பசுமைக் குடில் வாயுக்களில் மிக மோசமானதாகக் கருதப்படும் மீத்தேனை உணவாக உண்ணும் பாக்டீரியாக்கள் புவி வெப்ப உயர்வின் தீவிரத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். அதிக சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன் வாயு - ஆற்றல், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி, தொழிற்துறை, வேளாண்மை, வளமான மண்ணின் மிதமிஞ்சிய பயன்பாடு மற்றும் கழிவு மேலாண்மையின்போது உருவாகிறது.
மெத்தனாட்ராப்ஸ் (methanotrophs) என்ற வகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி இயற்கையான வழியில் சூழலில் இருக்கும் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடு மற்றும் உயிரி வளத்தொகுப்பாக (biomass) மாற்றும் முறையை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் லாங் பீச் (Long Beach) ஆய்வு மைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த எல்லா பாக்டீரியாக்களும் மீத்தேனை உண்கின்றன. இவை காற்றில் இருந்து மீத்தேனை அகற்றி அதன் ஒரு பகுதியை செல் புரதத்தின் நீடித்த நிலையான பயனுடைய புரதமாக மாற்றுகின்றன என்று ஆய்வுக் குழுவின் முன்னணி ஆய்வாளர் மேரி இ லிவ்ஸ்ட்ராம் (Mary E Lidstrom) கூறுகிறார். இதே பாக்டீரியா குழுவில் உருமாற்றம் அடைந்த மெதைலாடுவிமைக்ரோபியம் பரியேட்டன்ஸ் 5ஜிபி1சி (methylotuvimicrobium buryatense 5GB1C) என்ற பாக்டீரியாவைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பாக்டீரியா மிகக் குறைந்த அளவில் இருந்தாலும் மீத்தேனை திறம்பட அகற்றும் ஆற்றல் உடையது.
பெருவாரியாக இது நடைமுறைக்கு வந்தால் இத்தொழில்நுட்பம் புவி வெப்பம் உயர்வதை திறம்பட குறைக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த பாக்டீரியாக்கள் வாழும் சுற்றுப்புற காற்று மண்டலத்தில் மீத்தேன் வாயு 5,000-10,000 பி பி எம் (parts per million) அளவில் உள்ளது.
பி பி எம் என்பது ஒரு மில்லியனில் ஒரு பங்கு. வளி மண்டலத்தில் 1.9 பி பி எம் என்ற மிகக் குறைந்த அளவிலேயே மீத்தேனின் அடர்வு உள்ளது. ஆனால் குப்பைக் கிடங்குகள், நெல் வயல்கள், எண்ணைக் கிணறுகள் போன்றவை உள்ள சில குறிப்பிட்ட இடங்களில் மீத்தேன் 500 பி பி எம் என்ற அதிக அடர்வில் உமிழப்படுகிறது. கால்நடைப் பண்ணைகள், வெப்ப மண்டல விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் பொதுவாக மீத்தேன் உறிஞ்சும் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன.
மீத்தேன் உமிழ்வு என்ற சூழலைப் பாதிக்கும் மிகப்பெரும் பிரச்சனையை இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் திறம்பட குறைக்க முடியும் என்று லண்டன் பல்கலைக்கழக ராயல் ஹாலோவே (Royal Holloway) ஆய்வுக்கூடத்தின் புவி அறிவியல் துறை பேராசிரியர் யூவன் நிஸ்பிட் (Euan Nisbet) கூறுகிறார்.
இந்த வகை பாக்டீரியாக்கள் மீத்தேனை கார்பன் டை ஆக்சைடாக மாற்ற குறைந்த ஆற்றலையே பயன்படுத்துகின்றன. மீத்தேன் வாயுவின் மீது இந்த வகை பாக்டீரியாக்களுக்கு கவர்ச்சி மற்ற பாக்டீரியாக்களை விட ஐந்தாயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் இவை பெருமளவில் மீத்தேனை உண்கின்றன என்று கருதப்படுகிறது. இவை மீத்தேனை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து மிகக் குறைந்த பாதிப்பை உண்டாக்கும் கார்பன் டை ஆக்சைடாக மாற்றுகின்றன.
இந்த செயல்முறையின்போது வெளிவரும் கார்பன் டை ஆக்சைடை உயர் வேக உறிஞ்சு குழாய்களைப் பயன்படுத்தி உறிஞ்சி எடுத்து உருளைக்கிழங்கு போன்றவற்றை பயிர் செய்து வளர்க்கலாம். இப்போதுள்ளதை விட இருபது மடங்கு அதிகமாக மீத்தேனை மறு பயன்பாட்டிற்குரிய பொருளாக மாற்ற வேண்டும். இந்த இலக்கு எட்டப்பட்டால் இத்தொழில்நுட்பத்திற்கான முதலீடு அதிகரிக்கும். இன்னும் மூன்று நான்கு ஆண்டுகளில் இது வணிகப் பயன்பாட்டிற்கு வரும் என்று ஆய்வுக்குழுவினர் நம்புகின்றனர்.
விவசாயத்தில் பண்ணைக் கால்நடைகளின் கழிவுகள், கால்நடைகளின் உணவு செரித்தலின்போது (gastroenteric releases) ஏற்படும் உமிழ்வினாலேயே அதிக மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. வளி மண்டலத்தை அடைந்த முதல் இருபது ஆண்டுகளில் கார்பன் டை ஆக்சைடை விட 85 மடங்கிற்கும் கூடுதலாக மீத்தேன் பூமியை சூடாக்குகிறது. வளி மண்டலத்தில் இருக்கும் மீத்தேன் கடந்த 15 ஆண்டுகளில் வேகமாக சாதனையளவில் அதிகரிக்கிறது. இன்றுள்ள நிலையில் 30% புவி வெப்ப உயர்விற்கு இதுவே காரணம். அரசுகள் மற்றும் தனியார், பொது நிறுவனங்களின் மெத்தனப் போக்கால் வரும் ஆண்டுகளில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று பென்சில்வேனியா ஸ்டேட் பல்கலைக்கழக மண் நுண்ணுயிரியல் பேராசிரியர் மேரி ஆன் ப்ரண்ட்ஸ் (Prof Mary Ann Bruns) கூறுகிறார்.
2021ல் காப்26 காலநிலை உச்சி மாநாட்டில் பல பொருளாதார முன்னேற்றமடைந்த நாடுகள் இந்த வாயு உமிழ்வின் அளவைக் கட்டுப்படுத்த ஒன்றுபட்டு செயல்படுவதாக வாக்குறுதி அளித்தன. என்றாலும் மீத்தேன் உமிழ்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரிக்க ஆயிரக்கணக்கான உயர் செயல்திறனுள்ள உற்பத்திக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும்.
இதற்கான செலவு அதிகமாக இருக்கலாம். ஆனால் நாம் இந்த பூமியில் உயிர் வாழ வளி மண்டல மீத்தேனைக் குறைப்பது மட்டுமே ஒரே வழி என்ற நிலையை அடையும்போது செலவு பெரிதாகத் தோன்றாது. இயற்கைச்சூழலில் சரியான தொழில்நுட்பத்தின் உதவியில்லாமல் பாக்டீரியாக்களை பயன்படுத்தி உமிழ்வை குறைத்தால் மீத்தேனை விட பூமியை பத்து மடங்கு அதிகமாக வெப்பமடையச் செய்யும் ஆற்றலுள்ள நைட்ரஸ் ஆக்சைடின் (N2O) உமிழ்வு அதிகரிக்கும். ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பத்தின் (methanotrophic bacteria-based technology) மூலம் நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு ஏற்படுவது இல்லை.
2050ம் ஆண்டிற்குள் 0.3 முதல் 1 பெட்டாகிராம் (petagram) வரை மீத்தேனை அகற்றினால் புவி வெப்ப உயர்வை 0.21 முதல் 0.22 டிகிரி வரை குறைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒரு பெட்டாகிராம் என்பது 1,000 டிரில்லியன் அல்லது 1015 கிராமின் நிறைக்கு சமமான அளவிற்கான அலகு. இந்த அலகின் குறியீடு Pg. இந்த வெப்பநிலை குறைப்பு மற்ற உமிழ்வுகளின் குறைப்புடன் சேர்த்து கணக்கிடும்போது பூமியின் வெப்பம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பூமியை அச்சுறுத்தும் மீத்தேனின் உமிழ்வு குறையும் என்ற புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்