முச்சந்திக்கு வருகின்றன கொடும்பாவிகள்
கொடும்பாவிகளின் முகம் வடிவானதல்ல
அமிலம் ஊற்றப்பட்ட முகமாய் துருத்திக்கொண்டிருப்பவை
வாழ்வும் சாவும் ஒரு சில நிமிடங்களில் நிகழ்கின்றன
கொடும்பாவிகளின் முகம் மாறிக்கொண்டே இருக்கிறது
அமைதியை குலைக்க வருபவை கொடுபாவிகளென்று
காவல் துறையில் ஒரு குறிப்புண்டு
யாருடைய எதிர்ப்புக்கோ
பலியாடாக மாறும் கொடும்பாவிகள்
வெறும் பொம்மைகளல்ல
கூடற்றுத் தவிக்கும் பறவைகள் அதில் இருக்கலாம்
மரமின்றித் தவிக்கும் காற்றின் சிறகுகள் அமர்ந்திருக்கலாம்
எதிர்ப்பின் குறியீடாக இருப்பவை
யாருக்காகவோ தீக்குளித்து சாம்பலாகின்றன
கொளுத்தப்படாத கொடும்பாவியொன்று
சோளக்காட்டுக்குள் ஒளிந்துகொண்டதும்
அதன் முகம் மாறிவிட்டது
குழந்தைகளும் ரசிக்கும்படியாக
கொடும்பாவிகள் தீப்பந்தங்களைப்
பிடித்திருப்போரை வேடிக்கை பார்க்கிறது
கொடும்பாவிகளைக் காப்பாற்ற
முயற்சி செய்வதாய் தொடரும் சட்டத்தின்  நடிப்பு
தொடர்ந்துகொண்டிருக்கிறது
துரதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் கொடும்பாவிகளை
காப்பாற்றிவிடுகிறது சட்டம்
மக்களை கைவிட்டுவிடுகிறது

Pin It