norway co2 emissionநோர்வே, டென்மார்க், ச்வீடன், ஃபின்லன்ட், ஐச்லன்ட் ஆகிய ச்கேன்டிநேவிய (Scandinavia) நாடுகளில் மக்களுடைய வாழ்க்கைத் தரம் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. அந்த நாடுகளில் சுற்றுப் புறம், நிலம், நீர், காற்று ஆகியன தூய்மையாக விளங்குகின்றன.

தொழில்மயமான பிற நாடுகளில் புது-தாராளமய முதலாண்மையின் விளைவாக ஏற்றத்தாழ்வுகள், மக்கள் உடல்நலம் குன்றுதல், வறுமை ஆகியவை பெருகி வரும் நிலையில் மேற்கண்ட ஐந்து நாடுகளில் மனித வள மேம்பாடும், இயற்கைச் சூழலும் சிறப்பாக இருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால், அந்நாட்டு மக்களின் இயற்கை வளப் பயன்பாடு, வெளியிடும் கரியீருயிரகையின் (CO2) அளவு ஆகியன மிக, மிக அதிகமாக உள்ளன.

உலக மக்களின் சராசரி பொருள் நுகர்வு ஆண்டுக்கு ஏழாயிரம் கிலோ என்கிற அளவுக்குள் இருந்தால் தான் சூழல் மாசுபடுவதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது சூழலியலாளர்களின் கணக்கு. ஆனால், ச்கேன்டிநேவியர்களுடைய சராசரி நுகர்வு ஆண்டுக்கு முப்பத்திரண்டாயிரம் கிலோ அளவில் உள்ளது!

பசுங்குடில் வளி வெளியீட்டைப் பொருத்தவரை, அமெரிக்கா, ஆச்த்ரேலியா, கேனடா, சௌதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ச்கேன்டிநேவிய நாடுகள் அதிகம் மாசுபடுத்துகின்றன.

நிலைத்த மேம்பாட்டுக் குறியீட்டைப் (Sustainable Development Index) பொருத்தவரை, 1990-களில் ச்வீடன் 0.755 மதிப்பெண் பெற்று ஏழாம் இடத்தில் இருந்தது; இப்போது 0.328 மதிப்பெண்களே பெற்று 143-ஆவது இடத்துக்கு வீழ்ச்சி அடைந்துவிட்டது.

ஏனைய உலக நாடுகளும் அந்த ஐந்து நாடுகளைப் போல வாழ்ந்தால் அந்த வாழ்முறையைத் தாங்கி நிற்பதற்கு ஐந்து புவிகள் தேவைப்படும்!

ச்கேன்டிநேவிய நாடுகள் தம் நுகர்வைப் பெருமளவு குறைத்துக் கொண்டாலும் தம்முடைய உயர்ந்த வாழ்க்கைத் தரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, மனமகிழ்ச்சியைப் பொருத்தவரை கோச்டா ரிக்கா (Costa Rica) நாட்டு மக்கள் ஏறக்குறைய ச்கேன்டிநேவிய நாட்டு மக்களைப் போலவே இருக்கிறார்கள். ஆனால், கோச்டா ரிக்கா நாடு அறுபது விழுக்காடு குறைவாகவே இயற்கை வளங்களை நுகர்கிறது. இத்தாலியர்களுடைய நுகர்வு (ச்கேன்டிநேவியர்களை விடப்) பாதி குறைவு; ஆனால், இத்தாலியர்கள் அதிக ஆண்டுகள் வாழ்கின்றனர். ச்கேன்டிநேவியர்களை விட அதிகக் கல்வித் தரம் உள்ள செர்மானியர்கள் முப்பது விழுக்காடு குறைவாகவே இயற்கை வளங்களை நுகர்கிறார்கள்.

ச்கேன்டிநேவியர்கள் தம் நுகர்வை எழுபது விழுக்காடு குறைத்துக் கொண்டு இப்போதைய வாழ்முறையைத் தொடர்வதற்கான விரிவான திட்டங்களைச் சில சூழலியல் அறிஞர்கள் வரைந்துள்ளனர்.

'வளர்ச்சி' எனும் போர்வையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்கிற அளவுகோலை தொடர்ந்து அதிகரிக்கக் கோரும் முதலாண்மைக்கு மாற்றுப் பொருளாதார முறைமையே இப்போதைய முதன்மைத் தேவை. அது செயல்படுத்தக் கூடியது.

மூலக் கட்டுரை: Jason Hickel, "The Nordic model is a disaster for the environment", 2020 January 08, https://www.aljazeera.com/amp/indepth/opinion/dark-side-nordic-model-191205102101208.html (https://www.ecologise.in/2020/01/08/jason-hickel-the-nordic-model-is-a-disaster-for-the-environment/)

- பரிதி 

Pin It