தந்தைப் பெரியார் ஒரு முறை கல்வி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பும்போது செய்தியாளர்கள், "நம் நாட்டின் கல்வித் திட்டம் குறித்து உங்கள் கருத்து என்னங்கய்யா?" என்று கேட்க 'அது காலுக்கு செருப்பு இல்லையின்னு பசு மாட்டைக் கொன்னது மாதிரி இருக்கு' என்றார். 'சற்று விளக்கமாகச் சொல்லுங்கள்' என மீண்டும் கேட்க, அப்பனுக்குச் சாராயம். மகனுக்குப் பள்ளிக்கூடத்தில் மதிய உணவு என்றார். அப்பனுக்குச் சாராயம் கொடுத்து, அதன் மூலம் வருகிற வருமானத்தில் அவர்களது குழந்தைகளுக்கு இலவசக் கல்வியும் மதிய உணவும் வழங்குகிற ஈனச் செயலையும், அப்பனின் புத்தியை மழுங்கடித்து மகன்/மகள்களுக்குக் கல்வி தருவது போன்று பம்மாத்துகாட்டி, அதனை ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளாக மக்களுக்குச் சொல்லி அடுத்த தேர்தலில் ஒட்டு வாங்குகிற சூழ்ச்சிமிகு இழிசெயலையும் அன்றே சுட்டிக் காட்டினார் பெரியார்.

childrens 600.jipஇன்று அவர் உயிருடன் இருந்திருந்தால், 'இன்றையக் கல்வி நிலை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேட்டால் 'அப்பனுக்கு டாஸ்மாக், மகனுக்கு பாஸ்மார்க்' என்று அவருக்கே உரிய பாணியில் அறைந்து சொல்லியிருப்பார்.

ஆம், நமது அரசு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை 'அனைவரும் தேர்ச்சி'  என அறிவிக்கும் வகையில் யாரையும் ஒரே வகுப்பில் இரண்டு ஆண்டு நிறுத்தி வைக்கக்கூடாது என அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்மூலம் கூறுகிறது. இயல்பாகத் தேர்ச்சி பெறுவது வேறு; தேர்ச்சி என அறிவிப்பது வேறு. இந்த ‘அனைவருக்கும் தேர்ச்சி’ என்னும் மோசமான முடிவு, மாணவர்களையும் ஆசிரியர்களையும் தங்கள் கடமையிலிருந்து விலக ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது.

'நான் படித்தாலும் படிக்காவிட்டாலும் எட்டாம் வகுப்புவரைக் கட்டாயத் தேர்ச்சிதானே?! படிக்காவிட்டால் என்ன கெட்டுப் போச்சு ?' என்று மாணவனையும், 'நான் பாடம் நடத்தினாலும், நடத்தாவிட்டாலும் அனைவரும் தேர்ச்சி பெறத்தான் போகின்றார்கள்! நான் கற்பிக்காவிட்டால் என்ன குடியா முழுகிவிடும்?' என்று ஆசிரியரையும் சிந்திக்க வைக்கிறது. மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வாங்குகின்ற ஆசிரியர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்யாவிட்டால் குற்றமே! எனினும், அவர்கள் வழி விலகுவதற்கான வாய்ப்பை அரசே ஏற்படுத்தித் தருகிறது. தேவையான வரையறைகளும், குறிக்கோள்களும், இலக்குகளும், எல்லைகளும், நிர்பந்தங்களும்தாம் ஒரு மனிதனை முன்னோக்கிச் செயல்பட வைக்கிறது.

'அனைவருக்கும் தேர்ச்சி' என அறிவிப்பதற்கு அரசு கூறும் காரணம் குழந்தைகளைத் தேர்ச்சி பெறவில்லை என்று அறிவித்தால் அவர்கள் மனதில் தோல்வி என்னும் எதிர்மறை எண்ணம் தோன்றி, அது சில வேளைகளில் தற்கொலைக்குத் தூண்டுகிறது' என்பதாகும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படி நடந்துவிடுவது என்னவோ உண்மைதான்! ஆனால், ‘அனைவருக்கும் தேர்ச்சி’ எனும் நடை முறை ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்தையே நாசமாக்கக் கூடியதாகும். தோல்விகளே இல்லாத சமூக அமைப்பை இந்த ஆளும்வர்க்கம் நம் குழந்தைகளுக்கு வழங்கி விடவில்லை. தோல்விகளிலிருந்து எழுந்து வெற்றி யடைய என்னவழி என உளவியல்ரீதியாக குழந்தைகளுக்கு உணர்த்துவதற்கு மாறாக, பொய்யாக, 'நீ ஜெயித்துவிட்டாய், போ!' என அடுத்த வகுப்பிற்கு அனுப்புவது சரியல்ல.

குழந்தை பிறந்து 3 மாதமானால் குப்புறப்படுத்தும், நான்கு, ஐந்து மாதங்களில் நாலுகாலில் மண்டி போட்டு நகர்வதும், எட்டு மாதங்களில் எட்டுவைத்து நடப்பதும், ஒரு வயதில் 9 வார்த்தைகள் பேசுவதும், 2 வயதில் 300 வார்த்தைகள் பேசுவதும், 3 வயதில் 900 வார்த்தைகள் அறிந்திருப்பதும் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி நிலையாகும். இங்ஙனம் வயதிற்கேற்ற வளர்ச்சி என்பது உடல் மற்றும் சிந்தனை ரீதியாக மேல் நோக்கி நகர வேண்டும். இந்த அடிப்படையில் 6 வயதில் ஒன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவன் அந்த வகுப்பிற்குரிய கற்றல் திறனையும், 13 வயதில் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவன் அந்த வகுப்பிற்குரிய கற்றல் திறனையும் பெற்றிருப்பதே சரியானதும் இயல்பானதுமாகும்.

ஒருவேளை அவன் தேர்வில் ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அப்பாடங்களை மீண்டும் படிக்க வாய்ப்பளித்து, சூன் மாதத்தில் அப்பாடங்களுக்கு மட்டும் சிறப்புத் தேர்வு வைத்து அதில் வெற்றி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இந்த நடைமுறை 10, 12 ஆம் வகுப்புகளில் தோல்வியுற்றவர்களுக்கு ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைதான்!. இதை 8 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் பின்பற்றலாமே! அந்தச் சிறப்புத் தேர்விலும் அவன் தோல்வி அடைந்தால் ஓராண்டு அதே வகுப்பில் தங்கிப் படிப்பதில் தவறில்லை. அத்தோல்வி அம்மாணவனுக்கு பல்வேறு அனுபவங்களையும், 'அடுத்து வெற்றி பெற்றே தீர வேண்டும்' என்ற வைராக்கியத்தையும் வழங்கும். விழவே கூடாது என்பதல்ல விழுந்த பிறகு எப்படி எழ வேண்டும் என எண்ணுவதே மனிதனின் வளர்ச்சிக்கு உதவும். ஒருவேளை மீண்டும் மீண்டும் படிப்பில் தோல்வி என்றால், அக்குழந்தையின் ஆர்வம், விருப்பம், மாற்றுத் திறன் எத்துறையில் உள்ளது என உளவியல்ரீதியாக அறிந்து அத்துறையில் ஈடுபட வழிகாட்டலாம்.

அரசோ மிகவும் கூடுதலாக எதிர்மறையில் சிந்திக்கின்றது. 8ஆம் வகுப்பு மட்டுமல்ல 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களையும் 'அனைவருக்கும் தேர்ச்சி' என அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாக கடந்த ஏப்ரலில் செய்தித் தாள்களில் செய்திகள் வந்தன. "2014- 15 இல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புப் படித்த அனைத்து மாணவர்களுக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டதால், அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றே தீர வேண்டும். இல்லையெனில் அவர்களுக்காக அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் வீணாகிவிடும் என்று அரசு காரணம் கூறுகின்றது. புத்தங்கள் வீணாகிவிடும் என கவலைப்படுவோர் மாணவர்களின் வாழ்க்கை வீணாவதைப் பற்றி கவலைப்படவில்லை. தலைமை ஆசிரியர்கள் சிலர் இம்முடிவுக்கு உடன்பட மறுத்தார்கள்.

8 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்பதால் 9 ஆம் வகுப்பில் அகர வரிசை தெரியாமலும் கூட்டல் கழித்தல் தெரியாமலும் மாணவர்கள் வந்து அமர்கின்றார்கள். இந்த இடத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பள்ளிக் கூடமே போகாமல் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து வயதிற்கேற்ப வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கூறுகின்றது. சான்றாக 12 வயதுவரை ஒரு மாணவர் பள்ளிக்கே செல்லாமல் இருப்பாரேயானால் அவர் 1 ஆம் வகுப்பில் அல்ல 7 ஆம் வகுப்பில் நேரடியாக சேர்க்கப்பட வேண்டும்.

6 ஆம் வகுப்புவரை அவன் கற்க வேண்டியதை எப்படி ஊட்டுவது? என்றால், 'ஆசிரியர் 3 மாதம் வரை அந்த மாணவருக்கு எழுதுதல், வாசித்தல் எனும் அடிப்படைப் பயிற்சியை வழங்கிவிட்டு, பிறகு ஏழாம் வகுப்புப் புத்தகத்திற்கு நேராக வந்துவிடலாம்' என்கிறது அரசு.  6 ஆண்டுகள் சொல்லித் தர வேண்டியவற்றை மூன்றே மாதங்களில் அதுவும் மற்ற மாணவர்களைக் கவனித்துக் கொண்டே இந்த மாணவருக்கும் ஆசிரியர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுவது அறிவியலுக்கு புறம்பானது. அத்தகைய மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி மையங்கள் ஏற்படுத்தி அதற்கென தனியே ஆசிரியர்களை நியமித்துக் கல்வி வழங்குவதே பொறுத்தமானதாக இருக்க முடியும்.

இப்படிப் பல சூழல்களில் மேல் வகுப்புக்குக் கொண்டு வரப்படுகின்ற மாணவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றார்கள். அவர்களின் தேர்வுத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள்களை நீக்குப் போக்காகவும் நெளிவு சுழிவாகவும் திருத்தி 27 மதிப்பெண் வந்தாலே 35 என மாற்றிப் பெரும்பாலான மாணவர்களைத் தேர்ச்சிபெறச் செய்ய வேண்டும் என்பதே அந்தத் திருத்தும் மையத்தின் மேலதிகாரிகளின் வாய்மொழி 'வழிகாட்டலாகும்'. ஆக, அனைவருக்கும் சரியான-தரமான கல்வி வழங்குவதற்குப் பதிலாக அனைவரும் கல்வி அறிவு பெற்றுவிட்டனர் என்று 'அறிவிப்புச்' செய்யவே அரசு விரும்புகின்றது.

இப்படி அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பது அடித்தட்டு மக்களுக்கு எதிரானதே! கல்வியின் பெயரால் கல்வி மறுக்கப்படுவதற்குச் சமமே! வேலையற்றோர் கூடுதலாகவும் வேலைவாய்ப்பு மிகக் குறைவாகவும் இருப்பதுதான் முதலாளித்துவ சமுதாயத்தின் விதி! குறைவானக் கூலிக்கு திறன்வாய்ந்த ஆட்கள் கிடைக்கும்படியான சமூகச் சூழலை எப்பொழுதும் தக்கவைப்பதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கின்றது. ஆட்களைக் கழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு, தகுதித் தேர்வு முதலியன இவ்வரசாங்கத்தால் நடத்தப் படுகின்றன. இத்தேர்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி, பிற கல்வி நிறுவனங்கள் நடத்தும் இறுதித் தேர்வு, பருவத் தேர்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உயர்கல்வி, வேலைவாய்ப்பு முதலிய அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்னும் இக்கோரிக்கைகள் வெறும் கோரிக்கைகளாகவே நிற்கின்றன. யதார்த்தத்தில் அத்தனை தேர்வுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதில் எடுக்கும் மதிப்பெண்களே இன்றைய இளைஞர்களின் எதிர்காலத்தை - வேலைவாய்ப்பை நிர்ணயிக்கின்றன. அதிலும் உயர்ந்தபட்ச மதிப்பெண் எடுப்பவர்களே வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றுகின்றார்கள். மதிப்பெண் சார்ந்ததாகவே முதலாளித்துவ உலகம் இன்று இயங்குகின்றது. ஆக போட்டிகள் நிச்சயம்! இதில் வெற்றி பெற தன்னைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கிக்கொள்வது அவசியம் என்பதே இச்சமூகத்தின் நிர்பந்தம்! போட்டிகள் இல்லாத சமூகம் வேண்டும்! அனைவருக்கும் அவரவர் திறனுக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்குவதை அடிப்படை உரிமையாக அரசு அறிவிக்க வேண்டும்! போட்டிகள் இன்றைய சமுதாயத்தின் கட்டாயம் -அது இருந்தே தீருமென்றால் அதில் போட்டியிடுவதற்கு உகந்தச் சூழலையாவது பரந்துபட்ட அடித்தட்டுப் பெரும்பான்மை மக்களுக்கும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஐ.சி.எஸ்.இ.,(மிசிஷிணி), சி.பி.எஸ்.இ (சிஙிஷிணி), மெட்ரிக் உலகத்தர பாடத் திட்டம் சார்ந்த கல்வி ஆகியவற்றைப் பெற்ற உயர் நடுத்தர மற்றும் மேல்தட்டுப் பிரிவினரே, இருக்கும் வேலைவாய்ப்புகளைக் குறிப்பாக அதிகாரத்தின் உயர்நிலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் அது சார்ந்த கல்வியையும் பெறத் தகுதியுள்ளவர்களாக மழலையர் வகுப்பில் இருந்தே 'ஆக்க’ப்படுகின்றார்கள், தயார்படுத்தப்படு கின்றார்கள், வளர்க்கப் படுகின்றார்கள்.

அரசுப் பள்ளிகளில் பொதுப்பாடத் திட்டத்தில் படிப்பவர்கள் தகுதியுள் ளவர்கள் என வெறுமனே அறிவிக்கப்படுகின்றார்கள். சமச்சீர் கல்வி என்பது வெறும் வார்த்தை ஜாலமே! ஆகவே, போட்டிகள் சமமானதாக இல்லை. போர்க்களத்தில் நன்கு பயிற்சி பெற்ற வாள் வீச்சாளர்களுடன் வெறும் நிராயுதபாணிகள் போரிடுவது போன்றது இது. 8 ஆம் வகுப்பிலும் 11 ஆம் வகுப்பிலும்“ அனைவரும் தேர்ச்சி” என்று அறிவித்த அரசு ஜிணிஜி, ஷிணிஜி, ழிணிஜி, மிமிஜி, மிமிவி, போன்ற வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லத் 'தகுதி வழங்கும் தேர்வுகளில்' அப்படி அறிவிக்குமா? தகுதித் தேர்விலும் போட்டித் தேர்விலும் மிகை மதிப்பெண்களே அனைத்தையும் தீர்மானிக்கின்றன.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் தேர்ச்சிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் இம் மாதிரித் தேர்வுகளில் உண்மையில் தோல்வியடைகின்றர்கள். ஓர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். இந்தியா முழுவதும் 17 இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.ஐ.டி) உள்ளன. அவற்றில் 9784 இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வில் கடந்த ஆண்டு 1 இலட்சத்து 26 ஆயிரத்து 995 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 27 ஆயிரத்து 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதில் சி.பி.ஸ்.இ. பாடத்திட்ட மாணவர்கள் 55.08 விழுக்காடும், ஐ.சி.எஸ்.இ பாடத் திட்ட மாணவர்கள் 3.43 விழுக்காடும் (இப்பாடத் திட்டத்தில் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு) தேர்ச்சிப் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. யில் படித்த மாணவர்கள் 537 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு என்றால் என்ன என்று தெரிந்திருக்குமா? என்பது ஐயமே! ஆனால் இத்தகையோரின் குடும்பங்கள் வழங்குகின்ற நேர்முக-, மறைமுக வரிப் பணம் ஐ.ஐ.டி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி மாணியமாக அமைகின்றது என்பதை மறுக்க முடியுமா? சில ஆயிரம் மாணவர்களே பயிலுகின்ற சி.பி.எஸ்.சி. யில் 537 பேர் வெற்றி என்பது பாரதூரமான வேறுபாடேயாகும். இந்தச் சான்றினைப் பிற நுழைவுத் தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் விரிவுபடுத்திப் பார்த்துக் கொள்ளலாம். இதுதான் நம் கல்வித் திட்டத்தின் நிலைமை!

'நீ அரசனாக நீடிக்க வேண்டுமென்றால் மக்களுக்கு கல்வி வழங்காதே! சிந்திக்கவிடாதே! முட்டாளாக வைத்திரு' என்று அரசனுக்கு நீதி சொன்னது அர்த்த சாஸ்திரம். தரமான மற்றும் வேலை வாய்ப்புக்கு உதவுகின்ற கல்வி வழங்காததும் ஒரு வகையில் கல்வி மறுப்பே ஆகும். பெரும்பான்மை அடித்தட்டு உழைக்கும் மக்களின் மறைமுக வரிப் பணம், எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற மேல்தட்டு மக்களின் வாரிசுகளுக்கு ஊதியமாக/உதவித் தொகையாக போய்ச் சேருகின்றது. இதற்குப் பொருத்தமானதாக நம் கல்விமுறை வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற உண்மைகளை இன்னும் நுட்பமாக - ஆழமாக ஆராய வேண்டியுள்ளது.

ஆட்சியாளர்களின் வெவ்வேறு ஆடம்பரமான வார்த்தைகளுக்குப்  பின்னால் வெவ்வேறு வழிகாட்டும் வழிமுறைகளுக்குப் பின்னால் அடித்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வியின் பெயராலேயே கல்வி மறுப்புக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

'யுனிசெஃப்' நிறுவனத்திடம் கல்விக்காக வாங்கிய பணத்திற்கு கணக்குக் காட்ட இந்திய அரசும், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்விக்காக வழங்கிய பணத்திற்கு கணக்குக் காட்ட தமிழக அரசும், 'நாட்டில் அனைவரும் கல்வி அறிவு பெற்றுவிட்டார்கள்" என்று காட்டவே இத்தனை தகிடு தத்தங்களையும் செய்கின்றன. மாணவ உலகமே! இளைஞர் உலகமே! விழித்துக் கொள்க! கல்வியில் சமவாய்ப்பையும் வேலையில் சமவாய்ப்பையும் பெறுவது நமது உரிமை.

Pin It