வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்துக்கு அருகில் நெமிலி ஒன்றியத்தில் உள்ளது, களத்தூர் கிராமம். பாலாற்றின் கரையில் உள்ள இந்தக் கிராமத்திற்க்கு அருகில்தான் புதிதாக சங்கரன்பாடி மணல்குவாரி அமைக்க ஓராண்டுக்கு முன்பு பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியது. மணல் குவாரியின் பாதிப்பை உணர்ந்த இப்பகுதி மக்கள் தமிழக அரசின் குவாரி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதை எதிர்த்து ஒருங்கிணைந்து போராடத் தொடங்கினர்.

பாலாற்றின் சிறப்பு :

இந்தியாவில் உள்ள மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் பலரும் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது பாலாற்றில் மட்டும்தான் சுமார் 100 அடி ஆழம் வரை கூட சில இடங்களில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் களிமண் தெரியும் வரை அடிவரை தோண்டுகிறார்கள். ஒரு செ.மீ மணல் உருவாக 100 ஆண்டுகளும், ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகளும் ஆகின்றன என்கிறது அறிவியல் ஆய்வுகள்.

தமிழக ஆறுகளின் நிலைமை :

தமிழகத்தில் ஓடும் நதிகளில், பெரும்பாலானவற்றில் ஆற்றுமணல் வரைமுறையற்று இரக்கமில்லாமல் அள்ளப்படுகிறது. ஆறுகளில் மணல் என்பது ஏதோ வீணாகக் கிடப்பதல்ல. ஆற்றில் மணல் இருந்தால்தான் ஓடும் நதிநீரை பஞ்சுபோல பிடித்து ஈர்த்து வைத்திருக்கும். ஆற்று மணல்தான் தண்ணீரை தேக்கி வைத்து நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கிறது. ஆறுகளில் தண்ணீர் ஓடாதபோதுகூட மணலுக்குக் கீழே தனியாக ஒரு நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கும். இதனால்தான் ஆற்றில் எங்கே கைகளால் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த மணலை முழுமையாக அகற்றினால் பழைய நிலைமைக்கு வருவதற்கு பல நூறு ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், மணல் கொள்ளையர்களோ அரசு அனுமதித்த 1 மீட்டர் ஆழம் (3½ அடி) வரை என்பதை மீறி 100 அடி ஆழம் கட்டாந்தரை வரை ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள்.

அண்டை மாநிலங்களில் ஆறுகளின் நிலைமை :

கேரளத்தில் ஓடும் 45 ஆறுகளில் எந்த ஓர் ஆற்றிலும் கேரள அரசு மணல் அள்ள அனுமதிக்கவில்லை. ஆந்திரத்தில் கிருஷ்ணா, கோதாவரி போன்ற மிகப் பெரிய ஆறுகளில்கூட இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளக்கூடாது என்ற அரசின் விதி கடுமையாக உள்ளது.

மணல்கொள்ளை:

மூலதனமே இல்லாமல் சமூக சொத்தை கொள்ளையடிக்கும் வழிகளில் ஒன்று மணல்கொள்ளை. மணல் கொள்ளையர்கள் -ஆளும் அரசியல்வாதிகள் -அதிகாரிகள் என்ற முக்கூட்டில் பலலட்சம் கோடி அளவில் ஆற்று மணல் கொள்ளை அடிப்பது என்பது ஊரறிந்த ரகசியமாக, எழுதப்படாத விதியாக கடந்த 20 ஆண்டுகளில் நடந்து வருகிறது.

ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து மக்களின் சட்டப் போராட்டமும் - நடந்ததும் :

ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து மக்களின் தொடர்ந்த போராட்டத்தாலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு மூலமும் நீதிபதி சம்பத் அவர்கள் ஒரு நிபுணர் குழுவை அமைத்து அதனுடைய பரிந்துரைப்படி 1.10.2003 முதல் அரசு மட்டுமே மணல் குவாரியை நடத்த வேண்டுமென உத்தரவிட்டார். அதற்கு ஏற்ப, அரசு மணல் குவாரியை பொதுப்பணித்துறை மூலம் ஏற்று நடத்தத் தொடங்கியது.

முறைப்படுத்துகிறேன் என்ற பெயரில் அரசு, மணல் குவாரிகளை நடத்துவதாகக் கூறினாலும் ஆளும் அரசின் ஆசி பெற்றவர்களை மணலை லாரிகளின் ஏற்றும் ஒப்பந்தம் (லோடிங் கான்டிராக்ட்) என்ற பெயரிலும் இரண்டாம் விற்பனை (செகண்ட் சேல்ஸ்) என்ற பெயரிலும் ஆறுமுகசாமி, கே.சி.பழனிசாமி, படிக்காசு போன்ற மணல் கொள்ளையர்களிடம் மட்டுமே அனைத்து மணல் குவாரிகளும் இருந்தது. தற்போதைய ஆட்சியில் ஆறுமுகசாமி மட்டுமே அனைத்து மணல்குவாரிகளுக்கும் முற்றுரிமை பெற்றவராக வலம்வந்து தற்போது அவரும் மாற்றப்பட்டு ராமசந்திரன் என்பவர் எடுத்து வருகிறார். தற்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மைத்துனர் எனக் கூறிக் கொண்டு ஒரத்தநாடு பாசுகர் என்பவர் கரிகாலன் என்பவரை வைத்து மணல் கொள்ளையை நடத்தி வருகிறார்கள்.

அரசு 3 யூனிட் கொண்ட ஒரு லாரி மணல் 945 என விலை நிர்ணயித்திருந்தாலும் அதன் உண்மையான விற்பனை விலையாக ரூ.15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை உள்ளது. இந்த விலையை தீர்மானிப்பவர்கள் மணல் கொள்ளையர்கள் மட்டுமே.

தமிழ்நாட்டில் எடுக்கப்படும் ஆற்றுமணல் அனைத்தும் தமிழகத்தின் கட்டட வேலைக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இவர்கள் சுரண்டும் ஆற்றுமணல் அளவிற்கும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கட்டிட வேலைகளுக்கும் மிகப்பெரும் இடைவெளி உள்ளது. தமிழகத்தில் அள்ளப்படும் ஆற்றுமணல் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாட்டிற்கும் கூட கடத்தப்பட்டு வருகிறது.

கேரளத்தில் பல இடங்களில் காவிரி, அமராவதி, தாமிரபரணி ஆற்று மணல் கிடைக்குமென பெயர்ப்பலகைகள் தொங்குகிறது. மாலத்தீவு உட்பட பல வெளிநாடுகளுக்கு ஆற்று மணல் கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படும் ஆற்று மணலின் அளவு ஆண்டிற்கு 11 லட்சம் டன்னாகும். இயற்கையின் மடியில் பாலைக் குடிப்பதற்கு பதிலாக இயற்கையின் மடியையே அறுத்து ரத்தம் குடிக்கும் இக்கொள்ளையர்களால் தமிழகத்தின் ஆற்று வளமே அழிந்துவிட்டது. ஆற்றின் நீர்மட்டமே தாழ்ந்துவிட்டது. ஆற்றில் எங்கு கைவைத்து தோண்டினாலே தண்ணீர் வரும் என்ற நிலை அழிந்தே போய்விட்டது. ஆறுகளில் ராட்சச இயந்திரங்களை வைத்து மணல் அள்ளக்கூடாது என உயர்நீதிமன்றம் 2010, 2012, 2013 ஆண்டுகளில் பல்வேறு தீர்ப்புகளை கொடுத்திருந்தாலும் அது எதுவும் மணல் கொள்ளையை தடுக்க உதவவில்லை. 10 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆற்று மணல் அள்ளியதில் முறைகேடு நடைபெற்றுள்ளது.

கனிமவளக் கொள்ளையைப் பொறுத்தவரை இவர்களுக்கு குவாரி நடத்த அரசின் அனுமதி பெற்ற இடங்கள் என்பதெல்லாம் பெயர் அளவிற்குத்தான் சில இடங்களில் மட்டும் அனுமதி பெற்ற இவர்கள், கனிமங்கள் எங்கெல்லாம் இருக்கிறதோ, அவையனைத்தையும் தங்கள் விருப்பப்படி வெட்டி எடுத்து சூறையாடி இயற்கையை நாசமாக்கி வருகிறார்கள். ஆட்சிக்கு வந்த அனைத்து அரசியல்வாதிகளும் பெரும்பாலான அதிகாரிகளும் இவர்களின் சட்டைப் பைக்குள்ளேயே அடங்கி இருக்கின்றனர். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள்தான் ஒரு நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆறுமுகசாமி போன்ற மணல் கொள்ளையர்கள் அடுத்து அமையவிருக்கும் அரசை நான்தான் தீர்மானிப்பேன் என்று வெளிப்படையாக கூட்டங்களில் பேசும் அளவிற்கு இவர்களின் அசுர பலம் உள்ளது.

மணல்குவாரிகள் விதிமுறைகள் சில :

-காலை 7 முதல் மாலை 5 மணி வரைதான் மணல் எடுக்க வேண்டும்.

-தமிழக அரசின் சிறப்பு அனுமதி பெற்றுதான் பொக்கலைன் பயன்படுத்த வேண்டும்.

-நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுமா, மணல் அள்ள அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுப்பணித்துறை, சென்னையில் உள்ள சுற்றுச் சூழல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும்.

-மணல் அள்ளுவதில் இரண்டு பொக்கலைன் எந்திரங்கள்தான் பயன்படுத்த வேண்டும்.

- வாரம் ஒரு நாள் ஞாயிறு அன்று மணல்குவாரி இயங்க கூடாது.

-ஒரு மீட்டர் ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும்.

-ஆற்றின் கரை ஓரத்தில்தான் அள்ள வேண்டும்.

--அள்ளபடும் இடம் தெளிவாக தெரியும் வகையில் எல்லைக் கற்கள் நடப்பட்டு, கம்பிவேலி அமைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

-இதனால் உள்ளூர் மக்களுக்கு நிலத்தடி நீர், சாலை வசதி, விவசாயம் என எந்த பாதிப்புகளும் வரக்கூடாது.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்படும் இடத்திற்க்கு ஊராட்சி மன்றத்திற்கு வரி செழுத்த வேண்டும்.

-குவாரி மணல் கொட்டி வைக்கப்பட்டு எடுக்கப்படுவதால் அதற்க்கு வருமானவரி துறையிடம் செகண்ட் சேல்(second sals) வரி செழுத்த வேண்டும்.

- இதை கண்காணிப்பதற்காக 2006 -இல் உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட அளவில் சிறப்புக் குழு, தாசில்தார் தலைமையில் வட்ட அளவில் சிறப்புக் குழு என அமைத்து இயங்க வேண்டும் எனவும்,மாதம் ஒருமுறை இக்குழு கூடி கனிமவள முறைகேடு பற்றிய புகார்களை விசாரிக்க வேண்டும், எனவும் உத்தரவு இட்டு இருக்கிறது.

இவை அனைத்தும் சட்டமாக தாள்களில் மட்டும் உள்ளது.இதை அதிகாரிகள், அரசு யாரும், எங்கும் நடைமுறைப் படுத்துவதில்லை.

பாலாற்றின் நிலை:

பாலாற்றில் ஏற்கனவே தோல் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் விட்டு வந்ததால், பாலாற்றில் இருந்த குடிநீர் ஆதரங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்து வந்தது.

ஏற்கனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில். அரசால் மணல்குவாரி அமைத்து, தொடர்ந்து களிமண் தெரிய அடிவரை மணலை ஒட்ட தோண்டி எடுத்ததால் அப்பகுதியில் எல்லாம் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றில் பெரும்பாலான இடங்களில் மணலை ஒட்ட சுரண்டிய பின், வேலூர் மாவட்டத்தில் காலடி எடுத்து வைத்தனர். ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் பூண்டி சுமைதாங்கி, குடிமல்லுர், சாத்தாம்பாக்கம், தேவதானம், வன்னிவேடு, தோட்டாளம், அனங்காநல்லூர், மோட்டூர் என பல இடங்களில் பாலாற்றில் மணல்குவாரி அமைத்து செயல்பட தமிழக அரசின் பொதுப்பணித்துறை அனுமதி கொடுத்து அதனால் எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டது..

எனவே இதை எதிர்த்து மக்கள் கொதித்தனர். பல இடங்களில் மக்கள் போராட்டம் வெடித்தது. மணல்குவாரி ஆபத்து பற்றியும்,தொடர் விளைவுகள் பற்றியும் மக்கள் உணர்ந்து இருந்ததால் வேலூர் மாவட்டத்தில் மணல்குவாரி அமைப்பதை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். குறிப்பாக பாலாற்றில் வன்னிவேடு மணல்குவாரி அமைப்பதை எதிர்த்து வாலாஜாபேட்டை போன்ற ஊர்களில் மக்கள் அணிதிரண்டு கடையடைப்பு உட்பட எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டனர். அதே போல் தோட்டாளத்தில் மணல்குவாரி அமைத்ததை எதிர்த்து மக்கள் நீதிமன்றத்தில் தடை வாங்கியும், தொடர்ந்து மணல்குவாரியை முற்றுகை இட்டும் போராடி வந்தனர்.

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலை:

மக்கள் போராட்டங்களை நசுக்கும் கலையை மணல்கொள்ளையர்கள் தெளிவாக வரைபடம் போல் வரையறுத்து வைத்து உள்ளனர். முதலில் அப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல்கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் தேவையானதைக் கொடுத்து விலைக்கு வாங்குவது. பின்பு அப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளாக இருக்கும் மக்களை நல்ல வேலைவாய்ப்பு என கூறி அழைத்து வேலை கொடுப்பது. பின்பு அவர்களை வேலைக்கு வர வேண்டாம் எனக் கூறிவிட்டு வீட்டில் சும்மா இருங்கள் உங்களுக்கு மாத மாதம் சம்பளம் வரும் எனக் கூறி ஜேசிபி, பொக்லைன், ஹிட்டாசி கருவிகளை வைத்து மணல் அள்ளத் தொடங்குவது. அப்பகுதியில் உள்ள மக்களிடம் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு ரேஷன் அட்டைக்கு என சில மாதங்களுக்கு ஒருமுறை 5000, 10000 என பணம் கொடுப்பது. ஊரில் கோவில்கட்ட, கும்பாபிஷேகம் நடத்த, பள்ளி மராமத்து, விளையாட்டு போட்டிக்கு பணம் - பரிசுகள், ஊரில் நடக்கும் நாடகம் , தெருக்கூத்து , கலைநிகழ்சிகளுக்கு பணம் கொடுப்பது, முன்னணியில் நிற்பவர்களுக்கு பல லட்சம் பணம் என பணத்தை அருவி போல் கொட்டி அவர்களை விலைக்கு வாங்குவது என்பது நடக்கும்.

இதற்கும் மசியாமல் மக்களோ, தனிநபரோ, இயக்கமோ போராடினால் ஒவ்வொரு ஊரிலேயேயும் மக்களிடம் பிளவை உருவாக்கி சமூக பதட்டத்தை ஏற்படுத்துவது, ஊர் மோதல் ஏற்படுத்துவது, சாதி மோதல் ஏற்படுத்துவது, மாத மோதல் ஏற்படுத்துவது, மக்களையே ஒருவரை ஒருவர் தாக்க செய்வது, உள்ளூரில் விலைக்கு வாங்கிய தனது ஆதரவாளர் மூலம் தனக்கு எதிரானவர்கள் மீது பொய்வழக்குகளை தொடர்ந்து கொடுக்க வைப்பது என்பதை நடத்துவார்கள். மேலும் போராட்ட தலைவர்களை விலைக்கு வாங்க முடியாவிட்டால் அவர்களைப் பற்றி பல்வேறு பொய்யான அவதூறுகளை மக்களிடம் கட்டவிழ்த்து விடுவது அதன் மூலம் மக்களிடையே அவர்கள் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவது என்பதும்: சில நேர்மையான அதிகாரிகளுக்கு மேல் அதிகாரி மூலம் அச்சுறுத்தல், மிரட்டல், அதற்க்கும் அடிபணிய மறுத்தால் பணிமாற்றம் என்பதும் நடக்கும்.

மேலும் மணல்குவாரியை எதிர்ப்பவர்களுக்கு மறைமுக மிரட்டல், குடும்ப உறவுகள்-நட்பு வட்டம் மூலம் நெருக்கடி, குடும்ப உறவுகள்-நட்பு வட்டதிதிற்க்கு மணல் எடுக்க வாகன வாய்ப்பு, தொழில் ஏற்பாடு செய்து போராட்ட முன்னணியினரை செயலிழக்க செய்வது, அரசு பணியில் யாராவது உள்ளூரில் இருந்தால் போராட்டத்தில் தொடர்பு எனக் கூறி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்வது-இதன் மூலம் மக்களை மிரள வைப்பது, உள்ளூர் அதிகாரிகள் மூலம் மிரட்டல், பின்பு காவல்துறையினரே களத்தில் இறக்கப்படுவார்கள். சட்டத்தைக் காக்கிறேன் என்பதன் பெயரில் உன்னைப் பற்றி புகார் வந்துள்ளது எனக் கூறி மிரட்டல், காவல்துறை மூலம் பொய்வழக்கு , காவல்துறை மூலம் தாக்குதல், காவல்துறையின் பொய்வழக்கு மூலம் சிறை, சித்திரவதை, நீதிமன்ற விசாரணை என்பது தொடர்ந்து நடக்கும்.

சில நேரங்களில் மணல்குவாரியை எதிர்ப்பவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வது, ஆளே இல்லாமல் செய்து விடுவது என்பதும் நடக்கும். இப்படி எண்ணற்ற சாம, பேத, தான, தண்ட முறையிலேதான் போராடும் மக்களையும், போராட்ட தலைவர்களையும், சில நேர்மையான அதிகாரிகளையும் மணல்குவாரி நடத்துபவர்களால் இப்படி கவனிக்கப்படுவார்கள்.

இதற்கு பல உதாரணங்கள் உண்டு. வருவாய்துறை தாசில்தார் காஞ்சிபுரம் வெங்கடேசன் , காவல்துறை ஏட்டு அரக்கோணம் கனகராசு , பல்வேறு சமூக சுற்றுசூழல் ஆர்வலர்கள் மானுர் தனிகாச்சலம், புதுக்கோட்டை கார்த்திக் மற்றும் ராஜேஷ், திசையன்விளை சதீஷ்குமார், திருவைகுண்டம் சாம் தேவசகாயம் போன்ற ஊர்தலைவர்கள், தோழர் நெல்லை வீரவநல்லுர் சுடலைமுத்து போன்ற அரசியல் இயக்கம் சார்ந்தவர்கள் என பலரும் மணல் கொள்ளையை தடுத்ததால் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சியர் சகாயம் போன்றவர்களே மணல்கொள்ளையர்களால் காஞ்சிபுரத்தில் பணியாற்றி வந்த போது கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி உயிர் தப்பித்த நிகழ்வுகளும் உண்டு.

தாமிரபரணி மணல் கொள்ளை வழக்கு தீர்ப்பும் :

2010ம் ஆண்டில் சமூக ஆர்வலர் நெல்லை சுடலைக்கண்ணு, இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.நல்லக்கண்ணு ஆகியோர் தாமிரபரணி ஆற்றில் 5 மணல் குவாரிக்களின் பெயரில் ஆறு முழுக்க நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில் நீதிபதி பானுமதி, நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு தனது தீர்ப்பில் தமிழகத்தில் உள்ள 33 ஆறுகளிலும் மணல் அள்ளுவதில் முறைகேடு நடந்துள்ளது, நடந்து வருகிறது எனக் கூறி தமிழகம் முழுக்க உள்ள ஆற்றுமணல் குவாரிகளில் பின்பற்ற வேண்டிய பொது வழிகாட்டுதல் வழிமுறைகளை அளித்தது.

மேலும், ஆற்று மணல் அள்ளுவதைக் கண்காணிக்க, நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றுகிறார்களா என கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளின் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்பு குழுவையும், மாவட்ட நீதிபதி தலைமையிலான மண்டலக் கண்காணிப்புக் குழுவையும் அமைத்தனர்.

தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் கொள்ளையைப் பற்றி கண்காணிக்க மாநில கண்காணிப்புக் குழுவுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை தலைமையாகக் கொண்டும் அரசு நியமிக்கும் உறுப்பினர் செயலர் மாநிலக் கண்காணிப்புக் குழுத் தலைவருக்கு தொழில்நுட்ப விசயங்களில் உதவி செய்வார் எனவும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களை நான்கு மண்டலமாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை தலைவராகவும் நீர்வளத்துறையிலிருந்து ஒருவரையும் சுற்றுப்புறவியலாளர் ஒருவரையும் கொண்ட மண்டல அமைப்புக் கமிட்டி அமைத்துச் செயல்பட வேண்டும் என்று கூறி 2.2.2010 அன்று ஆற்று மணல் முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி நீதிபதி நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

மேலே குறிப்பிட்ட கண்காணிப்புக் குழுக்கள் 2 ஆண்டுகள் பொறுப்பிலிருக்கும். குழுத் தலைவருக்கு மாதம் ரூ 75 ஆயிரமும் குழு உறுப்பினருக்கு மாதம் ரூ 25 ஆயிரமும் சம்பளமாகக் கொடுக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவகத்திலும் இந்தக் குழு செயல்பட ஒரு அலுவலக அறை ஒதுக்கியும், அலுவலக வேலைக்காக தட்டச்சர் ஒருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் ஒதுக்க வேண்டும் என்றது. மேலும் தமிழகம் முழுவது ஆற்றுமணல் அள்ளுவதில் பொதுவழிகாட்டும் நெறிமுறைகளைக் கூறும் 42 பக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது.

கண்காணிப்புக் குழு எடுக்கப்படும் மணலின் அளவு, கனிமவளச் சட்டத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின்படி அறிவியல்பூர்வமாக மணல் அள்ளப்படுவதைக் கண்காணிக்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இக்குழுவினரிடம் முறையிடலாம். பாதிப்புகளுக்கு எவ்வாறு இக்குழு தீர்வுகாண வேண்டும் என்பது உட்பட பல்வேறு நடைமுறை சார்ந்த செயல்பாடுகளை, தமிழகத்தில் நடைபெறும் ஆற்றுமணல் முறைகேடுகளை தடுத்து நிறுத்தி தீர்வுகாணும் வகையில் அமைத்தது.

ஆனால், இந்தத் தீர்ப்பு அன்றைக்கு தமிழகத்தை ஆண்டுவந்த கருணாநிதி அரசாலும் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசாலும் பின்பற்றப்படவேயில்லை. ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதில் தீவிரமாக இருந்தனரே தவிர, ஆற்றுமணல் தடுத்து நிறுத்துவதில் அக்கறை காட்டவேயில்லை. உயர்நீதிமன்றம் அமைத்த கண்காணிப்புப் குழுக்களை செயல்படுத்த தமிழக அரசு விடவேயில்லை. அவர்களுக்கு அலுவலகங்கள் அறைகூட ஒதுக்கவில்லை. மணல் கொள்ளை பற்றி கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுக்கள் செயல்படாமலேயே 2012 பிப்ரவரியில் இல்லாமல் போனது. ஆற்று மணல் கொள்ளை தமிழகம் முழுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட சில இடங்களைத் தவிர்த்து அனைத்து இடங்களிலும் அரசு அதிகாரிகளின் பாதுகாப்பான கூட்டணியோடு இன்று வரை கொடிகட்டிப் பறந்து வருகிறது.

மணல்கொலைக்கு கூட்டாளியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் :

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவாரம் மணல் குவாரியில், எண்ணற்ற முறைகேடுகள் சமூக ஆர்வலர்களால் கண்டறியப்பட்டது. அதை பியூசிஎல்-பாலாறு பாதுகாப்பு இயக்கம் - காஞ்சி லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் தொடர் முயற்சியில் மணல் கொள்ளைக்கு துணை நின்று, பொய்யான விபரங்களை உயர்நீதிமன்றத்தில் கொடுத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் மீது, உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.

வேலூர் - களத்தூர் போராட்டம்:

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன்-ஜூலை மாதத்தில் களத்தூர் கிராமத்துக்கு அருகில் உள்ள சங்கரன்பாடி கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்க வேலைகளை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே பத்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்பாடி கிராமத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டு சில மாதம் இயங்கிய நிலையில் அதன் பாதிப்புகளை நேரடியாக மக்கள் உணர்ந்து அதை போராடி தடுத்து இருந்தனர் களத்தூர் மக்கள்.

மணல்குவாரி அமைப்பது என முடிவு செய்தவுடன் சங்கரன்பாடி கிராமத்தில் எதிர்ப்பு வராமல் இருக்க ஒரு குடும்பதிற்க்கு (திருமணமான ஒரு ஜோடி) ரூ.10,000/= என மணல்கொள்ளையர்கள் கொடுத்து உள்ளனர். மேலும் களத்தூரை சேர்ந்த பல கட்சி பிரமுகர்களையும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளையும் முதலில் விலைக்கு வாங்கியுள்ளனர் மணல் கொள்ளையர்கள்.

மணல் கொள்ளையர்கள் சங்கரன்பாடி கிராமத்தில் புதிதாக மணல் குவாரி அமைக்கும் வேலைகளை தொடங்கினார்கள். சங்கரன்பாடி கிராமத்தில் எடுக்கும் மணலை களத்தூர் கிராமம் வழியாகத்தான் லாரிகள், டிராக்டர்களில் கொண்டு செல்ல முடியும். எனவே லாரி செல்லும் வழிப்பாதைக்கு எனவும், மணல் சேகரித்து வைக்க ஸ்டாக் யார்டுக்கு எனவும் களத்தூர் கிராம மக்களிடம் ஒரு ஏக்கர் நிலம் ரூ.60,000 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சில ஆண்டுகள் பயன்படுத்த என வாங்க முயற்சித்தனர். இதற்கு உள்ளூரில் உள்ள அஇஅதிமுக ஒன்றிய கவுன்சிலரிடம் இந்த வேலையை ஒப்படைத்து உள்ளனர். மேலும் களத்தூர் ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பதிற்க்கும் சங்கரன்பாடி போல் (திருமணமான ஒரு ஜோடி) ரூ.10,000/= வழங்க உள்ளனர்; மேலும் உள்ளுரை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு மணல் குவாரி, ஸ்டாக் யார்ட் ஆகியவற்றில் கணக்கு எழுதும் வேலையும், டிராக்டர் இருந்தால் மணல்கொண்டு வரும் வேலையும் கொடுக்கப்படும் என மக்களிடம் ஆசை வார்த்தை காட்டினார்கள். ஏற்கனவே மணல்கொள்ளையால் பாதிக்கப்படும், போராடியும் சூடுபட்டு இருந்த களத்தூர் கிராம மக்கள், மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீராதாரமும், விவசாயமும் இப்பகுதியில் அழியும் என விழிப்புணர்வுடன் உடனே இதை எதிர்க்க தொடங்கினர்.

இந்த ஊரை சேர்ந்த விபரமுள்ள இளைஞர்கள் அனைத்து மக்களிடமும் இந்த செய்திகளை வீடுவீடாக எடுத்து சென்று அனைவரையும் ஒன்று திரட்டி இப்பிரட்சினையை கூடிப் பேசினார்கள். ஊரில் இருந்த 350 குடும்பத்தினரும் சங்கரன்பாடியில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என முடிவுசெய்தனர்., காரணம் சங்கரன்பாடியில் மணல்குவாரி அமைத்தால், அதை ஒட்டியுள்ள களத்தூர் வரை மணல்குவாரியை கொண்டு வந்து விடுவார்கள் எனவும், வேலூர் மாவட்டத்தில் அனைத்து மணல்குவாரியும் இப்படித்தான் சட்டவிரோதமாக நடக்கிறது என்பதையும், களத்துரில் யாரும் மணல்குவாரி வழிப்பாதைக்கும், ஸ்டாக் யார்ட்க்கும் நிலம்கொடுக்கக் கூடாது எனவும், மணல்குவாரி அமையுமானால் களத்தூர், சங்கரன்பாடி, சிறுநாவல்பட்டு, சிந்தனைக்கால், வடஇலுப்பை, புதூர், நல்லூர், பனப்பாக்கம், ஆகியுள்ள சுத்தியிருக்கிற கிராமங்களோட நிலத்தடி நீராதாரத்தையும் அழித்து குடிநீர், விவசாயம் அனைத்தும் அழிந்து விடும் என்பதையும் பேசி முடிவு செய்தனர்.

எனவே சங்கரன்பாடியில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200 பெண்களும், ஆண்களும் வேலூர் மாவட்ட ஆட்சிதலைவரைப் பார்த்து மனு கொடுக்க சென்றனர். மாவட்ட ஆட்சிதலைவர் மணல் குவாரி பிரட்சினை என்றவுடன் களத்தூர் மக்களை நேரில் சந்திக்க மறுக்கவே, மக்கள் காரில் வந்த ஆட்சியரை முற்றுகையிட்டு போராடினர். மக்களிடம் மாவட்ட ஆட்சிதலைவர் நந்தகோபால் “மணல்குவாரி வராத இடத்திற்க்கு ஏன் வந்து போராடுகிறீர்கள்” என அப்பட்டமான பொய்யை புளுகி மக்களை ஏமாற்ற முயன்றார்.

ஊர் திரும்பிய மக்கள் அரசும், அதிகாரிகளும் நம்மை ஏமாற்றுகின்றனர் என்ற உணர்வுடன் இருந்தனர். இந்நிலையில் மணல் குவாரி அமைக்கும் இடத்தில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்யவும், அளக்கவும் முயன்றனர். மணல் குவாரி இங்கே இல்லை என மாவட்ட ஆட்சிதலைவர் ஒரு பக்கம் பொய் கூறி வருகிறார். இங்கே ஆற்றில் மணல் குவாரி அமைக்க உங்களை அளக்க விடமாட்டோம் எனப் போராடி பொதுப்பணிதுறை அதிகாரிகளை ஊரில் இருந்து மக்கள் வெளியேற்றினர்.

பாலாறு முழுக்க உள்ள அனைத்து மணல்குவாரிகளும் பொதுப்பணிதுறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மைத்துனர் என சொல்லிக் கொள்ளும் ஒரத்தநாடு பாசுகர் என்பவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவருக்கு இங்கு முதன்மை ஏஜண்ட்டாக கரிகாலன் என்பவர் உள்ளார். இவர்தான் இப்போது பாலாறு முழுக்க உள்ள அனைத்து மணல்குவாரிகளின் ஏக சக்கர்வர்த்தி போல் செயல்பாடு வருபவர்.. இவரிடம் இப்பகுதியை சேர்ந்த மெய்யர், அவலூர் ரமேஷ் என்பவர்கள் பணி புரிந்து வருகின்றனர். பூண்டிசுமைதாங்கி மணல் குவாரிக்கு அவலூர் ரமேஷ் என்பவர்தான் பொறுப்பாளராக உள்ளார்.

அவலூர் ரமேஷ் என்பவன் போராட்ட முன்னனியினர் சிலரை தனக்கு தெரிந்த சிலரை வைத்து தனியாக அழைத்து,வரவைத்து “எல்லா ஊர்களிலும் ஒரு குடும்பத்திற்க்கு ரூ.10,000/= (பத்தாயிரம் மட்டும்) தருகிறோம். எனவே உங்கள் ஊருக்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு தனியாக தொகை அதிகம் தர முடியாது. போராட்ட பொறுப்பாளரான உங்களுக்கு வேண்டுமென்றால் தனியாக ரூ.50,00,000/= (ஐம்பது லட்சம்) தருகிறோம், ஊரில் வேலைவாய்ப்பு, மணல்குவாரியில் டிராக்டர் வைத்து ஓட்டுவது, புதிதாக கோவில் கட்டிக் கொடுப்பது, நீத்தேக்க தொட்டி கட்டிக் கொடுப்பது, பள்ளிக்கு தேவையானதை செய்வது என செய்கிறோம், மக்களை சமாளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு” எனக் கூறி அனுப்பி உள்ளான்.
அவலூர் ரமேஷ், மெய்யர் ஆகியோரை சந்திக்க சென்றவர்கள் களத்தூர் ஊர்மக்களிடம் வந்து நடந்தவற்றை சொல்லியுள்ளனர். மக்கள் நலனில் அக்கறை உள்ள பொறுப்பாளர்கள் சிலர் ஊர்க்கூட்டத்தில் மக்களின் மனநிலையை, நாடித்துடிப்பை அறிய

“ -மணல்குவாரியை தொடர்ந்து எதிர்த்தால் அரசால் நமக்கு கடும் நெருக்கடி ஏற்படும். அதை நாம் துணிந்து எதிர் கொள்ள வேண்டும்

-ஊருக்கு வேலைவாய்ப்பு, மணல்குவாரியில் டிராக்டர் வைத்து ஓட்டுவது, புதிதாக கோவில் கட்டிக் கொடுப்பது, நீத்தேக்க தொட்டி கட்டிக் கொடுப்பது, பள்ளிக்கு தேவையானதை செய்வது என்கிறார்கள்

-மணல்குவாரிகாரனிடம் ஒரு குடும்பத்திற்க்கு ரூ.50,000/= (ஐய்ம்பதாயிரம் மட்டும்) எனக் கேட்கலாமா?”

என்றவுடன் மக்கள் உறுதியாக இதை எல்லாம் மறுத்து, எக்காரணம் கொண்டும் மணல்குவாரியை இயங்க விட்டுவிட்டு அகதியாக எங்கும் ஊரை விட்டு வெளியேற முடியாது. எது வந்தாலும், நடந்தாலும் சரி போராட்டத்தை தொடருவோம், மணல்குவாரி கொள்ளையர்களின் அச்சுசுறுத்தலுக்கோ, சலுகைக்கோ, அவன் வீசும் எச்சில் காசுக்கோ நாம் மயங்க கூடாது! மயங்க மாட்டோம்” என முடிவு செய்து உறுதியுடன் அறிவித்தனர்.

இந்த காலத்தில் வாலாஜாபேட்டையில் குமார் என்பவர் பாலாற்றில் குவாரி அமைக்க தடைகோரி உயர் நீதிமன்றத்துல மனு போட்டார்.. அந்த தீர்ப்பில் மணல் குவாரிக்குப் பக்கத்துல கிணறுகள் இருந்தா குவாரி அமைக்கக் கூடாது, ஆட்சியர் அடிக்கடி மணல் குவாரிகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் பண்ணணும்னு பல்வேறு விதிமுறைகளைக் கூறி உத்திரவிட்டது. இது போராடும் மக்களுக்கு ஊக்கமாக அமைந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் களத்தூர் மக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள்

இப்பகுதி மக்களை தொடர்பு கொண்ட “பாலாறு விழிப்புணர்வு இயக்கத்”தினரின் வழிகாட்டலில் களத்தூரில் “தீச்சுடர் ஏந்தி போராட்டம்”, “மகளிர் குழுக்கள் எல்லாம் இணைந்து போராட்டம்” "ஆர்ப்பாட்டம்” என்பதுடன் “களத்தூர், சங்கரன்பாடி, சிறுநாவல்பட்டு, சிந்தனைக்கால், வடஇலுப்பை, புதூர், நல்லூர், பனப்பாக்கம்- கிராம மக்களுடன் இணைந்து ஆற்றில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம்” என நடத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் மணல்குவாரி அமைந்த அனைத்து இடங்களிலும் சாம,பேத,தான,தண்ட முறைகளில் மக்கள் போராட்டத்தை முறியடித்த மணல்கொள்ளையர்களால், தாழ்த்தப்பட்ட மக்கள் 350 குடும்பங்கள் ஒற்றுமையாக இருந்து நடத்தும் இப்போராட்டத்தை முறியடிக்க முடியவில்லை. ஆறு மாத காலம் பல்வேறு வழிகளை கையாண்டு பார்த்தும் ஏதும் நடக்கவில்லை. உள்ளூர் அரசியல் கட்சிக்காரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து பேசியும், மயக்கும் வார்த்தை பேசியும் களத்தூர் மக்கள் எவரையும் நம்பத் தயாராக இல்லை.

இக்காலத்தில் போராட்டத்தில் முன்னனியில் இருந்த ஒருவர் மணல்குவாரிகாரனின் கையாளாக மாறி மக்களின் துரோகியானான். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அம்பலமானது. அவனிடம் ஊரில் பலரும் வாய்சண்டை போட்டனர். இவன் ஊரில் வேலையில்லாமல் சுற்றுபவர்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் இவர்களை நைசாகப் பேசி அருகே உள்ள மணல்குவாரி ஏஜென்ட்டுகளிடம் அழைத்து சென்று களத்தூர்க்காரர் என்றால் தினசரி ரூ.1000/= என வாங்கி கொடுக்கும் வேலையை பல நாட்கள் செய்து ஊரில் குழப்பத்தை ஏற்படுத்தினான். ஊரில் இதனால் மக்களிடம் பல்வேறு சண்டைகள் ஏற்ப்பட்டது. மணல்குவாரிகாரனின் கையாளாக மாறியவன், மக்களில் சலுகைக்கு மயங்கியவர்களை தனித்தனியாக அழைத்து சென்று ஊரில் 30 குடும்பத்தினருக்கு “ஒரு குடும்பத்திற்க்கு ரூ.10,000/= (பத்தாயிரம்)” வாங்கி கொடுத்துள்ளான்.

சில குடும்பங்கள் பணம் வாங்கியது ஊரில் தெரிய வந்தவுடன், மக்கள் ஊரைக் கூட்டி வைத்து பேசினார்கள். மணல்குவாரி காரணிடம் பெற்ற தொகையை திரும்பி ஊருக்கே கொடுப்பது. இந்த தொகையை களத்தூர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்று ஒப்படைப்பது என மக்கள் முடிவு செய்தனர்.

இந்த பணத்தை திரும்ப பெறுவது என்ற வேலையை செய்ய தொடங்கியவுடன், காவல்துறை தனது கையாட்கள் மூலமாக மக்களின் தொடந்த போராட்டத்தினாலும், மணல்குவாரிகாரனின் கையாளாக இருப்பவன் கொடுத்த பல வழக்குகளுமாக களத்தூர் ஊரில் மட்டும் மக்கள் மேல் 15 வழக்குகள் உள்ளது, அனுமதி இன்றி கூடி போராடியது, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது, சிலரை தாக்கியது, மிரட்டியது என வழக்குகள் உள்ளது. எனவே அவர்களை உடனே கைது செய்யப் போகிறோம் என்ற செய்தியை பரப்பி விட்டனர். ஊரில் சிலர் அரசு பணியில் உள்ளனர், அவர்களை அவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் சென்று கைது செய்வோம் எனவும் கூறி மக்களிடையே பீதியை கிளப்பி விட முயற்சித்தனர்.

மக்கள் அஞ்சவில்லை. பொய்வழக்கை முறியடிக்க முன்பிணை எடுக்க முயற்சி செய்தனர். வழக்குப் பணிக்கு உதவியாக காஞ்சி மக்கள்மன்றம் அமைப்பினர் வந்தனர். காஞ்சி மக்கள்மன்றம் அமைப்பினர் பியூசிஎல் அமைப்பு உதவியுடன் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்து முன்பிணை எடுக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் மணல்குவாரி காரனிடம் பெற்ற தொகையை ரூ.2,12,000/= ரூபாய் திருப்பிக் கொடுத்தனர் மக்கள். 18-03-2015 அன்று இத்தொகையை மாவட்ட ஆட்சிதலைவரிடம் ஒப்படைக்க மக்கள் தனி பேருந்து எடுத்து புறப்பட்டனர். இவர்களை காவேரிபாக்கம் டோல்கேட் ட்டில் காவல்துறை வழிமறித்தனர். மக்கள் தங்களை செல்ல விடும்படி கூறி சாலைமறியல் செய்தனர். அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மக்களில் பெரும்பாலானோர் மீது வழக்கு இருப்பதால் கைது நடந்தால் தேவையற்ற நெருக்கடி ஏற்படும் என்பதால் வழக்கு இல்லாத சிலர் மட்டும் மக்கள் மன்ற தோழர்களுடன் புறப்பட்டு வேலூர் சென்றனர். மாவட்ட ஆட்சிதலைவர் இவர்களை சந்திக்க மறுத்ததால் மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்தனர்.அவர் இந்த தொகையை பெற மறுத்து விட்டார்.

எனவே மறுநாள் 19-03-2015 அன்று முதல்அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.2,12,000/= அய் தொகையை உள்ளூர் மகளீர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வங்கியில் வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) வழியாக அனுப்பப்பட்டது. தமிழகத்தில் நடந்த மிக முன்மாதிரியான நிகழ்வு இது.

மக்கள் விழிப்புணர்வு அடைவது இங்குள்ள கட்சியினருக்கும், அதிகார வர்க்கத்துக்கும், அரசுக்கும் பொறுக்குமா?. அதிலும் இங்குள்ள காவல்துறையினர் மணல்குவாரி கொள்ளையர்களின் அடியாளாகவே செயல்பாடு வருகின்றனர். கடந்த ஆண்டு பூண்டிசுமைதாங்கி மணல் குவாரிக்கு சென்ற லாரிகளை, முறைகேடாக செல்கிறது எனக்கூறி தடுத்ததற்காகவே பூவரசு என்பவரை காவேரிபாக்கம் போலீஸார் பொய் வழக்கில் கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பூவரசுவை தாக்கிய வழக்கில், உயர்நீதிமன்ற சென்று பெற்ற உத்தரவின்பேரில் காவேரிபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் இதர 3 போலீஸார் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்திரவிட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், காவேரிபாக்கம் காவல்நிலைய ஆய்வாளர் காண்டீபன், உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் இதர 3 போலீஸார் இதுவரை கைது செய்யபடாமல் அங்கேயே பணியில் உள்ளனர்.

மேலும் காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் காண்டீபன்தான் களத்தூர் ஊரைக் கட்டுப்படுத்தும் அவலூர் காவல்நிலைய அதிகாரி. களத்தூரை சேர்ந்த 50 பேர் பல வழக்குகளில் முன்பிணை பெற்று அவலூர் காவல்நிலையத்தில் நிபந்திணைபிணையில் மே மாதம் முதல் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

மக்களை என்ன செய்தும் அடக்க முடியாவில்லையே என தாங்கி கொள்ள முடியாமல், மணல்குவாரி கொள்ளையர்கள் உள்ளூரில் உள்ள தங்கள் கையாட்களை தூண்டி விட்டனர். அவர்கள் ஊரில் உள்ள சில முன்பிணை பெற்று கையெழுத்து போடும் பெண்களை வம்பு சண்டைக்கு இழுத்து அடித்துள்ளனர். தாக்கப்பட்ட பெண்கள் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடுக்க அவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய காவல்துறை, தாக்கியவர்களிடமே புகார் பெற்று தாக்குதலுக்கு உள்ளான போராடும் மக்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது தெரியாமல் அடுத்த நாள் 03-06-2015 அன்று கையெழுத்து போட சென்றவர்களையும், உடன் இருந்தவர்களையும் ஒரு சிறுவன், 4 பெண்கள் உட்பட 19 பேரை காவல்துறை (இதச பிரிவு- 147,148, 294B, 323,324,506(II) மற்றும் section 3 of TNPPDL Act and section 4 of TN Women Haaresment Act) 8 பிரிவுகளில் கைது செய்தது. இதில் +2 படிக்கும் மாணவரான 16 வயது சின்னராசுவை 21 வயது என மருத்துவரின் பொய் சான்றிதழ் பெற்றும், நீதிபதியிடம் 21 வயது என சொல்ல சொல்லி அடித்து மிரட்டி கைது செய்து, மணல் கொள்ளையர்களிடம் தனது ராஜவிசுவாசம் காட்டியுள்ளது காவல்துறை.

காவல்துறை முன்பிணை பெற்று தைரியமாக இருந்த களத்தூர் மக்களை, பொய்வழக்கு மூலம் கைது செய்து மிரட்டியதுடன் மேலும் பல நெருக்கடிகளை மணல்கொள்ளையர்களுக்காக கொடுக்க தொடங்கியது. பிணை கேட்டு மனு விசாரணைக்கு வரும் போது காவல்துறை தரப்பில் எந்த பதிலும் நீதிமன்றத்தில் கொடுக்காமல் இருப்பது, அரசு வழக்கறிஞரை ஆஜர் ஆகாமல் இருக்க செய்வது என மூன்று முறை பிணைவழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மக்கள் வழியேதும் இன்றி, மாவட்ட ஆட்சியர் நினைத்தால் கைது செய்தவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால், ஊரில் இருந்து தனி வாகனம் வந்தால் காவல்துறை தடுக்கும் என்பதால், கொஞ்சம் கொஞ்சம் பேராக அரசு பேருந்தில் கிளம்பி வேலூர் வந்தனர்.

கைது பண்ணவங்கள விடுவிக்க கோரி 11-ம் தேதி ராத்திரி 9 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு 100 பேருக்கு மேல் திரண்டு சென்று முழக்கம் போட்டு உள்ளனர். தகவல் கிடைச்சு வந்த போலீஸ்காரங்க அவர்களின் பிரட்சினையை கேட்காமல் அவர்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில நள்ளிரவு வரை அடைத்து வைத்துள்ளார்கள்.

அதன் பின்பு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்குக் கீழ் களத்தூர் வருவதால் அந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காண்டீபனுக்குத் தகவல் சொல்லி அழைச்சிட்டுப் போய் களத்தூரில் விடச்சொன்னார்கள் அதிகாரிகள்.

ஏற்கனவே களத்தூர் ஊர் மக்கள் மீது பொய்வழக்கு போட காரணமாக இருந்த, மக்களை பொய்வழக்கில் கைது செய்ய காரணமாக இருந்த, பூண்டி மணல்குவாரியை எதிர்ததற்க்காக தோழர்.பூவரசுவை கட்டி வைத்து அடித்து-உயர்நீதிமன்றத்தால் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட, மணல்கொள்ளையர்களின் அறிவிக்கப்படாத அடியாளாக செயல்படும் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபனை வர வைத்து, அவர் பொறுப்பில் மக்களை இரவில் களத்தூறுக்கு அனுப்பியுள்ளனர் அதிகாரிகள்.

காவேரிபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் காண்டீபன் வரும் வழியிலும், ஊரில் இறங்கும் போதும்.‘பொழப்புக்கே வழியில்ல... போராட்டமாடீ நடத்துறீங்க’ ன்னு வாய் கூசும் வார்த்தைகளை களத்தூர் பெண்களைப் பார்த்து சொல்லியுள்ளார். அவரோடு சேர்ந்து அவரது ஓட்டுனரும் பெண்களை இழிவாக பேசியுள்ளனர். ஊரில் இறங்கியவுடன் மக்கள் எவ்வாறு இப்படி அசிங்கமாக பேசலாம் என அதிகாரியிடம் சண்டை கட்டி உள்ளனர். அதற்க்கு காவல்துறை வழக்கம் போல் ஜீப் டிரைவர் வெங்கடேசனை களத்தூர் மக்கள் தாக்கியதாக சொல்லி நாடகமாடி மருத்துவமனையில் போய் அவரை படுக்க வைத்தனர். நள்ளிரவில் ஊரில் புகுந்த காவல்துறை மக்கள் மீது தடியடி நடத்தி, பேயாட்டம் போட்டு உள்ளது. காவல்துறையினரை மக்கள் தாக்கியதாக கூறி களத்தூரை சேர்ந்த 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளது காவல்துறை. ஊரில் மக்கள் எல்லாம் பயந்து ஓடி பல ஊர்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

கோயிலில் தஞ்சம்:

தற்போது போலீஸாருக்கு பயந்து பெரும்பாலான ஆண்கள் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். எஞ்சிய குழந்தைகளும்,பெண்களும் மட்டும் களத்தூர் பஜனை கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு திரும்பி வந்து கொண்டு உள்ளனர். இவ்வளவு அடக்குமுறைகளை மக்கள் மீது ஏவி விட்ட நிலையிலும், மணல் குவாரி மூடும் வரை எங்கள் போராட்டத்தை உறுதியுடன் தொடருவோம் என மக்கள் திட்டவட்டமாக உள்ளனர்.

03-06-2015 அன்று முதலில் கைதான 19 பேருக்கு 12-06-2015 அன்று பிணை கிடைத்தது. அவர்களுக்கு தர்மபுரியில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் ஒரு மாதம் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்திரவு இட்டு உள்ளது. உள்ளூரில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள ஊரில் தங்கி இருக்க சொல்வதன் மூலம் மக்களின் போராட்ட குணத்தை மழுங்க அடிக்க முயற்சிக்கிறது அரசு.

11-06-2015 இரவு கைதான 13 பேருக்கும் 24-06-2015 வரை பிணை கிடைக்கவில்லை.

23-06-2015 அன்று களத்தூர் கிராமத்தை சேர்ந்த பராங்குசன் (எ) மோகன் எனும் ஆசிரியரை, மக்களை மணல்குவாரிக்கு எதிரான போராட்டத்தை தூண்டி விட்டதாக கூறி 3 வழக்குகள் பதிவு செய்து அவரை பணி நீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் ஊரில் உள்ள மக்கள் மீண்டும், மீண்டும், அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, மணல் குவாரியை எதிர்த்தால் படித்த இளைஞர்கள் யாருக்கும் அரசு வேலை கிடைக்காது, மற்றும் அரசு வேளையில் இருப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என மறைமுகமாக அச்சுறுத்தப்படுகின்றனர்.

நமது நாட்டில் கோடி கோடியாக மக்கள் சொத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு பெயர் “அதிகாரிகள் -மக்கள் பிரதிநிதிகள் - முதல்வர் -அமைச்சர்” ஆனால் தனது ஊரில் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது எனக் குரல் கொடுத்தால் வழக்கு, கைது, சிறை, பணி நீக்கம்” இதுதான் இன்றைய இந்திய ஜனநாயகமாக உள்ளது.

மக்கள் நலன் பேசும் ஆண்ட - ஆளும் கட்சிகள், மக்களை திரட்டி வைத்து ஊழியர் பலம் உள்ள அமைப்புகள் பலவும் காவல்துறையால் பாதிக்கப்பட்ட களத்தூர் சென்று மக்களை நேரில் சந்தித்தும், பத்திரிக்கை செய்தி வாயிலாகவும் அறிக்கை மட்டும் விட்டு உள்ளனர். (திமுக, தேமுதிக, நாம் தமிழர், பாஜக, சிபிஎம், சிபிஐ, சமத்துவ மக்கள் படை உட்பட பல அமைப்புகள்...)

இது மட்டும் போதாது. அனைத்து அரசியல் கட்சிகளும் களத்தூர் பிரட்சினையில் தலையிட்டு, பொறுப்போடு செயல்பட வேண்டும். இந்த அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலைகளை களத்துர் மக்கள் செய்து வருகின்றனர். அரசியல்கட்சிகள் வெறும் அடையாள நிகழ்வுகளை மட்டும் நடத்தி விட்டு செல்லக் கூடாது, அப்படி சென்றால் வருங்காலத்தில் வரலாற்றின் குப்பை தொட்டியில் இவர்கள் வீசப்படுவார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பல கட்சிகள் வருகை தந்து மக்களை பாராட்டி விட்டு அவர்கள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டனர்.

களத்தூர் மக்கள் கூட அங்கு வரும் கட்சிகளை மணல்கொள்ளையை தடுக்க, இதுவரை என்ன செய்து உள்ளீர்கள், இனிமேல் உங்கள் அமைப்பு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்து விளக்கம் கேட்க வேண்டும். களத்தூர் மக்களுக்கு இதைக் கேட்க எல்லாவித தார்மீக உரிமை உள்ளது. வரலாற்றில் அரசியல் கட்சிகள் செய்யாத ஒன்றை, ஓராண்டாக எண்ணற்ற நெருக்கடியையும், அடக்குமுறையையையும் சந்தித்து இவர்கள் மணல்குவாரியை தடுத்து நிறுத்த செய்து சாதித்து வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் அமைப்பு மட்டும் 19-06-2015 அன்று ராணிப்பேட்டையில் தோழர். திருமாவளவன் தலைமையில் 2000 மக்களை அணிதிரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் நானும் கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினேன். காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் 08-06-2015 அன்று 400 பேரை அணிதிரட்டி காவேரிபாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. பாலாறு விழிப்புணர்வுர்வு இயக்கம் சார்பில் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து 24-06-2015 அன்று காவேரிபாக்கத்தில் நடத்த இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறையால் தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு சில நிகழ்வுகள் மட்டுமே நடந்து உள்ளது.

அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள்:

- வேலூர் மாவட்ட, காவேரிப்பாக்கம் அடுத்துள்ள களத்தூரியில் மணல் குவாரி அமைக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்து, மணல் குவாரி அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்திட பொதுப்பணித்துறை, மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஆனால் அதற்கு மாறாக மணல் குவாரிக்கு எதிராக போராடிய மக்களை கைது செய்து சிறையில் அடைத்ததுடன், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்திட கோரிய மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

- கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்.

- களத்தூர் மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அனைத்தையும் உடனே திரும்ப பெற வேண்டும்.

- நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய களத்தூர் மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை மீதும், இச்செயலுக்கு காரணமான அதிகாரிகள் மீதும் உடனே நடவடிக்கை எடுத்திட வேண்டும்

-இனி தமிழகத்தில் மணல்குவாரி அமைப்பது என்பதை குறிப்பிட்ட சில ஆண்டுகள் நிறுத்தி வைக்க வேண்டும்.

-மணலுக்கு மாற்றாக அருகே உள்ள கேரளமும், பல்வேறு நாடுகளும் பின்பற்றும் வழிமுறைகளை இங்கும் பின்பற்ற வேண்டும்.

-தமிழக்கத்தில் மணல் கொள்ளை மூலம் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் உடனடியாக அரசு கைப்பற்ற வேண்டும்.

-மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மனல்ம் கொள்ளைக்கு துணை நின்ற அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்.

இன்று மணல்குவாரியின் மூலம் அரசுக்கு செல்லும் வருமானம் இல்லாமல், தினமும் எடுக்கும் 90,000 லாரிகள் மூலம் ஒரு லாரி லோடுக்கு 10,000/= வீதம் குறைந்தபட்சம் 90 கோடி ரூபாய் இந்த நாட்டை ஆளும் ஆளும்கட்சியினரும்- அதிகாரிகளும் - மணல் கொள்ளையர்களும் கொள்ளையடித்து பங்கு போட்டு வருகிறார்கள்.[(கணக்கு இதுதான்: ஒரு லாரி லோடு மணல் அரசு விலை 3 யூனிட்டுக்கு ரூ.945 /=;. லோடிங்க் அன்லோடிங்க் ஒரு லாரிக்கு 1000/=.; 100 கிலோமீட்டர் தூரம் லாரி வாடகை ரூ.5,000/=; அதிகபட்சம் ரூ.8,000/= என வைத்தால் கூட ஒரு லோடு லாரி மணல் மொத்தம் 10,000/= மட்டுமே ஆகும். ஆனால் ஒரு லாரி லோடு மணல் கோவையில் 25,000/=,, சென்னையில் 40,000/=. அண்டை மாநிலங்களில் 60,000/= வரை விற்கப்படுகிறது.

ஒரு லோடுக்கு சுமார் 10,000/= கூடுதலாக கிடைக்கிறது என்றாலே தினமும் 90,000 லோடுக்கு 90 கோடி கிடைக்கும்)]

ஓராண்டில் மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் பகிரங்கமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இது தமிழகத்தில் மது மூலம் கிடைக்கும் விற்பனை வருவாயை விட அதிகமானது.

மணல்கொள்ளை எங்கு தடுக்கப்பட்டு உள்ளது:

இன்றைய நிலையில் மணல்கொள்ளை என்பது யாருக்கும் தெரியாத ரகசியம் அல்ல. அரசோ, அதிகாரிகளோ. நீதிமன்றமோ, ஆண்ட -ஆளும் கட்சிகளோ இப்படி ஒரு பிரட்சினை இருப்பதையே கண்டு கொள்வதில்லை என்பதுடன் இவற்றின் நேரடி பங்குதாரராகவே செயல்பாடு வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதை எதிர்ப்பதும், ஆளும் கட்சியாகியவுடன் தீவிர கூட்டாளி போல் செயல்படுவதும் என்பதுதான் நடைமுறை. அரசு- மணல்கொள்ளையர்-காவல்துறைக்கு அஞ்சாமல், எங்கே மக்கள் போராட்டம் வெடிக்கிறதோ, போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறதோ, அரசுக்கு நெருக்கடி ஆகி அம்பலம் ஆகிறதோ அங்கு மட்டும் மணல்கொள்ளை இதுவரை தடுக்கப்படுகிறது, தடுக்கப்பட்டு உள்ளது. காவேரி கொள்ளிடத்தில் திருச்சி -இலால்குடி கூகூர், அன்பில் மங்கம்மாள்புரம் மணல்குவாரி; கடலூர் விருத்தாசலம் -கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாறு கார்மாங்குடி மணல்குவாரி ஆகியவைகளில் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவில் அங்கு குவாரி இயங்காமல் மூடப்பட்டது.

இன்று களத்தூரில் நடக்கும் மணல்கொள்ளையை எதிர்த்த போராட்டம் என்பது, எளிய மக்களால் தனது வாழ்வாதாரம் அழிக்கபட்டு விடக்கூடாது என்பதற்காக நடக்கும் போராட்டம் ஆக இருந்தாலும், தமிழக மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போராட்டமாக சமூக அக்கறை உள்ளவர்களால் மாற்றப்பட வேண்டும். இதுவரை மணல்கொள்ளையர்களை எதிர்த்த போராட்டம் தமிழகத்தில் பலவகையில் சிதைக்கப்பட்டாலும் கூட , இந்த போராட்டம் தமிழகத்தின் வாழ்வாதாரம் காக்கும் போராட்டத்தின் அக்னிகுஞ்சாக கருதி நாட்டை, மக்களை நேசிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டு வளர்த்தப்பட வேண்டும். களத்தூர் போராட்டத்தின் நியாயத்தை நாட்டில் உள்ள ஒவ்வொருவரிடம் எடுத்து சென்று, அவர்களது மனசாட்சியை தட்டி எழுப்புவோம்.

மணல் கொள்ளையில் தொடங்கி தமிழகத்தின் அனைத்து கனிமவள கொள்ளைக்கும் முடிவு காட்டுவோம்...

யாராலும் உருவாக்க முடியாத இயற்கை வளத்தை பாதுகாப்போம்...

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்...
களத்தூர் போராட்டத்தை பாதுகாப்போம்...

- முகிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல்  பாதுகாப்பு இயக்கம் & கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம்

Pin It