pottipuram 338

கல்பாக்கம், கூடங்குளம் அணுவுலைகள், மீத்தேன் கெய்ல் திட்டம் இவற்றினைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்திருக்கும் புதிய தலைவலி தான் “இந்திய நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்”. 2011ம் ஆண்டில் இந்த நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியினை (Environmental Clearance) அப்போதைய காங்கிரஸ் அரசு வழங்கியது. அதற்கு சற்றும் சளைக்காத மோடி அரசு, தற்பொழுது (05.01.2015) இத்திட்டத்திற்கான ஒப்புதலை அளித்ததோடு மட்டுமில்லாது, 1,500 கோடி ரூபாய்களை அள்ளி வழங்கியுள்ளது.

மேலும், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க சுமார் 6,00,000 டன் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதாக இத்திட்டத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எந்த ஒரு திட்டத்திற்கும் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முன் அந்த திட்டத்தினால் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்திற்கு உண்டாகும் பாதிப்புகள் ஆராயப்பட வேண்டும் என்பது சட்டம். இப்படி பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதால் உண்டாகும் சூழலியல் பாதிப்புகள் குறித்தும், அவ்விடத்திற்கு அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ள இந்த அரசுகள் விரும்பவில்லை.

மேற்கு தொடர்ச்சி மலை தான் பல நீர்நிலைக்கு அடிப்படையாக உள்ளது. மேலும் தென்னக நதிகளுக்கும் இதுவே ஆதாரமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் சூழலியலுக்கு கேடு விளைவிக்கும் புதிய திட்டங்கள் அனுமதிக்க கூடாது என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் கூறியுள்ளன. ஆனால், நமது அரசிற்கு பசுமை மிகுந்த அவ்விடம் தான் மிகவும் பிடித்துள்ளது போலும்.

இப்படி விதிமுறைகளை மீறி கொண்டுவரப்படும் இத்திட்டத்திற்கு எதிராக வலுவான குரல் பதியப்பட வேண்டும். அதற்கான ஒரு சிறு முயற்சியாக, ”பூவுலகின் நண்பர்கள்” அமைப்பு சார்பாக பசுமைத்தீர்ப்பாயத்தின் கீழ், ”மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சம்” விதிமுறைகள் மீறி நீயூட்ரினோ ஆய்வகத் திட்டத்திற்கு வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியினை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்டத்தின் மூலம் நியூட்ரினோவை இயற்கை மற்றும் செயற்கை என இருவழிகளில் ஆரயவுள்ளார்கள். இயற்கையாக நியூட்ரினோவை ஆராய்வதில் பெரும்பாதிப்பு இருப்பதாக கருதப்படவில்லை. ஆனால், செயற்கையாக ஆராய்வது எத்திட்டமாய் இருந்தாலும் சூழலியல் பாதிப்பிற்குரியது. இதில் நியூட்ரினோ என்ன விதிவிலக்கா?

நியூட்ரினோ திட்டத்தில் வெளிநாட்டு விஞ்ஞானிகளின் பங்கு பெருமளவில் உள்ளது என்பதை அத்திட்ட ஆய்வறிக்கையே கூறுகிறது. இது எவ்விதத்தில் உள்நாட்டு பாதுகாப்புக்கு உகந்தது எனும் கேள்வி எழுகிறது. மேலும், அமெரிக்காவின் பெர்மி ஆய்வகத்துடன் இந்தியா 2003 ஆம் ஆண்டிலிருந்தே பல ஒப்பந்தகளை மேற்கொண்டு வருகின்றது. அதில் நியூட்ரினோ திட்டமும் ஒன்று. மேலும், இத்திட்டத்திற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆய்வுக்கூடங்களிலிருந்து செயற்கை நியூட்ரினோ கதிர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான தேனி மாவட்டத்திற்கு அனுப்பப்போகிறார்கள். 7000 கிலோமீட்டர் பயணிக்கும் இந்த செயற்கை நியூட்ரினோ, எவ்விதத்தில் பாதுகாப்பிற்கு உரியது என்னும் கேள்வியும் எழுகின்றது. இப்படி செயற்கை நியூட்ரினோ பயணிப்பது எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினைக் கூட இவர்கள் செய்யவில்லை. செயற்கை நியூட்ரினோ ஆபத்திற்குரிய துகள் எனக் கருதப்படும் நிலையில், இந்த நியூட்ரினோவின் பயணம் இறுதியில் தமிழகத்திற்கு எத்தகைய பாதிப்புகளை உருவாக்கும் என்னும் ஆய்வினையாவது குறைந்தபட்சம் இந்திய அரசு மேற்கொண்டிருக்கலாம்.

வழக்கம்போல் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர். எப்படி கூடங்குளம் திட்டத்திற்கு முழு ஆதரவை அளித்து, மக்கள் எழுச்சிக்குப் பின், தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டார்களோ, அப்படியே அவர்கள் இந்நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ளும் காலமும் வரும்.

நியூட்ரினோ துகள்களைக் கொண்டு அணு உலைகளில் உள்ள ப்ளுட்டோனியத்தின் அளவை கணக்கிட முடியும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க பெரியண்ணனுக்கு இத்தகைய துகள் நிச்சயம் தேவை. இதில் இந்தியாவும் தன் பங்கை செலுத்த நினைக்கிறது. வாழ்க உலக அமைதி.

Pin It