கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
1800 களில் ஒரு வதந்தி உலவியது. மடகாஸ்கர் காடுகளில் சுற்றித்திரிந்த கார்ல் லிச்சி என்ற ஜெர்மானியர் ஒரு பெண்ணை மரம் விழுங்கியதைப் பார்த்ததாக கட்டுரை வெளியிட்டார்.
1950 களில் வெளியான கட்டுரையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கார்ல் லிச்சி என்கிற பெயரில் யாரும் மடகாஸ்கர் காடுகளை ஆராயவில்லை என்பதுதான் அந்த கட்டுரையின் உள்ளடக்கம்.
மனிதர்களைச் சாப்பிடும் மரம் இல்லாமல் போனாலும், சிறிய பூச்சிகளை விழுங்கும் பூக்களைக் கொண்ட பிட்சர் தாவரம் இருப்பது அந்தக் கட்டுரையில் உறுதி செய்யப்பட்டது. பிட்சர் தாவரங்கள் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன.
பிட்சர் தாவரத்தின் பூக்கள் ஒரு பெரிய ஜாடியின் வடிவத்தில் இருக்கும். இலைகளின் உதவியால் சுரக்கும் வாசனையான படலம் பூக்களின் உட்புறத்தில் படிந்து கொள்கிறது. வேர்களால் உறிஞ்சப்படும் நீரில் இந்த வாசனையுள்ள படலம் கரைந்து பூவின் அடியில் தங்கி விடுகிறது. சிறு பிராணிகள் வாசனையால் கவரப்பட்டு நீரைக் குடிப்பதற்காக ஜாடிவடிவப் பூவிற்குள் செல்லும்போது பூ மூடிக் கொள்கிறது. பிராணிகளின் உடல் சிதைக்கப்பட்டு பிட்சர் தாவரத்தால் உறிஞ்சிக் கொள்ளப்படுகிறது.
- மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இது ‘திட்டமிட்ட கொலை', எதிர்க்கட்சியினரின் ‘திட்டமிட்ட சதி' என்றெல்லாம் சொல்கிறோம். மனிதர்கள்தான் இப்படி செய்கிறார்கள். மிருகங்கள்? புழு, பூச்சிகளும்; பறவை பாம்புகளும் நடப்பது நடக்கட்டும் என்று எதிர்காலத்தை இயற்கைக்கே விட்டுவிடுகின்றன. நாளைய பொழுதை நாளையே பார்த்துக் கொள்ளட்டும் என்பது மிருக சித்தாந்தம். மனிதர்கள் அப்படியில்லை, காலை விடிந்தவுடன் என்னென்ன செய்வது என்பதை முதல்நாள் இரவிலேயே திட்டமிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்கூட டைம் டேபிளைப் பார்த்து நாளைக்குத் தேவையானபுத்தகங்களைப் பையில் அடுக்கி வைத்துவிட்டுத்தான் தூங்குகிறான்.
மனிதருக்கு மட்டும்தான் திட்டமிடத் தெரியும்; நேற்று, இன்று, நாளை என்கிற கால அறிவு மனிதருக்கு மட்டும்தான் உண்டு என்றும் நாம் நினைக்கிறோம். சிம்பன்ஸிகளும் அந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, வேண்டியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்கின்றன. ஸ்வீடனில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், சிம்பன்ஸியின் நடவடிக்கையில் மனிதரைப் போல திட்டமிடும் அறிவு காணப்பட்டது. தினமும் காலை 11 மணிக்கு ஒரு ஆண் சிம்பன்ஸி கடுங்கோபத்துடன் நிலைகொள்ளாமல் தவித்தது. யானைக்கு மதம் பிடிப்பதுபோல தலைமை பதவி வகிக்கும் ஆண் சிம்பன்ஸிகளிடம் இப்படி ஒரு தவிப்பு காணப்படும். அப்படி எல்லாம் கலாட்டா செய்யாவிட்டால் அதுதான் தலைவன் என்று மற்ற சிம்பன்ஸிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
இந்த சிம்பன்ஸி தனது அதிகாரத்தை சக உறுப்பினர்களிடம் காட்டுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பார்வையாளர்கள் மீதும் கல் வீசி தாக்குகிறது. நல்லவேளையாக அதன் குறி படு மோசமாக இருந்ததால் பார்வையாளர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். கல்வீசும் குரங்குத் தலைவனுக்கு, விடிந்ததும் விடியாததுமாக முக்கியமான வேலை, கல் பொறுக்குவதுதான். மத்தியானம் நடத்தவிருக்கும் கலாட்டாவுக்குத் தேவையான ஆயுதங்களை தயார் செய்ய வேண்டாமா? முன்ஆயத்தம் செய்யும் குணம் சிம்பன்சிகளிடம் காணப்படுவது புதிது.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதைப் பிடுங்கியதாம் அனுமார் என்பார்கள். அந்தக் கதையாக ஒரு ஆர்கிட் செடி தனக்குத் தேவையான சக்கரை உணவை பூஞ்சானக் கிருமிகளிடமிருந்து ஓசியில் பெற்றுக் கொள்கின்றன. அந்தப் பூஞ்சனங்களோ பக்கத்தில் வளரும் மரங்களின் வேர்களிலிருந்து சக்கரையைத் திருடுகின்றன. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் மண்ணுக்கடியில் வெளியே தெரியாமல் நடைபெறுகின்றன. உயிரியல் வல்லுநர்கள் அண்மையில் தாய்லாந்தில் பச்சையம் இல்லாத மூன்று ஆர்க்கிட் செடிகளைக் கண்டனர்.
பச்சை நிறம் இல்லாமல் எப்படி இந்தச் செடி ஒளிச்சேர்க்கை செய்து பிழைக்கிறது என்று பார்த்தபோதுதான் இந்த பூஞ்சனங்களின் உதவியுடன் பக்கத்தில் இருக்கும் மரங்களின் வேர்களிலிருந்து உணவைத் திருடி வாழ்வது தெரிய வந்தது. அடர்ந்த கானகத்தில் வாழும் இந்த ஆர்க்கிடுகள் மிகவும் அபூர்வமானவை மட்டுமல்லாமல் இவற்றின் வாழ்க்கை முறையும் அதிசயமாக இருக்கிறது.
பூஞ்சனங்கள் பொதுவாக மண்ணில் வாழும் கிருமிகள். காளான்கள்கூட பூஞ்சனங்கள்தான். செடிகள் இவற்றை சாதுர்யமாகப் பயன்படுத்தி செலவில்லாமல் காலங்கடத்துவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மேடம் டுஸ்ஸாட், பிரபல மனிதர்களின் அசல் உருவங்களை மெழுகால் செய்து மிகப்பெரிய பொருட்காட்சியை செய்து வைத்திருக்கிறார். பெரிய மனிதர்களை சிலை செய்து வைப்பது மற்றவர்களுக்கு சரித்திரத்தை நினைவுறுத்துவதற்காகவும், காகங்கள் உட்கார்ந்து கக்கா போடவும் உதவுகிறது. சைக்ளாப்ஸ் என்ற சிலந்தி பாருங்கள், வலையில் தன்னைப் போலவே ஒரு உருவத்தை, செத்துப்போன பூச்சிகள், குப்பை செத்தை முதலியவற்றைப் பயன்படுத்தி செய்து வைத்துக் கொள்கிறது. எது நிஜம் எது பொய் என்றே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு அது தத்ரூபமாக இருக்கிறது. தன் உருவம் மட்டுமல்ல தனது முட்டை பொதியைப் போலவும், இரையைப் பிடித்து நூலாம்படையால் முடிச்சு போட்டு வைக்குமே, அதைக்கூட தத்ரூபமாக செய்து வைக்கிறது. சைக்ளாப்ஸ் சிலந்தி இப்படி என்றால், வேற சிலந்திகள் தனது வலையை குப்பை செத்தைகளால் அலங்கரித்து கவர்ச்சி தருவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் என்ன? என்ற கேள்வி உயிரியலாளர்களை 100 ஆண்டுகளாகத் துளைத்துக் கொண்டிருந்தது. சைக்ளாப்ஸ்ஸை பார்த்த பிறகுதான் இதன் உண்மை புரிந்தது.
உலகில் உள்ள உயிரினங்களில் 40 விழுக்காடு பூச்சிகள்தான். மற்ற மிருகங்களை நீங்கள் பார்க்க முடியாமல் இருக்க வாய்ப்புண்டு, ஆனால் பூச்சிகளைப் பார்க்காமல் இருக்க முடியாது. பூச்சிகளின் மொத்த எடைதான் பூமியில் உள்ள மொத்த உயிரின எடைகளில் முதலாவது. இத்தனை பெருமைகள் இருந்தாலும் பூச்சிகள்தான் உலகில் உள்ள பெருவாரியான மிருகங்களின் உணவும்கூட. மனிதர்கள் நெல்லையும் கோதுமையையும் பயிரிட்டு பசியைத் தணித்துக்கொள்கிறார்கள். பாவம் மிருகங்கள் என்ன செய்யும்? அவை இயற்கையாகவே பெருகும் பூச்சிகளை சாப்பிட்டு உயிர் வாழ்கின்றன!
பூச்சிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட உத்திதான் தம்மைப்போலவே உருவ பொம்மையை வலையில் தொங்கவிடும் இரகசியம் என்று தெரியவந்தது. பட்டாம்பூச்சிகளும், அந்திப்பூச்சிகளும் தம் இறக்கைகளில் பெரிய பளபளப்பான கண்கள் போன்ற வடிவங்களை உருவாக்கிக் கொள்வது, ஓணான் போன்ற பிராணிகளை மிரட்டவே. சில குச்சிபோலவும், காய்ந்த இலைபோலவும் தோற்றப்படுத்திக் கொண்டு கண்களுக்குத் தெரியாமல் பிழைத்துக்கொள்கின்றன. இதெல்லாம் தெரிந்த கதைதான். தன்னைப்போலவே சிலை செய்துகொள்ளும் தந்திரம் முற்றிலும் புதியது (நமக்கு). சிலந்தியை வேட்டையாடி சாப்பிடும் குளவிகள் இந்தப் பொய் பொம்மையை என்ன செய்கின்றன என்று பார்த்தபோது, அவை நிஜம் என்று அவற்றை நம்பி தாக்க ஆரம்பிக்கும்போது நிஜ சிலந்தி வாய்ப்பைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறதாம்.
படம் 1. சைக்ளாப்ஸ் மல்மெய்னென்சிஸ் என்ற சிலந்தி தன்னை வேட்டையாடும் குளவிகளின் கவனத்தை திசைதிருப்ப தன்னைப்போல, தன் முட்டைப்பொதியைப்போல, தான் பிடித்து சேமித்து வைத்த இரைமுடிச்சைப்போல உருவ பொம்மைகளை செய்து வலையில் மாட்டி வைக்கின்றன.
படம் 2. இடது பக்கமுள்ளது நிஜ சிலந்தி. வலது பக்கம் உள்ளது, அதன் கைவண்ணத்தால் உருவான முழு உருவ பொம்மை.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- நாய்கள் குரைப்பதேன்?
- கல்பாசி விவசாயம்
- நீர்யானையின் சொந்தம் பன்றியா திமிங்கலமா?
- கிளிக்கு சாயம் போனால் என்னாகும்?
- சயனைட் அருந்தும் யானைகள்?
- கிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன்
- இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி?
- ஊர்வன
- உயிர்த்தெழும் செடி
- பல்லுயிரியம் (Biodiversity) - ஏன்? எதற்கு? எப்படி?
- மாமிசம் திண்ணும் செடிகள்!
- மலைகள் சார்ந்த கானகங்கள்