கீற்றில் தேட...
சுற்றுச்சூழல்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பிலேம் காப்30 காலநிலை மாநாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் யுகத்தை முடிவிற்குக் கொண்டுவர நடந்த முயற்சிகள் சில அங்குல முன்னேற்றங்களுடன் நிறைவடைந்தது. காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு வழங்கும் நிதியை மும்மடங்கு அதிகரிக்க பணக்கார நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் இறுதி உடன்படிக்கையில் காடுகளின் அழிவு, முக்கிய தாதுக்களின் சுரண்டல் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
வளர்வதை நிறுத்தச் சொல்லும் பணக்கார நாடுகள்
காலநிலை கெடுதிகளின் கூர்முனையில் நிற்கும் உலகம் பாதுகாப்பாக கால் பதிக்க ஒரு சிறிய இடத்தை மட்டுமே இம்மாநாடு தந்தது. தொடங்கும்போதே தாமே முன்வந்து புதைபடிவ எரிபொருட்களின் பயனை சிறிது சிறிதாகக் குறைக்க மட்டுமே அரபு நாடுகள் ஒப்புக் கொண்டன. நவம்பர் 21 2025 அன்று முடிய வேண்டிய மாநாடு முழுத்தோல்வி அடையாமல் காக்கப்பட பெரும் போராட்டம் நடந்தது. இரவு முழுவதும் நீண்டு பிறகு விடிய விடிய நடந்த கூட்டத்தின் முடிவில் மிகச் சிறிய முன்னேற்றம் மட்டுமே ஏற்பட்டது.
80 வளரும் நாடுகளுக்கும் சௌதி அரேபியா, அதன் தோழமை நாடுகளுக்கும் இடையில் பெரும் இழுபறி நிலவியது. புதிய ஒப்பந்தத்தின்படி 2035 முதல் காலநிலை தகவமைப்புக்காக செல்வந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு ஆண்டிற்கு 120 பில்லியன் டாலர் நிதி வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டது. மழைக்காடுகளின் சொர்க்கபூமியான பிரேசிலில் அமேசான் நதியின் முகத்துவாரப் பகுதிக்கு சிறிது தூரத்தில் நடந்த இந்த மாநாட்டில் வன அழிவைத் தடுக்க முன்வைக்கப்பட்ட ஒரு திட்டமும் ஏற்கப்படவில்லை.
நிறைவு நேரத்திற்குப் பிறகு 12 மணி நேரம் தாமதமாகவே முடிந்த மாநாட்டுக் கூடத்தில் உயர் அதிகாரிகள் மட்டுமே இருந்தனர். “மாநாட்டின் முன்னேற்றம் அர்த்தமுள்ள ஒன்று” என்று முன்னாள் ஜெர்மன் பிரதிநிதி ஜெனிஃபர் மோர்கன் (Jennifer Morgan) கூறினார். “வேறுபட்ட புவி, அரசியல் பின்னணிகளில் இருந்து வந்த பிரதிநிதிகள் பஞ்கேற்ற மாநாட்டின் முடிவுகள் குழந்தை நடையில் சில அடிகளை எடுத்துள்ளது” என்று அதிகார மாற்றத்திற்கான ஆப்பிரிக்க திங்டாங்க் (Power Shift Africa thinktank) அமைப்பின் இயக்குனர் மொஹமது அடோ (Mohamed Adow) கூறினார்.
சூழலைக் காக்கும் பெருந்தலைவர்கள் என்று பேசிக் கொள்ளும் பலரும் தங்கள் நாட்டின் தேசீய அளவிலான தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளுடன் (NDCs) வரவில்லை. “வளர்ந்த நாடுகள் சர்வாதிகார முறையில் நடந்து கொண்டன. இயற்கையின் எல்லா வளங்களையும் கடந்த 200 ஆண்டுகளாக சுரண்டி முழு தொழிற்வளர்ச்சியை அடைந்துவிட்டு இப்போது எங்களை நோக்கி வளர்வதை நிறுத்தச் சொல்கின்றன. வளர்ச்சி என்பது எல்லா நாடுகளுக்குமான அடிப்படை உரிமை” என்று பாகிஸ்தான் பிரதிநிதிக் குழுவின் தலைவர் ஏஷியா ஹ்யூமேரா (Aisha Humaira) கூறினார்.
இனி பேசிப் பயனில்லை
பலவீனமான நாடுகள் நம்பியதை விட வலிமையற்ற விதத்தில் புவி வெப்ப உயர்வை 1.5 டிகிரிக்குள் குறைப்பதற்கான முயற்சி பற்றி பெயரளவுக்கு மட்டுமே இறுதி அறிக்கையில் இடம் பெற்றது. அடுத்த ஆண்டு காப் மாநாடு ஆஸ்திரேலியாவால் துருக்கியில் நடத்தப்படும். பிரேசில் அதிபர் உட்பட ஐம்பது நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் பங்கேற்றனர். கடந்த வியாழனன்று பிரதிநிதிகளின் அலுவலகங்களுக்கு அருகில் சிறிய தீ விபத்து ஏற்பட்டது என்றாலும் இதனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கூடத்தின் மையப் பகுதியில் இருந்து பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு முக்கியப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கின. “சூழலிற்கு சேதம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றாலும் காலநிலைக் கெடுதிகளை தெற்கு நாடுகள் அனுபவிக்கின்றன. இதை சமாளிக்க பணக்கார நாடுகள் நிதியுதவி செய்யவில்லை என்றால் இனி பொறுப்புகள் எதையும் நாங்கள் ஏற்கப் போவது இல்லை” என்று உலகளாவிய காலநிலைக்கான பன்னாட்டு செயல்பாடுகளுக்குரிய (global lead on climate justice at ActionAid International) அமைப்பின் டெரிசா ஆண்டர்சன் (Teresa Anderson) கூறுகிறார்.
“மாநாட்டின் முடிவுகள் வெறுமையானவை. காலநிலை பிரச்சனைகளுக்கான தீர்வுகள் பேச்சுவார்த்தைகளில் இல்லை என்பதை காப்30 மாநாடு மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியுள்ளது. நீதியான, சமத்துவமான, புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெறப்போராடும் மக்கள் மற்றும் போராளிகளின் போராட்டத்திலேயே உலகின் நலமான எதிர்காலம் உள்ளது” என்று பன்னாட்டு சூழல் சட்ட மையத்தின் (Center for International Environmental Law) நிக்கி ரைஸ்ச் (Nikki Reisch) கூறுகிறார். 2026 காப்31 மாநாட்டிலேனும் நல்ல முடிவுகள் ஏற்படும் என்று நம்புவோம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரண்டு போராளிகளை சந்திப்போம், வாருங்கள்!
பிரேசில் பிலேம் (Belém ) நகரில் காலநிலை மாற்றத்தைத் தடுக்க உலக நாடுகள் (காப்30) ஒன்று கூடி பேசி வருகின்றன. இந்நிலையில் மாநாட்டிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சாமான்ய மக்களில் இருவரின் சூழல் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புள்ள வாழ்வு நம்மை அசர வைக்கிறது. அவர்கள் கூறும் கருத்துகளை அறிந்தால் புவி வெப்ப உயர்வில் இருந்து பூமி தப்பிப் பிழைக்கும், நலம் பெறும் என்ற நம்பிக்கை நமக்கும் ஏற்படும்.
காப் மாநாடுகளை விமரிசனம் செய்வது சுலபம். ஆனால் அந்தக் கூட்டங்களில் உள்ள ஓர் அதிசய அம்சத்தை நாம் அங்கீகரிப்பது இல்லை. பூமியின் பெரும்பாலான நாடுகளில் இருந்தும் மனிதநேயம் மிகுந்த சாதாரண மக்கள் இத்தகைய கூட்டங்களுக்கு வருகை தருகின்றனர். அவர்களின் முக்கிய குறிக்கோள் காலநிலை கெடுதிகளில் இருந்து பூமியைக் காப்பது என்பது மட்டுமே. அவர்களில் பலரும் அறிவாளிகள், காலநிலைக்கு எதிராக அர்ப்பணிப்புடன் போராடுபவர்கள். இவர்கள் போன்றோரை அதிகமாக சந்தித்தால் வெப்பமயமாவதில் இருந்து புவியை நம்மால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படும்.
பனாமாவில் இருந்து தீப்பொறி கக்கும் செயல்களுடன் அந்த மங்கலான மாநாட்டுக் கூடத்தை தன் கூர்மையான பார்வையால் பிரகாசிக்கச் செய்த மாண்டரி கோமெஸ் (Monterrey-Gómez ) மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் போராளி ஆயிஷா சிடிகா (Ayisha Siddiqa ) ஆகியோரே பிலேம் மாநாட்டிற்கு வந்த அந்த இருவர்.
கோமெஸ் கூறும் உண்மைகள்
ஐ நா காலநிலை மாநாடுகளின் பசுமைக் குடில் வாயு உமிழ்வை நிலைப்படுத்துவது என்ற குறிக்கோளில் இருந்து நாம் தோல்வியடைகிறோம். ஆனால் கடந்த 33 ஆண்டுகளாக உமிழ்வை வெட்டிக் குறைப்பதற்குப் பதில் அதை இரு மடங்கிற்கும் மேல் அதிகமாக்கியுள்ளோம். உயிர்ப் பன்மயத் தன்மையைப் பராமரித்து மேம்படுத்துவதற்குப் பதில் வாழும் எல்லா உயிரினங்களையும் கொல்கிறோம். இது குறித்து இனி அதிக அறிக்கைகள், உரையாடல்கள், வட்டமேசைகள் தேவையில்லை, செயல்களே தேவை. புதைபடிவ எரிபொருட்கள் புவியை வெப்பமாக்குகின்றன. இதைக் குறைக்க ஒரே வழி அவற்றை ஒழிப்பது மட்டுமே என்று கூறும் அறிவியல் தெளிவாக இருக்கிறது.
காலநிலை, உயிர் பன்மயத் தன்மை, கடல், பிளாஸ்டிக் மாசு இவை எல்லாம் ஒரே பிரச்சனைகளே. இவை எல்லாம் முதலாளித்துவ பொருளாதாரம் பெற்ற குழந்தைகள். அது தடுத்து நிறுத்த இயலாத உற்பத்தியை நோக்கிச் செல்கிறது. அதன் பாதையில் உள்ள எல்லாவற்றையும் மாசுபடுத்தி மனிதனையே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. நம்மைக் கொல்வதற்கு நாமே குற்றவாளிகளுக்கு காசு கொடுக்கிறோம். புதைபடிவ எரிபொருட்களுக்கு மான்ய உதவிகளை வழங்குகிறோம்.
அதன் தயாரிப்புகள் அனைத்தும் நம்மை நிதானமாகவோ வேகமாகவோ கொல்கிறது என்று தெரிந்தே இவ்வாறு செய்கிறோம். காலநிலை மாநாடுகள் உறுதியான நடவடிக்கைகளுடன் முடிய வேண்டும். பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் முட்டுக்கட்டைகளால் காலநிலை மாநாடுகளில் புதைபடிவ எரிபொருட்கள் என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள நமக்கு 28 ஆண்டுகளாகி விட்டன. காடுகளை காப்பாற்ற முடியவில்லை என்றால் எதற்காக நாம் வாழ்கிறோம்?
மிகச் சிறந்த பேச்சாளரான கோமெஸின் கருத்துகள் இவை.
ஆயிஷா என்ற அதிசயப் பெண்மணி
26 வயதான பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சட்டம் பயிலும் மாணவர். ஐநா பொதுச் செயலாளருக்கு ஆலோசகர். பன்னாட்டு ஆற்றல் முகமையின் கமிஷனர். வருங்காலத் தலைமுறைகளின் தீர்ப்பாயம் என்ற அமைப்பின் தோற்றுநர்.
சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் நிலையான காலநிலை ஒரு மனித உரிமை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளன. சூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் பூமியில் இன்னும் பிறக்காதவர்களே. அதனால் அவர்களின் உரிமைகள் எவ்வாறு காக்கப்படும்? இது பற்றி பன்னாட்டு அரசுகள் சிறிதேனும் கற்பனை செய்து பார்க்க வேண்டும். வருங்காலத் தலைமுறைகளின் உரிமைகள் பற்றி பேசத் தொடங்க வேண்டும். அமேசான், நியூசிலாந்தில் உள்ள இனயட்டரோவா (in Aotearoa) ஆகிய இடங்களில் ஆறுகளுக்கு தனிமனித உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால் இவை நீதிக்காகப் போராட நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்.
இவை ஆயிஷாவின் கருத்துகள். ஆயிஷா ஆரோக்கியமான சூழல், மனித உரிமைகளில் காலநிலை மாற்றம் எவ்வாறு பறித்துச் செல்கிறது என்பதைப் பற்றிய விவரங்களை உலகம் முழுவதும் இருந்து சேகரித்து வருகிறார். இந்த கருத்துகள் வருங்காலத் தலைமுறைகளுக்கான உரிமைகள் குறித்த பன்னாட்டு அறிக்கையாக தயாரிக்கப்படும். புதைபடிவ எரிபொருட்களில் இருந்து விடுதலை பெற்ற உலகமாக வருங்கால தலைமுறைகளின் உலகம் இருக்க வேண்டும்.
சட்டப்பூர்வமான உரிமைகள் பெற்ற ஒரு இடமாக பூமி மாறும்போது கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருந்து உலகம் விடுபடும். பாகிஸ்தானில் வாழும் ஆதிவாசி மக்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் இப்போது உள்ளதைவிட அதிக துன்பங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆயிஷாவின் இந்த கருத்துகள் மனிதனாக இருக்கும் எவர் ஒருவரையும் சிந்திக்க வைக்கும் என்பதில் ஐயமில்லை.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் கூறியது போல “பிரபஞ்சத்தின் நீண்ட வில் நீதியை நோக்கி வளையும்”. இந்த நம்பிக்கை இந்த இரு இளைஞர்களால் நமக்கு வலுப்படுகிறது!
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வெப்ப அலை வீச்சுகள் மனிதர்களை முன் கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கிறது. அதிக நாட்கள் நீடிக்கும் உயர் வெப்பநிலை மில்லியன் கணக்கான மக்களிடம் நீண்ட நாள் ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. உயர் வெப்பத்திற்கு அடிக்கடி ஆளாகும் மக்களிடம் இந்த பாதிப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது புகை பிடித்தல், மது அருந்துதல், குறைந்த அளவு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியால் உடல் நலத்திற்கு ஏற்படும் சேதங்களுடன் ஒப்பிடக்கூடியது.
வெய்யிலில் இருந்தால் ஆயுள் குறையும்
காலநிலை மாற்றத்தால் அதி உயர் வெப்பநிலை இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறியுள்ளது. அதி தீவிர வெப்பத்தின் நீட்டிப்பு மற்றும் அதன் தீவிரம், நம் ஆரோக்கியத்தில் ஏற்படும் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தாக்கம் போன்றவை பற்றிய புரிதலில் இந்த ஆய்வு முன் உதாரணமான ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உயர்கிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இங்கிலாந்தில் ஜூன் 2025ல் நிலவிய உயர் வெப்பத்தால் 600 பேர் முன்கூட்டியே உயிரிழந்தனர். உயர் வெப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை விரிவாக மதிப்பிட்டு பகுப்பாய்வு செய்த முதல் ஆய்வு இதுவே. ஆய்வாளர்கள் தைவானில் கடந்த 15 ஆண்டுகளில் 25,000 பேரின் வெப்ப அலையால் உண்டான பாதிப்புகளை அவர்களின் உயிரியல் வயதுடன் (Biological age) ஒப்பிட்டு ஆராய்ந்தனர். உயிரியல் வயது என்பது ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை காட்டும் ஒரு அடையாளம்.
இது உடலில் உள்ள செல்கள், திசுக்களுக்கு ஏற்படும் முதுமையைக் குறிக்கிறது. நான்கு நாட்கள் உயர் வெப்பத்தால் பாதிக்கப்பட்டோரின் உயிரியல் வயதில் ஒன்பது நாட்கள் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பு இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கிறது. வெளியில் அதிக நேரத்தை செலவிடும் உடல் உழைப்பவர்கள் இதனால் வலுவாக பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் உயிரியல் வயதில் 33 நாட்கள் இழப்பு ஏற்பட்டது.
ஒருவரின் உயிரியல் வயது குறையும்போது அவர் முன்கூட்டியே முதுமையடைகிறார் என்று பொருள். இந்த இழப்பு குறைவானது போலத் தோன்றினாலும் இந்த நிலை இரண்டாண்டுகள் வரை நீடிக்கிறது.
இதனால் வாழ்நாள் முழுவதும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். உலக மக்களில் இதனால் உருவாகும் பாதிப்பு மிகப் பெரியது. ஏனென்றால் உலகில் ஒவ்வொருவரும் உயர் வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
உயிரியல் வயது அதிகமாவதால் உயிரிழப்புகளும் அதிகமாகின்றன. “இந்நிலை மேலும் பல பத்தாண்டுகள் நீடித்தால் இதனால் ஏற்படும் தாக்கம் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதை விட மிக அதிகமாக இருக்கும்” என்று ஆய்வுக் குழுவின் தலைவரும் ஹாங்காங் பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் க்யூயி ஹியோ (Dr Cui Guo) கூறுகிறார். வெப்ப அலை அடிக்கடி ஏற்படுகின்றன, நீண்ட நாட்கள் நீடிக்கின்றன. இதனால் வருங்காலத்தில் ஆரோக்கியத்தில் பெரிய அளவு பாதிப்புகள் ஏற்படும்.
குழந்தையின் மூளை வளர்ச்சியை பாதிக்கும் உயர் வெப்பம்
காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமான புதை படிவ எரிபொருட்களின் மிதமிஞ்சிய பயன்பாடு 2024ல் சாதனையளவை எட்டியது. “நம்மில் பலரும் வெப்ப அலை பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறோம். அதனால் ஏற்படும் பாதிப்பை சமாளித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் கவலைப்பட பெரிதாக எதுவுமில்லை என்று நினைக்கிறோம். ஆனால் இந்த ஆய்வு உயர் வெப்பம் நாம் முதுமையடையும் வேகத்தை அதிகரிக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. வாழ்வின் ஆரம்ப நிலையில் உயர் வெப்பத்திற்கு ஆளாவதால் குழந்தைகளின் மூளையில் வெள்ளை நிறப் பொருளின் (white matter) வளர்ச்சியை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்று 2024ல் நடந்த ஆய்வு கூறியது. இந்த புதிய ஆய்வு வெப்ப உயர்வால் வயது வந்தோரின் முதுமை துரிதமடைகிறது என்று எடுத்துக் காட்டுகிறது. அதி தீவிர வெப்பத்தைப் பற்றிய நம் முந்தைய கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்கு இந்த ஆய்வு ஒரு முன் உதாரணமாக உள்ளது. இதனால் உருவாகும் ஆரோக்கிய பாதிப்பு வாழ்நாளில் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம். நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த பாதிப்புகள் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கலாம்” என்று ஆஸ்திரேலியா சிட்னி மாக்வெரி (Macquarie) பல்கலைக்கழக பேராசிரியர்பால் ஃபெக்ஸ் (Prof Paul Beggs) கூறுகிறார்.
நேச்சர் காலநிலை மாற்றம் (Nature Climate Change) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ள இந்த கட்டுரையில் ஆய்வாளர்கள் ஆய்வில் பஞ்கேற்ற ஒவ்வொருவரின் உயிரியல் வயதைத் தீர்மானிக்க இரத்த அழுத்தம், வீக்கம், கொலஸ்ட்ரால் மற்றும் நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் உள்ளிட்ட பல தொடர் மருத்துவப் பரிசோதனை முடிவுகளை பயன்படுத்தி ஆராய்ந்தனர். பங்கேற்ற ஒவ்வொருவரின் உண்மையான வயதுடன் இந்த முடிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டது.
இந்த முடிவுகள் ஒருவரின் உண்மையான வயது, அதி தீவிர வெப்பநிலைக்கு உள்ளாவதற்கும் அவர் துரிதமாக வயதாவதற்கும் இடையில் இருக்கும் தொடர்புடன் ஒப்பிட்டு ஆராய்ந்தது. இதில் இருந்து அதி தீவிர வெப்பத்தால் பாதிக்கப்படுவோர் விரைவாக முதுமையடைவது தெரிய வந்தது. நீடிக்கும் உயர் வெப்பநிலை வயதாவதை ஏன் துரிதப்படுத்துகிறது என்று தெரியவில்லை. டிஎன்ஏவில் ஏற்படும் சேதம் இதற்கு காரணமாக இருக்கலாம்.
வெப்ப உயர்வை சமாளிக்க உதவும் வழிகள்
வெப்ப அலையால் ஏற்படும் தீங்கான விளைவுகள் குறைந்து வருகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. நிழலான பகுதிகளில் அதிக நேரம் இருப்பது, வாய்ப்புள்ள இடங்களில் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவது போன்ற உயர் வெப்பத்தை சமாளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மக்கள் எடுக்கின்றன என்பதை இது காட்டுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் அனைவரும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் உள்ளவர்கள்.
இவர்கள் சராசரியாக குறைந்த வயதுடையவர்கள். சாதாரண மக்களை விட அதிக கல்வியறிவு பெற்றவர்கள். முதியோர் மற்றும் நோயாளிகள் உயர் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதனால் இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளதை விட வெப்ப உயர்வால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பங்கேற்றவர்களின் உடல் எடை, புகை பிடிக்கும் பழக்கம், உடற்பயிற்சி செய்யும் பழக்கம் மற்றும் முன்கூட்டியே உள்ள சர்க்கரை நோய், புற்றுநோய், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள குளிர்சாதன வசதியின் ஒட்டுமொத்த பயன்பாடு போன்றவையும் இந்த ஆய்வில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் வீட்டுக்கு வெளியில் செலவிடும் நேரம், வீட்டில் உள்ள குளிர்ச்சி, தனிநபர் குளிர்சாதன வசதி பயன் போன்றவை பற்றிய ஆய்வுடன் தொடர்புடைய முக்கியத் தரவுகள் கிடைக்கவில்லை.
அதனால் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். “ஆய்வின் முடிவுகள் வெளிப்புற வெப்பம் வயது வந்தோரிடம் முதுமையை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்த சமீபத்திய அமெரிக்க ஆய்வு முடிவுடன் ஒப்பிடக் கூடியது. கறுப்பின மக்கள் மற்றும் வறுமை உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையில் உயர் வெப்பநிலை, அறிவாற்றல் குறைவுடன் தொடர்புடையது என்று 2023ல் வெளிவந்த மற்றொரு அமெரிக்க ஆய்வு கூறியது.
புவி வெப்ப உயர்விற்கு காரணமாக இருக்கும் நாம் மட்டுமே அதை குறைக்க முடியும். அதனால் இதுவே செயல்பட வேண்டிய சரியான நேரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இயற்கையுடனான வாழ்விற்கு திரும்புவோம்.
மேற்கோள்கள்: https://www.theguardian.com/environment/2025/aug/25/heatwaves-making-people-age-faster-study-suggests?
&
https://www.nytimes.com/2025/08/25/climate/heat-waves-aging.html
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நிசப்த கொலையாளி என்று அழைக்கப்படும் காற்று மாசை காட்டும் காலநிலைக் கோடுகள், காற்று மாசு பற்றிய எண்ணத்தை மாற்றும். 1850 முதல் உலகில் இருந்த காற்றின் தரத்தை கண்களால் காண உதவும் இந்த புதிய முறை அரசுகளை மாசை குறைக்க உதவும் நடவடிக்கைகளை விரைவாக எடுக்கத் தூண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள காற்று மாசின் அளவில் ஏற்படும் வேறுபாடுகளை கண்களால் பார்த்து தெரிந்து கொள்ள இந்தக் கோடுகள் உதவும்.
பல நாடுகளிலும் காற்று மாசு நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில் இந்த ஆய்வின் முடிவுகள் உலக நகரங்கள் பலவற்றிலும் காற்று மாசு சமத்துவமற்ற நிலையில் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது. உரிய செயல்கள் மூலம் சுத்தமான காற்றைப் பராமரிக்க முடியும் என்பதை சில அரசுகளின் நேர்மறை செயல்கள் எடுத்துக் காட்டியுள்ளன.
எட் ஹாஃப்க்கின்ஸ் (Ed Hawkins) அவர்களின் காலநிலைக் கோடுகள் கண்டுபிடிப்பால் உள்ளுணர்வு பெற்று உருவாக்கப்பட்ட இப்புதிய முறை 1850 முதல் இன்று வரை நிலவும் காற்றின் தரத்தை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாசின் அளவு தனி செங்குத்துக் கோடின் வடிவத்தில் காட்டப்படுகிறது. நுண்துகள்களின் அளவைப் பொறுத்து கோடுகளுக்கு நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவுகள்படி காற்றின் தரம் இருக்கும் இடங்களில் கோடுகள் வானின் நீல நிறத்தில் உள்ளன. மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறக் கோடுகள் மாசு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது. உலகம் முழுவதும் புகைமூட்டத்தைப் பிரதிபலிக்கும் 200 படங்களின் அடிப்படையில் இந்த நிறங்களின் பாணி அமைந்துள்ளது.
“கண்ணுக்குத் தெரியாத கொலையாளி என்னும் காற்று மாசை கண்ணுக்குத் தெரியும் வகையில் இந்த கோடுகள் நமக்கு அடையாளப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பல பத்தாண்டுகளாக காற்றின் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்ளலாம். மாநகரங்களில் உள்ள காற்று மாசுக்கு ஏற்ப கோடுகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். இணைய தளம் ஒன்று இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது” என்று திட்டத்தின் இணை இயக்குனரும் எடின்பரோ பல்கலைக்கழக ஆய்வாளருமான டாக்டர் கர்ஸ்ட்டி ஃப்ரிங்கல் (Dr Kirsty Pringle) கூறுகிறார்.
“இந்தக் கோடுகள் காற்று மாசு பற்றி நமக்கு எளிதில் புரிய வைக்கும். லண்டன் மற்றும் பீஜிங் நகருக்கான கோடுகள் பெருமளவிலான தர முன்னேற்றத்தை காட்டுகின்றன. சரியான நடவடிக்கை எடுத்தால் காற்றின் தரத்தை ஆரோக்கியமாகப் பராமரிக்க முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது” என்று லீட்ஸ் (Leeds) பல்கலைக்கழக ஆய்வாளரும் திட்டத்தின் மற்றொரு இணை இயக்குனருமான டாக்டர் ஜிம் மக்வேட் (Dr Jim McQuaid) கூறுகிறார். ஒரு நூற்றாண்டிற்கு மேல் லண்டன் நகரம் நிலக்கரி புகையால் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது வானம் பட்டானியின் கறுப்பு நிற சூப் போல மாறியது.
1952ல் ஒரு வார காலம் நீண்டு நின்ற லண்டன் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. 12,000 பேர் உயிரிழந்தனர். இதனால் நடவடிக்கை எடுக்கத் தயங்கிக் கொண்டிருந்த அரசு கடைசியில் காற்று மாசைக் குறைக்க செயலில் இறங்கியது. தொடர்ந்து தூய காற்றுக்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. முதலில் வெப்பமூட்ட பயன்படும் எண்ணெய் (heating oil) மற்றும் பிறகு புதைபடிவ எரிபொருள் வாயு பயன்பாட்டின் மூலம் நிலக்கரி பயன்பாடு அகற்றப்பட்டது.
2008 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு வரை பீஜிங் நகரின் காற்று மாசு கவனிக்கப்படாமலிருந்தது. அதுவரை சீனாவில் காற்று மாசால் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மில்லியன் பேர் உயிரிழந்தனர். ஆனால் அதற்குப் பின் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலால் உண்டாகும் காற்று மாசைக் குறைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டது; பெரும் பயன் ஏற்பட்டது.
காற்று மாசின் அளவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் விரைவான நகர மயமாக்குதல் மற்றும் தொழிற்துறை வளர்ச்சி நடக்கும் ஜகார்த்தா மற்றும் இஸ்லாமாபாத்தில் இப்போதும் காற்று மாசு மோசமான நிலையில் உள்ளது. இந்த இரு இடங்களும் உலகின் இன்றுள்ள வளரும் நாடுகளின் நிலையைப் பிரதிபலிக்கின்றன.
காற்று மாசு பற்றிய செயற்கைக்கோள் உற்றுநோக்கல் தரவு விவரங்கள் முதலில் 1998ல் கிடைத்தன. இதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இங்கிலாந்து வானிலை ஆய்வு நிறுவனத்தின் உலகளாவிய காலநிலை மாதிரிகளில் இருந்து கோடுகளை உருவாக்குவதற்கான இறுதி விவரங்கள் திரட்டப்பட்டன. எரிபொருள் மற்றும் ஆற்றல் பயன்பாடு குறித்த புள்ளி விவரங்களைக் கணித்து 1850களில் நிலவிய காற்று மாசின் அளவு வரையறுக்கப்பட்டது. 2.5 அளவுள்ள நுண் துகள்கள் பற்றிய மிகச் சில வரலாற்று விவரங்கள் மட்டுமே கிடைத்தன.
கி பி 2000ம் ஆண்டிற்கு முந்தைய விவரங்கள் கணினி மாதிரிகள், செயற்கைக்கோள் உற்றுநோக்கல்கள் மூலம் பெறப்பட்டன. 2020-2021 ஆண்டுகளுக்கான மிக சமீபத்திய 2.5 அளவு நுண்துகள் காற்று மாசு பற்றிய விவரங்கள் வான் டாங்கிலாரட் அட் (Van Donkelaar et at (2021, V5 0.1 degree resolution) என்ற தளத்தில் இருந்து பெறப்பட்டன. இவை தரை நிலை மற்றும் செயற்கைக்கோள் உற்றுநோக்கல் விவரங்களை இணைத்து உருவாக்கப்பட்டவை.
உலகளாவிய மாதிரிகளின் ஆய்வு
உலகளாவிய மாதிரிகள் தொடர்ந்து மதிப்பிடப்படுகின்றன; மேம்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நகரத்தின் 2000-2022 ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் தரவுகளின் சராசரி மதிப்பிடப்பட்டது. அந்த நகரத்தின் காற்று மாசு அடர்த்தி மாதிரிகளின் சராசரி கணக்கிடப்பட்டது. இவற்றுக்கு இடையிலான விகிதத்தின் அடிப்படையில் மாசின் அளவு மதிப்பிடப்பட்டது.
இந்த கோடுகளில் காற்று மாசின் அளவுகளுக்கான கணிப்புகள் ஒவ்வொரு டிகிரி தீர்க்கரேகை மற்றும் அட்சரேகை துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நகரத்திற்குள் நிலவும் மாசின் அளவை இந்தக் கோடுகள் முழுமையாகக் காட்டாது. என்றாலும் இவை நகரத்தின் குறிப்பிட்ட பகுதியில் மாசில் ஏற்படும் மாற்றங்களை எடுத்துக் காட்டும்.
பூமியில் மக்களில் 99% பேர் உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள தூய காற்றை இன்னும் சுவாசிக்க முடியவில்லை. ஐரோப்பாவில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஆண்டுதோறும் காற்று மாசால் 400,000 பேர் அகால மரணமடைகின்றனர். இங்கிலாந்தில் இந்த அளவு 29,000 மில்லியனுக்கும் 43,000 மில்லியனுக்கும் இடையில் உள்ளது.
“சரியான விவரங்கள் கிடைக்கப் பெறும்படி செய்தால் காற்று மாசு என்ற மிகப் பெரிய உலகப் பிரச்சனையை சமாளிக்க முடியும். பல உலக நகரங்கள் இப்போதும் அசுத்தமான காற்றால் அவதிப்படுகின்றன.” என்று ரீடிங் (Reading) பல்கலைக்கழக ஆய்வாளரும் இந்தக் கோடுகளை உருவாக்கியவருமான பேராசிரியர் எட் ஹாஃப்க்கின்ஸ் கூறுகிறார்.
ஆட்சியாளர்களுக்கு போதிய அரசியல் உறுதி இருந்தால் காற்று மாசு என்னும் மிகப் பெரிய உலகளாவிய பிரச்சனையைத் தீர்க்க முடியும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- கலவர பூமியில் இருந்து மீண்டு வந்த ஒரு காட்டின் கதை
- உயிரி பிளாஸ்டிக்குகளும் தீங்கானவையே
- வானில் இருந்து தூவப்பட்ட நூறு மில்லியன் விதைகள்
- காடு காக்கப் போராடும் பெண்கள்
- மருந்துப் பொருள் மாசுகளால் நடத்தை மாறும் மீன்கள்
- இதயத்திற்காக மரங்கள்
- செயற்கை வெளிச்சமும் ஒரு மாசே
- காட்டுத் தீயும் செயற்கை நுண்ணறிவும்
- அல்சைமர்ஸ் நோயை அதிகரிக்கும் ஒளி மாசு
- பத்து டிரில்லியன் டாலர் பயன் தரும் உணவுமுறை மாற்றம்
- கடலுள் மூழ்கும் நிலப்பகுதிகள்: காவிரிப் படுகையின் நிலை என்ன?
- பூநாரையும் லித்தியமும்
- எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய ஓர் உச்சி மாநாடு
- உயிர்ப் பன்மயத் தன்மையைக் காக்க ஓர் உச்சி மாநாடு
- மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்கள்
- ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியன் லாரி கடல் மணல்
- பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை நோக்கி முன்னேறும் உலகம்
- நிலை தடுமாறும் நீலகிரி
- வெப்பத் தாக்குதலுக்கான உலகின் முதல் மாநாடு
- சர்க்கரை நோயை ஏற்படுத்தும் காற்று மாசு