கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நஞ்சு துப்பும் பாம்புகள் எதிரியின் கண்களைக் குறிவைத்தே நஞ்சைத் துப்புகின்றன. இந்த பாம்புகளின் செயலைக் குறித்த ஆய்வில், எதிரியின் கண்களை நிச்சயமாகத் தாக்கிவிடும் வகையில் இவை தலையையும் கழுத்தையும் அசைப்பது தெரிய வந்துள்ளது. இவை விஷத்தைத் துப்பிவிடுகின்றன என்பதைக் காட்டிலும் எதிரியின் முகத்தை நோக்கி விஷத்தை விசிறி விடுகின்றன என்பதுதான் ஆராய்ச்சியின் முடிவு. மசாசூஸட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் புரூஸ் யங் அண்மையில் நஞ்சு துப்பும் பாம்புகளைக் குறித்த ஆய்வில் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
நஞ்சு துப்பும் பாம்பின் நஞ்சுச்சுரப்பி விசையுடன் சுருங்குவதால் பாம்பின் நாக்குகள் வழியாக நஞ்சு பீச்சியடிக்கப்படுகிறது. எதிரியின் கண்களின்மீது நஞ்சு விழவேண்டும் என்பதே பாம்பின் நோக்கமாக இருக்கும். ஆறு அடி தொலைவுவரை பீச்சியடிக்கப்படும் இந்த நஞ்சு கண்களில் எரிச்சலை உண்டு பண்ணுவதோடு, பார்வை இழப்பையும் ஏற்படுத்திவிடும். இரண்டு அடி தொலைவில் இருந்து பீச்சியடிக்கப்படும் நஞ்சு நிச்சயமாக எதிரியின் கண்களைத் தாக்கிவிடுமாம்.
இந்த வகைப் பாம்புகள் எதிரியின் முகத்தில் கண்களை மட்டும் குறிவைத்து நஞ்சை துப்புவதில்லை. பாம்பின் கழுத்துத் தசைகள் தலையுடன் பொருத்தமாக இயங்கி எதிரியின் கண் இருக்கும் பிரதேசத்தில் நஞ்சை விசிறி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
நெல்வயல்கள் மீதேனை வெளியிடும் என்று பணக்கார நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டு பொய் என்கிறது இந்திய விஞ்ஞானிகள் புதிதாக மேற்கொண்ட ஓர் ஆராய்ச்சி. புவி வெப்பமடைதலுக்கு பசுமையில்ல வாயுக்களே காரணம். கார்பன் டை ஆக்சைடு, மீதேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை பசுமையில்ல வாயுக்கள் எனப்படுகின்றன. மனித செயல்பாடுகளே இந்த வாயுக்களை உருவாக்குகின்றன. சர்வதேச பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு முறை பசுமையில்ல வாயுக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்று பணக்கார நாடுகளை வலியுறுத்தும்போதும், அவை பதிலுக்கு இந்தியா, சீனாவை கைகாட்டுகின்றன. இங்குள்ள நெல்வயல்களும், கால்நடைகளும் பெருமளவு மீதேனை வெளியிடுவதே முக்கிய காரணம் என்று அவை குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இது எந்த அளவு உண்மை?
நெல்வயல்கள் பெருமளவு மீதேனை உற்பத்தி செய்யும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, நெல் வயல்களை கார்பன் கிரகிப்பான்களாகச் செயல்படுகின்றன என்ற புதிய ஆராய்ச்சி முடிவை இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். நெல் வயல்கள் வளிமண்டலத்தில் இருந்து கரிம கார்பனை கிரகித்துக் கொண்டு புவி வெப்பமடைதலை குறைக்கின்றன என்று இந்த ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.
ஒரு ஹெக்டேரில் நெல் பயிரிடுவதன் மூலம் 5.5 டன் கரிம கார்பன் நிலத்தில் சேகரிக்கப்படுகிறது என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பிதிஷா மஜும்தார் மற்றும் கொல்கத்தாவிலுள்ள கல்யாணி பல்கலைக்கழகத்தின் விஸ்வபதி மண்டல் தெரிவிக்கின்றனர். ஒரிசா நெல் வயல்களில் சேகரித்த மண்ணில் அவர்கள் சோதனை நடத்தினர்.
நெல்வயல்கள் வளிமண்டலத்தில் பெருமளவு மீதேனை வெளியிடுகின்றன என்றே இதுவரை நம்பப்பட்டு வந்தது. இதற்கு மாறாக, மீதேனை உருவாக்க மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் கார்பனைவிட பெருமளவு கார்பன் மண்ணில் சேகரமாகிறது. நெல் வயல்கள் மண்ணில் சேகரிக்கும் கார்பனில் வெறும் 2.5-5 சதவிகிதம் மட்டுமே மீதேனாக மாறுகிறது, எஞ்சியது முழுவதும் மண்ணில் சேருகிறது. நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் கார்பன் ஆக்சிஜனேற்றம் அடைந்து வெளியேறாமல் மண்ணில் சேகரிக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.
''இது உண்மைதான். வயல்கள் உருவாக்கும் மீதேனில் 90 சதவிகிதம் வேரால் கிரகித்துக் கொள்ளப்படுகிறது'' என்கிறார் ஐ.நா. காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவைக்கான (யு.என்.எப்.சி.சி.சி.) இந்தியாவின் தேசிய தொடர்பு அதிகாரி மகாதேஸ்வர சாமி.
''வளரும் நாடுகளில் உள்ள நெல்வயல்களில் இருந்து வெளியாகும் மீதேனின் அளவை மேற்கத்திய விஞ்ஞானிகள் அதிகப்படியாக காட்டிவிட்டார்கள்'' என்று 1998ம் ஆண்டிலேயே வளிமண்டல விஞ்ஞானி ஏ.பி. மித்ரா தெரிவித்திருக்கிறார். நெல்வயல்களில் நடந்துள்ள புதிய ஆராய்ச்சிகளின் அடிப்படையில் காலநிலை மாற்ற பன்னாட்டு அரசுக் குழு (ஐ.பி.சி.சி.), மீதேன் வெளியிடும் அம்சங்கள் எவை என்பதை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
''கொல்கத்தா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இன்னும் அதிக ஆதாரங்கள் தேவை. வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டைஆக்சைடில் இருந்து நிலத்தில் சேகரமாகும் கார்பனின் அளவை மதிப்பிடுவது தொடர்பாக இன்னும் அதிக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டும்.
மேலும் கார்பன் தற்காலிகமாக மண்ணில் சேகரமாகலாம். வெயில் காலத்தில் வெப்பநிலை மிக அதிகரிக்கும்போது, அவை ஆக்சிஜனேற்றம் அடைந்து கார்பன் டைஆக்சைடாக வெளியேறலாம். 'தேசிய வேளாண் புதுப்பித்தல் திட்ட'த்தின் கீழ் இதேபோன்று இன்னும் சில ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன'' என்கிறார் லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பிஜய் சிங்.
எப்படியோ, காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளில் இந்தியாவின் வாதத்தை வலுப்படுத்த புதிய ஆராய்ச்சி உதவும் என்று நம்புவோம்.
அனுப்பி உதவியவர்: ஆதி
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
காதல் வயப்பட்டு இனச்சேர்க்கைக்குத் தயாராகவுள்ள Aedes aegypti எனப்படும் டெங்கு கொசுக்கள் தங்களின் துணையை இசைமூலம் தேர்ந்தெடுக்கின்றன எனும் செய்தி வியப்பானது. டெங்குவையும், மஞ்சள் நோயையும் பரப்பும் இந்த வகையான ஆண்-பெண் கொசுக்கள் ஒத்திசை மூலம் தங்களுடைய இணையைத் தேர்ந்தெடுக்கின்றன.
இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானி டேனியல் ராபர்ட் உயிரினங்களில் காணப்படாத விந்தை இது என்கிறார். இந்த ஆராய்ச்சியின் பயனாக கொசுக்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான திசையில் ஆராய்ச்சிகளைத் தொடர முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
காற்றில் பறக்கும் ஒரு பெண் கொசுவின் இறக்கைகள் சுமார் 400 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்குகிறன. ஒர் ஆண் கொசுவின் இறக்கைகள் சுமார் 600 ஹெர்ட்ஸ் அதிர்வுகளை உண்டாக்க வல்லவை.
ஆண், பெண் டெங்கு கொசுக்களை மிக நுணுக்கமான இழைகளால் கட்டி பறக்கச்செய்தனர். அவை நெருங்கி வரும்போது கொசுக்களின் இறக்கைகள் உண்டாக்கிய கீதத்தை பதிவு செய்தனர்.
பெண்கொசுக்கள் எழுப்பிய சுரம் 400...800...1200 என்று அதிகரித்தபோது, ஆண்கொசுக்களின் சுரம் 600...1200 என்று அதிகரித்தது. காதல் வயப்பட்ட கொசுக்கள் எழுப்பிய சுரத்தின் அதிர்வெண் 1200 ஹெர்ட்ஸ்ல் ஒருங்கிணைந்தது.
இந்த ஒலியை விஞ்ஞானிகள் பதிவு செய்தனர். கொசுக்களின் காதல் கீதத்தைக் கேட்க இங்கே அழுத்தவும்.
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி
- விவரங்கள்
- ஆதி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உடலில் வரிவரியாக பளிச்சென்ற வண்ணத்தில் இருக்கும் கம்பளிப் புழு, அதைவிட வனப்புமிக்க வண்ணத்துப்பூச்சியாக மாறுவதற்கு தன்னையே அழித்துக் கொள்கிறது. இந்த 'உருமாற்றம்', இயற்கையில் பொதிந்துள்ள எத்தனையோ ஆர்வத்தைத் து£ண்டும் அம்சங்களில் ஒன்று மட்டுமே.சமீபத்தில் காந்தி கிராமம் சென்றிருந்தேன். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்கு அழகான பெயர் உண்டு. பகலில் வேலைகளை முடித்துவிட்டு மாலையில் ஓய்வெடுக்கத் திரும்பும் இடம் என்று பொருள்படும் வகையில், 'அந்தி சாய்ந்த பிறகு' (பிஹைன்ட் எ சன்செட்) என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டில் பல சுவாரசியமான விஷயங்கள் இருந்தன. என்னை ஆச்சரியப்பட வைத்த விஷயம் ஒரு வண்ணத்துப்பூச்சிக் கூடு. முட்டையில் இருந்து வெளிவரும் கம்பளிப் புழு, உணவாகக் கொள்ளும் தாவர இலைகளின் அடிப்புறத்தில்தான் வண்ணத்துப்பூச்சிகள் சாதாரணமாக முட்டையிடும்.
ஆனால் ஒரு கூட்டுப்புழுவின் கூடு அந்த வீட்டு முன் மரக்கதவில் ஒட்டிக் கொண்டிருந்ததுதான் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மற்றொரு கூடு வரந்தா கிரில் கம்பிகளில் ஒட்டிக் கொண்டிருந்தது. மனிதர்களின் வாழ்நிலையை ஒட்டி சில உயிரினங்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை தகவமைத்துக் கொள்கின்றன. அதன் ஒரு பகுதி இது என்று நினைக்கத் தோன்றியது. கல்லு£ரியில் படித்தபோது செடிகளில் ஒட்டிக் கொண்டிருந்த கம்பளிப்புழுக்களின் கூடுகளைக் கண்டது ஞாபகம் வந்தது. பளபளப்பான அந்தக் கூடுகள் விநோதமான தோற்றத்துடன் இருக்கும்.
சாதாரணமாக வண்ணத்துப்பூச்சிகள் இடும் முட்டைகள், நிலவும் வெப்பத்தைப் பொருத்து 3 முதல் 12 நாட்களில் பொரிந்துவிடும். பிறகு, அதிலிருந்து உருவாகும் வண்ணமயமான முதல்நிலைப் புழு, தாவர இலைகளை வட்டவட்டமாகக் கடித்து உண்ணும். இருவாரங்கள் இலைகளை உண்ட பின், 2 அங்குல நீளமுள்ள கொழுகொழு கம்பளி புழுவாக அது வளர்ந்துவிடும். இந்த வண்ணமயமான கம்பளிப்புழுவின் பின் பாகத்தில், இரண்டு கொக்கிகள் போன்ற பகுதி இருக்கும். இதன்மூலம் வசதியான ஓர் இலையின் அடிப்புறம் ஒட்டிக்கொண்டு, கம்பளிப் புழு தலைகீழாக தொங்க ஆரம்பிக்கும்.
அதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது ரொம்ப முக்கியமான பகுதி. கம்பளிப்புழு உருமாற்றத்தின் முக்கிய கட்டத்தை எட்டப் போகிறது. தன்னையே அழித்துக் கொள்ளப்போகிறது. தன் தோலை சிறிதுசிறிதாக இழந்து கூட்டுப்புழுவாக மாறும். இந்த உருமாற்றம் சில மணி நேரங்களில் நடந்துவிடும். கவிழ்ந்த பூஞ்சாடி போன்ற இந்த கூட்டுப்புழுவைச் சுற்றி, மெழுகுபடலம் போன்ற மெல்லிய தோல் இருக்கும். நாளாகநாளாக, இந்த தோல் கண்ணாடி போல வெளிப்படையாகி, உள்ளிருப்பது தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கும்.
இரு வாரங்களில் இந்த கூட்டுப்புழு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறிவிடும். அதன்பிறகு கூட்டின் தோல் பகுதியை கிழித்து வெளிவரும். தன் வயிற்றுப்பகுதியில் உள்ள ரத்தத்தின் மூலம் சத்தைப் பெறும் வண்ணத்துப்பூச்சி, இறக்கைகளை மெதுமெதுவாக விரிக்கும். உடலிலுள்ள கூடுதல் திரவப் பொருட்களை வெளியேற்றும். தன் இறக்கைகள் காயவும், உறுதியாக மாறவும் காத்திருக்கும். என்னதான் அதன் இறக்கைகள் எடை குறைவாக இருந்தாலும், உடனடியாக பறக்க முடியாது.
முட்டையிட்டது முதல் வண்ணத்துப்பூச்சி பிறக்கும் வரை மொத்த நடைமுறை நடந்து முடிய ஒரு மாதம் ஆகும். ஒரு நாள் அதிகாலை நான் அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி கூட்டை கிழித்து, பிறந்துவிட்ட தகவல் கிடைத்தது. வண்ணத்துப்பூச்சி பிறந்தவுடன் பறக்க முடியாது என்பதை நேரடியாகப் பார்த்தேன். அந்த வண்ணத்துப்பூச்சி நீண்டநேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் இறக்கைகள் கூட்டின் உள்ளே இருந்ததுபோல, உட்புறமாக வளைந்து இருந்தன. இறக்கை விரிய நேரம் ஆனது. அதன் இயல்பை தொந்தரவு செய்யக்கூடாது என்பதால் யாரும் அதைத் தொடவில்லை.
காலையில் பிறந்த அந்த வண்ணத்துப்பூச்சி, மாலை நான் வீடு திரும்பியபோதும் முன்னறையிலேயே ஓரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை எத்தனையோ அதிசயங்களை தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. அழகு மிகுந்த, நுணுக்கமான இதுபோன்ற வண்ணத்துப்பூச்சியை மனிதனால் உருவாக்க முடியுமா என்ற கேள்வியை, இயற்கை என்றென்றைக்கும் நம்மைப் பார்த்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது.
அனுப்பி உதவியவர்: ஆதி
- நன்னீரைத் தேடும் கடல் பாம்புகள்
- சுறாவுக்கு எத்தனைப் பற்கள்?
- அணில் ஏன் விழுவதில்லை
- நச்சுத் தாவரம் நம்பர் ஒன்
- பூச்சிகளை விழுங்கும் தாவரம்
- திட்டம் தீட்டும் சிம்பன்ஸி
- கடன் வாங்கும் ஆர்க்கிட் செடி
- சிலை வடிக்கும் சிலந்தி
- நாய்கள் குரைப்பதேன்?
- கல்பாசி விவசாயம்
- நீர்யானையின் சொந்தம் பன்றியா திமிங்கலமா?
- கிளிக்கு சாயம் போனால் என்னாகும்?
- சயனைட் அருந்தும் யானைகள்?
- கிட்டிவேக் எனும் ஏகபத்தினிவிரதன்
- இரவில் பூனைக்கு கண் தெரிவது எப்படி?
- ஊர்வன
- உயிர்த்தெழும் செடி
- பல்லுயிரியம் (Biodiversity) - ஏன்? எதற்கு? எப்படி?
- மாமிசம் திண்ணும் செடிகள்!
- மலைகள் சார்ந்த கானகங்கள்