அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் களுக்கு அனைத்தும் இலவசம், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் என்றெல்லாம் புள்ளி விவரங்களை அள்ளி வீசுகிற அரசு இன்னொன்றையும் கூறுகிறது. “நலிவுற்ற வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டீன் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் 1 இலட்சத்து 39 ஆயிரத்து 805 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக மாநிலக் கல்வித் துறைச் செயலர் சபீதா கூறினார்.” (தினமணி. நவம்பர் - 14).

students 600‘பேயே இல்லை’ என்ற உண்மைக்கு மாறாக, ஊரில் கருப்புப் பேய் 45ம் வெள்ளைப் பேய் 55-ம் அலைகிறது. என அரசு அளந்துவிட்டால், ‘வெள்ளைப்பேய் என ஒன்று இருக்க முடியாது” என ஒரு சாராரும் ‘ச்சே. ச்சே, கருப்புப் பேய் இருப்பதாக சொல்வது பொய்’ என்று ஒரு சாராரும் விவாதிக்க தொடங்கி விடுவர். அது போல ‘தனியார் மயம்’ வேண்டாம் என ஒலிக்கும் குரலுக்கு மாறாக தனியார் பள்ளிகளில் 25% மாணவர்கள் சேர்க்கை சரியாக நடைபெற்றுள்ளதா எனக் கண்காணிக்கிற பணிக்கு இடதுசாரி மற்றும் சனநாயக மாணவர் - இளைஞர் அமைப்புகளைத் திசை மாற்றி விடுவதில் அரசு வெற்றி கண்டிருக்கிறது. 

அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தனியார் பள்ளிகளில் 25% நலிவுற்ற பிரிவு மாணவர்களைச் சேர்க்க வேண்டும் எனக் கூறுகிறது. (தனியார் பள்ளி என்றாலே பெரும்பாலும் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் தாம் ! இதில் சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது) இந்தப் பிரிவு குறித்து எந்த விவாதமும் - கருத்துக் கேட்பும் இல்லாமல் மத்திய அரசு முடிவெடுத்து சட்டமாக்கியுள்ளது. இச்சட்டத்தின் மூலம் அரசு மூன்று வகைகளில் மக்களுக்குத் துரோகம் செய்கிறது.

முதலாவதாக மக்களின் (நலிவுற்ற பிரிவு மக்களின்) வரிப்பணத்தைத் தனியாருக்குத் திருப்பிவிடுதல், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அவர்கள் வழங்குவதில்லை. 75% மாணவர்களிடம் கல்விக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கிற தனியார் பள்ளிகள் 25% நலிவுற்ற பிரிவுக் குழந்தைகளுக்கு இலவசமாய்க் கல்வி குழந்தைகளுக்கு தருவதாக இருந்தால் ”போய்த் தொலையட்டும்\ என அதை அனுமதிக்கலாம். மாறாக பெரூர், நகரம், மாநகரம் என ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றவாறு அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டணத்தை முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அரசே செலுத்த வேண்டும் என “சட்டம்” செயல்படும்.

1 முதல் 5 வகுப்பு வரை உள்ள தனியார் பள்ளி என்றால் ஒன்பதாம் வகுப்பில் 25% சேர்க்கப்பட வேண்டும் என்றும் 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை உள்ள பள்ளி என்றால் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது. தொழிற்துறை சேவைத்துறை காப்பீட்டுத்துறை என அனைத்திலும் தனியாருக்குக் கைக்கட்டி சேவகம் செய்யும் அரசு, கல்வித்துறையிலும் மக்கள் வரிப்பணத்தை அள்ளித் தனியாருக்கு சட்டப்படியே வழங்குகிறது, (அந்தப் பணம் வந்து சேருவதில் சற்றுக் காலதாமதம் ஆவதால் தனியார் பள்ளி முதலாளிகள் மிகவும் கடுப்பில் இருக்கிறார்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் கவலைப்படாதீர் விரைவில் வழங்கப்படும் என ஆற்றுப்படுத்துகிறார்.)

சபிதா வெளியிட்ட எண்ணிக்கையின்படி 1 மாணவனுக்கு ஓராண்டிற்கு 1000 ரூபாய் கட்டணம் என்று வைத்துக் கொண்டால் தமிழகத்தில் மட்டும் 13 கோடியே 98 இலட்சத்து 5000 ரூபாய் அரசு தனியாருக்கு வழங்குகிறது. 1 மாணவனுக்கு 2000 என்று கணக்கிட்டால் சுமார் 28 கோடியும், 3000 என்று கணக்கிட்டால் 42 கோடியும் என பள்ளிகளின் தகுதி, பகுதிகேற்ப தொகை கூடிக்கொண்டே செல்கிறது வரும் கல்வியாண்டில் இதே அளவு மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்களேயானால் இந்தத் தொகை இரட்டிப்பாகும், அடுத்த கல்வியாண்டில் மும்மடங்காகும். எட்டாம் வகுப்பு வரை இந்தத் தொகை வழங்க வேண்டும் என சட்டம் கூறுவதால் எட்டாண்டுகளில் எட்டு மடங்கு தொகை தனியாருக்கு அள்ளி வழங்கப்படும் இப்படியே ஆண்டுதோறும் தொடரும்.

இரண்டாவது பாதிப்பு அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் குறைத்தல். அரசு கூறும் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஒன்றாம் வகுப்பில் ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30, ஆறாம் வகுப்பில் 1:35 ஆகும். சபிதா கொடுத்துள்ள எண்ணிக்கையில் பாதி ஒன்றாம் வகுப்பிலும் மீதி ஆறாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டதாக வைத்துக் கொள்வோம் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்க வேண்டிய இக்குழந்தைகள் தனியார் பள்ளியில் சேர்ந்ததால் ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்கள் 2330 பேருக்கான வேலைவாய்ப்பு பறிபோகிறது ஆறாம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள் 1997 பறிக்கப்படுகிறது.

ஏற்கனவே 5 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்ந்து விடுவதால் ஆறாம் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறையும். அதனால் ஏற்கனவே வேலை பார்த்த ஆசிரியர்கள் கூடுதல் பணியாளர்கள் என்று கணக்கிடப்பட்டு வெளியேற்றப்படுவர், அல்லது மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுவர், ஆக புதிதாக வேலைக்குச் சேரவேண்டிய சுமார் 4330 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வயிற்றிலும் அவர்கள் குடும்பங்களின் வயிற்றிலும் மண்ணடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இந்நிலை எனில் இந்தியா முழுக்க எத்தனை ஆயிரம் ஆசிரிய பணியிடங்கள் ஒழிக்கப்படும் என எண்ணிப் பாருங்கள்!

மூன்றாவது பாதிப்பு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்ல அரசுப் பள்ளிகளில் சேர்க்கை விகிதம் குறைந்து கொண்டே செல்லும் இதையே காரணம் காட்டி அரசுப் பள்ளிகள் சிறிது சிறிதாய் மூடப்பட்டு இறுதியில் முற்றிலும் மூடப்படும்.

பிற துறைகளில் தனியார்மயத்தின் எதிர் விளைவுகள் குறித்து மக்களிடம் உள்ள உணர்வு வேறு; கல்வியில் தனியார்மயம் குறித்து மக்களின் மனநிலை வேறு. உதாரணமாக, ஆயா வேலை பார்க்கும் உன் குழந்தைகளை எங்கு படிக்க வைக்க விரும்புகிறாய்?! எனக்கேட்டால் ‘பணம் இல்லாததால் அரசாங்கப் பள்ளியில் சேர்த்து விட்டிருக்கேன்’ என்று பதில் கூறுவார் இது ஆயாவின் குற்றமல்ல அவரை இப்படி சிந்திக்க வைத்தது இச்சமூகத்தின் எதார்த்தம். பின்வரும் கேள்விகள் குறித்து அரசு ஒரு வெள்ளையறிக்கை வெளியிடுமானால் இந்தச் சிந்தனைக்கான விடை புரியும்.

1980 முதல் 2014 வரை பள்ளிக் கல்வியை மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி யில் முடித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் நிறுவனங்களில் படிக்க வாய்ப்பும் பெற்றவர்கள் எத்தனை பேர்? ஐ.ஏ.எஸ். ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவியடைந்தவர்கள் எத்தனை பேர்? மருத்துவர் ,பொறியாளர் மற்றும் A - Grade பதவிகளில் பணியில் சேர்ந்தவர்கள் எத்தனைப் பேர்? அவர்களின் சதவீதம் என்ன? அதேபோல் பள்ளிக் கல்வியை +2 - வரை அரசுப் பள்ளிகளில் படித்து வெளியில் வந்தவர்களில் எத்தனைப் பேர் மேற்கூறிய பதவிகளில், பணிகளில் சேர்ந்துள்ளனர்? அவர்களின் சதவீதம் என்ன? அரசு அறிக்கைத் தருமா? தராது. ஆனால் விடை வெளிப்படையானது அடித்தட்டு மக்கள் தனியார் பள்ளிகளில் தம் பிள்ளைகளை சேர்க்க முடியாவிட்டாலும் அதற்கான ஏக்கம் ஆழ்மனதில் இருக்கவே செய்கிறது.

ஆக, அரசு மக்களில் ஒரு தரப்பினரை கத்திகளாகவும், மற்றொரு தரப்பினரைக் கேடயங்களாகவும் எதிரெதிரே நிறுத்துகிறது. தனியார் பள்ளிகளின் தரத்திற்கு இணையாக அரசுப் பள்ளிகளை மாற்றுவதற்குப் பதிலாக அரசுப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்திவிட்டு தனியார் பள்ளிகளுக்கு உரம் போடுகிறது. சரி அரசு பள்ளிகளில் என்னதான் நடக்கிறது?  

தொடரும்

Pin It