கீற்றில் தேட...
சுற்றுச்சூழல்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒரு காலத்தில் செழுமையான, வனவிலங்குகள் வாழ்ந்த இடம். போர் வெறியில் அனைத்தும் அழிந்தபோது அது இயற்கை மற்றும் சமூக வாழ்வின் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாடு முழுவதும் ஒன்று சேர்ந்து அதனால் உண்டான துயரத்தை அனுபவித்தது. பத்து இலட்சம் பேர் கூட்டக் கொலை செய்யப்பட்டனர். ஐம்பது இலட்சம் பேர் அகதிகளாயினர், இடம்பெயர்ந்தனர். மனிதர்களுடன் சேர்ந்து இயற்கை வளங்கள், வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டன.
1977 முதல் 1992 வரை நீண்டு நின்ற மொசாம்பிக்கின் உள் நாட்டு கலவரம் ஒரு மக்கள் கூட்டத்தின் மீது பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. மொசாம்பிக் கொரொங்கோசா (Corongosa) தேசியப் பூங்கா இதற்கு வரலாறு கூறும் சான்று. என்றாலும் இந்த பெரும் துயரத்தில் இருந்து மக்கள், பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானதில்லை என்ற பாடத்தைக் கற்றனர்.
கலவர பூமியாக இருந்த ஒரு பூங்கா மீண்டு வந்த கதைதான் இது! 1975ல் போர்ச்சுகீசியர் ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து அங்கு உள் நாட்டுக் கலவரம் வெடித்தது. இது ஆப்பிரிக்காவின் மிக மோசமான இரத்தக்களறி என்று வர்ணிக்கப்படுகிறது. மனிதன் உட்பட சகலமும் இதன் துயரங்களை அனுபவிக்க நேரிட்டடு. இது 1977 முதல் 1992 வரை பதினைந்து ஆண்டுகள் நீண்டது. அந்த காலம் முழுவதும் இப்பூங்காவே யுத்த பூமியாகப் பயன்படுத்தப்பட்டது.
இது மனித உயிரிழப்புகள், பெரிய அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இலட்சக் கணக்கான ஆட்கள் உயிரிழந்ததுடன் அகதிகளாகவும் மாறினர். ஜோலியும் கூலியும் இல்லாத ஒரு சமூகமாக மொசாம்பிக் மக்கள் சமுதாயம் மாறியது. செழுமை மிகுந்த இடமாக இருந்த கொரொங்கோசா பூங்காவிற்குள் ஆட்கள் நுழைந்தனர்.
யானை, சிங்கம், சிறுத்தைப் புலி, நீர் யானை, கலை மான் போன்ற பாலூட்டி விலங்குகளின் வாழிடமாக இருந்த இந்த இடம் போர்க் காலத்தில் வேட்டை பூமியாக மாறியது. கலவரக் காரர்கள், அதை எதிர்கொள்ள வந்தவர்கள், பிரதேசவாசிகள் அனைவரும் பூங்காவிற்குள் நுழைந்தனர். இதன் விளைவு பெரும் அழிவு.
உணவு, பணத்தைக் கண்டுபிடிக்க ஒரு வழியாக பூங்காவின் இயற்கை வளங்கள் மாறின. பெரிய விலங்குகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
மரங்களும் மற்ற இயற்கை வளங்களும் மனம் போன போக்கில் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு காலத்தில் வளமான இடமாக இருந்த பூங்கா தரிசு பூமியாக மாறியது. பூங்காவின் உட்புறம் தந்தங்களுக்காகக் கொல்லப்பட்ட யானைகளின் உடல்கள் நிறைந்தன. வாழிடங்கள் முழுமையாக அழிந்தது. வீடு கட்டுமானம், விறகுக்காக மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டன. இது பூங்காவின் சூழல் மண்டலங்களை முற்றிலுமாக அழித்தது.
கிரெகரி காரும் போருக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களும்
90% பெரிய விலங்குகள் போரின் இறுதி நாட்களில் இங்கிருந்து காணாமல் போயின. 2,500 யானைகள் 250 ஆகக் குறைந்தது. தாவர உண்ணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இது பூங்காவின் உயிர்ச் சூழலைப் பாதித்தது. வேட்டையாடி உண்ண விலங்குகள் கிடைக்காமல் போனதால் ஊண் உண்ணும் மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் குறைந்தது. இயல்பான சூழல் அழிந்து போனதால் வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்கள் சாதாரண நிகழ்வுகளாயின.
இதைத் தொடர்ந்து பூங்காவை மீட்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் வலுப்பெற்றது. 2,000ம் ஆண்டிற்கு முன்பே அமெரிக்க சமூக செயல்பாட்டாளரான க்ரெகரி சி கார் அவர்கள் (Gregory C Carr) தலைவராக இருந்த அறக்கட்டளை மொசாம்பிக் அரசுடன் இணைந்து பூங்காவின் இயற்கைச் சூழலை மீட்பது, நீடித்த நிலையான வளர்ச்சியை நடைமுறைப்படுத்துவது, பிரதேச மக்களின் பங்களிப்பு போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு பூங்காவின் மீட்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
அமெரிக்க தொழில் முனைவர், சூழல் பாதுகாவலர், மனித உரிமைப் போராளி கிரெகரி கார் 1959ல் இடாஹோ ஃபால்ஸ் இடாஹோவில் பிறந்தார். யூட்டா பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். அல்மமேட்டா ஹார்வோர்டு கென்னடி பள்ளியில் (Alma mater Harvard Kennedy School) பொதுக் கோட்பாட்டு அறிவியலில் 1986ல் முனைவர் பட்டம் பெற்றார். தந்தை டைலர் ஏஜ் (Taylor H). தாய் பெட்டி ஓ கார் (Betty O. Carr).
அதே ஆண்டு ப்ரேக் அப் ஆஃப் அட் அண்ட் டி (breakup of AT&T) என்ற அமைப்பினால் உள்ளுணர்வு பெற்று ஸ்காட் ஜோன்ஸ் (Scott Jones) என்பவருடன் இணைந்து பாஸ்ட்டன் டெக்னாலஜி (Boston Technology) என்ற நிறுவனத்தைத் தோற்றுவித்தார். இது குரல் மின் அஞ்சல்களை தயாரித்து தொடக்க கால தொலைபேசி நிறுவனங்களுக்கு விற்று வந்தது. 1998ல் இந்நிறுவனம் கன்வெர்ஸ் தொழில்நுட்பம் என்ற கம்பெனியால் வாங்கப்படும் வரை கிரெகரி கார் இதன் தலைவராக இருந்தார்.
1996 முதல் 1998 வரை அவர் புராடிஜி (Prodigy) என்ற ஆரம்ப கால சர்வதேச இணைய வசதி வழங்கும் அமைப்பின் தலைவராக செயல்பட்டார். 1996ல் ஆப்பிரிக்கா ஆன் லைன் ( Africa Online) என்ற அமைப்பின் இணை தோற்றுநரானார். 1998 வரை அதன் தலைவராக இருந்தார். 1998ல் இலாபம் தரும் நிறுவனங்களில் இருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார். மனித நல செயல்பாடுகளுக்காக தன் வாழ்வை அர்ப்பணிக்கத் தொடங்கினார்.
1999ல் ஹார்வோர்டு பல்கலைக்கழகத்தில் மனித கோட்பாடு மையத்தின் (Carr Center) அடிப்படை கொடையாளியாக செயல்பட்டார். கற்பித்தல் மற்றும் ஆய்வின் மூலம் இந்த மையம் யு எஸ் மட்டும் உலகம் முழுவதும் நல்ல பொது நலக் கோட்பாட்டை மையமாகக் வைத்து மனித உரிமை நல பணிகளை அடிப்படை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
1999ல் அவர் கிரெகரி சி கார் அறக்கட்டளை (Gregory C. Carr Foundation) என்ற இலாப நோக்கமற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிறுவினார். இதன் மூலம் அவர் 35 ஆண்டுகளுக்கான கொரொங்கோசா மீட்பு திட்டத்தை செயல்படுத்தினார். அறக்கட்டளையின் மீட்புக் குழு அரசுடன் இணைந்து பூங்காவின் எல்லையை கொரொங்கோசா மலைப் பகுதி வரை விரிவாக்கி மலையில் மூன்று மில்லியன் மரக்கன்றுகளை நட்டது. அவை வளர்ந்து பெரிய மரங்களாக இன்று காட்சி தருகின்றன.
பூங்காவில் பன்னாட்டு சூழல் மீட்பிற்கான அறிவியல் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. சூழல் சுற்றுலாத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. பூங்காவின் எல்லையில் வாழும் உள்ளூர் மக்களுக்கு ஆரோக்கியம், கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. நேஷனல் ஜியோக்ராபிக் தொலைக்காட்சி (National Geographic Television) பூங்காவின் மீட்புக் கதையை ஆப்பிரிக்காவின் இழக்கப்பட்ட ஏடன் (Africa's Lost Eden) என்ற தலைப்பில் 2008 அக்டோபர் 26 அன்று ஒளிபரப்பானது. சி பி எஸ் 60 நிமிட செய்தி என்ற நிகழ்ச்சியில் இந்த வெற்றிக் கதை 2022 டிசம்பர் 4 அன்று திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது.
கார், பல்கலைக்கழகங்கள், மாநாடுகள், திரைப்பட விழாக்களில் சூழல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பற்றிய முக்கியப் பேச்சாளராக உள்ளார். 2012ல் இருந்து அவர் பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கு சூழல் விழிப்புணர்வு சொற்பொழிவு நடத்தி வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் 2014ன் சிறப்பு உரைத் தொடரில் பங்கேற்றார். 2000ல் அவர் ஐடாஹோ (Idaho) அருங்காட்சியகத்தை தோற்றுவித்தார்.
2001ல் அவர் மாசிசூசெட்ஸ் கேம்ப்ரிட்ஜ் ஹாவ்வோர்டு சதுக்கத்தில் சிறிய, பரிசோதனைரீதியிலான தயாரிப்புகளுக்காக மார்க்கெட் தியேட்டர் (Market Theater) என்ற அரங்கத்தைத் திறந்தார். 2001ல் ஆரிய நாடுகளின் வளாகம் (compound of the Aryan Nations) என்ற இடத்தை வாங்கி அதை பூங்காவாக மாற்றினார். இ ஓ வில்சன் (E. O. Wilson) என்ற உயிரியலாளரின் நெருங்கிய நண்பரான கார் மே 17 2014ல் கொரொங்கோசா பூங்கா மீட்பு பற்றி ஆர்வோர்டு பல்கலைக்கழகத்தில் டை இயற்கை வரலாறு அருங்காட்சியகத்தில் உரையாற்றினார்.
வில்சன் உயிர்ப் பன்மயத் தன்மை வாரியத்தில் வில்சன் இறக்கும் வரை பணி புரிந்தார். ஜூலை 23, 2024ல் பாய்சி (Boise) ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் சிறந்த சேவைக்கான செனட்டர் ப்ராங்க் சர்ச் விருது, 2003ல் யூட்டா ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2013ல் ஐடஹோ டெக்னாலஜி ஹால் ஆஃப் ஃபேம் விருது, 2015ல் பாய்சி ஸ்டேட் பல்கலைக்கழக கௌரவ முனைவர் பட்டம், 2024ல் சிறந்த பொது நல சேவைக்கான ப்ராங்க் சர்ச் மதிப்பு மிகு விருது போன்றவை கார் பெற்ற விருதுகளில் சில.
சூழல் மண்டலத்தின் மறு நிர்மானமே மீட்புத் திட்டத்தின் முக்கிய இலட்சியம். போரில் இல்லாமல் போன நீர் மூலங்கள் மீட்கப்பட்டன. சிறிய உயிரினங்கள், தாவரங்களின்வ் அளர்ச்சி உறுதி செய்யப்பட்டது. முன்பிருந்த வன உயிரினங்களை மீட்டுக் கொண்டு வரும் வகையில் அவற்றிற்கான வலசைப் பாதைகள் அமைக்கப்பட்டன. வேட்டையாடல் கட்டுப்படுத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் இதில் முக்கியப் பங்காளிகளாயினர்.
சட்ட விரோத வேட்டையாடலைத் தடுக்க பூங்காவை பயிரிடும் இடமாக பயன்படுத்தியிருந்த விவசாயிகளுக்கு வருமானத்திற்கான வேறு வழிகள் ஏற்படுத்தப்பட்டது. பூங்காவின் பல்வேறு திட்டங்களில் அவர்கள் பங்காளிகளாயினர். வருமானம் ஈட்டும் வழிகள் உருவானது. இந்த நடவடிக்கைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அழிக்கப்பட்ட மரங்கள், தாவரங்களுக்கு பதில் புதியவை நட்டு வளர்க்கப்பட்டது. பூங்காவின் இயற்கைச் சூழல் மீண்டு வந்தது.
மக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள்
இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் மதிப்பை உணர்த்தும்வகையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இயற்கையின் ஒரு அம்சமே மனிதன் என்பதை அவர்கள் உணர்ந்தனர். உழைத்து வருமானம் ஈட்டி வாழும் வழிகள் ஏற்பட்டன. பாதுகாப்பு பணிகளில் மக்கள் தாமே முன்வந்து செயல்படத் தொடங்கினர். கொரொங்கோசா மீண்டு வர ஆரம்பித்தது.
வன உயிரினங்களின் எண்ணிக்கை, சூழலை மீட்டெடுப்பது குறித்து நிரந்தரமாக கண்காணிக்க, ஆராய அறிவியல் பூர்வமான ஆய்வுக்கூடங்கள் தொடங்கப்பட்டன. இத்திட்டங்கள் உலகிற்கே ஒரு முன்மாதிரியாக மாறியது. இந்த மீட்புக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளூர் மக்களே. கிரெகரி கார் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் பூங்காவிற்கு மறுபிறப்பு கொடுப்பதில் முக்கியப் பங்காற்றின. சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. இது மக்களுக்கு புதிய வருமானம் ஈட்டும் வழியாக மாறியது. புல்வெளிகள், நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டன.
இதனால் அங்கு சூழல் மண்டலங்கள் துளிர் விட ஆரம்பித்தன. உணவும் குடி நீரும் கிடைக்கத் தொடங்கியதுடன் யானைகள் போன்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இது மற்ற உயிரினங்களின் வரவிற்குக் காரணமானது. இப்போதுள்ள பூங்காவின் பரப்பு சுமார் 4,000 சதுர கிலோமீட்டர். அடர்ந்த மரங்கள், புல்வெளிகள், மழைக்காடுகளால் இன்று பூங்கா வளமாக உள்ளது.
ஒருகாலத்தில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட யானைகள், சிங்கங்கள், சிறுத்தைப் புலிகள், நீர் யானைகள் போன்ற விலங்குகள் உள்ள ஆப்பிரிக்காவின் முதண்மை சரணாலயமாக இன்று கொரொங்கோசா திகழ்கிறது. ஊர்வன, பறவைகள், பாம்புகள் வாழும் முக்கிய மையமாக இந்த பூங்கா உள்ளது. இன்று பூங்காவிற்கு வருகை தருவோருக்கு விழிப்புணர்வு உள்ளூர் மக்கள் வகுப்புகளை நடத்துகின்றனர்.
மக்களின் பாரம்பரிய அறிவு இதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. முன்பு பூங்காவிற்குள் வேளாண்மை, மீன் பிடி தொழில் மூலம் வருமானம் ஈட்டிய மக்களிடையில் மனித வனவிலங்கு மோதல்கள் மோசமாக இருந்தது. இது வன உயிரினங்களின் அழிவுக்கு காரணமானது. இதைத் தடுக்க மாற்றுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால் ஒருகாலத்தில் வனச்செல்வங்களை கொள்ளையடித்தவர்கள் இன்று அதன் பாதுகாவலர்களாக மாறியுள்ளனர்.
மீண்டு வந்த கொரோங்கோசா
பூங்கா இன்று மீட்பின் வெற்றியை கொண்டாடுகிறது. அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பூங்காவிற்கு ஏராளமானோர் வருகை தருகின்றனர். போருக்குப் பின் திரும்பி வந்த வன உயிரினங்கள் மகிழ்வுடன் உலாவுகின்றன. ஆப்பிரிக்காவின் க்ரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கில் (Africa’s great rift valley) அமைந்திருக்கும் பூங்காவின் உரேமா ஏரி (Lake Urema) நீர்ப் பறவைகள், முதலைகள், நீர் யானைகளுக்கு புகழ்பெற்றது. இங்கு படகு சவாரி நடைபெறுகிறது.
ஏரியில் சாம்பல் நிற மகுட கொக்குகள் (Grey-Crowned Cranes), நாரைகள் (storks), செங்கால் நாரைகள் அல்லது பூ நாரைகள் (flamingos) மற்றும் கூழைக் கடாக்கள் (pelicans) போன்ற பறவைகள் அதிக அளவில் வாழ்கின்றன. ஏரியில் சஃபாரி, சாகச சுற்றுலா பயனங்கள் நடைபெறுகின்றன. உள்ளூர் மக்களே இதில் சுற்றுலா ஊழியர்கள், வழிகாட்டிகளாக செயல்படுகின்றனர். வருமானத்திற்கு வழியாக சுற்றுலா மாறியுள்ளது.
கொரொங்கோசா உள்ளூர் மக்களின் பொறுப்புணர்வுடன் கூடிய சுற்றுலாவிற்கு சிறந்த எடுத்துக்காட்டானது. சூழல் கல்வி, விழிப்புணர்வு வகுப்புகள் அடங்கியதே சுற்றுலாத் திட்டங்கள். விருப்பமுள்ளவர்கள் இதில் தன்னார்வலர்களாக சேர்ந்துகொள்ளலாம். இங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய உதவியாக ஆய்வுக் கூடங்களும் உள்ளன.
காடும் மலையும் நதியும் விலங்குகளும் நம்மைப் போலவே இந்த பூமியில் வாழ உரிமையுள்ளவை. பூமி மனிதனுக்காக மட்டும் படைக்கப்படவில்லை. தளராத தன்னார்வத்துடன் செயல்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வெற்றிக்கதையையே கொரொங்கோசா எடுத்துக் கூறுகிறது!
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பெட்ரோலியப் பொருட்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகள் போல உயிரி பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே. உயிரி பிளாஸ்டிக்குகள் என்று அழைக்கப்படும் இவை முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது விரைவாக மக்கும் என்று கூறப்பட்டது, பாராட்டப்பட்டது. ஆனால் இவைகளும் பெட்ரோலியப் பொருட்கள் தரும் பிளாஸ்டிக்குகள் போலவே தீமை செய்கின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. இத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இம்முடிவை ஆராய்ந்து உறுதி செய்துள்ளனர்.
உயிரி பிளாஸ்டிக்குகள் சோளம், அரிசி, சர்க்கரையில் உள்ள ஸ்டார்ச்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வேகமாக மாறும் நவ நாகரீக ஆடைகள், ஈரம் போக்கும் பொருட்கள் (Wetwipes), ஸ்ட்ராக்கள், வெட்டு பொருட்கள் மற்றும் வேறு பல தரப்பட்ட பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
ஆனால் இவை உறுப்பு சேதம், உடலியக்க செயல்பாட்டில் மாறுதல், இதயக் கோளாறுகளை உண்டாக்கும் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலைத் தன்மையில் மாற்றம், குளுக்கோஸ் அளவில் வேறுபாடு போன்ற உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. உயிரி பிளாஸ்டிக்குகளால் ஏற்படும் நீண்டகாலப் பாதிப்புகளை ஆராய விஞ்ஞானிகள் முதல்முறையாக சுண்டெலிகளில் பரிசோதனைகளை நடத்தினர்.
“ஆரம்பத்தில் கருதப்பட்டது போல இவை பாதுகாப்பானவை இல்லை. ஆரோக்கியத்திற்கு உதவுபவை அல்ல” என்று ஆய்வின் இணை ஆசிரியர் யொங்க்ஃபெங் டென் (Yongfeng Deng) கூறுகிறார்.
2024ல் மட்டும் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் உயிரி பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டன. வரும் ஐந்தாண்டுகளில் இந்த அளவு இருமடங்கிற்கும் கூடுதலாக இருக்கும் என்று இத்தொழில்துறை வணிகத்துடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
பெட்ரோலில் இருந்து உருவாக்கப்படும் பிளாஸ்டிகுகள் போல உயிரி பிளாஸ்டிக்குகளும் சிதைவடைந்து நுண் பிளாஸ்டிக்குகளாக மாறுகின்றன. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அதிக அளவில் தோய்க்கும்போது உயிரி பிளாஸ்டிக் ஆடைகள் இவ்வாறு சிதைவடைகின்றன. இந்த நுண் துகள்கள் உணவு மற்றும் நீருடன் கலக்கின்றன. உயிரி பிளாஸ்டிக்குகளால் வெவ்வேறு அளவுகளில் மாசுபட்ட உணவு மற்றும் நீரைப் பயன்படுத்திய சுண்டெலிகளின் குழுக்களையும், மாசுபடாமல் இருந்த உணவு மற்றும் நீரை எடுத்துக் கொண்ட சுண்டெலிகள் அடங்கிய மற்றொரு குழுவையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
பெட்ரோலியப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்குகள் போல உயிரி பிளாஸ்டிக்குகளின் நுண் துகள்கள் சுண்டெலிகளின் கல்லீரல், கர்ப்பப்பை மற்றும் குடல் திசுக்களில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது தவிர எலிகளின் மூளையில் புண்கள் (microlesions) ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. காயமடைந்த அல்லது சேதமடைந்த திசுக்களால் இந்த புண்கள் ஏற்படுகின்றன. கூடுதலான உயிரி பிளாஸ்டிக்குகளால் எலிகளின் உடற்பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தன.
இந்தப் பொருட்கள் அன்றாட செயல்பாடுகளின் சீரிசை சுழற்சியை (circadian rhythms) பாதிக்கின்றன. இவற்றால் குடல் நுண்ணுயிரிகளில் சமநிலையற்ற தன்மை ஏற்படுகிறது. மரபணுக்களையும் உயிரி பிளாஸ்டிக் துகள்கள் பாதிப்பது தெரிய வந்தது. பிளாஸ்டிக்குகளால் மாசுபடாத உணவு மற்றும் நீரைப் பயன்படுத்திய எலிகளில் எந்த பாதிப்பும் இல்லை. இந்த ஆய்வு, பிளாஸ்டிக்குகள் போலவே உயிரி பிளாஸ்டிக்குகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
உயிரி பிளாஸ்டிக்குகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். இன்றைய மனித வாழ்வில் பிளாஸ்டிக்குகள் சமையலறைப் பொருட்கள் முதல் ஆடைகள் வரை பல்வேறு அன்றாடப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்துள்ளன. பிளாஸ்டிக்குகள் போலவே உயிரி பிளாஸ்டிக்குகளையும் விவேகத்துடன் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
மேற்கோள்: https://www.theguardian.com/environment/2025/may/13/starch-based-bioplastic-petroleum-plastic-study?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சூழல் நட்புடன் ஒரு வான் சாகசம். ஸ்கை டைவிங் (Sky diving). ஸ்கை டைவிங் என்பது வானில் விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் பாதுகாப்பான ஒரு குறிப்பிட்ட உயரம் வரை கீழிறங்கி மீண்டும் விமானத்திற்குத் திரும்பிச் செல்லும் ஒரு சாகச விளையாட்டைக் குறிக்கிறது. இந்த விளையாட்டில் பதினோரு முறை கின்னஸ் சாதனை புரிந்தவர், அழியும் அமேசான் மழைக் காடுகளைக் காக்க வானில் இருந்து நூறு மில்லியன் விதைகளைத் தூவி புதிய வரலாறு படைத்துள்ளார்.
சூழலுக்காக புரட்சி செய்த லூஜி கனி
சாகசம் புரியும் உணர்வு, அர்ப்பணிப்புடன் சூழலைக் காக்க வேண்டும் என்பதில் பேராவலுடன் அன்பையும் கலந்து அவர் இந்த மகத்தான செயலைச் செய்துள்ளார். அவர்தான் உலகப் புகழ் பெற்ற வான் சாகச வீரர் லூஜி கனி (Luigi Cani). அமேசான் பகுதியில் நூறு மில்லியன் விதைகளைத் தூவினார். அவரது இந்த செயல் அப்பகுதியில் காடுகளின் மீட்பு, தாவர விலங்கினப் பாதுகாப்புக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது.
இந்த வான் சாகசத்தில் 22 ஆண்டு தொழில்ரீதியான அனுபவம், உலக சாதனையாளர், பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரரான அவர் இன்றும் என்றும் நிரந்தரத் தீர்வாக அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் 2022ன் முதற்பகுதியில் அதுவரை இல்லாத அளவுக்கு அழிந்த பிரேசிலின் அமேசானை மீட்க இப்பயணத்தை மேற்கொண்டார்.
லூஜி கனியும் அவரது குழுவினரும் 27 வகை உள்ளூர் விதைகளை கவனத்துடன் தேர்ந்தெடுத்தனர். இவற்றில் நூறு மில்லியன் விதைகளை அவர்கள் வன அழிவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட அமேசானின் 38 சதுர மைல் பரப்பில் உள்ள பகுதியில் வானில் இருந்து தூவி விதைத்தனர். புதுமையான இத்திட்டத்திற்கு Audi do Brasil என்ற அமைப்பு ஆதரவளித்தது. உலகின் மிகப் பெரிய மழைக்காடுகளை மீட்க இத்திட்டம் உதவும் என்று நம்பப்படுகிறது. இதன் பலன்கள் இரண்டாண்டுகளில் தெரிய வரும்.
“வாழ்வில் மூச்சை அடக்கி நான் செய்த ஒரே சாகசச் செயல் இதுதான். அப்போது என் இதயம் மாரடைப்பு ஏற்படப் போவது போல வேகமாகத் துடித்தது” என்று லூஜி கனி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.
இவர் 1970 டிசம்பர் 4 அன்று பிரேசிலில் பிறந்தார். இவர் வான் சாகச வீரர் மட்டும் இல்லை, சண்டை நிபுணர், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். உலகின் தலை சிறந்த தடகள வீரரான இவர் பல வான் சாகச விளையாட்டில் பல சாதனைகளை முறியடித்துள்ளார்.
உலகெங்கும் உள்ள அறுபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் இவருடைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. 13,000க்கும் கூடுதலான பயிற்சி சாகச குதிப்புகளை (jumps) நிகழ்த்தியுள்ளார். உலகின் மிகச் சிறிய, வேகமாகச் செல்லும் பாராசூட்டில் பயணம் செய்து தரையிறங்கியது இவரது பல அரிய சாதனைகளில் ஒன்று. பல உலக விருதுகளைப் பெற்றிருந்தாலும் கனி அவை தந்த உத்வேகத்தை தன் சூழல் பாதுகாப்பு பணிகளுக்கே பயன்படுத்தி வருகிறார்.
விதைகள் முதல் பெட்டிகள் வரை
கனியும் அவருடைய குழுவினரும் அமேசான் சூழல் மண்டலத்தில் ஒரு முக்கியத் தூணான மழைக் காடுகளை மீட்கும் திட்டத்தை ஐந்தாண்டுகள் திட்டமிட்டு உருவாக்கினர். அமேசானின் மோசமான நிலையை உணர்ந்து இப்பிரச்சனையைத் தீர்க்க ஒரு புதிய முறை கண்டறியப்பட்டது. வானில் இருந்து 6,500 அடி உயரத்தில் அமேசானுக்கே சொந்தமான நூறு மில்லியன் விதைகளை விதைப்பதே அந்தத் திட்டம்.
நூறு மில்லியன் விதைகளுடன் ஜனவரி 2023ல் கனி பிரேசிலின் மோசமாக பாதிக்கப்பட்ட மழைக்காடுகளின் வழியாக தன் விமானப் பயணத்தைத் தொடங்கினார். 95% முளைக்கும் திறனுடன் இருந்த இந்த விதைகள் காற்று மற்றும் அதன் அழுத்தத்தைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட பகுதிகளில் சீராகத் தூவப்பட்டன. விதைகள் மரமாகும்போது ஐம்பது மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையவை.
இந்த முயற்சியை செயல்படுத்த அவர் எந்த அவசரமும் காட்டவில்லை. இந்தக் கனவு நனவாக அவர் கடுமையாகப் பாடுபட்டார். பிரேசில் அரசிடம் இருந்து அனுமதி பெறுவது ஏற்பட்ட பல தடைகளில் ஒன்று. பல பயிற்சிகள், பிழைகளுக்குப் பிறகு விதைகளை சீராகத் தூவப் பயன்படும் மக்கக்கூடிய பெட்டிகளை உருவாக்கினார். “இதற்கு உதவும் எல்லாக் கருவிகளையும் எடுத்துச் செல்ல பெரும்பாடு படவேண்டியிருந்தது. விதைகளைத் தூவிய பின் நாங்கள் தரையைத் தொட்டபோது, திட்டமிடப்பட்ட எல்லா விதைகளும் ஒழுங்கான முறையில் தூவப்பட்டிருப்பதை அறிந்தபோது எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது” என்று லூஜி கனி கூறுகிறார்.
60,000 தாவர வகை விதைகள் அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து தூவப்படுவதால் விதைகளின் முளைக்கும் திறன் முக்கியமானது.
விதைகளை முளைக்க வைக்க இரண்டு மாதங்கள் ஆயின. குழுவினர் படமெடுக்கும் நிபுணர்களை அழைத்துச் சென்றனர். இது தவிர காட்டிற்குள் சுமார் 3.5 டன் எடையுள்ள கருவிகளை எடுத்துச் சென்றனர். இதற்காக பல முறை விதைப் பெட்டிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் மூன்று முயற்சிகள் தோல்வியடைந்தன. “விதைகள் தூவப்பட்ட நாளன்று பெட்டியில் இருந்த ஒரு கசிவை சரிசெய்ய நாங்கள் இரவு முழுவதும் விமானத்தில் இருக்க வேண்டி நேரிட்டது” என்று கனி கூறுகிறார்.
விதைகளை சீராகத் தூவ, கனி பெட்டிகளை சரியான நிலையில் பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. “இதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என் மணிக்கட்டையும் விரலையும் காயப்படுத்திக் கொண்டேன். என்றாலும் தரையில் இருந்து சுமார் 6,000 அடி உயரத்தில் என்னை நான் நிலைப்படுத்திக் கொண்டேன். மனதிற்கு முழுமையான திருப்தி ஏற்படும் வகையில் விதைகள் விரும்பிய இடங்களில் சீராகத் தூவப்பட்டன."
இந்த வெற்றியின் மூலம் கனி ஒரு சாகச வீரரின் உணர்வையும் சூழல் மீது உள்ள அக்கறையையும் வெளிப்படுத்தியுள்ளார். அமேசானில் 2019ம் ஆண்டின் பெரும்பகுதியிலும் காட்டுத் தீ தொடர்ச்சியாக எரிந்ததைப் பார்த்த பலருக்கும் இந்த சாகசம் வியப்பை ஏற்படுத்தாது. வறட்சியான காலங்களில் காட்டுத் தீ அமேசானில் நிகழ்வது இயல்பானது என்றாலும் இச்சம்பவங்களின் மிதமிஞ்சிய எண்ணிக்கை இம்மழைக்காடுகளைப் பற்றிய கவலையை சர்வதேச அளவில் அதிகரித்தது.
2022ல் இக்காடுகள் மற்றொரு சோதனையைச் சந்தித்தன. அந்த ஆண்டு வன அழிவு முன்பில்லாத வகையில் அதிக அளவில் இருந்தது. அப்போது காட்டின் பல இடங்களில் சுமார் 1,500 சதுர மைல் பரப்பில் இருந்த செழுமையான பகுதிகள் அழிந்தன. இது நியூயார்க் நகரைப் போல ஐந்து மடங்கு. இந்த அழிவு 2016ம் ஆண்டிற்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய அழிவு என்று பிரேசில் விண்வெளி முகமை கூறுகிறது.
ஜூன் 2022ல் காட்டுத் தீயினால் ஏற்பட்ட அழிவு அதற்கு முன்பு இருந்த பதினைந்து ஆண்டுகளை விட மிக அதிகம். ஆகஸ்ட் மாதத்தில் இச்சம்பவங்கள் கவலை ஏற்படுத்தும் விதத்தில் அதிக அளவில் இருந்தன. லூஜி கனி இத்திட்டத்தை தன் சொந்தச் செலவிலேயே மேற்கொண்டார். உயிரைப் பணயம் வைத்து நடு வானில் விதைகள் அடங்கிய பெட்டியைத் திறந்து அவற்றைத் தூவினார்.
அரசின் அனுமதி, உயிரி முறையில் மக்கக் கூடிய பெட்டிகளை உருவாக்குதல், கயிறுகளை வடிவமைத்து எடுத்துச் செல்லுதல், விமானத்தை ஏற்பாடு செய்தல் மற்றும் பிற கருவிகளை எடுத்துச் செல்லுதல், நூறு மில்லியன் விதைகளை சேகரித்து விமானத்தில் பயணித்தல் என்று அவர் தன் முயற்சிகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான தடைகளைச் சந்தித்தார். இத்திட்டத்திற்கு எவரும் நிதி உதவி செய்யவில்லை. பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களும் இல்லை. இவை எல்லாவற்றையும் அவர் தன் சொந்தப் பணத்தையே மூலதனமாகக் கொண்டு செலவழித்தார்.
அனைத்திற்கும் மேல் தன் விலை மதிப்பில்லாத உயிரைப் பனயம் வைத்தார். அதனால் நீங்கள் காணும் கனவுகளை நடு வழியில் ஏற்படும் ஒரு தடையால் பாதியில் கைவிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அனைத்துத் தடைகளையும் தாண்டி சூழலைப் பாதுகாக்க செயல்படும் லூஜி கனி என்ற இந்த பசுமை மனிதனை அப்போது நினைத்துக் கொள்ளுங்கள்.
&
https://www.thecooldown.com/outdoors/luigi-cani-skydive-trees-amazon-forest/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஒடிசாவின் கடலோரப் பகுதியை ஒரு சூப்பர் புயல் தாக்கிய பிறகு பாறைகளின் கவசத்துடன் உள்ள வனப் பரப்பையும் கண்டல் காடுகளையும் பாதுகாப்பதில் மையப்புள்ளியாக ஒரு கிராமப்புற பெண்கள் குழு கடந்த இருபது ஆண்டுகளாக செயல்படுகிறது. மகாநதி டெல்ட்டாவில் புகழ்பெற்ற பூரி கோயில் மாவட்டத்தில் கண்டல்பா (Gundalba) கிராமம் மணற்பாங்கான ஒரு கடலோரப் பகுதி.
காட்டை ரோந்து சுற்றும் பெண்கள்
இங்கு உள்ள காட்டை மரம் கடத்துபவர்கள், வெட்டுபவர்களிடம் இருந்து திறனுடன் வேகமாக கையில் உள்ள வலிமையான மூங்கில் குச்சிகளை ஆட்டியும் மரத்தண்டுகளில் தட்டி ஓசை எழுப்பியும் 75 பேர் அடங்கிய பெண்கள் குழு பாதுகாக்கிறது. “குச்சிகளைத் தட்டி பத்து பேர் கொண்ட குழுக்களாக கண்காணிக்கிறோம். காட்டிற்குள் எல்லா இடங்களுக்கும் பரவலாக செல்கிறோம். விசில் ஊதுகிறோம்.
காட்டின் பன்முகத் தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சி செய்பவர்கள் எங்கள் விசில் சத்தத்தைக் கேட்டு, மரங்களின் தண்டுப்பகுதியில் குச்சிகளை தட்டும் சத்தத்தைக் கேட்டு ஓடிவிடுகின்றனர். குழுவினர் இந்த ரோந்து பணியை சுழற்சி முறையில் செய்கின்றனர். இந்த ரோந்துப் பணி உள்ளூர் மொழியில் தெங்கா பஹல் (thenga pahal) என்று அழைக்கப்படுகிறது.
1999 சூப்பர் புயல் வட இந்திய கடற்பகுதியை தாக்கி பேரழிவை ஏற்படுத்திய பிறகு பெர்ஜஹேனியா வான் ஸுராக்ய சமிதி (Pir Jahania Van Surakhya Samiti) என்ற பெயரில் அமைந்த தன்னார்வத்துடன் செயல்படும் இந்த பெண்கள் குழு தொடங்கப்பட்டது” என்று குழுவின் செயலாளர் 52 வயதான சாருலதா பிஸ்வால் (Charulata Biswal) கூறுகிறார்.
கிராமப்புற இயற்கைப் பாரம்பரியத்தை மீட்டதற்காக இக்குழு 2012ல் முதல் ஐ நா வளர்ச்சித் திட்ட இந்தியப் பிரிவு உயிர்ப் பன்மயத் தன்மை விருதை (UNDP India Biodiversity Award) பெற்றது.
இறகுகள் போல கிளைகளை விரித்து நிற்கும் கேஷுவரீனா (Casuarinas) மற்றும் குட்டையான முந்திரி மரங்கள் அடர்ந்த காட்டின் எல்லையில் அஸ்டரங்கா (Astaranga) கடற்கரையோரம் உள்ள இந்த கிராமம் கடலில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது.
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நன்கறிந்த அக்டோபர் 29 1999 புயலால் பெர்ஜஹெனியா (Pir Jahania) கோயிலுக்கு அருகில் உள்ள இப்பகுதியில் சூரிய காந்தி பூக்கள் பூத்துக் குலுங்கும் தோட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இப்போது இங்கு கடலலைகள் கரையை மென்மையாக வருடிச்செல்லும் காட்சியை காணலாம். “ அப்போது வீசிய புயலால் வீடுகள், தோட்டங்கள் அழிந்தன. மண் உவர் தன்மையுடையதாகியது. பல நாட்கள் உணவில்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை
குழந்தைகளுக்கு உடைகள் இல்லை” என்று புயலிற்குப் பின் ஏற்பட்ட விளைவுகளை நினைவு கூறும் பிஸ்வால் “ஆனால் எங்கள் கிராமம் முழுவதும் அழியாமல் இருந்ததற்குக் காரணம் இந்த காடுகளும் கண்டல் செடிகளுமே. அவற்றாலேயே நாங்கள் இன்று உயிருடன் இருக்கிறோம். இதற்கு பதில் காடுகளை பாதுகாக்க, உயிர்ப் பன்மயத் தன்மையை மீட்க நாங்கள் உறுதிபூண்டோம்” என்கிறார். 75 ஹெக்டேர் பரப்புள்ள காட்டை காக்க 2001ல் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒருவர் வீதம் 70 பெண்கள் அடங்கிய வன பாதுகாப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது.
தேவி (Devi) நதி உற்பத்தியாகும் இடத்திற்கு அருகில் இருக்கும் இந்த கிராமத்தில் 103 வீடுகள் உள்ளன. “தொடக்கத்தில் குழுவில் உள்ள பெண்களின் கணவர்கள் பாதுகாப்பு பணிகளுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இப்போது அவர்களும் குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்” என்று வழிகாட்டி மற்றும் பூரி கௌரவ வனத் துறை சரகர் சொவார்கர் பிஹார (Sovakar Behera) கூறுகிறார். ஆண்கள் கரையில் பொருட்களின் விநியோகம், வீடு கட்டுதல், கிராமப் புணரமைப்பில் ஈடுபடுகின்றனர்.
குழுவினர் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை காட்டை ரோந்து சுற்றி வருகின்றனர். வீட்டு வேலைகளை முடித்த பிறகு காலை ஏழரை மணி முதல் காடு காக்கும் பணியைத் தொடங்குகின்றனர். பிறகு வீட்டுக்கு வருகின்றனர். மதிய உணவு உண்கின்றனர். வீட்டை பராமரிக்கும் வேலைகளை செய்து முடித்தபின் பகல் நேர ரோந்துக்கு செல்கின்றனர். ஆனால் பெண்கள் காட்டைப் பார்த்துப் பயப்படுவதில்லை. “காடு என்பது எங்கள் வீட்டின் விரிவாக்கமே. அதனால் நாங்கள் ஏன் பயப்படவேண்டும்?
காட்டின் மீது எங்களுக்கு உரிமையில்லை என்றாலும் நாங்கள் காட்டை பாதுகாக்கிறோம். ஒவ்வொரு மரமும் எங்கள் குழந்தை. உங்கள் குழந்தை கஷ்டப்படுவதை பார்க்க நீங்கள் விரும்புவீர்களா? இவ்வாறுதான் ஒவ்வொரு தாயும் நினைப்பாள். இந்த மரங்கள் எங்கள் காவியங்கள்! இந்த உணர்வு எங்களுக்குள் இயற்கையில் வந்தது. மரங்கள் மற்றும் எங்களின் வாழ்வை ஒருவருக்கொருவர் அறிந்துகொள்ள இது உதவுகிறது” என்று உள்ளுணர்வுடன் பிஸ்வால் கூறுகிறார்.
தற்போது ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள குழுவினர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர்.” சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் பலரை பிடித்துள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருடர்களை பயமுறுத்த சில சமயங்களில் நாங்கள் குச்சிகளை பயன்படுத்துகிறோம்” என்று குழு உறுப்பினர் ரஹிமா பிபை (Rahima Bibi) கூறுகிறார்.
காடு தரும் நன்மைகள்
மோதல்களைத் தவிர்க்க இதே காட்டை விறகிற்காக பயன்படுத்தும் அருகாமை கிராம மக்களுடன் குழு உறுப்பினர்கள் மேலாண்மை செய்ய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்து விறகு சேகரிக்க மாதத்திற்கு ஒரு நாள் ஒடுக்கப்பட்டுள்ளது. வேறொரு நாளில் அருகாமை கிராம மக்கள் விறகு சேகரிக்க கா காட்டிற்கு செல்கின்றனர்.
வழக்கமாக கண்டல்பா கிராமத்தினர் விறகு சேகரித்த மூன்று நான்கு நாட்களுக்கு பிறகு அருகாமை கிராம மக்கள் காட்டிற்கு வருகின்றனர். காட்டின் பாதுகாப்பு முழுவதும் குழுவினரிடமே உள்ளது. ஒற்றுமையுடன் வாழும் இந்து முஸ்லீம் சமுதாயத்தினர் இந்த பணியில் ஒன்றுசேர்ண்டு ஈடுபடுகின்றனர். வனப் பரப்பின் முக்கியத்துவம், சிறந்த காற்றுத் தடையாக விளங்கும் கண்டல் காடுகள் உயிரியல் பாதுகாப்பு அரணாக செயல்படுவது பற்றி குழுவினர் மற்ற இடங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இங்கு உள்ள மரங்கள் உவர் தன்மையுடைய காற்றை வேளாண் நிலங்களுக்குள் நுழையாமல் தடுக்கிறது. ஈரப்பதம் உள்ள காற்றை வயல்களுக்குள் விடாமல் பாதுகாக்கிறது. கண்டல் காடுகள் மண் அரிப்பைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதி முழுவதும் காடுகள் வன உயிரினங்களை பாதுகாக்கின்றன. “சூப்பர் புயலின்போது சுமார் 30,000 கேஸுவரினா மரங்கள் அழிந்தன. கண்டல் காடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 70% பசுமைப் பரப்பு நாசமடநிதது.
கண்டல் செடிகளின் இலைகள் மக்கத் தொடங்கின. ஆனால் அவற்றின் வேர்கள் உயிருடன் இருந்தன. குழுவினர் செடிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கேஸுவரினா மரங்கள் இப்பகுதியில் உள்ளூர் மர இனம்” என்று குழுவின் இன்னொரு உறுப்பினர் பிஹெரா (Behera) கூறுகிறார்.
குழுவினர் இப்பகுதியில் காணப்படும் அவய்சினியர் ஒபிஸினாலிஸ் ((Avicennia officinalis), அவய்ஸினர் ஆல்பா (Avicennia alba), இஜிசரஸ் கோனிகுலாட்டம் ( Aegiceras corniculatum), சிரியஸ் டிகாண்ட்ரா (Ceriops decandra), அகாந்த சிலிசிஃபோலியஸ் ( Acanthus illicifolius), ப்ரூக்லியேரா ஜிம்னோரைஸா (Bruguiera gymnorrhiza), எக்ஸோகேரியா அகலாச்சா (Excoecaria agallocha) ஆகிய நதி கழிமுகத்துவாரப் பகுதியில் வளரும் கண்டல் இனங்களை மறு உற்பத்தி செய்தனர்.
மீண்டு வந்த காடு
1985 முதல் வனப் பரப்பு குறிப்பாக கண்டல் காடுகளின் பரப்பு 2.58 சதுர கிலோமீட்டரில் இருந்து 2004ல் 4.21 சதுர கிலோமீட்டராக63% அதிகரித்துள்ளது என்று இந்திய உயிர்ப் பன்மயத் தன்மை விருது கூறுகிறது. காடு உயிருடன் படிப்படியாக மீண்டு வந்தது. பறவைகள் கூடு கட்ட தொடங்கின. அவற்றின் அழைப்புக் குரல்கள் மீண்டும் கேட்க ஆரம்பித்தன. இப்போது அதிகமாக உள்ள மான்கள் சில சமயங்களில் வயல்களுக்குள் புகுந்துவிடுகின்றன. மீண்டுவந்த காடு இந்த கிராமத்தை மனிதர்கள் வாழத் தகுதியான இடமாக மாற்றியுள்ளது.
காட்டுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் ஒரு பகுதியில் நந்நீர் உள்ளது. புயற்காற்றுகள், கடற்காற்றுகளில் இருந்து காடுகளால் வயல்கள் பாதுகாப்புடன் உள்ளன. எவ்வித பேரிடர்ரையும் சமாளிக்கும் திறனுடன் உள்ள குழுவினர் வனத் துறையின் சமூக வன மேலாண்மை திட்டத்தில் குழுவை பதிவு செய்யும் முயற்சியில் உள்ளனர். வட இந்தியப் பெருங்கடற் பகுதியில் 1877 முதல் 1998 வரை உள்ள 122 ஆண்டு வரலாற்றில் அரபிக் கடலுடன் ஒப்பிடும்போது வங்காள விரிகுடாவில் புயல்களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
பெரும்பாலும் மே, அக்டோபர், நவம்பரில் புயல்கள் உருவாகின்றன. சராசரியாக ஆண்டிற்கு ஐந்து முதல் ஆறு புயல்கள் வீசுகின்றன. 122 ஆண்டுகால வரலாற்றில் வங்காள விரிகுடாவில் நவம்பரில் புயல்கள் ஏற்படும் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 1804 முதல் 1999 வரை உள்ள ஒடிசாவின் கடந்த இரு நூறு ஆண்டு காலத்தில், 7.5 மீட்டர் உயரத்தில் எழும்பிய அலையுடன் 10,000 பேரைக் கொன்ற 1999 அக்டோபர் 28 முதல் 30 வரை வீசிய சூப்பர் புயல் உட்பட 128 புயல்கள் தோன்றியுள்ளன.
வங்கக் கடலில் ஏற்படும் புயல் வெள்ளப்பெருக்குகள் அடிக்கடி தோன்றும் புயற்காற்றுகள், உயர அலைகள், உயரும் நீருடன் தொடர்புகொண்டுள்ளது. ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மோசமான வெள்ளப்பெருக்குகளை விட புயல்களே அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று ஜடவ்பூர் (Jadavpur) பல்கலைக்கழக கடல் சார் பள்ளியின் (School of Oceanographic) 2019 ஆய்வு கூறுகிறது. விவசாயமே இந்த மாவட்டங்களின் வாழ்வாதாரம். 71% புயல்களால் மகாநதி டெல்ட்டா சமூக வாழ்வு பாதிக்கப்படுகிறது.
இது போன்ற அதிதீவிர நிகழ்வுகளால் சமூகங்கள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. “மூல வளங்களை சிறந்த முறையில் மேலாண்மை செய்ய இளம் தலைமுறையினர் எங்களுடன் இணையவேண்டும்” என்று பிஸ்வால் கூறுகிறார். காடு காக்கும் ஒடிசாவின் பெண்கள் போராட்டம் உலகிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
மேற்கோள்: https://india.mongabay.com/2019/03/a-womens-squad-in-odisha-defends-its-forest-for-20-years/
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு
- ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதினாறு மில்லியன் டாலர் இழப்பு
- கப்பல்கள் உடைக்கப்படும்போது...
- மாண்ட்ரீல் மாநாடு முடிந்து ஓராண்டிற்குப் பிறகு...?
- காலநிலை மாநாடு - வெற்றியா தோல்வியா? துபாயில் நடந்ததென்ன?