தமிழ் நாட்டில் மது டாஸ்மாக் செய்த-செய்கின்ற கேடுகள் பற்றி இன்றைய நிலையில் யாரும், யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. அன்னியப் படையெடுப்பால் ஆங்கிலேய ஆட்சியால் ஏற்பட்டக் கேடுகளை விடவும் அதிகக் கேடுகள் டாஸ்மாக்கால் ஏற்படுகின்றன. 1971 முதல் மதுவால் தள்ளாடித் தள்ளாடித் தமிழ்நாடு நாளும்  எல்லாத் துறைகளிலும் சின்னா பின்னமாகச் சீரழிந்து வருகிறது.

ஈடிணை இல்லாதப் பெரியார் :

பெரியார் ஒன்றைப்பற்றி நன்கு ஆய்ந்து முடிவு செய்துவிட்டால், அந்தச் சிக்கல் தீரும்வரை நூற்றுக்கு நூறு வீதம்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திப் போராடி வெற்றி பெறுவது தந்தை பெரியாரின் தனிச் சிறப்பு. காங்கிரசில் இருந்தவரை காந்தியாரின் திட்டங்கள சிரமேற்கொண்டு செயலில் காட்டியவர் பெரியார். காந்தியாரின் மது ஒழிப்பு எண்ணத்தை அறிந்து, சேலம் தாதம்பட்டியில் தன் சொந்தத் தோட்டத்தில் இருந்த 500க்கும் மேற்பட்டத் தென்னை மரங்களை ஒரே இரவில் வெட்டி வீழ்த்திய செயல்வீரர் பெரியார் ஒருவரே! காங்கிரஸ் கட்சியில் நேரு உட்பட வேறு எவரும் இப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.

சாராயக் கடைகளுக்கு முன்னால் நின்று, கைகூப்பி வணங்கி குடிக்காரர்களைக் குடிக்கச் செல்லாமல் திருப்பி அனுப்பிய பெரியாரின் அருமைத் துணைவியார் நாகம்மை மற்றும் தங்கை கண்ணம்மாவின் மானிடப் பற்றும், துணிவும் இன்று திருமதி சோனியாவுக்கும், பிரியங்காவுக்கும், நளினி சிதம்பரத்திற்கும், தமிழிசை சௌந்தரராஜனுக்கும் ஏன் வரவில்லை?

நீண்ட பயணம் :

யார் எப்படி இருந்தாலும், தமிழ் நாட்டில் முழுமையான மது-டாஸ்மாக் ஒழிப்பு என்ற  ஒரே நோக்கத்துடன் 26 பேர்கள் 2.10.2014இல் கன்னியாக்குமரியில் நடை பயணம் மேற்கொண் டோம். நீலகிரி போன்ற ஒரிரு மாவட்டங்கள் நீங்கலாகத் தமிழ்நாடு முழுவதும் தினமும் 40 முதல் 45 கி.மீ. நடந்தோம். மது ஒழிப்பை வற்புறுத்தும் மூன்று இலட்சம் துண்டறிக்கைகள வழிநெடுக்கக் கொடுத் தோம். உடனடி மது ஒழிப்பு ஏன் வேண்டுமென விளக்கி  ஒலிபெருக்கியில் பேசிக் கொண்டே நடந்தோம்.

Tasmac 600மாணவர் இனாமுல் அசன் :

தில்லி ஜாமியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவனாக உள்ள தோழர் இனாமுல் அசன் என்ற மாணவர் முன்னெடுத்த இந்த நடை பயணத்திற்கு மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கம்  ( ஞநடியீடந’ள அடிஎநஅநவே ஹபயiளேவ டுiளூரநச யனே னுசரபள) எனப் பெயரிட்டோம். ஒரே ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் 103 நாட்கள் தொடர்ந்து நடந்தோம். இந்த நடைப் பயணத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் சென்னை இலயோலாக் கல்லூரியில் சிறப்பான அனைத்திந்திய அளவிலான கருத்தரங்க மாநாடு நடைபெற்றது. இறுதி நாளில் 12.01.2015இல் சென்னைக் கடற்கரை காந்தி சிலையில் இருந்து உழைப்பாளர் சிலை வரை கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் இணைந்த முழக்க ஊர்வலம் நடத்தி டாஸ்மாக் ஒழிப்புக்கான கோரிக்கை மனுவைக் கொடுக்கக் கோட்டைக்குச் சென்றோம். ஆனால், அந்த மனுவை வாங்கக்கூட மாண்புமிகு அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு விருப்பமில்லை. அமைச்சருக்கு நேரமில்லை எனக்கூறி ஒரு இளய ஐ.ஏ.எஸ். அதிகாரி மனுவைப் பெற்றுக் கொண்டார்.

சிவஞான சம்மந்தம்  இரவி : 

அரியலூர் முதல் கடலூர் வரை 30 நாட்களுக்கு மது ஒழிப்புப் பிரச்சார ஊர்தி பயணத்தை 1.5.2015 இல் காந்திய  சமதர்ம இயக்கத் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தோழர் சிவஞான சம்மந்தம் தொடங்கினார். அதில் நானும் கலந்து கொண்டேன். இதே தோழர் சிவஞான சம்மந்தம், தேசிய மக்கள் சக்திக் கட்சியின் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான எம்.எல்.இரவி அவர்களுடன் இணைந்து 23.6.2017 இல் மீண்டும் அரியலூரில் தொடங்கி மது ஒழிப்புப் போராட்ட வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொடர் போராட்டத்தை ஊர்திப் பயணம் மூலம் செய்தார். 30.6.2017இல் விருத்தா சலம் பொதுக் கூட்டத்துடன் முடிந்த இந்தப் பயணத் திலும் 2014 இல் 103 நாட்கள் நடைபயணம் மேற் கொண்டக் குழுவில் பங்கேற்ற சென்னை உதவும் கைகள் நிறுவனத் தலைவர் ஆனந்தி, தஞ்சை விசிறி சாமியார், இனாமுல் அசன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன்.

அதிர்ச்சி அதிர்ச்சி :

விருத்தாசலத்தில் இருந்து வடகிழக்கில் 7 கி.மீ. தொலைவில் உள்ள கச்சிராய நத்தம் என்ற சிற்றூர் டாஸ்மாக் நோயால் மிகவும் சீரழிந்துக் கிடப்பது அறிந்து அந்த ஊருக்கு எங்கள் குழு பயணித்தது. இந்தக் கச்சிராய நத்தம் நல்ல மண் வளம் கொண்ட ஊர்தான். இதில் 326 வீடுகள் உள்ளன. 1000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். இதில் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் 10 பேர்கூட இல்லை! 40 வயதுக்கும் குறைவான 110 பேருக்குமேல் மதுக்குடி காரணமாக இறந்துள்ளனர்! அதனால், இந்தச் சிற்றூரில் 110க்கும் மேற்பட்ட டாஸ்மாக் விதவைகள் தமிழ்நாட்டில் இன் னும் எத்தனை எத்தனையோ கச்சிராயநத்தங்கள்!.

கச்சிராயநத்தத்தில் ஒரே ஒரு டாஸ்மாக் விதவை யிடம்தான் பேச எனக்கு மனத்தெம்பு இருந்தது. சுமார் 35 வயதுடைய இந்த விதவைக்கு இரண்டு பிள்ளை கள். இவருடைய பெண், கடலூரில் ஆதரவற்ற அனாதை  இல்லத்தில் +1 படிக்கிறார். இவருடைய மகன் 10 வகுப்பு படிக்கவேண்டும். பள்ளிக்குச் செல்லாமல் தந்தையைப் போலவே நல்ல குடிமகனாக இருக்கிறான் எனக் கூறினார் தாய். அதிர்ச்சி  அடைந்த எனக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஏம்மா அவனை அடித்துத் தோலை உரிக்க வேண்டாமா? என நான் கேட்டதற்கு, அவன் என்னை கண்டமேனி அடித்து வீட்டிற்குள் தள்ளி கதவை மூடிவிடுகிறான் சார் என்று சொல்லி அழுதார்! மேலும் எந்த டாஸ்மாக் விதவையிடமும் விபரம் கேட்கும் மனத்தெம்பு, ஆற்றல் எனக்கில்லை.

எல்லாம் அவன் செயல், என்றும்

அவனின்றி ஓரணுவும் அசையாது என்றும்

கூறுவது உண்மையானால் டாஸ்மாக்கிற்கு முன்பாக  அந்த அவனை ஒழிப்பது முதல் வேலையல்லவா?

கண்ணகியும்  பாஞ்சாலியும் :

நம் பாரத புண்ணிய பூமியில் இந்து மதத்தில் சாதியில்லா மனிதனே இல்லை. சாதி இல்லாத சங்கமோ, கட்சியோ இல்லை. தங்களை மகா, மகா, மகா வீர மரபினர் எனக் கூறிக் கொள்பவர்கள் வன்னியர்கள். இந்த டாஸ்மாக் கச்சி ராயநத்தத்தில் 100 க்கு 100 வீதமும் வன்னியர்களே!  இந்த வீராதி வீரர்கள் தங்கள் வீரத்தை நிலைநாட்டும் போர்களம்  டாஸ்மாக் கடைக்களமே! குடிப்பதற்கு காசு கொடுக்காத பெற்ற தாயை, மனைவியை அடித்துக் கொல்வது. தானும் சாவது இவர்கள் சோழப் படையை ஆட்சி செய்த வீரம் எங்கே? சாதிச் சங்கம் எங்கே? கட்சிதான் எங்கே?

டாஸ்மாக்கை நினைத்தாலே மயக்கம், 5,6 வயது சின்னஞ்சிறு சிறுமிகளையும் பாலியல் வன்முறை செய்யும் டாஸ்மாக் மிருகங்கள் இந்த இளம் விதவை களை விட்டு வைக்குமா? கண்ணகியும், மாதவியும், மணிமேகலையும் பிறந்து வாழ்ந்த பண்பாட்டுத் தமிழகம், பாஞ்சாலியின் பாரத பூமியாகிறதே! பண்பாட்டுச் சீரழிவுக்குப் பஞ்சமே இல்லை.

சாதி வாதத்தைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடுகின்ற ஐ.எஸ்.ஐ. அக்மார்க் ஒரிஜினல் சாதியினர் தங்கள், தங்கள் சாதி மக்கள் இப்படி டாஸ்மாக் புற்று நோயால் மாளுவதை-கண்ணகி மரபினர் வீதிக்கு வீதி விதவைகளாக நிற்பதை, பண்பாட்டுச் சீரழிவு நடப்ப தைத் தடுப்பது எப்போது? எப்போது? எப்போது?.

இந்தப் பண்பாட்டுச் சீரழிவைத் தான் தமிழரின் ஒப்பற்ற ஒரே தலைவர் கலைஞரும்; தாலிக்குத் தங்கம் தந்து  தாலியை அறுக்க டாஸ்மாக்கையும் மிக, மிக, மிகத் தாரளமாய் தந்த புரட்சித் தலைவியும் விரும்பி னார்கள். அவர்களின் ஆசை, அவர்களின் விருப்பத் திற்கும் மேல் நடந்து கொண்டே இருக்கிறதே! இந்தக் கேடுகெட்ட ஈனத்தனமான புரட்சி டாஸ்மாக் ஆட்சி இன்னும் 100 ஆண்டுகள் நடக்குமாம்! தமிழ் நாட்டுக்கு வந்த சோதனையைப் பாருங்களேன்!

கதர் சட்டை :

அரசுப்பணத்தில் காந்தியின் பேரால் அமைப்புகள் ஏற்படுத்திக் கொண்டு, கதர் சட்டையும் அணிந்து கொண்டு இருப்பவர்களுக்கு 1971 முதல் தமிழ்நாட்டில் நடைபெறும் மதுக் கொடுமைகள் தெரியவில்லையா? ரகுபதி ராகவ ராஜாராம் பாடிக் கொண்டே கச்சிராயநத்தம் சென்று, ராட்டையில் நூல் நூற்றுக் கொண்டே உண்ணாவிரதம்-சாகும்வரை உண்ணாவிரதம் என்று செயல்பட ஒரே ஒரு கதர் சட்டை கூட இல்லையா?

கருப்புச்சட்டை :

காங்கிரசில் இருந்தபோது காந்தி யின் மது ஒழிப்புக் கொள்கைக்காகத் தென்னை மரங்களை வெட்டிய பெரியார், மதுக்கடை மறியல் செய்த நாகம்மை, கண்ணம்மா ஆகியோரின் செயல் கள் இன்றைய கருப்புச்சட்டைகாரர்களுக்கும், பெரி யாரியலாளர்களுக்கும் கனவான கடந்தகால வரலாறு தானா? அன்று பெரியார் செய்தது சரி. ஆனால் இன்றைய நிலைமை வேறு எனப் பகுத்தறிவு ஆய்வு கூறுகிறதா? பதில் சொல்லட்டும்.

சிவப்புச்சட்டை :

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலை நாட்ட வேண்டிய செஞ்சட்டைத் தோழர்கள் மதுவால் அழிவது புரட்சிக்குத் தேவையான அடிக் கட்டுமானம் என மார்க்சியம் போதிப்பதாகக் கட்சியின் மேல்கட்டுமானம் கருதுகிறதா?

நீலச்சட்டை :

சமுதாய அமைப்பில் நால் வருணத் திற்கும் கீழே இருப்பதாக நம்ப வைத்து வஞ்சிக்கப்பட்டப் பட்டியல் சாதியினர், மலைவாழ் மக்கள் மதுப்பழக் கத்தால் மேலும், மேலும் அழிவதை இந்துமத சனாதன வாதிகள் விரும்பலாம். ஆனால், தங்களின் குலதெய் வம் என்றும் இளம் சேகுவாரா என்றும் வாழும் அம்பேத்கர் என்றும் மனதாரக் கருதும் மக்கள டாஸ்மாக் அழிவிலிருந்து விடுதலை செய்ய டாஸ்மாக் ஒழிப்பை முதன்மைத் திட்டமாக ஆக்கி  அன்றாடப் புரட்சியாக இந்தத் தலைவர்கள் ஏன் செய்யவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. அடித்தட்டு உழைக்கும் மக்கள் எப்போதும் உழைப்பாளிகளாகவே இருக்க வேண்டும் என மனுதர்மம் மட்டும்தான் கூறுகிறதா  இல்லை  எல்லா அமைப்புகளும் விரும்பு கிறதா என்ற அய்யம் ஏற்படுகிறது.

காவிச்சட்டை :

அனைத்து வண்ணமும் தோற்றுக் கொண்டிருக்கும் நிலையில் காவிச்சட்டையும், அதன் உள் ஒளிந்து கொண்டிருக்கும் சனாதனமும் நாளும் வெற்றிக்குமேல் வெற்றியை குவிக்கிறதே! இந்தக் காவிச் சட்டைத் தத்துவம் அன்பை, மானிட நேயத்தை, ஒற்றுமையை, சமத்துவத்தை கொடுக்காது மாறாகக் கெடுக்கும்! கெடுக்கும்! இதைப் புரிந்து கொண்டு காவி தவிர மற்ற வண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துப் போராடினால் மட்டுமே மதுவும் ஒழியும், சாதியும் ஒழியும்! சமத்துவமும் தழைக்கும்.

புறநானூற்றுப் பெண்கள் :

டாஸ்மாக்கால் அன்றாடம் கொடுமைகளை அனுபவித்த தமிழ்நாட்டுப் பெண்கள், ஆண்களை விடவும் வேகமாகக் கையில் கடற்பாறை ஏந்தி டாஸ்மாக் கடைகளை உடைத்துத் தூள் தூளாக்குவதும் மதுப் பாட்டில்களை தெருவில், சாலையில் தூக்கி வீசி உடைப்பதும் துடைப்பத்தால், பழைய முறத்தால், செருப்பால் அடித்துத் தீயிட்டுக் கொளுத்துவதும் புறநானூற்று வீரம், தைரியம், இன்னும் இருக்கிறது என்பது மனதுக்கு ஆறுதலைத் தருகிறது.

மாண்புகளின் மிரட்சி :

தமிழ்நாட்டுப் பெண்களின் வீரச் செயல்களால் அம்மாவின் டாஸ்மாக் கடைகள் தரைமட்டம் ஆவதைக் கண்ணால் பார்க்கும் தமிழ் நாட்டு மாண்புகளுக்கு மிரட்சி ஒருபுறம், கொப்பளிக்கும் கோபம் மறுபுறம். யாரங்கே? தமிழ்நாட்டுத் தாய்க் குலங்கள் அம்மா டாஸ்மாக்கை அடித்து உடைத்துத் தரைமட்டம் ஆக்குவது உங்களுக்குத் தெரியவில் லையா? ஆண்கள்,  பெண்களை ஏன் கட்டுப்படுத்த வில்லை. இந்தக் கொடுமைகளை தாய்க்குலம் செய்ய ஏன் அனுமதிக்கிறீர்கள்? இரத்தத்தின் இரத்தங்கள் எங்கே? இனி கட்சியும் இல்லை, பதவியும் இல்லை, வரும்படிக் கொள்ளயும் இல்லை, நாசமாய் போங்க என குமுறுகின்றனர் மாண்புகள்.

கூரியவாள் : 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விதவைகள் ஏழைப் பெண்கள் வடிக்கும் கண்ணீர்தான் கூரிய வாளாகி அம்மாவின் உயிரை ஒரே நொடியில் பறித்து விட்டது என ஊரே பேசுவது நம்ம மந்திரிக்குக் கேட்கவில்லையோ! எனக் கூடியிருந்த கரைவேட்டிகள் ஒன்றுக்கொன்று கூறிக்கொண்டன.

Pin It