மனித ஆரோக்கியம் மற்றும் சூழலைக் காக்க உலக நாடுகள் முதல்முறையாக பிளாஸ்டிக் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டுகளில் 40% குறைக்கும் தீர்மானத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. கனடா ஒட்டாவா நகரில் ஏப்ரல் 23 முதல் 30, 2024 வரை நடந்த மாநாட்டில் ஐநா பன்னாட்டு அரசுகளுக்கு இடையில் பிளாஸ்டிக் மாசு குறைப்பிற்கான கமிட்டியைச் சேர்ந்த பிரதிநிதிகள், உற்றுநோக்கர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிளாஸ்டிக் உற்பத்தியின்போது பெருமளவில் உமிழப்படும் கார்பனைக் குறைக்கும் இலட்சியத்தில் முன்னேற்றத்துடன் இது பற்றிய இந்த நான்காவது மாநாடு முடிந்தது.

இம்மாநாட்டில் ஒன்றுபட்ட கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை என்றாலும் உடன்படிக்கைக்கான ஒப்புதல் மொழியுடன் நிறைவடைந்துள்ளது. வரும் கூட்டங்களில் உடன்படிக்கையாக மாறவிருக்கும் ஆவணம் பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான பிளாஸ்டிக்குகளும் புதை படிவ எரிபொருட்களில் இருந்தே தயாரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் உற்பத்தி நாடுகள், நிறுவனங்கள், வாயு ஏற்றுமதியாளர்கள் குறைப்பை கடுமையாக எதிர்த்தபோதிலும் அதற்கான இலக்கு இறுதி ஆவணத்தில் சேர்க்கப்பட்டது.

உடன்படிக்கை மொழியுடன் ஒரு மாநாடு

ஒட்டாவா கூட்டம் முடிவடைந்தாலும் உடன்படிக்கை பற்றி இந்த ஆண்டு கடைசியில் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்று கூட்டத்திற்கு முன்பு , இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஆவணத்தை செயல்படுத்தும் பணிகளில் கமிட்டியினர் தொடர்ந்து செயல்படுவர். தென்கொரியா கூட்டத்தில் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த தேவையான நிதி மற்றும் பிளாஸ்டிக்குகளில் உள்ள வேதிப்பொருட்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த கணிப்பு, அவற்றின் வடிவமைப்பு பற்றி விவாதிக்கப்படும்.Plastic Pollution Treatyருவாண்டா (Rwanda) மற்றும் பெரு ஆகிய நாடுகளின் உலகளவிலான குறைப்பிற்கான இலக்குடன் கூடிய பரிந்துரை இந்த கூட்டத்தில் ஏற்கப்பட்டது. இது பிளாஸ்டிக் கட்டுப்பாட்டில் ஒரு விடிவெள்ளி என்று கருதப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்டிக் தயாரிப்பில் 2025ம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு முதன்மை பாலிமர்களின் உற்பத்தியை வரும் பதினைந்து ஆண்டில் நாற்பது சதவிகிதம் குறைக்க முடியும். “யானையை அறைக்குள் வைத்திருப்பது (Elephant in the room) போல இது வரை ஆட்சியாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தி குறைப்பு பற்றி பேசவில்லை” என்று ருவாண்டா பிரதிநிதி கூறினார்.

பிளாஸ்டிக் கூட்டமைப்பு (Plastic Co allition) இயக்கத்தைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இவற்றால் உண்டாகும் மாசு பற்றிய தங்கள் ஆய்வறிக்கைகளை பிரதிநிதிகளிடம் சமர்ப்பித்தனர். “கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உடன்படிக்கையை உருவாக்கும் செயல்முறையில் பொதுவான ஒரு கண்ணோட்டத்தைக் கொண்டிருந்தனர். இந்த கூட்டங்களின் முடிவுகள் மனித குலத்தின் எதிர்காலம், பூமியின் வருங்கால நல வாழ்வை தீர்மானிக்கக் கூடியது” என்று ஈக்குவெடோர் பிரதிநிதி வால்ட்டர் ஷல்ட் (Walter Schuldt) கூறினார்.

பிளாஸ்டிக் கட்டுப்பாடு பற்றிய உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2022ல் ஆரம்பித்தன. மார்ச்சில் உருகுவேயில் ருவாண்டா மற்றும் பெரு நாடுகளின் பரிந்துரைகளுடன் தொடங்கின. மே 2023 பாரிஸ் பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் காணவில்லை. நவம்பரில் நைரோபியில் நடந்த கூட்டம் உடன்படிக்கைக்கான விதிமுறைகள் பற்றி விவாதித்தது. “தீவிர இரண்டாண்டு விவாதங்களைத் தொடர்ந்து உடன்படிக்கைக்கான ஒரு இறுதி ஆவணம் இப்போது உருவாகியுள்ளது” என்று சர்வதேச மாசு நீக்கத்திற்கான ஒருங்கிணைப்பாளர் பியேர்ன் பீலர் (Björn Beeler) கூறுகிறார்.

பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் மாசால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி லூசியானா, டெக்சாஸ் மாகாணங்களில் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அருகில் வாழும் பிளாஸ்டிக்கில் இருந்து விடுபடுவோம் (Breakfree from Plastic) என்ற இயக்கத்தின் மக்கள் சமூக பிரதிநிதிகள் அமெரிக்க அரசை உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி தபால் அட்டைகளைக் கொடுத்தனர். தாங்கள் அனுபவிக்கும் காற்று, நீர் மாசு பற்றி நேரில் வந்து பார்க்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

நியூசிலாந்தில் இருந்து வந்த ஆதிவாசி குழுவினர் இப்பிரச்சனையால் நுண் பிளாஸ்டிக்குகள் உணவு விநியோகத்திலும் கலந்து விட்டது என்று கூறினர். “இது குறித்து பேச எங்களுக்கு உரிமையுண்டு. நாங்கள் பங்கேற்பாளர்கள் இல்லை. பிரச்சனைக்கு காரணமாக இருப்பவர்களை விட இது பற்றி பேசவும், முடிவெடுக்கவும் எங்களுக்கு முழு உரிமை தரப்பட வேண்டும். நியூசிலாந்தின் வடக்கு கடலோரத்தில் கடலடி மண்ணில், மீன்களில் ஏராளமான நுண் பிளாஸ்டிக்குகள் உள்ளன” என்று அந்நாட்டின் ஆதிவாசி சமூகப் பிரதிநிதி ஜூரசா லீ (Juressa Lee) கூறினார்.

வருங்காலத் தலைமுறையை காக்க

”உருவாகவிருக்கும் உடன்படிக்கை ஆதிவாசி சமூகங்களின் வருங்காலத் தலைமுறைகளை பாதுகாக்க வேண்டும். உலக மக்களின் மனசாட்சின் பிரதிநிதியாகவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று அலாஸ்கா ஆர்க்டிக் ஆதிவாசி மக்கள் பிரதிநிதி வி வாக்கியி (Vi Waghiyi) கூறினார்.

விநியோகம் மற்றும் தேவை ஆகியவற்றின் பலன்கள் இந்த தீர்மானத்தின்படி மதிப்பிடப்படும். ஒட்டுமொத்தமாக முதண்மை பாலிமர்களின் உற்பத்தி நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் வகையில் வருங்காலத்தில் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி செய்யப்படுவது பற்றி ஆராயப்படும். மேலும் இந்த தீர்மானத்தின்படி பாலிமர்களின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்.

இலக்குடன் கூடிய இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும்போது புவி வெப்ப உயர்வை பந்நாட்டு சட்ட அங்கீகாரத்துடன் 1.5 டிகிரி செல்சியர்ஸிற்குள் கட்டுப்படுத்துவது பற்றிய 2015 பாரிஸ் காலநிலை உச்சி மாநாட்டின் தீர்மானம் போல இந்த உடன்படிக்கை மாறும். பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் நுகர்விற்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்புவதன் மூலம் பிளாஸ்டிக்கின் வட்டப் பொறுளாதாரத்தை (circular economy) பாதுகாப்பான அளவிற்கு மாற்ற முடியும் என்று ருவாண்டா மற்றும் பெரு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வட்டப் பொருளாதாரம் என்பது உற்பத்தி, விநியோகம், நுகர்வு ஆகியவற்றில் மறுசுழற்சி, மறு பயன்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டது. 1950ல் உலக பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி 2 மில்லியன் டன்கள். இது 2017ல் 348 மில்லியன் டன்களாக உயர்ந்தது. 2040ல் பிளாஸ்டிக் தொழிற்துறையின் உற்பத்தித் திறனை இரு மடங்காகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சென்று சேர்கின்றன. 2040ல் இந்த அளவு மூன்று மடங்காக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவை சூழல் சீர்கேட்டுக்கு முக்கிய காரணம். 2050ல் 21-31% கார்பன் உமிழ்வுக்கு இவற்றின் உற்பத்தி காரணமாக இருக்கும் என்று யு எஸ் லாரன்ஸ் பெர்க்லி (Lawrence Berkeley) ஆய்வுக்கூட விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

நிலக்கரியும் பிளாஸ்டிக்குகளும்

அமெரிக்காவில் 2030ல் நிலக்கரி பயன்பாட்டை விட பிளாஸ்டிக் உற்பத்தியே அந்நாட்டின் சூழல் சீரழிவுக்கு முதன்மைக் காரணமாக இருக்கும் என்று பிளாஸ்டிக்குகளுக்கும் அப்பால் (Beyond Plastics) என்ற சூழல் அமைப்பு 2021ல் நடத்திய ஆய்வு கூறுகிறது. 2022 நைரோபி கூட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பது பற்றி உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இதற்கான உடன்படிக்கை இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாகும் என்று நம்பப்படுகிறது.

175 நாடுகள் பங்கேற்ற ஒட்டாவா மாநாடு பிளாஸ்டிக் பாலிமர்களின் உற்பத்தி, விநியோகம், நுகர்வு நிலையில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறைவு பெற்றுள்ளது. “40% குறைப்பு என்பது நல்லதொரு இலக்கு இல்லை. என்றாலும் உலக பிளாஸ்டிக் உற்பத்தியைக் குறைப்பதில் இது ஒரு முக்கிய முதல் நடவடிக்கை. இப்பொருட்களின் உற்பத்தியை சுருக்கி குறைத்து கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது” என்று உலக பிளாஸ்டிக் திட்ட பசுமை இயக்கத்தின் அமெரிக்க பிரிவைச் சேர்ந்த கிரஹாம் ஃபோர்ப்ஸ் (Graham Forbes) கூறுகிறார்.

பூமியையும் மனித குலத்தையும் பாதுகாக்க விரைவில் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டிற்கான ஒரு உடன்படிக்கை விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது.

மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2024/apr/29/countries-reduce-plastic-production?

&

https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/talks-advance-on-intergovernmental-treaty-to-end-plastic-pollution/article68124624.ece

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It