அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழலால் மிகவும் சீர்கேடடைந்த இந்திய நாட்டின் 43 தொழிற்பகுதிகளில், தமிழகத்திலுள்ள வேலூர், கடலூர், சென்னை மணலி, கோயமுத்தூர் ஆகியனவும் உட்படும். நிலம், நீர், காற்று ஆகிய அனைத்திலும் மாசுபட்ட நகரங்களாக நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்தாண்டு இவைகளை வரையறை செய்துள்ளது. குறிப்பாக கடலூர் தொழிற்பேட்டைப் பகுதியில் இயங்கும் தொழிற்கூடங்களால் ஏற்படும் சூழல்கேடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடலூர் சிப்காட் தொழிற்சாலையின் அருகில் வசிக்கின்ற மக்களுக்கு புற்றுநோய் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் கடந்த சூன் மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடலூர் தொழிற்பேட்டை பகுதியைச் சுற்றிலும் வாழ்கின்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு இரண்டாயிரம் மடங்கு அதிகமுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பொதுவாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆபத்தான வேதிப்பொருட்களை காற்றிலும், குடிநீரிலும், நிலத்தடியிலும் கலந்து விடுகின்ற முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இத் தொழிற்கூடங்களில் மழைநீர் வடிகாலாக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களின் வழியே ஆபத்தான வேதிக் கழிவுகள் கலந்து வருவதாக, பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதற்கொரு நிலையான தீர்வினை வழங்குவதில் போதுமான அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் முறையான ஒப்புதலின்றி இயங்கி வரும் வேதிக் கழிவு நீரகற்று நிலையமான கியூசெக்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், அந்நிலையத்திற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே பத்தாண்டுகளுக்கும் மேலாக வேதிக் கழிவு நீரகற்று நிலையம் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைக்குள் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வண்ணச் சாயத்திற்கான மூலப்பொருட்கள், பி.வி.சி.க்கான மூலப்பொருட்கள், சாயங்கள் போன்ற வேதி தொடர்பான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கிருக்கும் ஆலைகள் அனைத்தும் நாளொன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால் தொழிற்பேட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர், காற்று, மண் ஆகியவை பெருமளவு சீர்கேடடைந்துள்ளன. இச்சூழல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு, மக்கள் நல அமைப்புகளும் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆலைகளிலிருந்து பெறப்படும் கழிவு நீர் அனைத்தையும் சுத்திகரிப்புச் செய்து கியூசெக்ஸ் நிலையம் முறைப்படி கடலுக்குள் கொட்டுகின்ற பணியைச் செய்து வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு இங்குள்ள ஆலைகளின் முயற்சியால் ரூ.5 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இக்கழிவு நீரகற்று நிலையம், நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவினைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையம் நாள்தோறும் 1.20 கோடி லிட்டர் வேதிக் கழிவுகளைச் சுத்திகரிப்புச் செய்து கடலில் சேர்க்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டாலும், பல வேளைகளில் முறையாய் சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ளாது அப்படியே கொண்டு போய் கடலில் கழிவுகளைக் கலப்பதாகவும், இதனால் வங்கக்கடலிலும், உப்பனாற்றிலும் உள்ள நீர் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கியூசெக்ஸ் நிறுவனத்தின் அத்துமீறலைக் கணக்கிற் கொண்டே மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கடலில் கலந்து விடுவதை கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் கடந்த 2004ஆம் ஆண்டு சான்றுகளோடு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு புகார் அளித்திருந்தது. நாளேடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தானே முன்வந்து இவ்வழக்கினை எடுத்துக்கொண்டதுடன், பல தரப்பிலும் விசாரணைகளையும் மேற்கொண்டது. பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கியூசெக்ஸ் நிலையத்தை மூடுவதற்கு ஆணையிட்டது. கியூசெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட மேல் முறையீட்டு நடவடிக்கையால் ஒரு மாத மூடலுக்குப் பின்னர், அதே நீதிமன்றத்தின் உத்தரவோடு மறுபடியும் இயங்கத் தொடங்கியது. இறுதி ஆணையை உயர்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்க உள்ள நிலையில், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி அளிக்கப்படாத இந் நிலையத்தினை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது சட்டவிரோதமான செயலென்றும், தொழிற்பேட்டைக்குள் இயங்கும் பல்வேறு ஆலைகளின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே மௌனச் சாமியாராக இருப்பது பெரும் குற்றமென்றும் முணுமுணுப்புகள் எழத் தொடங்கியுள்ளன. அது மட்டுமன்றி, திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகளையும் கியூசெக்ஸ் நிறுவனம் மூலமாக சுத்திகரிப்புச் செய்து கடலில் கலக்கும் அரசின் முடிவினையும் கடலூர் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கும் சாஷன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து நள்ளிரவில், ஹைட்ரோ புரோமின் வாயு வெளியேறி காற்றில் வேகமாகப் பரவியதால், அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாயினர். இதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களால் மாவட்ட நிர்வாக ஆணையின் பேரில், சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியதால், மறு உத்தரவு வரும்வரை நிறுவனம் மூடப்படுகிறது என அறிவித்து, சீல் வைக்கப்பட்டது. சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் வெளியேற்றிய விச வாயுவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணத்தொகையோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. சிலருக்கு இன்னமும் நுரையீரல் கோளாறு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23 இலட்சம். வேளாண்மை மற்றும் ஆலைத் தொழில்களைச் சார்ந்தே இம்மக்களில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் படித்த மற்றும் பாமர மக்களுக்கு கடலூர் தொழிற்பேட்டை குறிப்பிடத்தகுந்த வேலை வாய்ப்பினை வழங்குகிறதெனினும், ஆபத்தான வேதி ஆலைக்கூடங்கள் சுற்றுப்புற மக்களுக்கும், வேளாண்மைக்கும், நிலத்தடிநீருக்கும் பெரும் ஆபத்தினை விளைவித்து வருகிறது. கடலூர் தொழிற்பேட்டையிலுள்ள ஆலைகளை ஆய்வு செய்த நடுவண் நீரி அமைப்பு, தொழிற்பேட்டையிலிருந்து வெளியாகும் கழிவுகள் கடுமையான நச்சுப் பொருட்களைக் கொண்டவை என்றும், சுற்றுப்புறத்திலுள்ள 22 கிராம மக்களின் உடல் நலம் குறித்து பொதுவான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அறிக்கை அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், இன்னும் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
'கடலூர் பெரும் ஆபத்து மையமாக மாறி வருகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் மாசடைந்துள்ளது. இந்த ஆலைகளின் கழிவுகளால் சுற்றுப்புற மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என நீரி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 ஆய்வு மாதிரிகளில், வெளியேறுகின்ற 25 வேதிக்கழிவுகளில் 12 கழிவுகள் புற்று நோய் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை என்ற விடையே கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பென்சீன் மற்ற எல்லாவற்றையும் விட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும். அதே போன்று டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் ஆகியவற்றோடு புற்றுநோயை உருவாக்கக்கூடிய காட்மியம், பெரிலியம், பேரியம் ஆகியவை உட்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வரை கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கக்கூடிய ஆலைகளில் 20 ஆலைகள் உரிமம் இன்றி இயங்கி வருகின்றன' என்கிறார் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுவேதா நாராயணன்.
மனிதர் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் கடலூர் 16ஆவது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ள நிலையில், கடலின் சீற்றத்திற்கு அரணாகவும், பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் திகழ்கின்ற பிச்சாவரம் அலையாத்திக் காடுகளுக்கு அருகே அனல் மின் நிலையம் அமைய நடுவண் அரசு ஒப்புதலளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். கடலூர் மாவட்டத்தின் ஒரே சொர்க்கபுரி பிச்சாவரத்திலுள்ள அலையாத்திக் காடுகளே. இதற்கும் உலை வைக்க அரசு துடிப்பது, கடலூரில் இனிமேல் மனிதர்கள் வாழவே கூடாது என்று நினைப்பில்தானா? பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற பிச்சாவரம், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இரண்டரை கோடி ரூபாயை வருமானமாக ஈட்டித் தந்துள்ளது. 1358 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து அமைந்துள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடு, அழகானதொரு சோலை. 18க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகளைக் கொண்ட காடு. ஒவ்வொரு ஆண்டும் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இங்கு அனல் மின் நிலையம் அமைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பெண்ணை மற்றும் கெடிலம் போன்ற மிகப் பழமையான ஆறுகள் கடலூர் மாநகரின் வளமைக்குச் சான்று. தமிழிலக்கியங்களும், அப்பர், சுந்தரர் போன்ற சமயக் குரவர்களின் இறைப்பாடல்களிலும் இடம் பெறுகின்ற இவ்வாறுகள் தற்போது வளம் குன்றி வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பெண்ணை, கெடிலம் ஆறுகளையும் விட்டுவைக்கவில்லை. மேற்காணும் இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னமும் அரசின் காதுகளில் விழவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக கடலூரின் குடிநீர்த் தேவைக்காக பெண்ணையாற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உவர்நீராக மாறிவிட்டது. காரணம், அதிகபட்ச நிலத்தடி நீர் உறிஞ்சுதலின் காரணமாக பெண்ணையாற்றிலிருந்து தேவையான நீரைப் பெற முடியவில்லை. அதே போன்று கெடிலம் ஆற்றின் குறுக்கே, தமிழக முதல்வராயிருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்ட திருவந்திபுரம், திருவதிகை அணைகள் தற்போது பெருமளவு தூர்ந்துவிட்டன. ஆற்றின் இரு மருங்கிலும் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கின்ற காரணத்தால், மேற்காணும் அணைகள் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
தற்போது கடலூரில் தண்ணீர்ச் சிக்கல் அதிகரித்துள்ள நிலையில், முன்னரே கட்டப்பட்டுள்ள மேற்காணும் அணைகள் மூலமாகத் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தூர்ந்து போயிருக்கும் அணைகளில் உள்ள மணலை கடலூர் மக்களின் பயன்பாட்டிற்கு எடுப்பதுடன், அணைகளை ஆழப்படுத்தி தொடர்ந்து தண்ணீரைத் தேக்க முயற்சி செய்வது மிகவும் அவசியம். கெடிலம் ஆறு, கல்வராயன் மலைப்பகுதியில் ஊற்றெடுத்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி உப்பனாற்றில் கலந்து இறுதியாக வங்கக்கடலைச் சென்று சேர்கிறது. நல்ல மழைக்காலங்களில் கெடிலமாற்றில் ஓடும் அதிகபட்ச நீர் பயன்பாடின்றி கடலில் போய் கலக்கிறது. இதற்கொரு தீர்வினைக் கண்டால், கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர், குடிநீர்ப் பற்றாக்குறைக்கும் முடிவு காண இயலும்.
பழமையான மனித நாகரிகத்தைத் தன்னுள்ளே கொண்டு, அவ்வப்போது அதற்குரிய சான்றுகளையும் வெளிக் கொணரும் கடலூர் மாவட்டம், நினைத்துப் பார்க்க முடியாத சூழல் சீரழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகையான சூழல் கேட்டிற்கு ஆட்பட்டுள்ள கடலூர் மாநகரை, காப்பதென்பது தற்போது புதிதாய் அமைந்துள்ள தமிழக அரசின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். மக்கள் வாழவே தகுதியற்ற நகராக நடுவணரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கடலூர் வளம் கொழிக்கும் நகராக மாற்றப்பட வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் விருப்பம். கடலூரின் பண்டைய வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்து, சூழலுக்குப் புறம்பான ஆலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அங்கு வாழ்கின்ற மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிகோல முயற்சி செய்வது நடுவண், மாநில அரசுகளின் பொறுப்பாகும். செய்ய முன் வருவார்களா..?
உழவர்கள் வழங்கிய நிலம்
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு கட்டமாக 1018 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலத்தில் மணிலா, முந்திரி, சவுக்கு என நல்ல வருமானம் தருகின்ற பயிர்களே நிறைய விளைந்தன. இதனால் உழவர்கள் பெரும் பயனடைந்தனர். ஆனாலும் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பகுதி உழவர்கள் தங்கள் நிலங்களை தொழிற்பேட்டைக்காக வழங்கினர். இங்கு தொழிற் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு நிலங்கள் அரசால் வழங்கப்பட்டது. கடலூரின் தொழில் விரிவாக்கத்திற்காக ஏழை உழவர்களால் வழங்கப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது ஒருபுறமென்றால், வேதித் தொழிற்கூடங்களால் நிகழும் மாசுபாடுகள் மற்றொருபுறம்.
வேதிக்கழிவுகளால் மீன்கள் இறப்பு
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூர் உப்பனாற்றங்கரையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அதேபோன்று நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, இராசாப்பேட்டை, தம்பனாம்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோயை, அய்யம்பேட்டை மற்றும் ரெட்டியார்பேட்டை ஆகிய கிராமங்களில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொத்துக் கொத்தாய் செத்து கரை ஒதுங்கின. இதற்கு முழு முதற்காரணம் உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள சில தொழிற்கூடங்களின் நச்சுக் கழிவுகளே. வேதிக்கழிவுகளால் தாக்குப் பிடிக்கும் மீன்களே கூட தற்போது இறக்கத் தொடங்கியிருப்பது கடலூர் மீனவர்களை பெரும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
வலிமை பெறும் கெடிலம், பெண்ணையாற்றின் இருபுறக் கரைகள்
கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்ற. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதே போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
- இரா.சிவக்குமார் (
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரு சக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் முகமூடி அணிந்தோ அல்லது கைக்குட்டைகளால் மூக்கை இறுக பொத்திக் கொண்டோ பயணம் செய்வதை தமிழகத்தின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் மிக இயல்பாகக் காண முடிகிறது. நம்மைச் சுற்றிலும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் புகை மாசு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, மனித வாழ்வியலின் இருப்பிற்கே உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாசுபாடற்ற தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல், நகர்ப்புறவாசிகள் படுகின்ற பாடு சொல்லி முடிவதில்லை. இதனால்தான் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டால், குடும்பத்துடன் சிலர் மலைப்பகுதிகளுக்கோ அல்லது கிராமப்புறங்களுக்கோ படையெடுத்து சென்று விடுகின்றனர். தற்போதைய நகர்ப்புற வாழ்வியல், சூழல் சீர்கேட்டிற்கு பொதுமக்களை விரைந்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியக் கிராமங்களில் அடுப்பெரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தாய்மார்களை, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் தாக்குவதால், அதிலிருந்து மீட்டெடுக்க சமையல் எரிவாயுத் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பரவலாக அறிமுகப்படுத்தி புரட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், வாகன மற்றும் தொழிற்சாலை புகை மாசு காரணமாக, தமிழக நகர்ப்புற மக்களின் கவலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
வான்வெளியிலிருந்து புறப்பட்டு பூமியை வந்தடையும் எண்ணற்ற நுண் துகள்களோடு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தூசுகளும், பல்வேறு வேதிப்பொருட்களால் ஆன புகைக் கரிமங்களும் மனிதர்களை மட்டுமன்றி, இம்மண்ணில் வாழும் எண்ணற்ற உயிர்களையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் கடந்த 2010ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதற்குரிய உறுதிமொழியை உறுப்பு நாடுகள் அனைத்தும் எடுத்துக் கொண்டன. 194 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் இந்தியா கரிம புகை மாசு வெளியேற்றத்தை 2020ஆம் ஆண்டிற்குள் 20லிருந்து 25 விழுக்காடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அய்.நா.விடம் திட்ட அறிக்கையை அளித்தது. அதே போன்று அமெரிக்கா 17 விழுக்காடும், ஐரோப்பிய ஒன்றியம் 20 விழுக்காடும் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிக்கை அளித்திருந்தன. ஆனாலும் நம்மைச் சுற்றி தொடர்ந்து புகை மாசு அதிகரிப்பதற்கான சூழல்களே மிகுந்து காணப்படுகின்றன.
புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலமே இந்த மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆக்சிஜன் என்றழைக்கப்படும் உயிர்வளி இங்குதான் நிறைந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை குளிர்விப்பதுடன், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சையும் தனக்குள்ளே வாங்கிக் கொண்டு புவியின் உயிர்ச்சூழலை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பல்வேறு வாயுக்களின் அடர்த்தியாகத் திகழும் இந்தப் பரப்பைத்தான் 'பசுங்குடில்' என்றழைக்கிறோம். வரைமுறையின்றி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் மாசுபாடுகளால், உயிர்களைப் பாதுகாக்கும் பசுங்குடிலில் தற்போது சேதாரம் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட பூமியில் வெப்ப அதிகரிப்பிற்கும், அதன் தொடர்ச்சியான பேரிடர்களுக்கும் முக்கியக் காரணமாய்த் திகழ்வது பசுங்குடிலில் ஏற்பட்டுள்ள வாயுக்களின் அதிகரிப்பே. இதனைக் குறைப்பற்குரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் அதே வேளையில், தற்போதுள்ள நிலையிலேயே அதனைப் பேணுவதற்கும் உலக நாடுகள் அனைத்தும் முன் வர வேண்டும். இதில் இந்தியாவிற்கு கூடுதல் பொறுப்புண்டு. சீனாவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மக்கள் சக்தியைக் கொண்டுள்ள நாடு இந்தியா. தன் குடிமக்களின் நல வாழ்வில் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியாக வேண்டிய நிலையில் தற்போது இந்திய நாடு உள்ளது.
பொதுவாக வாகனங்கள் வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் ஒருவர், இருபது சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகிறார். ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைட், கார்பன் டையாக்சைட், ஈயம், பென்சீன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சுவாசிப்பதால் பல்வேறு நுரையீரல் கோளாறுகளும், சுவாசச் சிக்கல்களும் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். குருதிப் புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, செல்களில் சிதைவு, இதயம் தொடர்பான நோய்கள், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் என பல்வேறு விளைவுகளுக்கும் ஆட்பட வேண்டியுள்ளது. புதை வடிவ எரிபொருட்களில் மிக ஆபத்தானது டீசல். இதனை எரிப்பதால் வெளியாகும் புகையில் உயிர்க்காற்றை நாசம் செய்யும் கார்பன் மோனாக்சைட் அதிகளவு உள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 11 இலட்சம் மோட்டார் வாகனங்கள் இயங்குகின்றன. அப்படியென்றால், வெளியாகும் கார்பனின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். இப்போது புரியும் சென்னையில் ஏன் வெப்பம் அனலாகத் தகிக்கிறதென்று?
அதேபோன்று கடந்த 1951ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 30 இலட்சம். ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு 12 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு கணக்கிட்டுப் பார்த்தால், தற்போது 20 கோடிக்கும் மேலாக அதிகரித்திருக்கக்கூடும். ஒட்டு மொத்த இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மும்பை, சென்னையில் மட்டும் 32 விழுக்காடு வாகனங்கள் ஒடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சூலை மாதம் வரை 1.26 கோடி வாகனங்கள் ஒடிக் கொண்டிருப்பதாக மோட்டார் வாகனங்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. இது இந்திய அளவில் இரண்டாவது இடம். தமிழகத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 24.34 இலட்சம். இது இந்திய அளவில் முதலிடம். (நன்றி தினகரன் 19.10.2010). சென்னையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடாக வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.
சென்னைப் பெருநகரத்திற்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை நிறுத்திப் பராமரிப்பதற்கான இடம் குறித்த மாநகராட்சியின் 'தேடல்' கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தால் கண்டிப்பிற்கு ஆளானது. சூழலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூங்காவை அப்படியே மாற்றி வாகன நிறுத்துமிடமாக உருவாக்குவதற்கு பெரும் முயற்சி செய்த சென்னை மாநகராட்சியை உயர்நீதிமன்றம் கடுமையாய்க் கண்டித்துள்ளது. சுற்றுச்சூழலில் அக்கறையே இல்லாது, தனது வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கும் சென்னை மாநகராட்சியைப் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இந்திய சனநாயக மாண்பின் அழகிற்கு சிறப்பான சான்றாகும். வணிகத்தையும், அதனால் பெறுகின்ற வருமானத்தையும் கணக்கிற் கொண்டு அரசு அமைப்புகளே சூழலுக்கு எதிராக இயங்குவது உலகில் வேறு எங்குமே காணாத ஒன்றாகும். பசுமைக் கட்டடங்கள், பசுமைக் கட்சிகள், பசுமை அமைப்புகள், பசுமைத் தொழிற்சாலைகள் என உலகெங்கும் பசுமை குறித்தும், சூழல் மேம்பாடு குறித்தும் விரிவாக ஆலோசனை செய்து, செயலில் இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர் திசையில் பயணம் செய்வது, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டிற்கு அழகாகுமா?
தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும கழிவு நீரால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட 88 நகரங்களில் வேலூர் மாவட்டம் 8ஆம் இடத்திலும், கடலூர், மணலி, கோவை, திருப்பூர், மேட்டூர், ஈரோடு ஆகியவை முறையே 16, 20, 34, 51, 56, 78ஆவது இடங்களில் உள்ளன. இது நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரமாகும். தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் மாசினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இப்புள்ளிவிபரத்திலேயே தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் இடம் பெறுகின்றன எனும்போது, வாகனங்கள் வெளியேற்றுகின்ற புகை மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகக்கூடும். கடுமையான நச்சுப் புகை மாசுபாட்டின் காரணமாகத்தான் போபால் சம்பவத்தில் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியை எதிர்கொள்ள நேரிட்டது. அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையாலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தொழிற்பேட்டைகளில் இது போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றும் ஆபத்தான தொழிற்சாலைகள் தற்போதும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன.
1952ம் ஆண்டு இலண்டன் நகரில் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக 6 நாட்களில் 4000 முதல் 8000 பேர் வரை இறந்துள்ளனர். பழைய சோவியத் யூனியனில் 1979ம் ஆண்டு உயிர் வேதியல் சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பல நூறு மக்கள் இறந்தனர். இதுபோன்று உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றனர் அல்லது தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக உலகின் பல்வேறு இடங்களில் அமில மழை பொழிவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. தொல்லுயிர் எரிபொருட்களான நிலக்கரி, போன்றவை எரிதல், ஊர்திகளினின்று வெளிப்படும் கழிவுப்புகை, காடுகள் மற்றும் புல்வெளிகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் போன்றவற்றால் அமில மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதனால் மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தாவரங்கள் உயிர்வாழ முடிவதில்லை, மனிதர்களையும், நீர் வாழினங்களையும் அச்சுறுத்துகின்றது. காடுகள், பயிர்களை அழிக்கிறது, விவசாய உற்பத்தித் திறன் குறைகிறது, கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், மேம்பாலங்கள், வேலிகள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் அரிக்கப்படுகின்றன. அமில மழை பொழிவதற்கான அனைத்துக் காரணிகளும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் தடையின்றித் தென்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரியது.
கடந்த ஏப்ரல் மாதம் திருவொற்றியூர் கத்திவாக்கத்தில் இயங்கி வந்த உரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெளியேறிய புகையால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது அண்மைச் சான்று. இதனால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. சுவாச கோளாறு, ஆஸ்துமா போன்ற நோய்களால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும், பேட்டரி உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகளும் தமிழகமெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவ்வப்போது இத்தொழிற்கூடங்களிலிருந்து வெளியாகும் புகையால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அதனால் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
மாசுக் காற்றால் வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1.5 மில்லியன் மக்கள் தூசுகளால் இறந்துள்ளனர். இது உலகில் வாகன விபத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் தொழில் நுட்பப் புரட்சி வருமாண்டுகளில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திட்டமிடுவது மிகவும் அவசியம். இந்தியா போன்ற வளரும் நாடுகள் காற்று மாசு விசயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதற்குரிய செயல்பாடுகளை இடையறாது செய்வதுடன், அரசு, தனியார், பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பசுமைச் சூழலுக்கு உரிய நடவடிக்கைகளைத் தொடங்குவது காலத்தின் கட்டாயம்.
காற்றில் உருவாக்கப்படும் மாசுக்கேட்டை எவ்வாறு கணக்கிடுவது?
பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு ஓரிடத்தில் சேர்கிறது என்பதை நாம் கணிக்கலாம்.
அதைத்தவிர, எவ்வளவு மாசு இருக்கிறது என்பதையும் அளவிடலாம். இப்படி அளவிட்ட மாசை நன்கு ஆராய்ந்தால், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அதாவது, ”இந்த மாசில் சுமார் 25% வாகனங்களில் இருந்தும், 30% புழுதியில் இருந்தும், 20% தொழிற்சாலைகளில் இருந்தும் வருகின்றன. மீதி எங்கிருந்து என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை” என்ற அளவில் கண்டுபிடிக்கலாம். இது எப்படி என்பதை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு 1: ஓர் இடத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் தூசியில் 25% சோடியமும், 50% இரும்பும் , மீதி 25% மற்ற பொருள்களும் இருக்கலாம். தெருவில் இருக்கும் புழுதியில் 25% அலுமினியமும், 10% இரும்பும் (சிலிக்கன் போல மற்றவை மீதி 65% என்றும்) இருக்கலாம். இங்கு இதர தனிமங்கள் என்பதில் சோடியம், அலுமினியம், இரும்பு ஆகியவை இல்லாமல் மற்ற பொருள்கள் என்று புரிந்து கொள்வோம்.
இப்போது, நாம் அந்த பகுதியில் சென்று அங்குள்ள காற்றில் இருக்கும் தூசிகளை சேகரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கிராம் தூசி சேர்ந்ததும் அதை ஆராய்ச்சிக்கு அனுப்பி, அதில் இருக்கும் சோடியம், அலுமினியம் மற்றும் இரும்பின் அளவைக் கண்டுபிடித்து விடுகிறோம். இதில் ஒரு கிராமில், அலுமினியம் 0.25 கிராம், இரும்பு 0.1 கிராம், இதர பொருள்கள் 0.65 கிராம் என்று வந்தால், தூசி முழுவதும் புழுதிதான் என்று சொல்ல முடியும். ஒருவேளை தொழிற்சாலை அன்று வேலை செய்யாமல் இருக்கலாம். அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையில் தூசிகள் வடிகட்டப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில், தொழிற்சாலையால் காற்றில் தூசிகள் சேர்வதில்லை என்று சொல்ல முடியும்.
இன்னொரு நாள் ஒரு கிராம் தூசியில் ஆராய்ச்சி செய்தால், அதில் 0.5 கிராம் இரும்பு, 0.25 கிராம் சோடியம், இதர பொருள்கள் 0.25 கிராம் என்று வந்தால், அங்கு தூசி முழுவதும் தொழிற்சாலையில் இருந்துதான் வந்துள்ளது என்று சொல்லலாம். ஒருவேளை போக்குவரத்து குறைவாக இருப்பதால், காற்று வேகமாக அடிக்காததால், புழுதியானது காற்றில் கலக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் தொழிற்சாலைதான் காற்றில் மாசு சேர்க்கிறது என்று சொல்லலாம்.
ஒரு பேச்சுக்கு, 0.4 கிராம் தொழிற்சாலை தூசியும், 0.6 கிராம் புழுதியும் சேர்ந்து நமது Sample வருவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது, சோடியத்தின் அளவு 0.4 * 0.25 = 0.1 கிராம் ஆகும். இரும்பின் அள்வு: தொழிற்சாலை தூசியில் இருந்து, 0.4 * 0.5 = 0.2 கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.1 = 0.06 கிராம். மொத்தத்தில், 0.2 + 0.06 = 0.26 கிராம். அலுமினியத்தின் அளவு: 0.6 * 0.25 = 0.15 கிராம். இதர பொருள்கள்: தொழிற்சாலையில் இருந்து, 0.4 * 0.25 = 0.2கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.65 = 0.39 கிராம், மொத்தம் 0.2 + 0.39 = 0.59 கிராம்.
ஆக மொத்தம் தூசியில், 0.1 கிராம் சோடியம், 0. 26 கிராம் இரும்பு, 015 கிராம் அலுமினியம், இதர பொருள்கள் 0.59 கிராம் என்று இருக்கும். நமக்கு இந்த தூசியில் தொழிற்சாலையின் பங்களிப்பு எவ்வளவு, புழுதியின் பங்களிப்பு எவ்வளவு என்று கணிக்க முடியுமா? முடியும். உதாரணமாக, அலுமினியம், தொழிற்சாலை தூசியில் இருந்து வராது. எனவே, 0.15 கிராம் அலுமினியம், புழுதியில் இருந்துதான் வரும். ஒரு கிராம் புழுதியில் இருந்து 0.25 கிராம் அலுமினியம் வரும். எனவே, 0.15 கிராம் அலுமினியம் இருக்கிறது என்றால், 0.6 கிராம் புழுதியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.
அதைப்போலவே, சோடியம், தொழிற்சாலை தூசியில் இருந்துதான் வரும். புழுதியில் இருந்து வர முடியாது. அதையும் கணக்கிட்டால், 0.4 கிராம் தொழிற்சாலை தூசியாக இருக்கும் என்று கணிக்கலாம். இந்த எடுத்துக்காட்டில் சுலபமாக சொன்னாலும், பல விதமான தனிமங்களை ஆராய்வதன் மூலம், ஓரளவு சரியாக எந்த இடத்திலிருந்து தூசி எவ்வளவு வருகின்றது என்பதை கணிக்க முடியும். இன்னொருநாள் ஆராய்ச்சி செய்தால் ஒரு கிராம் தூசியில் சோடியம் 0.5 கிராம் வருகிறது. இரும்பு சுத்தமாக கிடையாது. அலுமினியமும் இல்லை. இப்பொழுது என்ன முடிவுக்கு வர முடியும்? ஒன்று நாம் செய்த ஆராய்ச்சி தவறு. சோடியம் இருக்கும் பொழுது இரும்பும் இருக்க வேண்டும். இரும்பு கணக்கிடும்பொழுது, ஆராய்ச்சியில் தவறு நடந்து இப்படி வந்திருக்கலாம். அல்லது சோடியம் கணக்கில் தவறு இருக்கலாம். இரண்டாவது, நாம் நினைத்தது, இந்த பகுதியில் தொழிற்சாலை மற்றும் புழுதி மட்டுமே தூசிக்கு காரணம் என்று. ஆனால், வேறு வகை தூசிகளும் இந்த பகுதியில் சேர்ந்து இருக்கலாம். அந்த தூசிகளில் சோடியம் இருந்து, இரும்பு இல்லாவிட்டால், ஆராய்ச்சி சரியாக இருக்கிறது, நம் நினைப்புதான் தவறு, நாம் மறுபடி அந்த பகுதிக்கு சென்று, வேறு என்ன வகையில் தூசிகள் சேரலாம் என்று அறிய வேண்டும்.
மேற்கண்ட கணக்கிற்கு Chemical Mass Balance அல்லது சுருக்கமாக சி.எம்.பி. (CMB) என்று பெயர். இது reverse calculation மூலம் ஒவ்வொரு மாசு மூலமும் (pollution source) எவ்வளவு பங்களிக்கிறது என கணக்கிட உதவும். (நன்றி: http://fuelcellintamil.blogspot.com/2008/06/7.html)
- விவரங்கள்
- பூவுலகு ஆசிரியர் குழு
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஞெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மிகப் பெரிய சூழல் கேட்டை உருவாக்குகின்றன என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு எதிராக காகித பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் இரண்டுமே இயற்கை வளத்தை அழித்து, சூழலை சீரழிக்கின்றன என்பதுதான் உண்மை. அப்படியானால் இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான், இவற்றின் பயன் பாட்டை குறைப்பதற்கான நல்ல வழி என்று தோன்றுகிறது.
இரண்டையும் பற்றி ஓர் ஒப்பீடு:
உலகம் முழுவதும் 400 கோடி பிளாஸ்டிக் பைகள் ஒவ்வோர் ஆண்டும் கழிவாக்கப்படுகின்றன. இவற்றை தொடர்ச்சியாகக் கோர்த்தால், பூமியை 63 முறை சுற்றலாம்.
உற்பத்தி
மரங்களை அழித்தே காகிதம் தயாரிக்கப் படுகிறது.
ஞெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்படும்போது, பாலிஎதிலின் என்ற துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ஞெகிழிப் பையை தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகித பையை உருவாக்க பயன்படுகிறது.
மூலப்பொருள்
காகித பை உருவாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் காற்று மாசு, அமில மழை, நீர் மாசுபாட்டை உருவாக்கலாம்.
ஞெகிழி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு பொருள்களில் ஐந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
ஞெகிழிப் பைகளை உண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர், கடலுயிர்கள் ஆண்டுதோறும் அழிகின்றன. கடலாமைகள் இவற்றை இழுதுமீன் என்று கருதுகின்றன. உணவுக்குழலில் சிக்கி இறந்துபோகின்றன.
மறுசுழற்சி
மறுசுழற்சி செய்ய காகிதத்தை கூழாக்கி, வெளுப் பேற்ற பிளீச் செய்தாக வேண்டும். ஞெகிழியைவிட காகித மறுசுழற்சி எளிது என்றாலும், காகித பைகள், காகிதங்கள் புதிய மரங்களை அழித்தே செய்யப் படுகின்றன. அப்பொழுதுதான் இழுவைத்தன்மை, வலு கிடைக்கும். மறுசுழற்சி காகிதம் அட்டைப்பெட்டி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு அதிக எரி பொருள் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரம் மறுசுழற்சிக்காக வாங்கப்படும் ஞெகிழி பைகள், அதைச் செய்யாமல், வேறு நாடுகளுக்கு அனுப் பப்பட்டு எரிக்கப்படுகின்றன.
மக்குமா, மக்காதா?
காகிதம் மக்கக்கூடியது. ஆனால் இன்றைக்குள்ள குப்பை கொட்டும் முறை காரணமாக, தண்ணீர், ஒளி, ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் அவற்றால் மக்க முடிவதில்லை.
பிளாஸ்டிக் என்பது எக்காலத்திலும் மக்காதது.
நாம் என்ன செய்யலாம்?
மறு பயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப் பைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆயிரக் கணக்கான ஞெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.
எளிதாக கையில் எடுத்துச்செல்லும் பொருளுக்கு ஏன் ஒரு ஞெகிழிப் பையை வீணாக்கத் தேவை யில்லையே.
பழைய ஞெகிழிப் பைகளை குப்பை பெட்டி களில் பயன்படுத்தலாம். அதற்கென தனி ஞெகிழிப் பை வாங்காமல் தவிர்க்கலாம்.
மேலும், எப்பொழு தெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ, அப்போது மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் நம்மிடம் ஏற்கெனவே உள்ள ஞெகிழிப் பைகளையாவது எடுத்துச் செல்லுங்கள்.
பிளாஸ்டிக் எமன்
அதிநவீன அறிவியல் வசதிகள் பெருகிய இன்றைய வாழ்வில், அதன் பலன்களில் ஒன்றாக நம்மிடையே புற்றுநோய் பல்கிப் பெருகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஞெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பெரும் பங்காற்றுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் சுற்றறிக்கை கூறும் தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
மைக்ரோவேவ் அவனில் ஞெகிழி பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள். குளிர்பதனப் பெட்டியின் ஃபிரீசரில் தண்ணீர் குப்பிகளை வைக்காதீர்கள். மைக்ரோவேவ் அவனுக்குள் உணவுப்பண்டத்தை வைக்கும்போது அதன் மீது ஞெகிழி தாளை சுற்றாதீர்கள் என்கிறது அந்த எச்சரிக்கை.
காரணம்: டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. ஞெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, ஞெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. அதேபோல, ஞெகிழி பாத்திரங்களில் உணவுப்பண்டங்களை வைத்து மைக்ரோவேவ் அவனில் சூடேற்றக் கூடாது என்று கேஸ்டில் மருத்துவமனை மருத்துவர் எட்வர்ட் ஃபியூஜிமாட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் சூடேற்றப்படும்போது, ஞெகிழி டையாக்சினை வெளியிடுகிறது. இது நாம் சாப்பிடும்போது உடலில் சேர்கிறது.
இதற்கு பதிலாக கண்ணாடி, மங்கு பாத்திரங்களை சூடேற்றுவதற்கு பயன்படுத்தலாம். அதேபோல துரித உணவுகளையும் ஞெகிழித்தாள் சுற்றி சூடேற்றக் கூடாது.
(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- தியடோர் பாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்த உலகம் முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற தலைக்கனத்தில், பேராசையில், சுயநலத்தில், அறியாமையில் தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறான் மனிதன். எல்லா உயிர்களைப் போலவும் மனிதனும் இந்த பூமி உருண்டையில் வாழப்பிறந்தவன். அவ்வளவுதான்! இந்த நினைப்பு அவனிடம் இருந் திருந்தால், ஓசோனின் ஓட்டை விழுந்திருக்காது. ஜீவ நதிகள் வறண்டிருக்காது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். பஞ்சம் ஏற்பட்டிருக்காது. குடிநீருக்காகக் குடங்களைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாகத் திரிய வேண்டிய நிலைமை வந்திருக்காது.
தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை... தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர் களும் இல்லை. ஐந்து வகை நிலங்களைப் பிரித்து அங்கு உயிர் வாழும் பறவைகள். விலங்குகள், தாவரங்கள், பருவ காலங்கள் என்று மனிதன் வாழ்வதற்குத் தேவையான இயற்கையைக் ‘கருப் பொருள்’ பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர். முல்லைக்குத் தேர் கொடுத்ததும், மயிலுக்குப் போர்வை தந்ததும் இயற்கையை நேசிப் பதன் அடையாளமன்றி வேறென்ன? இன்று தமிழகத்தின் இயற்கை வனத்தைத் தொலைத்து விட்டு ஏதிலிகளாக அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டுமென்று கையேந்திநிற்கிறோம். முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக் கூட நாம் மறந்து விட்டோம். அரணைக்கும், ஓணானுக்கும் வித்தி யாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப்பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள்.
மனிதன் வாழ்வதற்கு அடித்தளமான சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, இயற்கை சூழ்ந்த கூடு போன்றவைதான் நம் சுற்றுப்புறச் சூழ்நிலைகள். சுத்தமான காற்றுக்கு மரங்கள் அடர்ந்திருக்க வேண்டும். ஆறுகளின் வறட்சிக்கும், மணல் கொள்ளைக்கும் நேரடிச் சம்பந்தம் உண்டு. ஆற்றில் மணலைக் கொள்ளை யடிப்பதற்கும் தாய்ப்பாலைத் திருடி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது” என்றார் பறவையியலாளர் சலீம் அலி. பறவைகளற்ற ஒரே நாளில் பூச்சிகள் இந்த உலகில் மனிதர்களை இல்லாமல் செய்து விடும். இந்த இயற்கை சமநிலை தெரிந்துதான் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ பற்றிய அவசியத்தை வலியுறுத்து கிறது திருக்குறள். ‘பல்லுயிரியம்’ என்பதுதான் உலகம் தழைப்பதற்கான தத்துவம். ஒவ்வொரு உயிருக்கும் இங்கே தேவை இருக்கிறது. கையில் அரிப்பெடுக்கிறது என்பதற்காக, கையை யாரும் வெட்டுவதில்லை. ஆனால், இலைகள் உதிர்ந்து குப்பைகள் வருவதாக மரங்களைக் கூசாமல் வெட்டுகிற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒரு யானையைக் கொன்று தந்தம் பிடுங்கி யானை பொம்மை செய்து அலங்காரமாக ஷோகேஸில் வைக்கிற ‘மேதை’களை இயற்கை எப்படி மன்னிக்கும்?
தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்சமாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இயற்கை வளம் என்பது, வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக் கொள்வதுதான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது. மரம் என்பது மனிதனைப் போல பூமிக்கு பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள், பறவைகளும், விலங்குகளும் இன்றும் ஒவ்வொரு உயிருமே அப்படித்தான்.
கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் ‘தலைப்பிட்டை’களைப் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கொன்று விட்டோம். மலேரியா காட்டுத் தீ போன்று பரவி, ‘மலேரியா ஒழிப்பு’ பிரச்சாரம் நடத்த வேண்டியதாகிவிட்டது. இன்று பெரிய ஏரிகளிலும் குளங்களிலும் பறவைகள் தென்படாமல் போனால், அந்த நீர் அருந்து வதற்குத் தகுதியற்றது என்று பொருள். சாயக் கழிவுகளையும், தொழற்சாலைக் குப்பைகளையும் ஆற்றில் கொட்டினால் எப்படிப் பறவைகள் வரும்? இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.
வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லு யிரியம் என்கிற’பயோடைவர்சிட்டிதான். மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன. நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது. சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் மட்டும் 110 வகை தாவரங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை, பொதிகை மலை போன்ற மலைப் பிரதேசங்கள், புதர்க்காடுகள், ஏரிகள், ஆறுகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் என்கிற தம் விதவிதமான புவியியல் அமைப்பு எண்ணிலடங்கா உயிர்கள் வாழும் உறைவிடம். நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கிடைப்பதற்கரிய இயற்கையை சர்வநாசம் செய்து விட்டோம் தமிழர்களே! இன்னும் கூட நாம் வெறி தீராமல் இருப்பதுதான் வேதனை.
தேயிலை, காபித் தோட்டங்களுக்காக, காகித உற்பத்திக் காக, அணைத் திட்டங்களுக்காக, தோல் பதனிடும் தொழிலுக் காக, வெட்டு மரத் தொழிலுக்காக நாம் காடுகளை அழித்து விட்டோம். நதிகளில் ரசாயன நச்சுப் பொருள்களின் கலப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீய விளைவு, நில வேட்டையால் ஏரிகளின் சூறையாடல், உயிரற்ற அலங்காரப் பொருட்களுக்காகக் காட்டு உயிரினங் களைக் கொல்லுதல் என நம் அறியாமையும், சுயநலமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. சத்தியமங்கலம் புதர்காடுகளில் காணப்பட்ட சிவிங்கிப்புலியும், ஒகேனக்கல்லில் இருந்த வாருக்கோழியும், கழிமுகங்களில் வாழ்ந்த உப்புநீர் முதலையும், காவிரியில் இருந்த கறுப்புக் கெண்டை மீனும் அற்றுப் போய்விட்டன.
பிடி, கயிறு, வேழம், கொம்பன் என்று யானைகளின் விதவிதமான வகைகளைக் கண்டறிந்து ஒன்பது பெயர்களை வைத்த தமிழனின் பிள்ளைகள் அந்த மரபுச் செல்வம் பற்றி ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மொழியில் இங்கிலாந்தில் இல்லாத உயிரி னமாக யானைகளைக் குறிக்க ‘எலிஃபென்ட்’ என்ற ஒற்றைச் சொல்தான் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. நூறுக்கும் அதிகமாக பூச்சிகளின் பெயர்களை பட்டியலிட்டு குறிஞ்சிப்பாட்டு எழுதியவர்களுக்கு இன்று சுற்றுப்புறச் சூழலைத் தெரிந்து கொள்ள ‘துறைச் சொற்கள்’ இல்லாமல் ஆங்கிலத்திடம் கடனாளியாகக் கடன் வாங்குகிறோம். அறிவியல் பூர்வமாக இயற்கையைப் போற்றிய தமிழரின் பிள்ளைகள் இன்று ஷாப்பிங் காம்ப்ளெஸ்களுக்கும், தீம் பார்க்குகளுக்கும், பள்ளிச் சுற்றுலா போகும் அவலத்தை எங்கே போய் முறை யிடுவது? இயற்கையை அறிந்து கொள்ளாமல் இயந்திரங்களோடு வாழ்வதால் ‘உற்சாக பானங்கள்’ ஏராளமாக விற்பனை ஆகின்றன.
அடுத்த தலைமுறைக்கு உயிரினங்களை நேசிக்கக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் உயிரினங்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்தால் கூடப் போதும். இன்று குழந்தைகளுக்கான படங்களாக வருகிற ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மனித இனத்துக்கு எதிரானதாகவே சித்தரிக்கின்றன. மதிய சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, தமிழகப் பல்லிகளுக்கு விஷம் இருநத்தில்லை.
பல்லி இனத்தின் பெரிய அண்ணனான உடும்பைச் சாப்பிடு கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அழுகிய கற்களிகள், வெட்டுப்போன முட்டைகள் என குப்பைகளைக் கொட்டி ஈயமில்லாத பாத்திரங்களில் சமைத்து குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறும் பேராசைக் கான்ட்ராக்டர்கள்தான் குழந்தைகள் மயங்கி விழக்காரணமேயன்றி, பல்லிகள் அல்ல! பல்லிக்கு விஷமில்லை என்பது அறிவியல் பூர்வமான விஷயம். பல்லியின் மொழியை வைத்து ‘கௌலி சாஸ்திரம்’ படைத்திருக்கின்றனர் நம் முன்னோர். இன்று அதே பல்லி நமக்கு எதிரி! இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் ‘ஆம்லெட்’ என்று சிரிக்கிறது. முட்டை, ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை ‘ஓங்கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விபரம தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும் போது ‘கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப் படுத்தப்பட்டால் எப்படி குழந்தைகளுக்கு விலங்கு கள் மேல் நேசம் வரும்? ‘கொடூரக்காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதாசிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந்து போனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அடர்ந்த நாடுகளில் பத்திரமாக, பாதுகாப்பாகச் சென்று திரும்ப முடியும். நம் மாநகரங்களைவிட ஆபத்தானவை அல்ல காடுகள்.
நாம் வீடுகள் கட்டுகிறோம் என்கிற பெயரில் சுவர்களையே கட்டுகிறோம். பல்வேறு உயிர்கள் வாழும் இடத்துக்குப் பெயர்தான் வீடு. ஒரு பறவை வந்து அமர மரம் இல்லாத வீடும், பட்டாம்பூச்சி வந்து தேனருந்த இல்லாத வீடும் எப்படி வீடாகும்? ஒரு நாடு அதன் மக்களால் கட்டடங்களால், தொழிற்சாலைகளால் மட்டும் ஆவதல்ல. அதன் ஆறுகள், குளங்கள், காடுகள், மலைகள், பாலை வனங்கள், பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன உயிரினங்களாலும் ஆனது அடுத்த தலை முறைக்கு நம் சுற்றுப்புறச் சூழல் குறித்த அறிவை. இயற்கையின் மீதான அன்பே, ஆரோக்கிய வாழ்வு குறித்தான அக்கறையை உருவாக்குவதே உடனடித் தேவை. அதற்கு பள்ளிக்கூடங்களின் பொறுப்பு உணர்வே போதுமானது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் சரியான பாடநூல்களோ, ஆசிரியர்களோ பள்ளிகளில் இல்லை.
சுற்றுச் சூழல் சட்டங்கள் வெறும் சட்டப் புத்தகங்களில் மட்டும் தூங்காமல், அதனை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இயற்கையைச் சுரண்டுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மரம் வளர்ப்பதை ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும். அதை மாணவர் களுக்கு மதிப்பெண் பாடமாக மாற்ற வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடும். ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ எனும் திருக்குறள் காடும் உடையது அரண் எனும் திருக்குறள் மேற்கோளுக்காகப் பயன் படுத்தப்படாமல் குறிக்கோளாக மாற வேண்டும். இதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது நண்பர்களே! காரணம். இயற்கையை அழித்ததில் நம் எல்லோருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருக்கிறது.
நன்றி:- சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம், தவுட்டுப் பாளையம் அந்தியூர்.
(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.