நாம் நலமுடன் வாழ இயற்கையான பல்லுயிர் வாழ்விடங்கள் தேவை.பல்வேறு வகையான தாவரங்கள், இயற்கையாக பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்ற எண்ணற்ற உயிரினங்கள்  வாழும் காடுகள் அழிக்கப்பட்டால் சுற்றுப்புறச் சூழல் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பது கண்கூடு. நீலகிரி மாவட்டம் வளமான வாழ்விடங்களையும், தாவரங்களையும் இழந்து,அதன் பொலிவும், உயிர் சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர் காலத்தில் இதன் எதிர் விளைவு இன்னும் கடுமையாக இருக்கும் என உயிரியல் மற்றும் சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்நிலைக்கு முக்கிய காரணங்கள் மக்களின் வாணிபப் போக்கும், மூட நம்பிக்கைகளும், மக்கள் தொகை பெருக்கமும் தான். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் பெருமளவில் காடுகளும் தாவரங்களும் அழிக்கப்பட்டு, இயற்கைக்கு புறம்பான தேயிலையை அதிகளவில் விளைவித்ததால் ஏற்பட்ட, ஏற்பட போகும் விளைவுகளை சிறிதும் எண்ணிப் பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் (பொருளாதாரத்தில்) உயர்த்தியது என்ற காரணத்திற்காக இன்றைய காலம் வரைக்கும், இந்த பச்சைப் பாலைவனத்தை பாதுகாப்பு இயக்கம் கொண்டு காப்பாற்ற நினைப்பதும், அதற்காக வெவ்வேறு வகைகளில் விளக்கம் கொடுப்பதும் இயற்கை வாதிகளுக்கு பெரிய கவலையையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது.


கோத்தகிரிக்கு அருகில் உள்ள அரவேணு 'அக்கால்' ஆறு, குஞ்சப்பனையில் உள்ள  கோழிக்கரை ஆறு, இவற்றில் எல்லாம் இன்று நீர் ஓட்டம் குறைந்து கழிவு நீர் கலந்து, அகலம் குறைந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கிறது. அக்கால் ஆறு தொடக்கம் முதல் கடைசி வரையில் இருபுறமும் தேயிலைத் தோட்டமும், சாக்கடையும் தான் இருக்கின்றன. முன்பு அங்கு யானைகள், மான்கள், கரடிகள், நடமாட்டம் இருந்தது. இன்றைக்கு அந்த ஆற்றில் இருந்து சுமார் 10 கி.மீ.சுற்றளவிற்கு விலங்குகள் நடமாட்டம் அறவே இல்லாமல் போனது. ஒரு காலத்தில் அருமையான நாவல் மரங்கள், விக்கி மரங்கள்,ஆரஞ்சு, பேரி, பலா போன்ற பழ மரங்கள் , சுற்றிலும் காட்டு மரங்கள்  அடர்ந்து இருந்த அளக்கரைப் பகுதி, இன்றைக்கு சுருங்கி எங்கு பார்த்தாலும் தேயிலை செடிகளுடன் ஆறு முற்றிலும் அழிந்து விட்ட நிலையை நாம் காண்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கம்பீரமாக இருந்த காத்தரின் அருவி, இன்று வற்றி சுருங்கி தேயிலை தோட்டங்களும் பெரிய, சிறிய விடுதிகளும், மலை மரங்கள் அழிக்கப்பட்டு அதன் சிறப்பையே இழந்து வாடிக் கொண்டிருக்கிறது.


நீலகிரி மலையின் பெரும்பாலான பகுதிகளில் இதே நிலை தொடர்கிறது. அதைப் பற்றி ஆழமான விஷயம் கொண்டோர் கூட அரசியல் அடிப்படையில் இன அடிப்படையில் இயங்குவதும், அடிப்படையான காரணத்தை விட்டு விட்டு, அமெரிக்கா கூறும் நவீன காரணங்களை, தொடர்பு சாதனங்கள் மூலம் அறிந்து கொண்டு, இங்குள்ள சூழலைப் பொருத்திப் பார்க்காமல், சுற்றுச் சூழல் என்ற பெயரில் இயக்கம் நடத்தியும், பேசியும், எழுதியும், வருவதைக் கண்டு சிந்தனையாளர்கள் திகைத்துப் போய் அமைதியாக வேதனைபடுகிறார்கள். எனவே காடுகள், காப்பாற்றப்பட ஒருங்கிணைப்பு குலைந்து போனது. இப்படிபட்ட நிலையில் நீலகிரியில் அதிகமாக மனிதத் தொல்லைகளுக்கு உள்ளாகும் காட்டு விலங்குகளில் யானையே முதலிடம் வகிக்கிறது என்று 'ஆசிய யானைகள் பாதுக்காப்பு அமைப்பு' தரும் செய்தி நம்மை மேலும் அதிர்சியடைய வைக்கிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் பரவலாக இந்நிலை இருப்பினும் குறிப்பாக கூடலூர்,முதுமலை பகுதியில் யானை வழித்தடங்கள், விவசாயத்திற்காகவும், கால்நடை மேய்ச்சலுக்காகவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. கீழ்கோத்தகிரி, கூட்டாடா, குஞ்சப்பனைப் பகுதிகளில் அதிக தேயிலை சாகுபடிக்காக யானைக் காடுகள் மிக மோசமாக அழிக்கப்பட்டன. மேலும் யானைகள் தேயிலை மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாகக் கூறி கொடூரமாக விரட்டப்படுகின்றன அல்லது மின் வேலி மூலம் தாக்கபடுகின்றன என்று மாயர் யானை வழித்தடப் பாதுகாப்புத் திட்டம் கூறுகிறது. ஆசியா யானைகளில் 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட யானைகள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தென்னிந்தியாவில் மட்டும் 13,000 முதல் 14,000 வரை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் யானையின் வாழிடங்களாக 11 இடங்கள் அடையாளமிடப்பட்டுள்ளது. அதில் நீலகிரி உயரின மண்டலம் முக்கிய பகுதியாகும். நீலகிரி உயரின மண்டலத்தில் யானைகளின் நிலை எதிர்காலத்தில் மிக மோசமாகி விடும் என்று நம்பப்படுகிறது.

நீலகிரியின் நிலைத்த மேம்பாடு, தேயிலைத் தோட்டங்களை அழித்து விட்டு, பழ மரங்களையும், காய்கறிகளையும் பயிரிட்டு, காடுகளைப் பாதுகாக்க உதவுவதிலே அடங்கியுள்ளது. காடுகள் நீர் வளப் பாதுகாப்பிற்கும், செழிப்பான உயிர் சூழலுக்கும் உதவும் என்பது அறிஞர்கள் முடிவு. மாற்றிக் கொள்வது கடினமல்ல, மனது வைத்து இயற்கையைக் காப்போம், நீலகிரிக்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்.

(காட்டுயிர் இதழில் எழுதிய கட்டுரை)

Pin It