அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- செந்தூவல்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பானி புயல் வங்கக் கடலில் மையங்கொண்டு தீவிர சூறாவளியாக மாறி ஒடிசாவைத் தாக்கியுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது காற்றின் வேகம் 170 கிலோமீட்டரில் இருந்து 180 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இப்புயல் ஒடிசாவின் பூரி மற்றும் பாலசபூர் இடையே கரையை கடக்கும் என அறிவித்தது வானிலை ஆய்வு மையம். கடந்த 118 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல்களில் மிக வலிமையான புயல் பானி புயல்தான் என்று கூறியுள்ளார் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலர் ராஜீவன்.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கு கடற்கரையை அதிகமான புயல்கள் தாக்கி உள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:
1.ஜல் 2010
2. தானே 2011
3.நீலம் 2012
4.மடி 2013
5.ரோனி 2016
6.கியான்ட் 2016
7.நாட 2016
8. வர்தா 2016
9.ஒக்கி 2017
10.கஜா 2018
11.பானி 2019
கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமாக 11 புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்கி உள்ளன. இவற்றில் நான்கு புயல்கள் தமிழகத்தைத் தாக்கி உள்ளன. அதாவது வங்கக்கடலில் ஏற்படும் மொத்த புயல்களில் மூன்றில் ஒரு புயல் தமிழகத்தைத் தாக்குகிறது. இயற்கை நிகழ்வுதானே என்று நாம் யோசிப்போம். ஆனால் புயல்கள் பின் உள்ள பருவநிலை மாற்றம்தான் முதன்மையான காரணம் ஆகும். இந்த பருவநிலை மாற்றத்தின் காரணமாகத்தான் புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி, புயல்களாக மாறி கரையைத் தாக்குகிறது. இந்தப் புயல்கள் ஏற்படும்போது காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அதிகளவிலான மழைப்பொழிவு ஏற்படுத்துகிறது.
புயல்கள் ஏற்படும் கால இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. அதனாலதான் கடந்த 10 ஆண்டுகளில் மொத்தம் 11 புயல்கள் வங்கக் கடலில் ஏற்பட்டு உள்ளது. அதாவது 11 மாதங்களுக்கு ஒரு புயல் என்ற விகிதத்தில் வங்கக் கடற்கரை பகுதிகளை தாக்குகிறது. இது வெறுமனே வங்கக் கடற்கரை மட்டுமான பிரச்சனை அல்ல, உலகம் முழுவதும் பல நாடுகளில் இதுபோல தொடர்ச்சியாக புயல்கள் தாக்குகின்றன. அதுவும் குறிப்பாக பருவ காலங்களில் அல்லாமல், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் புயல்கள் கடற்கரையில் உள்ள பகுதிகளைத் தாக்குகிறது.
பருவநிலை மாற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணம் என்ன? இதற்கு முதன்மையான காரணம் புதைபடிம எரிபொருட்கள் எரிப்பதனால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்கள் நேரடியாக வளி மண்டலத்தைத் தாக்குவதால் தொடர்ந்து புவியின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே வருகின்றது. புதைபடிம எரிபொருட்களான டீசல், பெட்ரோல், நிலக்கரி மற்றும் மீத்தேன் போன்ற எரி வாயுக்கள் அதிகமாக உபயோகப்படுத்துவதன் காரணமாக பசுமை இல்ல வாயுக்கள் அதிகமாக வெளிப்படுகிறது. இதன் காரணமாக புவி வெப்பமயமாதல் ஏற்படுகிறது.
உலகம் முழுவதும் பல நாடுகள் புதைபடிவ எரிபொருட்களை குறைத்துக் கொண்டு, வேகமாக புதுப்பிக்கத்தக்க எரிபொருட்களை பயன்படுத்துவதை அதிகப்படுத்தியுள்ளன. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்திற்கான ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டுள்ளன. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் உள்ள பல நாடுகள் மிக வேகமாக புதைபடிவ எரிபொருட்களை பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள பல நாட்டு மக்கள் தங்கள் நாட்டு அரசு, புதைபடிம எரிபொருட்களின் பயன்பாட்டு அளவை குறைக்கக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டுள்ளனர். ஆனால் தமிழகத்தில் அதிக அளவிலான அனல் மின் நிலையங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்திய அரசு. இது போதாதென்று டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது இந்திய அரசு. இது மட்டுமல்லாமல் பெட்ரோல், டீசல், நிலக்கரி மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு இந்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொண்டு உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பதினோரு மாதங்களுக்கு ஏற்படும் புயல் என்பது ஆறு மாதங்களுக்கு ஒரு புயல் என்ற நிலைக்கு மாறும். இது மட்டுமல்லாமல் தற்போது 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புயல்களின் வேகத்தின் அளவு மேலும் அதிகமாகும்.
இந்தியாவின் அடிமைக் காலனியாக இருக்கும் தமிழகம் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இல்லை. காரணம் தமிழகத்தின் இயற்கை வளங்கள் மட்டுமல்லாமல் ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் இந்திய அரசு அனைத்தையும் கொள்ளை அடித்துச் செல்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்களான புயல், பெருவெள்ளம், காட்டுத்தீ மற்றும் வறட்சி போன்றவற்றில் இருந்து மீள்வதற்கான நிதியை இந்திய அரசு கொடுப்பதில்லை. இதன் காரணமாக தமிழக மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைப் பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆய்வுகள் எதனையும் பெரிய அளவில் இந்திய அரசு செய்வது இல்லை.
தமிழ்த் தேசத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓரணியில் திரளுவதுதான் பருவநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளில் இருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கான வழியாகும்.
- செந்தூவல்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
எச்சரிக்கும் போலந்து மாநாடு....!!!
போலாந்தின் கடோவைஸ் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பான மாநாடு நடைபெற்றது. இதில் பாரிஸ் பருவநிலை மாறுபாடு உடன்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதில் பருவநிலை மாறுபாட்டால் உலகிற்கு பேராபத்து காத்திருப்பதாகவும், இப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான மூல காரணம் பூமி வெப்பமயமாதலாகும். இன்றைக்கு உலகம் முழுவதும் வெப்பமயமாதல் பிரச்னை பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என்பதை உலக நாடுகள் அனைத்தும் ஓப்புக்கொண்ட உண்மையாகும். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக கரியமில வாயுவைக் குறைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பாரிஸில் வலியுறுத்தப்பட்டது.
இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பங்கேற்ற ஐ.நா.வின் முன்னாள் தலைவர்கள் 4 பேரின் கலந்துரையாடலில், இந்த பருவநிலைப் பிரச்சனையை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிஸ் மட்டுமின்றி உலக நாடுகளின் நிலைமை மோசமடையும் என எச்சரித்ததுடன் அதற்கான
காலக்கெடுவாக அடுத்த இரு ஆண்டுகளில் பருவநிலை மாறுபாடு பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், உலக நாடுகள் மிகப் பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும் என்றும் இம்மாநாட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இப்பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்துகொண்ட உலக வங்கி பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு உடனடி தீர்வு காண 14 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளதாம், இது போன்ற பருவநிலை மாற்றம் மற்றும் பூமி வெப்பமயமாதல் பிரச்சனையால் கடந்த சில வருடங்களாக உலகில் பல்வேறு இடங்களில் சுனாமி போன்ற பேராபத்துகளும், புயல்களும், நிலநடுக்கங்களும், காற்று மாசுபாடும் ஏற்பட்டு வருவதாக அண்மையில் சுற்றுச்சூழலில் அக்கறை கொண்ட தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாட்டிற்கு பொருளாதார வளர்ச்சியைவிட முக்கியமானது இயற்கை வளங்களைக் காத்தல். நாம் வாழும் பூமியை வாழ்வதற்கு ஏற்றதாக அமைத்துக் கொள்ள வேண்டும். இயற்கையை அழித்து பொருளாதார வளம் பெருக்கிக் கொள்வது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இயற்கை வளத்தைப் பெருக்கி, பசுமையைக் காப்பது மட்டுமே எதிர்கால சந்ததிகளின் நலனுக்கு உகந்தாகும்.
நாட்டின் வளங்களில் மூன்றில் ஒரு பங்கு வன வளம் இருக்க வேண்டும். அதாவது 30 லிருந்து 35 சதவீதம் இருக்க வேண்டிய வனங்கள், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தற்போது 14 லிருந்து 19 சதவீதமாக உள்ளது. இதற்கான முழுமுதற் காரணம் மனிதனே ஆகும். மனிதன் தனது சுயலாபத்திற்காக வனங்களை அழித்துகொண்டு வருகின்றான். மரங்களை வெட்டுதல், காடுகளை விளைநிலங்களாக ஆக்கிரமித்தல் போன்ற நடவடிக்கையினால் இயற்கை வளங்களின் பரப்பளவு குறைந்து வருகின்றது..
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட. இயற்கை வளங்களின் அவசியம் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்தும் இன்றைய இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
நம் அரசுகளும் தொலைநோக்குப் பார்வையுடன், மனித குலத்திற்குப் பயன்படுவதுமான இயற்கை வளங்கள் பற்றிய படிப்பை பரவலாக்க வேண்டும். புவியியல், இயற்கை வளங்கள், காலநிலை, கடல், மனிதப் புவியியல், புவித் தகவல் தொழில்நுட்பம் போன்ற படிப்பு வகைகளை மாணவர்கள் மத்தியில் பரவலாக்கி அவர்களை இக்கல்வி கற்க ஊக்கப்படுத்த வேண்டும்.
தனி மனிதர்களாகிய நாமும் தனியாகவோ அல்லது குழுவாகவோ, தன்னார்வலர்களை இணைத்துக்கொண்டு, மக்களிடையே இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், மரங்கள், உயிரினங்கள், புல்வெளிகள், விளைநிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் போன்றவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதை விளங்கும் வகையில் விழிப்புணர்வுப் பேரணிகள் நடத்தி இயற்கை வளங்களைக் காத்து பூமி வெப்பமயமாக்கலைத் தடுத்தல் வேண்டும்,
இது நம் அனைவரின் கண் முன்னே நிற்கும் சவாலான பிரச்சனையாகும்...
- அப்சர் சையத்
- விவரங்கள்
- அப்சர் சையத்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கரூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக்குகளைத் தின்று பலரது கண்களுக்கு முன்பே பசுமாடு ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெயிலிருந்தும், எரிவாயுவிலிருந்தும் உருவாக்கப்படுகிற பிளாஸ்டிக்களில் நச்சுத் தன்மையுள்ள பல வேதிப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. அவை நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றை, நிலத்தடி நீரை, மண்ணை மாசாக்குவதுடன் மிக விரைவாக அனைத்து உயிரினங்களுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
சூழலியாளர்கள் கூற்றுப்படி ஒரு பிளாஸ்டிக் குடுவை மண்ணோடு மண்ணாக முற்றிலும் அழிந்துபோக 450 வருடங்களாவது ஆகுமாம். கிட்டத்தட்ட மனிதனின் சராசரி வயது அளவீட்டில் 6லிருந்து 8 மனிதர்களின் ஆயுட்காலம் அல்லவா இது? நாம் அழிவதுடன் வரும் அடுத்த தலைமுறையையும் சேர்த்து அழித்து வருகின்றோம் அல்லவா?
நாம் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி விட்டு வீதியில் எரிந்துவிடுவதால், பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில், குளங்கள், ஏரிகள் என அனைத்திலும் கலப்பதால், நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த பிளாஸ்டிக் பைகளால் கடுமையாக பாதிக்கப்படுகின்றது, சாலை ஓரங்களில் இவ்வகைப் பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெருவழியே பிதுங்கி வழிந்து சாலையில் ஒடுகின்றது. அதன்மீது நாம் நடக்கும் போதும், அதிலிருந்து வரும் தூர்காற்றை சுவாசிக்கும் போதும் பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சில வருடங்கள் முன் சென்னையில் கொட்டித்தீர்த்த பெரு மழை வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புதான்.
மக்களே, நம் வீட்டிலிருந்து தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பைகள் பல்வேறு உயிரினங்களுக்கு விஷமாவதுடன், மண்ணின் உயிர்வேதியியல் தன்மையையும் பாதிக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு, பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுவோம்.
பிளாஸ்டிக்கள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை உடனடியாகத் தவிர்த்திடுவோம். கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணிப் பை போன்றவற்றை எடுத்துச் செல்வோம்.
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
நீர் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
மண் வளம் காப்போம்!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
உயிரினங்களைக் காப்போம்!
பிளாஸ்டிக் ஒழிப்போம்
கேன்சரைத் தடுப்போம்!
பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்கி நம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பேன் என்னும் உறுதிமொழியை நாம் எடுத்துக்கொள்வோம்.
- அப்சர் சையத், சுற்றுச்சூழல் ஆர்வலர்
- விவரங்கள்
- நம்பிக்கை ராஜ்
- பிரிவு: சுற்றுச்சூழல்
'காவிரியில் திறந்துவிடப்படும் நீர் வீணா கடலுக்கு போய் கலக்கப் போகுது பாரு'
- இப்படி பேசும் ஆட்கள் வெறும் முட்டாள்கள் மட்டும் அல்ல, அதையும் தாண்டி ஒட்டுமொத்த உயிரினங்களுக்குமே எதிரான ஆட்கள்தான்.

ஆற்று நீர் கடலில் கலப்பது 'வேஸ்ட்' என சிலர் எந்த அடிப்படையில் பேசுறாங்க? மனித சக்தியால் உருவாக்கப்படும் ஒரு பொருளையோ, திரவத்தையோ வீணாக்கினால்தான் அது வேஸ்ட். ஆனால் மனித சக்திக்குத் தொடர்பில்லாத, இயற்கையால் உருவாக்கப்பட்ட ஆற்று நீரை, அது காலம் காலமாகப் பயணித்து, கடலில் கலந்ததை தடுத்து மனித தேவைக்கு பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அந்த நீர் முழுவதுமே மனித தேவைக்கானது என சொல்லி அது கடலில் கலப்பது வீண் என சொல்லும் அறியாமைதான் அடுத்த தலைமுறையை அழிக்கப் போகும் விஷ விதை.
இந்தியா என்ற ஒரு நாடு, தமிழ்நாடு என்றவொரு மாநிலம், காவிரியில் கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டுகள் என எல்லாமே இந்த ஒரு நூறாண்டுகளுக்குள்தான் இருக்கும்.
ஆனால் காவிரி என்ற ஆறு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயதை உடையது. குடகு மலையில் பிறந்து கர்நாடக மேட்டு நிலப்பகுதியைத் தாண்டி, மேட்டூருக்குக் கீழே சமவெளிப்பகுதியில் பரந்து விரிந்து வண்டல் மண் டெல்டாவில் ஓடி, பூம்புகார் வழியே காலங்காலமாக கடலில் கலந்து வந்தது.
மனித தேவைகளுக்காக காவிரியில் பல அணைகள் கட்டி காவிரி நீர் கடலுக்கு போகும் அளவு தடுக்கப்பட்டது. அதாவது கடல் குடித்து வந்த நீரை மனிதன் தட்டிப் பறித்துக்கொண்டான்.
இயற்கை சுழற்சியை மனிதன் தடுத்தான். ஆறானது கடலில் கலக்கும். நன்னீர் கடலில் கலக்கும்போது கடல் நீரில் உள்ள உப்பின் அளவு மாறுபடாமல் இருக்கும். அது நடக்காதபோது கடல்நீரின் உப்பு அளவு அதிகரிக்கும், கடல்வாழ் தாவரங்கள், மீன்வளங்கள் பாதிக்கப்படும். இயற்கையான சுழற்சி தடைபடுவதால் பருவமழை பெய்யும் காலமும் அளவும் மாறிமாறி வரும். சமயத்தில் மழைப்பொழிவே இருக்காது.
ஒவ்வொரு கடலுக்கும் சில பிரத்யேகமான கடல்வாழ் உயிரினங்கள் உண்டு. தமிழக கடற்பகுதியில் காணப்படும் சில மீன் இனங்கள் அரேபிய வளைகுடாவில் காணப்படாது. அதற்கு காரணம் அந்தந்த கடலில் இருக்கும் உப்பின் அடர்த்தி. கடல் நீர் உப்பின் அடர்த்தியை சீராக வைத்திருக்க உதவுவது அதில் கலக்கும் ஆற்று நீர்.
அதைவிட முக்கியமாக கடற்கரையோரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தில் உப்புநீர் ஊடுருவும்.
சந்தேகம் இருப்பவர்கள் சீனா மஞ்சாளாற்றின் குறுக்கே கட்டிய பிரமாண்டமான அணையையும், அந்த அணையினால் பெருமளவு தண்ணீர் கடலுக்குப் போகாததால் மஞ்சாளாற்று கழிமுகப் பகுதிகளில் கடல்நீர் ஊடுருவி தற்போது புல்பூண்டுகூட முளைக்காத பாலைவனமாக மாறிப்போன நிகழ்வையும் தேடிப் படியுங்கள்.
நல்ல நிலங்கள் பாலைவனமாக மாறியதால் அதை சரிசெய்ய சீனா தற்போது கடுமையாகப் போராடி வருகிறது. தற்போது அணையில் பாதியளவு மட்டுமே தண்ணீரை வைத்துக் கொண்டு மீதியை கடலுக்கே விட்டுவிடுகிறது.
இதே போல நம் முந்தைய தலைமுறையில் நடந்த நிகழ்விலிருந்தும் நாம் பாடம் கற்கவில்லை. ரஷ்யாவின் ஏரல் கடல் என சொல்லப்பட்ட பிரம்மாண்டமான ஏரி மறைந்துபோன கதை தெரியுமா?
'ஏரல் கடல்' நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்ட இந்த பிரம்மாண்டமான ஏரி ஒரு காலத்தில் (1950க்கு முன்பு) உலகில் இருந்த 4 மிகப்பெரிய ஏரிகள் ஒன்று. இன்று?
முந்தைய வல்லரசான சோவியத் ரஷ்யா இந்த ஏரிக்குச் சென்றடையும் ஆறுகளான அமு தர்யா மற்றும் சிர் தர்யா எனும் ஆறுகளை நீர்ப்பாசனத்திற்காக திசை திருப்பியது. இப்போது இந்த ஏரிப்பகுதி மனித வாழ்விடத்திற்கே மிக சிரமமான பகுதியாக மாறியிருக்கிறது.
ஏரல் கடலுக்கு ஏற்பட்ட நிலைமை காவிரி பாயும் கடற்கரையோர மாவட்டங்களுக்கு ஏற்பட இதேபோன்று யோசித்தாலே போதும் 'காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது' என.
காவிரி நீர் என்பது கர்நாடக, தமிழக மக்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல. அது ஒட்டுமொத்த இயற்கைக்குமானது. நாமும் இயற்கையின் ஒரு அங்கம். நாம் மட்டுமே அதை சொந்தமாக்கிக் கொள்ளும்போது இயற்கையின் தொடர் சங்கிலியை நாம் உடைக்கிறோம். இயற்கை சங்கிலியில் ஒரு கன்னி விடுபடும்போது ஒட்டுமொத்த சங்கிலி அமைப்புமே சிதைந்துவிடும் என நமக்குப் புரிவதில்லை.
மனித தேவை, மனிதனின் சுயநலம் இது இரண்டு மட்டும் காலம் காலமாக இயற்கையின் கட்டமைப்புகளை சிதைத்து வந்திருக்கிறது. இதனால் கடைசியாக பாதிக்கப்படப் போவது நாம்தான்.
நேரம் இருப்பவர்கள் 'ஈஸ்டர் தீவு' பற்றியும் அங்கிருக்கும் 'ராப்பா நூயி' சிலைகளைப் பற்றியும் படியுங்கள். மனிதனின் வெட்டி கௌரவத்தால் அங்கிருந்த மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட கடைசியில் ஒரு மரம்கூட இல்லாத அந்த தீவில் படகு செய்து மீன்பிடித்து உயிர் வாழவோ, படகு செய்து தீவை விட்டு தப்பியோடவோ ஒரு மரம் இல்லாததால் ஒட்டுமொத்த மனித இனமே அந்தத் தீவில் அழிந்துபோனது. ஈஸ்டர் தீவிற்கு மரம் என்றால் நமக்கு ஆறுகள்.
காவிரி டெல்டாவின் நில அமைப்பு பற்றி தெரியாதவர்கள்தான் நிறைய உளறுகிறார்கள். கர்நாடகாவில் 3 அணைகள் இருக்கிறதே நம்மிடம் மேட்டூர் அணை மட்டும்தான் இருக்கிறதே என்ற புரிதல் இல்லாத உளறல்தான் அது.
முதலில் ஓர் அணையைக் கட்ட எந்த மாதிரியான நில அமைப்பு இருக்க வேண்டும் என யோசித்தாலே இதற்கான பதில் கிடைத்திருக்கும்.
பொதுவாக அணைகள் மேட்டுப்பாங்கான நிலத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையில்தான் கட்டப்படும். கர்நாடகாவிலிருக்கும் 3 அணைகளும், நம் மேட்டூர் (மேட்டூர் - பெயரிலேயே அர்த்தம் இருக்கே?) அணையும் அப்படி கட்டப்பட்டதுதான்.
மேட்டூருக்கு கீழே அதுபோன்ற அணைகள் கட்டக்கூடிய நில அமைப்பு கிடையாது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகப்பட்டிணம் போன்றவை சமவெளிப் பகுதிகள். சமவெளியில் அணைகளைக் கட்ட முடியாது. ஏரி, குளங்களைத்தான் அமைக்க முடியும். அதனால்தான் நம் முன்னோர்கள் நிறைய ஏரி, குளங்களை காவிரி டெல்டா பகுதியில் வெட்டினார்கள்.
சிலர் வந்து காவிரி டெல்டாவில் கல்லணை கட்டப்படவில்லையா எனக் கேட்கலாம். கேட்பவர்கள் நிச்சயம் கல்லணையை முன்பின் பார்த்திருக்காதவர்களாகத்தான் இருப்பார்கள். கல்லணை என்பது டி.எம்.சி கணக்கில் தண்ணீரைத் தேக்கி வைத்து, தேவைப்படும்போது பயன்படுத்தும் அணை கிடையாது. காவிரியில் வரும் நீரை தடுத்து உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி , வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரித்து அனுப்பும் பிரம்மாண்டமான மதகுதான் கல்லணை.
அக்காலத்தில் காவிரியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்திலிருந்து பயிர்களைப் பாதுகாக்க கட்டப்பட்டதுதான் கல்லணை. காவிரியில் வெள்ளம் வரும்போது அது கொள்ளிடத்தில் திருப்பி விடப்படும். கொள்ளிடம் வெள்ள நீர் எவ்வளவு போனாலும் தாங்கும். அந்த வெள்ளநீரை பயன்படுத்திக் கொள்ள வெட்டப்பட்டதுதான் கடலூர் மாவட்டத்திலிருக்கும் வீராணம் ஏரி.
காவிரியில் கர்நாடகா கட்டியிருக்கும் 3 அணைகளின் மொத்த கொள்ளளவு 112 டி.எம்.சி. தமிழ்நாட்டிலிருக்கும் மேட்டூர் அணையின் கொள்ளளவு மட்டுமே 93 டி.எம்.சி.
நமக்கு மேட்டூர் அணை மட்டுமே போதும். ஏனென்றால் மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவதற்கான தண்ணீரே நமக்குக் கிடைப்பதில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்ட காலத்திலிருந்து (1934) தற்போதுவரை வெறும் 33 முறை மட்டுமே அணையின் முழு கொள்ளளவான 120 அடிவரை நீர் நிரம்பியிருக்கிறது.
நாம் செய்ய வேண்டியது இருக்கக்கூடிய நீர்நிலைகளைப் பாதுகாத்து ஏரி, குளங்களில் தண்ணீரைத் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டியது மட்டும்தான். மழைநீர்தான் நமக்கான நீர், ஆற்றுநீர் நமக்கும் கடலுக்குமான நீர்.
இனி யாராவது ஆற்றுநீர் வீணாகப் போய் கடலில் கலக்கிறதே என சொன்னால் அவர்களின் அறியாமையை நினைத்து பரிதாபப்படுங்கள்.
“தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக் கடற்கரை
மெலிக்கும் காவிரிப் பேரியாற்று"
என்கிறது அகநானூறு (126 : 4-5)
- நம்பிக்கை ராஜ்
- அமெரிக்காவில் நீரியல் விரிசல் முறை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளும், அறிவியல் வல்லுநர் குழுக்கள் கண்டறிந்த படிப்பினைகளும்!
- நதிகளை ஏன் இணைக்கக்கூடாது?
- இந்திய கிராமப்புறங்களில் திறந்தவெளி மலம் கழித்தலைப் புரிந்து கொள்ளல் - தீண்டாமை, மாசு, மலக்குழிகள்
- சூழல் அகதியா நாம்..?
- காலநிலையும், அரசியலும்
- செம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்
- நீலம் பாரித்துக் கிடக்கிறாள் மலைகளின் இளவரசி
- போஸ்கோ வெர்டிகல் மற்றும் சூரியச் சாலை
- மீத்தேன் - குழம்பிய குட்டையாக தமிழகம்!
- களத்தூர் மணல் குவாரி எதிர்ப்பு போராட்டமும் - இன்றைய நிலையில் நாம் செய்ய வேண்டியதும்
- பெரம்பலூர் சட்டவிரோத அனல்மின் நிலையம் கருத்துக் கேட்புக் கூட்டம் முறியடிப்பு
- அறிவாளிகளும், அப்பாவிகளும் - நியூட்ரினோ ஆய்வகம் - ஓர் அலசல்
- நியூட்ரினோ - அமெரிக்காவுக்கா? இந்தியாவுக்கா?
- கொலைக்கூடங்களாக உள்ள தோல் தொழிற்சாலைகளும்... சாவுப்பட்டறைகளாக உள்ள சாயப்பட்டறைகளும்...
- தமிழகத்தின் இயற்கையை, வளங்களை அழிக்கும் திட்டங்கள்
- அறிவியலை ஓரங்கட்டும் அரசியல்
- ஏன் மரபணு மாற்றுப் பயிர்கள் கள பரிசோதனைகள் தடை செய்யப்பட வேண்டும்?
- பிரச்சினை அறிவியலில்; தீர்வு அரசியலில்
- மீத்தேன் எரிவாயுத் திட்டத்தால் காவிரிப் படுகை பாலைவனமாகும்!
- மேற்குத் தொடர்ச்சி மலையை பாதுகாப்போம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.