2004ஆம் ஆண்டு ஒரு தீபாவளித் திருநாளில் காஞ்சி மடத்தின் மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்திய மடாதிபதிகளின் தலைமை பீடமே தன் பீடம்தான் என்று உலகுக்கே காட்டிக் கொண்டவர் அவர்! காஞ்சியிலே அவர் பொத்தானை அழுத்தினால் டெல்லியில் மணியடிக்கும் என்று சொல்வார்கள். அவ்வளவு ஆற்றலும், மறைமுக அதிகாரமும், கொண்ட மடாதிபதி கைதானார். தன் மடத்தில் பணிபுரிந்த, ஊழியத்தில் அர்ப்பணிப்புமிக்க சங்கரராமன் என்பவரை, சதி செய்து, கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஜெயேந்திரர் அல்லாமல் மற்றும் பலர் கைது செய்யப்பட்டார்கள். சிலகாலம் சிறையிலே இருந்துவிட்டு, ஜாமீனில் வெளிவந்தார்.
கூலிப்படைக்குப் பணம் கொடுப்பதற்காக காஞ்சி மடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைபேசியப் பேசியது தெரியவந்தது. கொலையுண்ட சங்கரராமன் ஜெயேந்திரருக்கு எழுதிய ஒரு கடிதம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயேந்திரர் கூலிப்படைக்குக் கொடுத்த பணத்தின் ஒரு பகுதி சில கூலிப்படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. காவல்துறை சாட்சிகளை விசாரித்து, கொலையில் காஞ்சி மடாதிபதி நேரடியாக ஈடுபடாவிட்டாலும், சதிச் செயலின் தலைவர் அவரே என்று கண்டறிந்து, அவர் மீதும் மற்றவர்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. தமிழ்நாட்டில் வழக்கு நடந்தால் தனக்கு நீதி கிடைக்காது என்று கூறி உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கு விசாரணைக்கு மாற்றல் பெற்றுக் கொண்டார் அவர். வழக்கு இப்போது புதுச்சேரி மாரியத்தில் நடந்து கொண்டிருக்கிறது நிலுவையில் இருக்கும் வழக்கைப் பற்றிப் பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒருவரையறை உண்டு. அந்த எல்லையில் நின்று, சில கூறுகளைப் பார்ப்போம். செல்வாக்கு மிக்கவர்கள் குற்றம் இழைத்தவர்களாகக் குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தப்படும் போது, அவர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடுகிறார்கள். தவறி ஒரு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும், மேல்முறையீட்டில், ஒரு சிராய்ப்பும் இல்லாமல் வெளியே வந்து விடுகிறார்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா? கீழ்வெண்மணியில் 44 உயிர்களை கொடூரமாகக் காவு கொண்ட கோபால கிருஷ்ணா நாயுடு கடைசியில் தப்பவில்லையா? வேலூர் இரத்தினகிரி பாலமுருக--- மேல்முறையீட்டில் வெற்றி காணவில்லையா? மத்திய அமைச்சர் அழகிரி தா.கிருட்டினன் கொலைவழக்கில் விடுதலையைப் பெறவில்லையா? சிதம்பரம் அருகே இருக்கும் பூண்டி வாண்டையார் பட்டப்பகலில் மக்கள் நிறைந்த பகுதியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பார்க்கவில்லையா?
ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர் எத்தனைபேர்? தண்டனையிலிருந்து தப்பியவர்கள் எத்தனை பேர்? முன்னாள முதல்வர் ஜெயலலிதா டான்சி வழக்கில் மேல்முறையீட்டில் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்படவில்லையா? நள்ளிரவில் கைது செய்யப்பட்ட இந்நாள் முதல்வர் எந்த வழக்கிலாவது தண்டிக்கப்படாரா? யோசித்துப் பார்த்தால் பட்டியல் பத்து பக்கம் போகும்!
விதிவிலக்காக தண்டிக்கப்பட்டவர்களும் உண்டு. முன்னாள் கல்வி அமைச்சர் பொன்னுசாமிதான் வசமாக மாட்டிக் கொண்டவர். உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறியும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை. பிரேமானந்தா வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது! என்ன ஆகுமோ! இப்படிச் சில விதிவிலக்குகள் உண்டு. விதிவிலக்குகள் விதி அல்ல.
இப்போது செல்வாக்குமிக்க காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் வழக்கு, கொலை நடந்த ஐந்தாவது ஆண்டில் நடந்து கொண்டிருக்கிறது. சாட்சிகள் 'பல்டி' அடிப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. சாட்சிகளின் 'பல்டி' எதில் முடியும்?
குற்றவியல் வழக்குகளில் குற்றவாளிகள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பது ஒரு சட்டவியல் கோட்பாடு. அதனால்தான் குற்றம்புரியாத ஒரு நிரபராதி தண்டனைக்கு ஆளாகக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் கவனமாக இருக்கின்றன. நிரபராதி தண்டனைக்கு உட்படக்கூடாது என்பதால்தான் வழக்கில் நீதிமன்றத்திற்கு சந்தேகம் எழுந்தால், அந்தச் சந்தேகத்தின் பலனைச் குற்றவாளிகளுக்கு கொடுக்கிறது. இதன் பொருட்டே சாட்சிகள் கூறும் வாக்கு மூலங்கள் ஆழ்ந்து, கறாறாகப் பரிசீலிக்கப்படுகின்றன. அதனால்தான் குற்றவியல் வழக்குகளில் வழக்கை நியாயமான எல்லாச் சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
நல்ல எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட இந்தக் கோட்பாட்டை செல்வாக்கு உடையவர்கள் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்கிறார்கள்!
குற்றவியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தாலும், புகாரை விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது காவல்துறை ஆய்வாளர்தான்! பொறுப்பாக விசாரணையை மேற்கொள்ளாமல், அதிகாரிகள் குற்றப்பத்திரிகையில் ஒட்டையும், சந்தும் பொந்தும் வைத்தால் அதன் வழியே குற்றவாளிகள் குதித்துப் போய்விடுவார்கள். வழக்கு வலுவாக இருந்தால் வக்கீலால் ஒன்றும் செய்ய முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு உள்நோக்கம் உண்டா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். ஜெயேந்திரரைக் கைது செய்தது ஒரு ஆட்சி வழக்கு நடப்பது இன்னொரு ஆட்சியில்.
புதுச்சேரியில் நடக்கும் இந்த வழக்கு பற்றிய பத்திரிகைச் செய்திகள், காட்சிகள் 'பல்டி' அடிக்கின்றன என்று கூறுகின்றன!
பல்டி அடிப்பது என்றால் என்ன?
புகாரின் அடிப்படையில் புலன் விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறை ஆய்வாளர் குற்றம் பற்றி அறிந்த சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்வார். சாட்சிகள் சொல்லும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்வார். இதுகுற்றவிசாரணை முறைச் சட்டம் பிரிவு 161ன் கீழ் பதிவு செய்யப்படும். இந்த வாக்கு மூலத்தில் சாட்சிகள் கையெழுத்திட வேண்டியதில்லை. இந்தச் சாட்சிகளின் வாக்குமூலங்களும், இதர ஆவணங்களும், குற்றவாளிகளுக்கு குற்றப்பத்திரிகை கொடுக்கப்படும்போது வழங்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போ/ ஏற்கெனவே காவல்துறை ஆய்வாளரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாட்சிகள் சாட்சியம் தர வேண்டும். அவர்கள் சாட்சியம் அப்படி அமையாவிட்டால் அவர்கள் 'பல்டி' அடிக்கிறார்கள் என்று பொருள். இப்படி 'பல்டி' அடிப்பதைச் சாட்சி மாறிவிட்டார், எதிராகப் போய்விட்டார் என்பார்கள். இத்தகைய சாட்சிகளை "பிறழ் சாட்சி" என்பார்கள். சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் இப்போது பிறழ் சாட்சிகளாக மாறி, வழக்கை பலவீனப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
காவல்துறை ஆய்வாளரிடம் வாக்குமூலம் கொடுப்பது போலவே, குற்றவாளிகளும், குற்றத்திற்கு உடந்தையாக இருப்பவர்களும், நீதித்துறை நடுவர் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் அளிப்பதும் உண்டு. அப்படி வாக்கு மூலம் அளிப்பவர்களும், காவல்துறையினர் அச்சுறுத்தியதால் குற்றத்தை ஒப்புக் கொண்டேன் என்று கூறி நீதிமன்றத்தில் மாறுவதும் உண்டு. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டால் குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு குறுக்கு விசாரணை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால் அச்சாட்சிதான் அரசு தரப்பை ஆதரிக்கவில்லையே. ஆனால் அப்படிப்பட்ட பிறழ் சாட்சியை, நீதிமன்றத்தின் அனுமதியோடு அரசு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்வார்.
நாடே ஆவலோடு எதிர்நோக்கியிருக்கும் சங்கரராமன் கொலை வழக்கில் பல பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். இதில் என்ன கொடுமை என்றால், கொலையுண்ட சங்கரராமனின் குடும்பத்தாரே பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். இதன் பின்னணி என்ன என்பது காவல்துறைக்குத் தெரியும். சாட்சியங்கள் கலைக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் காவல்துறைக்கு உண்டு. இந்த வழக்கில் காவல்துறையும். தமிழக அரசும் அக்கறை காட்டவில்லையோ என்ற ஐயம் இன்று வலுவாக எழுந்திருக்கிறது. ஜெயேந்திரருக்கு ஆதரவான சக்திகள் எப்படியாவது அவரை மீட்க வேண்டும் என்பதற்காகத் திரைமறைவில் தங்கள் திறமைகளைக் காட்டிக் கொண்டிருக்கக்கூடும். இதை எல்லாம் காவலதுறையும் அரசும் எதிர்பார்த்திருக்க வேண்டும்! ஒப்புக்கு வழக்கு நடத்தக்கூடாது.
குற்றவியல் வழக்குகளில் சாட்சிகள் தடம் மாறுவதும், புரள்வதும் புதிதல்ல. சில சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவதாலேயே குற்றவாளிகள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று நினைப்பதும் சரியல்ல. மாறாத இதர சாட்சிகளின் வாக்குமூலங்கள், கோலையாகவும், முரண்பாடு இல்லாமலும், நம்பும்படியும் இருந்தால், அவைகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க முடியும். ஒரு சாட்சியின் சாட்சியத்தை இன்னொரு சாட்சி ஒத்துழைத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட இதர ஆவணங்கள் முதலியவையும் ஒரு குற்றவாளியைத் தண்டிக்க உதவும். வெறும் சந்தேகத்தின் பலனை வைத்து குற்றவாளி தப்பித்துவிட இயலாது. நியாயமான சந்தேகம் உதித்தால்தான் அதன் பலனைப் பெற முடியும். பல சாட்சிகள் குறுக்கு விசாரணையில் சிறிது 'உளறுவார்கள்'. அவைகள் மட்டுமே விடுதலைக்கு இட்டுச் செல்லாது.
சங்கரராமன் கொலை வழக்கில் இன்னும் விசாரிக்கப்பட வேண்டிய காட்சிகள் இருக்கிறார்கள். அப்படி ஒன்றும் காலம் கடந்துவிடவில்லை.
உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று செய்யாமல் காவல்துறையும், தமிழக அரசும் நேர்மையுடன் நடந்து கொண்டால், கொல்லப்பட்ட உயிருக்கு நியாம் கிடைக்கும். அது ஒரு உயிருக்கு அல்ல; ஊருக்கே கிடைத்த நியாயமாகும்.
- ச.செந்தில்நாதன்