குறுஞ்செய்திகளைக் கடந்து
சைக்கிளில்
வாழ்த்து அட்டைகளை
சுமந்து வரும் தபால்காரரின்
அலைபேசி கோபித்துக்கொள்கிறது.

குப்பைமேட்டில் மேயும்
கொண்டி மாடு
பொங்கலன்று
ஒரு நாள்
வேடம் கட்டுகிறது
கோவில் மாடாக.

சாணம் கரைக்க
மாடுகள்  இல்லை.
புள்ளி வைக்கத் தெருக்கள் இல்லை.
எத்தனை புள்ளி
கோலமாயிருந்தாலும்
அது நோட்டில் மட்டும் தான்.

வெள்ளிக் குத்துவிளக்கு
தங்கக்காசு
பீரோ, சைக்கிளென
பரிசு வாங்கிய
ஜல்லிக்கட்டு மாடு
துள்ளிக்குதிக்க
வாடிவாசலுக்குப் பதில்
நீதிவாசலைப் பார்க்கிறது.

கூரையில் வேயும்
பூசணிப்பூக்களைப் பார்த்து
நாளாகிறது.
கள்ளிச்செடிகளில்
பூத்துக்கிடக்கும்
மஞ்சள் பூக்கள்
பொங்கல் நாளை
ஞாபகப்படுத்துகின்றன.

வயல்களில்
வளர்ந்து நிற்கும்
அடுக்குமாடி
குடியிருப்புகளில்
வசிப்பவர்கள்
பொங்கல் பொங்க
பொங்கிச் சாப்பிட
இனி வரும் காலங்களில்
எங்கு போய்
அரிசி வாங்குவார்கள்?

- ப.கவிதா குமார்

Pin It