காட்டுயிர்கள் – மனிதர்கள் மோதல்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரை ஒட்டியுள்ள ஊர்களில் யானை-மனிதர்கள் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. மனிதர்கள்-காட்டுயிர்கள் இடையிலான மோதல் எல்லா காலத்திலும் நடந்து வந்திருக்கிறது. காட்டுயிர்கள் நாட்டுக்குள் நுழைகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் காடுகள்-காட்டுயிர் உறைவிடங்கள்-வலசை பாதைகள் ஆக்கிரமிக்கப்படும், அடைத்துக் கொள்ளப்படும் நிலையில்தான் இது நடக்கிறது.
உண்மையில் பாரம்பரியமாக அவை உலவி வந்த பகுதியிலேயே காட்டுயிர்கள் இன்றும் உலவி வருகின்றன. ஆனால், நாமோ அவற்றின் இடத்தைப் பிடித்துக் கொண்டு அவற்றின் மீதே குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கிறோம். காட்டுயிர்கள்-மனிதர்கள் இடையிலான மோதல் தொடர்பாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது.
மேற்கு வங்கம், ஒரிசா, நீலகிரி பகுதிகளில் யானைகள்-மனிதர்கள், மகாராஷ்டிராவில் வெளிமான், சிறுத்தை-மனிதர்கள், ஆமைகள்-மீனவர்கள் இடையிலான மோதல்கள் குறித்து இத்திட்டத்தில் ஆராயப்பட உள்ளது.
நிலப் பயன்பாட்டு முறை, தாவரங்களின் வகை, காட்டுயிர்களின் வகைகள், மோதலுக்கான அடிப்படைக் காரணம் போன்றவற்றைக் கொண்டு மோதல் நடக்கும் பகுதிகளின் வரைபடம் தயாரிக்கப்படும். யானைகளின் உறைவிடங்கள், உறைவிடங்களின் இன்றைய நிலை, உறைவிடங்கள் துண்டாவதை மீட்டெடுப்பதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி இந்தத் திட்டத்தில் ஆராயப்படும். சமூகவியல் சார்ந்த இந்த ஆராய்ச்சியில் மக்கள் பார்வை என்ன, மோதலை மட்டுப்படுத்துவதற்கான வழி என்ன என்பதை பரிந்துரை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. யானை ஆராய்ச்சியாளரும் ஐ.ஐ.எஸ்சி சூழலியல் அறிவியல் மையத்தின் தலைவருமான ராமன் சுகுமார் இந்த ஆராய்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.
வன உரிமைச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இந்தத் திட்டத்தில் ஆராயப்பட உள்ளது. நார்வே அரசு இந்தத் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கிறது. இது போன்ற ஆராய்ச்சிகள் பிற காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களுக்கும், காட்டுயிர் நிர்வாகிகளுக்கும் பெரிதும் உதவும். மக்களின் புரிதலை மேம்படுத்த முடியும்.
பாதுகாக்கப்படவேண்டிய கடியால் முதலைகள்
- இந்தியாவுக்கே உரித்தான கடியால் எனப்படும் நன்னீர் முதலைகள், நன்னீர் ஓங்கில்களின் (டால்பின்) கடைசி உறைவிடங்களில் ஒன்றான ராஜஸ்தானில் உள்ள சம்பல் நதியின் மீது நான்கு அணைகள் கட்டும் திட்டத்துக்கு தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
சதுப்புநில முதலைகளைப் போலன்றி கடியால் முதலைகள் மற்றும் நன்னீர் டால்பின்கள் வாழ்வதற்கு சலசலத்து ஓடும் தண்ணீர் அவசியம். இந்த அணைகள் அமைக்கப்பட்டால் இரண்டு அரிய உயிரினங்களும் அழிய நேரிடும் என்று இது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட இரு நபர் குழு கொடுத்த அறிக்கையால் அணைகள் தடுக்கப்பட்டுள்ளன. கடியால், ஓங்கில்களை பாதுகாப்பதைக் காட்டிலும் அணைகள் அளிக்கும் பலன்கள் உயர்ந்ததல்ல என்று அக்குழு தெரிவித்திருக்கிறது. கடியால் முதலை அழியும் ஆபத்தில் உள்ளது. கடலுக்கு மாறாக, நதிகளில் வாழும் டால்பின்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. எனவே, இயற்கையாகவே அவை வாழும் பகுதிகளில் அவற்றை பாதுகாப்பது அவசியம்.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்கெனவே கட்டப்பட்ட மூன்று அணைகளால் அங்கு வாழ்ந்து வந்த இரண்டு உயிரினங்கள் அப்பகுதியில் இருந்து அழிந்து விட்டிருக்கின்றன.
சயனைட் அருந்தும் யானைகள்?
- கர்நாடகாவில் உள்ள நாகர்ஹோளே, பந்திபூர் தேசிய பூங்காக்களுக்கு அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில் நான்கு யானைகள் சயனைட் விஷத்தால் இறந்தன. இப்பகுதி மைசூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
மாநிலத்தில் யானைகள் இயற்கைக்கு மாறான வகையில் அதிக எண்ணிக்கையில் இறப்பது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொண்டதன் அடிப்படையில், இது தொடர்பாக ஆராய குழுவை அமைக்குமாறு வனத்துறையை கேட்டுக் கொண்டிருந்தது. இது தொடர்பாக கர்நாடக வனத்துறை உத்தரவிட்டிருந்த வேதிப் பகுப்பாய்வு, அவை சயனைட் விஷத்தால் இறந்ததை உறுதி செய்கிறது.
சயனைட் விஷம் தாவரங்களில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார் குழுவில் இடம்பெற்றுள்ள கால்நடை மருத்துவர் டி. கோபால். சயனைட் உடலில் சேர்ந்ததற்கான காரணத்தை இப்பொழுது உறுதிப்படுத்த முடியாது என்று யானை ஆராய்ச்சியாளர் ராமன் சுகுமார் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் தயாரித்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
நஞ்சன்கூட்டை ஒட்டிய காடுகளில் ஆயிரம் யானைகள் இருக்கின்றன. உணவு தேடி அருகேயுள்ள வயல்களில் அவை உலா வருகின்றன. பலாப்பழம், வாழைப்பழம் கனியும் நேரத்தில், நெற்கதிர் அறுவடை காலத்தில் மோப்பம் பிடித்து உணவு தேடி அதிகம் வருகின்றன. இவற்றைத் தடுப்பது கடினமாக இருக்கிறது என்கிறார்கள் இப்பகுதி விவசாயிகள். இதனால் யானைகளின் வரவைத் தடுக்க யாராவது சயனைட் விஷம் வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான், இயற்கைக்கு மாறாக யானைகள் இறப்பது தொடர்பாக ஆராய உத்தரவிடப்பட்டிருந்தது.
மேற்கு வங்கத்தில் செய்தது போன்று யானைகளின் நகர்வைக் கண்டறிய வானொலி அலைகளைப் பயன்படுத்துவது பலனளிக்கும் என்கிறார்கள் ஆலோசகர்கள். இதன்மூலம் யானைகள் வருவதை விவசாயிகள் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.
இயற்கைவளம்-பழங்குடிகள்
ஒரிசா மாநிலம் நியம்கிரி மலை காட்டுப் பகுதியில் உள்ள சீமல்பட்டா பழங்குடி மக்கள் "வெண்டாட்டா அலுமினா" நிறுவனத்துக்காக பாக்சைட் வெட்டியெடுக்க சுரங்கத்துக்குச் சென்று கொண்டிருந்த எர்த்மூவர்களை ஜனவரி 7ந் தேதி தடுத்து நிறுத்தினர். அலுமினியம் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவைப்படும் பாக்சைட்டை வெட்டியெடுக்க அந்நிறுவனம் மலைப்பகுதியின் உச்சிக்குச் சென்றதே இதற்குக் காரணம்.
அந்த மாதத்தில் மட்டும் அந்நிறுவனம் இரண்டாவது முறையாக மலை உச்சிக்குச் செல்ல முயற்சித்துள்ளது. அருகிலுள்ள லாஞ்சிகர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அந்த எர்த்மூவர்கள் வந்துள்ன. அதிகாலை 3.30 மணிக்கு 800 பழங்குடி மக்கள் மனிதச்சுவராக மாறி அவற்றைத் தடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் சுரங்கம் காரணமாக வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படாத நெருக்கடி நிலை இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தங்கள் நிலத்தையும் வேலையையும் இழந்த பழங்குடிகள் ஆத்திரமடைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். முன்னதாக அந்நிறுவனத்துக்குச் செல்லும் தண்ணீர் இணைப்பையும் பழங்குடிகள் துண்டித்தனர்.
என்றும் அழியாத காடு?
- மத்தியப் பிரதேசத்தில் உள்ள பைகா பழங்குடி மக்கள் காட்டை அழிக்கும் வனத்துறைக்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். பைகாசாக் பகுதியில் உள்ள பல ஊர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றன.
"என்றும் அழியாத அம்சம் கொண்டது காடு" என்ற நம்பிக்கையும் அது சார்ந்த பழமொழியும் எங்கள் மக்களிடையே உண்டு. ஆனால் இன்று ஒவ்வொரு மரஇனமாக எங்கள் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. முதலில் இந்தக் காடுகளில் இருந்து சின்ஹார் எனப்படும் ஒட்டகப் பாதம் என்ற கொடியும், அடுத்து மூங்கிலும் அழிந்தன. தற்போது சால் மரங்களும் அழியத் தொடங்கிவிட்டன. பாதுகாக்க முயற்சி எடுக்கவில்லை என்றால் ஒரு நாள் காடு மொத்தமும் அழியத் தொடங்கிவிடும்” என்கிறார் பழங்குடிகளில் ஒருவரான நாங்கி பாய்.
120 செ.மீ. சுற்றளவுக்கு வளர்ந்த சால் மரங்களை வனத்துறை வெட்டுகிறது. அந்தச் சுற்றளவுக்குப் பிறகு மரங்கள் பெரிதாக வளராது என்கிறார்கள் அதிகாரிகள். 25 ஆண்டுகளில் இந்த வளர்ச்சியை எட்டிவிடும் சால் மரங்கள், அதற்குப் பிறகும் நீண்ட காலம் வளரும் என்கிறார்கள் பழங்குடிகள். வயதான மரங்களில்தான் பறவைகள், பற்றியேறும் கொடிகள், காட்டுயிர்கள் வாழும் என்கிறார் அவற்றோடு ஒட்டி உறவாடும் ரஞ்ச்ராவைச் சேர்ந்த லல்லா சிங். சிந்த்வாடாவில் உள்ள வனத்துறை மனிதவள மையத்தின் இயக்குநரும் தாவரவியல் அறிவுடையவருமான சுனில் பக்ஷியோ, "சால் மரங்கள் 100 ஆண்டுகள் வரை வாழும். ஆனால் 120 செ.மீ. வளர்ந்த பிறகு, அந்த மரங்கள் உள்ளீடற்ற கடின மரமாகி விடும். இதனால் மரத்தின் மதிப்பு குறையும்" என்கிறார்.
அறிவியல் ரீதியில் வாழும் மரத்தின் மதிப்பைக் கணக்கிட்டுப் பார்க்க வேண்டிய வனத்துறை, மரங்களை வெட்டி வெறும் காசாக்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறது. சுற்றுச்சூழலின் மதிப்பை இப்படித் தட்டையாகப் புரிந்து கொள்கிறது வனத்துறை. காலங்காலமாக காடுகளைக் காத்து வரும் பழங்குடிகளின் அறிவு மேம்பட்டிருப்பது இந்த நடவடிக்கையிலும் வெளிப்பட்டுள்ளது. விதிமுறைப்படியும், தங்கள் ஆலோசனைகளின் பேரிலும்தான் மரங்களை வெட்ட வேண்டும் என்கிறார்கள் பழங்குடிகள், நியாயமான கோரிக்கை.
தொகுப்பு: ஆதி வள்ளியப்பன், பூவுலகின் நண்பர்கள்