இது ‘திட்டமிட்ட கொலை', எதிர்க்கட்சியினரின் ‘திட்டமிட்ட சதி' என்றெல்லாம் சொல்கிறோம். மனிதர்கள்தான் இப்படி செய்கிறார்கள். மிருகங்கள்? புழு, பூச்சிகளும்; பறவை பாம்புகளும் நடப்பது நடக்கட்டும் என்று எதிர்காலத்தை இயற்கைக்கே விட்டுவிடுகின்றன. நாளைய பொழுதை நாளையே பார்த்துக் கொள்ளட்டும் என்பது மிருக சித்தாந்தம். மனிதர்கள் அப்படியில்லை, காலை விடிந்தவுடன் என்னென்ன செய்வது என்பதை முதல்நாள் இரவிலேயே திட்டமிடுகிறார்கள். இரண்டாம் வகுப்பு படிக்கும் பையன்கூட டைம் டேபிளைப் பார்த்து நாளைக்குத் தேவையானபுத்தகங்களைப் பையில் அடுக்கி வைத்துவிட்டுத்தான் தூங்குகிறான்.

மனிதருக்கு மட்டும்தான் திட்டமிடத் தெரியும்; நேற்று, இன்று, நாளை என்கிற கால அறிவு மனிதருக்கு மட்டும்தான் உண்டு என்றும் நாம் நினைக்கிறோம். சிம்பன்ஸிகளும் அந்த நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, வேண்டியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்கின்றன. ஸ்வீடனில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில், சிம்பன்ஸியின் நடவடிக்கையில் மனிதரைப் போல திட்டமிடும் அறிவு காணப்பட்டது. தினமும் காலை 11 மணிக்கு ஒரு ஆண் சிம்பன்ஸி கடுங்கோபத்துடன் நிலைகொள்ளாமல் தவித்தது. யானைக்கு மதம் பிடிப்பதுபோல தலைமை பதவி வகிக்கும் ஆண் சிம்பன்ஸிகளிடம் இப்படி ஒரு தவிப்பு காணப்படும். அப்படி எல்லாம் கலாட்டா செய்யாவிட்டால் அதுதான் தலைவன் என்று மற்ற சிம்பன்ஸிகள் ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சிம்பன்ஸி தனது அதிகாரத்தை சக உறுப்பினர்களிடம் காட்டுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், பார்வையாளர்கள் மீதும் கல் வீசி தாக்குகிறது. நல்லவேளையாக அதன் குறி படு மோசமாக இருந்ததால் பார்வையாளர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். கல்வீசும் குரங்குத் தலைவனுக்கு, விடிந்ததும் விடியாததுமாக முக்கியமான வேலை, கல் பொறுக்குவதுதான். மத்தியானம் நடத்தவிருக்கும் கலாட்டாவுக்குத் தேவையான ஆயுதங்களை தயார் செய்ய வேண்டாமா? முன்ஆயத்தம் செய்யும் குணம் சிம்பன்சிகளிடம் காணப்படுவது புதிது.

- முனைவர் க.மணி

 

Pin It