கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடல் பாம்புகள் உப்பு நீரில் வசித்தாலும், நன்னீரைத் தேடிக் குடிக்கின்றன என்கிறார் ஃபிளாரிடாவைச் சேர்ந்த ஹார்வி லில்லிஒயிட் என்னும் விலங்கியல் வல்லுநர்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 60 வகையான நச்சுப்பாம்புகள் கடல்நீரைக் குடித்து வாழ்கின்றன. இந்தப் பாம்புகளின் உடலில் உள்ள இயற்கையான சுரப்பிகள் உப்பை வடிகட்டி கழிவுகளாக வெளியேற்றும் இயல்புடையவை.
ஆனால் தைவானுக்கு அருகில் பிடிக்கப்பட்ட மூன்றுவகையான கடல்பாம்புகள் மட்டும் தாகமெடுத்தாலும்கூட உப்புநீரைக் குடிக்க மறுத்துவிடுகின்றன. நன்னீர் அல்லது ஓரளவு உப்புள்ள நீரை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றன என்கிறார் இந்த விலங்கியல் வல்லுநர்.
கடல்நீரில் உள்ள உப்பால் இந்த பாம்புகளின் உடலில் உள்ள நீர் வெளியேறிவிடுவதாகவும், இதை ஈடு செய்வதற்காக நன்னீரைத் தேடி இந்த பாம்புகள் கடல் முகத்துவாரத்திற்கு வருவதாகவும் ஆய்வாளர் தெரிவிக்கிறார். 10 முதல் 20 சதவீதம் அடர்த்தி உடைய உப்பு நீரைக்கூட இந்த பாம்புகள் குடிக்கின்றனவாம்.
உலகம் முழுவதும் கடல்பாம்புகளின் பரவல் ஏன் சீராக இல்லை என்பதை அறிய இந்த ஆய்வு பெரிதும் உதவுவதாக விலங்கியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் கடல்பாம்புகள் அதிக மழைபெய்யும் பகுதிகளின் கடல்களில் மட்டுமே ஏன் காணப்படுகின்றன என்ற கேள்விக்கும் விடை கிடைத்திருக்கிறது.
உலகை அச்சுறுத்திவரும் காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை பிரதேசங்களில் வறட்சி அதிகரிக்கிறது. மழை அளவு குறையும்போது இத்தகைய கடல்பாம்புகளின் இனமும் அழியக்கூடிய அபாயம் இருப்பதாக லில்லிஒயிட் கூறுகிறார்.
கடல் பாம்புகள் elapid குடும்பத்தைச் சேர்ந்தவை. நல்ல பாம்புகள், மாம்பாக்கள், பவளப்பாறை பாம்புகள் ஆகியவையும் elapid குடும்பத்தைச் சேர்ந்தவைதான். நிலத்தில் வாழ்ந்த இந்த வகை பாம்புகள் பின்னர் கடல் நீரில் வாழத்தொடங்கி, கடல்நீரிலேயே இனப்பெருக்கம் செய்து வாழ்க்கையைக் கழிக்கின்றன. பேராசிரியர் லில்லிஒயிட் ஆராய்ச்சி செய்த krait வகை பாம்புகள் மட்டுமே வாழ்க்கையின் மிகச்சிறிய பகுதியை நிலத்தில் முட்டையிட்டுக் கழிக்கின்றன.
தைவானுக்கு அருகில் உள்ள ஆர்ச்சிட் தீவிற்கு அருகில் பிடிக்கப்பட்ட krait வகை கடல் பாம்புகளை பேராசிரியர் ஒயிட் இரண்டு வாரங்கள் கடலின் உப்பு நீரில் வைத்திருந்தார். உடலில் உள்ள நீரை இழந்ததற்கு அறிகுறியாக பாம்புகளின் செதில்களில் குழிகள் தோன்றின. ஆய்வாளர்கள் பாம்புகளை எடையிட்டனர். மீண்டும் பாம்புகளை 20 மணிநேரத்திற்கு கடல் நீரில் வைத்திருந்தனர். பாம்புகள் தாகமாயிருந்தபோதும் உப்பு நீரைக் குடிக்கவில்லை. பாம்புகளின் எடை அதிகரிக்கவில்லை என்பதில் இருந்து இது தெரியவந்தது.
ஆனால் இந்த பாம்புகளை நன்னீரில் விட்டபோது உடனடியாக நன்னீரைக் குடிக்கத் தொடங்கின. ஓரளவு உப்பு அடர்த்தி கொண்ட நன்னீரையும் இந்த பாம்புகள் ஏற்றுக்கொண்டன.
கடலின் மீது மழை பெய்யும்போது அடர்த்தி குறைவான மழைநீர் அடர்த்தி அதிகமான கடல் நீரின் மீது மிதந்துகொண்டிருக்கும். அலைகளின் வேகத்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே, மழைநீர் கடல் நீருடன் இரண்டறக் கலக்கும். பவளப்பாறைகளின் உதவியால் அலைகள் இல்லாத 'லகூன்'களில் மட்டும் கடல்நீருக்கு மேல் நீண்டகாலம் மழைநீர் மிதந்து கொண்டிருக்கும். இதன் காரணமாகத்தான் இந்த வகை கடல் பாம்புகள் லகூன்களில் அதிகமாக காணப்படுகின்றன.
உலகின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெய்யும் மழை அளவு கடல்பாம்புகளின் எண்ணிக்கையைக்கூட நிர்ணயிக்கிறது என்பது அதிசயம்தான். கடல் பாம்புகளில் தொடங்கிய இந்த ஆய்வுகள் கடல் ஆமைகள் போன்ற உயிரினங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. காலப்போக்கில் இன்னும் அதிசயமான உண்மைகள் வெளிவரலாம். உலகம் வெப்பமயமாகிக் கொண்டிருக்கிறது. மனிதர்களின் அழிவது மட்டுமல்ல, கடல்வாழ் விலங்குகளும் அழிந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டுமே இன்றைய உண்மை.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ரேவதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பொன்னன் கட்டுமரத்தின் துடுப்பை வேகமாகப் போட்டான். “தம்பி! இதுக்கு மேலே போக வேண்டாம். இனிமே வரதெல்லாம் சுறாமீன் சஞ்சாரப் பகுதி'' என்று எச்சரிக்கை செய்தான், கொம்பன்.கட்டுமரத்தில், பனை ஓலைக் கூடையில், பிடித்த மீன்களெல்லாம் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. “அண்ணே! நான் இதுவரை சுறாமீனைப் புடிச்சதே இல்லை. இப்ப ஒன்றைப் புடிச்சுப் பார்க்கலாமா?' என்று ஆவலுடன் கேட்டான், பொன்னன்.
“சுறா மீனை புடிக்க ஆள்பலம் வேணும் தம்பி. அது வாலைச் சுழற்றி அடிக்கும்போது கவிழாத படகு தேவை. இன்னொரு நாள் விசைப்படகில் ஆள் கட்டோடு வரலாம். இப்ப வேணுமானா, சுறாவை வரவழைச்சுக் காட்டறேன்'' என்றான், கொம்பன்.
பிடிக்கும்போது அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்த ஒரு பெரிய மீனை ஓலைக் கூடையில் இருந்து எடுத்த கொம்பன், அதை பலமாகக் கயிற்றில் கட்டி, நீரில் எறிந்தான். “தம்பி! சுறாக்களுக்கு மோப்ப சக்தி மிக அதிகம். நீரில் ரத்தக் கசிவு கலந்தால் பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் இவை கண்டுபிடித்துவிடும் பாரேன். இந்த மீனின் ரத்தக் கசிவைக் கண்டு பிடித்து எத்தனை சுறாக்கள் ஓடி வருகின்றன என்று!'' கொம்பன் கூறி முடிக்கவில்லை. கயிற்றில் கட்டப்பட்டிருந்த மீனை நீருக்குள் சுறாமீன்கள் இழுப்பது தெரிந்தது. வாலால் சுழற்றி வீசப்பட்ட நீர் உயர்ந்த அலைகளாக எழும்பிக் கட்டுமரத்தை அலைக்கழித்தது.
சுறா, கட்டுமரத்தையே தாக்கிக் கவிழ்த்துவிட முயன்றது. சண்டை போட்டுக் கொண்டே இரண்டு சுறாக்கள் வாயைப் பிளந்தபடி ஒன்றை ஒன்று தாக்க முயன்றபோது பயங்கரமாக இருந்தது. “யெப்பா! முதலைக்குப் பல்வரிசை இருப்பது மாதிரி என்ன இதுகளுக்கும் இருக்கு!'' என்று வியந்தான், பொன்னன். அந்த மீனுக்காகச் சுறாக்கள் மோதிக் கொண்டபோது, கட்டுமரம் படாத பாடு பட்டது. அரும்பாடு பட்டு, கட்டுமரத்தை அந்த இடத்தில் இருந்து விலக்கிக் கொண்டு போனார்கள்.
“தம்பி! முதலைகளுக்குப் பற்கள் ஒரு வரிசைதான். ஆனா சுறாக்களுக்குக் குறைஞ்சது நாலு வரிசைப்பற்கள் இருக்கும். இரையைக் குத்திக் கிழிக்கிறது எல்லாமே முதல் வரிசைப் பற்கள்தான். இதுல ஒரு பல் உடைஞ்சு விழுந்துட்டா, பின் வரிசையிலிருந்து ஒரு பல் அந்த விழுந்த இடத்துக்கு நகர்ந்து வந்துவிடும்! இல்லைன்னாக்கூட இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சுறாக்களுக்குப் புதிய பல் முளைத்துவிடுகிறது. புலி சுறான்னு ஒரு வகை. இதுக்கு மட்டும் பத்து வருடத்திலே 24,000 பல் முளைக்கிறது'' என்று விளக்கினான், கொம்பன்.
“சுறாவின் எந்த உறுப்பும் வீணாவது இல்லை. பற்களால் மாலைகள், தோலால் பைகள், செருப்புகள், எலும்பால் மருந்துத்தூள், ஈரல் கொழுப்பில் இருந்து எண்ணெய், இறைச்சி என்று அதன் உடம்பின் எல்லா பாகங்களும் மனிதர்களுக்கு உதவுகின்றன. ஆங்கிலேயர்களுக்குச் சுறா என்றால் கொள்ளை ஆசை. நம்ம நாட்டுல பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக்கிட்டிருக்கிறப்போ, எங்க தாத்தா பத்து வருடத்துல ஆயிரம் சுறா புடிச்சுக் கொடுத்தார்னு ஆங்கிலத் துரை, ‘ஆயிரம் சுறா புடிச்ச மாரிமுத்து'ன்னு எங்க தாத்தாவுக்கு பட்டம் தந்தாராம்!'' என்று தொடர்ந்து கூறினான், கொம்பன்.
“இதன் உடம்பு சிலேட் மாதிரி மொழுமொழுன்னு இருக்கே!''
“தலையில இருந்து வால்பக்கம் தடவினால் அப்படித்தான் இருக்கும். ஆனால், வாலில் இருந்து தலைப்பக்கம் தடவினால் உப்புக் காகிதத்தைத் தொடுவது போல் சொரசொரப்பாய் இருக்கும்.''
“பைலட் மீன், ரிமோரா என்று இரண்டு வகை சிறிய மீன்கள் இவைகளின் உடம்போடு ஒட்டிக்கொண்டிருக்கின்றன. சுறாக்கள் இவைகளைக் கண்டுகொள்வதில்லை. காரணம், இவை சுறாவின் பற்களையும், செதில்களையும் சுத்தப்படுத்துகின்றன. சுறாக்களால் வண்ணங்களைப் பிரித்து அறிய முடியாது. பார்வையும் கூர்மை கிடையாது. மந்தமான வெளிச்சத்தில்தான் இதற்குப் பார்வை தெளிவாகத் தெரியும்''.
“அதனால்தான் சுறாக்கள் பெரும்பாலும் மாலை நேரத்தில் மனிதர்களைத் தாக்குகின்றனவா?''
“சுறாக்களின் உடம்பில் இருப்பவை வலுவான எலும்புகள் அல்ல. நமது மூக்கின் நுனிப்பகுதி கார்டிலேஜ் என்ற மென்மையான குறுத்து எலும்பு பொருளால் ஆனது. இதைப் போன்றே சுறாவின் உடல் எலும்புகள் எல்லாம் குறுத்தெலும்பால் ஆனவை.''
“சுறாக்கள் மனிதர்களைக் கண்டால் விடாது என்கிறார்களே..!''
“இது முழுக்க உண்மை அல்ல. சுறாக்களில் சுமார் 300 வகை உண்டு. இவற்றுள் 30 வகைகளே மனிதர்களைத் தாக்குபவை. அதுவுங்கூடச் சில நேரங்களில்தான். சுறாக்களுக்குப் பசி வந்துவிட்டால் எதிர்ப்பட்ட எல்லாவற்றையும் விழுங்கி வைக்கும். ஒரு சுறாவின் வயிற்றில் இருந்து ஒரு மண்ணெண்ணெய் டின், பிளாஸ்டிக் பொம்மை, கோணி எல்லாம் எடுத்திருக்கிறார்கள். சுறாக்குட்டிகளுக்குப் பிறக்கும்போதே பற்கள் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவை இரண்டு குட்டிகள் போடும். சில வகை சுறாக்கள் நூறு குட்டிகள் கூடப் போடும். குட்டிகளை அம்மா விட்டுவிட்டுப் போய்விடும். இவை தாமே இரை தேடிப் பிழைத்துக் கொள்ளும். பெரிய சுறாக்கள், குட்டிச் சுறாக்களைச் சாப்பிட்டுவிடும். ஆனால், தாய் தன் குட்டிகளைச் சாப்பிடாது. மாதக்கணக்கில் இவை பட்டினி கிடக்கும். உடம்பு இளைக்காது. ஈரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பும் எண்ணெயும் இவைகளைப் பாதுகாக்கும்.''
“சுறா கடலில் மட்டும்தான் இருக்குமா? ''
“அப்படி இல்லை. நல்ல நீரில், நதிகளில் வசிக்கும் சுறாக்களும் உண்டு. பொதுவாக சுறாக்கள் ஆழமான பகுதிகளில்தான் வசிக்கும். 4000 மீட்டர் ஆழத்தில் வசிக்கும் சுறாக்கள் கூட இருக்கின்றன.''
பொன்னன் துடுப்பை வேகமாகப் போட்டான்.
நன்றி: குருவி நடக்குமா?
அறிவியல் கதைகள்
அறிவியல் உண்மைகள்
சுறாக்கள் 350 மில்லியன் ஆண்டு களாக உலகில் வாழ்பவை. அதிக உருமாற்றம் ஏதுமில்லை.
குளிர் ரத்த வகை. 300 வகைகள். 30 வகைகளே மனிதர்களுக்குச் சில நேரங்களில் எதிரிகள்.
உடம்பில் இருப்பவை எலும்புகள் அல்ல. மெல்லிய குறுத்தெலும்பு. மங்கலான வெளிச்சத்தில்தான் பார்வை அதிகம்.
குட்டிபோடும் இனம், தாய் தன் குட்டிகளைத் தின்னாது. மற்ற சுறாக்களின் குட்டிகளைத் தின்னும். எதையும் தின்னும் இனம்.
பற்கள் 4 வரிசைகள், அவற்றிற்கு மேலும் உண்டு, புதிய பற்கள் 2 வாரங்களுக்கு ஒருமுறை முளைக்கும். பாஸ்கிங் சுறாவுக்குப் பற்களே இல்லை.
கொழுப்பும், எண்ணெயும் ‘ஏ' வைட்டமின் நிரம்பியவை.
சுறாக்கள் இல்லையெனில் கடலில் சிறிய மீனினங்கள் பெருகி நீந்த இடமின்றித் தவித்து இறக்கும்.
வேல் சுறா 15 மீட்டர் நீளம் வரை வளரும், ட்வாப் சுறாவின் நீளம் 5 அங்குலமே!
- ரேவதி
(நன்றி : தலித் முரசு ஆகஸ்ட் 2008)
- விவரங்கள்
- ரேவதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பாபு நண்பர்களோடு தோட்டத்தில் இருந்தான். “என்ன செய்யறே அங்கே?'' என்று அப்பா கேட்டபோது, “என் நண்பர்களுக்கெல்லாம் கொய்யாப்பழம் பறிச்சுத் தருவதா கூட்டிக்கிட்டு வந்திருக்கேம்பா'' என்றான்.“மரமேறும்போது கவனம்!'' என்றார், அம்மா.
“நாங்க யாரும் மரமேறப் போறது இல்லேம்மா. பொன்னனை வரச்சொல்லி இருக்கேன். அவன்தான் மரத்தில் எல்லாக் கொய்யாப்பழங்களையும் பறிக்கப் போறான். நாளைக்கு என் நண்பர்கள் வீட்டிலெல்லாம் நம்ம வீட்டு கொய்யாப்பழம் தான்.''
பொன்னன் பால் வியாபாரம் செய்பவன். அதோடு தோட்ட வேலை, கிணறு தூர் எடுப்பது, மரமேறுவது, வெள்ளை அடிப்பது என்று எல்லா வேலைகளையும்செய்யும் திறமை மிக்கவன்.
“கொய்யாப்பழம் மரத்தில் இருக்கும்போதே இத்தகைய வாசனை அடிக்கிறதே!'' என்று வியந்து கொண்டான், முத்து “பாரேன், ஒவ்வொரு பழமும் சின்னச் சாத்துக்குடி அளவுக்கு இருக்கே!'' என்று ஒத்துப் பாடினான், சேகர்.
அணில் ஏன் விழுவதில்லை?
இதற்குள் பொன்னன் வந்துவிட்டான். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கயிற்றில் கட்டிய கூடையோடு மரத்தின் மேலே ஏறினான். “கூடை எதுக்கு, பொன்னா? நீ பறிச்சுப் போடு நாங்க கீழே பிடிக்கிறோம்'' என்றான் பாபு.
“எல்லாம் பழுத்தப் பழங்கள், அமுக்கிப் பிடிச்சா கன்றிப் போயிடும். அதனால கூடையில பக்குவமா போட்டுத் தாரேன்.'' நடுக்கிளையில் கூடையை மாட்டிவிட்டு, பொன்னன் பழங்களைப் பறிக்க ஆரம்பித்தான். அப்பாவும் அம்மாவும் கீழே வந்து நின்று கொண்டனர்.
“அய்யோ! எல்லா பழங்களையும் அணில் கடிச்சிருக்குங்க. பெரிதா பழுத்த பழம் எதையும் விடலேங்க'' என்று கூடையைக் கீழே இறக்கினான், பொன்னன். எல்லோரும் பார்த்தனர். இருபது பழங்கள் இருக்கும். எல்லாம் பெரிய பெரிய பழங்கள். எல்லாமே ஒரு பக்கமாகக் கடிபட்டிருந்தன. கடிபட்ட இடத்தில் "செக்கச் செவேர்' என்று பழம் சிரித்தது.
“அய்யா, எல்லாப் பழங்களுமே இப்படித்தாங்க இருக்கு. காவெட்டா, பழுக்காத பழங்கள் தான் முழுசா இருக்கு'' என்றான் பொன்னன். நண்பர்களை அழைத்து வந்த பாபுவின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. “பரவாயில்லை பாபு. உனக்கு நல்ல மனதுதான், அணில் கடித்துவிட்டதற்கு நீ என்ன பண்ணுவே?, என்று நண்பர்கள் சார்பில் சேகர் சமாதானம் கூறினான்.
‘கிக் கிக்'கென்று சத்தம் கேட்டது. இரண்டு அணில்கள் மாடிப்படி மேலிருந்து மரக்கிளைக்குத் தாவி, கிளைகளில் இறங்கி வாலைத் தூக்கிக்கொண்டு ஒன்றை ஒன்று துரத்தி மறைந்தன.
“அப்பா, இந்தச் சனியன் பிடித்த அணில்களுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணணும்'' என்றான் பாபு.
“மீதிப் பழங்களையாவது காப்பத்தணும்னா ஏதாவது பண்ணத்தான் வேணும். நான் போன வாரமே பார்த்துட்டு சொன்னேன்.
கவட்டு வில்லால் ஓர் அணிலை அடித்து மரக்கிளையில் தலைகீழாத் தொங்கவிட்டா, அதைப் பார்த்து பயந்துக் கிட்டு கொஞ்ச நாளைக்கு எந்த அணிலும் வராதுன்னு சொன்னேன். எல்லாரும் வேண்டாம் வேண்டாம்னீங்க. இப்ப என்னாச்சு?'' - இது பொன்னன்.
“அணிலை அடிக்கிற சமாசாரம் வேண்டாம். வேற வழி இருந்தா சொல்லு'' என்றார் அம்மா.
“காயா இருக்கும்போதே பறிச்சு நாம்பளே பழுக்க வைச்சுக்க வேண்டியதுதான்.''
“சரி, அப்படியே பண்ணு''
பொன்னன் கூடையைக் கட்டிவிட்டுக் காய்களைப் பறிக்கத் தொடங்கினான்.
“இப்ப நான் என்ன பண்றது? ரொம்ப பெருமையா எங்க விலங்கியல் ஆசிரியரிடம். “நீங்க பழம் வாங்காதீங்க, சார் நான் மாலையில் எங்க வீட்டுக் கொய்யாப்பழத்தைத் தருகிறேன்'னு சொல்லிட்டு வந்தேன்'' என்று கலங்கினான் பாபு.
“பரவாயில்லே, போகும்போது மார்க்கெட்டில் நாலு பழத்தை வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்துவிட்டு, இப்படி ஆனதையும் சொல்லிட்டு வா'' என்றார், அப்பா.
பாபு நண்பர்களோடு கிளம்பினான். ஆசிரியரிடம் விளக்கியபோது அவன் தலை குனிந்துவிட்டது.
“இதனால் என்ன பாபு வந்தது? கொய்யாப்பழத்தை மரத்தில் பழுக்கவிட்டால் அணிலோ, இல்லை, கிளியோ பாழாக்கத்தானே செய்யும்'' என்றார் ஆசிரியர்.
“பழுத்த பழம் ஒன்றைக்கூட விட்டு வைக்கலே, அய்யா. எல்லாத்தையும் கடித்திருக்கு'' என்றான் சேகர்
“பழுத்திருந்தால்தான் அணில் கடிக்கும். கிளி கொத்தும். காயை இவை தொடவே தொடாது. இன்னும் கேட்டால், அணில் கடித்த பழம் அதிகச் சுவையாக இருக்கும்'' என்றார் ஆசிரியர்.
“அய்யா, எங்க வீட்டு மாமரத்தில் ஒரு அணில் கூடு கட்டியிருக்கிறது'' என்றான் சிவா
“அணில் பாலூட்டியாச்சே! எப்படிக் கூடு கட்டும்?'' என்று வியப்புடன் கேட்டான் ஜார்ஜ்.
“அணில் பாலூட்டியானாலும் கூடு கட்டித்தான் குட்டி போடும்'' என்று சிரித்தார் ஆசிரியர்.
“ஓர் அணிலைக் கொன்று மாட்டி வைக்கறேன்னு சொன்னப்ப நான் தான் வேண்டாம்னுட்டேன். "அணிலே அணிலே வா வா, அழகு அணிலே வா வா'ன்னு சின்ன வயதில் பாடிட்டு, இப்ப அதே அணிலைக் கொல்வது என்பதை என்னால் தாங்கவே முடியலே!'' என்றான் பாபு.
“நாம்ம அதிகம் நேசிக்கும் கிளியும் அணிலும் விவசாயிகளுக்குத் தீங்கு பண்ற மாதிரி நாம நேசிக்கும் வேறு எந்த உயிரினமும் பண்ணுவதில்லை''
“எப்படி அய்யா அணில் கொஞ்சம்கூடக் கீழே விழாமல் தாவுது?''
“எதையும் விழாது அழுந்தப் பற்றிக் கொள்ளும்படி அதன் விரல் நகங்கள் கூர்மையா வளைஞ்சிருக்கும். அதோடு, தாவும் போது பேலன்ஸ் பண்ண ஏத்தபடி அதன் அடர்ந்த வால் அமைஞ்சிருக்கு. பாராசூட் மாதிரி இது அணிலுக்குப் பயன்படுகிறது. அணில்னு சொன்னதும், அதன் அழகான வால்தானே நமக்கு நினைப்பு வருது. இது தன் கூட்டைக் கட்டியதும், குஞ்சுகளுக்கு மெத்மெத்தென்று கதகதப்பாக இருக்க, அழகான வாலில் இருந்து முடிகளை வாயால் கடித்து எடுத்துப் போட்டுத் தயார் பண்ணும்.''
“அதிசயமா இருக்கே!''
“பிறந்த உடனே குட்டிகள் அழகாக இருக்காது, காதுகள் மடிஞ்சு, கண்கள் மூடியபடி பார்க்கவே அசிங்கமாய் இருக்கும். ஒன்றரை மாதமான பிறகுதான் குட்டி அணில் மாதிரி ஆகும். அம்மாதான் எல்லாவற்றையும் கவனித்துப் பண்ணும்.''
ஆசிரியர் தொடர்ந்தார்.
“இதன் வாயின் முன்பக்கத்தில் மேலும் கீழுமா இரண்டிரண்டு உளிப்பற்கள் இருக்கும். இவை தினமும் வளரும். அதனால் கடின ஓடுகள், மரக் கிளைகள் இவைகளை எலிகளைப் போலவே துருவும். எதுவும் கிடைக்கலேன்னா, மேலும் கீழுமா தாங்களே பற்களை அரைத்துக் கரைத்துக் கொள்ளும். இப்படிப் பண்ணலேன்னா, உளிப்பற்கள், நீளமா வளர்ந்து எதுவும் சாப்பிட முடியாம இவை இறந்து விடும்.''
“அணிலின் முதுகில் உள்ள கோடுகள் அணை கட்ட உதவியதற்காக ராமர் போட்டவை என்கிறார்களே!''
ஆசிரியர் சிரித்தார். “இது அறியாமை, ராமருக்கு அணில் போன்ற உயிரினங்களும் உதவின என்பதைக் காட்ட எழுந்த கற்பனைக் கதை. ஆனால் அது உண்மையல்ல. ராமாயண காலத்திற்கு முன்பே அணில்களின் முதுகில் கோடுகள் இருந்திருக்கின்றன.''
அறிவியல் உண்மைகள்
அணில்கள் கொறிக்கும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை. பழங்களுக்குப் பெரும் சேதம் விளைவிப்பவை.
கொறிக்காவிட்டால், முன்பற்களை அரைக்காவிட்டால் இவை வளர்ந்து வாயை அசைக்க முடியாதபடி செய்துவிடும். அதனால் அணில் பட்டினியால் இறந்து விடும்.
தாவும்போது வால் இதற்குப் பாராசூட்டைப் போல் பேலன்ஸ் செய்து கொள்ள உதவுகிறது.
கைகளில் உள்ள வளைந்த நகங்கள் விழாமல் இருக்க உதவுகின்றன.
பறக்கும் அணில்களும் உண்டு. அவை நம் நாட்டில் இல்லை.
- ரேவதி
(நன்றி : தலித் முரசு அக்டோபர் 2008)
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக் கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது. தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக் கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப் பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.
கொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நாடுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும், வளம் குறைந்த மண்ணிலும் வளரக் கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும், தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள், சிகப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.
வறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு, இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.
ஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு, வாந்தி, கடுமையான வயிற்றுவலி, நினைவிழப்பு, மயக்கம், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.
ஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும், வயிற்றை காலிசெய்வதும், செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- திட்டம் தீட்டும் சிம்பன்ஸி
- கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
- சிலை வடிக்கும் சிலந்தி
- நாய்கள் குரைப்பதேன்?
- கல்பாசி விவசாயம்
- நீர்யானையின் சொந்தம் பன்றியா திமிங்கலமா?
- கிளிக்கு சாயம் போனால் என்னாகும்?
- சயனைட் அருந்தும் யானைகள்?
- கிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன்
- இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி?
- ஊர்வன
- உயிர்த்தெழும் செடி
- பல்லுயிரியம் (Biodiversity) - ஏன்? எதற்கு? எப்படி?
- மாமிசம் திண்ணும் செடிகள்!
- மலைகள் சார்ந்த கானகங்கள்