கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- ஜெயச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
இயற்கையின் பல சக்திகள் இந்த பிரபஞ்சத்தில், அழிவையும், ஆனால் அதே சமயம் அதிசயிக்கும் வகையில் ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு எரிமலைகளை எடுத்துக் கொள்வோம். ‘ எரிமலைகள் ஆக்க சக்தியா?’, என்று ஆச்சரியம் வரத்தான் செய்யும். எரிமலைகள் இந்த பூமியில் இல்லை என்றால் இந்த கட்டுரை எழுத நானும் இருந்திருக்க மாட்டேன், படிப்பதற்கு நீங்களும் இருந்திருக்க மாட்டீர்கள். இப்படிச் சொன்னால் நம்புவதற்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கும். புவியில் உயிர்கள் வாழ்வதற்கு எரிமலைகள் அந்தளவு பங்களித்திருக்கின்றன.
எரிமலைகளின் அழிக்கும் சக்தியை முதலில் பார்ப்போம். எரிமலைகளை நமக்கு அருகிலயே, அமைதியாக இருக்கும். ஆனால், திடீரென்று ஒருநாள் தீவிரவாத தாக்குதல் போல வெடித்து சிதறும். சில எரிமலைகள் எங்கே ஒளிந்திருக்கின்றன என்பதே தெரியாது. கடலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் எரிமலை ஹவாய் தீவுகளில் அதிகம் காணப்படுகின்றன. அவை லாவா எனப்படும் நெருப்பு குழம்புகளை கடலில் கக்கும் போது, கடலுக்கு உள்ளேயே அந்த நெருப்பு பாறைகள் தீப்பற்றி எரிந்தபடியே விழுவது, கண் கொள்ளா காட்சி.
சமீபத்தில், ஐஸ்லாந்தில் பனிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்து, பெரும் புகையைக் கக்கி, ஐரோப்பாவின் அந்தப் பகுதியில் விமானப்போக்குவரத்து பல நாட்கள் தடைபட்டது. பூமியின் வினோதத்தைப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் பனி படர்ந்த நிலம். ஆனால், அங்கே பூமிக்கு அடியில் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் எரிமலைக் குழம்புகள். அவை வெடித்து வானில் இருபதுகிலோ மீட்டர் வரை புகை கிளம்பியது.
இந்த ஐஸ்லாந்திலும் பூமியின் வேறு பல பகுதிகளிலும் வெப்ப நீரூற்றுக்களும், வெப்பமான குட்டைகளும் காணப்படுகின்றன. குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து போன்ற பகுதிகளில் உள்ள வெப்பநீர்க் குட்டைகளில் மக்கள் ஆர்வத்துடன் குளிப்பார்கள். அவர்களுக்கு ஒரு உண்மை தெரியாது. தெரிந்தால் அந்தப் பக்கமே தலை வைத்து படுக்கமாட்டார்கள். என்னவென்றால் அந்த இடங்களிலெல்லாம் பூமிக்கு அடியில் மிக அருகில் 'மாக்மா' எனப்படும் உருகிய பாறைகள் பெருமளவில் இருப்பதுதான். அந்த உருகிய பாறைகளின் வெப்பதினால்தான் நீர் வெப்பமடைகிறது. அவை எப்போது வேண்டுமானாலும் எரிமலையாக வெளியே வந்து, ஆனந்தக் குளியலை அந்திமக் குளியலாக மாற்றிவிடலாம்!
நாம் வாழும் நிலப்பரப்பிற்கு கீழே நடப்பது என்னவென்று தெரிந்தால் ஆச்சரியமாகவும், ஆர்வத்தை தூண்டுவதாகவும் இருக்கும்.
பேராபத்து ஏற்படுத்தும் நடனம்
நாம் வாழ்வது, பூமியின் மேல் தட்டு (CRUST) என்ற பகுதியில். இந்த மேல் தட்டு, பூமியில் ' மேண்டில் ' ( mantle) என அழைக்கப்படும் பாகு நிலையிலுள்ள (உருகிய) பாறைகளின் மேல் அமர்ந்திருக்கின்றது. அதற்கு கீழே, புவியின் மத்திய பகுதி இருக்கின்றது. இவைகள்தான் புவியின் மூன்று முக்கிய பகுதிகள். புவியின் மத்திய பகுதி இரும்பு -நிக்கல் கலவையினால் ஆனது. இந்தப் பகுதியின் வெப்பம், சூரியனின் வெளிப்புற வெப்பமான சுமார் 5400௦௦ டிகிரி சென்டிக்ரேடுக்கு நிகராகும்.
பூமியின் மத்தியில் உள்ள வெப்பம், பூமி உருவானபோது உண்டான ஆரம்பகால வெப்பமும், கதிரியக்கத்தினால் உண்டாகும் வெப்பமும் சேர்ந்ததே ஆகும். பூமியின் மத்தியில் இருந்து அந்த வெப்பம் வெளியே வரும்போது 'மாண்டில்' எனப்படும் பகுதியிலுள்ள பாறைகளை உருக வைக்கின்றது. உருகிய பாறைகள் அடர்த்தி குறைவானதால் மேலே எழும்புகின்றன. மேலே உள்ள குளிர்ந்த பாறைகள் அடர்த்தி அதிகம் உள்ளதால் கீழே (பூமியின் மத்திய பகுதிக்கு) இறங்குகின்றன. வெப்பமடைந்த பாறைகள் கீழிருந்து மேலாகவும், மேலே உள்ள குளிர்ந்த பாறை மேலிருந்து கீழே நகர்வதுமான மிக மெதுவான ஒரு சுழற்சி மாண்டில் எனப்படும் பகுதியில் நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது, நாம் ஆனந்தமாக வாழும் பூமியின் மேல் தட்டுக்கு கீழே தான் இந்த உருகிய பாறைகளின் நடனம் நடந்து கொண்டிருக்கின்றது.
மேண்டில் பகுதியில் நடக்கும் அந்த சுழற்சியினால், அதன் மேல் அமர்ந்திருக்கும் நாம் வாழும் மேல்தட்டு மெல்ல நகர்ந்துகொண்டே இருகின்றது. நம் நகம் வளரும் வேகத்தில்தான் தட்டுக்களும் கோடிக்கணக்கான வருடங்களாக (tectonic plate movements) நகர்ந்துகொண்டே இருக்கின்றன. இதனை நாம் உணர்வதில்லை.
ஆபத்து என்னவென்றால், நாம் வாழும் பூமியின் மேல்தட்டு, ஆங்காங்கே பிளவு பட்டுள்ளது. பிளவுபட்டுள்ள தட்டுக்கள், அதற்கு கீழே உள்ள மேற்கூறிய உருகிய பாறைகளின் நகர்வினால், ஒன்றன் மீது ஒன்று மோதுவதும், பக்கவாட்டில் உரசிக்கொள்வதும், ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து செல்வதுமாக இருக்கின்றன. மேல் தட்டின் இந்த அசைவுகளால் அதன் கீழேயுள்ள உருகிய பாறைகள், மேல்தட்டின் பிளவுகளுக்கிடையேயும், மேல்தட்டை பிளந்துகொண்டும் பூமிக்கு வெளியாக லாவா எனப்படும் அக்கினி குழம்பாக வெளிவருகின்றது.
அமைதிப்பூங்கா?
ஒரு காலத்தில் எரிமலைகள் தொடர்ந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தன என்றும், ஆனால் இப்போது அவையெல்லாம் குளிர்ந்து இந்த பூமி, அமைதிப்பூங்காவாக மாறி விட்டது, என்று வழக்கம்போல தப்பு கணக்கு போட்டு கொண்டார்கள் மக்கள். அதனால் தான் உலகம் முழுவதும் பல கோடி மக்கள் அமைதியாக இருக்கும் எரிமலை அருகே வீடுகள் கட்டி வாழ்கின்றனர். அறிவியலாளர்கள் பூமியின் அமைப்பு பற்றியும், எரிமலைகள் எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் என்று பல வருடங்கள் ஆராய்ந்து முடிவு செய்து கூறினாலும், அதை கேட்காமல் பெரிய நகரங்களை உருவாக்கி, பிறகு அதன் அழிவைக் கண்டு துயரப்படுகிறார்கள்.
கடவுளின் விரோதியான சாத்தான்களும், பேய்களும், பூமிக்குள் புதைக்கப் பட்டிருப்பதாகவும், அவைகள் அவ்வப்போது பூமியை விட்டு வெளியே வர எத்தனிப்பதனால் தான் எரிமலை வெடிப்புகளும், பூகம்பங்களும் தோன்றுவதாகவும், கடவுளை வேண்டிக்கொண்டால் இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்காது என்றும் வெகுகாலமாக மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதனால் தான் எரிமலைக்கு அருகில் குடியமர்ந்தனர்.
உலகில் சுமார் 1500 உயிரோட்டமான எரிமலைகள் உள்ளன. பசிபிக் கடலைச் சுற்றி 'நெருப்பு வளையம்' எனப்படும் வளையத்தில்தான் பெரும்பாலான எரிமலைகள் இருக்கின்றன. மேலும் இத்தாலி, இந்தோனேசியா, அமெரிக்கா, சிலி, கொலம்பியா, மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் எரிமலைகள் காணப்படுகின்றன.
குறிப்பிடத்தக்க சில வெடிப்புக்கள்
அமெரிக்காவில் செயின்ட் ஹெலென்ஸ் எனப்படும் ஒரு எரிமலை 120 ஆண்டுகளுக்கு முன் வெடித்தது. வெடிப்பின் சக்தி 30,000 அணு குண்டுகளுக்கு நிகராக இருந்தது என்றால் அதன் சக்தியை என்னவென்று சொல்வது! 1980 இல் இது மீண்டும் வெடித்து, மலையின் ஒரு பகுதியையே தூக்கி எரிந்தது. ஒரு எரிமலையின் வெடிப்பு சக்தியை அறிய, இணைய தளத்தில் இந்த வீடியோ காட்சி பதிவு செய்யப்படுள்ளதை பார்க்கலாம்.
1991 ஜூன் மாதத்தில் பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பினாடுபோ என்ற எரிமலை வெடித்ததில் எழுநூறு பேர் பலியாகினர். எரிமலையில் இருந்து வந்த அக்கினிப் பாறை பொடிகள் நானூறு சதுர கிலோ மீட்டர் பரப்பளவு எறியப்பட்டன. 70,000 மக்களை ஊரை விட்டு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது.
இந்தோனேசியாவில் உள்ள டம்போரா எரிமலை 1815 இல் வெடித்து, சுமார் ஒரு லட்சம் மனிதர்களைக் கொன்றது. வெடிப்பில் இருந்து வந்த புகையும் தூசும் பூமியின் வடக்கு பாகத்தையே சூரியனிடமிருந்து மறைத்து விட்டது. சூரிய ஒளி இல்லாமல் போனதால் அடுத்த ஆண்டு பயிர்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அந்த பகுதி கடும் குளிரினால் பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் 1883 இல் வெடித்த ஒரு எரிமலையின் ஒலி, 2,000 மைல்கள் தொலைவில் உள்ள ஆஸ்த்திரேலியாவில் கேட்டது. அதனால், உண்டான சுனாமி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள தெற்கு அமெரிக்காவில் தாக்கி 36,000 உயிரை பலி வாங்கியது.
ஒரு வருடத்தில் புதிதாக உண்டான எரிமலை
1943 இல் மெக்ஸிகோ நாட்டில் ஒரு வயலிலிருந்து சாம்பல் வெளியே வர ஆரம்பித்தது. அதுவே ஒரு வருடத்தில் 1200 அடி உயரமுள்ள ஒரு எரிமலை ஆனது. அருகிலுள்ள ஒரு நகரை நாசப்படுத்தியது. அங்கு ஒரு எரிமலை புதிதாக உருவானதைப் பார்க்க முடிந்தது. முதலில் சாம்பல் வெளியே வந்து, பிறகு ஒரு மலை தோன்றிய நிகழ்ச்சி நம் நாட்டில் நடந்திருக்குமேயானால், இங்கு பல கதைகள் புனையப்பட்டிருக்கும். (நமது நெல்லை மாவட்டத்தில் பூமிக்குள்ளிருந்து நெருப்புக் குழம்பு வெளியேறும் சம்பவங்கள், புவியோட்டின் அருகே மேக்மா இருப்பதைக் காட்டுகின்றன. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் எரிமலை உருவெடுத்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை)
கொலம்பியா நாட்டில் 1985 இல் ஒரு எரிமலை வெடித்தது. அது ஒரு பெரிய வெடி இல்லையென்றாலும், வெடிப்பால் ஏற்பட்ட மண் சரிவால், ஐஸ் உருகி 23000 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எரிமலை வெடிக்கும் சமயம் அவர்கள் உயரமான பகுதிக்கு சென்றிருப்பர்களேயானால் உயிர் பிழைத்திருப்பார். எரிமலைகள் வெடிக்கும்போது அருகிலுள்ள மக்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்வதன் அவசியம் இந்த பெரும் உயிரிழப்பு சம்பவத்திற்குப் பிறகு ஒரு பாடமாக அமைந்தது.
அறிவியலாளர்கள் பூமியின் உள்ளமைப்பையும், எரிமலைகளின் அடிப்படை உண்மைகளையும் கண்டறிந்து, எரிமலைகளின் வெடிப்பைத் துல்லியமாக கணக்கிட முடியாவிட்டாலும், அதனால் எப்போது ஆபத்து வரும் என்று ஓரளவு அனுமானித்து பல உயிர்களைக் காத்துள்ளனர்.
ஒரு எரிமலையின் அடுத்த வெடிப்பை கண்டுபிடித்து அருகிலுள்ள மக்களை காப்பாற்றும் முயற்சியில், கொலம்பியாவில் ஒன்பது அறிவியலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த எரிமலை மிகவும் உயிரோட்டமானதாக இருக்கின்றது என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, அடுத்த வெடிப்பை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, எரிமலை சற்றும் எதிர்பாராத வகையில் நெருப்பைக் கக்கியதில் அந்த ஒன்பது அறிவியலாளர்களும் நெருப்புக்கு இரையானார்கள்.
இதுபோல இன்னும் பல அழிவுகளை எரிமலைகள் ஏற்படுத்தியுள்ளன.
சூப்பர் எரிமலைகள்
இதுவரை நாம் பார்த்தது சாதாரண எரிமலைகள். ஆனால் சூப்பர் எரிமலை என்று பூமியில் ஆங்காங்கே இருக்கின்றன. அவை சாதாரண எரிமலைகளை விட ஆயிரம் மடங்கு அபாயகரமானவை. அவைகள் கக்கும் நெருப்புக் குழம்புகள் பெருத்த சேதத்தை ஏற்படுத்துவதுடன் அதனுடைய புகை பூமி முழுவதும் சுற்றி, சூரிய ஒளியை பல ஆண்டுகளுக்கு மறைத்து ஒரு சிறிய பனியுகத்தையே உண்டாக்கி, பூமியில் உயிர்வாழ்தலை கடினமாக்கிவிடும். பூமியை அழிக்கும் வல்லமையுள்ள இந்த எரிமலைகள் சில கடலுக்கு அடியிலும் மற்ற இடங்களிலும் ஒளிந்திருக்கின்றன. அவைகளை கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
எரிமலைகளின் அழிவு சக்தியைக் கண்டோம். அதன் ஆக்க சக்தியையும் காணலாமா?
உயிர் உண்டாவதற்கு வேண்டிய அடிப்படைத் தேவைகள்
பூமியில் உயிர்கள் உண்டாவதற்கு, புவியைத் தாக்கிய வால் நட்சத்திரங்களும், வின்வெளிப் பாறைகள் மட்டுமல்லாமல், இந்த எரிமலைகளும் காரணமாயிருந்திருக்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஓர் உயிர் உண்டாவதற்குத் தேவையான ரசாயன மூலக்கூறுகள், வெப்பம், மற்றும் நீர் போன்றவற்றை எரிமலைகள் கொடுத்தன.
பூமிக்கு அடியில் உள்ள, உயிர் உருவாக தேவையான ரசாயனப் பொருட்கள், எரிமலையினால்தான் பூமியின் மேல் பரப்பிற்கு வந்தன. எரிமலைகள் தான் பூமிக்கு அடியில் உள்ள நீராவியையும் வெளியே கொண்டு வந்தன. இந்த நீராவி மழையாகப் பொழிந்து புவிக்கு தண்ணீர் கொடுத்தது.
பூமியில் தண்ணீர் இருப்பதற்கு, பூமியின் மேல் மோதிய சில வால் நட்சச்திரங்களும், எரிமலைகள் வெளிக்கொணர்ந்த நீராவியும் தான் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். (வால் நட்சத்திரங்கள் என்பது பனிக்கட்டியும், பாறைகளாலும் ஆனவைதான். சாதாரணமாக சூரியனை விட்டு வெகு தொலைவில் இருக்கும் இவைகள் பாதை மாறி, சூரியனை நெருங்கும் போது சூரியனின் வெப்பத்தினால் இந்த பனிக்கட்டிகள் உருகி நீராவியாகி, அந்த நீராவியும் தூசுக்களும் வால் போல நீண்டு காட்சி தரும்.)
பனியுகம்
பூமியை சில ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை பனியுகம் ஆட்கொள்ளும். பூமியின் பெரும் பகுதி பனியினால் மூடி மறைக்கப்படும். இப்போது புவியின் வட துருவமும், தென் துருவமும் பனியினால் மூடப்பட்டிருப்பதுபோல, புவி முற்றிலும் பனி படர்ந்திருக்கும். இப்போது நம் காணும் வட-தென் துருவ பனி பிரதேசங்கள், கடந்த பனியுகத்தின் தொடர்ச்சியே.
பனியுகத்தின் போது கடுங்குளிரினால் பயிர் வளர்ச்சி தடைப்படும். அதனால் உயிர்கள் வாழ்வதற்கும், பரிணாம வளர்ச்சி அடைவதற்கும் மிகப்பெரிய தடங்கல் ஏற்படும். இம்மாதிரியான ஒரு பனியுகத்தில் பூமி சிக்கி, உயிர்கள் எல்லாம் அழியும் நிலை வந்தபோது, எரிமலைகள் தான் அந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து பூமியை காப்பாற்றியிருக்கின்றன. எரிமலைகள் குமுறும்போது, கார்பன் டை ஆக்சைடு என்ற கரியமில வாயு வெளிவரும். இந்த வாயுவிற்கு சூரியனின் வெப்பத்தை பிடித்து வைக்கக் கூடிய குணம் உண்டு. புவி மீண்டும் வெப்பமடைவதற்கு, இந்த வாயுவே காரணம். எரிமலைகள் இந்த வாயுவை அதிகமாக வெளியிட்டதனால் புவி அந்த கடுமையான பனி யுகத்திலிருந்து மீண்டது.
உயிர்கள் உண்ண உணவு
கார்பன் டை ஆக்சைடு என்ற வாயுவிலிருந்துதான், கார்பன் என்ற தனிமத்தை எடுத்துக் கொண்டு, 'கார்போஹைட்ரேட்' என்ற மாவுச்சத்தை பயிர்கள் தயாரிக்கின்றன. அதைத் தின்றுதான் மிருகங்களும், மனிதர்களும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கார்பன் டை ஆக்சைடு வாயுவை எடுத்துக்கொண்ட மரங்கள், அதிலிருந்து பிராணவாயுவை பிரித்தெடுத்து கொடுத்து, நாம் உயிர்வாழ்வதை உறுதி செய்கின்றன. பூமியின் மேற்பரப்புக்கு/ வளிமண்டலத்திற்கு கார்பன் டை ஆக்சைடை வழங்கியதில் எரிமலைகளின் பங்கு பெரியது.
எரிமலைகளிலிருந்து வெளி வரும் லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் காலப்போக்கில் பயிர் நன்கு வளர்வதற்கு வேண்டிய எல்லா வளமும் கொண்ட செழிப்பான மண்ணை வழங்குகிறது. விவசாயிகள் நிலத்திற்கு உரம் இடுவது போல பயிர்கள் நன்கு வளர புதிதாக வளங்களை எரிமலைகள் கொடுத்து வந்திருக்கின்றன.
வசிக்க இடம்
ஹவாய் தீவுகள் ஒரு வளர்ந்து கொண்டிருக்கும் தீவுக்கூட்டம் என்று அறியப்படுகிறது. காரணம், அந்தத் தீவுகளில் உள்ள எரிமலைகள் இருந்து லாவா எனப்படும் எரிமலைக் குழம்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பூமியின் உள்ளிருந்து வெளியே வந்து கடலில் வீழ்ந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கடலில் விழும் குழம்புகள் குளிர்ந்து புதிய நிலப்பரப்பாகிறது. பூமியின் நிலப்பரப்பில் பெரும் பகுதி இவ்வாறு எரிமலைகளால் உண்டாக்கப்பட்டது என் அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
எங்கே எரிமலை?
இந்த புவியை மட்டும் நம்பிக்கொண்டிருந்தால் போதாது, இதற்கு ஆபத்து எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று மனித இனத்திற்கு வேறொரு இடத்தை தேடிக் கொண்டிருக்கும் அறிவியலாளர்கள், வேறொரு கோளை கண்டால் அதில் எரிமலைகள் இருக்கின்றனவா என்று முதலில் தேடுகின்றனர். எரிமலைகள் இல்லையென்றால் அந்தக் கோளை ஒரு இறந்துபோன கோளாகவே கருதுகின்றனர்.
செவ்வாயில் எரிமலைகளை முதலில் கண்டவுடன் மகிழ்ச்சியடைந்த அறிவியலாளர்கள், பின்னர் அது வெகு நாட்களாக செயல் இழந்திருப்பதைக் கண்டவுடன், அங்கு உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைய வாய்புக்கள் குறைவு என்று முடிவுக்கு வந்தனர். உயிர்களின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எரிமலைகள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை இது காட்டுகிறது.
எரிமலைகளை அழிவு சக்தியாய் இருந்த போதும், அது ஒரு பெரும் ஆக்க சக்தியாக இருந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. அதே போன்று இயற்கையின் அழிவு சக்திகளான நட்சத்திரங்களின் வெடிப்பு, புவியின் மேல் வால் நட்சத்திரத் தாக்குதல், வின்வெளிப் பாறைகளின் தாக்குதல் போன்ற பல இயற்கை நிகழ்வுகள் அழிவைக் கொடுத்தாலும், புவிக்கு ஆக்கத்தையும் கொடுத்திருக்கின்றன.
ஜாக்கிரதை நண்பர்களே! எரிமலைகளை ஓர் அழிவுசக்தி மட்டும் தான் என்றால், 'எரிமலை எப்படி பொறுக்கும்'
- ஜெயச்சந்திரன் (
- விவரங்கள்
- பா.மொர்தெகாய்
- பிரிவு: புவி அறிவியல்
சமீபத்தைய ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு
'சமஸ்கிருதமா, அது தமிழர்கள் (திராவிடர்கள்) தாங்கள் மற்ற மக்களிடத்தில் (கிரேக்க, ரோம, யூத மற்றும் பாரசீக மக்களிடத்தில்) கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள அது இயற்கையோடு ஒன்றிப்போன மொழி அதனால் அது எப்பொழுது தோன்றியது என்பது அறிய முடியாது" என்றும் 'ஏன் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வேதங்களின் உலக ஆரம்பத்தின் வரலாற்றுபடி குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கேதான் ஆதாம் மற்றும் ஏவாள் என்று மனுக்குலமே உருவானது" என்றும் 'உலக இனங்களே தமிழினத்தின் தொடர்ச்சியே என்றும் உலகிலே தூய தமிழ்மொழி மற்றும் திரிந்த தமிழ் மொழி (ஆங்கிலம், ஜப்பானிய, சீன, ஜெர்மானிய என்ற அனைத்தும்) என்று இரண்டே மொழிதான் உண்டென்றும்" மார்தட்டிக்கொண்டே அலையும் ஒரே இனம் நம் தமிழ் இனம்தான், என்று நானறிந்த வகையில், நினைக்கிறேன்.
உலகில் உள்ள அனைவருக்கும் தன்னைச் சார்ந்தவைதான் சிறந்தது என்ற எண்ணம் இருந்தாலும் நமக்கு கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது. நாம் இவ்வாறு சொல்லித்திரிந்தாலும் இதுநாள் வரையில் 'இல்லை இல்லை எங்கள் மொழிதான் ஆதிமொழி" என்று யாரும் சொல்ல முன்வரவில்லை, ஆதலால் நம் மொழிதான் ஆதிமொழி என்பது சிலரது வாதம். இப்படி பீத்திக் கொண்டு அலைந்தாலும் நம்மைப் போல ஒற்றுமையின்மைக்கு எடுத்துக்காட்டாக எந்தவொரு இனத்தையும் அடையாளம் காட்டமுடியாது என்பது வேதனைக்குரிய விடயம்.
எது எப்படியோ, ஒரே இடத்திலிருந்துதான் மனுக்குலம் தோன்றியிருக்கவேண்டும், ஒரே மொழியிலிருந்துதான் பல மொழிகள் பிரிந்துசென்றிருக்க வேண்டும் என்பதும் பெரும்பான்மையான மக்களின் கருத்து. சிலபேர் (இப்போதைக்கு) அந்த இடம் குமரிக் கண்டமாயிருக்கக்கூடும் என்றும் அந்த மொழி தமிழ் மொழியாயிருக்கக்கூடும் என்ற கருத்துடையவர்களாயிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்துப்பொய்யா மெய்யா என்பதை ஆய்வுகளை அடுத்தது. இந்தக் கட்டுரையில் அந்த இடம் (மொழியைப் பற்றி பிரிதொரு கட்டுரையில் பார்க்கலாம்) எதுவாயிருந்திருக்கலாம் என்பதைப் பற்றி சமீபத்தில் வெளியான சில அறிவியல் கட்டுரைகளின் மூலம் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
பரிணாமவளர்ச்சிக் கொள்கையின்படி ஆப்பிரிக்காவிலிருந்தே மனிதனாக தன்னுடைய மூதாதையர்களிடமிருந்து பரிணமிக்கிறான். இதற்கு மாற்றாக ஆப்பிரிக்காவிலிருந்து மட்டுமல்ல பல்வேறு இடங்களிலிருந்தும் பரிணாம வளர்ச்சி இருக்கத்தான் செய்கிறது என்ற கொள்கையும் சில பேரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது. தற்போதுள்ள அறிவியல் ரீதியான புரிந்துகொள்ளுதலின்படி ஹோமோ ஹாபிலிஸ் (homo habilis) என்ற முன்னோரிடமிருந்து ஹோமோ எரெக்டஸ் (homo erectus) என்ற நேரே நிற்கக்கூடிய ஆதிகால மனிதன் பரிணமித்ததாக இதுவரை கிடைத்த ஆதாரங்களின் மூலம் கருதப்படுகிறது.
எரெக்டஸ் 1.8 மில்லியன் (1,80,00,000@ ஒரு கோடியே எண்பது இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் பரிணமித்து பின்னர் அவற்றிலிருந்து ஹோமோ நியான்டர்தால்களும் ஹோமோ சேபியன்களும் பரிணமித்ததாகக் கருதப்படுகிறது. இந்த ஹோமோ நியான்டர்தால்கள் (homo neanderthalensis) ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குள் சென்றதாக கருதப்படுகிறது. ஹோமோ சேபியன்கள் (homo sapiens) காலப்போக்கில் பரிணாமவளர்ச்சி கண்டு நவீன மனிதர்களாக 0.2 மில்லியன் (2 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து உலகின் பல்வேறு இடங்களுக்கும் பரவிச் சென்றார்கள் என்பதுதான் தற்போதைய புரிந்துகொள்ளுதல்.
இதன்படி 1,25,000 ஆண்டுகளுக்கு முன் (இப்போதிலிருந்து) ஆசியாவுக்கும், 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவிற்கும், 43,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கும் மற்றும் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆசியாவற்கும் சென்று குடியேறியதாக அறிந்துகொள்ளப்படுகிறது. 43,000 ஆண்டிற்குப் பிறகு ஐரோப்பா சென்ற ஹோமோ சேபியன்ஸ் ஏற்கெனவே அங்கிருந்த நியான்டர்தால்களை அப்புறப்படுத்தினர். இந்த கணக்கின்படி பார்த்தால் இந்தியாவிற்கு 1,25,000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நவீன மனிதர்கள் வந்திருக்கவேண்டும். இவர்களை வகைப்படுத்துவதற்கு அவர்களின் தலை அமைப்பும் அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் பயன்படுகின்றன.
உதாரணமாக ஹோமோ ஹாபிலிஸ் என்னும் உயிரினம் ஓல்டோவன் (oldowan) எனப்படும் கருவிகளையும்ஹோமோஎரெக்டஸ்அச்சுவெலியன்(achuelian)எனப்படும் கைக்கோடரிகளையும் பயன்படுத்தியதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியிருக்கின்றனர். கீழேக் காணப்போகும் இரு தற்போதைய ஆராய்ச்சி முடிவுகள் இந்த புரிந்துகொள்ளுதல்களை தகர்த்தெறிந்து ஒரு கருதுகோள் பெயர்ச்சியை (paradigm shift)
ஆந்த்ரபாய்டுகள் என்பவை குரங்குகள், மனிதக்குரங்குகள் மற்றும் மனிதனை உள்ளடக்கியதாகும். பர்மாவின் ஒரு கிராமத்தில் ஒரு ஆராய்ச்சிக் குழு ஆறு வருடங்களாக தேடியதன் விளைவாக நான்கு கடவாய்ப் பற்கள் கிடைத்தன. அவற்றை ஆராய்ந்து பார்த்தபொழுது அவை 37 மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாகவும் ஆப்ரேஸியா (afrasia) என்ற இனத்தைச் சார்ந்த உயிரினத்தின் பல் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது (சைமானீ மற்றும் பலர், 2012). இந்தப் பல்லின் அமைப்பானது கிட்டத்தட்ட அதே காலத்தில் வாழ்ந்த ஆப்ரடார்ஸியஸ் (afrotarsius) என்ற உயிரினத்தின் பல் அமைப்பிற்கும் ஒத்துப்போகிறது (படம் 1). இது கண்டுபிடிக்கப்பட்டது லைபீரியாவில்.
லிபியாவில் பல்வகையான ஆந்த்ரபாய்டுகள் இருப்பதாலும் ஆப்ரேஸியாவின் பல் அமைப்பானது ஆப்ரடார்ஸியஸின் பல் அமைப்பை விட முந்தையதாக இருப்பதாலும் ஆப்ரேஸியாவே முந்தையாகவும் கணிக்கின்றனர். இதனால் ஆப்பிரிக்காவிலிருந்துதான் உயிர்கள் பரிணாமவளர்ச்சி அடைந்தன என்ற கொள்கை இதனால் அடிபடுகிறது. மனிதனின் பரிணாமவளர்ச்சி ஆப்பிரிக்காவிலே நடந்தாலும் மனிதனுக்கு முந்தைய இனம் ஆசியாவிலே தான் என்பது புதிய அறிவியல்.
இதன்படி, இந்த ஆப்ரேஸியாக்கள் ஏதோ ஒரு வகையில் ஆசியாவை விட்டு ஆப்பிரிக்காவினுள் காலடி எடுத்துவைத்துவிட்டது. பின்னர் பூச்சி தின்னும் இந்த வகையான இந்த ஆந்த்ரபாய்டுகள் மனிதனாக படிப்படியான பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கின்றன என்று பரிணாம வளர்ச்சியின் வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து (out of africa) என்ற பதம் ஆசியாவிலிருந்து (out of asia) என்று மாறியிருக்கிறது. ஆசியாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு இந்த ஆந்த்ரபாய்டுகள் சென்று பின்னர் மனிதனாக பரிணாமவளர்ச்சி அடைந்தனவா அல்லது இங்கேயும் பரிணாமவளர்ச்சி அடைந்தனவா என்பன வருங்கால ஆராய்ச்சி.
சென்னைக்கருகே உள்ள அத்திரம்பாக்கம் என்னும் இடத்தில் அகழ்வாரய்ச்சியானது முனைவர் சாந்தி பாப்பு என்பவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. கி.பி. 1860-களில் ராபர்ட் புரூஸ் ஃபுட் மற்றும் வில்லியம் கிங் ஆகியோர் கண்டுபிடித்திருந்த இடத்தில், கிட்டத்தட்ட 10 மீட்டர் ஆழம் தோண்டப்பட்டது. ஐந்து மீட்டர் ஆழத்திலிருந்து 10 மீட்டர் வரைக்குமான ஆழங்களில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட (3528) அச்சுவெலியன் எனப்படும் இருபுறமும் சப்பையான கல்லலான கருவிகள் (வெட்டவும் கீறவும் பயன்படுத்தப்படும்) கண்டெடுக்கப்பட்டன. ஏற்கெனவே ஆரம்பத்தில் பார்த்தது போல இந்தவகையான தொழில்நுட்பம் ஆப்பிரிக்காவிலிருந்துதான் பரவிவந்திருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
இவை ஹோமோ ஹாபிலிஸ்கள் பயன்படுத்திய ஓல்டோவன் கருவியைக் காட்டிலும் தொழில்நுட்பத்தில் சிறந்தவை. கிட்டத்;தட்ட 1.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆப்பிரிக்காவில் ஹோமோ எரெக்டஸ் எனப்படும் மனித மூதாதையர்கள் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும், அந்தத் தொழில்நுட்பம் இந்தியாவுக்கும் ஐரோப்பாவிற்கும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் அதாவது 0.6 மில்லியன் (6 இலட்சம்) ஆண்டுகளுக்கு முன்தான் வந்திருக்க வேண்டும் என்றும் கணித்திருந்தனர்.
ஆனால் அத்திரம்பாக்கத்தில் கிடைத்த மாதிரிகளை தொல்காந்தவியல் (palaeomangnetism) கணிப்பு முறையின்படியும் (49 மாதிரிகள் மூலம்), அண்டக்கதிர்களின் மூலம் உருவாகியிருக்கும் கதிரியக்க அணுக்கருக்களின் எண்ணிக்கையையும் (cosmogenic radionuclides;10B/26A1) கொண்டு அவற்றின் (6 அச்சுவெலியன் கற்கருவிகள்) வயதை கணக்கிடும் பொழுது அவை 1.07 மில்லியன் ஆண்டுகளுக்கும் முந்தையதாகவும் கண்டார்கள் (பாப்பு மற்றும் பலர், 2011@ டென்னல், 2011). இதுநாள் வரைக்கும் ஆதிமனிதர்கள் இந்தியாவிற்குள் வந்து 50,000 ஆண்டுகள்தான் ஆகின்றன என்ற இந்தக் கணக்கு இப்பொழுது அதைவிட இரண்டு (அல்லது மூன்று) மடங்கு ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கின்றனர் என்பது பெரிய மாற்றம்தான் (படம் 2).
மேலும் இந்தியாவிற்கு வந்தபின்புதான் இந்தத் தொழில்நுட்பம் ஐரோப்பாவிற்குச் சென்றிருக்கிறது என்பதும் புதிய செய்தி. இந்தத் தொழில்நுட்பம் வேறெங்கேயோயிருந்து இந்கு வந்திருக்கின்றதா அல்லது இங்கேயேயிருந்திருந்ததா என்பது வருங்காலத்தைய ஆராய்ச்சிக்கான கரு. கடந்த காலங்களில் இந்த வகை ஆராய்ச்சிகளுக்கு பல்வேறு வகைகளில் (தொழில்நுட்பமின்மை, அதிகாரிகளின் குழப்பமான நடவடிக்கைகள், இந்த விடயங்களில் நாட்டமின்மை மற்றும் நிதிப்பற்றாக்குறை) தடங்கல்கள் இருந்தன என்றும் தற்காலத்தில் இந்தவிதமான தடங்கல்கள் வெகுவாக குறைந்திருக்கின்றன (சௌகான், 2006) என்பதில் கொஞ்சம் உண்மையிருந்தாலும் நம்முடைய வரலாற்றின் மீது நமக்கு நாட்டமில்லை என்பது இன்னும் உண்மையாகவேயிருக்கிறது.
தேசிய கடலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Institute of Oceanography,NIO; கோவா ) மூலம் 1991-1993-ல் நடைபெற்ற கடலடி அகழ்வாராய்ச்சியின் விளைவாக தரங்கம்பாடி-பூம்புகார் கடற்கரையிலிருந்து 5 கிமீ தூரத்தில் வங்காள விரிகுடாவில் 23 மீட்டர் (கிட்டத்தட்ட 70 அடி) ஆழத்தில் மனிதர்களால் செய்யப்பட்ட ஒரு 'U" வடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த உயரம் 5 மீட்டர்களாகவும், 'U" வடிவத்தின் இரண்டு கொம்புகளுக்குமிடையே உள்ள தூரம் 13 மீட்டர்களாகவும் இருந்தது (கௌர் மற்றும் சுந்தரேஷ், 1997). அதன் சில இடங்களில் கட்டிடவேலை நடைபெற்றிருப்பதற்கான அறிகுறியும் தென்பட்டிருக்கின்றன.
கடல் மட்டம் உயரும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ அல்லது தரைப்பகுதி பூமிக்குள் இறங்கும் வேகத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தாலோ சுமார் கி.மு. 9000-க்கு மேல் அந்தப் பகுதி கடலினுள் மூழ்கியிருந்திருக்கவேண்டும் என்று கனடாவைச் சார்ந்த கடலியல் வல்லுநர் முனைவர் கிளென் மில்ன் கணிக்கின்றார். இவ்வகை வடிவங்களைச் செய்வதற்கு முன்னேறிய தொழில்நுட்பம் தேவைப்பட்டிருக்க வேண்டும் எனவும் அது 11,000 வருடங்களுக்கு முன்பு எப்படி சாத்தியப்பட்டிருக்கும் என்றும் NIO-வின் இயக்குநர் முனைவர் கௌர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த 'U" வடிவத்தை நீச்சல் வீரர்கள் கண்டுள்ளனர் ஆனால் இதே போல 20-க்கும் மேற்பட்டவை 30 மீட்டர் ஆழங்களில் இருப்பதாக தொழில்நுட்பம் மிகுந்த பெரிய பரப்பளவுகளை ஊடுகதிர் மூலம் ஆராய உதவும் சோனார் (side scanning sonar) கருவிமூலம் கண்டறியப்பட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் இன்றுவரை அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்றதாகவும் அந்த 'U" வடிவம் எப்பொழுது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் கணிக்க அதிலிருந்து மாதிரிகளை (samples) எடுத்ததாகவும் தெரியவில்லை. கடற்கரையில் 2 மீட்டர் ஆழங்களில் கிடைக்கும் வடிவங்களையே மிகுந்த சிரத்தை எடுத்து ஆராய்ச்சி செய்து பிரசித்திப் பெற்ற இதழ்களில் கட்டுரைகளாக வெளியிட்டுவரும் நிலையில், அரிதான இந்த ஆதாரங்களை அலட்சியம் செய்வது ஆச்சரியத்தை அளிப்பதாக இங்கிலாந்தைச் சார்ந்த சர்ச்சைக்குரிய கடலியல் வல்லுநர் கிரஹாம் ஹேங்காக் தெரிவித்துள்ளார்.
விசாகப்பட்டிணம் பகுதியில், கடற்கரைக்கும் வங்காள விரிகுடாவின் ஆழக்கடலுக்குமிடையே சில கிலோ மீட்டர்களுக்குள் (offshore) நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இப்போதைய கடல் மட்டத்திற்குக் கீழே 100 மற்றும் 85 மீட்டர்களில் கார்பனேட்டுகளாலான பாறை அடுக்குகள் (carbonate reefs) இருப்பதாகக் கண்டறியப்பட்டன (மூர்த்தி, 1989). அந்த அடுக்குகளை கதிரியக்கக் கார்பன் (14C) வயது கணிப்பின்படி முறையே 12,500 மற்றும் 10,700 வருடங்கள் என்று கண்டறியப்பட்டன.
மேலும் அதே பகுதியில் 100 மீட்டர் ஆழத்தில் 2-8 மீட்டர் உயரமான சமமான மண்திட்டுகள் (terraces/benches) இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது (குக்குட்டேஷ்வர ராவ் மற்றும் லா ஃபான்டு, 1954). ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ஆழமற்றக் கடல் பகுதிகளில் 100 மற்றும் 145 மீட்டர் ஆழங்களில் ஊலைட்டுகளால் ஆன மணல் காணப்படுகிறது (சுப்பா ராவ், 1958). அதே பகுதியில் 128 மீட்டர் ஆழத்தில் எடுக்கப்பட்ட ஊலைட்டுகளை கதிரியக்கக் கார்பன் முறைப்படி கணித்ததில் அவை 10,800 வருடங்களுக்கு முன்பு உருவாகியிருக்கின்றன என்று தெரியவந்தது (நாயுடு, 1968). இந்த ஊலைட்டுகள் கடற்கரையில்தான் 2 மீட்டர் ஆழத்தில் உருவாகும் தன்மையுடையது (நேவல் மற்றும் பலர், 1960). இவை எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் கிட்டத்தட்ட 12,500 வருடங்களுக்கு முன்னர் கடல் மட்டம் இப்போதைக்கு இருப்பதைவிட 100 மீட்டர்களுக்கும் கீழேதான் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது (படம் 3). மேலும் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் மற்ற இடங்களைப்போல அதிகமான ஆராய்ச்சிகள் கடந்த நாற்பது வருடங்களாக நடைபெறவில்லை என்பது கசப்பான உண்மை (நாகேஷ்வர ராவ், தனிப்பட்ட தொடர்பு).
மேலே குறிப்பிட்ட ஆராய்ச்சிகளின் முக்கிய கூறுகளை நாம் எடுத்துக்கொண்டால் 1) ஆசியாவிலிருந்தே மனிதனுக்குரிய முன்னோர்கள் (ஆந்த்ரபாய்டுகள்) தோன்றியுள்ளனர், 2) இந்தியாவில், அதுவும் தமிழகத்திலேயே, கிட்டத்தட்ட 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதர்கள் இருந்துள்ளனர், 3) 11,000 வருடங்களுக்கு முன்பே மனிதர்களால் சிக்கலான விதத்தில் (எளிய இயற்கையான முறையில் அல்ல) செய்யப்பட்டு இப்பொழுது கடலுக்கடியில் புதைந்திருக்கும் பல மிகப்பெரிய வடிவங்கள், 4) கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் கடலும் 100 மீட்டருக்கும் கீழே இருந்திருக்கக்கூடிய புவியியல் மாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன என்று தெரியவருகிறது. இந்த நேரத்தில் நம் சங்க இலக்கியங்கள் என்ன சொல்லுகின்றன என்று பார்ப்பது நலம் பயக்கும்.
நம் சங்க கால இலக்கியங்கள் கூறுவது போல, மூன்று சங்கங்களை அமைத்து நம் முன்னோர்கள் தமிழ் வளர்த்திருக்கிறார்கள். 89 அரசர்களை கண்ட முதல் சங்கம் கிட்டத்தட்ட 4,400 ஆண்டுகளாக தென்மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது. இரண்டாவது (இடைச்) சங்கம் கவாடபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு 3,700 ஆண்டுகள் செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த இரு சங்கங்களும் அதனால் படைக்கப்பட்ட இலக்கியங்களும் கடற்கோள் என்னும் சுனாமி மாதிரியான கடல் சீற்றங்களால் அழிந்துவிட்டன. இரண்டாவது சங்கத்தின் இலக்கியமான தொல்காப்பியம் (தமிழ் இலக்கண நூல்) மட்டுமே இப்போதைக்கு நம்முடையே இருக்கும் பழைய நூல். இறுதியாக கடைச்சங்கமானது வடமதுரையை (இப்போதுள்ள) தலைமையிடமாகக் கொண்டு 1850 வருடங்கள் செயல்பட்டு வந்துள்ளது.
கிபி 300-ல் சங்க காலம் முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் ஒரு இடத்தில், பக்ருளி ஆறும் சிறு சிறு குன்றுகளால் சூழப்பட்ட குமரி மலையும் சீறும் கடலினுள் புதைந்தது என்று விவரிக்கப்பட்டுள்ளது. கலித்தொகையில் கடலின் சீற்றத்தால் நாட்டின் பரப்பளவை இழந்த பாண்டிய மன்னன் வடக்கே சேர மற்றும் சோழ மன்னருடன் போரிட்டு நாட்டை விரிவுபடுத்தினான் என்று கூறுகிறது. தொல்காப்பிய விளக்கவுரையில் நச்சினார்க்கினியார் கடல் சீற்றம் 49 நாடுகளை (மாவட்டங்களை) விழுங்கியது என்று கூறுகிறார். அடியார்க்குநல்லார் பக்ருளி ஆற்றுக்கும் குமரி மலைக்கும் இடையே வனமும் குடியிருப்புகளும் உள்ள 1000 மைல்கள் கொண்ட பரப்பளவு இருந்ததாக குறிப்பிடுகிறார். ஆக 11,562 ஆண்டுகளுக்கு முன்பாக முதல் சங்க காலம் ஆரம்பித்திருக்க வேண்டும். இது வங்காள விரிகுடாவில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவுகளுக்கு அப்பாற்பட்டவையாக தெரியவில்லை.
இங்கே ஒரு கோடியே எண்பது இலட்சம் ஆண்டுகளில் இருந்து கி. பி 300 வரைக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒன்று இந்தத் தொடர்பு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருந்திருக்கலாம். இருந்திருந்தால் ஒரு தமிழனாக மிக்க மகிழ்ச்சியுடன் நம் வரலாற்றை எண்ணி எண்ணிச் சுவைப்பேன், பகிர்வேன். இல்லையேல் (மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின்) குமரிக்கண்டம் என்பது உண்மையிலேயே பொய்யான தரவுகளின்மேல் வடிவமைக்கப்பட்ட கொள்கை என்பதை உணர்ந்து கொண்டு, அதையும் பகிர்வேன். இதை மேலும் ஆராய்ச்சிகளால் செழுமைப்படுத்தலாம் என்று சிந்தித்தால், வாருங்கள் சேர்ந்து உழைப்போம். இது நம் காலம். இந்தக் காலத்தில் நாம் மௌனமாயிருந்தால் நம் வரலாறு வேறு எங்கோவுள்ள மனிதர்களால் நிச்சயம் ஒருநாள் தெரியவே வரும் (சிந்து சமவெளி நாகரீகத்தைப் போல), அப்பொழுது நாம் கைகாட்டுகிறவர்களாக அல்லாமல் மீண்டும் கைதட்டுகிறவர்களாகவே இருந்துவிடுவோம். வாருங்கள் தோண்டுவோம், தமிழர்களே!
- பா. மொர்தெகாய் (
மேற்கோள் குறிப்புகள்:
Chaimanee, Y. et al., 2012. Late middle eocene primate from Myanmar and the initial anthropoid colonization of Africa. Proceedings of National Academy of Sciences 109, 10293-10297.
Chauhan, P., 2006. Human origins studies in India: position, problems and prospects. Assemblage 9.
Dennell, R., 2011. An earlier Acheulian arrival in South Asia. Science 331, 1532-1533.
Gaur, A. S. and Sundaresh, 1997. Underwater exploration off Poompuhar and possible causes of its submergence. Bulletin of the Indian Archaeological Society (Puratattva) 28, 84-90.
Kukkuteswara Rao, B. and La Bond, E. C., 1954. The profile of continental shelf off Visakhapatnam coast, Andhra University Memoirs of Oceanogrpahy 2, 69-74.
Nageswara Rao, K., Sakakata, N., Hema Malini, B. and Takayasu, K., 2005. Sedimentation processes and asymmetric development of the Godavari delta, India. SEPM (Society of Sedimentary Geology) 83, 433-449.
Naidu, A. S., 1968. Radiocarbon date of an oolitic sand collected from the shelf off east coast of India. Bulletin of Natural Institute of Science India 38, 467-471.
Newell, N. D., Purdy, E. G. and Imbrie, J., 1960. Bahaman oolitic sand. Journal of Geology 68, 481-497.
Mohan Rao, K. and Rao, T. C. S., 1994. Holocene sea levels off Visakhapatnam shelf, east coast of India. Journal of Geological Society of India 44, 685-689.
Murthy, K. S. R., 1989. Seismic stratigraphy of Ongole-Paradeep continental shelf. Journal of Earth Sciences 16, 47-58.
Pappu, S., Gunnell, Y., Akhilesh, K., Braucher, R., Taieb, M., Demory, F. and Thouveny, N., 2011. Early Pleistocene presence of Acheulian Hominins in south India. Science 331, 1596 - 1599.
Subba Rao, M., 1958. Distribution of calcium carbonate in the shelf sediments off east coast of India. Journal of Sedimentary Research 28, 274-285.
- விவரங்கள்
- ராசிக்
- பிரிவு: புவி அறிவியல்
காதல் வயப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே பொதுவாகப் பிடித்த ஒன்று தான் இந்த நிலா. பல கவிஞர்களை வாழ வைத்த நிலா. நிலவைக் காட்டிச் சோறூட்டிய என் அம்மா முதல் என் பிள்ளைக்காக நிலவைத் தேடும் என் மனைவி வரை அனைவருக்கும் அழகாக் காட்சி அளிக்கும் இந்த நிலவின் ரகசியங்கள் சிலவற்றை பார்க்கலாம்...
சில அறிவியல் குறிப்புகள்:
-
நிலவில் வளி மண்டலம் கிடையாது.
-
காற்றோ வானிலை மற்றமோ அங்கில்லை.
-
2009 தில் தான் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
-
நிலவிற்குச் சென்றவர்களின் காலடித்தடங்கள் 10 மில்லியன் வருடங்கள் அழியாமல் இருக்குமாம்.இதற்குக் காரணம் நிலவில் மண் அரிப்போ காற்றோ இல்லை என்பவைகளாகும்.
-
நிலவின் ஒரு முகத்தை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம், பார்க்கவும் முடியும். நிலவின் மறு முகத்தை செய்ற்கைகோல்கள் மட்டும் தான் இதுவரை படம் பிடித்துள்ளன.
-
பூமியிலிருந்து சுமார் 250,000 மையில்கள் (384,400 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. இந்த தூரத்தை நாம் உணர்ந்துகொள்ள இப்படி எடுத்துக் கொள்ளலாம். ஒரு காரில் 125 கிமி/மணி வேகத்தில் சென்றால் 130 நாள்களில் நாம் நிலவைச் சென்றடையலாம். ராக்கட்டில் 13 மணி நேரத்திலும், ஒளி வேகத்தில் 1.52 நொடிகளிலும் நிலவைச் சென்றடையலாம்.
-
சராசரியாக, சந்திரன் பூமியை 2,288 மைல்கள்/மணி (3,683 கிமீ/மணி) வேகத்தில் சுற்றி வருகின்றது.
-
ஒரே ஆங்கில மாதத்தில் ஏற்படும் இரண்டு பௌர்ணமி நிலவுகளை நீலநிலா என்றழைக்கின்றனர். கடந்த 2012 ஆகஸ்து மாதம் நீல நிலவு நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றி வரும் சந்திரன்:
ஒவ்வொரு நாளும் 12.2 டிகிரிகள் கிழக்கே நகர்ந்து கொண்டு, ஒரு சந்திர மாதத்தில் 29.5 நாள்கள் x 12.2 டிகிரிகள் = 360 டிகிரிகள் சுற்றி வந்து ஒரு மாதத்தினை நிறைவு செய்யும்.
நிலவின் படிநிலைகள் பற்றியச் சில குறிப்புகள்:
அம்மாவாசையிலிருந்து வளரும் நிலா ஏழாவது நாளில் சுற்றின் முதல் கால்பகுதியில் (அரைவட்ட நிலாவாக) இருக்கும். பதினைந்தாவது நாளில் முழு பெளர்ணமியாகும். பின் தேயத் துவங்கும். இருபத்தி மூன்றாவது நாளில் இறுதிக் கால்பகுதியில் (அரைவட்ட நிலவாக) இருக்கும். மீண்டும் ஒரு அம்மாவாசையில் ஒளியிழந்து அடுத்தச் சுற்றிற்காக ஆயத்தமாகும்.
சூரியனைப் போல் சந்திரனும் கிழக்கில் உதித்து மேற்கில் மறையும். உதிக்கும் மற்றும் மறையும் நேரம் மட்டும் நாளுக்கு நாள் மாறுபடும்.
அம்மாவாசை அன்று சூரியன் உதிக்கும் அதே நேரத்தில் சந்திரனும் உதித்து, சூரியன் மறையும் அதே நேரத்தில் மறைந்து விடும்.அடுத்த நாள் சூரியனை விட சற்று தாமதமாக உதித்து சற்று தாமதமாக மறையும். அதனால் தான் முதல் பிறையை மேற்கு வானில் மறையும் பொழுது சற்று நேரம் பார்க்க முடிகிறது. இரண்டாவது நாள் இன்னும் சற்று தாமதமாகி மீண்டும் மேற்கு வானில் மறையும் நேரத்தில் பார்க்க முடியும்.
முதல் அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் முதல் கால்பகுதிக் காலச் சந்திரன்- First Quarter Moon) நன்பகலில் உதித்து நல்லிரவில் மறையும். ஆகையால், சூரியன் மறையும் நேரத்தில் நிலா உச்சியில் இருப்பத்திப் பார்க்கலாம். வேறுவிதமாக, சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு உதிக்கும் என்றும் சொல்லாம்.
பெளர்ணமி அன்று சூரியன் மறையும் நேரத்தில் முழு நிலவு (பெளர்ணமி நிலவு) உதித்து, அடுத்த நாள் காலை சூரியன் உதிக்கும் நேரத்தில் மறையும். ஆகையல் முழு நிலவை இரவு முழுவதும் பார்த்து ரசிக்கலாம்.
படத்தில், சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது நிலவு எதிர்திசையில் இருப்பதைப் பார்க்கலாம்.
இறுதி அரைவட்ட நிலா (ஒரு சுற்றின் இறுதிக் கால்பகுதி நிலவு- Last Quarter Moon) நல்லிரவில் உதித்து நன்பகலில் மறையும். சந்திர மாதத்தின் கடைசி நாள்கள் வர வர நிலவு உதிக்கும் நேரம் நல்லிரவையும் தாண்டியிருப்பதால் அந்த நாள்களில் நாம் நிலவை பார்க்க வேண்டுமென்றால் இரவில் கண் விழிக்க வேண்டும். பெளர்ணமிக்குப் பின் வரும் நாள்களில், நிலவு உதிக்கும் நேரம் சூரியன் மறைந்த நேரத்திலிருந்து சற்று தாமதமாகி தாமதமாகி இறுதிக் கால்பகுதிக்குப் பின் சூரியன் உதிக்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் தான் நிலவைப் பார்க்க முடியும்.
இவ்வாறு தாமதமாக உதித்து வரும் சந்திரன் அம்மாவாசை அன்று மீண்டும் அடுத்த சுற்றிற்காக தயாராகிவிடும். அதாவது நிலவின் உதயம் மற்றும் மறையும் நேரம் சூரியனை ஒத்திருக்கும்.
ஞாயிற்று வழிமாதம்: (Synodic Month)
ஒரு அம்மாவாசையிலிருந்து மறு அம்மாவாசை வரை கணக்கிடப்படும் சந்திரனின் ஒரு முழுச் சுற்று ஞாயிற்று வழிமாதம் அல்லது சந்திர மாதம் எனப்படும். இதற்காக ஆகும் காலம் 29.5 நாள்கள். துல்லியமாகச் சொல்லப் போனால், 29 நாள்கள், 12 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள் ஆகும்.
வானக மாதம்: (Sidereal Month)
பூமியைச் சுற்றி வர, சுற்றைத் துவங்கிய இடத்திலிருந்து மீண்டும் அதே இடத்திற்கு 27 நாள்கள் (27 நாள்கள், 7 மணிகள், 43 நிமிடங்கள், 11.6 நொடிகள்) எடுத்துக் கொள்கிறது. இது வானக மாதம் (Sidereal Month) எனப்படுகிறது.
இதுபோக....:
தினந்தோறும் வளர்ந்தும் தேய்ந்தும் வரும் நிலவினால் பூமியில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. நிலவின் ஈர்ப்பினால் தான் கடல் மட்டத்தில் அவ்வப்பொழுது ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. நிலவின் படித்தளங்களினால் மனித உடலிலும் சில மாறுதல்கள் ஏற்படும். இதற்காகத் தனியே சந்திர முறை கருத்தரிப்புக் கால அட்டவனைகளைச் (Lunar Fertility Calendar) சில மருத்துவர்கள் பயன்படுத்தி வருவது கூடுதல் தகவல்.
முற்றிலுமாகச் சூரியனின் உதவியாலேயே வெளிச்சம் தருகின்ற இரவு நேரத்து விளக்கு. சூரிய ஒளியில் இயங்கும் முதல் சாதனம் இதுவாகத்தான் இருக்கும்.
அறிவியலோடு நிலவை ரசித்தால் இன்னமும் சுவாரசியமாக இருக்கும் என்பதற்கான சிறிய முயற்சியே இந்த ஆக்கம்.
- ராசிக்
- விவரங்கள்
- ராசிக்
- பிரிவு: புவி அறிவியல்
இன்றைய நாளில், நேரத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் என்று யாரும் இருக்க வாய்ப்பில்லை. எதில் எடுத்தாலும் துல்லியமாகச் செயல்படும் மனிதர்களையும் அவன் மூலையின் குழந்தையான கணினிகளையும், GPS வழிகாட்டிச் சாதணங்களையும், இயந்திர மனிதர்களையும் இன்ன பிற கருவிகளையும் இன்று நம் கண் முன்னே பார்க்கத்தான் செய்கிறோம். இந்த நிலையை உருவாக்கியதன் பின்னனி என்னவாக இருக்க முடியும்?? தேவைதான்..!
அன்றைய தேவை நேரநிர்ணயம். அதாவது பிரிட்டன் ஆண்டுவந்த பகுதிகளையும், தன்னுடைய சொந்த பகுதிகளையும் நேரத்தை வைத்து ஒருங்கிணைக்க வேண்டும். வான இயற்பியல் மற்றும் கடல் பயணங்களின் தேவைகளின் ஊடே நேரத்தையும் அதன் கட்டுப்பாட்டையும் உணர்ந்த அன்றைய பிரிட்டன் அரசாங்கம் நேர நிர்ணயத்திற்காகப் பல உலகளாவிய மாநாடுகளை நடத்தியது. பல ஆய்வுக்கூடங்களைத் திறந்தது. உலகளாவிய பல அறிவியல் அறிஞர்களின் துணைக் கொண்டு வகுக்கப்பட்ட நேரக்கணக்கினையும் அதன் நிர்ணயத்தையும் இறுதியில் நடைமுறைப்படுத்திக் காட்டியது. இதன் விளைவாகக் கிடைத்தது தான் இந்த GMT, UT, UTC களெல்லாம்.
GMT, UT, UTC ஆகியவைகளை நாம் பல இடங்களில் படித்ததுண்டு. படித்துவிட்டு குழம்பியதும் உண்டு. GMT என்றால் என்ன? UT அல்லது UTC என்றால் என்ன? என்ற தெளிவில்லாமல் பல இடங்களில் அறிவியல் சம்பந்தமான நேர கணக்குகளின் புரிதல்கள் தடைப்பட்டிருக்கலாம். இவற்றை பற்றி இங்கு காண்போம்....
-
RGO- Royal Greenwich Observatory (ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம்)
-
GMT- Greenwich Mean Time (கிரீன்விச் இடைநிலை நேரம்)
-
UT- Universal Time (உலகளாவிய நேரம்)
-
UTC- Universal Time Coordinated (ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்)
ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greenwich Observatory):
முன்னதாக 1928 முதல், லண்டனில் உள்ள கிரீன்விச் என்ற இடத்தில் இயங்கி வந்த வான் ஆய்வு மையமே ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (The Royal Greewich Observatory- RGO) என்று அழைக்கப்பட்டது. 1948 ல், இந்த ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் (RGO), சசெக்ஸில் உள்ள Herstmonceux Castle என்ற பகுதிக்கு மாற்றப்பட்டது. (இடம் மாற்றப்பட்டாலும் இதுவும் ராயல் கிரீன்விச் வானாய்வுக் கூடம் என்றே அழைக்கப்பட்டது).
இதன் வரலாற்று கட்டிடங்கள் மற்றும் ஆய்வுக் கருவிகள் அனைத்தும் தேசிய கடல்சார் அருங்காட்சியத்துடன் (National Maritime Museum) இணைக்கப்பட்டு, இதன் பெயர் புராண கிரீன்விச் வானாய்வுக் கூடம் (Old Royal Greenwich Observatory- ORGO) என்றானது.
மீண்டும், 1998ல் சசெக்ஸில் இருந்த RGO வின் இயக்கம் நிறைவு பெற்றதைத் தொடந்து, முன்னர் கிரீன்விச்சில் இருந்த புராண ஆய்வுக்கூடம் (ORGO) மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்த முறை இதன் பெயர் Royal Obervatory Greenwich (ROG) என்றானது.
கிரீன்விச் இடைநிலை நேரம் (Greenwich Mean Time- GMT):
கிரீன்விச் இடைநிலை நேரம் - GMT என்பது கிரீன்விச் ஆய்வுக்கூடத்தை அடிப்படையாக கொண்டு போடப்பட்டுள்ள தீர்க்கரேகையை (Zero degree Longitude) பொறுத்து அமையப்பெற்ற சூரிய ஓட்டத்தின் அடிப்படையிலான ஒரு கால அளவு ஆகும்.
அதாவது நடுமட்ட சூரியன் (Mean Sun) சரியாக இந்த ஆய்வுக்கூடத்தின் தீர்க்கரேகையை (Zero degree) ஒத்திருக்கும் பொழுது மணி 12:00 GMT ஆகும். (பூமியின் சுழல் அச்சு 23.5 degree சாய்ந்துள்ளதால், சில நேரம் மெதுவாகவும் சில நேரம் வேகமாகவும் சூரியன் நகர்வது போல் இருக்கும். இதை சரி செய்யவும், ஒரே சீரான சூரிய ஓட்டத்தை அளவிட்டு நேரத்தை குறிப்பதற்காகவே 'நடுமட்ட சூரியனின்' ஓட்டம் இங்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.)
இந்த வகையான நேர அளவே அக்காலத்தில் சிவில் மற்றும் கடல் சார்ந்த பயண பயன்பாட்டிற்கு வகுக்கப்பட்டிருந்தது.
உலகளாவிய நேரம் (Universal Time):
1928 ஆம் ஆண்டில் சர்வதேச வானியல் சங்கம் பரிந்துரைத்ததின் படி அன்றிருந்த கிரீன்விச் சிவில் நேரமே (GMT) உலகளாவிய நேரம் (UT) என குறிப்பிடப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் தான் "உலகளாவிய நேரம் (Universal Time)" மற்றும் "உலகளாவிய நாள் (Universal Day)" அறிமுகமானது.
குறிப்பிட்ட வான் ஆய்வுக்கூடத்தில் வகுக்கப்பட்ட நேரத்தை UT0 ("UT-பூஜ்யம்") என்றனர். பூமியின் சுழட்சியினால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும் பொருட்டு, UT0 உடன் அதற்குரிய நாழிகையில் திருத்தங்கள் (லீப் நொடிகள்) சேர்க்கப்பட்டு UT1 அறிமுகப்படுத்தப்பட்டது. UT0 வின் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT1 எனலாம்.
எனினும் பூமியில் ஏற்படும் பருவ மாற்றம், கடல் சீற்றம்போன்றவற்றால் ஏற்படும் விசையேறுதலுக்காக (Momentum changes) UT1னுடன், சில ஈடேற்றம் செய்யப்பட்டு UT2 உருவாகியது. UT1 ன் புதுப்பிகப்பட்ட வெளியீடு UT2 எனலாம்.
இந்த UT2 நேர அளவிலும் கூட, ஓத உராய்வு (Tidal Friction), மற்றும் அதிவேக ஓத மற்றும் புயல்கள் (High Tides and Winds) போன்ற அதிபயங்கர மாற்றங்களினால் பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தை தன்னகத்தே உட்கொள்ள முடியவில்லை.எனவே, இந்தச் சூரிய அளவு முறையிலும் நேர நிர்ணயத்தின் துல்லியம் எட்டப்படவில்லை. இந்த வகையான நேர நிர்ணயங்கள், சிவில் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்புடையதாக இருந்தது.
சூரியனை வைத்தும், சீரற்ற பூமியின் சுழற்ச்சியை வைத்தும் ஒரு துல்லியமான நேர அளவை குறிப்பிட முடியாத காரணத்தால் அறிவியல் விஞ்ஞானிகள் மாற்று வழியை அறிமுகப்படுத்தினர். அது தான், அட்டாமிக் டைம் (Atomic Time) - அணு நேரம்.
ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC (Coordinated Universal Time):
சீசியம் (Cesium) அணுக்கதிர்களின் நிலையான அதிர்வலைகளின் உதவியால் நேர அளவீடு கருவி ஒன்றின் மூலம் நேரம் கணக்கிடப்படுகிறது. இது அணு நேரம் (அட்டாமிக் டைம்) என்றும் இதன் அளவு அணு நொடிகள் (அட்டாமிக் செகண்ஸ்) என்றும் அழைக்கப்படுகிறது. இது முற்றிலுமாக ஒரு அறிவியல் சாதனமாகும். ஒரு நாளின் அளவாக 86,400 விநாடிகள் கொண்டு ஒரு நாளின் நேரம் கணக்கிடப்படுகிறது. கணக்கிடப்பட்ட நேரத்திற்கும் சூரியனின் ஓட்டத்திற்கும் (Actual Time based on Sun) எந்த தொடர்புமிருக்காது.
ஆயினும், விண்ணில் அமைக்கப்பட்டுள்ள International Earth Rotation and Reference Systems Service (IRES) பூமியின் ஓட்டதை கண்கானித்து, தேவைப்படும் பொழுது UTC யுடன் லீப் நொடிகளை சேர்க்கவும் பரிந்துரைக்கும். அதாவது, கணக்கிடப்பட்ட நேரத்தோடு அதற்குரிய திருத்தங்களும் இடம்பெறும். (இங்கு லீப் நொடிகள் என்பது பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களை/ பின்னடைவுகளை உள்ளடக்கி, கூட்டவோ குறைக்கவோ செய்யப்படும் மணித்துளிகளின் அளவு ஆகும்).
இவ்வாறு பூமியின் சுழற்சிற்கேற்ப கணக்கிடப்பட்ட நேரம் அவ்வப்பொழுது ஒத்தியக்கப்படுவதால் இது ஒருங்கிணைந்த உலகளாவிய நேரம்- UTC (Universal Time- Coordinated) எனப்படுகிறது.
அணு நேரம் UTC, சூரிய நேரமான UT1 ஐ ஒத்து அதிகபட்சமாக 0.9 நொடிகள் வரையில் தான் வித்தியாசத்தில் இருக்க முடியும். இரண்டிற்கும் அதிகபட்சம் 0.9 நொடிகள் வரையில் வித்தியாசம் இருக்கும் என்பதால் மிகத்துல்லியமான GPS, வானியல் கணக்கு போன்ற பயன்பாட்டிற்கு UTC மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். வானியற்பியல் கணக்கிற்காக நாம் பயன்படுத்து UTC நேர கணக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, GMT ---> UT0 ---> UT1 ---> UT2. தற்பொழுது உள்ள GMT ---> UT2 ஆகும்.
UTC கணக்கிடப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நேர நிர்ணயம் ஆகும்
சுருங்கச் சொன்னால், GMT அடைந்த பரிணாம வளர்ச்சியே UTC எனலாம் ! அளவீடு முறை மட்டும் வேண்டுமானால் மாறுபட்டிருக்கலாம்.
- ராசிக்
- நவீன இயற்பியலின் வளர்ச்சியும் அறிவியல் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றங்களும்
- மனிதம் - மாபெரும் குடும்பம்
- உலகின் புதிரான முதல் கொலையும், மிகப் பழமையான மனித இரத்தமும்
- புவி அமைப்பின் சில உச்சங்கள்
- கடல் - புவியின் தோல்!
- கண்டம் வாரியாக உயர்ந்த பகுதிகள்
- உலகின் ஆழமான ஏரிகள், குகைகள், எரிமலைகள்
- உலகின் முக்கிய கடல்கள்
- உலகின் முக்கிய சிகரங்கள்
- உலகின் மிக நீளமான ஆறுகள்
- உலகின் முக்கிய ஏரிகள்
- உலகின் புகழ் பெற்ற அருவிகள்
- தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணம் எது?
- அரோரா - அசையும் துருவ ஒளி
- தென்கோடி உலகம் - அண்டார்க்டிகா
- துருவ உலகின் சொந்தக்காரர்கள்!
- துருவப் பகுதியில் 24 மணி நேர இரவும், 24 மணி நேர பகலும்
- அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி
- பழுப்பு நிறக்கண்கள் உண்டாவதேன்?
- மூலக்கூறும் மின்னணுக்களும்