சிந்திக்கும் ஆற்றலும், பகுத்தறியும் திறனும் உடைய மனிதன் மாறி விட்டான். அவன் போக்கு மாறியதால் இன்று இயற்கையின் படைப்பில் பூமியைக் காக்க உருவான பல இயல்பான நிகழ்வுகளும் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒன்றே ஜெட் ஸ்ட்ரீம். இவை தங்கள் பாதையை மாற்றிக் கொண்டிருக்கின்றன என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி ஏற்படும், பீதியூட்டும் வகையில் காலநிலை மாறும் என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.

அறியப்படாத ஜெட் ஸ்ட்ரீம்

புவி வெப்ப உயர்வு என்ற நிகழ்வு பூமியை மோசமாக தாக்கத் தொடங்கி, இப்போது இருபது ஆண்டுகளாகி விட்டன. இதனால் பூமியின் காலநிலை உட்பட பல்வேறு சூழல் நிகழ்வுகளின் இயல்பான போக்கு தாறுமாறாகின்றன. இதன் பலனாகவே சில ஆண்டுகளாக பூமியில் பல்வேறு இடங்களில் பேரிடர் சம்பவங்கள் தொடர்கின்றன. புவி வெப்ப உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளில் மிக சமீபத்தில் ஜெட் ஸ்ட்ரீம் போக்கில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

ஜெட் ஸ்ட்ரீம் என்றால் என்ன?

ஜெட் ஸ்ட்ரீம் என்பது பூமியில் வடதுருவப் பகுதிக்கு அருகில் எப்போதும் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கிப் பயணிக்கும் காற்றோட்டங்கள். குறிப்பாக வட அமெரிக்கா, ஐரோப்பாவில் காலநிலையின் சமநிலையை நிலைநிறுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இது வடக்கு துருவப் பகுதியில் இருந்து வீசும் குளிர்ந்த காலநிலையையும், தெற்கு பூமத்தியரேகைப் பகுதியில் இருந்து வீசும் உயர்ந்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலையையும் கட்டுப்படுத்தி பிரித்து வைக்கிறது.north atlantic jet streamஆனால் புதிய ஆய்வு முடிவுகளின்படி இதன் இடம் மாறுகிறது. வெப்ப உயர்வைப் பொறுத்து மேலும் வட திசை நோக்கி நகர்ந்து துருவப் பகுதியுடன் இவை நெருங்கிச் செல்கின்றன. இது காலநிலையை மேலும் தீவிரமாகப் பாதிக்கிறது. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு இன்றுள்ள நிலையில் தொடர்ந்தால் 2060ல் இந்த மாற்றங்கள் தீவிரமடையும்.

வடபகுதியில் உருவாகும் ஜெட் ஸ்ட்ரீமின் போக்கில் ஏற்படும் மாற்றம் பூமியில் இப்போது தாளம் தப்பி சென்று கொண்டிருக்கும் காலநிலையை பீதி ஏற்படுத்தும் நிலைக்குக் கொண்டு போய்விடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வடதிசை நோக்கி

இக்காற்று வடக்கு திசை நோக்கி செல்வது ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அரிசோனா பல்கலைக்கழக காலநிலை மாற்றம் பற்றி ஆராயும் பிரிவின் ஆய்வாளர் பேராசிரியர் மாத்யூ ஒஸ்மான் கூறுகிறார். இதனால் ஐரோப்பா போல குளிர் தட்பவெப்பநிலை நிலவும் பகுதிகளில் கடும் வறட்சியும், வெப்ப அலைத் தாக்குதல்களும் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

தெற்கு ஐரோப்பா மற்றும் கிழக்கு அமெரிக்காவில் இது தீவிரமாக ஏற்படும். வட அமெரிக்கா மற்றும் ஸ்காண்டிநேவியன் பிரதேசத்தில் பெருமழையும் அதனால் பெரு வெள்ளப்பெருக்குகளும் சாதாரண சம்பவங்களாக மாறும். இப்பகுதிகளில் இப்போது நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இதையே உறுதிப்படுத்துகின்றன. மேலும் வரும் ஆண்டுகளில் ஜெட் ஸ்ட்ரீம் தீவிரமடைவதுடன் இப்பகுதிகளில் காலநிலை இன்னும் மோசமடையும்.

வட அட்லாண்டிக் ஜெட் ஸ்ட்ரீம்

ஆர்க்டிக் பகுதியில் இருந்து வரும் குளிர்ந்த வாயுவும் தெற்கு பகுதியில் இருந்து வரும் வெப்பம் மிகுந்த வாயுவும் ஒன்றுடன் ஒன்று நேருக்குநேர் பயணம் செய்து மோதி முட்டிக்கொள்வது ஜெட் ஸ்ட்ரீம் காற்றுகளுடன் சங்கமிக்கும்போதே நிகழ்கிறது. இது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் காற்றை ஒரே பகுதியில் தொடர்ந்து வீச உதவுகிறது.

இந்த காற்று எப்போதும் ஒரே பகுதியில் தொடர்ந்து வீசுகின்றது என்று உறுதியாக சொல்ல முடியவில்லை என்றாலும், கடந்த 1000 ஆண்டுகளின் சராசரியைக் கொண்டு கணக்கிட்டால், இது ஏறக்குறைய ஒரே பகுதியிலேயே தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. ஆனால் வெப்பநிலை மாறுவதால் வட துருவப் பகுதியின் சூடு அதிகமாகிறது. இதனுடன் தெற்கில் இருந்து வரும் சூடான காற்று குளிர்ந்த காற்றுடன் மோத நீண்டதூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.

இதன் காரணமாக காற்றின் பயணப்பாதை மாறுகிறது. இவற்றிற்கு இடையில் இருக்கும் ஜெட் ஸ்ட்ரீம் மேலும் வடக்கு நோக்கித் தள்ளப்படுகிறது. இந்த மாற்றமே வரும் காலத்தில் காலநிலை சீரழிவுகளை கற்பனைக்கெட்டாத விதத்தில் பேரிடர்களாக மாற்றமடையச் செய்யும் என்று அஞ்சப்படுகிறது.

பூமி முழுவதும் பயணம் செய்து கொண்டே இருக்கும் காற்றோட்டங்களான ஜெட் ஸ்ட்ரீம்கள் பூமியின் காலநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தியா, மத்திய தரைக்கடல் உட்பட உலகின் பல பகுதிகளில் பருவநிலையை நிர்ணயிப்பதில் இவை இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் குளிர்காலத்தில் இக்காற்று ஓட்டங்களே வட மாநிலங்களுக்கு மழை கொண்டு வருகின்றன. பருவமழைப் பொழிவிலும் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

பல நாடுகளிலும் விவசாய முறைகள் இவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இக்காற்று சாதாரணமாக தரையில் இருந்து 12,000 மீட்டர் வரை உள்ள உயரத்தில் காணப்படுகின்றது. எவரெஸ்ட்டின் வழியாகக் கடந்து செல்லும் ஜெட் ஸ்ட்ரீம் தெற்காசிய ஜெட் ஸ்ட்ரீம் என்று அழைக்கப்படுகிறது. 

அதிதீவிரமடையும் காலநிலை

ஜெட் ஸ்ட்ரீமில் உண்டாகும் மாற்றம் அதிதீவிர வறட்சி, வெப்ப உயர்வை இரு மடங்காக அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது தவிர எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடங்களில் பெருமழையையும், வெள்ளப் பெருக்கையும் இவை அடிக்கடி ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. ஜெட் ஸ்ட்ரீமுடன் சேர்ந்திருக்கும் பகுதிகள் என்பதால் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மிக அதிகமாகப் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சூழல் சீரழிவினால் பேர் தெரியாத புதிய நோய்கள் நுண்ணுயிரிகள் மூலம் மட்டுமில்லாமல் காலநிலை மாற்றத்தாலும் மனிதனை ஆட்டிப் படைக்கும்போது வெப்ப உயர்வைக் குறைக்க எதையும் செய்யாமல் நாம் அலட்சியப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் நம் சவப்பெட்டிக்கு நாமே ஆணி அடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It