புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இதில் இருந்து வித்தியாசமாக பூமியின் வட கோடியில் விஞ்ஞானிகள் ஒரு புதிய தீவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் வடமுனையில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிகப் பெரிய தீவு. இங்குதான் உலகின் மிகப் பெரிய தேசிய சரணாலயம் அமைந்துள்ளது. பல ஆராய்ச்சி நிலையங்களும் இங்கு உள்ளன.

இங்கு புதியதொரு தீவைக் கண்டுபிடித்ததாக நார்வேயில் இருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறுகிறது. டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் வடமுனை. புதிய நிலப்பகுதியைக் கண்டுபிடிப்பது தங்கள் நோக்கமில்லை என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீன்லாந்து ஆர்க்டிக் ஆய்வு நிலையத்தின் (Arctic station research facility) தலைவர், துருவப்பகுதி ஆய்வாளர் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானி மார்ட்டின் ராஷ் (Morten Rasch) கூறுகிறார்.

புதிய உயிரினங்கள் தீவிர பருவநிலை மாறுதல்களுக்கு அடிக்கடி ஆளாகும். பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட, அதற்கான மாதிரிகளைச் சேகரிக்க தாங்கள் சென்றதாக அவர் கூறுகிறார். ஆறு விஞ்ஞானிகள் அப்போது ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஊடாக் தீவு இருந்த இடத்திற்கு அருகில் சென்றபோது அந்தத் தீவு அங்கு காணப்படவில்லை என்பதை உணர்ந்தனர்.tiny island near greenlandஉலகின் இப்பகுதியில் வரைபடங்கள் தெளிவாக இருக்காது என்று மார்ட்டின் கூறுகிறார். ஒரு சில நிமிடங்கள் 'ஊடாக்' தீவைத் தேடிக் கொண்டிருந்த பிறகு அந்த புதிய இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த புது இடம் மண் குவியல்கள், கடல் கொண்டு வந்து சேர்த்த படிமங்கள், சரளைக் கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. நான்கு புறமும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு, காட்சி தந்தது. முதல் பார்வையிலேயே நட்பிற்கு உகந்த ஓர் இடமாக அது தெரியவில்லை.

1978ல் டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஊடாக் (Oodaaq) என்ற தீவிற்கே தாங்கள் சென்றதாக முதலில் விஞ்ஞானிகள் கருதினர். இந்தத் தீவே இன்றுவரை உலகின் வடமுனையாகக் கருதப்படுகிறது. பிறகு தாங்கள் வந்து சேர்ந்த இடத்தை சரிபார்த்தபோதே உலகின் வடகோடியில் அமைந்துள்ள புதியதொரு பகுதிக்கு தாங்கள் வந்தது அவர்களுக்குத் தெரிந்தது. இத்தீவு ஊடாக்கில் இருந்து வடமேற்கில் 780 மீ தொலைவில் அமைந்துள்ளது.

குழுவில் இருந்த அணைத்து விஞ்ஞானிகளும் தாங்கள் ஊடாக்கிற்கு வருகை தருவதற்குப் பதில் புதியதொரு தீவிற்கு வந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர் என்று சுவிட்சர்லாந்து ஆய்வாளர் கிறிஸ்டியென் லைஸ்ட்டர் (Christiane Leister) கூறுகிறார். இவரே லைஸ்ட்டர் அறக்கட்டளையை நிறுவியவர். இந்த ஆய்வுகளுக்கு நிதியுதவியையும் இந்த அறக்கட்டளையே அளித்து வருகிறது.

முன்காலத்தில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டறியச் சென்ற ஆய்வாளர்கள் தாங்கள் ஒரு பகுதிக்குச் சென்றதாகக் கருதும்போது, அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய இடத்திற்கு வந்திருப்பதை பின்னர் அறிந்து கொள்வது போல விஞ்ஞானிகளுக்கு இது அமைந்திருந்தது.

பனி பொழியும் அழகிய தீவு

கிரீன்லாந்து, சுற்றுலா மற்றும் துருவப் பகுதி ஆய்வுகளுக்கு புகழ் பெற்ற இடம். ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்து, டென்மார்க்கிற்குச் சொந்தமான ஓர் சுயாட்சி நிலப்பரப்பு. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். நாட்டின் முக்கிய வருமானம் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.

இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்த கிரீன்லாந்து, வைக்கிங் வரலாறின் சமகால இன்யூட் கலாச்சாரத்தின் அற்புத உலகமாகக் கருதப்படுகிறது. தொலைதூரத்தில் அமைந்திருக்கும் இந்த தேசம் வியப்புகள் நிறைந்த ஒரு பனிக்கண்டத்தை திறந்து காட்டுகிறது.

இங்கு பனிபொழியும் காட்சிகளைக் கண்டு இரசிக்க உல்லாசப் படகுப் பயணம், ஹெலிகாப்டர் பயணம், ஆர்க்டிக் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள், பனி நிறைந்த குறுகிய பாதைகள் (legoons) வழியே கயாக்கிங் பொழுதுபோக்குகள் போன்ற பல்வேறு சாகசம் நிறைந்த பொழுதுபோக்குகள் உள்ளன.

பூமியில் மிக அழகிய காட்சிகளில் ஒன்றான அரோரா போரியாலிஸ் எனப்படும் விடியல் மற்றும் அந்தி வெளிச்சம் ஆகிய அற்புத இயற்கை நிகழ்வைக் காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். புவி வெப்ப உயர்வினால் இங்கு உள்ள பனிப்படலங்கள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் செய்திகள் இங்கிருந்து அடிக்கடி வருவதுண்டு.

2019ல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தப் பகுதியை தங்கள் நாடு விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். உடனடியாக டென்மார்க் இந்த ஆலோசனையை நிராகரித்தது.

பனிக்கடலிற்கு நடுவில் புதிய தீவு

30மீ/150 முதல் 60 மீ/180 அடி வரை அகலம் உள்ள இந்த சிறிய தீவு கடல் மட்டத்தில் இருந்து 3 முதல் 4 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நகர்ந்து கொண்டிருக்கும் பனிப்படலப் பரப்புகளால் அடித்து வரப்பட்ட மண், பாறைக்கற்கள் மற்றும் கடலடி மண் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. சேறு சகதி, சரளைக்கற்கள் நிறைந்த குன்றுகள் இங்கு உள்ளன.

வலுவான ஒரு புயற்காற்றால் அடித்து வரப்பட்ட பொருட்களாக இவை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த கண்டத்தில் பனிப்படலங்கள் (glaciers) புவி வெப்ப உயர்வின் காரணமாக அதிக அளவில் உருகினாலும், இத்தீவு காலநிலை மாற்றத்தினால் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பெயர் சூடும் தீவு

இந்த புதிய தீவிற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஞ்ஞானிகள் இந்த தீவிற்கு கெக்கடெக் அவனாலக் (Qeqertaq Avannarleq) என்ற பெயரை வழங்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த சொல்லிற்கு கிரீன்லாந்து மொழியில் பூமியின் வடகோடி முனையில் உள்ள தீவு என்று பொருள்.

டென்மார்க் தேசிய விண்வெளிக் கழகத்தின் புவி இயக்கவியல் பிரிவின் (Geodynamics) பேராசிரியர் மற்றும் தலைவர் ரினெ போர்ஸ்பெர்க் (Rene Forsberg) கிரீன்லாந்தின் வடக்கில் இப்பகுதியில் சில இடங்களில் அடர்த்தி மிகுந்த துருவப் பனிப்படலங்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இந்த இடங்கள் குளிர்காலத்தில் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை கனம் உள்ளதாகக் காணப்படுகின்றன.

கோடையில் இவற்றின் அடர்வு மாறுபடலாம் என்று அவர் கருதுகிறார். 1978ல் ஊடாக் தீவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். அன்று இருந்ததை விட இன்று இந்தப் பகுதி பல மாறுதல்களை சந்தித்துள்ளதாக போர்ஸ்பெர்க் கூறுகிறார். இந்த புதிய நிலப்பரப்பு நீடித்திருப்பதைப் பொறுத்தே இதனைக் சொந்தம் கொண்டாட உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் பாய்ந்து வரும் கடல் அலைகளின் சீற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறை இந்தப் புதுத்தீவிற்குப் பொருந்துமா? வலிமை மிக்க ஒரு புயற்காற்று வீசினால் இந்தத் தீவுப்பகுதி தோன்றியது போலவே மறைந்து போகுமா? 

இப்போது இதுவே பூமியின் வடமுனையில் அமைந்துள்ள நிலப்பகுதி. இதுபோன்ற சிறு தீவுகள் வரும், போகும். இந்தத் தீவு உண்மையில் தீவா? இல்லை வெறும் ஒரு கரையா? காலம்தான் பதில் சொல்லும்!

மேற்கோள்:https://www.theguardian.com/world/2021/aug/28/scientists-discover-worlds-northernmost-island-off-greenlands-coast

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It