காலை சூரிய உதயத்தின் போதும், மாலை அந்தியின் போதும் பொன்னை வாரி இறைத்தது போல வானம் தங்க நிறம் தரித்துக் காணப்படும். நகர வாழ்க்கை ஓட்டத்தில் விழுந்துவிட்ட பலரும் சூரிய உதயத்தை பார்ப்பதேயில்லை. அதிகபட்சம் அவர்கள் மாலை நேரத்தை பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். இப்படி பொன் வாரி இறைக்கப்பட்ட காலை, மாலை நேரங்கள் நமக்குள் சக்தியை ஏற்றி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. இப்படிப்பட்ட தருணங்களை மறக்க முடியாத அனுபவமாக ஆக்கிவிடும் பண்பு பறவைகளுக்கு உண்டு.

உண்மையில் பறவைகளிடம் இருந்தே பல விஷயங்களை மனித இனம் கற்றுக் கொண்டது. ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற திரைப்பாடல் வரி, அதில் ஒன்றை மட்டும் பதிவு செய்துள்ளது. உண்மையில் இயற்கை சீராக இயங்குவதற்கான செயல்பாடுகளில் பறவைகள் பெரும் பங்கு செலுத்துகின்றன. அந்த செயல்பாடுகள் பற்றி அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை.

மக்களின் வாழ்க்கையுடன் பறவைகள் இரண்டறக் கலந்துள்ளன. இயற்கை மீதும், பறவைகள் மீதும் பண்டை காலம் முதல் தமிழர்கள் காட்டி வந்த ஆர்வம் பல்வேறு வகைகளில் பதிவாகியுள்ளது. தற்போது உள்ளதைப் போல சுற்றுச்சூழல் விழிப்புணர்வோ, அறிவியல் வளர்ச்சியோ இல்லாத காலத்தில், தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து இயற்கை கூறுகள் பிரிக்க முடியாததாக இருந்து வந்தது.

அதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சத்திமுற்றப் புலவரின் ‘நாராய், நாராய்’ என்று தொடங்கும் சங்கப்பாடல்.

அந்தப் பாடல் –

நாராய், நாராய், செங்கால் நாராய்,
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும் நின்பெடையும் தென்திசைக் குமரிஆடி
வடதிசைக்கு ஏகுவீர் ஆயின், எம்மூர்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி...
-என்று போகிறது.

white_stork_370இந்தச் செய்யுள் வரிகளில் சிவப்பு கால்கள், பவளச்சிவப்பு நிறத்துடன் பனங்கிழங்கைப் பிளந்தது போல நீண்டு காணப்படும் அலகைப் பற்றி புலவர் வர்ணிக்கிறார். இந்த குறிப்புகளைக் கொண்டு பார்க்கும்போது புலவர் குறிப்பிடும் பறவை செங்கால் நாரையாக (White Stork) தான் இருக்க வேண்டும். செங்கால் நாரையை தெளி வாக வர்ணிப்பது மட்டுமின்றி, அப்பறவையின் இடப்பெயர்வு பண்புகளையும் புலவர் காட்சிப் படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் குளிரால் பனி போர்த்தப்படும்போது, உணவு தேடி பல பறவைகள் இந்தியாவுக்கு வருகின்றன. ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில் பறவைகள் மேற்கொள்ளும் இந்த இடப்பெயர்வு ‘வலசை போதல்’ என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த வலசை போதலை மேற்கண்ட செய்யுள் 18 நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது. இயற்கை வரலாற்று குறிப்புகளை புலவர்கள் உவமையாகப் பயன்படுத்தியுள்ளனர். அந்தச் செய்யுளின் முதல் ஆறு வரிகளில் இயற்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு முன்பே இது பற்றி அந்தச் சமூகத்தில் விழிப்புணர்வு இருந்திருக்க வேண்டும். பறவைகளின் பெயர் முதல் வலசை போகும் பண்பு வரை பல்வேறு அம்சங்களை பண்டைத் தமிழர்கள் கூர்ந்து நோக்கி, பதிவு செய்துள்ளனர்.

மக்கள் - பறவைகள் இடையிலான உறவு இப்படி பண்டை காலம் தொட்டே தமிழ் நிலத்தில் உறுதியான பிணைப்பாக தொடர்ந்து வந்துள்ளது. அந்த உறவுக்கான சாட்சியத்தை தமிழகத்தின் பல்வேறு சரணாலயங்களில் பார்க்கலாம்.

(குறிப்பு: மேற்கண்ட செய்யுளை எழுதிய புலவரின் பெயர் தெரியவில்லை. சங்க இலக்கியத்தில் பல செய்யுள்களை எழுதிய புலவர்களின் பெயர் இல்லை. மேற்கண்ட செய்யுளில் அவர் கூறியுள்ள சத்திமுத்தம் என்ற ஊரின் பெயராலேயே இந்தச் செய்யுளை எழுதிய புலவர் சத்திமுற்றப் புலவர் என்றழைக்கப்படுகிறார்)

பறவைகள் வலசை போதல்

குளிர் காலங்களில் மேற்கு நாடுகள் பனியால் மூடப்படும்போது, சில பறவை இனங்கள் கிழக்கில் உள்ள வெப்பமண்டல நாடுகளுக்கு இரை தேடி வலசை வருகின்றன.

வலசை வரும் பறவைகளின் பிரதான தேவை உணவு. அவற்றின் உறைவிடங்கள் எல்லாம் பனியில் உறைந்து உணவுக்கு வழியில்லாதபோது, சூழ்நிலைகள் சாதகமாக உள்ள கிழக்கு நாடுகளுக்கு அவை வலசை வருகின்றன. ஆர்டிக், சைபீரியா போன்ற பகுதிகளில் இருந்து பல ஆயிரம் கி.மீ பறந்து வருகின்றன. வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள் இங்கு கூடு கட்டி இனப்பெருக்கம் செய்வதில்லை. நீர்வாத்து, செங்கால் நாரை, உள்ளான் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் இரைதேட மட்டுமே நமது சரணாலயங்களை நாடுகின்றன.

தமிழக பறவை சரணாலயங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் வெண்கொக்கு, வக்கா, அரிவாள் நாரை, கூழைக்கடா போன்றவை நம் நாட்டுப் பறவைகள்தான். இவை கோடை காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் வாழ்பவை. இவை உள்ளூர் வலசை பறவைகள் (Inland Migraed Secies) எனப்படுகின்றன.

இமயமலையின் பனிப்பகுதிகள் அருகே வசிக்கும் பட்டைத்தலை வாத்து, குஜராத்தின் கட்ச் பகுதியில் வசிக்கும் பூநாரைகள் பழவேற்காடு ஏரி, கோடிக்கரை சதுப்புநிலத்துக்கு வருகின்றன. சிறகி எனப்படும் நீர்வாத்தும் பெருமளவில் தமிழக ஏரிகளுக்கு வருகிறது.

இப்படி வரும் பறவைகள் அனைத்துக்கும் தமிழ்ப் பெயர்கள் உண்டு. பன்னெடுங்காலம் தொட்டே இந்தப் பறவைகள் இங்கு வந்து செல்கின்றன. மேலே கூறியது போல பண்டைத் தமிழ் இலக்கியங்கில் வலசை வரும் பறவைகள் பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் பறவைகள்

பறவைகள், வலசைபோதல், கூடு கட்டுதல், இனப்பெருக்கம் செய்தல், உணவு உள்ளிட்டவை பற்றி ஆராய்ச்சி செய்வது ஒரு நவீன காலப் பழக்கமே. இந்தத் துறை கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகள் வரலாறு கொண்டது. ஆனால் இது தொடர்பான குறிப்புகள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. பண்டைத் தமிழர்கள் பறவை வலசை போதல், அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி அறிந்துள்ளனர். கி.பி. 2ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியத்தில் பறவைகள் பற்றிய விரிவான வர்ணனைகள் கிடைக்கின்றன.

நிலங்களை ஐந்தாகப் பகுத்திருந்ததே, இயற்கை பற்றி தமிழர்கள் கூர்மையான அறிவைக் கொண்டிருந்ததற்கு எடுத்துக்காட்டு. ஒவ்வொரு நிலத்தையும் திணை, முறையாகப் பகுத்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி இயற்கைக் கூறுகளையும் வகுத்திருந்தனர்.

Flamingo_370சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றின் 67வது பாடலில் பூநாரைகள் (Flamingo) பற்றிய குறிப்பு வருகிறது. உலகெல்லாம் வியக்கும் பூநாரைகளின் உணவுப் பழக்கம். வலசை போதல் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குமரி அம் பெருந்துறை ஆயிரை மாந்தி
வடமலை பெயர்குவை ஆயின்
-என்று போகிறது அந்தச் செய்யுள்.

‘குமரி நீர்நிலையில் காணப்படும் நுண்ணுயிரியை உண்ட பின், வடக்கில் உள்ள இமயமலைக்கு நீ வலசை போகிறாய்’ என்று இந்தச் செய்யுள் குறிப்பிடுகிறது. இன்றளவும் பூநாரைகள் குஜராத்தில் இருந்து கோடிக்கரை, பழவேற்காடு ஏரி பகுதிகளுக்கு வலசை வந்து செல்கின்றன.

இது போன்ற இயற்கைப் பதிவுகள் தற்போதைய இலக்கியங்களில் மிகமிகக் குறைவாக இருக்கிறது என்று காட்டுயிர் எழுத்தாளர் சு.தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுகிறார்.

நவீன தமிழ் இலக்கியங்களில் காணப்படும் காட்டுயிர் மூடநம்பிக்கைகள், விழிப்புணர்வு இன்மை பற்றி காட்டுயிர் எழுத்தாளர் ச.முகமது அலி ‘நெருப்புக் குழியில் குருவி’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார்.

காக்கைகளில் குடும்பப் பிரிவினைகள் உண்டு. தன் குடும்பத்தைத் தவிர இதர காக்கைகளுடன் அவை வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதில்லை. அற்புதமாகப் பாடும் பறவைகளில் பலரையும் கவர்ந்தது குயில். குயிலைப் பார்க்காதவர்கள் கூட அதன் குரலை கேட்டிருப்பார்கள். இப்படி மயக்கும் மனோகர குரலால் பாடுவது ஆண் குயில்தான். காதல் செய்வதற்கு பெண்ணுக்கு விடுக்கும் அழைப்பு இது. ஆனால் பாடகிகளுக்கு ‘இசைக்குயில்’ என்று பெயர் வைக்கிறார்கள். எவ்வளவு மோசமான முரண் இது. எரித்தாலும் புத்துயில் பெறும் பீனிக்ஸ் என்றொரு பறவையே கிடையாது என்பது போன்று பல்வேறு கருத்துகளைப் பற்றி அப்புத்தகம் பேசுகிறது.

மேற்கண்ட இரண்டு கூற்றுகளும் தமிழ் எழுத்தாளர்களிடம் நிலவும் இயற்கை பற்றிய ஆழ்ந்த அறிவின்மையை வெளிப்படுத்துகின்றன. இது வருந்தத்தக்க ஒரு விஷயம் தான். நமது பாரம் பரியத்தை மிக வேகமாக இழந்துவிட்டோம். சமூகத்தில் முன்னோடிச் சிந்தையாளர்கள் என்று கருதப்படும் எழுத்தாளர்களிடமும் இது போன்ற வறட்சி காணப்படுவது நல்ல அறிகுறியல்ல.

சாம்பல் கொக்கு (Eastern Grey Heron)

வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிளி சரணாலயங்களில் இந்தப் பறவை பெருமளவில் இனப் பெருக்கம் செய்கிறது.

ஆழமில்லாத நீர்நிலைகளில் கொக்குகள் (Egret) வேகமாக நகர்ந்து இரையைத் தேடும். அதற்கு நேர்மாறாக சாம்பல் கொக்குகள் நுட்பமாக பதுங்கி நகரக் கூடியவை. மிக மெதுவாக, நீரிலிருந்த கால்களை சப்தம் எழுப்பாமல் வெளியே எடுத்து, நீரை அசைக்காமல் மீண்டும் கால்களை உள்ளே வைக்கும். சப்தமெழுப்பாமல் இரை தேடும் பண்பு கொண்டது இப்பறவை.

பரணரின் அகநானூறு 276வது செய்யுள், சாம்பல் கொக்கின் இரை தேடும் பண்புக்கு ஒப்பாக, இரவில் திருட வீட்டுக்குள் நுழையும் திருடனின் நகர்தலை குறிப்பிட்டுள்ளது.

நீளிரும் பொய்கை இரை வேட்டெழுந்த
வாளை வெண்போத்து அனய, நாரை தன்
அடியநி வறுதலஞ்சிப் பயப்பய
கடியிலன் புகூம் கள்வன் போல
-அகநானூறு 276 – மருதம் – பரணர்

மேற்கண்ட செய்யுள்கள் மூலம் நீர்ப்பறவைகள் வலசை போதல் உள்பட கூர்மையாக உற்று நோக்கப்பட்ட அவற்றின் பழக்கவழக்கங்களை அந்தக் காலத்தில் இருந்தே தமிழர்கள் பதிவு செய்து வந்துள்ளது தெரிகிறது.

Pin It