2025 - புத்தாண்டு தொடங்கிய முதல் வார இறுதியில் ஊடகங்கள் அதிகமாக உச்சரிக்கத் தொடங்கிய சொற்கள் : அமெரிக்கா, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ், ஹாலிவுட் ! ஆம், ஜனவரி ஆறாம் நாள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திற்கு உட்பட்ட லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் எதிர்பாராத விதமாக நெருப்புப் பற்றிக்கொள்ளவே, அமெரிக்கா அதிர்ச்சிக்குள்ளானது. அதற்குக் காரணம் நெருப்பு பரவிய அதே வேகத்தில் புயல் காற்றும் வீசத் தொடங்கியதே! பரவும் நெருப்போடு புயல் கூட்டணி அமைத்தால் என்ன நடக்கும் என்பதை நாமறிவோம்.. 10 நாள்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பரவிய நெருப்பு சுமார் 17,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பைச் சாம்பலாக்கியது. அடர்ந்த காட்டைத் தாண்டி லாஸ் ஏஞ்சலிஸ் நகரமும் தீக்கிரையானது. காடுகள் அழிந்தது மட்டுமின்றி, மனித உயிர்கள், காட்டு உயிரினங்கள், வீட்டு விலங்குகள் நெருப்புக்கு இரையாயின. 1,00,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து புலம் பெயர்த்தப்பட்டனர். கான்கிரீட் காடுகள் எனப்படும் பெரிய பெரிய கட்டடங்களும் வீடுகளும் எலும்புக்கூடாகக் காட்சியளித்தன. பொருளாதார இழப்பு குறித்த வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வெளியானாலும், அவற்றைச் சரியாகக் கணக்கிடுவது அவ்வளவு எளிதல்ல. மொத்தத்தில் அணுகுண்டு வீசப்பட்ட நகரம் போல் லாஸ் ஏஞ்சலிஸ் காட்சியளிப்பதாகவும் ஹாலிவுட் திரைப்படக் காட்சிகள் போல இருப்பதாகவும் ஊடகங்கள் வர்ணித்தன.hollywood fireஇதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இந்நகரில் ஊடக வெளிச்சம் அதிகம் பாயும் பகுதியான ஹாலிவுட் நகரமும் நெருப்பில் கருகத் தொடங்கியதே! 1853இல் தொடங்கப்பட்டு. நீண்ட வரலாறைக் கொண்டதுதான் ஹாலிவுட் எனப்படும் அமெரிக்காவின் திரைப்பட நகரம் ! இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகத் திரைப்படத் தொழிற்சாலையில் இன்று வரை ஆதிக்கம் செலுத்தி வரும் இந்நகரம் நெருப்புக்கு இரையானது யாரும் எதிர்பாராத திருப்புமுனை! ஒருசில நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் தங்கள் வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருப்பதாகத் தொலைக்காட்சி அலைவரிசைகள் பட்டியலிட்டன.

இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்கு கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு உதவிக்கரம் நீட்டின. தீயணைப்பு வீரர்கள், தரையூர்திகள், வானூர்திகள் வழியாகவும் தண்ணீரைப் பாய்ச்சிப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இரசாயனத் தூளை வானிலிருந்து தெளித்து நெருப்புப் பரவலைக் கட்டுப்படுத்த முயன்றனர். இவ்வளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், அமெரிக்காவின் மூன்றாவது பெரிய வளமையும் வசதியும் படைத்த லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் ஏற்பட்ட பேரழிவைத் தடுக்க இயலாமல் போனது.

சரி, இந்தக் காட்டுத்தீ உருவானதற்கும் அது கட்டுக்கடங்காமல் பரவியதற்கும் என்ன காரணம்? இது குறித்து பல்வேறு யூகங்கள், சாத்தியங்கள் முன்னணி ஊடகங்களில் வலம் வந்தன. அவற்றில் ஒரு கருத்து சமூக ஊடகங்களை அதிர வைத்தது. அதாவது, இந்தக் காட்டுத் தீக்கும் ‘சாட்ஜிபிடி’ (ChatGpt) எனப்படும் திறந்த நிலை செயற்கை நுண்ணறிவுக்கும் (Open AI) தொடர்பு உண்டு என்பதே அக்கருத்து. முதலில் சமூக ஊடகங்களில் இந்தக் கருத்தைப் பார்த்ததும், “சமூக ஊடகங்கள் இப்படிப் பரபரப்புக்காக எதையாவது கிளப்பிவிடுகின்றனவோ” என்று தோன்றியது. தேவையில்லாமல், மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தச் சமூக ஊடக வலைஞர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே முதலில் மேலோங்கியது. ஆனால், இது குறித்த விவாதங்கள் ஒருசில முன்னணி ஊடகங்களுக்கும் பரவியதால் இந்தக் கருத்தைப் புறந்தள்ள முடியவில்லை. சரி, இது குறித்து இவர்கள் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று பார்க்க முயன்ற போது சில தரவுகள் கிட்டின.

முதலில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் உருவான நாள் முதலே நீர் மேலாண்மை குறித்த பிரச்சனை நிலவி வந்திருக்கிறது. அவ்வப்போது மழை வெள்ளம் ஏற்பட்டாலும் அதை மேலாண்மை செய்யப் போதிய கட்டமைப்பு வசதி இங்கு இல்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக நிலவி வந்திருக்கிறது. தொடக்கத்தில் 75 விழுக்காடு தண்ணீர் இந்நகரின் ஒருசில நீராதாரங்களிலிருந்து கால்வாய் வழியாகப் பெறப்பட்டு வந்தது. ஆனால், அண்மைக் காலமாக வட அமெரிக்காவின் கொலொரடோ ஆற்றிலிருந்தே 50 விழுக்காடு தண்ணீர் இங்கு அனுப்பப்பட்டு வருகிறது. காட்டுத்தீயை எதிர்கொள்ளும் அளவுக்கு இங்கே நீர்க் கட்டமைப்பு உருவாக்கப்படவில்லை. அதாவது, கலிபோர்னியா மாகாணத்தில் போதிய தண்ணீர் இருந்தாலும் பாதிப்புக்குள்ளான பகுதியில் தேவையான அளவுக்குத் தண்ணீர் இல்லை என்கிறார்கள். மேலும் கடந்த மழைக்காலங்களில் இப்பகுதியில் குறைந்த அளவே மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் வறட்சி அதிகரித்துள்ளது. வறட்சி அதிகரிக்கும்போது வெப்பம் அதிகரிப்பதும் காடுகள் சூடாவதும் தவிர்க்க இயலாதவை.

இப்போது சாட்ஜிபிடிக்கு வருவோம். பொதுவாகவே, சமூக ஊடகங்களுக்கும் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கும் மின்சாரம் எவ்வளவு தேவை என்பதை நாம் அறிவோம். நாம் அன்றாடம் பயன்படு;த்தும் கணினி, திறன்பேசி ஆகியவற்றைக் கடந்து, இவற்றின் தலைமைச் செயலகமாக விளங்கும் தரவு மையங்களை (Data centres) நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவற்றை நிர்வகிக்கும் தரவு மையங்கள் மின்சாரத்தில் இயங்கி, அதிகமாக கார்பன்-டை-ஆக்சைடை உமிழும் தன்மையுடையவை. இதனால் இவை அதிகமாக வெப்பத்தை வெளியேற்றும் தன்மையுடையவை. இவற்றில் அடங்கியுள்ள எந்திரங்களைக் குளிர்விக்கவும் தேவையான குளிர்நிலையில் இவற்றைப் பராமரிக்கவும் 24 மணிநேரமும் அதிகக் கொள்ளளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவை விட செயற்கை நுண்ணறிவுத் தரவு மையங்கள் உட்கொள்ளும் தண்ணீரின் அளவு மிக அதிகம் என்கிறார்கள்;.

Washington Post இதழ் கடந்த 2024ஆம் ஆண்டு தெரிவித்துள்ள ஒரு தகவலின்படி, 100 சொற்கள் அடங்கிய ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சு செய்ய சாட்ஜிபிடி 519 மில்லி லிட்டர் அதாவது ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்கிறது. ஆண்டு முழுவதும் வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினாலே, 27 லிட்டர் தண்ணீர் சாட்ஜிபிடிக்குத் தேவைப்படுகிறது. சற்றே விரிவாகச் சொல்ல வேண்டுமானால், அமெரிக்கா வாழ் மக்களில் பத்தில் ஒரு பகுதியினர், அதாவது 16 மில்லியன் மக்கள் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி வாரத்திற்கு ஒரே ஒரு மின்னஞ்சல் அனுப்பினால், ஆண்டு முழுவதும் 43,50,00,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அப்படியானால், இதன் அதிகபட்சப் பயன்பாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பதை நாம் கணக்கிட்டுக் கொள்ளலாம்.

இந்தப் பின்புலத்தில், லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நீரேற்றம் குறைவதற்கு அதிகரித்துள்ள செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடும் ஒரு காரணம் என்று ஒரு சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். அதே நேரத்தில் நீர்க் கட்டமைப்புக் குறைபாடுதான் காரணமே தவிர, செயற்கை நுண்ணறிவு காரணமல்ல என்று மாற்றுக் கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இவற்றைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது, செயற்கை நுண்ணறிவுதான் இப்பிரச்சனைக்கு காரணம் என்று சமூக ஊடகங்கள் கூறுவதை நாம் ஏற்பது கடினம். அதே நேரத்தில் இதுவும் ஒரு காரணம் என்று அவர்கள் கூறுவதை முற்றிலும் மறுக்க முடியுமா என்று பார்ப்போம்

ஜனவரி – 2025இல் கிடைத்த சில புள்ளி விவரங்களின்படி,

1) 2024இல் சாட்ஜிபிடிக்கு 300 மில்லியன் வாராந்திரப் பயனாளிகள் இருந்திருக்கிறார்கள்.

2) அமெரிக்காவின் சாட்ஜிபிடி பயனாளிகளின் எண்ணிக்கை 67.7 மில்லியன்.

3) உலகப் பயனாளிகளில் அமெரிக்கா 16 விழுக்காட்டுடன் முதல் இடம் வகிக்கிறது.

இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 1) லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை, 2) அணைக்க இயலாமல் பரவிய தீ, 3) தண்ணீரை விழுங்கும் செயற்கை நுண்ணறிவு என்று மூன்று புள்ளிகளையும் இணைக்க முயல்கிறார்கள் சமூக ஊடகத்தினர்.

இதில் பலருக்கு மாற்றுக் கருத்து உண்டு என்றாலும், எதிர்காலப் பார்வையில் இதை ஓர் எச்சரிக்கை மணியாகக் கருத வேண்டும். செயற்கை நுண்ணறிவு விழுங்கும் தண்ணீர், அன்றாட அடிப்படைத் தேவைக்கான தண்ணீர், பேரிடர் காலங்களில் தேவைப்படும் தண்ணீர் இவற்றை ஒருங்கிணைத்து பரந்துபட்ட பார்வையில் பார்ப்பது இனிமேல் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு தவிர்க்க இயலாத எதிர்காலப் பாதையில் பயணிக்கிற வேளையில், மாற்று ஏற்பாடுகளைப்பற்றித் தரவு மைய நிர்வாகங்கள் சிந்திக்க வேண்டும். அதாவது, தண்ணீர் தவிர மாற்று வழிகளில் தரவு மையங்களைக் குளிர்விக்கும் சாத்தியங்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக, தண்ணீர் உள்ளிட்ட இயற்கை ஆதாரங்களை நிலைத்த மேம்பாட்டுச் (Sustainable development) சிந்தனையில் பயன்படுத்தும் செயல்பாடு அதிகரிக்க வேண்டும்.

மாற்றுச் செயல்பாட்டின் முதல் படியாக, இயற்கை குறித்த மனப்பாங்கு மாற்றம் காலத்தின் கட்டாயம். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இயற்கை குறித்த ஆதிக்கப் பார்வையையும் அதைத் திரைப்படங்கள் வழியாக பரவலாக்கம் செய்வதையும் ஹாலிவுட் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இயற்கைச் சுரண்டல் மனிதருக்குள்ள அதிகாரம் என்ற கருத்தைத் தவறாமல் முன்வைக்கும் கதையோட்டம், பாம்பு முதல் டயனோசர் வரை அனைத்து உயிரினங்களையும் வில்லன்களாகச் சித்தரிக்கும் போக்கு, அவற்றை அழித்தொழிப்பதே “கிளைமாக்ஸ்” என்ற கற்பனை வறட்சி ஆகியவற்றைத் தவிர்த்து, உயிர்நேய அணுகுமுறையிலான படைப்பாற்றலுக்கு ஹாலிவுட் கதவைத் திறக்க வேண்டும்.

அ.ஸ்டீபன்