இவ்வுலகில் 2070ஆம் ஆண்டிற்குள் கரி வளி (கார்பன் டை ஆக்ஸைட் - CO2) உமிழ்வு முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், 2100ஆம் ஆண்டிற்குள் பசுமை வளி (green house gas) உமிழ்வும் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் சுற்றுச் சூழல் திட்டங்கள் (United National Environmental Programme) பிரிவு 20.11.2014 அன்று பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில் தெரிவித்து உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால் இவ்வுலகில் உயிரினங்கள் அழிந்து போவதைத் தடுக்கவே முடியாமல் போய் விடும் என்றும் அது கூறி உள்ளது.

air pollution

ஐக்கிய நாடுகளின் அவை 19.11.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுமார் பத்து லட்சம் கோடி டன் கரி வளியும், அதே அளவு பசுமை வளிகளும் இப்புவியில் உமிழப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு உள்ளது. இன்னும் இதே அளவில் இவ்வளிகள் உமிழப்பட்டால், புவி வெப்பம் எல்லை கடந்து விடும் என்றும், பின் அதைத் திருப்பி விடும் ஆற்றல் மனித குலத்திற்கு அப்பாற்பட்டதாகி விடும் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அளவிற்கு இந் நச்சு வளிகள் வருங்காலத்தில் உமிழப்படாமல் பார்த்துக் கொள்ளப்படுமா என்பது ஐயமாக உள்ளது என்று இப்பிரிவின் தலைமை அறிவியலாளர் ஜாக்குலின் மெக்கிளேட் (Jacqueline McGlade) அம்மையார் கூறி உள்ளார். இயற்கை வளங்களையும், மனித ஆற்றல்களையும் இயக்கி வழி நடத்தும் அரசியல்வாதிகளின் அக்கறை இன்மை இதற்குக் காரணம் என்றும் அவர் கூறி உள்ளார்.

மேலும் கரி வளி உமிழப்படுவதைக் குறைப்பது; முற்றிலுமாகத் தடுத்து நிறுத்துவது மட்டும் போதாது. ஏற்கனவே உமிழப்பட்ட கரி வளியை உறிஞ்சி உயிர் வளியாக மாற்றிக் கொடுக்கும் மரங்களைப் போதுமான அளவிற்கு வளர்க்க வேண்டியதும் முக்கியமானது ஆகும்.

ஆனால் இது போன்ற நல்ல திட்டங்களுக்கு வளர்ந்த நாடுகளில் எந்த விதமான ஆதரவும் கிடைக்கவில்லை என்று ஐரோப்பிய ஆற்றல் ஆணையத்தின் துணைத் தலைவர் (European Commission's vice pesident for energy) மாரோஸ் ஸெஃபெயொவி (Maros Sefeovie) கூறி உள்ளார்.

அறிவியல் அறிஞர்கள் கூறி உள்ள இவ்விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கு மிக அதிகமான அறிவுத் திறன் தேவை இல்லை. சராசரி அறிவுக்கும் குறைவான அறிவே போதுமானது. இருந்தும் இவ்வுலகின் இயற்கை வளங்களையும் மனித ஆற்றல்களையும் இயக்கி ஆளும் அறிவுத் திறன் படைத்த அரசியல்வாதிகளுக்கு எப்படிப் புரியாமல் போகிறது? உண்மை என்னவென்றால் இந்த அரசியல்வாதிகள் முதலாளிகளின் அடிமைகளே.

முதலாளிகளைப் பொருத்த மட்டில் சந்தையின் வழியில் உற்பத்தி முறை இருந்தால் தான் உழைக்கும் மக்களை அடிமை கொண்டு வாழ முடியும். அறிவியல் அறிஞர்கள் கூறுவதைக் கேட்டால் இலாபம் தரும் பொருட்களை உற்பத்தி செய்ய முடியாது என்பது மட்டும் அல்ல; நஷ்டம் தரும் பொருட்களான மரம் வளர்த்தல், விவசாயம் போன்ற தொழில்களைத் தான் மிக அதிகமாக முன்னெடுக்க முடியும். அவ்வாறு செய்ய வேண்டுமானால் சந்தை முறையை அதாவது முதலாளித்துவ முறையைக் காவு கொடுத்து விட்டு, சமதர்ம (சோஷலிச) முறையைக் கைக்கொள்ள வேண்டும். அப்பொழுது உழைக்கும் மக்களை அடிமை கொள்ள முடியாது; அதாவது பிற மனிதர்களை அடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாது.

அடிமை கொள்ளும் சுகத்தை அனுபவிக்க முடியாமல் போவதை விட இவ்வுலகம் அழிந்து போனாலும் போகட்டும் என்று முதலாளிகள் நினைக்கின்றனர். முதலாளிகளின் அடிமைகளான அரசியல்வாதிகளும் தங்கள் எஜமானர்னளுக்கு விசுவாசமாக நடந்து கொண்டு இவ்வுலகை அழிவுப் பாதையில் கொண்டு போகின்றனர்.

உழைக்கும் மக்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் / முதலாளித்துவ அரசியல்வாதிகளின் மயக்கு மொழிப் பேச்சுகளில் மயங்கி உலகை அழிய விடப் போகிறீர்களா? அல்லது மனித இனப் பொறுப்பை உணர்ந்து முதலாளித்துவ முறையைக் காவு கொடுக்கவும், சமதர்ம முறையை ஏற்படுத்தவும் அணியமாகப் போகிறீர்களா?

- இராமியா

Pin It