தமிழகத்தில் மீத்தேன் வாயு குறித்து ஆய்வுப்பணிகள் எதிலும் ONGC நிறுவனம் ஈடுபடவில்லை என்று இந்நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர்(பொறுப்பு) சி. என். எஸ் குமார் கடந்த 29. 07. 2015 அன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

mithenதிருவாரூர் மாவட்டத்தில் கொரடாச்சேரி, அம்மையப்பன் முகுந்தானூர், திருவாரூர், திருக்கன்னமங்கை, மணக்கால், அய்யம்பேட்டை, திருவாஞ்சியம், நன்னிலம் ஆகிய பகுதிகளில் ONGC நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுப்பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்திவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட இடங்களில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் புவியியல் ஆய்வுகளையே மேற்கொண்டு வருவதாகவும், இந்த ஆய்வுப்பணிகளுக்கு 25- லிருந்து 30 ஆடி ஆழம் வரை மட்டுமே துளையிட்டு ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புவியியல் ஆய்வுக்காக 25-30 அடி ஆழத்தில் மட்டுமே ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதாகவும், அது மீத்தேன் எடுப்பதற்கான ஆய்வுப்பணிகள் இல்லை என்றும், இவைகள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பதற்கான ஆய்வுப்பணிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்த அறிக்கையின் மூலம் இயற்கை எரிவாயு என்பதும், மீத்தேன் என்பதும் வெவ்வேறானவை என்பதை போன்று இதன் மூலம் நமக்கு உணர்த்த முற்படுகிறார்.

இதையே காவேரி பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு பசுமைதீர்ப்பாயத்தில் வழக்கில் தான் அளித்துள்ள மனுவிலும் ONGC நிறுவனம் தெரிவித்துள்ளது.

உண்மையிலேயே இயற்கை எரிவாயு என்பதும், மீத்தேன் என்பதும் வெவ்வேறான பொருட்களா என்பதைப் பற்றி மக்களிடையே உள்ள அறியாமையை பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயலும் ONGC நிறுவனத்தின் அணுகுமுறையையே அவரின் பத்திரிக்கை செய்தி நிரூபிக்கிறது.

அதோடு மீத்தேன் என்பதும் இயற்கை எரிவாயு என்பதும் வெவ்வேறானது என்பதை காவிரி பாதுகாப்பு இயக்கம் பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கிலும் ONGC நிறுவனம் பதில் மனுவாகவே அளித்துள்ளது. மீத்தேன் என்பதும், இயற்கை எரிவாயு என்பதும் வெவ்வேறானவை என்ற ONGC நிறுவனத்தின் விளக்கத்தை பசுமைத்தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு இந்நிறுவனத்திற்கும், கெயில் நிறுவனத்திற்கும் 05.08.2015 அன்று தான் வழங்கிய இடைக்கால தடையை நீக்கியும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்கத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கான ஒப்பந்தத்தை GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு 2010 ஆண்டு மத்திய அரசு வழங்கியது. இதற்கான ஒப்பதலை தமிழ்க அரசு 2011 ஆண்டு அளித்தது. இதன் பிறகு 2012-ம் ஆண்டு GEECL என்ற பன்னாட்டு நிறுவனம் டெல்டா மாவட்டங்களில் 50 இடங்களில் மீத்தேன் கிணறுகளை அமைப்பதற்கான பணிகளில் இறங்கியது. இத்திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராடியதால் இந்நிறுவனத்திற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு தமிழகஅரசு மத்திய அரசை கேட்டுக்கொண்டது. அதோடு அந்நிறுவனம் தனது அலுவலகத்தை மூடிவிட்டு சென்றுவிட்டது. ஆனாலும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை முற்றாக கைவிட்டுவிட்டதாக மத்திய, மாநில அரசுகள் இன்னும் அறிவிக்க வில்லை.

மேற்கண்ட விவரங்களில் இருந்து அதாவது GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு மீத்தேன் எடுக்க வழங்கப்பட்ட ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டதால் தமிழகத்தில் மீத்தேன் எடுக்கும் செயல்பாடு எதுவும் நடைபெறவில்லை என்று சாதிக்கிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பதற்கு திட்டமிடப்பட்ட 50 கிணறுகளுக்கான பணிகள் நடைபெறவில்லை என்பது உண்மைதான்.

அதே நேரத்தில் மதிமுக தலைவர் வைகோ தலைமையில் செயல்படும் காவிரி பாதுகாப்பு இயக்கம் கடந்த 25.07.2015 அன்று பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பணியை அதற்கு பதிலாக ONGC நிறுவனம் மறைமுகமாக நிறைவேற்ற முயற்சிக்கிறது என்றும் அதன்படி 35 இடங்களில் மீத்தேன் கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவிரி பாதுகாப்பு இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. காவிரி பாதுகாப்பு இயக்கம் மட்டுமல்ல மார்க்சிய கம்யுனிச கட்சி Shale gas என்றும், பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாசு பாறை எரிவாயு என்றும் குறிப்பிடுகின்றார். இந்த இருவருமே மீத்தேன் திட்டத்தைவிட இப்போது அறிவித்துள்ள திட்டம் ஆபத்தானது என்று தமது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே மீத்தேன் குறித்த குழப்பத்தை தெளிவுப்படுத்த வேண்டியது தற்போதைய முக்கியமான பணியாக உள்ளது. மீத்தேன் எதிர்ப்பு அமைப்புகளிடமும், மக்களிடமும் நிலவும் குழப்பத்தை போக்கினால்தான் மீத்தேனுக்கு எதிரான நமது போராட்டங்களை சரியான இலக்கை நோக்கி நம்மால் கொண்டு செல்ல முடியும்.

நமது பூமியில் மீத்தேன், ஈத்தேன், ப்ரோபேன், ப்யூட்டோன், கார்பன் ஆக்சைடு, நைட்ரஜன், ஹைட்ரஜன் சல்பைடு போன்ற பல வாயுக்கள் உள்ளன.

இவற்றில் 90% அளவுக்கு மீத்தேன் எரிவாயுவாகும். எஞ்சியவை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது. இதில் மீத்தேன் மட்டுமே உயர்வகையான எரிவாயுவாகும்.

இப்போது நமது வீடுகளில் பயன்படுத்துவது திரவ பெட்ரோலிய எரிவாயுவாகும். இதைத்தான் ஆங்கிலத்தில் LPG என்கிறோம். இது கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் போது முதலில் கிடைப்பதாகும். இதில் ஒரு சிறிதும் மீத்தேன் எரிவாயு இருப்பதில்லை. மாறாக ப்ரோபேன் (அ) புயூட்டோன் அல்லது இரண்டும் கலந்த கலவையாகும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் GEECL என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மூலம் நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கான பணிதான் வழங்கப்பட்டது. இந்த நிலக்கரி படிம மீத்தேன் எடுக்கும் பணியைத்தான் தற்போது மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஆனால் இதற்கு மாறாக மற்றொரு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி 39 கிணறுகள் தோண்டுவதற்கான அனுமதியை ONGC நிறுவனம் பெற்றுள்ளது. இந்த 39 கிணறும் எண்ணெய் , எரிவாயு கண்டுபிடிப்பதற்கானது என்று கூறுகிறது இந்நிறுவனம். இத்திட்டத்தில் மீத்தேன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதாலேயே இது மீத்தேன் கிணறுகள் இல்லை என்கிறார்கள். இந்தக் கிணறுகள் எந்த வகையான மீத்தேன் எடுப்பதற்கானது என்பதில் காவிரி பாதுகாப்பு இயக்கத்திற்கு குழப்பம் நிலவுகிறது என்பதையே அதன் ஜீலை 25 அறிக்கையும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்துள்ள வழக்கிலிருந்தும் தெரிகிறது. ONGC நிறுவனம் அமைக்க உத்தேசித்துள்ள 39 கிணறுகளும் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைக்க இருப்பதாக தவறான தகவலையும் பசுமைத் தீர்ப்பாயம் வரை கொண்டு சென்றுள்ளது.

ONGC நிறுவனம் 35 கிணறுகள் தோண்ட சுற்றுசூழல் மற்றும் வனத்துறை, பருவநிலை மாற்றம் தொடர்பான அமைச்சகத்தின் நிபுணர் குழுவுடம் தடையில்லா சான்று பெற்றுள்ளது. தாங்கள் தோண்ட உள்ள 39 கிணறுகளின் மாவட்ட பட்டியலும் வெளியிட்டுள்ளது. அதன் படி கடலூர் மாவட்டம் 14, அரியலூர் 10, தஞ்சை 5, நாகை 9, திருவாரூர் 1 என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கிணறுகளின் ஆழம் 3000-5200 மீட்டர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதே நிபுணர் குழு GEECL நிறுவனத்திற்கு நிலக்கரி படிம மீத்தேன் எடுப்பதற்கு திருவாரூர் மாவட்டத்தில் 38 கிணறுகள் , தஞ்சை மாவட்டத்தில் 12 கிணறுகள் என மொத்தம் 50 கிணறுகளை 600 மீட்டர் ஆழம் வரை அமைப்பதற்கு 12. 09. 2012 அன்று தடையில்லா சான்று வழங்கியுள்ளது.

அதாவது மேற்கண்ட இடங்களில் நிலக்கரி படிம மீத்தேன் 600 மீட்டர் ஆழத்தில் இருப்பதால் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

தற்போது ONGC நிறுவனத்திற்கு வழங்கியுள்ள தடையில்லாச்சான்றில் 3000-5200 மீட்டர் ஆழம் வரை கிணறு தோண்ட அனுமதித்துள்ளது.

பூமியின் கீழ் 200-1000 மீட்டர் ஆழம் வரை மட்டுமே நிலக்கரி படிம மீத்தேன் இருக்கும்.

புதுவை பாகூர் படுகையில் 766. 37 MT, நெய்வேலி படுகையில் 6835. 45 MT , மன்னார்குடி படுகையில் 19788. 68 MT (மெட்ரிக் டன்) அளவுக்கு மீத்தேன் உள்ளது. இவை அனைத்துமே 600 மீட்டர் ஆழத்தில் மட்டுமே உள்ளது.

இந்த 600 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேனை மரபுசாரா எரிவாயு எடுக்கும் முறைகளில் வாயு மற்றும் நீராவியை உட்செலுத்தல் மூலம் அழுத்தத்தை செயற்கையாக ஏற்படுத்தி பயன்படுத்த முடியும். அதையே செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது அறிவித்துள்ள 39 கிணறுகளும் 10, 000 அடியிலிருந்து 17, 000 அடிவரை ஆழம் கொண்டவை. இந்த ஆழத்தில் கடினப்பாறைகளுக்கு இடையே உள்ள மீத்தேன் (Shale gas)வகையை சேர்ந்ததாகும். இந்த வகை மீத்தேனை நீரீயல் விரிசல் (Hydraclic Fracking) முறையை பயன்படுத்தி மட்டுமே எடுக்க முடியும்.

ஏனென்றால் பத்தாயிரம் அடி ஆழத்துக்கு கீழே முற்றாக அழுத்தம் ஏதும் இருக்காது. இந்த ஊடுருவா தன்மை உள்ள ஆழத்தில் முற்றிலும் செயற்கையான முறையிலேயே அழுத்தத்தை உருவாக்க வேண்டும்.

இதற்காக நீரியல் விரிசல் முறையை பயன்படுத்துகிறார்கள். 635 வகையான ரசாயன வேதிப்பொருட்கள் 360 டன், 400 டிப்பர் லாரி மணல், ஜல்லி, பீங்கான் துகள்கள் ஆகியவற்றை1 ½ கோடி லிட்டர் நீரில் கலந்து அதிவேகமாக ஐந்தரை கிலோ மீட்டர் ஆழகிணற்றில் பீய்ச்சி அடிப்பார்கள். இதன் மூலம் பூமிக்கு அடியில் உள்ள கடினப்பாறைகளை பிளந்து அவைகளுக்கு இடையே உள்ள மீத்தேனை கிணற்றில் சேகரித்து வெளியே கொண்டு வருவார்கள். இதனோடு உட்செலுத்திய 30% அளவுக்கு ரசாயன கலவையும் வெளியே வரும். இதை குட்டைகளில் சேமித்து ஆவியாக்குவார்கள். இதனால் காற்று மண்டலத்தில் ரசாயன கலவை கலக்கும்.

இந்த நீரியல் விரிசல் முறை அணுகுண்டைவிட ஆயிரம் மடங்கு அழிவை ஏற்படுத்தும் தன்மையுடையது. 635 வகையான ரசாயனங்களையும் ஒன்றாக கலக்கும் போது அது எப்படிபட்ட வேதி வினைபுரியும் என்பதற்கு அறிவியல் உலகில் இதுவரை ஆய்வுகளே இல்லை. இதை பயன்படுத்திய நாடுகளில் இந்த அழிவு தொழில்நுட்பம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

உலகிலேயே மக்களிடையேயும், அறிவியல் உலகிலும் மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு தொழில்நுட்பம் நீரியல் விரிசல் முறையே ஆகும்.

இதனால் ஆஸ்திரேலியா இந்த தொழில்நுட்பத்தை முற்றாக தடைசெய்துள்ளது. அமெரிக்கா மக்கள் வாழாத பகுதியில் மட்டுமே நீரியல் விரிசல் முறையை பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆனால் நியூயார்க் மாகாண ஆளுநர் இம்முறைக்கு முற்றாக தடைவிதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டுள்ளார்.

இந்த நீரியல் விரிசல் முறையால் காற்றுமண்டலம் முற்றாக நஞ்சாகி உயிரினங்கள் சுவாசிக்க முடியாததாக மாறிவிடும். இதனால் புல், பூண்டு கூட இப்பகுதிகளில் வாழமுடியாது. இந்த காற்றை சுவாசிக்கும் மனிதர்களும், மிருகங்களும் நுரையீரல் கோளாறுகள், புற்றுநோய் உட்பட அனைத்து வகையான நோய்களுக்கும் ஆட்படுவார்கள்.

காற்றில் பரவியுள்ள நஞ்சு, மழைக்காலத்தின் போது பூமிக்கு வந்து மண்ணை நஞ்சாக்கிவிடும். இதன் மூலம் நிலத்தடி நீரும் நஞ்சாகிப்போகும்.

பூமியின் அடியில் உள்ள கடினப்பாறைகளை உடைப்பதால் நிலநடுக்கம் மிகச் சாதாரணமாக இப்பகுதிகளை தாக்கி பேரழிவை ஏற்படுத்தும், பாறைகளை உடைப்பதால் வெளியே வரும் மீத்தேன் மற்றும் ரசாயனக் கலவை மேலே வந்து நிலத்தடி நீரில் கலக்கும்.

மொத்தமாக சொன்னால் கடினப்பாறைகளுக்கு நடுவில் உள்ள மீத்தேனை எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நீரியல் விரிசல் முறை இந்தப்புவியையே அழிக்கும் தொழில்நுட்பமாகும்.

இது வரை நாம் பரிசிலித்த செய்திகளில் இருந்து ONGC நிறுவனம் அமைக்க உத்தேசித்துள்ள நீரியல் விரிசல் முறையை பயன்படுத்தி எடுக்கப்படும் மீத்தேன் கிணறுகளே ஆகும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மட்டுமல்ல கடலூர், அரியலூர் மாவட்டங்களையும் உள்ளடக்கியதுதான் இத்திட்டம். அதிலும் 39 கிணறுகளில் 24 கிணறுகள் இவ்விரு மாவட்டங்களில்தான் அமையவுள்ளது.

எனவே தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இத்திட்டத்தை தடுத்தால் மட்டும் போதாது, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் மீத்தேன் கிணறுகள் அமைந்தால் இந்த மாவட்டங்களில் மட்டுமல்ல தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களும் அழிவின் பிடியில் தள்ளப்படும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஊர்கள், மாவட்டங்கள், நாடுகள் என்று மனிதர்கள் எல்லைகளை உருவாக்கிக் கொள்ளலாம். ஏன் கடலிலும், ஆகாயத்திலும் கூட எல்லைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் மனிதர்களை வேண்டுமானால் கட்டுபடுத்தலாம். காற்றை ஒரு எல்லைகளிலிருந்து மற்றொரு எல்லைக்கு வராமல் தடுக்க முடியுமா?

கடலூர், அரியலூர் மாவட்டங்களின் காற்றுமண்டலம் நஞ்சானால் அது இந்த மாவட்டங்களையும், இங்கு வாழும் மனிதர்கள் உட்பட உயிரினங்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துமா?

- மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு – கடலூர் மாவட்டம். தொடர்பு எண்: 9842529188

Pin It