கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றம் கூடுதல் வானவில்களை உருவாக்கும் என்று புதிய ஆய்வுகள் கூறுகின்றன. பூமியின் மேற்பரப்பில் இருந்து முதன்மை வானவில்லை பகலில் மட்டுமே பார்க்க முடியும். அதற்கு சூரியனின் கோணம் 42 டிகிரிக்கும் குறைவாக இருக்க வேண்டும். நேராக விழும் சூரிய ஒளி மேகக்கூட்டங்களால் மறைக்கப்படக் கூடாது. அப்போது மழைநீர்த்துளி சூரிய ஒளியால் பிரதிபலிக்கப்பட்டு வானவில் தோன்றும்.
சூரியனின் கோணம் வானில் வானவில்லின் உயரத்தை தீர்மானிக்கிறது. 42 டிகிரிக்கும் கூடுதலாக இருந்தால், ஒளி பிரதிபலிப்பு அடிவானத்திற்குக் கீழிருந்தால், தரைமட்டத்தில் இருந்து வானவில்லைப் பார்க்க முடியாது. பார்ப்பவரின் பின்பக்கமாக 4 டிகிரி கோணத்தில் சூரியன் இருந்தால் வானவில்லைப் பார்க்கலாம். ஆனால் பார்ப்பவரின் தலை உச்சியில் சூரியன் 90 டிகிரியில் இருந்தால் வானவில் தெரியாது.
சூரியனின் உதயத்திற்கு முன் இந்த கோணம் சுழிக்கும் குறைவாக இருந்தால், பார்ப்பவருக்கு நேராக சூரியன் இருந்தால் வானவில் தெரியாது. இவை வானவில்லைப் பார்க்கத் தேவையான நிபந்தனைகள். மழை மற்றும் மேகங்களின் நிலை வானவில்லைக் காண உதவுகின்றன. மேகங்களின் நிலை, தூசுகளின் அளவு போன்ற மனிதக் குறுக்கீடுகளால் வானவில் தோன்றுவது பாதிக்கப்படுகிறது.சூழல் மாசினால் பாதிக்கப்படும் வானவில்
மனிதச் செயல்களால் வளி மண்டலத்தில் அதிகரிக்கும் பசுமைக்குடில் வாயுக்களின் அளவு வானவில் தோன்றுவதைப் பாதிக்கிறது. மனோவா (Manoa) ஹவாயி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய இந்த ஆய்வுகளில் இருந்து 21ம் நூற்றாண்டில் இருந்ததை விட 2100ல் வானவில்கள் தரையில் தோன்றுவது 5% அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.
எங்கு தோன்றும் புதிய வானவில்கள்?
வட அட்சரேகைப் பகுதிகள் மற்றும் உயரமான இடங்களில் புவி வெப்ப உயர்வினால் அதிக உறைபனி மற்றும் அதிக மழை ஏற்படும் என்பதால் அங்கு கூடுதல் வானவில்கள் தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய தரைக்கடல் போன்ற, காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டு மழைக்குறைவு ஏற்படும் இடங்களில் இவை தோன்றும் எண்ணிக்கை குறையும்.
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு
சூரிய ஒளியை மழைத்துளிகள் பிரதிபலிக்கும்போதே இவை தோன்றுகின்றன. அதனால் சூரிய ஒளியும், மழைப்பொழிவும் இவை ஏற்பட அவசியம். பசுமைக்குடில் வாயுக்கள் வளி மண்டலத்தில் அதிகமாக உமிழப்படும்போது அது மேகங்கள் தோன்றுவதையும், மழைப்பொழிவையும் பாதிக்கிறது.
வருங்காலத்தில் வானவில்கள் வாழ்நாளின் அன்றாட சிறப்பாக மாறப்போகும் இயற்கையின் நன்மையை நினைத்து நான் மகிழ்கிறேன் என்று ஆய்வுக்கட்டுரையின் முன்னணி ஆசிரியரும், இப்போது நியூயார்க் பல்கலைக்கழக சூழலியல் துறை ஆய்வாளருமான கிம்பர்லி கார்ல்சன் (Kimberly Carlson) கூறுகிறார்.
சூழலின் அழகு சம்பவம் வானவில்லின் தோற்றம்
இவற்றிற்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயும் முதல் உலகளாவிய ஆய்வு இது. வெப்ப அதிர்ச்சி, வெப்ப அலைத்தாக்குதல்கள் போன்றவை மூலம் காலநிலை மாற்றம் மக்கள் வாழ்வு, உடல் நலத்தை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கிறது என்பது பற்றியே அதிகம் ஆராயப்படுகிறது. ஆனால் வெகு சில ஆய்வுகளே சூழலின் அழகு நிகழ்வான வானவில் போன்ற இயற்கையின் அற்புதங்களுக்கும் மனிதன் ஏற்படுத்தும் சூழல் சீரழிவுகளுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை ஆராயப்படுகிறது என்று மனோவா சூழலியல் துறை ஆய்வு மாணவர் கமிலோ மோரா (Camilo Mora) கூறுகிறார்.
வானவில் வரைபடங்கள்
காலநிலை மாற்றம் நிகழும் இவ்வேளையில் வானவில் வரைபடங்கள் உருவாக்கப்படவேண்டும் என்கிறார் மோரா. ப்ளிக்கர் (Flickr) என்ற சமூக ஊடகத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் அனுப்பிய வானவில் படங்கள் மனோவா ஹவாயி பல்கலைக்கழக மாணவர்களால் பதிவேற்றப்பட்டு ஆராயப்பட்டது. ரைன்போ என்று லேபிளிடப்பட்டு அனுப்பப்பட்ட இந்த படங்கள் மூலம் அவை உருவான விதம், உருவான இடம் போன்ற விவரங்கள் தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
வானவில்களின் மாயாஜால உலகம்
கலைவடிவம், கொடி, யூகலிப்டஸ் மரம், விதவிதமான உணவு வகைகளாக வெவ்வேறு வடிவங்களில் படமெடுக்கப்பட்டிருந்த வானவில் படங்கள் ஆய்வு செய்யப்பட்டன என்று ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரும், மனோவா ஹவாயி பல்கலைக்கழக கடல், புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளியின் (SOEST) முன்னாள் ஆய்வுமாணவருமான அமாண்டா வொங் (Amanda Wong) கூறுகிறார்.
வானவில் மாதிரி
மேக அடர்வு, படமெடுக்கப்பட்ட இடம், மேகங்களின் தோற்றம் மற்றும் நிலை, சூரிய கோணம் போன்றவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வருங்காலத்தில் வானவில் உருவாகக் கூடிய மாதிரியை (rainbow prediction model) உருவாக்கினர். உலக நிலப்பரப்பில் இன்றுள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டு வருங்காலத்தில் வானவில்கள் எங்கு எந்த எண்ணிக்கையில் தோன்றும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
தீவு நாடுகள்
தீவு நாடுகளில் வானவில்கள் வருங்காலத்தில் அதிகம் தோன்றும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வானவில்லைப் பார்க்க தீவு நாடுகளே சிறந்த இடங்கள் என்று மனோவ பள்ளி (SOEST) பேராசிரியர் ஸ்டீவன் ப்யூசிங்கர் (Steven Businger) கூறுகிறார். தீவுநாடுகளில் கடற்காற்று வீசும்போது மழைத்துளிகள் உயரமான இடத்தில் உருவாகி அந்தந்தப் பகுதியில் சாரலை ஏற்படுத்துகிறது. இதனால் தெளிந்த வானில் சூரியன் மகத்தான வானவில்லை உருவாக்குகிறது.
வானவில்லின் உலகத் தலைநகரம்
ஹவாய் தீவுகள் வானவில்கள் அதிகம் தோன்றும் இடம் என்பதால் சமீபத்தில் அது வானவில்லின் உலகத் தலைநகரம் என்று அறிவிக்கப்பட்டது. இங்கு வருங்காலத்தில் மேலும் சில நாட்கள் கூடுதலாக வானவில் தோன்றும். வானவில் ஏற்படுவதால் மனித உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது பற்றி ஆய்வில் எதுவும் கூறப்படவில்லை.
ஒலியும் ஒளியும் வானவில்லும்
என்றாலும் வானவில் மனித வரலாறு, கலாச்சாரம், அழகியலில் முக்கிய அங்கம் வகிக்கிறது. ஆனால் காலநிலை மாற்றம் பூமியில் மனிதன் பெறும் இயற்கையின் அனுபவங்களில் சூழல் சீரழிவுகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஒலி, ஒளி போன்றவை சூழல் சீர்கேட்டினால் மாற்றமடைகிறது. இவை போன்றவற்றை பற்றி மேலும் அதிக ஆய்வுகள் தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்று கார்ல்சன் கூறுகிறார்.
இந்த ஆய்வுக்கட்டுரை உலகளாவிய சூழல் மாற்றம் (Global Environmental Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
** ** **
மேற்கோள்கள்:
https://www.mathrubhumi.com/environment/news/climate-change-may-increase-rainbows-1.8008937
&
https://thedailyguardian.com/more-rainbows-will-be-seen-due-to-climate-change-suggests-study/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
புதிய உயிரினங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பது குறித்த செய்திகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இதில் இருந்து வித்தியாசமாக பூமியின் வட கோடியில் விஞ்ஞானிகள் ஒரு புதிய தீவைக் கண்டுபிடித்துள்ளனர். உலகின் வடமுனையில் உள்ள பெரிய தீவான கிரீன்லாந்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
இது வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள உலகின் மிகப் பெரிய தீவு. இங்குதான் உலகின் மிகப் பெரிய தேசிய சரணாலயம் அமைந்துள்ளது. பல ஆராய்ச்சி நிலையங்களும் இங்கு உள்ளன.
இங்கு புதியதொரு தீவைக் கண்டுபிடித்ததாக நார்வேயில் இருந்து விஞ்ஞானிகள் குழு ஒன்று கூறுகிறது. டென்மார்க் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதுவே உலகின் வடமுனை. புதிய நிலப்பகுதியைக் கண்டுபிடிப்பது தங்கள் நோக்கமில்லை என்று ஆய்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த கிரீன்லாந்து ஆர்க்டிக் ஆய்வு நிலையத்தின் (Arctic station research facility) தலைவர், துருவப்பகுதி ஆய்வாளர் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானி மார்ட்டின் ராஷ் (Morten Rasch) கூறுகிறார்.
புதிய உயிரினங்கள் தீவிர பருவநிலை மாறுதல்களுக்கு அடிக்கடி ஆளாகும். பூமியின் வடதுருவத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் எவ்வாறு தங்களை தகவமைத்துக் கொண்டு வாழ்கின்றன என்பதற்கான ஆதாரங்களைத் திரட்ட, அதற்கான மாதிரிகளைச் சேகரிக்க தாங்கள் சென்றதாக அவர் கூறுகிறார். ஆறு விஞ்ஞானிகள் அப்போது ஹெலிகாப்டர் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஊடாக் தீவு இருந்த இடத்திற்கு அருகில் சென்றபோது அந்தத் தீவு அங்கு காணப்படவில்லை என்பதை உணர்ந்தனர்.உலகின் இப்பகுதியில் வரைபடங்கள் தெளிவாக இருக்காது என்று மார்ட்டின் கூறுகிறார். ஒரு சில நிமிடங்கள் 'ஊடாக்' தீவைத் தேடிக் கொண்டிருந்த பிறகு அந்த புதிய இடத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அந்த புது இடம் மண் குவியல்கள், கடல் கொண்டு வந்து சேர்த்த படிமங்கள், சரளைக் கற்கள் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. நான்கு புறமும் பனிக்கட்டிகளால் சூழப்பட்டு, காட்சி தந்தது. முதல் பார்வையிலேயே நட்பிற்கு உகந்த ஓர் இடமாக அது தெரியவில்லை.
1978ல் டேனிஷ் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த ஊடாக் (Oodaaq) என்ற தீவிற்கே தாங்கள் சென்றதாக முதலில் விஞ்ஞானிகள் கருதினர். இந்தத் தீவே இன்றுவரை உலகின் வடமுனையாகக் கருதப்படுகிறது. பிறகு தாங்கள் வந்து சேர்ந்த இடத்தை சரிபார்த்தபோதே உலகின் வடகோடியில் அமைந்துள்ள புதியதொரு பகுதிக்கு தாங்கள் வந்தது அவர்களுக்குத் தெரிந்தது. இத்தீவு ஊடாக்கில் இருந்து வடமேற்கில் 780 மீ தொலைவில் அமைந்துள்ளது.
குழுவில் இருந்த அணைத்து விஞ்ஞானிகளும் தாங்கள் ஊடாக்கிற்கு வருகை தருவதற்குப் பதில் புதியதொரு தீவிற்கு வந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர் என்று சுவிட்சர்லாந்து ஆய்வாளர் கிறிஸ்டியென் லைஸ்ட்டர் (Christiane Leister) கூறுகிறார். இவரே லைஸ்ட்டர் அறக்கட்டளையை நிறுவியவர். இந்த ஆய்வுகளுக்கு நிதியுதவியையும் இந்த அறக்கட்டளையே அளித்து வருகிறது.
முன்காலத்தில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டறியச் சென்ற ஆய்வாளர்கள் தாங்கள் ஒரு பகுதிக்குச் சென்றதாகக் கருதும்போது, அதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய இடத்திற்கு வந்திருப்பதை பின்னர் அறிந்து கொள்வது போல விஞ்ஞானிகளுக்கு இது அமைந்திருந்தது.
பனி பொழியும் அழகிய தீவு
கிரீன்லாந்து, சுற்றுலா மற்றும் துருவப் பகுதி ஆய்வுகளுக்கு புகழ் பெற்ற இடம். ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்து, டென்மார்க்கிற்குச் சொந்தமான ஓர் சுயாட்சி நிலப்பரப்பு. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். நாட்டின் முக்கிய வருமானம் சுற்றுலா மூலம் கிடைக்கிறது.
இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் நிறைந்த கிரீன்லாந்து, வைக்கிங் வரலாறின் சமகால இன்யூட் கலாச்சாரத்தின் அற்புத உலகமாகக் கருதப்படுகிறது. தொலைதூரத்தில் அமைந்திருக்கும் இந்த தேசம் வியப்புகள் நிறைந்த ஒரு பனிக்கண்டத்தை திறந்து காட்டுகிறது.
இங்கு பனிபொழியும் காட்சிகளைக் கண்டு இரசிக்க உல்லாசப் படகுப் பயணம், ஹெலிகாப்டர் பயணம், ஆர்க்டிக் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டுகள், பனி நிறைந்த குறுகிய பாதைகள் (legoons) வழியே கயாக்கிங் பொழுதுபோக்குகள் போன்ற பல்வேறு சாகசம் நிறைந்த பொழுதுபோக்குகள் உள்ளன.
பூமியில் மிக அழகிய காட்சிகளில் ஒன்றான அரோரா போரியாலிஸ் எனப்படும் விடியல் மற்றும் அந்தி வெளிச்சம் ஆகிய அற்புத இயற்கை நிகழ்வைக் காண பல சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். புவி வெப்ப உயர்வினால் இங்கு உள்ள பனிப்படலங்கள் உருகி கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் செய்திகள் இங்கிருந்து அடிக்கடி வருவதுண்டு.
2019ல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தப் பகுதியை தங்கள் நாடு விலைக்கு வாங்கத் தயாராக இருப்பதாகக் கூறினார். உடனடியாக டென்மார்க் இந்த ஆலோசனையை நிராகரித்தது.
பனிக்கடலிற்கு நடுவில் புதிய தீவு
30மீ/150 முதல் 60 மீ/180 அடி வரை அகலம் உள்ள இந்த சிறிய தீவு கடல் மட்டத்தில் இருந்து 3 முதல் 4 மீ உயரத்தில் அமைந்துள்ளது. நகர்ந்து கொண்டிருக்கும் பனிப்படலப் பரப்புகளால் அடித்து வரப்பட்ட மண், பாறைக்கற்கள் மற்றும் கடலடி மண் ஆகியவை இங்கு காணப்படுகின்றன. சேறு சகதி, சரளைக்கற்கள் நிறைந்த குன்றுகள் இங்கு உள்ளன.
வலுவான ஒரு புயற்காற்றால் அடித்து வரப்பட்ட பொருட்களாக இவை இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்மைக் காலங்களில் இந்த கண்டத்தில் பனிப்படலங்கள் (glaciers) புவி வெப்ப உயர்வின் காரணமாக அதிக அளவில் உருகினாலும், இத்தீவு காலநிலை மாற்றத்தினால் உருவாகியிருக்க வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
பெயர் சூடும் தீவு
இந்த புதிய தீவிற்கு இதுவரை பெயரிடப்படவில்லை. விஞ்ஞானிகள் இந்த தீவிற்கு கெக்கடெக் அவனாலக் (Qeqertaq Avannarleq) என்ற பெயரை வழங்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த சொல்லிற்கு கிரீன்லாந்து மொழியில் பூமியின் வடகோடி முனையில் உள்ள தீவு என்று பொருள்.
டென்மார்க் தேசிய விண்வெளிக் கழகத்தின் புவி இயக்கவியல் பிரிவின் (Geodynamics) பேராசிரியர் மற்றும் தலைவர் ரினெ போர்ஸ்பெர்க் (Rene Forsberg) கிரீன்லாந்தின் வடக்கில் இப்பகுதியில் சில இடங்களில் அடர்த்தி மிகுந்த துருவப் பனிப்படலங்கள் காணப்படுகின்றன என்று கூறியுள்ளார். இந்த இடங்கள் குளிர்காலத்தில் இரண்டு முதல் மூன்று மீட்டர் வரை கனம் உள்ளதாகக் காணப்படுகின்றன.
கோடையில் இவற்றின் அடர்வு மாறுபடலாம் என்று அவர் கருதுகிறார். 1978ல் ஊடாக் தீவைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார். அன்று இருந்ததை விட இன்று இந்தப் பகுதி பல மாறுதல்களை சந்தித்துள்ளதாக போர்ஸ்பெர்க் கூறுகிறார். இந்த புதிய நிலப்பரப்பு நீடித்திருப்பதைப் பொறுத்தே இதனைக் சொந்தம் கொண்டாட உலக நாடுகள் முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து 3 மீட்டர் உயரத்தில் பாய்ந்து வரும் கடல் அலைகளின் சீற்றத்தைத் தாக்குப் பிடிக்கும் ஆற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறை இந்தப் புதுத்தீவிற்குப் பொருந்துமா? வலிமை மிக்க ஒரு புயற்காற்று வீசினால் இந்தத் தீவுப்பகுதி தோன்றியது போலவே மறைந்து போகுமா?
இப்போது இதுவே பூமியின் வடமுனையில் அமைந்துள்ள நிலப்பகுதி. இதுபோன்ற சிறு தீவுகள் வரும், போகும். இந்தத் தீவு உண்மையில் தீவா? இல்லை வெறும் ஒரு கரையா? காலம்தான் பதில் சொல்லும்!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
காலநிலை மாற்றத்தில் பல செயற்கை வழிகளில் குறுக்கிட்டு புவி வெப்ப உயர்வைத் தடுக்க விஞ்ஞானிகள் நீண்ட காலம் முயன்று வருகின்றனர். பல ஆய்வாளர்கள் வளி மண்டலத்தில் ஸ்டேட்டோஸ்பியர் அடுக்கில் சல்பர் போன்ற தனிமங்களின் நுண் துகள்களைத் தூவும் முறையை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
விஞ்ஞானிகளின் திறந்த கடிதம்
சூரியனின் வெப்பம் மிகுந்த கதிர்களை நுண் துகள்களைத் தூவி தடுத்து நிறுத்துவது பற்றி தீவிரமாக ஆராய வேண்டும் என்று முன்னாள் நாசா நிறுவனத்தின் விஞ்ஞானியும் 1980களில் புவி வெப்ப உயர்வு பற்றி முன்னெச்சரிக்கை செய்தவருமான புகழ்பெற்ற காலநிலை ஆய்வாளர் மூத்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஹேன்சன் (James Hansen) தலைமையில் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவைச் சேர்ந்த 60 விஞ்ஞானிகள் எழுதியுள்ள திறந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த நிலையில் வெப்ப உயர்வை 2 டிகிரிக்கு கீழ் கட்டுப்படுத்த முடியவில்லை. பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியைக் குளிர்ச்சியடையச் செய்ய புவிப் பொறியியல் (Geo engineering) அல்லது சூரியக்கதிர் மேலாண்மையை (solar Radiation Management SRM) நடைமுறைப்படுத்துவது பற்றி தீவிரமாக ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.வரும் ஒன்றிரண்டு பத்தாண்டுகளில் இந்த முறை பற்றிய முடிவு எடுக்கப்பட வேண்டும். சூரியனின் கதிர்களைத் திசை திருப்பிவிட மேகங்களை அதிக பிரகாசமுடையதாக்கி அதன் மூலம் கூடுதல் வெப்பத்தை சிதறடிக்கும் வழி பற்றியும் சிந்திக்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகள் வளி மண்டலத்தில் சல்பர் போன்ற துகள்களைத் தூவி பூமியைக் குளிர வைக்கும் முறையே நன்மை பயக்கும் என்று நம்புகின்றனர். இதன் மூலம் சூரிய கதிர்களை சிதறடித்து ஒரு டிகிரி அல்லது அதற்கும் குறைவாக புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த முடியும்.
இதனால் ஏற்படும் பலன் தற்காலிகமானது என்பதால் இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். எரிமலை வெடிக்கும்போது ஏற்படும் புகை மூட்டம் பூமியை மங்கச் செய்கிறது. இது போல இத்திட்டம் செயல்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. எல்லா அரசுகளும் இதை சரியான முறையில் மேற்கொள்வது பற்றி சந்தேகங்கள் உள்ளன. இதனால் இந்த முறை முழுமையாக இன்னும் ஆராயப்படவில்லை.
பல பில்லியன் டாலர் செலவு
என்றாலும் உலக அரசுகள் புவி வெப்ப உயர்வைக் குறைத்து காலநிலைப் பேரழிவு நிகழ்வதைத் தடுக்க இன்னமும் எதுவும் செய்யாமல் இருப்பதால் இந்த முறையைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற வலுவான எண்ணம் பல விஞ்ஞானிகளிடையில் உருவாகியுள்ளது. அமெரிக்க அரசாங்கம் இம்முறையை ஆராய ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆண்டிற்கு பல பில்லியன் டாலர் செலவு பிடிக்கும் இத்திட்டம் பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா சூழல் அமைப்பு (UNEP) வலியுறுத்தியுள்ளது.
பாதிப்புகள்
புவி வெப்ப உயர்வை 1 டிகிரிக்கு கட்டுப்படுத்துவது என்பது இன்னமும் எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் நுண் துகள்கள் தூவப்படுவதால் ஓசோன் அடுக்கு பாதிக்கப்படலாம். சூரியனின் மூலம் கிடைக்கும் புவி ஆற்றலில் வேறுபாடுகள் ஏற்படலாம். நாடுகளுக்கு இடையில் சண்டைகள் வரலாம். திட்டம் திடீரென்று நிறுத்தப்பட்டால் பூமியின் வெப்பம் பல மடங்கு உயரலாம்.
குறுக்குவழிகள் எதுவுமில்லை
காலநிலைச் சீரழிவுகளைத் தடுக்க மனிதன் நினைப்பது போல குறுக்கு வழிகள் எதுவுமில்லை என்று ஐ நா சூழல் அமைப்பின் செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சென் (Inger Andersen) கூறுகிறார். வெப்பத்தைக் குறைக்க இப்போது உள்ள செயல்பாடுகள் எவையும் போதுமானதாக இல்லை. அதனால் மீள முடியாத வெப்ப உயர்வில் வெந்துருக ஆரம்பிப்பதற்கு முன் பூமியைக் குளிரச் செய்ய அவசரமாக எதையேனும் செய்தேயாக வேண்டும் என்று ஜேம்ஸ் ஹேன்சன் கூறுகிறார்.
மாற்று வழியில்லை
இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாலும் காற்று மண்டலத்தில் இருந்து கார்பனை அகற்ற இது எந்த விதத்திலும் உதவாது. இதன் விளைவுகள் பற்றி அறியப்படாத நிலையில் இத்திட்டம் தார்மீகப் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பசுமைக்குடில் வாயுக்களை உருவாக்கும் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதை நிறுத்துவது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. சமீபத்தில் இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதை மெக்சிகோ தடை செய்தது.
இத்திட்டத்திற்கு எதிராக நானூறிற்க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகளவிலான சூரிய புவிப் பொறியியல் தடுப்பு சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் இத்திட்டம் சூழலைக் காக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்த விரும்பாமல் பூமியை மிகப்பெரிய அளவில் மாசுபடுத்தும் பணக்கார நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கவர்ச்சிகரமான ஒண்று. உலகின் வெப்பநிலையை நம் விருப்பப்படி கட்டுப்படுத்தலாம் என்பது சர்ச்சைக்குரிய ஒன்றே என்று சர்வதேச சூழல் சட்ட மையத்தின் (CIEL) காலநிலை மற்றும் ஆற்றல் பிரிவின் துணை இயக்குனர் லில்லி ஃப்யுயர் (Lili Fuhr) கூறுகிறார்.
நன்மை செய்யும் இயற்கையின் மீது மனிதன் தொடுக்கும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை என்றால் நாளை பூமியின் நிலை என்னவாகும்? வெய்யிலுக்கு நிழல் தரும் குடை போல சூரியனை மறைத்து அதன் கதிர்களைத் திசை திருப்பி விடுவது சுலபமானதில்லை. சூழலை சீரழிப்பதை மனிதன் உடனடியாக நிறுத்தாவிட்டால் அழியும் பூமியில் மனிதன் இது போன்ற தொழில்நுட்பங்களைத் தேடியே ஓட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: புவி அறிவியல்
சமீபத்தில் சீன விஞ்ஞானிகள் மனித குலம் இன்றுவரை அறியாத பல நூறாண்டுகள் பழமையுடைய மரம் செடி கொடிகள் அடர்ந்த காடுடன் கூடிய மிகப் பெரிய பள்ளம் (sinkhole) ஒன்றை பல மணிநேரப் பயணத்திற்குப் பிறகு கண்டுபிடித்துள்ளனர். ஜிங்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி 630 அடி/192 மீட்டர் ஆழமுள்ள இதன் அடியில் காடு அமைந்துள்ளது. இப்பள்ளம் அமெரிக்கா மிசௌரி மாகாணத்தில் மிசிசிபி நதியின் மேற்குக் கரையில் செயிண்ட் லூயி நகரில் அமைந்திருக்கும் நுழைவாயில் வளைவை (St Luiz Gateway arch) மூழ்கச் செய்யும் அளவிற்கு ஆழமானது.
குகை ஆய்வுகள்
குகைகள் பற்றி அறிவியல்ரீதியாக ஆராயும் ஆய்வாளர்கள் (Speleologists) மற்றும் பொழுதுபோக்கிற்காக இயற்கையில் கரையக்கூடிய சுண்ணாம்புக்கல், டோலமைட், ஜிப்சம் போன்ற கற்களால் அமைந்த நிலப்பகுதிகள் (karsts), குகைகளை ஆராய்பவர்கள் (Spelunkers) மே 6 2022 அன்று இந்த பிரம்மாண்டப் பள்ளம் மற்றும் அதனுள் இருக்கும் வனப்பகுதியைக் கண்டுபிடித்தனர்.அழகிய இந்த அமைப்பில் குகைக்கு மூன்று வாசல் காணப்படுகிறது. இதன் அடியில் இருக்கும் காட்டில் 131 அடி/40 மீட்டர் உயரமுள்ள பழமையான மரங்கள் பள்ளத்தின் நுழைவாயில் வரை சூரியஒளியைப் பெற கிளை பரப்பி நீண்டு நிமிர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன.
இது மிக மகிழ்ச்சி தரும் செய்தி என்று அமெரிக்க தேசிய குகைகள் மற்றும் கார்ஸ்ட்ஸ் ஆய்வுக்கழகத்தின் (National Caves & Karsts Research Institute NCKRI) இயக்குனர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற குகை நிபுணர் ஜார்ஜ் வெனி (George Venni) கூறுகிறார்.
குகைகளின் தாயகம் தென் சீனா
இந்த ஆய்வுகள் அமெரிக்க ஆய்வுக்கழகம் மற்றும் சீன புவியியல் ஆய்வுக்கழக விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டன. தென் சீனா இதுபோன்ற பள்ளங்கள், குகைகள், கார்ஸ்ட்ஸ் நில அமைப்புகளின் தாயகம் என்றாலும், மனிதன் தீண்டாத அடர்ந்த காடு இதனுள் அமைந்திருப்பது இயற்கையின் விந்தை என்று வெனி கூறுகிறார். கரையும் கற்களாலான நில அமைப்புகள் (Karsts) அடித்தட்டுப் பாறைகள் (bedrocks) சிதைவதால் உண்டாகின்றன.
பள்ளங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
சிறிது அமிலத் தன்மை உடைய மழை நீர் மண்ணின் வழியாக கீழிறங்கும்போது கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி மேலும் அமிலத் தன்மை அடைகிறது. இது வேகமாக அடித்தட்டுப் பாறை விரிசல்கள் வழியாக செல்லும்போது அவற்றை விரிவடையச் செய்து சுரங்கங்கள், வெற்றிடங்களை உருவாக்குகிறது. காலப்போக்கில் இந்த அமைப்புகள் பெரிதாகும்போது இவற்றின் மேற்கூரை உடைந்து பெரும் பள்ளங்களை (sinkholes) உண்டாக்குகிறது.
உலகில் காணப்படும் பள்ளங்கள்
பிரதேசரீதியில் காணப்படும் புவியியல் அமைப்பு, காலநிலை, மற்ற காரணங்களால் இந்த அமைப்புகள் உருவாகும் விதம் வேறுபடுகிறது. இதுபோன்ற வியப்பூட்டும் அமைப்புகள் பல சீனாவில் உள்ளன. ஆனால் உலகில் பல இடங்களில் ஒன்றிரண்டு மீட்டர் மட்டுமே விட்டமுடைய இத்தகைய அமைப்புகள் காணப்படுகின்றன.
புகழ்பெற்ற க்வாஞ்ஜி
எரிமலை வெடிப்பு, வேகமாக வீசும் காற்று போன்றவற்றால் உலகில் இருக்கும் 25% குகை அமைப்புகள் அமெரிக்காவில் காணப்படுகின்றன. புவியின் மொத்த நிலப்பரப்பில் 20% இத்தகைய அமைப்புகளால் உருவாக்கப்பட்டவையே. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பள்ளம், எழில் கொஞ்சும் இதுபோன்ற அமைப்புகளுக்குப் புகழ்பெற்ற க்வாஞ்ஜி ஜுவாங் (Guangxi Zhuang) சுயாட்சி மாகாணத்தில் லே பகுதியில் (Leye county) பிங் (Ping’e) என்னும் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இப்பகுதி பள்ளங்கள், பாறைத்தூண்கள், இயற்கையில் அமைந்த நிலப்பாலங்கள் போன்றவற்றினால் செழுமையுடன் விளங்குகின்றன. இதனால் இது ஐநாவின் பாரம்பரியப் பெருமைமிக்க இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.சொர்க்கத்தின் வாசல்
இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இப்பள்ளம் 1004 அடி/360 மீட்டர் நீளம், 492 அடி/150 மீட்டர் அகலம் உடையது என்று கார்ட்ஸ்ட்கள் பற்றி ஆராயும் புவியியல் கழகத்தின் மூத்த பொறியியலாளர் ஜாங் யுவங்ஹை (Zhang Yuanhai) கூறுகிறார். சொர்க்கத்தின் வாசல் (heavenly pit) என்று பொருள்படும் வகையில் சீனாவின் மாண்டரின் மொழியில் இப்பள்ளங்கள் டியான்கெங் (tiankeng) என்று அழைக்கப்படுகின்றன.
இந்த அமைப்பின் அடிப்பகுதி மற்றொரு உலகம். ஒரு மனிதரின் தோள்பட்டையளவு உயரத்திற்கு இதன் தரை அமைந்திருக்கிறது என்று இந்த குகைப் பயணத்திற்கு தலைமை வகித்த நிபுணர் சென் லிக்சின் (Chen Lixin) கூறுகிறார். இதுபோன்ற இயற்கைப் புவியமைப்புகள் பாலைவனச் சோலை போன்றவை. விஞ்ஞானம் இதுவரை வெளியுலகிற்கு கண்டறிந்து கூறாத பல உயிரினங்கள் இந்தக் குகைகளில் வாழலாம் என்று லிக்சின் கூறுகிறார்.
பெரணிகள் வாழும் குகை
அமெரிக்கா டெக்சாசின் மேற்குப்பகுதியில் இருக்கும் ஒரு குகையில் வெப்பமண்டலப் பெரணிகள் (ferns) ஏராளமாக வளர்ந்துள்ளன. இவற்றின் ஸ்போர்களை வௌவால்கள் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிற்கு பரவச் செய்கின்றன. இந்த அமைப்புகள் பல்வேறு உயிரினங்களுக்கு அடைக்கலம் தருவதுடன் பூமியின் ஆழத்தில் நீர் சேகரிக்கும் தேக்கங்களாக (aquifers) செயல்படுகின்றன. உலகம் முழுவதும் இத்தகைய நீர் நிலைகள் 700 மில்லியன் மக்களுக்கு நீர் ஆதார மூலமாக உள்ளது.
மண்ணிற்கடியிலும் மனிதனின் கைவரிசை
ஆனால் இவை சுலபமாக அடையக்கூடிய இடங்களாக இருப்பதால் மக்களால் மாசுபடுத்தப்படுகின்றன. இவை திடக்கழிவுகளால் எளிதில் மாசடையக் கூடியவை. இதுபோன்ற நீர் நிலைகளில் இருந்து கார் பேட்டரிகள், வாகன உதிரி பாகக் கழிவுகள், பேரல்கள், பாட்டில்கள் போன்ற பொருட்கள் அகற்றப்படுவது உண்டு என்று வெனி கூறுகிறார். இப்பகுதியில் இப்புதிய கண்டுபிடிப்பின் மூலம் இங்கு இருக்கும் பள்ளங்களின் எண்ணிக்கை முப்பதாக அதிகரித்துள்ளது.
முந்தைய ஆய்வுகள்
இதே ஆய்வுக்குழுவினர் முன்பு வடமேற்கு சீனாவின் ஷாங் ஷி (Shaanxi) பிரதேசத்தில் டஜன் கணக்கில் இதுபோன்ற பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். க்வாங்சி (Guangxi) மாகாணத்தில் கூட்டமாக அமைந்த, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட குகைப் பள்ளங்களை (interconnected karsts) கண்டுபிடித்தனர். இவர்களின் ஆய்வுப் பயணம் தொடர்ந்து மேலும் பல அதிசங்களை உலகிற்கு அளிக்கட்ட்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- 2050ல் உலகின் அணைக்கட்டுகள் எப்படி இருக்கும்?
- எரிமலைகள் வரமா? சாபமா?
- ஜெட் ஸ்ட்ரீம்
- அன்னை பூமியின் மடியில் அற்புத அமைப்புகள்
- கதை சொல்லும் காற்று
- ஆக்சிஜன் இல்லாமல் அழியப் போகும் பூமி?
- மூழ்கும் தீவு – மூழ்கப் போகும் உலகம்
- மண்ணிற்கடியில் புதையும் நாட்டின் தலைநகரம்
- அய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா?
- ஐன்ஸ்டினின் சார்பியல் தத்துவமும், ஆசீவக மதமும்
- கொள்ளை நோய் தோன்றுவது இயற்கை தன்னை சமனப்படுத்திக் கொள்ளும் ஒரு நிகழ்வா?
- உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்
- அதிக மழைப்பொழிவு தான் எரிமலைகள் வெடிக்க காரணமா?
- சுற்றுச்சூழலைப் பாதிக்கும் நுகர்வுப் பண்பாடு
- மனித குலத்தின் நிலைத்த வளர்ச்சி சாத்தியமா?
- ஒரு நூற்றாண்டு கால அறிவியல் புதிரை தீர்த்து வைத்த மாணவன்
- ஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்
- நிறையும் எடையும் ஒன்றா?
- ட்ரம்ப் குடும்பம் காலப்பயணம் செய்கிறார்களா?
- சீராகி விரும் ஓசோன் ஓட்டை