கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிரியல் அடிப்படையில் நாய்களைத் தவிர பிற விலங்குகள்கூட குரைக்கின்றன என்கிறார் கேத்ரைன் லார்ட். இவர் மசாசூசட்ஸ் பல்கலைக்கழக பரிணாம உயிரியல் வல்லுநர். இதற்கான காரணங்களை ஆராய்வதற்கு நாம் 10,000 ஆண்டுகள் பின்னோக்கிப் போகவேண்டியுள்ளது. அண்மையில் இவர் Behavioural Processes என்னும் இதழுக்கு அளித்துள்ள கட்டுரையில் ‘மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் அதிகமாகக் குரைக்கிறது’ என்பது மட்டும்தான் வேறுபாடு என்கிறார். மேலும், நாய் குரைத்தலில் அடங்கிய ஒலிநுட்பக் கூறுகளையும் இந்தக் கட்டுரை விளக்கியுள்ளது.
‘குரைத்தல் என்பது நாய்க்கும் மனிதர்களுக்கும் இடையேயான ஒரு தகவல் பரிமாற்றம் அல்ல: நாயின் மனப்போராட்டத்தின் வெளிப்பாடுதான் குரைத்தல் என்பது’ என்கிறார் இந்த ஆய்வாளர். அதாவது குரைத்தல் என்பது “எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்” “நான் விளையாடப் போக வேண்டும்” என்று கூறுவதைப்போல் அல்ல என்பதுதான் இந்த ஆய்வின் சாரம். குரைத்தல் ஒரு கும்பலின் குரல் வெளிப்பாடு. அதை ஒரு கும்பல் நடத்தையாகக் கருதலாம். ஒரு கும்பல் அதனுடைய நடத்தையை குரல் மூலம் வெளிப்படுத்துகிறது என்பதுடன் குரைப்பதை ஒரு கூட்டுறவின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஒரு அந்நியன் அத்துமீறி எதிர்ப்படும்போது ‘அங்கேயே நின்று தன்னுடைய குட்டிகளைக் காப்பாற்றுவதா’ அல்லது ‘தப்பித்து ஓடுவதா’ என்ற இரண்டு மனப்போராட்டங்களின் வெளிப்பாடு அது. தன்னுடைய இனத்தவர்கள் தனக்குத்துணையாக சேர்ந்துகொள்ளும்போது குரைத்தல் கும்பல் நடத்தையாகிப்போகிறது. இந்த ஓசை அத்துமீறி வருபவரை திரும்பி ஓட வைக்கிறது.
நாய்கள் மனிதர்களை அண்டிவாழும் பழக்கம் 8,000 முதல் 10,000 ஆண்டுகள் பழமையானது. மனிதர்கள் ஒதுக்கித்தள்ளும் உணவுப்பொருட்களுக்காகவே இவை ஆரம்பகாலத்தில் மனிதனை அண்டி வாழத்தொடங்கின. அக்காலத்தில் எதிரி எதிர்ப்படும் ஒவ்வொரு முறையும் ஒரு மைல்தூரம் தூரம் ஓடி ஒளிந்து கொள்ளும் இயல்புடன் நாய்கள் இருந்திருக்க வேண்டும். காலப்போக்கில் எதிராளியை எதிர்த்து நிற்கும் நாய்களுக்கு வெகுமதியாக மனிதர்களிடமிருந்து உணவு கிடைக்கத் தொடங்கியது. அந்த உணவை மற்ற நாய்களுடன் முந்திக்கொண்டு பெற்றுக்கொள்ளும் முயற்சியில் மனிதர்களை நாய்கள் அண்டி வாழத்தொடங்கின. அச்சத்தினால் ஒதுங்கிய நாய்கள் காலப்போக்கில் அழிந்தொழிந்தன. அச்சம் தவிர்த்த நாய்கள் மனிதர்களை அண்டி, உண்டு வாழ்கின்றன. வேலிக்கு மறுபுறம் நிற்கும் ஒரு மனிதனைப் பார்த்தவுடன், நாயின் மனதில் ஒரு வியப்பும், அச்சமும் ஏற்படுகிறது. மனிதனை நெருங்கவோ, மனிதனைவிட்டு விலகி ஓடவோ முடியாத மனவெழுச்சி தோன்றும்போது அது குரைத்தலாக வெளிப்படுகிறது.
இவரது கட்டுரையில் குரைத்தலை வகைப்படுத்தும் பல்வேறு அளவீட்டுக்கூறுகளை ஆராய்ந்துள்ளார். ஸ்தாயி (tonality) எனப்படும் குரல் தரவரிசை, இரைச்சல்(noise), சுருதி (pitch), ஒலியின் கேட்கும் அளவு (volume), வீச்சு (amplitude) எதிர்பாராஒலி (abrupt onset), ஒலித்துடிப்பின் கால அளவு (pulse duration) ஆகிய ஒலியின் அளவீட்டுக்கூறுகளை இவரது கட்டுரை ஆராய்ந்துள்ளது.
குரைத்தல் என்பது செய்திகளின் பரிமாற்றச்செயல் அல்ல. குறைந்த கால அளவிற்கு உரத்த குரலில் எழுப்பப்படும் ஒலி என்பதுதான் குரைத்தலின் இலக்கணமாகும். இது இரைச்சல், தொனி என்னும் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. விலங்குகள் எழுப்பும் பிற ஓசைகளில் இருந்து குரைத்தல் தனித்துவம் வாய்ந்தது. இந்த இலக்கணத்தை விரிவுபடுத்துபோது நாய் இனம் மட்டுமன்றி பறவைகள், பாலூட்டிகள் இனத்தைச் சேர்ந்த குரங்குகள், எலிகள், மான்கள் இவையும் குரைப்பதாக கொள்ளலாம். சிக்கலான மனவெழுச்சிகளில் பிற விலங்குகளும் குரைக்கின்றன என்பதுதான் ஆய்வர்களின் முடிவு. ஆனால் செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுடைய செல்லப்பிராணிகள் உணவு கேட்டு குரைப்பதாக நம்மிடம் சொல்லுவார்கள். நாய்கள் அறிவுத்திறன் மிக்கவை. தூண்டல்-துலங்கல், காரண-காரிய விளைவுகளை அவைகள் நன்றாக கற்றுக் கொள்கின்றன. தன்னை வளர்ப்பவர் சரியான நேரத்திற்கு உணவு கொடுப்பார் என்று தெரிந்து கொண்டால் அவை குரைப்பதில்லை.
தகவல்: மு.குருமூர்த்தி
இன்னும் படிக்க:http://www.sciencedaily.com/releases/2009/07/090714210137.htm
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கல்பாசி காட்டுப் பகுதிகளில் பாறைகளில், மரக்கிளைகளில், பனை தென்னை மரங்களின் மீது தேமல் பட்டதுபோல படர்ந்து வளரும் பாசி. பாசி என்று அழைத்தாலும் இது உண்மையில் இரண்டு உயிரினங்கள் இணைந்து நட்பு வாழ்க்கை நடத்தும் "ஓருடம்பு ஈருயிர்கள்' ரகம். கிட்டத்தட்ட 1000 வகை கல்பாசிகள் உலகில் உள்ளன.
ஒரு உயிரி பூஞ்சனம், இன்னொன்று நீலப்பச்சைப்பாசி. பாசியை ஃபோட்டோ பயான்ட் என்பார்கள், பூஞ்சனத்தை மைக்கோபயான்ட் என்பார்கள். பாசி ஒளிச்சேர்க்கை செய்து சக்தி தருகிறது. பூஞ்சனம் வாழ இடத்தை உண்டுபண்ணித் தருகிறது. ஆயிரம் வகை கல்பாசிகள் பல்வேறுவிதமான பூஞ்சனங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், அதில் 4 வகை பாசிகள்தான் திரும்பத்திரும்பக் காணப்படுகின்றன. குறிப்பாக ரைசோனீமா என்ற நீலப்பச்சப் பாசிதான் அதிகம். இதை முதலில் சைட்டோனீமா என்று தவறாக கருதிவந்தார்கள், டி என் ஏ சோதனை மூலம் ரைசோனீமா என்பது முடிவாயிற்று.
பல்வேறு வகையான பூஞ்சானங்கள் ஒரே வகைப் பாசியை துணையாகக் கொண்டு வாழ்வதைப் பார்க்கும்போது, பரிணாமத்தில் பூஞ்சானங்கள் தம்மிடையே பாசிகளை பங்கிட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. ஆரம்ப காலத்தில் விவசாயிகள் தமக்குள் விதைகளை பகிர்ந்து கொண்டார்கள். அதுபோல பூஞ்சனங்களும் பாசிகளைப் பகிர்ந்துகொண்டு பல்லுயிர் ஓம்பின என்று தெரிகிறது.
- முனைவர். க. மணி, பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உடல் புறத்தோற்றம், எலும்பமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலங்குகளை வகைப்படுத்துவது பழங்காலம். அதனடிப்படையில் நீர்யானையை பன்றிக்கு நெருங்கிய உறவாகக் கருதிவந்தார்கள்.
டி.என்.ஏ.வின் ஒற்றுமை அடிப்படையில் ஆராய்ந்ததில் நீர்யானையும் கடலில் வாழும் பாலூட்டியாகிய திமிங்கலமும்தான் நெருங்கிய உறவுகள் என்று ஜெஸ்ஸிகா தியடோர் (கால்காரி பல்கலைக்கழகம்) கண்டுபிடித்திருக்கிறார். நீர்யானைகள் எப்போதும் நீரில் இருந்தே காலத்தைக் கழிக்கின்றன. நிலத்தில் கொஞ்ச நேரம் நடந்தாலும் தண்ணீரைக் கண்டதும் அவற்றின் குஷியே தனி.
- முனைவர் க.மணி
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பச்சை உடம்பில் சிவப்பு மூக்கு. கிளிக்கு யார் வர்ணம் பூசியது? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுமுன், ஏன் பறவைகளுக்கு அத்தனை கவர்ச்சியான நிறங்கள் தேவைப்படுகின்றன? எஸ்த்தர் என்ற பெண்மணி (நேச்சுரல் ஹிஸ்ட்ரி மியூசியம், பார்சிலோனா, ஸ்பெயின்) பறவைகளின் கண்களைப் பறிக்கும் நிறங்கள் அவற்றின் உடல் ஆரோக்கியத்தை விளம்பரப்படுத்துகின்றன என்கிறார். ஜோடி தேர்ந்தெடுப்பதற்கு இந்த விளம்பரம் தேவைப்படுகிறதாம்.
பறவைகளிடம் காணப்படும் இரத்தச் சிவப்பு, கமலா ஆரஞ்சு நிறங்களுக்குக் காரணமாக உள்ள பொருள் கெரோட்டினாய்டு ஆகும். கேரோட்டினாய்டு நிறத்துக்கு மட்டும் காரணமாக இல்லாமல் வெயிலுக்குப் போர்வையாகவும், உடலில் ஆக்சிகரணத்தால் ஏற்படும் நச்சுகளை அகற்றுவதற்குப் பேருதவியாகவும் உள்ளது. எனவே நிறம் உடலின் ஆரோக்கியத்தின் சின்னமாக இருக்கின்றன.
எஸ்த்தரின் கண்டுபிடிப்பு இன்னும் கொஞ்சம் ஆழமானது. இதுவரை, இறகின் நிறங்கள் இறகிலேயே உற்பத்தி செய்யப்படுவதாகக் கருதப்பட்டு வந்தது எஸ்த்தரின் ஆய்வுப்படி பறவைகளின் கல்லீரலில் கேரோட்டினாய்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு இரத்தம் வழியாக சிறகு முளைக்கும்போது வழங்கப்படுகிறது என்று தெரிகிறது. உடல் ஆரோக்கியம் குறைந்தால் உடனே அது சிறகின் நிறத்தில் வெளிப்பட்டு காட்டிக் கொடுத்துவிடுகிறது. சாயம்போன கிளியை யார் மதிப்பார்கள்?
- முனைவர் க.மணி