கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இந்தியாவின் மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் இருப்பது போல, தென்னமெரிக்காவில் ஆன்டீஸ் மலைத்தொடர் உள்ளது. கிழக்கில் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகளில் பூமியின் மிகப் பெரிய அமேசான் நதி ஓடுகிறது. மேற்கில் பெரும் பரப்பில் அட்டகாமா (Atacama) பாலைவனம் அமைந்துள்ளது. அட்டகாமாவின் சிறப்புகள் அனைத்தும் அதன் தனித்தன்மையால் உலகப் புகழ் பெற்றவை.
சராசரி 600 மீட்டர் உயரமுள்ள இந்த பாலைவனத்தில் 4,000 மீட்டர் வரை உயரமுடைய பிரதேசங்கள் அமைந்துள்ளன. வடக்கு சிலி, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் இப்பாலைவனம் பரவியுள்ளது. துருவப் பகுதிகளைத் தவிர உலகில் மிக வறண்ட பாலைவனமாக இது கருதப்படுகிறது. இந்த அளவு கடுமையான வறட்சி உள்ளபோதும், பல தாவரங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. பசுபிக் கடலோரம் அமைந்துள்ள இது கேரள மாநிலத்தின் பரப்பைப் போல இரண்டரை மடங்கு பெரியது.
ஹம்போல்ட் நீரோட்டம்
மிகக் குறைவான மழை மட்டுமே பெய்யும் இந்தப் பாலைவனத்தின் சில பகுதிகளில் வரலாற்றில் ஒரு முறை கூட மழை பெய்ததாகப் பதிவுகள் இல்லை.
தென்னமெரிக்காவின் மேற்கில் நிலநடுக்கோட்டுத் திசையில் அட்டகாமாவின் வட பகுதியில் கரையில் இருந்து 500 - 1,000 கிலோமீட்டர் தூரத்தில் கிழக்கு நோக்கி ஹம்போல்ட் அல்லது குளிர் நீரோட்டம் என்று அழைக்கப்படும் நீரோட்டம் செல்கிறது. குறைந்த உவர் தன்மையுடைய நீரால் ஆன இத்தகையவை ஹம்போல்ட் நீரோட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இதில் அடங்கியிருக்கும் குளிர்ந்த நீரும் அதனுடன் வீசும் காற்றும் மழைமேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதுவே இப்பகுதி ஒரு பாலைவனமாக மாறக் காரணம். இது தவிர அமேசான் கரையில் இருந்து ஈரப்பதம் உடைய வாயு இப்பகுதிக்கு வராமல் ஆண்டீஸ் மலைத்தொடர் தடுத்து நிறுத்துகிறது. இதனால் இப்பகுதி முழுமையான ஒரு பாலைவனமாக மாறியது.
ஆய்வுகளின் பரிசோதனைக்கூடம்
கடும் வறட்சி, மிகக் குறைவான தாவரங்கள், தாதுக்கள் அடங்கிய வளமான நிலப்பகுதி ஆகியவற்றால் இந்த இடம் செவ்வாய் கோளின் நில மேற்பரப்பை ஒத்துள்ளது. இதனால் நாசாவும், மற்ற விண்வெளி நிறுவனங்களும் இப்பாலைவனத்தை செவ்வாயில் பயணிக்கும் ஊர்தி வாகனங்கள் (rowers) மற்றும் பிற கருவிகளைப் பரிசோதித்துப் பார்க்கும் தளமாக பயன்படுத்துகின்றன. கடினமான வாயு மண்டலம் உள்ளதால் இது போன்ற இடங்களில் நிலவும் சூழ்நிலையை சமாளித்து வாழ உதவும் வாழ்க்கை முறை பற்றி ஆராயும் இடமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.
வறண்ட நிலப்பகுதியாக இருந்தாலும் அட்டகாமாவில் பலதரப்பட்ட சூழல் மண்டலங்கள் காணப்படுகின்றன. இதில் உவர் நிலப்பரப்புகள், உப்பு தடாகங்கள், வெப்ப நீரூற்றுகள், தாவரங்கள் வாழவே முடியாத அளவு வறண்ட பகுதிகள் போன்றவை அடங்கும். கடற்கரைப் பகுதியில் உருவாகும் மூடுபனியில் இருந்து கிடைக்கும் ஈரப்பதத்தைப் பயன்படுத்தி வளரும் சில தனிச்சிறப்புமிக்க தாவரங்கள் மற்றும் விலங்குகளை இங்குள்ள சில பகுதிகளில் காணலாம்.
வான் ஆய்வுகளின் சொர்க்கபூமி
தெள்ளத்தெளிவான வானம், குறைந்த ஈரப்பதம், குறைவான ஒளி மாசு போன்றவை உள்ளதால் இந்த இடம் வான் ஆய்வுகளுக்குப் புகழ் பெற்றது. இங்கு இருந்து இரவில் வானத்தை உற்றுநோக்கும்போது மிகச்சிறந்த வான் காட்சிகளைக் காணலாம். அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர் அரே (ALMA) உள்ளிட்ட பல முக்கிய வான் ஆய்வு கண்காணிப்பு நிலையங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி ஆராய இங்கு நிறுவப்பட்டுள்ளன.
கணிசமான அளவு செம்பு சேகரம் உள்ள இப்பகுதியில் இருந்து சோடியம் நைட்ரேட், லித்தியம், தங்கம், வெள்ளி, போரான் போன்றவை கிடைக்கின்றன. நட்சத்திரங்கள் இல்லாத வானம், கடினமான இடங்களில் உயிர் வாழும் உயிரினங்களின் திறன், தாதுவளம் போன்றவற்றைப் பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.
அட்டகாமாவின் வில்லன்
மனிதனின் கால்தடம் பதியாத தனிமைப்பட்ட அழகு பூமியாக இந்த இடம் உள்ளது என்று கருதினால் அது தவறு! பெருமளவில் உலகின் பல பகுதிகளில் இருந்தும், பயன்படுத்திய பிறகு தூக்கியெறியப்படும் துணிவகைகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. மனிதன் ஆடை பயன்படுத்தும் முறையில் கடந்த சில ஆண்டுகளில் அசுரவேக மாற்றங்கள் நிகழ்கின்றன.
மின்னல் வேகத்தில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபாஷன் எனப்படும் இந்த முறை ஆடை உற்பத்தியை, உடனடியாக மாற்ற வேண்டிய ஒரு முக்கிய சூழல் பிரச்சனை என்று ஐநா கூறுகிறது. 2000-2014ல் உலக ஆடை உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்தது. விற்பனையில் 60% உயர்வு ஏற்பட்டது. ஆனால் முன்பு பயன்படுத்தப்பட்டதில் பாதியளவு துணிகள் மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றன.
இப்போது உற்பத்தி செய்யப்படும் ஆடைகளில் ஐந்தில் மூன்று பகுதியும் உற்பத்தி செய்யப்பட்டு ஒரு ஆண்டிற்குள் தூக்கி எறியப்படுகின்றன. இவை தேவையான முறையில் மறுசுழற்சி செய்ய, புதுப்பிக்கவோ சாத்தியம் இல்லாத இடங்களுக்குப் போய்ச் சேர்கின்றன. அங்கு இவை மலை போல குவிக்கப்படுகின்றன, எரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியும் உலகில் ஒரு டிரக் நிறைய துணிகள் இவ்வாறு கைவிடப்படுகின்றன.
இது போன்ற துணிகள் மலை போல குவிக்கப்பட்டிருக்கும் பல இடங்கள் அட்டகாமாவில் உள்ளன. மிக அழகான இந்த நிலப்பரப்பு வளர்ந்த நாடுகளின் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டும் இடமாக மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழிற்துறை மற்றும் பொருளாதாரத் துறையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சிலி கரையோரம் அமைந்துள்ள இக்யுயிக் (Iquique) துறைமுகத்தை டியூட்டி ஃப்ரீ துறைமுகமாக மாற்றியது.
இறக்குமதி மற்றும் இறக்குமதி செய்பவற்றை புதுப்பித்து ஏற்றுமதி செய்து பொருளாதாரத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கத் திட்டமிடப்பட்டது. இந்த துறைமுகம் தென்னமெரிக்காவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய டியூட்டி ஃப்ரீ துறைமுகம். அந்த நாட்டு மக்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் துணிகள் அங்கு வந்து சேர்ந்தன. ஆனால் நினைத்தது ஒன்று. நடந்தது வேறொன்று.
லட்சக்கணக்கான டன் பயன்படுத்தப்பட்ட, கைவிடப்பட்ட துணிவகைகள் துறைமுகத்தின் வழியாக உள்ளே நுழைந்தது. கடந்த 2022ல் மட்டும் நான்கரை கோடி டன் துணிகள் இங்கு வந்தன. ஆனால் வருவதில் பெரும்பகுதியும் பின்னர் ஒருமுறை கூட பயன்படுத்த முடியாத துணிகளே. நம் ஊர் குப்பைக் கிடங்குகளில் பயன்படக்கூடிய பொருட்களைப் தேடும் மனிதர்கள் போல நல்ல துணிமணிகள் ஏதேனும் உள்ளனவா என்று தேடும் மனிதர்களை இங்கு சர்வசாதாரணமாகக் காணலாம்.
தரம் பிரிக்கப்படும் பாழான துணிகள்
இறக்குமதி செய்யப்படுபவற்றைத் தரம் பிரித்து ஏற்றுமதி செய்வதே இதற்கான திட்டத்தைக் கொண்டு வந்தபோது இருந்த நோக்கம். இதனுடன் தொடர்புடைய தொழிற்பிரிவுகள் இங்கு ஏராளமாக செயல்படுகின்றன. இத்தகைய 2000 பிரிவுகளில் பாதிக்கும் மேற்பட்டவை வெளிநாட்டு உரிமையாளர்களின் கைவசம் உள்ளவை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வரும் துணிகளை ஊழியர்கள் அவற்றின் தரத்திற்கேற்ப வகைப்படுத்துகின்றனர்.
இவற்றில் சிறந்தவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமற்றவற்றை டிரக் டிரைவர்கள் நகரப் பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர். அவை அங்கு மறுபடி தரம் பிரிக்கப்பட்டு உள்ளூர் கடைகளில் விற்கப்படுகின்றன. ல வெஃப்ராடில்லா என்ற ஒரு கடைத்தெருவில் இத்தகைய துணிகளை விற்கும் ஏழாயிரம் கடைகள் உள்ளன. கடைகளில் விற்கப்பட முடியாதவை நேராக பாலைவன பூமியில் கொண்டு போய் மலை போல கொட்டப்பட்டு குவிக்கப்படுகின்றன.
இறக்குமதி செய்யப்படுபவற்றில் பெரும்பகுதி ஒருவிதத்திலும் பயன்படுத்த முடியாதவை. செயற்கை நூலிழைகளால் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஒருபோதும் மக்காமல் ஆண்டுகள் கணக்கில் கொட்டப்பட்ட இடங்களிலேயே கிடக்கின்றன. இந்த பாழ் துணி மலைகள் அளவில் பெரிதாகும்போது எரிக்கப்படுவதும் உண்டு. பாலியெஸ்ட்டர் போன்ற பிளாஸ்டிக் நாரிழைகளால் ஆன துணிகள் அணையாமல் தொடர்ந்து எரியும்.
அழிவில் இருந்து மீட்கப்படுமா இந்த அழகு பாலைவனம்?
கடுமையான நச்சுவாயுப் புகை காற்று மண்டலத்தில் நிறையும். குப்பை போடுபவர்களுக்கு சிலி அரசாங்கம் அபராதம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வந்த போதும் அந்தப் பட்டியலில் தூக்கியெறியப்படும் துணிகள் சேர்க்கப்படவில்லை. புதிய சட்டதிட்டங்கள் கொண்டு வரப்பட்டால் மட்டுமே அட்டகாமா என்ற இந்த அழகு பூமி அழியாமல் பாதுகாக்கப்படும்.
** ** **
மேற்கோள்கள்: https://www.mathrubhumi.com/environment/columns/atacama-desert-fashion-pollutions-eco-story-by-vinay-raj-1.8568581
&
https://www.ecowatch.com/chile-desert-fast-fashion-2655551898.html
&
https://en.m.wikipedia.org/wiki/Iquique
&
https://www.aljazeera.com/gallery/2021/11/8/chiles-desert-dumping-ground-for-fast-fashion-leftovers
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
ஐரோப்பா. பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள மிக உயரமான மாண்ட் ப்ளாங்க் (Mont Blanc) மலைச்சிகரம் 2.2 மீட்டர் குட்டையாகி உள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 2021ம் ஆண்டிற்குப் பிறகு சமீபகாலத்தில் இதுவே இந்த மலையின் மிகக் குறைந்த உயரம். பனி மூடிக்கிடக்கும் பாறைகள் நிறைந்த இதன் உயரத்தை ஹாட்-சேவாய் (Haute-Savoie) பிரதேச நிர்வாகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ட்ரோன் உதவியுடன் அளந்தனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு விவரங்கள்படி இந்த மலையின் தற்போதைய அதிகாரப்பூர்வ உயரம் 4,805.59 மீட்டர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அளக்கப்பட்டபோது இந்த சிகரத்தின் உயரம் 4,807.81 மீட்டர். இந்த உயரம் 2017ல் அளக்கப்பட்டபோது இருந்த உயரத்தை விட சுமார் ஒரு மீட்டர் குறைவு. “2023, இந்த சிகரத்தின் உயரத்தைப் பொறுத்தமட்டும் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்த ஆண்டு” என்று ஆய்வுக்குழு உறுப்பினர் டென்னிஸ் போரல் (Denis Borel) டிஎஃப்1 (TF1) என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த நேர்முகத்தில் கூறியுள்ளார்.
காணாமல் போன நீர்
2021ம் ஆண்டின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது இந்த மலை இப்போது ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தில் இருக்கும் நீரின் அளவிற்கு சமமாக சுமார் 3,500 கன சதுர மீட்டர் நீர் மற்றும் பனிக்கட்டிகளை இழந்துள்ளது. முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இந்த இழப்பு குறிப்பிடத்தக்கது. மாண்ட் ப்ளாங்க் மலைச்சிகரம் குட்டையாகியுள்ளதை ஆல்ப்ஸ் மலைத்தொடர் பனிப்பாறைகள் இழப்பதுடன் ஒப்பிடக்கூடாது என்று காலநிலை விஞ்ஞானிகள் மற்றும் பனிப்பாறை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2001 முதல் 15 முதல் 20 செண்டிமீட்டர் அளவிற்கு மாண்ட் ப்ளாங்க் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளது. என்றாலும் இது ஐம்பது ஆண்டு புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்ட பிறகே இதன் பனிக்கட்டி உருகுதலுக்கும், புவி வெப்ப உயர்விற்கும் இடையில் இருக்கும் தொடர்பை உறுதி செய்ய முடியும் என்று காலநிலை ஆய்வாளர்கள் மற்றும் பனிப்பாறை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தனித்துவம் வாய்ந்த மாண்ட் ப்ளாங்க்
ஐரோப்பிய மலைகளில் இருக்கும் பனிப் போர்வை, காற்று மற்றும் மழைப்பொழிவை பொறுத்து வேறுபடுகிறது. இதன் காலநிலை தனித்துவமானது என்பதால் மாண்ட் ப்ளாங்க்கில் நிகழும் இந்த மாற்றத்திற்கும் காலநிலைக்கும் தொடர்பில்லை என்று சாமினிக்ஸ் (Chamonix) பனிப்பாறை ஆய்வாளர் (glaciologist) லூக் மோராவ் (Luc Moreau) கூறுகிறார்.
“காற்று ஆவியாதலைத் தூண்டி வெப்ப நீக்கம் செய்யும் அப்ளேஷன் (ablation) என்ற நிகழ்வு நடைபெறுகிறது. காற்று மற்றும் பனி இந்த சிகரத்தின் உயரத்தை தீர்மானிக்கின்றன. பனியை காற்று அகற்றலாம் அல்லது அவ்வாறு நிகழாமலும் இருக்கலாம். வலுவான குளிர் காலக்காற்று சிகரத்தில் இருந்து பனியை அகற்றுகிறது. இது பாலைவனப்பகுதிகளில் மணற்குன்றுகள் மணல் மலைகள் உருவாகும் (Dune complex) நிகழ்வு போன்றது.
மலையின் உயரத்தில் 2.2 மீட்டர் குறைவு ஏற்பட கோடையில் மழைப்பொழிவு குறைந்த அளவில் இருப்பதால் நடந்திருக்கலாம். இதனால் வரும் இரண்டாண்டுகளில் இதன் உயரம் அதிகரிக்கலாம்” என்று தென்மேற்கு பிரான்சின் ஹாட்-சேவாய் புவி ஆய்வு மையத்தின் (Geometer) தலைவர் ஜீன் டெஸ் கேரட்ஸ் (Jean des Garets) கூறுகிறார். பாறைகளால் நிறைந்த இந்த மலைச்சிகரத்தின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 4,792 மீட்டர்.
ஆனால் காற்று மற்றும் வானிலையைப் பொறுத்து மலையை மூடியிருக்கும் பனி மற்றும் அதன் பரப்பு ஆண்டிற்கு ஆண்டு வேறுபடுகிறது. ஆல்ப்சில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை அறிய 2001 முதல் சிகரத்தின் உயரம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை அளக்கப்படுகிறது. வருங்கால தலைமுறைக்காக இந்த விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. ஆல்ப்சின் ஆரோக்கியம், மாண்ட் ப்ளாங்க்கின் சூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
இத்தகைய அளவீடுகளில் இருந்து பல விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவனப்படுத்தப்படுகின்றன. இந்த சிகரத்தின் உயரம், இருப்பிடம் ஆகியவை நிரந்தரமாக மாற்றிக் கொண்டேயிருக்கிறது. உயரம் 5 மீட்டர் வரை வேறுபடுகிறது. ஆல்ப்ஸில் புவி வெப்ப உயர்வின் பாதிப்புகள் தொடர்ச்சியாக சேகரிக்கப்படுகின்றன. இந்த மலைத்தொடரின் மூன்றில் ஒரு பகுதி கன அளவிற்கு சமமான பரப்பு பனிப்பாறைகள் சமீப ஆண்டுகளில் இழக்கப்பட்டுள்ளது.
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் சிறப்பு
உறை நிலையில் இருக்கும் பனிப்பாறை- மண் (permafrost-soil), பாறைப்பொருட்களை இந்த மலைத்தொடர் இழந்துள்ளது. 2,200 மீட்டருக்கும் கூடுதலான உயரத்துடன் உள்ள மலைத்தொடர்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை உறைநிலையில் இருக்கும் இப்பொருட்கள் பசை போல செயல்படுகின்றன. இது இத்தகைய மலைத்தொடர்களின் சிறப்புப் பண்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலைகள் வெறும் மண் மேடுகள் அல்ல. பனி மலைகள் வெறும் பனிப்பாறைகளால் ஆன வெற்று உருவங்கள் இல்லை. பூமியின் சூழலைப் பாதுகாப்பதில் இவற்றின் பங்கு மகத்தானது. மாண்ட் ப்ளாங்க்கின் மாறிக் கொண்டேயிருக்கும் உயரத்தின் இரகசியத்தை அறிய நாம் இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/oct/05/mont-blanc-height-peak-shrinks?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தால் பூமியில் கடல்களின் நிறம் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு கடல் பசுமை நிறமாக மாறக் காரணம், அதில் உள்ள தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுவதே என்று நாசா நிறுவனத்தின் பகுப்பாய்வுப் படங்கள் கூறுகின்றன. ஆழ்ந்த நீல நிறத்தில் இருக்கும் ஒரு கடல் காலப்போக்கில் பச்சை நிறத்திற்கு மாறுகிறது. பூமத்திய ரேகைக்கு கீழுள்ள பகுதியில் அமைந்துள்ள கடற்பகுதிகளில் இந்த பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
"கடல் நீர் நிறம் மாறுவது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் சூழல் மண்டலத்தில் நிகழும் மாற்றங்களையே இது அடையாளப்படுத்துகிறது" என்று நேச்சர் (Nature) ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர் மற்றும் சவுத்தாம்ப்டன் (Southampton) பல்கலைக்கழகத்தின் தேசிய கடல்சார் ஆய்வு மைய விஞ்ஞானி பிபி கேல் (BB Cael) கூறுகிறார்.
காலநிலை மாற்றத்தின் தற்போதைய போக்கை அறிய கடல் நீரின் நிறம் பற்றி நடத்தப்பட்ட இந்த முன்னோடி ஆய்வில் மிதவை உயிரினங்களில் உள்ள பசுமையான க்ளோரோபில் அல்லது பச்சைய செல்கள் பற்றி முக்கியமாக ஆராயப்பட்டது. மிகச் சிறந்த தரவுகளின் களஞ்சியமான நாசாவின் மோடீஸ் நீரியல் (Modis-Aqua) செயற்கைக்கோளின் உதவியுடன் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
நாசாவின் செயற்கைக்கோள்
இந்த செயற்கைக்கோள் டெரா (Terra) மற்றும் அக்வா (Aqua) என்ற இரு விண்கலங்களில் செயல்படுகிறது. 2330 கிலோமீட்டர் அகலத்தில் இது பூமியின் நிலம் மற்றும் நீர்ப்பரப்பு முழுவதையும் ஆராயும் திறன் பெற்றது. கடல் நீரில் ஏற்படும் சிவப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களின் மாற்றங்களை இதில் உள்ள நிறமானி முழுமையாக ஆராய்ந்து கூறியுள்ளது. வெவ்வேறு அளவுள்ள மிதவை உயிரினங்கள் ஒளியை வெவ்வேறு அளவுகளில் சிதறடிக்கின்றன. வேறுபட்ட நிறமிகளைக் கொண்ட மிதவை உயிரினங்கள் ஒளியை வேறுபட்ட அளவில் உறிஞ்சுகின்றன.
நிறங்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதன் மூலம் உலகம் முழுவதும் கடல்களில் வாழும் தாவர மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி விஞ்ஞானிகளால் துல்லியமாக அறிய முடியும். ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் பெற்ற ஒற்றை செல்லுடன் கடலில் வாழும் உயிரினங்களே தாவர மிதவை உயிரினங்கள் (phytoplanktons) என்று அழைக்கப்படுகின்றன.
கடற்சூழல் மண்டலத்தில் உணவுச்சங்கிலியின் அடிப்படை இந்த உயிரினங்களே என்பதால் இவை ஆரோக்கியமான கடற்சூழலுக்கு முக்கியமானவை. இந்த நிற மாற்றங்கள் கணினி மாதிரிகளுடன் ஒப்பிடப்பட்டு மனிதனால் புவி வெப்ப உயர்வு ஏற்படுத்தப்படாமல் இருந்தால் கடல்கள் எவ்வாறு இருக்கும் என்று ஆராயப்பட்டபோது இப்போது நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றி தெளிவாக அறிய முடிந்தது.
உலகக் கடல்களில் 56%
இந்த மாற்றங்களை வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள கடல்களில் குறிப்பிடத்தக்க அளவில் காணமுடிந்தது என்று கேல் கூறுகிறார். பூமியில் இருக்கும் கடல்களில் 56% கடல்களிலும் இந்த மாற்றங்கள் நிகழ்கிறது. இது பூமியின் ஒட்டுமொத்த நிலப்பரப்பின் அளவை விட அதிகம்.
பெரும்பான்மையான கடற்பகுதிகளிலும் இந்த பசுமை விளைவு (Greening effect) நிகழ்கிறது. ஆனால் நீல நிறம் மற்றும் சிவப்பு நிறத்தின் அளவுகள் ஒரு சில பகுதிகளில் சில சமயங்களில் அதிகமாவதையும் வேறு சில சமயங்களில் குறைவதையும் காண முடிகிறது என்று அவர் கூறுகிறார். ஒட்டுமொத்த சூழல் மண்டலத்தையும் அழிக்கக் கூடியதோ அல்லது மாற்றக் கூடியதோ இல்லை என்றாலும் இவை மிக நுட்பமானவை. மனித அறிவினால் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளப்பட முடியாதவை.
மனிதக் குறுக்கீட்டின் மற்றொரு எடுத்துக்காட்டு
நம்மால் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் இந்த மாற்றங்கள் கடல்களில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மனிதக் குறுக்கீட்டால் பூமியின் உயிர்க்கோளத்திற்கு ஏற்பட்டு வரும் மோசமான பாதிப்புகளுக்கு இது மற்றொரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த ஆய்வுகள் காலநிலை மாற்றத்தின் இன்னுமொரு விளைவை தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளன.
என்றாலும் கடல்களுக்குள் எதனால் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன, இந்த மாற்றங்கள் எந்த அளவு வலிமையானவை என்பது பற்றி ஆய்வாளர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆரிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் கடல் வளம் (Ocean Productivity) ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மைக்கேல் ஜே பேரன்ஃபெல்டு (Michael J Behrenfeld) கூறுகிறார்.
கடல்களில் நுண் பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மற்ற எந்த ஒரு பொருளையும் போல ஒளியைச் சிதறடிக்கச் செய்யும். இது போன்ற பல காரணங்களால் இந்த மாற்றங்கள் ஏற்படலாம். இது பற்றி மேலும் தெளிவாக புரிந்து கொள்ளப்படும்போது கடலில் நிகழும் சூழலியல், உயிரி புவி வேதியியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நாசாவின் புதிய செயற்கைக்கோள்
நாசா ஜனவரி 2024ல் பேஸ் (PACE - Plankton, Aerosol, Cloud, Ocean Ecosystem) என்று பெயரிடப்பட்டுள்ள அதி நவீன செயற்கைக்கோளை செலுத்துகிறது. இந்த அதிநவீன செயற்கைக்கோள் இப்போது ஆராயப்பட்டுள்ள ஒரு சில நிறங்களைத் தவிர கடல்களில் உள்ள நூற்றுக்கணக்கான நிறங்களையும் ஆராயும் திறன் பெற்றது. இதன் மூலம் கடற்சூழலில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை நம்மால் தெளிவாக அனுமானிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது கடற்சூழலை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
** ** **
&
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
உயரும் புவி வெப்பத்திற்கு இடையிலும் உயிர்த்துடிப்புடன் வாழும் புதிய ஆழ்கடல் பவளப்பாறைக் கூட்டத்தை இதுவரை ஆராயப்படாத காலப்பெகோஸ் (Galapagos) கடல்வளப் பாதுகாப்பு பகுதியில் (Marine Protection Area MPA) ஆழ்கடலில் மூழ்கி பயணம் செய்யும் வசதியுடைய வாகனத்தில் (Human Occupied Vehicle HOV) பயணம் செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை வரைபட வசதி ஏற்படுத்தப்படாத வளைகுடாவின் மத்திய பகுதியில் உள்ள கடல் மலைகளின் சிகரங்களை 6500 மீட்டர்/1970 அடி ஆழத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தபோது பல உயிரினங்கள் ஒன்று சேர்ந்து வாழும் புதிய பவளப்பாறைத் திட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதனையளவு புவி வெப்ப உயர்வு மற்றும் அதிகரிக்கும் கடல் அமிலத் தன்மையால் உலகில் மற்ற இடங்களில் பவளப் பாறைகள் அழிந்து கொண்டிருக்கும்போது ஆரோக்கியமான பவளப் பாறைகள் பாதகமான சூழ்நிலையை சமாளித்து வாழ முடியும் என்ற புதிய நம்பிக்கையை இக்கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரிய உயிரினங்களின் வியக்க வைக்கும் காட்சி
சூழல் பாதுகாப்புத் திட்டங்களின் திறம்பட்ட செயல்பாடு, பலன் தரும் மேலாண்மையால் அழியும் உயிரினங்களைப் பாதுகாக்கலாம் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு பிங்க் நிற நீராளிகள், வௌவால் மீன்கள் (bat fish), குந்து இரால் (Squat lobster), பல இன ஆழ்கடல் மீன்கள், சுறாக்கள், கதிர் மீன்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ்கின்றன என்று இந்த ஆழ்கடல் ஆய்வுப் பயணத்தின் இணைத் தலைவர் மற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழக கடல் உயிரியலாளர் டாக்டர் மிஷைல் டைலர் (Dr Michell Taylor) கூறுகிறார்.
இருவர் மட்டுமே பயணம் செய்யும் வசதியுடைய ஆல்வின் (HOV Alvin) என்ற இந்த ஆழ்கடல் மூழ்கு ஆய்வு வாகனம் 600 மீட்டர் ஆழம் வரை பயணம் செய்யக் கூடியது.
இந்த வாகனத்தின் தானியங்கிக் கைகள் பவளப்பாறைகளில் குளிர்ந்த நீரால் சூழப்பட்ட கூடை நட்சத்திர வகை (basket star) உயிரினங்கள், கடல் முள் எலிகள் (seayuchins), குந்து இறால், கடின ஓடற்ற பாலிப்ஸ் (polyps) என்ற பூ போலத் தோன்றும் பவளப் பாறைகளில் காணப்படும் உயிரினங்களான அனெமனிஸ் (anemones) போன்ற பல ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகளை சேகரித்தது. இது ஊக்கமளிக்கும் செய்தி என்று ஈகுவேடார் நாட்டின் சூழல் அமைச்சர் ஹோசே அண்டோனியோ டாவலோஸ் (Jose Antonio Davalos) கூறுகிறார். காலப்பெகோஸ் தீவுக் கூட்டம் ஈகுவேடார் நாட்டிற்குச் சொந்தமானது.
புதிய கடல்வளப் பாதுகாப்பு பகுதி
வடபகுதியில் உள்ள பனாமா, கோஸ்ட்டரிக்கா, கொலம்பியா நாடுகளுடன் இணைந்து புதிய பிராந்திய கடல் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈகுவெடோர் இப்போது ஈடுபட்டுள்ளது. டைலர் மற்றும் ஈகுவெடோர் சார்ல்ஸ் டார்வின் அறக்கட்டளையைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டூவர்ட் பேங்க்ஸ் (Dr Stuart Banks) ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த வாகனம் உயர் தொழில்நுட்பத்திறன் பெற்ற மாதிரி சேகரிக்கும் ஆற்றல் மற்றும் உயர் 4K காணொளி பிம்பமாக்கும் திறன் (4K video imaging system) உள்ளிட்ட படமெடுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது.
இந்த ஆய்விற்கு முன்பு காலப்பேகோஸ் வளைகுடாவின் வட கோடியில் இருக்கும் டார்வின் தீவின் வடக்கில் உள்ள வெலிங்டன் தீவில் மட்டுமே 1982-83ல் ஏற்பட்ட எல் நினோ என்னும் கடல் நீரோட்ட மாறுதல் நிகழ்வால் பாதிக்கப்படாத ஆழ்கடலில் தேங்கியிருக்கும் நீரில் வாழும் பவளப் பாறை உயிரினங்கள் வாழ்கின்றன என்று கருதப்பட்டது.
பல ஆண்டு பழமை
காலப்பெகோசின் கடல் பாதுகாப்பு பகுதியில் ஆழ்கடலில் இங்கு மட்டுமே காணப்படக் கூடிய செழுமை மிக்க பல ஆழ்கடல் உயிரினங்களை வாழ வைக்கும் இந்தப் பவளப் பாறைத் திட்டுகள் பல நூறாண்டுகளாக இங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
சுரங்கத்திற்குள் வழிகாட்டும் கனெரிப் பறவை போல (a canary in the mine) இங்கு வாழும் பவளப் பாறைகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் இவற்றின் திறன் சூழல் சீர்கேட்டிற்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்திற்கு உதவும். இது கடல் பாதுகாப்பு பகுதிகளில் நடைபெறும் கார்பன் சுழற்சி மற்றும் மீன் வளம் குறித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உலகின் மற்ற பகுதிகளில் ஆழ்கடல் பவளப்பாறை திட்டுகள் மனிதனால் இன்னும் ஆராயப்படாமல் இருக்கலாம்.
எல்லைகள் தாண்டி கடல்வளப் பாதுகாப்பு பகுதி
ஹெர்மென்டாட் (Hermandad) என்ற புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கடல்வளப் பாதுகாப்புப் பகுதி ஈகுவெடோர் கடற்பகுதியில் இருக்கும் கடல் மலைத்தொடர்களையும் கோஸ்ட்டரிக்காவில் உள்ள கோகோ (Coco) தீவில் உள்ள தேசியப் பூங்காவையும் இணைக்கிறது. இது இப்பகுதியின் கடல் உயிர்ப்பன்மயத் தன்மையை பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.
வலசை செல்லும் பாதைகள்
கடலுக்கு அடியில் இருக்கும் மலைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வலசை செல்லும் பாதைகள். இவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆழ்கடல் பகுதி எண்ணற்ற கடல் உயிரினங்களின் தீவனப் பகுதி. இவை மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் அழிந்து விடக்கூடாது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2030ம் ஆண்டிற்குள் 30% கடற்பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் சமீபத்திய மாண்ட்ரீல் உலக கடல் சார் உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டில் எடுக்கப்பட்ட 30x30 என்ற திட்டத்தின் மற்றொரு திருப்புமுனை இது என்று கருதப்படுகிறது.
ஆர்வி அட்லாண்டிஸ்
ஆல்வின் என்ற இந்த வாகனம் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. தேசிய ஆழ்கடல் ஆய்வுத்திட்ட அமைப்பினா நிதியுதவி செய்யப்படும் இது யு எஸ் அறிவியல் அறக்கட்டளையின் ஒரு பகுதி. இந்த வாகனம் வுட்ஸ் ஹோல் கடல் ஆய்வுக் கழகத்தால் (Woods Hole Oceanographic Institution WHOI) இயக்கப்படுகிறது. யு கே இயற்கைச்சூழல் ஆய்வுக் கவுன்சில் அமைப்பும் இதற்கு நிதியுதவி செய்கிறது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான வுட்ஸ் ஹோல் கழகம் இயக்கும் ஆர்வி அட்லாண்டிஸ் (RV Atlantis) என்ற மற்றொரு ஆழ்கடல் மூழ்கு கலனில் நடைபெறும் 2023 பன்னாட்டு விஞ்ஞானிகளின் காலப்பெகோஸ் ஆழ்கடல் ஆய்வுப்பயணத் திட்டக் குழுவில் டைலர் மற்றும் பேங்க்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியுடன் செயல்படுத்தப்பட்டால் கடலின் மழைக்காடுகள் என்று அறியப்படும் பவளப் பாறைகள் காப்பாற்றப்படும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆழ்கடல் ஆய்வுகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு இக்கண்டுபிடிப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- உலகை அச்சுறுத்தும் பூஞ்சைகள்
- அதிகரிக்கும் வானவில் நாட்கள்
- பூமியின் வட கோடியில் ஒரு புதிய தீவின் கண்டுபிடிப்பு
- சூரியனின் கதிர்களை திசை திருப்பி விட்டால் பூமியில் சூடு குறையுமா?
- புதையுண்ட பூமிக்குள் ஓர் அற்புதக் காடு
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?