பச்சை உடம்பில் சிவப்பு மூக்கு. கிளிக்கு யார் வர்ணம் பூசியது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுமுன், ஏன் பறவைகளுக்கு அத்தனை கவர்ச்சியான நிறங்கள் தேவைப்படுகின்றன? எஸ்த்தர் என்ற பெண்மணி (நேச்சுரல் ஹிஸ்ட்ரி மியூசியம், பார்சிலோனா, ஸ்பெயின்) பறவைகளின் கண்களைப் பறிக்கும் நிறங்கள் அவற்றின் உடல் ஆரோக்கியத்தை விளம்பரப்படுத்துகின்றன என்கிறார். ஜோடி தேர்ந்தெடுப்பதற்கு இந்த விளம்பரம் தேவைப்படுகிறதாம்.
பறவைகளிடம் காணப்படும் இரத்தச் சிவப்பு, கமலா ஆரஞ்சு நிறங்களுக்குக் காரணமாக உள்ள பொருள் கெரோட்டினாய்டு ஆகும். கேரோட்டினாய்டு நிறத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல் வெயிலுக்குப் போர்வையாகவும், உடலில் ஆக்சிகரணத்தால் ஏற்படும் நச்சுகளை அகற்றுவதற்குப் பேருதவியாகவும் உள்ளது. எனவே நிறம் உடலின் ஆரோக்கியத்தின் சின்னமாக இருக்கின்றன.
எஸ்த்தரின் கண்டுபிடிப்பு இன்னும் கொஞ்சம் ஆழமானது. இதுவரை, இறகின் நிறங்கள் இறகிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகக் கருதப்பட்டு வந்தது எஸ்த்தரின் ஆய்வுப்படி பறவைகளின் கல்லீரலில் கேரோட்டினாய்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு இரத்தம் வழியாக சிறகு முளைக்கும்போது வழங்கப்படுகிறது என்று தெரிகிறது. உடல் ஆரோக்கியம் குறைந்தால் உடனே அது சிறகின் நிறத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுகிறது. சாயம்போன கிளியை யார் மதிப்பார்கள்?
- முனைவர் க.மணி