ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக தலைவர்கள் பூமியில் வாழும் உயிரினங்களின் நிலை பற்றி விவாதிக்க கூடுகின்றனர். உயிர்ப் பன்மயத் தன்மையை காப்பதும் இயற்கையின் அழிவை தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம். 196 நாடுகளின் பிரதிநிதிகள் கொலம்பியா காலி (Cali) நகரில் நடைபெறும் ஐநாவின் இந்த மாநாட்டிற்காக (COP16-Conference Of the Parties) கூடியுள்ளனர். 2022ல் நடந்த மாநாட்டிற்கு பிறகு கூடும் முக்கிய உச்சி மாநாடு இது.
இம்மாநாடுகள் பெரிய, பல்நாட்டு ஒப்பந்தங்களால் முக்கியத்துவம் பெறுகின்றன. 2015 காலநிலை உச்சிமாநாடு (ClimatteCOP) தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த அளவில் புவி வெப்பநிலையை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற வரலாற்று உடன்படிக்கையுடன் நிறைவடைந்தது. 2022 கனமிங் மாண்ட்ரீல் உயிர்ப் பன்மயத் தன்மை மாநாடு 23 இலக்குகள், நான்கு குறிக்கோள்களுடன் இந்த பத்தாண்டில் இயற்கையை காக்க உதவும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் இலட்சியத்துடன் முடிந்தது.
மோசமாகும் சூழல் நிலைபற்றி விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தாலும் பெரும்பாலான உலக நாடுகள் வாக்குறுதி அளித்த இலக்குகளை இன்னும் நிறைவேற்றாமல் உள்ளன. காலியில் அரசுகள் தேசீய உயிர்ப் பன்மயத் தன்மை திட்டங்களை (NBSAPS) அடையும் செயல்முறைகளை இம்மாநாட்டில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பன்மயத் தன்மை செழுமை மிக்க பிரேசில் போன்ற நாடுகள் அவை செயல்படுத்தவிருக்கும் பல பத்தாண்டு பயனளிக்கும் திட்டங்களை கூட்டத்தில் வெளியிடப் போவதாக கூறியுள்ளன.
சூழல் திட்டங்களுக்கான நிதி எங்கிருந்து வரும் என்பது மிகப் பெரிய வினாவாக உள்ளது. 2022 மாநாட்டில் நாடுகள் இந்த பத்தாண்டின் இறுதிக்குள் 23-30 பில்லியன் டாலர் நிதியை இயற்கையை பாதுகாக்கும் பணிகளுக்காக செலவிடப் போவதாக வாக்குறுதி கொடுத்தன.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதில் 20 பில்லியன் டாலர் நிதியை வழங்குவதாக அந்நாடுகள் கூறின. நிதி வழங்கலில் யு கே, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பணக்கார மேற்கித்திய நாடுகள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவது பற்றி இம்மாநாட்டின் இறுதியில் தெரிய வரும்.
உலகின் பவளப்பாறைகள், மழைக்காடுகள், மற்ற செழுமையான சூழல் மண்டலங்கள் வருங்கால வணிகப் பயன்பாடுகளுக்காக பந்நாட்டு பண்நாட்டு பணக்கார கம்பெனிகளால் சூறையாடப்பட காத்துக் கொண்டிருக்கின்றன. இயற்கையின் மரபணு குறியீடுகள் மருந்துப் பொருட்கள், உணவு, பொருளியல் கண்டுபிடிப்புகள் குறித்த புள்ளியியல் மாதிரிகளை உருவாக்க இயற்கையை சுரண்டும் செயற்கை நுண்ணறிவு தொழிற்துறை சூழல் வளங்களை புதிய புரட்சிக்கான தளங்களாக மாற்ற தயாராகி வருகின்றன.
ஆனால் பூமியின் தென் கோளத்தில் உள்ள நாடுகள் இயற்கையில் இருந்து கண்டுபிடிக்கப்படும் மருந்துப் பொருட்கள், உணவுகள் போன்றவற்றை பற்றிய தகவல்கள் மூலம் கிடைக்கும் இலாபத்தை ஏழை நாடுகளுக்கு பகிர்ந்து கொள்ளாத மேற்கித்திய உலகுடன் கடும் சினத்தில் உள்ளன. காப்16ல் இது பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகிறது. மதிப்புமிக்க இந்த உயிரி மூலங்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்று வெளியிடாத பந்நாட்டு நிறுவனங்களின் போக்கு உயிரிக்கொள்ளை (Biopiracy) என்று அழைக்கப்படுகிறது. கொலம்பியா மாநாட்டில் இது பற்றிய உலகின் முதல் ஒப்பந்தம் ஏற்படும் என்று விஞ்ஞானிகல் நம்புகின்றனர்.
பழங்குடியினர் நிலை
சூழல் பாதுகாப்பு திட்டங்களில் பழங்குடியினர் பங்கு பற்றி இந்த பத்தாண்டின் இலக்குகளில் 18 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் முடிவெடுக்கும் வன வாழ் மக்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என்பது சமீபத்திய ஆண்டுகளில் இயற்கை மற்றும் பழங்குடியின சமூகங்களின் முக்கிய முழக்கமாக உள்ளது. பல பழங்குடியின சமூகங்கள் நடைமுறையில் இது குறித்து உருவாகக்கூடிய உடன்படிக்கை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்று அறிய காத்திருக்கின்றன.
இலக்குகள் தங்கள் நில உரிமை, கலாச்சாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றிய அச்சத்துடன் இவர்கள் இம்மாநாட்டை எதிர்நோக்குகின்றனர். கொலம்பியாவின் முதல் இடது சாரி அரசு கஸ்ட்டாவோ பெட்ரோ (Gustavo Petro) தலைமையில் இம்மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. பல ஆண்டுகளாக இருந்த கொரில்லா போரை அரசு முடிவுக்கு கொண்டு வந்தது.
“காப்16 மாநாட்டின் மையக்கருத்து இயற்கையுடன் இணைந்து அமைதியாக வாழ்வது என்பதே (Peace with Nature)” என்று கொலம்பியாவின் சூழல் அமைச்சரும் மாநாட்டின் தலைவருமான சூசானா முகமது (Susana Muhamad) கூறுகிறார். நில பாதுகாப்பு, நிதி போன்றவற்றை அளவிடுவது எளிது. இவற்றை பொருளாதாரம் மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான ஐநா அமைப்பு கண்காணிக்கும். ஆனால் உயிரினங்களின் இழப்பு, உயிர்ப் பன்மயத்தன்மையின் செறிவு, நீடித்த நிலையான வளர்ச்சியை மேலாண்மை செய்வது கடினம் என்று ஐநா அதிகாரிகள் கூறுகின்றனர்.
மாநாட்டின் முதல் அமர்வில் ஐநா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், கொலம்பிய தலைவர் கச்ட்டாவோ பெட்ரோ, சூழல் அமைச்சர் சூசானா முகமது உட்பட பல தலைவர்கள் சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை பற்றி பேசினர்.
இது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. தென்னமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான காலியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் 12 நாடுகளின் தலைவர்கள், 103 அமைச்சர்கள், 15,000 சூழல் போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்கல், விஞ்ஞானிகள், நிதி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
மனிதன் என்ற ஒற்றை உயிரினமே இன்று பூமியில் உள்ள அணைத்து உயிரினங்களையும் அழித்துவருகிறான். நம்மை வாழவைக்கும் இயற்கையே நம் வரலாறு. இயற்கையை அழிக்கும் வேலையை தொடர்ந்தால் நாளை இந்த பூமியில் மனிதன் வரலாறு இல்லாதவனாகவே வாழ வேண்டும். இதை உணர்ந்து உருப்படியான உடன்படிக்கைகளுடன் காப்16 மாநாடு தரும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்