய் பார்ப்பதற்கு உகந்த நேரம் டிசம்பர், ஜனவரி மாதங்கள் தான். கடற்கரை ஓரங்களில் திமிங்கலங்கள் அணிவகுத்து நிற்கும். சீல்கள் பார்க்கவும் இதுதான் சரியான தருணம். இப்போதுதான் பெங்குவின்கள் முட்டையிட்டு, அடை காத்து குஞ்சு பொரிக்கும். பேபி பென்குவினை, அது ஓடி விளையாடுவதை வசந்த காலத்தில் (பிப்ரவரி, மார்ச்) பார்க்கலாம். ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு மாதிரி அண்டார்க்டிகா அழகாக காட்சி அளிக்கும். ஒரு நாளில் கூட, ஒவ்வொரு மணி நேரமும் வேறு வேறு வகையில் அழகு கொப்பளிக்கும்.

arctic_tern_370ஆர்க்டிக் டெர்ன் (Arctic Tern) என்ற குட்டிப் பறவைதான் உலகிலேயே அதிக தூரம் வலசை வரும் பறவையாகும். இது ஆர்க்டிக் வட்டமான துந்திராவில்தான் இனப்பெருக்கம் செய்கிறது. எங்கிருந்து எங்கு வலசை போகிறது தெரியுமா? வட துருவ ஆர்க்டிக்கிலிருந்து தென்துருவ அன்டார்க்டிக்கின் பனிப்பரப்புக்கு குளிர்காலத்தில் பறந்து ஓடி விடுகிறது. இதன் தூரம் எவ்வளவு என்று சொன்னால் மயக்கம் போட்டுவிடுவீர்கள். சுமார் 35,000 கி. மீ. தொலைவை. ஒவ்வொரு ஆண்டும் பயணிக்கிறது. கிட்டத்தட்ட உலகை சுற்றி வரும் தூரம் இது. ஆனால் இந்த பறவையின் அளவு சுமார் ஒரு அடி நீளம்தான். இந்த அற்புதப் பறவை, தன் வாழ்நாளின் பெரும்பகுதியை, பறப்பதிலேயே செலவிடுகிறது. வலசை வரும் நேரங்களில் இவை உணவும் உண்பதில்லை. அதே சமயம் அவை ஒரே சமயத்தில் நில்லாமல் சுமார் 4,000 கி. மீ தூரம் வரை பறந்து பயணிக்கிறது.

Pin It