பெண்களின் கனவுகளுக்கு காலாவதி தேதி நிர்ணயித்தது யார்? நிர்ணயித்து இருப்பின் உடைத்தெறிவோம். இதுதான் 36 வயதினிலே படம் சொல்லும் சேதி.

joythika 400தன் சுயவிருப்பங்களை மறந்து குடும்பத்திற்காகவே வாழும் அக்மார்க் நடுத்தர வர்க்கக் குடும்பப் பெண் வசந்தி. தன்னைப் புரிந்துகொள்ளாமல் கணவனும் மகளும் உதாசீனப்படுத்தி, வெளிநாடு சென்றபின் தன் கல்லூரித் தோழியின் உதவியுடன் மீண்டெழுகிறாள். தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்து அங்கீகாரம் பெறுகிறாள். இதுதான் படத்தின் கதை.

பள்ளிப்பருவத்தில் கூட்டுப்புழுவாக, கல்லூரிப் பருவத்தில் பட்டாம்பூச்சியாக சிறகடித்த பெண்கள்,  திருமணமான பின்பு மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் விநோதம் கண்டு  வேதனைப்படும் வைரமுத்துவின் கவிதையை நினைவூட்டும் படம் இது.

பூமிப் பந்தையே கைக்குள் கொண்டுவந்து விட்ட தகவல் தொழில்நுட்பப் புரட்சி.  உலகத்தையே ஒரு கிராமமாக மாற்றிய உலகமயமாக்கல். அவை எதுவுமே குடும்பத்தில் பெண்களுக்கான வெளியை அதிகப்படுத்திவிடவில்லை.  குடும்ப நிறுவனத்தில் அங்கீகாரம் அளித்திடவும் இல்லை. அன்றாட நாட்டு நடப்புகளை, உலகின்  முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ள அவகாசமில்லாத, தெரிந்து கொள்ளத் தேவையுமில்லாத பல்லாயிரம் வசந்திகளைத்தான் இந்தச் சமூகம் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் தன் மகளின் பள்ளிக்கு வருவது பற்றிய செய்தியைக்கூட அறியாதவராகத்தான் இருக்கிறார் வசந்தி.  வசந்தியின் கணவன் தமிழ்ச்செல்வன்,  ”மாலையில் தோழியுடன் சாப்பிட்ட பாவ்பாஜி,  அலுவலகத்தில் அனைவரையும்விட அழகான உடை, வெங்காயம், தக்காளி, மித்திலாவின் ஸ்கூல் பீஸ் இதைத்தவிர எதுவுமே தெரியாது உனக்கு“ என சீறுகின்ற காட்சி ஒன்று வரும். ஆம்.! நடுத்தர வர்க்கப் பெண்களின் நிகழ்ச்சி நிரல்கள்  இதுவாகத்தான் இருக்கிறது.  குடும்பம் நடத்த இது போதுமானதாகவும் கருதப்படுகிறது.

திருமணத்திற்குப் பின் பெண்களின் கனவுகள் களவாடப்பட்டுவிடுகின்றன.  வசந்திகள்  யாருக்காக தன் அடையாளங்களைத் தொலைத்தார்களோ அவர்களிடம் இருந்தே, ‘‘நீ ஒன்றுமில்லை” என்பதாகப் புறக்கணிக்கப்படும்போது ஏற்படும் கடுமையான மன உளைச்சல்களைப் படம் சரியாகச் சுட்டிக் காட்டுகிறது.

வசந்திக்கு வெளிநாடு செல்ல விசா மறுக்கப் படுகிறது. கணவனும் மகளும் புறப்பட முடிவு செய்யும்போது ”13 வயது மகளுக்கு அம்மாவாக செல்வதற்கு தனக்கும் அம்மாவிடம்  மட்டுமே  கேட்டுப்பெறுவதற்கு  மகளுக்கும் தேவையிருக்கிறது” என்பதை வசந்தி சுட்டிக்காட்டிய போது தமிழ்ச்செல்வன், ”மகளின், ஆசைக்கும் கனவிற்கும்  குறுக்கே  வராதே,  இங்கேயேயிருந்து இன்னொரு வசந்தியாக அவள் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்காகவும் கூட்டிக் செல்கிறேன்” என்று சொல்லும்போது  மனமுடைந்து போகிறாள் வசந்தி.

இதைப்பற்றி தன் தோழியிடம் கூறும்போது “அதைக்கேட்டவுடன் செத்துவிடலாம்போல் இருந்தது“ என்று தன்னைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறாள். கணவனும், மகளும் தந்த மனச்சுமை மட்டும் வசந்தியை சிந்திக்க வைக்கவில்லை. அவர்கள் இருவரும் வெளிநாடு சென்றுவிட்டதால் வீட்டில் பணிச்சுமை குறைவதும் வசந்திக்கு ஒரு வாய்ப்பாகவே  அமைகிறது.  வசந்தியின் கல்லூரித் தோழி  சூசன்,  வசந்தியின் போராட்டக் குணம், அறிவு ஆகியவற்றை நினைவுபடுத்த சூசனின் வார்த்தை வசந்திக்கு எனர்ஜிடானிக்காக அமைகிறது. 

கணவன் ஒரு வேலைக்காரியின் தேவைக்காக மட்டுமே தன்னை வெளிநாடு அழைத்துச்செல்ல முன்வந்திருப்பது தெரிந்து மறுக்கிறார்.  பின் கணவன் தந்திரமாக வசந்தியின்  பாசத்தை வைத்து மகளின் மூலம் சம்மதம் பெற்றுவிடுகிறார்.  ஆனால் யோசித்துப் பார்த்த வசந்தி இங்கு தான் ஏற்றுக் கொண்டிருக்கின்ற, பொறுப்புகளை முடித்தபின்தான், வரமுடியும் என்ற வசந்தியின் முடிவு அவளைத் தக்க வைக்கிறது. பொதுவாக இத்தகைய அம்மாக்களைத் தமிழ்ப் படைப்புகளில்  காண்பது அரிதிலும் அரிது. வாழ்த்துக்கள்  ஆண்டுரூஸ் (இயக்குனர்).

படம் பார்த்த ஒவ்வொரு  பெண்ணும்  தன் சுயம் பற்றியத்  தேடலோடு  குறைந்த பட்சம் ஒரு  வாரமேனும் ‘நான் யார்?’ என்ற கேள்வியோடு அலைபாய்ந்திருப்பர். தன்னைப் பற்றி மட்டுமல்ல கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளிலும் கலைப் போட்டிகளிலும் கல்வியிலும் மிளிர்ந்த தன் சக தோழிகள் பற்றிய கேள்விகளும் மனதிற்குள் அலைந்திருக்கும்.  குடும்பத்திற்காக வேலையை விட்ட, பதவி உயர்வு வேண்டாம் என்று மறுத்த அம்மாக்கள் எத்தனையோ பேர் எங்காவது   அப்பாக்கள் குடும்பத்திற்காக வேலையைவிட்டதை, பதவி உயர்வை மறுத்ததைக் கேட்டதுண்டா?

பெண்களால் மிகவும் வரவேற்புப் பெற்ற படம். யதார்த்தமான திரைக்கதை, எளிமையான கதாபாத்திரங்கள், மிகையிலா நடிப்பு. மகள் கதாபாத்திரத்தில் வரும் அம்ரிதா அருமை. வசந்தி  கதாபாத்திரத்தில் வரும் ‘ஜோ‘ வின் உடல் மொழி சிறப்பு. நடுத்தர வர்க்கப் பெண்ணை அப்படியே பிரதியெடுத்திருக்கிறார். ஆனால் முக பாவனைகளில் கொஞ்சம் ஏமாற்றம். மொழி திரைப்படத்தில்  கண்ணும், மூக்கும், உதடுகளும் பேசாத மொழியைப் பேசிச் சென்ற வசீகரம் இதில் இல்லையே ‘ஜோ‘. வசந்தியைப் போல் உங்கள் கனவுகளை மெய்ப்பட வைக்க வருகை தந்ததற்கு வாழ்த்துக்கள். தமிழ்ச்செல்வன் போல் இல்லாமல் ‘ஜோ‘வின் கனவுகளுக்கு வழி அமைத்துக் கொடுத்திருக்கும் சூர்யாவிற்கு வணக்கங்கள். சிறந்த படத்தைத் தந்த இயக்குனருக்கு பாராட்டுகள்.

இந்தப் படத்தின் நாயகன் அதன் ‘வசனம்‘ தான். அழகிய தீயே, மொழி படங்களைப் போலவே இப்படத்திலும்  விஜியின் யதார்த்தமான / நகைச்சுவை இழையோடும் வசனங்கள் திரைக்கதையின் சிறிய தொய்வைத் தூக்கி நிறுத்துகிறது. மிக யதார்த்தமானப் படத்தில் ஒட்டவே முடியாத காட்சிகள் - வசந்தியைச் சந்திப்பதற்கே குடியரசு தலைவரானது போல் இப்படத்தில் இரு முறை வசந்தியைச் சந்திக்கிறார் இந்தியாவின் குடியரசுத் தலைவர். மழை நீர் சேகரிப்புத் திட்டம் வெற்றிப் பெற்றது போல் என்று ஜெயலலிதாவுக்கு ஐஸ் வைக்கும் வசனம்.

உரம், பூச்சிக்கொல்லிகளால் உணவு விசமாகிறதென்று வசந்தி சொன்னதைக் கேட்டு அமைச்சர் சட்டமன்றத்தில் விவாதம் நடத்த ஒப்புதல் அளிப்பது. நம்மாழ்வார் போன்றோர் இயற்கை வேளாண்மையை வலியுறுத்தி நடத்திய இயக்கங்கள் பற்றிய நினைவுகள் இயக்குனருக்கு வரவில்லை போலும். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்? எப்படியிருந்தபோதும், உணவு விசமாக மாறிவிட்டதை உணர்த்தியதற்கு நன்றி.  “உடை அணிபவர்கள் அல்ல பார்ப்பவர்களே தங்கள் கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்’’ என்ற கருத்தைத் துணிவாகப் பேசுகிறது இந்தப் படம்.

ஆணுக்கு பெண் சமம் என்றாலே வீர தீர பராக்கிரம சாலியை உருவகப்படுத்தும் வைஜெயந்தி ஐபிஎஸ், அஷ்வினி பாணி படமாக இல்லாமல் யதார்தமான ஆண்--பெண் சமத்துவத்தைப் பேசும் பெண்ணை மையப்படுத்திய படம் இது.  முகநூல்களிலும் சில வாராந்திர இதழ்களிலும் கவனம் பெற்றபோதும் உத்தமவில்லன், புறம்போக்கு போன்ற திரைப்படங்கள் பெற்ற கவனத்தை இலக்கிய இதழ்களிலும், விமர்சகர்களிடம் இப்படம் பெறவில்லை. ஏன்? கமலஹாசன், ஆர்யா,  நாயக சுனாமி ‘வசந்தியை‘ அடித்துவிட்டுப் போய்விட்டது போலும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் அவர்களின் கணவர்களும் கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய படம்.

Pin It