உலகக் கடல்களில் இருந்து ஒவ்வொரு நாளும் எடுக்கப்படும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல், ஏற்கனவே கடல்நீர் மட்ட உயர்வு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்டுள்ள கடல்சார் சூழல் மற்றும் கடலோர சமூகத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று உலகளவில் இது பற்றி முதல்முறையாக நடத்தப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன. மணல் அகழ்வுத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட சர்வதேச தரவு தளத்தின் மூலம் அதிர்ச்சி தரும் இந்த செய்தி வெளிவந்துள்ளது.

ஐநாவின் சூழல் அமைப்பால் (UNEP) ஏற்படுத்தப்பட்ட இந்தத் தளம் தானியங்கி அடையாளம் காணும் (Automatic Identification System AIS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடல் சூழலில் மணல் அகழ்ந்து எடுக்கப்படும் இடங்களை கப்பல்களைக் கொண்டு கண்டறிந்து, இந்தத் தரவுகள் பெறப்பட்டன.

ஆண்டிற்கு ஆறு பில்லியன் டன்

கடல் மணல் கண்காணிப்பு அமைப்பு (Marine Sand Watch) 2012-19 தரவுகளை இதற்காக ஆராய்ந்தபோது உலகம் முழுவதும் மணல் எடுப்பதில் ஈடுபட்டுள்ள தொழிற்துறை ஆண்டிற்கு 6 பில்லியன் டன்கள் மணலை கடல்களில் இருந்து அகழ்ந்தெடுப்பது தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு ஆண்டு இந்த அளவு அபாய நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.dredger vesselஇழக்கப்படும் அளவை ஈடு செய்ய 10 முதல் 16 பில்லியன் டன்கள் மணல் ஆறுகளில் இருந்து அடித்து வரப்பட்டு கடலில் சேர்க்கப்படுகிறது. கடலோரக் கட்டமைப்புகள் மற்றும் கடற்சார் சூழலைப் பேணிப் பாதுகாக்க அவசியமான இயற்கை எல்லையை, அகழ்வுகள் தொடும் அளவிற்கு மணல் எடுத்தல் நடக்கிறது என்று ஐநா சூழல் பாதுகாப்புத் திட்டம் எச்சரிக்கிறது.

வட கடல், தென் கிழக்கு ஆசியா, யு எஸ்ஸின் கிழக்குக் கடற்கரைப்பகுதி ஆகிய இடங்களில் இது கவலை தரும் அளவில் உள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

ஆசியப் பகுதிகள் உட்பட மணல் எடுத்தல் தீவிரமாக நடக்கும் பல இடங்களில் ஆறுகள் கொண்டு வந்து நிரப்பும் அளவை விட அதிக அளவில் மணல் எடுக்கப்படுகிறது.

கடலுக்கு அடியில் நடைபெறும் இந்த சட்டவிரோத சுரண்டல் உயிர்ப் பன்மயத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்துவோடு, அடித்தட்டில் சேறு படிந்துள்ள பகுதி வரை மணல் வாரப்பட்டு உருவாக்கப்படும் நீர் அற்ற நிலை (water turbidity), கடல்வாழ் உயிரினங்கள் ஒலி மாசால் பாதிக்கப்படுதல் போன்ற சூழல் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது என்று ஐநா சூழல் அமைப்பின் ஜெனீவா கிரிட் (GRID) பிரிவு இயக்குனர் பாஸ்கல் பெடூசி (Pascal Peduzzi) கூறுகிறார்.

இதனால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் குறைக்கப்பட வேண்டும். கடலின் மணல் வளம் சூழல் நட்புடைய விதத்தில் மேலாண்மை செய்யப்பட வேண்டும் என்று பெடூசி கூறுகிறார். கடல் மணல் மதிப்புமிக்க முக்கியப் பொருளாகக் கருதப்பட வேண்டும். ஐநாவின் ஜெனீவா பகுப்பாய்வு மையத்தால் உருவாக்கப்பட்டு மணல் கண்காணிப்பு அமைப்பால் பயிற்றுவிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தானியங்கி முறை தரவுகளைப் பயன்படுத்தி உலகக் கடல்களில் மணல் எடுக்கும் கலன்களின் நடமாட்டத்தைக் கண்காணித்தது.

மணல் மற்றும் சரளைக்கற்களே பூமியில் இருந்து எடுக்கப்படும் பொருட்களில் பாதி இடத்தைப் பிடிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 50 பில்லியன் டன் மணல் மற்றும் சரளைக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது 27 மீட்டர் நீளமும் 27 மீட்டர் அகலமும் உடைய நிலநடுக்கோட்டைச் சுற்றிலும் எழுப்பப்படும் சுவருக்கு சமமான அளவு. மணல் கான்க்ரீட் மற்றும் இயற்கையான தரைப்படுகை அல்லது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் கசடைப் பயன்படுத்தி உண்டாக்கப்படும் மண் பொருட்களுக்கான (asphalt) முக்கிய மூலப்பொருள்.

நாம் குடியிருக்கும் வீடுகள், கட்டிடங்கள், ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகள், சாலையில் போடப்பட்டுள்ள சரளைக் கற்கள் என்று பல வகைகளில் மனித சமூகம் மணலால் கட்டப்பட்டுள்ளது. பசுமை வழிக்கு மாற உதவும் காற்றாலைகளை அமைப்பது முதல் மற்ற பல தேவைகளுக்கும் நமக்கு கான்க்ரீட் அவசியமாக உள்ளது.

கடலோரப் பகுதிகளில் இர்ருந்து மணல் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும், கடலில் இருந்து மணல் எடுப்பதை ஒழுங்குபடுத்த வேண்டும், நிலப்பகுதியில் குவாரிகளில் இருந்து மணல் எடுப்பதை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் என்று ஐநா பரிந்துரை செய்கிறது. மணல் மற்றும் மற்ற பொருட்களை கடல் மற்றும் நதிச்சூழலில் இருந்து தொடர்ந்து எடுப்பது நதி அல்லது கடலோரப் பகுதியின் கட்டமைப்பை மாற்றிவிடும். கடலின் ஆழ்பகுதியை வளமற்றதாக்கி விடும். இது மிக ஆபத்தானது.

கடலில் மணல் எடுக்கும் கலன்கள் ஆழ்கடலில் வெற்றிடச் சுத்திகரிக்கும் இயந்திரங்களைப் போல செயல்படுகின்றன. அடித்தட்டு மணலில் வாழும் அனைத்து வகையான நுண்ணுயிரிகளும் நசுக்கி அழிக்கப்பட்டு அங்கு உயிரற்ற சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இந்த மணல் தரிசான பூமிக்கு எடுத்துச் செல்லப்படும்போது அங்கு எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. ஆனால் ஆழ்கடலில் 30-50 செண்டிமீட்டர் மணல் அங்கேயே விடப்பட்டால் அங்குள்ள உயிரினங்கள் உயிர் பிழைத்துக் கொள்ளும்.

வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்ட சுரண்டல்

இந்த ஆய்வுகள் மிதமிஞ்சி மணல் எடுக்கும் நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட அல்லது அவற்றை அவமானப்படுத்த நடத்தப்படவில்லை. ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத ஆழ்கடல் பகுதியில் இருந்து எடுக்கப்படும் சூழல் சுரண்டலை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே ஐ நாவின் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மறைக்கப்படும் இந்தப் பிரச்சனையை இந்த ஆய்வுகள் இப்போது உலகறியச் செய்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளைத் தொடர்ந்து கடலில் மணல் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் சர்வதேச சங்கம் (IADC) இது தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இத்தொழிற்துறை பில்லியன் கணக்கான டாலர்களை ஒவ்வொரு ஆண்டும் வருமானமாக ஈட்டுகிறது. விதிமுறைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்றாலும் இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவை கடல் மணல் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன.

சமீபத்திய ஐ நா பொதுச்சபை தீர்மானத்தின்படி மணல் எடுத்தல் தொடர்பான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை அறிவை விரிவுபடுத்தி அதன் மூலம் சூழலுக்கு நட்புடைய விதத்தில் கடல் மணலை எடுத்தல் மற்றும் அதை பயன்படுத்துவதற்கான உலகளாவிய செயல்களை வலுவூட்ட ஜெனீவாவில் இதற்கான ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டது.

மணல் இல்லாத கடலும் கடற்கரைப்பகுதியும் பூமியை உயிர்களற்ற கோளாக மாற்றிவிடும். இந்த நிலை தொடர்ந்தால் நாளை கடலில் மட்டும் இல்லாமல் கரையிலும் மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களும் அழியும் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/sep/05/alarming-scale-of-marine-sand-dredging-laid-bare-by-new-data-platform?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It