கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: புவி அறிவியல்
இயற்கையின் அடிப்படையான விசைகள் நான்கு. அவை புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, அணுக்களுக்கு உள்ளே இருக்கும் பலவீனமான விசை (weak forces) மற்றும் பலம்வாய்ந்த விசை (strong forces).
இந்த விசைகள் செல்வாக்கு செலுத்தும் தூரங்களும், அதன் சக்திகளும் வெவ்வேறு அளவில் இருக்கும்.
இதில் புவியீர்ப்பு விசை நம் அனைவருக்கும் தெரியும். பெரிய நிறை உள்ள பொருட்கள், குறைந்த நிறையுள்ள பொருள்களை ஈர்க்கும் விசை. மின்காந்த விசை என்பது ஒளி போன்ற மின்காந்தப் புலன்களால் ஏற்படுவது.
பலவீனமான விசை என்பது கதிரியக்கம் என்று சொல்லப்படுகிற நிகழ்வுகளில் ஏற்படுவது. பலம்வாய்ந்த விசை என்பது அணுக்களையும், அணுத்துகள்களையும் ஒன்றை ஒன்று கவர்ந்து இணைத்து வைக்கும் விசை.
நான்கு விசைகளிலும் இந்த பலம்வாய்ந்த விசையே மிகவும் பலமானது. ஆனால் குறைந்த தூரமே அதன் செல்வாக்கு இருக்கும். மாறாக ஈர்ப்பு விசை நீண்ட தூரம் செல்வாக்குச் செலுத்த முடியுமென்றாலும் மற்ற விசைகளோடு ஒப்பிடும் போது பலவீனமானதே ஆகும்.
இந்த நான்கு விசைகள் தவிர மேலும் ஒரு விசை இருக்குமோ என்ற ஒரு கோட்பாடு அறிவியலாளர்களை சமீபகாலமாக வழிநடத்திச் செல்கிறது.
கடந்த மார்ச் 22ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் (CERN) ஆய்வு நிறுவனத்தில் இருந்து ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. அது அய்ந்தாவதாக ஒரு அடிப்படை விசை இந்த பிரபஞ்சத்தில் நிலவுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
அப்படி ஒரு அய்ந்தாவது விசை கண்டுபிடிக்கப்படுமானால் அது இயற்பியல் உலகில் ஒரு பெரும் புரட்சியாகத்தான் இருக்கும். இதுவரை அறிவியல் உலகம் இறுதிப்படுத்தி வைத்திருந்த, அணுத் துகள்களையும் விசைகளையும் பற்றி உருவாக்கி வைத்திருந்த "நிலையான மாதிரி" (standard model) என்ற கோட்பாட்டை மாற்ற வேண்டியது இருக்கும்.
1930களில் ஆரம்பித்து பல்வேறு மாற்றங்கள், முன்னேற்றங்களில் பயணித்த அணுத் துகள்களைப் பற்றிய ஆய்வு 1970களில் ஒரு "நிலையான மாதிரி"யாக இறுதியானது போல் தோன்றியது.
ஏறக்குறைய 50 வருடங்களாக அது மீண்டும் மீண்டும் பல ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு, அதன் உறுதித்தன்மை பலப்படுத்தப் பட்டது. அந்த "நிலையான மாதிரியை" ஆட்டம் கொள்ள வைக்கிறது இந்த புதிய கண்டுபிடிப்பு.
"நிலையான மாதிரி" என்பது என்ன? இயற்கையில் காணும் பொருள்களின் அடிப்படையானக் கட்டுமான அலகு (building blocks of matter) என்ன என்பதை வரிசைப்படுத்தினால் நமக்கு கிடைப்பதுதான் இந்த "நிலையான மாதிரி".
12 அணுத் துகள்களும், நான்கு அடிப்படையான விசைகளும் இணைந்து உருவாகும் அடிப்படைக் கட்டுமான அலகே இந்த நிலையான மாதிரியின் அடிப்படை..
உலகின் அனைத்து பொருள்களுக்கும் அடிப்படையான கட்டுமானப் பொருள் அணுக்கள் என்பதும்; அணுக்களுக்கு உள்ளே புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகிய துகள்கள் இருப்பதையும் பள்ளிப் பருவத்தில் நாம் படித்திருப்போம். அதை ஏறக்குறைய ஒதுக்கி வைத்துவிட்டு இன்னொரு உலகத்திற்குப் பயணிப்போம்.
இந்த "நிலையான மாதிரி" சொல்வது: அணுக்களில் இரண்டு வகையான துகள்கள் உள்ளன. அவை குவார்க்குகள் (quarks) மற்றும் லெப்டான்கள் (leptons) எனப்படுகின்றன. குவார்க்குகளில் ஆறு வடிவங்களும், லெப்டான்களில் ஆறு வடிவங்களும் உள்ளன. நமக்கு எளிதாக அறிமுகமான எலக்ட்ரானும், லெப்டானின் ஒரு வடிவம்தான். புரோட்டானும் நியூட்ரானும் கூட இத்தகைய அணுத் துகள்களின் கூட்டுச் சேர்க்கையால் உருவாகும் பொருள்களே அன்றி அவை தனித்த பொருள்கள் அல்ல.
இந்த பன்னிரண்டு வகையான அணுத் துகள்களோடு, சக்தியை பரிமாறிக்கொள்ளும் துகள்களும் உண்டு. எந்த விதமான சக்தியை அவை எடுத்துச் செல்கின்றன, பரிமாறிக் கொள்கின்றன என்பதைப் பொருத்து அவை வேறுபடுகின்றன.
ஒளி போன்ற மின்காந்த விசையை எடுத்துச் செல்பவை ஃபோட்டோன்கள் (photons) எனவும்; துகள்களை, அணுக்களை இணைக்கும் பலமான விசையை எடுத்துச் செல்பவை குளுவான்கள் (gluons) எனவும் அழைக்கப்படுகின்றன.
அணுக்களின் கதிரியக்கச் செயற்பாட்டிற்கு காரணமான பலவீனமான விசையின் துகள்களாக w மற்றும் z போசான்கள் (bosons) இருக்கின்றன. புவி ஈர்ப்பு விசைக்கு கிராவிடான் என்ற விசைத்துகள் காரணமாக கருதப்பட்டாலும் அது இன்னும் கண்டுபிடிக்கப் படாமல் கருதுகோளாகவே இருக்கிறது.
இவற்றோடு 2012ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போஸான் துகளும் உண்டு. ஹிக்ஸ் போஸான் துகளின் புலத்தின் (field) காரணமாகவே பல பொருள்களுக்கு நிறை (mass) கிடைக்கிறது.
இந்த ஹிக்ஸ் போஸான் தான் ஏற்கனவே சொல்லப்பட்ட "நிலையான மாதிரி" என்பதில் விடுபட்டுப் போய், நீண்டகாலமாக அறிவியல் உலகம் தேடிக்கொண்டிருந்த, "விசையை எடுத்துச் செல்லும் துகள்". பத்து வருடங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்தின் செர்ன் (CERN) ஆய்வகத்தில் லார்ஜ் ஹைட்ரான் கொலைடர் (Large Hydran Collider - LHC) என்ற ஆய்வுக் கருவி உருவாக்கப்பட்டபோது “கரும் பொருள்” (Dark Matter) போன்ற இயற்பியலின் பல ஆழமான மர்மங்களை அது வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிக்கப்பட்டதற்கு மேலாக அதன் மூலமாக வேறு எதுவும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலை அறிவியலாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.
ஆனால் தற்போது, அதாவது மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்டிருக்கும் ஒரு ஆய்வறிக்கை, பல லட்சக்கணக்கான துகள்களின் மோதலால் கிடைத்த தகவல்கள், மனிதனுக்கு தெரிந்த இந்த நான்கு விசைகள் தவிர புதிய ஒரு விசையை ஏற்றிச்செல்லும் துகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதை அறிவிக்கிறது.
ஆனாலும், இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவியலாளர்கள் எச்சரிக்கையுடன்தான் அணுகுகிறார்கள். 1970களில் கட்டி உருவாக்கப்பட்ட "நிலையான மாதிரி" என்னும் தத்துவக் கொள்கை பல ஆய்வுகளை கண்டிருந்தாலும், அதுவே சரியானது என இதுவரை நிலைத்து நின்றிருக்கிறது. எனவே அந்த "நிலையான மாதிரி"யில் இருந்து வேறுபடும் ஒரு கொள்கையை முன் வைக்கும்போது பலமான ஒரு ஆதாரம் தேவை.
ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி, இந்த "நிலையான மாதிரி" என்பது அடிப்படைத் துகள்களான லெப்டான்கள் மற்றும் குவார்க்குகள் ஆகியவற்றைப் பற்றியும் அவற்றில் ஊடாடும் விசைகள் பற்றியும் விவரிக்கிறது.
இந்த குவார்க் துகள்களில் பல வகை உண்டு. அவற்றுள் சில நிலையற்றவை. அவை அழிந்து வேறு துகள்களாக மாற்றமடைகின்றன. இதுபோன்ற ஒரு குறிப்பிட்ட வகை குவார்க்குகள் அழிந்து வேறு துகள்களாக மாறும் போது வினோதமாக அவை செயல்படுவதை அறிவியலாளர்கள் 2014இல் கண்டுபிடித்தனர். அதுவே அய்ந்தாம் விசை ஒன்று இருப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்னறிவித்தது.
அந்த வினோத செயல்பாடு உடைய குவார்க்குகள், "அழகு குவார்க்குகள்" (beauty quarks) என அழைக்கப்படுகின்றன. அவை அழிந்து லெப்டான்களாக மாறும்போது, லெப்டான்களின் ஒருவகையான, எலக்ட்ரான்கள் ஆக மாறுவதைக் காட்டிலும், குறைவாகவே லெப்டான்களின் இன்னொரு வகையான ம்யூவான்கள் (muons) ஆக மாறுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது வினோதமானது. ஏனெனில் ம்யுவான் என்பது எலக்ட்ரானை ஒத்த ஒரு துகள்தான். ஒரே வேறுபாடு அவை எலக்ட்ரானை விட 200 மடங்கு அதிக நிறை உள்ளதாக இருக்கும்.
சாதாரணமாக நாம் எதிர்பார்க்கக் கூடியது இந்த "அழகு குவார்க்குகள்" எலக்ட்ரான்கள் ஆக மாறும் அளவிற்கு ம்யுவான்களாகவும் மாறவேண்டும் என்பதே. இவ்வாறு வேறுபட்ட அளவுகளில் மாறுவது என்பது இதுவரை நாம் கண்டிராத துகள்கள், இந்த அழிவு (decay) நிகழ்வில் பங்குப் பெறுவதாக தோன்றுகிறது.
2014 இல் கண்டுபிடிக்கப்பட்ட இந்த முடிவுகள் குழப்பமடைய வைப்பதாக இருந்து ஒரு உறுதியான முடிவுக்கு வர முடியாமல் இருந்தது.
ஆனாலும் அறிவியல் அறிஞர்கள் இதை விடுவதாக இல்லை. 2019இல் இந்த "அழகு குவார்க்குகளின்" அழிவு பற்றி மீண்டும் அளவீடுகள் செய்யப்பட்டன. ஆனால் இப்போது 2015, 2016 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற விவரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனாலும் அய்ந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட தெளிவான ஒரு பார்வை கிடைக்கவில்லை.
தற்போதைய முடிவுகள், 2017, 2018 ஆம் ஆண்டுகளில் கிடைத்த தரவுகளையும் வைத்து இரட்டிப்பாக்கப்பட்ட தரவுகளிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன.
இந்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருக்கும் இந்தியரான மிதேஷ் பட்டேல், துகள் இயற்பியலில் (particle physics) இருபது வருடங்களாக ஆய்வு செய்யும் அவருக்கு, இது ஒரு கிளர்ச்சியூட்டும் விஷயமாகவே தெரிவதாகக் கூறுகிறார்.
இந்த தரவுகளில் இருந்து வரும் முடிவுகள் இந்த "அழகு குவார்க்குகள்" 100 முறை எலக்ட்ரான் ஆக அழிந்து உருமாறினால், 85 முறையே அவை ம்யூவான்களாக உருவாகின்றன என தெரிவிக்கின்றன.
இந்த முடிவுகளின் நிச்சயமற்ற தன்மையும் (uncertainty) மிகவும் குறைந்திருக்கிறது. அதை அறிவியல் ஆய்வாளர்கள் மொழியில், மூன்று சிக்மா (sigma) அளவிற்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள். ஒரு ஆய்வு அல்லது கண்டுபிடிப்பு உறுதியானது என்று சொல்வதற்கு இந்த நிச்சயமற்ற தன்மை அய்ந்து சிக்மா அளவிற்கு இருக்க வேண்டும்.
இந்த குவார்க்குகளின் அழிவில் உள்ள வேறுபாடுகள் தெரிவிப்பது, அதில் இதுவரை கண்டறியாத புதிய துகள்களின் செல்வாக்கு இருக்கலாமோ என்பதுதான் அறிவியலாளர்களின் அனுமானம்.
இதற்கான ஒரு சாத்தியப்பாடு: அவை ஒரு புது வகையான, சக்தியை எடுத்துச்செல்லும் "Z Prime" என்னும் ஒரு அடிப்படைத் துகளாக இருக்கலாம். அந்த விசை மிக மிக பலவீனமாக இருப்பதால் நாம் இதுவரை பார்த்திராது இருந்திருக்கலாம். அவை எலக்ட்ரான்களிலும் ம்யூவான்களிலும் வெவ்வேறு விதமாக ஊடாடலாம்.
மற்றொரு சாத்தியப்பாடு: இதுவரைக் கருதுகோளாக உருவாக்கிக் கருதப்படும் "லெப்டோ குவார்க்குகள்" (lepto quarks) என்னும் ஒரு துகள், அழிந்து குவார்க்குகளாகவும், லெப்டான்களாகவும் உருவாக வாய்ப்பு உள்ளதே அது.
1970களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட "நிலையான மாதிரி" என்னும் கோட்பாட்டில் இருந்து மாற வேண்டிய தருணத்திற்கு நாம் இந்த ஆய்வின் மூலம் வந்திருக்கலாம். எனினும் ஒரு தனித்த ஆய்வு இதற்காக நடத்தப்படுவதே இதை உறுதிப்படுத்துவதாக அமையும். அல்லது ஜப்பானில் நடைபெறும் "பெல்லே 2" (Belle II) என்ற சோதனை கூட இதுபோன்ற அளவீடுகளை கொணரலாம்.
"நிலையான மாதிரி" என்பதற்கு அப்பாலும் இருக்கும் பெரும் அளவிலான படத்தின் ஒரு பகுதியை இந்த கண்டுபிடிப்பின் மூலம் நாம் பார்க்கிறோம். இது "துகள் இயற்பியலில்" இதுவரை உருவான “கரும்பொருள்” போன்ற பல மர்மங்களை வெளிப்படுத்த காரணமாக அமையலாம். அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போஸானின் தன்மைகளை அறிய உதவலாம்.
அறிவியல் தத்துவங்களை முன் வைப்பவர்களுக்கு அடிப்படை துகள்களையும், அடிப்படை விசைகளையும் ஒன்றுபடுத்துவதற்கு இது உதவலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நாம் இதுவரை சிந்தித்திராத வேறு பல விஷயங்களையும் வெளிப்படுத்தலாம்.
இவ்வளவு சந்தேகங்களுக்கு இடையில், இந்த ஆய்வு முடிவுகளைக் கண்டு, நாம் உண்மையிலேயே கிளர்ச்சி அடையலாமா? ஆம் அடையலாம். ஏனெனில் இது போன்ற ஆய்வு முடிவுகள் அடிக்கடி நமக்கு கிடைப்பதில்லை. எனினும் தேடல் தொடர்கிறது.
அதே நேரத்தில் நாம் எச்சரிக்கையாகவும் தன்னடக்கமாகவும் இருக்க வேண்டிய கட்டம் இது.
ஏனெனில் மிதமிஞ்சிய ஆய்வு முன்வைப்புகள் மிதமிஞ்சிய ஆதாரங்களை கேட்கும். காலமும் கடின உழைப்பும் மட்டுமே தற்போது நாம் புரிந்து வைத்திருக்கும் துகள் இயற்பியல் அறிவிற்கு அப்பால் ஒரு காட்சியை இதன் மூலம் பார்த்து இருக்கிறோமா என்பதைத் தெரிவிக்கும்.
(நன்றி: the conversation, CERN இணைய தளங்கள்)
- இரா.ஆறுமுகம்
- விவரங்கள்
- சதுக்கபூதம்
- பிரிவு: புவி அறிவியல்
தமிழகத்தில் சங்க காலம் தொட்டு வழங்கி வந்த தத்துவம் மற்றும் மதங்களில் ஒன்று ஆசீவகம். ஆசீவக மதம் சாங்கியம், சமணம், சார்வாகம் மற்றும் பௌத்தம் போன்று இறை மறுப்புக் கொள்கையை உடையது. ஆனால் சமணம் மற்றும் பௌத்தம் போன்று இல்லாமல் வினை மறுப்புக் கொள்கை கொண்டது.
அதே நேரத்தில் சார்வாகம் போல முழுமையாக இல்வாழ்க்கையை மட்டும் நோக்கும் உலகாயுத மதமும் அன்று. இந்த மதம் ஊழ் மற்றும் தியானங்கள் அடிப்படையிலான மதம் ஆகும். இதன் கொள்கைகள் ஓரளவுக்குச் சமணத்தின் கொள்கைகளோடு ஒத்து உள்ளது.
உலகம் தோன்றியது எப்படி? உலகை கடவுள் படைத்தாரா? முதற்பொருள் எது என்பது குறித்த ஆராய்ச்சிகள் தத்துவ ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் தனித் தனியே பன்னெடுங்காலமாக உலகெங்கிலும் நடைபெற்று வந்தன.
அறிவியல் ரீதியாக ஆராய்பவர்கள் முதலில் அவர்கள் காலத்தில் உறுதி செய்யப்பட்ட அறிவியற் உண்மைகள் அல்லது அடிப்படைக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய கோட்பாடுகளை முன் வைத்து, பிறகு அவை அறிவியற் வளர்ச்சியால் பிற்காலங்களில் வெளி வரும் உண்மைகள் மற்றும் தற்கால அறிவியல் மேற்பட்டால் கிடைக்கப்பட்ட கருவிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
தத்துவ ரீதியாக விடை காண முயன்ற தமிழ் மரபினர், "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்ற அடிப்படையில் உள் நோக்கிய சிந்தனையில் ஆழ்ந்து அது பற்றிய தனது அறிவுத் தேடல்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கருத்தும், அவர்கள் வாழ்ந்த பிறகு பல்லாண்டு காலம் பிறகு தோன்றிய அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்போடு சில இடங்களில் ஒத்துப் போவது ஆச்சரியமே. அதன் அடிப்படையில் பரத்தால் ஆசீவக மதத்திலிருந்த கோட்பாடுகளுக்கும், தற்போதைய அறிவியற் கோட்பாடுகளுக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்..
ஆசீவக மதத்தின் தத்துவ நூல்கள் அனைத்தும் அழிந்து விட்டாலும் அது பற்றிய கருத்துகளை மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் (பரபக்கம்) போன்ற பிற மதங்களைச் சார்ந்த நூல்களில் இருந்து தான் பெருமளவு அறியப்படுகிறது.
தொகுதி அண்ட கோட்பாடும் (Block Universe), நியதிக் கொள்கையும்
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம் வெளிப்படுத்தும் ஒரு அறிவியற் கோட்பாடு தொகுதி அண்டக் கோட்பாடு (Block universe). நாம் நினைத்து கொண்டிருப்பது போல் நீளம், அகலம் மற்றும் உயரம் என்ற முப்பரிமாணங்கள் தனியாகவும், காலம் என்ற பரிமாணம் தனியாகவும் இருப்பது உண்மை அல்ல என்று உறுதிப்படுத்தி உள்ளது ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவம். முப்பரிமாணங்களை உள்ளடக்கிய வெளி மற்றும் காலம் இணைந்த நான்கு பரிமாணங்களைக் கொண்டது இந்த பேரண்டம் என்று விளக்குகிறது.
பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையப்பட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே.
இந்தக் கொள்கையின் படி ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட்ட செய்கையினால் நிகழ்வுகள் மாற்றம் பெறுவது இல்லை. அவை அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்டவை. ஒருவருடைய செயல்பாடுகள் மூலம் நடக்க இருக்கும் நிகழ்வை மாற்ற முடியாது.
இனி ஆசீவக தத்துவத்திற்கு வருவோம். செயல்கள் நிகழும் முன்னரே அவ்விதம் நிகழ்வதனை சக்தியையே இந்த வரையறுக்கும் ஆற்றல் ஒன்றுண்டு. அவ்வாற்றலே ஊழ் என்று அழைத்தனர். ஆசீவகக் கொள்கையில் மிக முக்கியமானது நியதிக் கொள்கை ஆகும் சங்க காலத்தில் இவற்றை ஊழ் என்றும் தெய்வம் என்றும் அழைத்தனர்.. ஆசீவகர்களின் நியதி கொள்கையை நான்கு கோட்பாடுகளாக வரையறுப்பர். அவை
1. ஆவது ஆகும் - எப்பொருள் எங்கனம் ஆக்கம் பெறுமோ, அப்பொருள் அவ்வாறு ஆக்கம் பெறும்.
2. ஆம் ஆங்கு ஆம் - ஆகும் முறைப்படி ஆகும்
3. ஆந்துணையாம் - ஆகும் அளவு ஆகும்.
4. ஆம் பொழுது ஆம் - எவ்வளவு முயன்றாலும் ஆகும் காலத்தில் தான் ஆகும்.
இதை நீலகேசியின் பாடலில் கீழ் வருமாறு கூறப்பட்டுள்ளது
அதுவா வதுவு மதுவாம் வகையு
மதுவாந் துணையு மதுவாம் பொழுதுஞ்
சதுவா நியதத் தனவா வுரைத்தல்
செதுவா குதலூஞ் சிலசொல் லுவன்யான்
-(704)
எனவே ஆசீவகக் கொள்கைபடி எல்லா நிகழ்வுகளும் நியதிக்கு உட்பட்டவை. ஆதலின் எதிர்காலத்தில் நடைபெற உள்ள நிகழ்வுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை. இதன் அடிப்படையில் Bock Universe கோட்பாடு விளக்கும் கீழ்காணும் கருத்துகளை படித்து பாருங்கள். ஆசீவக கோட்பாட்டிற்கும், சார்பியல் தத்துவம் சார்ந்த Block Universe கோட்பாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும் The future is predetermined and therefore there can not be any thing as free will.
நாம் அடிக்கடி கூறும் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!" என்ற பாடல் ஆசீவக தத்துவத்தை விளக்கும் பாடலே. அந்தப் பாடலின் பிற்பகுதியை காணுங்கள்
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
அதன் பொருள்
"மின்னலுடன் வானத்திலிருந்து விழும் குளிர்ந்த நீர்த்துளிகள் மழையாகப் பெய்து, அளவிலடங்காது மலையில் உள்ள கற்களை அலைத்தொலிக்கும் மிகப்பெரிய ஆற்று நீராகச் செல்லும் வழியில் மிதந்து போகும் தெப்பம் போல், நமது (அரிய உயிர்) வாழ்க்கை, முறைப்படி அமையும் என்பதை அறிஞர்களின் அறிவுரைகளின் வழியே அறிந்தோம். ஆதலால், பெருமைக்குரிய பெரியோரைக் கண்டு ஆச்சரியப்படுவதும் இல்லை; சிறியோரை இகழ்தலும் இல்லை."
ஆற்று நீரில் அடித்து செல்லும் தெப்பம் போன்றது நமது வாழ்க்கை. தெப்பத்தின் பாதை ஆற்று நீர் கையில் உள்ளது போல், நமது வாழ்க்கை பாதை முன்பே தீர்மானிக்கப்பட்ட நியதி அடிப்படையில் ஆனது. எனவே அருஞ்செயல் செய்தார் என்று பெரியோர் என்று வியத்தலும் தேவை இல்லை. திறமை இல்லாதவர் , சிறியோர் என்று இகழ்தலும் தேவை இல்லை என்று கூறுகின்றது.
திருக்குறளில் ஊழ் என்ற அதிகாரத்தில் இருக்கும் குறள்கள் ஆசீவகம் கூறும் நியதிக் கொள்கையை விளக்குவதாகவே உள்ளன.
காலம் என்று உண்டா?
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை மேலும் ஆழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் விஞ்ஞானிகள் நிறுவுவது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என்று வேறுபட்ட காலங்கள் இல்லை. காலம் என்பது முப்பரிமாண உலகில் கடந்து போகாது. எனவே காலம் என்பது இயற்பியல் அடிப்படையில் உண்மை அல்ல. அது ஒரு மாயை என்று பல்வேறு அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
(Huw Price, professor of philosophy at Cambridge University, claims that the three basic properties of time come not from the physical world but from our mental states: A present moment that is special; some kind of flow or passage; and an absolute direction. …)
நியதி கொள்கையின் அடிப்படையில் ஆராய்ந்த ஆசீவக ஞானிகள் அதே முடிவிற்கு வருகிறார்கள். காலம் என்று ஒன்று இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள். கீழ் காணும் நீலகேசி பாடல் அதை விளக்குகிறது.
கணமே யெனினும் மொருகா லமிலை
--------------------------------நீலகேசி 677
அதன் பொருள் கணம் என்ற கோட்பாடு இருந்தாலும் ஒரு காலம் என்ற கோட்பாடு இல்லை என்பதாகும். அனைத்து நிகழ்வுகளும் முன் கூட்டியே தீர்மானிக்கப் பட்டவை என்பதால் எதிர்கால நிகழ்வு, கடந்த கால நிகழ்வு, நிகழ் காலம் என்பது கற்பனையே என்று கூறுகின்றனர். இங்கும் ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தோடு ஆசீவகம் ஒத்துப் போகிறது. ஐன்ஸ்டீன் 1955ம் ஆண்டு இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் கூட நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர் காலம் என்பது மாயையே என்று கூறியுள்ளார்.
பெருவெடிப்பு உலகத் தோற்றமும் மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடும்
தற்கால அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் இந்த பேரண்டம் தோன்றக் காரணமான பெரு வெடிப்பு இயற்கையாக நிகழ்ந்தது. ஆசீவக அடிப்படை தத்துவத்திலும் பொருளின் ஆக்கத்திற்கு காரணம் என்பது வேண்டாம் என்று ஆசீவக பிரிவினர் கருதினர். நீலகேசியில் ஆசீவக குருவான பூராணன் என்பவனை அறிமுகப்படுத்தும் போது கீழ்வருமாறு கூறுகின்றனர்.
காரணம் வேண்டாக் கடவுட் குழாந்தன்னிற்
பேருணர் வெய்திப் பெரிதும் பெரியவன்
(668)
அதற்கு ஒப்பீடு இல்லாத கல்வி நிலையை உடையவனும், செயலுக்கு காரணம் உண்டு என்பதை விரும்பாத கூட்டத்திலிருந்து வந்தவன் என்பது பொருள். "காரணம் வேண்டாக் கடவுட் குழாம்" என்று ஆசீவகர்கள் கூறுவது அவர்கள் காரணத்தால் காரியம் நிகழ்கிறது என்று ஏனைய பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் இந்து மதத்தினர் கூறும் கருத்தை ஏற்றுக் கொள்ளாமையினாலும்.
ஆசீவகர்களின் தத்துவத்தில் முக்கியமானவற்றில் ஒன்று அவிசலித நித்தியத்துவம் அல்லது மெய்மையின் மாறாத்தன்மை கோட்பாடு அதன் படி ஆசீவகத்தில் அணுக்களையும் அவை தொடர்பான மூலப்பொருட்களையும் பற்றிக் குறிப்பிடும் போது அவை நிரந்தரமானவை என்று கூறுகின்றனர். (அவர்கள் தான் முதலில் அக்கொள்கை பற்றியும் கூறி உள்ளனர். அதை அடுத்துப் பார்ப்போம்).
இதனை நீலகேசியில் கீழ் வருமாறு கூறுகின்றனர்.
"எப்பாலும் தான்கெடா இவ்வளவும் தோன்றா" (696)
"இல்லாது தோன்றா கெடாஉள் என"(698)0
அடிப்படை அணுக்கள் மாற்றம் அடைதலன்றி என்றும் நிலை பெற்றிருக்கும் என்பது பொருள் இதனை "உள்ளது கெடாது இல்லது தோன்றாது" என்றுரைக்கின்றனர்.
ஆசீவகத்தைப் பற்றி மணிமேகலையில் சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.
ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா (126)
என்று கூறுகின்றனர். அதன் பொருள் தொடக்கமில்லாத , அடிப்படையான அணுக்கள், சிறிதுங் கெட்டு அழியாதவை என்பது ஆகும்.
தற்போதைய வான் இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்துப்படி இன்று உலகத்தில் இருக்கும் பொருட்கள் யாவும் (மனிதன், விலங்கு, தாவரம், அண்டம் என அதிலும் இருக்கும் அடிப்படை பொருட்கள்) பெருவெடிப்பின் முதலில் காலம் தோன்றிய போது தோன்றிய பொருட்கள் தான். இடையில் புதிய அடிப்படை பொருட்கள் தோன்றவோ அழியவோ இல்லை என்கிறார்கள் அவை அழிவின்றி மாற்றமடைகிறது என்கிறார்கள்.
(According to most astrophysicists, all the matter found in the universe today -- including the matter in people, plants, animals, the earth, stars, and galaxies -- was created at the very first moment of time, thought to be about 13 billion years ago.
அவிசவித நித்தியத்துவம் தத்துவத்தையும் , தற்போதைய வானியல் அறிவியலையும் ஒப்பீடு செய்து பாருங்கள்.
மூலப்பொருட்கள்
உலகம் தோன்றுவதற்குத் தேவையான மூலப்பொருட்கள் குறித்த குறிப்புகள் தொல்காப்பியத்திலேயே உள்ளன. பெரும்பான்மையான இந்தியத் தத்துவங்கள் மற்றும் தொல்காப்பியம் , நீர், காற்று, நெருப்பு ஆகாயம், நிலம் ஆகிய ஐந்து பொருட்களையும் மூலப் பொருட்களாகக் குறிப்பிடுகிறது. ஆனால் ஆசீவகத்தினர் மூலப்பொருட்களில் நிலம், நீர், காற்று மற்றும் தீயை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.
“நிலநீர் தீக்காற் றென நால் வகையின”
-- (மணிமேகலை - 116)
கடந்த நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் வானத்தில் ஈதர் என்ற ஊடகம் இருப்பதாக அனைத்து விஞ்ஞானிகளாலும் கருதப்பட்டது. நியூட்டன் கூட தனது ஆய்வு நூலில் இது பற்றி எழுதி உள்ளார். ஆனால் மைக்கல்சன் - மோர்லி ஆய்வு ஈதர் என்ற பருப்பொருள் இருப்பதை நிராகித்து உள்ளது.
வானத்தை மூலப்பொருட்கள் வரிசையில் சேர்க்காமல் இருக்கும் ஆசீவகத்தை இந்த அறிவியற் பின்னணியில் நோக்க வேண்டும்.
அணுக்கொள்கை
இந்தியாவில் தோன்றிய தத்துவங்களில் முதன்முதலில் அணுக்கொள்கையினை அறிந்துரைத்த சிறப்பு ஆசீவகத்திற்கு உரியது. இது பற்றி ஆசீவகம் கூறுவதைக் கீழே காணலாம்.
ஆதி யில்லாப் பரமா ணுக்கள்
தீதுற் றியாவதுஞ் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்தொன் றென்றிற் புகுதா
…
குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும்
மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமுமாம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
(மணிமேகலை 126)
அதன் பொருள் பின்வருமாறு. தொடக்கமில்லாத அடிப்படை அணுக்கள், சிறிதும் கெட்டு அழியாதவை. இவை புதிதாகத் தோன்றி ஒன்றனுள் ஒன்று உள் நுழைவதில்லை. ஓரணு இரண்டாகப் பிளவுறாது. இவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பெயர்ந்து செல்லவல்ல. ஒன்றின் தொகுதியாகவோ, மலை போன்ற பிற அணுக்களுடன் சேர்ந்த தொகுதியாகவோ சேர்க்கையுறும். சேர்ந்த அவைகளே பின்பு பிரிந்து தத்தம் தன்மையை அடையும்.
இவை சேர்ந்து வயிரமாகிச் செறிந்து வலிமை பெறும். மூங்கில் போல உள்ளே துளையுள்ள பொருளாக முளைக்கும். (அணுக்களைப் பிளக்க முடியாது என்ற கொள்கை சென்ற நூற்றாண்டில் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளது). டால்டனின் அணுக்கொள்கை மேற்கூறிய அணுக்கொள்கையோடு பல இடங்களில் பொருந்தி போவதை காணலாம்.
இன்று அறிவியல் அறிஞர்கள் நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கொண்டு கண்டு பிடிக்கப்பட்டு நிரூபிக்கபட்ட அறிவியல் கோட்பாடுகளை , 2500 ஆண்டுகளுக்கு முன் "மெய்ப் பொருள் காண்பது அறிவு" என்ற வள்ளுவரின் அறிவுசார் கொள்கையின் அடிப்படையில், தங்களது உள் நோக்கிய பார்வையில் கண்டுபிடித்தவற்றோடு ஒப்பிடுகையில் இடைக்காலத்தில் அறிவு சார் சிந்தனைகளுக்கு ஏற்பட்ட பின்னடைவு இல்லாதிருந்தால் தமிழகத்திலே பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்றைய "நவீன தொழிற்புரட்சி" நடைபெற்றிருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இக்கட்டுரை நோக்கம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளை 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஆசீவகத்தில் கண்டுபிடிக்கபட்டது என்று உறுதி செய்வது அல்ல. 2500 ஆண்டுகளுக்கு முன்பான மெய்யியல் சிந்தனைகளுக்கும், இன்றைய அறிவியற் கண்டுபிடிப்புகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கோடிட்டு காட்ட மட்டுமே..
ஆசீவகம் மற்றும் அறிவியற் கருத்துக்கள் கொண்ட ஒரு சில தரவுகளை இணைத்துள்ளேன். இந்த தலைப்பு பற்றி உங்களுக்கு உள்ள ஐயங்களை தீர்த்து கொள்ள தொடர்ந்து உங்களது தேடலை தொடர உதவியாக இருக்கும்.
இந்த கட்டுரையை படித்து ஆசீவகம் சார்ந்த கருத்துக்களில் பிழை (கருத்துப்பிழை மற்றும் சொற்பிழை) இல்லாமல் திருத்தம் செய்து கொடுத்த முனைவர் ர.விஜயலட்சுமி அவர்களுக்கும், அறிவியற் கருத்துக்களுக்கு விமர்சன கருத்து (Critical Comments) கொடுத்த பேராசிரியர்.ரங்கராஜன் அவர்களுக்கும் நன்றி.
Reference
1. பேராசிரியர் ர.விஜயலட்சுமி - தமிழகத்தில் ஆசீவகர்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
2. முனைவர் சோ.ந.கந்தசாமி - இந்தியத் தத்துவக் களஞ்சியம், மெய்யப்பன் பதிப்பகம்
3. https://www.bbc.com/reel/video/p086tg3k/the-physics-that-suggests-we-have-no-free-will
4. https://www.exploratorium.edu/origins/cern/ideas/bang.html
5.https://en.wikipedia.org/wiki/Michelson%E2%80%93Morley_experiment#Most_famous_%22failed%22_experiment
6. https://www.space.com/29859-the-illusion-of-time.html
7. https://www.quantamagazine.org/does-time-really-flow-new-clues-come-from-a-century-old-approach-to-math-20200407/
8. https://en.wikipedia.org/wiki/Conservation_of_mass
- சதுக்கபூதம்
- விவரங்கள்
- இரா.ஆறுமுகம்
- பிரிவு: புவி அறிவியல்
அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா உருவாகி வேகமாக பரவி வருவதற்கான காரணமாக சிலர் சொல்வது இதுதான்: "மனிதன் உலகில் சமமற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறான். அதை இயற்கை சரி செய்து கொள்ள நினைக்கிறது." அதாவது இயற்கை தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. அறிவியல் ரீதியில் இது சரியான முன்வைப்புதானா?
சமநிலையும் (equilibrium), சமான நிலையும்:
ஒரு அமைப்பு முறையின்மீது (system) செல்வாக்கு செலுத்தும் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு அந்த அமைப்பினை ஒரு நிலையான சூழலில் வைத்திருக்கும்போது, அந்த அமைப்பு சமநிலையில் உள்ளது என்று பொருள். இந்த செயல்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு அந்த அமைப்பின் இயக்கத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அந்த அமைப்பு சமான நிலையில் உள்ளதாகப் பொருள்படும்.
இந்த சமநிலை வெவ்வேறு புலங்களில் வெவ்வேறு விதமாக காணப்படுகின்றது. இயந்திரவியலில் பல்வேறு விசைகளின் விளைவாக ஒரு பொருளில் ஏற்படும் ஓய்வு நிலை.
இயற்பியலில் வெப்ப இயக்கவியல் சமநிலை.
சமூகவியலில் பொருளாதார சமநிலை.
இயற்கை அல்லது இயற்கையின் எந்த ஒரு அங்கமும், இந்த சமநிலையைத்தான் விரும்புகிறதா?
பண்டைய கிரேக்க நாகரிகத்திலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டு விட்டது. அப்போதைய தத்துவவியலாளர் ஹெரோடோடஸ் இயற்கை சமநிலையைத்தான் விரும்புகிறது எனக் கூறுகிறார். அவரைக் கவர்ந்த விஷயம், இரையாகும் விலங்கு - இரைதேடும் விலங்குகளுக்கிடையேயான (prey - predator) உறவே. இது அனைவராலும் கையாளப்படும் ஒரு கருத்து.
ஒரு காட்டில் ஓநாய்களும், முயல்களும் மட்டும் வசிப்பதாகக் கொள்வோம். முயல்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, ஓநாய்கள் மகிழ்ச்சியோடு அதை வேட்டையாடி புசித்து வரும். வேட்டையாடப்பட்டு இந்த முயல்களின் எண்ணிக்கை குறையும் போது, ஓநாய்கள் இரையின்றி இறக்க ஆரம்பித்து அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடும். இதன் காரணமாக அவை வேட்டையாடும் முயல்களின் எண்ணிக்கை குறைந்து, முயல்களின் மொத்த தொகை கூடிவிடும். இப்படியாக இரை விலங்கு - இரை தேடும் விலங்குகளின் எண்ணிக்கையில் ஒரு சமநிலைத் தன்மை இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் ஹெரோடொடஸின் பார்வை.
இயற்கை சம நிலையிலேயே இருக்க விரும்புகிறது அல்லது இருக்க முயற்சி செய்கிறது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே காலம் காலமாக நிலவி வருகிறது. அறிவியல் உலகத்தில் கூட சிலர் அதை ஏற்று வந்தனர். சார்லஸ் டார்வின் கூட இயற்கை தேர்வு பற்றிக் குறிப்பிடும் போது அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.
இயற்கை சமநிலையில் இருப்பதில்லை மற்றும் இருக்க விரும்புவதில்லை என்பதையே பின் வந்த அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
இரண்டு ஆய்வுகள்:
1950களில் அமெரிக்காவின் மெயின் (Maine) கடற்கரையை ஒட்டிய அடர்ந்த காடுகளில் ராபெர்ட் மேக் ஆர்தர் என்னும் அறிவியலாளர் "பாடும் பறவைகள்" (warbler) பற்றி ஆய்வு மேற்கொண்டார். ஒரே மரத்தின் பல பகுதிகளில் வெவ்வேறு வகையான ஐந்து பறவையினங்கள் அந்த மரத்தின் பகுதிகளை உண்டு வசித்து வந்திருந்தன. இது ஒரு விஷேச பகிர்ந்துண்ணல் தன்மை ஆகும். அதாவது ஒரு சமநிலைத் தன்மையைக் குறிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு சூழலியலின் அடித்தளமாகி மாணவர்கள் அனைவரும் கற்கும் பாடமாகியது.
அதில் ஒரு மாணவர், பிக் வீலர் என்று பெயர், அந்த ஆய்வினை தனது மேற்படிப்பிற்காக தொடர எண்ணினார். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பின் அதாவது 2014ல் அவர் அதே காடுகளுக்கு, அதே மரத்திற்கு சென்றார். மனித பாதிப்புகள் ஏதும் அங்கு ஏற்பட்டிருக்கவில்லை.
அவர் அங்கு மேக் ஆர்தர் கண்ட பறவையினங்களில் இரண்டு மட்டுமே இருந்ததாகவும், வேறு சில புதிய பறவையினங்கள் இருந்ததாகவும் ஆய்வு முடிவுகளாகத் தெரிவித்திருக்கிறார். அதாவது அவர் அங்கு கண்டது சூழலியல் பற்றிய பார்வையில் ஒரு பெரும் மாற்றத்தினைக் கொணர்ந்தது. இயற்கை ஒரு இயங்குகின்ற அமைப்பு, அது நிலையானது அல்ல என்பதே அது.
இன்னொரு ஆய்வு. தென் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மால்காஸ் தீவை சுற்றிலும் உள்ள கடல் நீரில், கடல் பாசிகளும், பாறை இறால்களும் நிறைந்திருக்கும். அவை சிப்பிகள் மற்றும் சங்குகளின் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. அதற்கு அருகேயே மார்கஸ் என்னும் தீவு ஏறக்குறைய மால்காஸ் தீவு போன்ற சூழலிலேயே அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள கடலில் சிப்பிகளும் சங்குகளுமே நிறைந்துள்ளது. அமோஸ் பார்க்காய், கிறிஸ்டோபர் மேக் குயாட் என்பவர்கள் நடத்திய ஒரு பிரபலமான பரிசோதனையில், வளர்ந்த பாறை இறால்களை மால்காஸ் தீவிலிருந்து, மார்கஸ் தீவிற்கு ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து விட்டனர். ஆனால் ஒரே வாரத்தில் சங்கு உயிரினங்கள், தன்னைவிட பெரிதான பாறை இறால்களை எளிதாக உண்டு விட்டன. ஒரு இறால் கூட மிஞ்சவில்லை. இந்த தீவுகளில் நிலவும் சமநிலை என்பது பகுதி ரீதியான சூழ்நிலைகளை வைத்து வருவதல்ல. ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு பெரும் நிகழ்வு, மார்கஸ் தீவை வேறொரு சமநிலைக்கு கொணர்ந்திருக்கிறது.
அதாவது உலகளாவியது என நாம் கருதும், இரை உயிரினம் - இரைதேடும் உயிரினம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு, சமநிலையைப் பொறுத்தவரை சார்புத் தன்மையுடையது, அதாவது மாறுதலுக்கு உட்பட்டது என்பதையே இது காட்டுகிறது.
1970 - 80 களில் இயற்கையில் நிலவும் சமநிலை என்ற பார்வை, அறிவியலாளர்களிடமிருந்து முற்றிலும் மறைந்து விட்டது. இருந்தாலும் பொதுமக்களிடையே அது தொடர்ந்து நிலைத்து வருகிறது. கிம் கட்டிங்டன் என்னும் கனடா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் தெளிவாகச் சொல்கிறார், "சமநிலை என்பது எளிதில் உடையக் கூடியது, எளிதில் மாற்றப்படக் கூடியது, எளிதானது என்று சொல்வதும் தவறு; அதேபோல் அதற்கு நேரெதிராக இயற்கை மிக சக்தி வாய்ந்தது, அது தனது சமானத் தன்மையை தானே சரி செய்து கொள்ளும் என்பதும் தவறானது."
இதுபோன்ற ஒரு தவறான கருத்து பருவநிலை மாற்றக் கொள்கையில் தேவைப்படும், சூழலியல் மேலாண்மைக்கும் எதிரானதாக மாறி விடுகிறது. அறிவியலாளர்கள், மக்களின் மனங்களில் இருந்து இந்த மாயையான கருத்தினை விடுவிக்க நினைத்தாலும், அது முடிவதில்லை. மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது.
அறிவியலாளர்கள் அனைவரும் ஒத்துக் கொள்வது மாற்றம் ஒன்றே மாறாதது என்பதையே.
ஆனால் இயற்கையில் சமநிலை என்பது பற்றி பேசும் போது இரண்டு விஷயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஒன்று: பெருங்குழப்ப தத்துவம் (chaos theory). அதாவது சமநிலையில் இருந்து விலகிச் செல்லும் ஓர் இயக்கத்தின் போக்கு தாறுமாறான தன்மை கொண்டதாக தெரிந்தாலும், அதில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. அந்த இயக்கம் சில நேரம் ஒழுங்காகவும், சில நேரம் ஒழுங்கற்றதானதாகவும் மாறுகிறது. அதாவது ஒழுங்கற்ற இயக்கத்தில் ஓர் ஒழுங்கு.
இரண்டாவது: சம நிலையிலிருந்து மிக தூரம் விலகிச் சென்றுள்ள அமைப்புகளிடையே மட்டும்தான் முன்னேற்றகரமான போக்கு வெளிப்படுகிறது. உதாரணமாக உயிர் உருவாகும் நிகழ்வு. அதேபோல பரிணாம வளர்ச்சி ஏற்படுவதும் அந்த அமைப்புகள் சமநிலையில் இருந்து வெகு தூரத்திற்கு வந்ததால் மட்டுமே சாத்தியமானது. இதை சுய ஒழுங்கமைப்பு (self-organisation) என்று அறிவியல் குறிப்பிடுகின்றது.
பெரும் குழப்ப தத்துவம்:
நாம் உலகில் காணும் அனைத்து இயக்கங்களும் சமநிலையை நோக்கிய சீரான அலைவுகளாக இருப்பதில்லை.
உதாரணமாக ஒரு உயிரினத்தின் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றத்தினை கவனிப்போம். இனப்பெருக்கத்தின் விகிதம், இறப்பு விகிதம், சூழ்நிலையோடு அந்த உயிரினம் கொண்டிருக்கும் உறவு என பலவிதமான காரணிகளால் இது தீர்மானிக்கப் படுகிறது. சில வேளைகளில் தொடர்ச்சியாகக் கூடி, மீண்டும் தொடர்ச்சியாகக் குறைந்து ஒரு சுழற்சியான மாற்றத்துக்கு உட்படலாம். அல்லது ஓர் ஒழுங்கற்ற, தாறுமாறான (randomness) தன்மையைக் கொண்டிருக்கலாம்.
ஆனால் இந்த ஒழுங்கற்றதில் ஓர் ஒழுங்கு இருக்கிறது என்பதுதான் பெருங்குழப்ப தத்துவத்தின் அடிப்படை. இதை விளக்க ஓர் உயிரினத்தின் மக்கள் தொகைப் பெருக்கத்தினை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி வீதத்தில் அது வளர்ந்து வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த வளர்ச்சி வீதம் 1க்கும் குறைவாக இருந்தால் அந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்து அழிந்துவிடும். அந்த வளர்ச்சி வேகத்தை அதிகரித்துக் கொண்டே வந்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். வளர்ச்சி வீதம் 3 வரும்வரை அதன் எண்ணிக்கை ஒரு சமநிலை மதிப்பிலேயே இருந்து கொண்டிருக்கும். அந்த வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமநிலை மதிப்பிலிருந்து விலகி, அதன் மக்கள் தொகை குறிப்பிட்ட இரண்டு மதிப்புகளின் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதை பிரிவுப்புள்ளி என்கிறோம். இன்னும் இந்த வளர்ச்சி வீதத்தை அதிகப்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட அளவில் அது நான்கு மதிப்புகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இப்படியே அதிகரித்துக் கொண்டு போனால் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு ஒழுங்கற்ற ஊசலாட்டமாக மாறி விடுகிறது. ஒரு மதிப்பிலிருந்து இன்னொரு மதிப்பிற்கு மாறி ஒழுங்கற்றதாக ஆகிவிடுகிறது. இந்த பகுதியைத்தான் நாம் பெருங்குழப்பம் என்று சொல்கிறோம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பெரும் குழப்பம் தொடர்ந்து குழப்பமாகவே நீடிப்பதில்லை. மீண்டும் இந்த வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் போது, பெருங்குழப்பத்திற்கு முந்தையது போன்ற பிரிவுப் பாதைகளை வந்தடைகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் மீண்டும் அந்த மாற்றங்களில் ஓர் ஒழுங்கு வந்து விடுகிறது. அதாவது ஒழுங்கற்றதில் ஓர் ஒழுங்குப் பகுதி.
இது போன்ற பெருங்குழப்பம் நிகழும் அமைப்பு முறைகள் இயற்கையில் எண்ணற்று உள்ளன. மீண்டும் இங்கு நினைவில் கொள்ளலாம். இந்த ஒழுங்கு சமநிலையிலிருந்து விலகி வரும்போது ஏற்படுவது.
சுய ஒழுங்கமைப்பு:
சுய ஒழுங்கமைப்பு என்பது ஓர் அமைப்பு முறைக்குள் ஏற்படும் ஓர் ஒழுங்கு (order), வழமை (regularity), இணக்கம் (coherence), ஒருங்கிணைப்பு (coordination) ஆகும். இத்தகைய சுய ஒழுங்கமைப்பு, அந்த அமைப்பு சமநிலையிலிருந்து வெகுதூரம் விலகி வந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும்போது ஏற்படுகின்றது.
சாதாரணமாக வெப்பமும், பொருளும் ஓர் அமைப்பு முறைக்கு அளிக்கப்படும் போது அது சிதைந்து ஒழுங்கற்ற தன்மை உருவாகிறது. ஆனால் உயிரியல் அமைப்பு முறைகளில், வெப்பமும், பொருட்களும் அளிக்கப்படும்போது அதில் கட்டமைப்பும், ஒழுங்கமைப்பும் உருவாகின்றன.
உயிரியல் அமைப்பு முறைகள் வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளவை. அவை சுற்றுச்சூழலோடு வினைபுரிந்து, சக்தியையும், பொருளையும் தொடர்ந்து பரிமாறி இந்த நிலையில் நிலைத்திருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகள் சமநிலையில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதாலேயே உயிர் வாழ்கின்றன.
சமநிலையற்ற அமைப்பு முறைகள், சூழலிலிருந்து சக்தியையும் பொருளையும் எடுத்துக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து தனது சிதறல் இயக்கத்தின் மூலம் வெப்பத்தினை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகளை கட்டிக் காப்பதற்கு, இதுபோன்ற சிதறல்கள் மிக முக்கியமானவை. சிதறல்களின் இந்த அடிப்படையான பண்பின் காரணமாக ஏற்படும் இத்தகைய சுய ஒழுங்கமைப்பை நோபெல் பரிசு பெற்ற அறிவியலாளர் ப்ரிகோஜைன் கண்டறிந்து 'சிதறல் கட்டமைப்புகள்' (dissipative structures) என அழைத்தார்.
இத்தகைய சிதறல் கட்டமைப்புகள் உயிரியலோடு மட்டும் நின்று விடவில்லை. இயற்பியல், வானியல், வேதியியல் ஆகியவற்றிலும் இத்தகைய சுய ஒழுங்கமைத்துக் கொள்ளும், சமநிலையற்ற அமைப்பு முறைகள் நிலவுகின்றன.
எனவே இயற்கை நமக்கு கற்றுத் தந்திருப்பது இதுதான்: அது சமநிலையை விரும்புவதில்லை. பரிணாம வளர்ச்சிக்கு வழி கோலும் சமான நிலையையே விரும்புகிறது.
- இரா.ஆறுமுகம்,
உதவிப் பொது மேலாளர்,
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
மணப்பாறை
- விவரங்கள்
- பாண்டி
- பிரிவு: புவி அறிவியல்
கடந்த பிப்ரவரி மாதம் மகளின் பிறந்த நாளுக்கு வீட்டில் அலங்காரம் செய்து கொண்டிருந்த சமயம், 'எனக்கு ஹீலியம் பலூன் தான் வேண்டும்' என்று ஒற்றைக் காலில் நின்றாள் மகள். ஹீலியம் கிடைப்பதில் தற்சமயம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அவளுக்கு நான் விளக்கினாலும், அவள் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுத்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து கடைக்கு அழைத்துச் சென்றேன்.
'ஹீலியம் பலூன் வேண்டுமென்று கடைக்காரரிடம் கேட்டால் 'தற்போது ஹீலியம் பலூன் விற்கப்படுவது இல்லை!' என்றார் கடைக்காரர். எனக்கு இதில் வியப்பு இல்லை. ஏனெனில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த செய்தியை படித்ததுதான். ஹீலியம் பலூன் கிடைக்காமல் போனது மகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
சரி, நாம் ஹீலியம் பற்றியதான அறிவியல் செய்திக்கு வந்து விடுவோம். நமது அறிவியல் பாடப் புத்தகத்தில் ஹீலியம் ஒரு 'inert gas' என்று படித்திருப்போம். நவீன ஆவர்த்தன அட்டவணையில் இரண்டாவது இடத்தில் இருப்பது ஹீலியம். இதனை the nobel gases அல்லது inert gas என்று அழைப்பார்கள். இதன் எடை (Atomic weight) 4.002602 amu (atomic mass unit) ஆகும்.
ஹீலியம் நிறமற்றது, அடர்த்தி குறைந்தது, மணமற்றது, எரியும் தன்மை கிடையாது. Inert gas அட்டவணையில் ஏழு வகையான வேதியியல் வாயுக்கள் இருக்கிறது. முறையே ஹீலியம், நியான், ஆர்கன், கிரிப்டான், செனான், ரேடான், ஆக்ஸாநென்சான் போன்றவைகள். Helium (He), Neon (Ne), Argon (Ar), Krypton (Kr), Xenon (Xe), Radon (Rn), Oganesson (Og) அதில் முதன்மையானது ஹீலியம் வாயு ஆகும். ஹைட்ரஜனுக்கு அடுத்து ஹீலியம் தான் எடை குறைவான வாயு.
சூரியனில் அதிகம் காணப்படும் வாயுக்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் கலந்த கலவைகள் தான் என்பதையும் நாம் படித்திருப்போம். சூரியனை கிரேக்க மொழியில் 'ஹீலியோஸ்' என்று அழைக்கிறார்கள். இதனாலேயே ஹீலியம் வாயுக்கு அந்தப் பெயரை சூட்டி இருந்தார்கள் என்பதும் நம் புருவங்களை உயர்த்தும் தகவல்.
150 ஆண்டுகளுக்கு முன்னர் ஹீலியம் வாயு கண்டறிந்ததற்காக பிரஞ்சு வானியல் அறிஞர் Pierre Jonson மற்றும் இங்கிலாந்து வானியல் அறிஞர் Joseph Norman இவர்கள் இருவரும் அக்டோபர் 20, 1868ஆம் ஆண்டில் கௌரவிக்கப்பட்டார்கள்.
இதைக் கண்டறிந்தது கூட ஒரு சுவாரசியமான செய்தி தான். சூரியன் மற்றும் பிற நட்சத்திரங்களில் இருந்து வெளிவரும் ஒளியை வைத்து, அதில் என்ன வகையான வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, மற்றும் என்னென்ன வேதியியல் கூறுகள் இருக்கின்றன என்பதை ஆராய ஐரோப்பிய அறிவியல் விஞ்ஞானிகள் முடிவு செய்திருந்தார்கள். (Chemical composition of the sun and star by analysing Spectra of the light of they emit). இதனை ஆராய்ச்சி செய்ய 'solar eclipse' தான் சரியான நேரமாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அதற்காக காத்திருந்தார்கள். அதற்கான சரியான நேரமும் அமைந்தது. பிரஞ்சு வானியல் அறிஞர் Pierre Jonson இதே ஆண்டில் Solar eclipse -ஐ படம் பிடிக்க இந்தியாவின் குண்டூர் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார்.
1868 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தனது நிறமாலைமானியில் (Spectroscopy) சூரிய கிரகணத்தை படம் பிடிக்கிறார் Pierre Jonson. அப்போது அவர் எதிர்பார்க்காத மஞ்சள் நிறக் கோடுகள் அதன் வழியே கடந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்த மஞ்சள் நிறக் கோடுகள் வேறு எந்த வேதியியல் மூலக்கூறுகளுடனும் ஒத்துப் போகாமல் இருந்தது. ஆனால், சோடியத்தின் ஒத்த உறுப்புகளோடு ஒத்திருந்தது. ஒருவேளை சோடியமாக இருக்கலாம் என்றே அவர் எண்ணிக் கொண்டிருந்தார். ஆனாலும் அவர் மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது. ஒருவேளை பகல் பொழுதில் சூரிய ஒளியைப் படமெடுத்தால் அந்த மஞ்சள் நிறக் கோடுகள் பற்றிய விவரங்கள் சரியாக வந்து விடும் என்றே கருதினர்.
அதே சமயத்தில் இங்கிலாந்தின் வானியல் அறிஞர் Joseph Norman சூரிய கிரகணத்தைப் படமெடுக்கும் இதே வேலையை பகல் பொழுதில் செய்து கொண்டிருந்தார். அவருடைய நிறமாலைமானியில் (Spectroscopy) அதே மஞ்சள் நிறக் கோடுகள் கடந்து செல்வதைக் கவனிக்கிறார். இந்த மஞ்சள் நிறக் கோடுகள் வேறெந்த வேதியியல் மூலக்கூறுகளுடன் ஒத்துப் போகாமல் இருக்கிறது, மேலும் பூமியில் இது காணப்படாத மூலக்கூறு போல் இருக்கிறது என்று கூறுகிறார். பல ஆய்வுகளுக்குப் பின்னர் இந்த மூலக்கூறு சூரியனிலிருந்து வருவதால் இதற்கு ஹீலியம் என்று பெயரிட்டார் Joseph.
ஹீலியம் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்தது. 'Helios' என்றால் சூரியன் என்று பொருள். இதே ஆண்டில் French Academy of science அவர்கள் இருவருக்கும் புதிய வேதியியல் மூலக்கூறுகள் கண்டுபிடிப்புக்கான விருதினை வழங்கியது.
அவ்விரு அறிஞர்களும் கண்டுபிடித்த ஹீலியம் மூலக்கூறு பற்றியதான சர்ச்சைகளும் கால் நூற்றாண்டுக்கு மேலாக இருந்தது. சில அறிவியலாளர்கள் சூரியனிலிருந்து காணப்பட்டதாக சொல்லப்பட்ட மஞ்சள் நிறக் கோடுகளை நிராகரித்தார்கள். எனினும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியல் அறிஞர் Sir William Ramsay மஞ்சள் நிறக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு பல சோதனைகளை மேற்கொள்கிறார். அதாவது யுரேனியம் (Uranium elements) மூலக்கூறுகளுடன் அமிலங்களை (acid) சேர்த்து சோதனையிட்டதில் வழக்கத்திற்கு மாறாக மஞ்சள் நிறக் கோடுகள் அவருக்கும் தெரிந்தது. Joseph Norman அவரிடம் 'தனது சோதனை முடிவுகளை 'நீங்கள் ஒருமுறை சோதித்து தெரியப்படுத்த வேண்டும்' என்கிறார். அவரும் அந்த சோதனை முடிவுகளைக் கண்டு 'ஆம், அது ஹீலியம் தான். மேலும், அது பூமியிலும் கிடைக்கிறது' என்று பதிலளித்தார்.
ஹீலியம் பற்றியதான தகவலை அறியும் போது வேடிக்கையாக சிலவற்றையும் கூறினார்கள். சூரியன் முழுவதும் டன் கணக்கில் ஹீலியம் இருக்கும்போது, எப்படி சிறிய ஒளி அளவில் மட்டும் கீழேயும் வந்திருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. உண்மையில் பூமியில் இருந்து வெளிவந்த ஹீலியம் தான் விண்வெளியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அப்படி என்றால் கீழிருந்து அது மேலாக செல்கிறது என்பதைக் கண்டுபிடித்தார்கள்.
ஹீலியம் பூமிக்கு அடியில் கிடைத்தற்கான முதல் சான்று 1894 ஆண்டில் தான் கிடைத்தது. Luigi Palmieri என்ற இத்தாலிய இயற்பியலாளர், Mount Vesuvius -ல் காணப்பட்ட சில எரிமலைக் குழம்புகளை ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கும் அதே போல மஞ்சள் நிறக் கோடுகள் தெரிந்தது.
ஹீலியத்தை நாம் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்துவிட முடியாது. இது இயற்கையாகவே பூமிக்கடியில் Crust பகுதியில் காணப்படுகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனிலிருந்து பிரிந்து வந்த நமது பூமிக்கடியில் நிகழும் ஒரு மாற்றம். அதாவது, 'natural radioactive decaying' யுரேனியம், தோரியம் போன்ற தடிமனான மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, உரசி வெளிவரும் வாயு ஹீலியம் ஆகும்.
முதன்முதலில் பூமிக்கடியிலிருந்து ஹீலியம் எடுக்கப்பட்டது அமெரிக்காவில் தான். 1903 ஆம் ஆண்டு Kansas மாகாணத்திலுள்ள Dexter எனும் பகுதியில் இயற்கை எரிவாயு எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிணற்றில், ஒரு நாளைக்கு 9 மில்லியன் கியூபிக் பீட் என்ற அளவில் இயற்கை எரிவாயுவை எடுத்தனர். அளவுக்கு அதிகமாக இயற்கை எரிவாயு வெளிவந்ததால், அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த எரிவாயுவின் முடிவு அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. ஆமாம், அவர்கள் எடுத்த இயற்கை எரிவாயுவை சோதனைக்காக எரித்துப் பார்த்திருக்கிறார்கள். அது எரியவில்லை, மாறாக விரைவிலேயே காணாமல் போயுள்ளது (எடை குறைவான வாயு வளிமண்டலத்தில் மேலே சென்றுள்ளது). அனைவருக்குமே வியப்பு!! கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் அதை சோதித்து ஒரு முடிவுக்கு வந்து, அந்த வாயுக்கள் எல்லாம் 'ஹீலியம்' என்று கண்டறியப்பட்டது.
இன்று உலகளவில் இயற்கையாக ஹீலியம் 3 நாடுகளில்தான் அதிகம் பூமிக்கடியில் காணப்படுகிறது. அது அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடான கத்தார், மற்றும் அல்ஜீரியா ஆகும். இதில் அமெரிக்காவில் மட்டும் 75% மேல் பூமிக்கடியில் ஹீலியம் காணப்படுகிறது. ஆனால், கத்தார் தான் அதிக அளவில் வர்த்தக ரீதியாக ஹீலியமை பூமிக்கடியில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து உற்பத்தியாகும் ஹீலியம் பெரும்பாலும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது வேறு செய்தி.
2017-ல் கத்தார் நாட்டின் மீது பல உலக நாடுகள் மோதலை மேற்கொண்ட போது. கத்தார் தனது ஹீலியம் ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்தி விட்டது. இந்த செய்தி விஞ்ஞானிகளை பெரிதும் வருத்தத்தில் ஆழ்த்தியது. ஹீலியம் இல்லாமல் எந்த ஆய்வையும் செய்ய முடியாதே! இந்த சமயத்தில் தான் ஹீலியம் தட்டுப்பாடு குறித்து மக்களால் அதிகம் பேசப்பட்டது.
ஹீலியத்தின் பயன்பாடு முதலாம் உலகப் போரில் தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதாவது 'observation balloons' பெரிய அளவில் வடிவமைத்து அதனுள் ஹீலியம் நிரப்பி ஆபத்து நேர்ந்தால் பறந்து செல்வதற்கு. ஆரம்பத்தில் இதை ஹைட்ரஜனை வைத்துதான் செய்தார்கள். ஆனால், ஹைட்ரஜன் எரியும் தன்மை கொண்டது என்பதால், அதைத் தவிர்த்து விட்டு ஹீலியம் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும் இது அதிகளவில் பயன்படுத்தப் படவில்லை. ஏனெனில் ஹீலியம் எடுப்பதற்கான பொருள் செலவு அதிகமாக இருந்தது.
இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்திலும், பாராசூட் போன்றவற்றில் ஹீலியம் அதிகளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அப்போது ஹீலியத்தின் விலையும் குறைந்திருந்தது.
தற்சமயம் ஹீலியம் பரவலாக விண்வெளி, மருத்துவம், அதிவேக (magnetic friction) இரயில்கள், மின்னணு சோதனைக் கூடங்கள், வேதியியல் கூடங்கள், vacuum machine சாதனங்களில் ஏற்படும் ஓட்டைகளை கண்டறியும் leak detector ஆகவும் மற்றும் அதிக சக்தி வாய்ந்த காந்தங்கள் போன்றவற்றை குளிரூட்டப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் Melting point என்பது minus -458.0 degrees Fahrenheit (minus 272.2 degrees Celsius) ஆகும். இதேபோல் இதன் Boiling point ஆனது minus -452.07 F (minus 268.93 C) இதனாலேயே திரவ நிலையில் இருக்கும் ஹீலியம் சிறந்த குளிரூட்டியாகப் பயன்படுகிறது.
திரவ நிலையில் உள்ள ஹீலியம் வாயுவைக் கொண்டு விண்வெளியில் ஏவப்படும் ராக்கெட்க்கு பயன்படுத்தும் எரிபொருளை சுத்தப்படுத்துகிறார்கள். எரிபொருளுடன் ஹீலியம் கலந்திருக்கும். இதனால் எரிபொருள் சுலபமாக வெளியேறி இயந்திரத்தை இயக்கவும் பயன்படுத்தப்படுகிறது. ஆம், விண்வெளியில் ராக்கெட் இயந்திரம் இயங்குவதற்கு ஹீலியம் உதவுகிறது.
விண்வெளிக்கு முதன் முதலாக மனிதர்களை ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ ராக்கெட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஹீலியம் இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன. நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெவ்வேறு ராக்கெட்டுகளில் பயன்படுத்த அதிகப்படியான ஹீலியமை கொள்முதல் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் Magnetic Resonance Imaging (MRI) machine -ஐ சுற்றியிருக்கும் காந்தத்தைக் குளிரூட்ட திரவ நிலையில் இருக்கும் ஹீலியம் பெரிதும் பயன்படுகிறது.
குவாண்டம் கம்யூட்டர்கள் வேலை செய்யும் போது அதிக வெப்பத்தை வெளியேற்றும் என்பதை நாம் ஏற்கனவே குவாண்டம் கம்யூட்டர்களைப் பற்றிய கட்டுரையில் பார்த்திருக்கிறோம்.
தகவல் தொழில்நுட்ப உலகில் அடுத்த கட்ட பரிணாமமாகக் கருதப்படும் குவாண்டம் கம்யூட்டர்களை குளிர்விக்கும் பொருளாக திரவ நிலையில் உள்ள ஹீலியம் தான் பயன்படுகிறது.
இயற்பியல் ஆய்வுக் கூடங்களில் மின்காந்த அலைகள் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்தும் Nuclear Magnetic Resonance (NMR) என்ற இயந்திரத்தை குளிர்விக்கும் முக்கிய அம்சமாக திரவ நிலையில் இருக்கும் ஹீலியம் தான் இருக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் ஹீலியத்தின் தேவை ஆண்டுக்கு சராசரியாக 10% அதிகரித்து வந்திருக்கிறது. தேவைகள் அதிகரித்தால் அதன் விலையும் அதிகமிருக்கும். இதன் விலையும் 250% அதிகரித்து வந்திருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஹீலியம் பூமியிலிருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஹீலியம் தட்டுப்பாடு ஏற்பட்டால் ஆய்வுக்கூடங்களில் நிச்சயமாக பாதிப்புகள் அதிகமாக இருக்கும்.
ஸ்பேஸ் எகஸ் நிறுவன முதன்மை நிர்வாகி எலான் மஸ்க் இதில் அதிகம் பாதிக்கப்படுவார். அவர் தான் விண்வெளிக்கு அடிக்கடி ராக்கெட்களை செலுத்துபவர். இப்போது கூட பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் (டாக்சி சர்வீஸ்) ராக்கெட் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இன்றைய காலகட்டத்தில் பிறந்தநாள் விழாக்களிலும், கேளிக்கை நிகழ்ச்சிகளிலும், வர்த்தகத்திற்காக விண்ணில் பறக்கும் விளம்பர பலூன்களிலும் ஹீலியம் அதிகளவில் பயன்படுகிறது. இதுவும் ஹீலியம் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
ஹீலியம் பற்றிய தகவல்களை எனது மகளிடம் விளக்கினேன். அடுத்த ஆண்டு 'ஹீலியம் பலூன் வேண்டும்' என கண்டிப்பாக கேட்கமாட்டாள் என்றே நம்புகிறேன்.
(நன்றி: https://www.npr.org/2020/05/29/865701529/the-world-is-constantly-running-out-of-helium)
- பாண்டி
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்
- நிறையும் எடையும் ஒன்றா?
- ட்ரம்ப் குடும்பம் காலப்பயணம் செய்கிறார்களா?
- சீராகி விரும் ஓசோன் ஓட்டை
- உயிரின் தோற்றம் (அணு மரபணுவான கதை)
- ஐந்து பரிமாணங்கள் - முழு விளக்கம்
- வெள்ள பாதுகாப்பு
- முதலாளித்துவ சக்திகளின் கட்டுப்பாட்டில் அறிவியல்
- ஆறாவது பேரழிவு
- இந்தியாவில் மழைப்பொழிவு
- நீர்வள மேலாண்மை
- மனித நாகரிகத்தின் முழுமையான அழிவைத் தவிர்ப்பது கடினமே
- இயற்கையின் ஆக்கமும், அழித்தலும் - எரிமலைகள்
- பரிணாம மையப்புள்ளி இடம்பெயர்கிறது !?
- நிலவை ரசிக்கலாம் வாங்க....
- RGO, GMT, UT, UTC என்றால் என்ன?