சீறி நாராயண பரிபாலன யோகத்தின் நோக்கமும், முன்வைத்த ஈழவருக்கான இருத்தலியத்தத்துவமும் சமூகமாற்ர வடிவத்தில் கிளைத்தது. மிக நெருக்கடியான நிலைமைகளுக்குத் தள்ளப்பட்டு வந்த ஈழவர்கள் எல்லோருக்குமே தார்மீகத் தேர்வினை மேற்கொள்ளும் கட்டாயத்தினை ஏற்படுத்தியது. ‘மனிதர்கள் சரிசமமாகப் பகிரிந்து கொள்ளக்கூடியவர்கள்’ என்ற பிரகடனத்திற்கு மூலச் செயல்பாட்டிற்கான மக்களாக ஈழவர்கள் பொருத்தப்பாடு ஆனார்கள்.

Kumaran Aasan
குமாரன் ஆசான் யோகத்தின் ஊடாகவே ஆக்கப்படைப்புகளுக்குச் சாத்தியமாகக் கூடிய புரட்சிகர சமூகப் பணியை நிறைவேற்ரி வைப்பதில் முன்னவராயிருந்தார். அவர் முதலில் ஒரு உரிமையான சொந்த சகோதரனாய் ஈழவர்களிடத்தில் சங்கமித்து, அடுத்து கிடைப்பதற்கரிய தோழனாக பரிணமித்து, நாளடைவில் ஒப்பற்ற ஆசானானார். சவர்ணர்களின் தடுப்புகளைத் தாண்டி அவருடைய செயலும் புகழும் விரிந்தன.

ஆசான் தனது சொந்த நேரடி உணர்ச்சிகளையும், மனோபாவங்களையும் புறவயமாகப் பாவிக்கவும் பகுப்பாய்வும் செய்தார். அவரது திடநம்பிக்கைகள் தாழ்த்தப்பட்ட மனித வாழ்க்கையில் பெரும் வீச்சையும் பெறும் சக்தியை வ்ழங்கியது. அவரது ஆக்கத்திறன் சாதியச் சமூக அமைப்பின் கொடுமை பற்றிய செறிவான முடிந்த முடிவிலிருந்து எழுந்தது. ஆசான் அக்கறை காட்டிய விசயங்கள், அவருடைய தேர்ச்சியை அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் தன்மையினை உண்டாக்கியது.

ஆசான், அவரது சமூகத்திலும் பிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாற்றிலும் ஓர் அங்கமாகத் திளைத்தார். அவர் மாபெரும் தீர்க்கமான சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கிடையில் வாழ்ந்தார். அவர் அவற்றின் பயன்களை மக்கள் அடையச் செய்தார். அது மட்டுமல்ல, அதன் தொடர்ந்த எதிர்கால வளர்ச்சிப் போக்குக்கு கணிசமான பங்காற்றினார். ‘சிறீநாராயண பரிபாலன யோக'த்தின் மூலம் சொந்த முதலீடு, கூட்டு முதலீடு, தொழில் திறன், கல்வி ஆற்றல், மன ஆற்றல் இவைகளை வளர்த்து, சுயமுன்னேற்றத்தைக் கட்டமைத்தார். 1. குலத் தொழிலை விட்டொழித்து, வேறு பல தொழில்களும் கற்று, தம் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுதல் 2. சங்கமாகி அமைப்பாதல் 3. ஒற்றுமையின் மூலம் வலிமை என்ற முக்கோணப் பரிமாணத்திற்குள் மக்கள் உள்ளிழுக்கப்பட்டார்கள்.

பறவைக்குச் சிறகு எவ்வளவு முதன்மையோ, அது போல ஒரு மக்கள் அமைப்பிற்கு இதழ் அவ்வளவு முதன்மையானது என்பதை உணர்ந்த டாக்டர் பி. பல்பு, நாராயணகுரு, குமாரன் ஆசான் ஆகியோர் சிறீநாராயண பரிபாலன யோகத்திற்கென ‘விவேகோதயம்' எனும் இதழினை 1904 இல் நிறுவினர். விவேகோதயத்தின் ஆசிரியரானார் ஆசான். யோகத்தின் செய்திகள், அதன் கிளைகள் நடத்தும் முறைகள் ஆகியவற்றோடு, பல சிறப்புகளையும் அது தாங்கி வந்தது. எழுச்சியூட்டும் கட்டுரைகளும், இலக்கியத் திறனாய்வுகளும் அதில் இடம் பெற்றன. திருவிதாங்கூர் இந்துத்துவ அரசின் அலங்கோலங்கள் மக்களின் முன்வைக்கப்பட்டன.

ஈழவர்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட மக்கள் – இழிவிற்கும், கொடுமைக்கும் ஆளாக்கப்பட்டபோதும், அவர்களுடைய உரிமைகள் சவர்ணர்களால், அரசால் உணரப்படாதபொழுதும், வாய்ப்புகள் மறுக்கப்பட்டபொழுதும் விவேகோதயத்தின் மூலம் உணர்த்த வேண்டியவற்றை ஆசான் உணர்த்தினார். அவர் எடுத்து வைத்த வாதங்களில் தர்க்கவியலும், ஆணித்தரமான உண்மைகளும் பொதிந்திருந்ததால், ஆசான் விடுத்த நடைமுறை சமூக அமைப்பிற்கான எதிர்ப்புகளை, வெளிப்படுத்திய புதிய எண்ணங்களை, தீர்வுகளை எவ ராலும் புறக்கணிக்க முடியவில்லை. விவேகோதயம், சமூக முன்னேற்றத் திற்கான ஓர் ஆயுதமாக்கப்பட்டது.

விவேகோதயத்தின் பக்கங்களில் மக்களே படைப்பின் வழிமுறைகளை நிர்ணயிப்பவர்களாக இருந்தார்கள். மக்களின் வியக்கத்தக்க திறமைகளை அரங்கேற்றுவதற்கு விவேகோதயம் அரணானது. மக்களின் சொந்தக் கருத்துகளை வெளியிடத் தூண்டியது. ஒதுக்கப்பட்டதன் காரணமாய் உறைந்து விட்டிருந்த மவுனத் தைத் தகர்த்துக் கொண்டு, வெளிப்படையாய் பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத் தியது. விவேகோதயம், மக்கள் மனங்கள் சமூக ஏகாதிபத்தியமான பார்ப்பனியத்திற்கு பலியாவதைத் தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

வெகுமக்கள் மீது வலிந்து திணிக்கப் பட்ட பண்பாட்டின் முரண்பாடுகளை, பயனற்ற கருத்தியல்களை ஆசான் முற்றிலுமாக கழித்துக் கட்டினார். உயிர்த் துடிப்புடனும், ஆற்றலுடனும் இருக்கிற உழைக்கும் மக்களின் பண்பாட்டை ஆராய்வதிலும், அதனுடன் இணைவதிலும் மட்டுமே விடுதலை பெற்ற விடுதலை பெறச் செய்யும் புதிய மொழி பிறக்க முடியும் என்று நம்புவதின் அர்த்தமாய் விவேகோதயத்தை ஆக்கினார். அவரது படைப்பில் வெளிவந்த கருத்துகளும், உத்திகளும், மொழி யாக மாறும்போது – அதன் கருப் பொருளைப் பற்றி மட்டுமின்றி, அவரது மேதமை பற்றியும் திகைக்க வைத்தது.

விவேகோதயம் ஈழவ மக்களின் கவனத்தை மட்டுமின்றி, பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் ஆதரவையும் பெற்றது. சவர்ணர்களில் படிப்பறிவு பெற்ற முற்போக்குச் சிந்தனையாளர்களின் அங்கீகாரமும் விவேகோதயத்திற்கு கிடைத்தது. விவேகோதயம் காலத்தின் மிகமிக முக்கியமான சமூக மாற்ற நிகழ்வுகளுக்கு அச்சாரமானது. வெகுமக்கள் அதைத் தேர்ந்தெடுத்து வாசித்தார்கள். அதன் கருத்தினால் பெரும் சக்தியாய் உருவெடுத்தார்கள்.

ஒரு சமூகத்தின் முன்னேற்றம், வெற்றியளிக்கக்கூடிய நடவடிக்கை – தனிமனிதரில் அல்ல; கூட்டாக இணைந்த, ஒத்துழைக்கும் மனோநிலைக்கு தட்டி எழுப்பப்பட்ட ஒரு சமூக இணக்கமே என்பதை நிரூபணம் செய்தவர் ஆசான். திருவிதாங்கூரின் சமூக அநீதிக்கு எதிராகத் தனி மனிதராக அன்றி குழுவாக, சமூகமாக இணைந்து செயல்படுவதன் நுட்பத்தையும் வெற்றியையும் நிலைநாட்டியது, ஆசானின் பணிகளில் சிகரமாகும். ஈழவர்களை, தன் சமூக மனிதருக்கான இலக்கணத்திற்கு ஒரு படைத்தளமாக ஆக்கிய ஆசான், 1904 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ‘சிறீமூலம் மக்கள் சபை'யில் அடுத்த ஆண்டே ஈழவர்களுக்கான முதல் பிரதிநிதி ஆனார்.

சீறிமூலம் மக்கள் சபையில், ஒரு கோரிக்கையிலிருந்து இன்னொரு கோரிக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் சென்றவராய், நிர்பந்தப்படுத்தி, அவைகளை நிறைவேற்ற வைத்தவராய், மிகத் தெளிவுடனும், நேர்மையுடனும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னகர்வை மய்யப்படுத்தினார். எச்சூழ்நிலைமையிலும் ஆளுவோர்க்கு தொங்குசதையாக மாறிவிடாத கவனத்துடன் உரிமைக்காக கிளர்ந்தெழுந்தார். மக்கள் நலம் சார்ந்த முறையில் ஆட்சி நிர்வாக எந்திரத்தை திருப்பி விடுவதில் குறியாக இருந்தார்.

தென்னை நாரிலிருந்து கயிறு திரித்தல், கொப்பரைத் தேங்காய் தொழில், ஆடை நெய்தல் ஆகியவை கேரளத்தின் அன்றைய முக்கியத் தொழில்களில் குறிப்பிடத்தக்கதாகும். இந்தத் தொழில்கள் முறையாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அறிவியல் முறையில் அமைக்கப்பட வேண்டும் என்று ஆசான் கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையில் அவர் அய்ரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்குச் சென்று, தொழிற்கல்வி பயிற்சி பெற்ற இளைஞர்களின் பொறுப்பில் ஈழவர்களும் ஈடுபட்டிருப்பதால், அவர்களை உயர் படிப்பிற்காக மேலை நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கேரளத்தில் அக்காலத்தில் உயர் பதவிக்கும், அந்தஸ்திற்கும் சமஸ்கிருதமே திறவுகோலாக இருந்தது. மலையாளம், சமஸ்கிருதத்தின் முற்றுகையிலிருந்துதான் வளரத் தொடங்கியது. திருவிதாங்கூர் அரசு சனாதன இந்து அரசு என்பதால், சமஸ்கிருதத்தின் ஆதிக்கமே மேலோங்கியிருந்தது. அம்மொழியின் துணையின்றி முன்னேறுதல் முடியாத காரியமாக இருந்தது. மேலும், இதில் ஈழவர்கள் தனித்திறன் பெற்றிருந்த ஒரு துறையாகிய பண்டுவத்துறையில் அறிவு பெறுவதற்கு சமஸ்கிருதம் தேவையாக இருந்தது. திருவனந்தபுரத்திலிருந்த சமஸ்கிருதப் பாடசாலையில் ஈழவர் உள்பட, அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார் ஆசான்.

சென்னையிலிருந்த ஆயுர்வேதப் பாடசாலையின் முதல்வர் பண்டித கோபாலாச்சார்லு, ஆசானுக்கு நண்பராக இருந்தார். ஆசானின் பரிந்துரையால் சென்னைக்குச் சென்று ஈழவர்கள் மருத்துவம் பயில முடிந்தது. இதில் ஈழவ மாணவர்கள் மருத்துவத்தைக் கற்பதில் திறமையானவர்கள் என்று முதல்வர் பாராட்டியது, ஆசானுக்கு மகிழ்ச்சியை அளித்தது. உயர்நிலைப் பள்ளிகள், சமஸ்கிருதப் பாடசாலை, ஆயுர்வேதப் பாடசாலை ஆகியவற்றில் ஈழவ ஆண்கள், பெண்கள் சேர்ந்து பயில அரசு அனுமதி கிடைத்தது. மேலும், ஆசான் தொழிற்கல்வியும், பொறியியல் கல்வியும் ஈழவர்கள் பயில, அவர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்பட வேண்டும் என்றார்.

‘சிறீமூலம் மக்கள் சபை'யில் ஆசான் பேசிக் குவித்தவைகளை திரும்பப் பொறுக்கிச் சேர்க்கையில், அதன் கனம் கூடி நின்றது. நொந்து நலிந்தவர்களிடம் மட்டுமே அழகினையும் ஈர்ப்புத் தன்மையையும் நேர்த்தியினையும் கண்ட அவர், ஒரு புதிய வரலாற்று நிலைமையை ஏற்படுத்தவே – தம் மக்கள் சபை பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வாய்ப்புகளைத் தேடுகிற முறைகளுக்கு வழிகோலும் முதல் முயற்சிக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்த ஆசான், எல்லாச் சமூகத்தினருக்கும் சமநீதியும் சமவாய்ப்பும் கிடைக்கும் வகையில், ‘பொறுக்குக் குழு' ஒன்றை அமைக்க வலியுறுத்தினார். சாதி ஏற்றத்தாழ்வுகளை மக்கள் மனதிலிருந்து நீக்கக்கூடிய வாறு அமையப் பெற்ற நூல்களை மட்டுமே கல்வித் துறையில் பாடங்களாக வைக்க வேண்டும் என்றார்.

மேற்படிப்பிற்காக அயல்நாடுகளுக்கு மாணவர்களை அனுப்பி வைப்பதில் அரசு ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டிய ஆசான், நாயர்களையும், சிரியன் கிறித்துவர்களையும் அனுப்பி வரும் அரசு – இனி ஈழவ மாணவர்களையும், பிற தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் கல்வி கற்க அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார். தட்டச்சுப் பயிற்சி, வர்த்தகக் கடிதங்கள், வங்கி அலுவல்கள், கணக்கு எழுதுதல் போன்ற துறைகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து, வணிகத் தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்ப மாணவர்களைத் தகுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கல்வித் துறையின் அலுவலகக் கடிதங்களிலும், சுற்றறிக்கையிலும் ஈழவர்களையும் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பாரையும் கீழ் சாதியினர் என்று குறிப்பிடுவதை எதிர்த்து நின்றார்.

மக்கள் சபையில் ஈழவப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை என்ன என்பதை ஆசான் சுட்டிக்காட்டி, அவர்களுக்குப் போதிய வாக்குரிமை இல்லாததாலும், சாதி பாகுபாட்டுணர்வு காரணத் தாலும் போதிய பகராண்மை தரப்படாததை எடுத்துக் கூறினார். தாழ்த்தப்பட்ட வகுப்பாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகராண்மை பெறுவதற்கு நியமன முறையையும், தனி வாக்குப் பதிவு முறையையும் கையாளக் கேட்டுக் கொண்டார்.

16 ஆண்டுகள் ‘சிறீமூலம் மக்கள் சபை'யில் பிரதிநிதியாக இருந்த ஆசான், திருவிதாங்கூர் சட்டப் பேரவையில் (Legislative Council) ஈழவர்களின் உறுப்பினராக 1920 இல் பதவியேற்றார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை உரிமையிழந்த சமூகத்தினருக்கும் நல்க வேண்டுமென்றார். திருமணம், வாரிசுரிமை, பாகப்பிரிவினை முதலியவற்றைப் பற்றிய பொதுச் சட்டம் இல்லாமையால், பிளவுபட்டிருந்த ஈழவர்கள் ஒன்றுபடும் நோக்கிலும், எளிய செவ்விய சட்டத்தால் சமூக உறவுகளை சீர்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும், ஈழவ சட்டவரைவை நிறைவேற்ற ஆசான் உறுதுணையாக இருந்தார்.

1901 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரசில் ஒரு ஈழவர்கூட இல்லை. ஆனால், ஆசான் மக்கள் சபையின் பிரதிநிதியாகப் பொறுப்பேற்ற எட்டாண்டுக் காலத்தில் 120 பேர் அரசு ஊழியர்களாக்கப்பட்டனர். இது, திருவிதாங்கூர் இந்துத்துவ ஆட்சியில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமாகும். மேலும், அவர் பிற தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் அரசு வேலை பெற ஆவன செய்தார். தீண்டாமை கொடி கட்டிப் பறந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், ஆசான் தீண்டாமை ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்தினார்.

Narayana Guru
டி.கே. மாதவன், மன்னத் பத்மநாபன் போன்றோர் முயற்சியில் நடந்த வீரியமிக்க வைக்கம் போராட்டம் (1925), தலைவர் பெரியார் தலைமையில் வெற்றியை அடைந்தது. இது, ஆசான் ஊன்றிய வித்திலே விளைந்தது என்றால் மிகையானதல்ல. தாழ்த்தப்பட்டோர் தம் தற்பகை, உட்பகை, புறப்பகை இவற்றை உணர்ந்து சுயமாகவே எழுச்சி பெற ஆசான் தூண்டுதலாக இருந்தார்.

அறியாமை, முனைப்பின்மை, சோம்பேறித்தனம், ஒற்றுமையின்மை, ஏமாறுந்தன்மை, பொருளாதார வலுயின்மை ஆகியவற்றைப் போக்கச் செய்து, பொலிவும் புத்துணர்ச்சியும் உள்ள மனிதர்களாக்கினார். ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்கள் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகிய எல்லாவற்øயும் உள்ளடக்கியது என்றார். நமக்கு நாமேதான் நீதிகளைத் தேடிப் பெற முடியும்; அதில் மற்றவர்கள் துணை நிற்க முடியும் என்ற தம் அனுபவத்தை மக்களிடம் உரை கல்லாக்கினார்.

ஈழவர்களின் ‘விஞ்ஞான வர்த்தினி' என்ற அமைப்பின் சார்பில் வெளிவந்த ‘பிரதிபா' என்னும் இதழின் ஆசிரியராக ஆசான் பொறுப்பேற்றார். சாதி ஆதிக்க உலகத்தின் அடக்குமுறையையும் பாசாங்கையும் எதிர்க்கத் தயாராக உள்ள நாம், கோரிக்கைகளால் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்றும், இனி தீவிர செயல்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் எழுதினார். எத்துறையாயினும் எதிர்ப்புகளையும், கருத்து வேறுபாடுகளின் கடுமைகளையும் கண்டு பின்வாங்காமல் சமூக நிலையைத் தெளிவாகவும், முறையாகவும் விளக்குவதற்கு ‘பிரதிபா' இதழ் ஆசானுக்கு உதவியது.

சமூக முன்னேற்றத்தில் வெற்றியை எட்டும் வரை, ஈடு இணையற்ற உழைப்பாளியாய் தங்க வேட்டைக்காரர் போல இடையறாது முயன்று உழைத்த ஆசான், 1924இல் மக்களை விட்டு உடலால் பிரிந்தார். மக்களோடு தோளோடு தோள் நின்று முன்னோக்கி அழைத்துச் சென்ற ஆசானின் சமநீதிப் போராட்டம், ஓர் இடைவிடாத மனிதச் செயல்பாடாகும். மானுட உலகம் ஒரு மனிதாபிமானமுள்ள கோளாக சீரமைக்கப்பட வேண்டும் என்பதே ஆசானின் இறுதி லட்சியமாகும்.

ஈழவர் சமூகத் தலைவர், திறன் மிக்க மக்களின் பிரதிநிதி, சமுதாய அமைப்பின் செம்மைமிகு செயலாளர், போராளிகளில் முன்னோடி, பண்பட்ட திறனாய்வாளர், சிறந்த இதழாசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர், மா கவிஞர் போன்ற ஓங்கு புகழாரங்களை ஆசான் அணியப் பெற்றிருந்தாலும், அவருக்கான உச்சப் புகழாரம் – இயல்பான உண்மையான சமூக மனிதர் என்பதுதான்.

ஆசான் சேகரித்துள்ள அனுபவமும், செயல்பாடும், விளைவுகளும் ஒப்பீடு செய்ய முடியாத மதிப்புடையதாகும். இன்றும்கூட முன்னேற்றத்தின் நிகழ்காலம் மற்றும் வருங்காலமாக உள்ள மக்களுக்கு அவை பயன்படும் என்ற அளவிற்குத் தேவையானவை. இதில் எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ஆசானின் சமூக வாழ்விலிருந்து எழுந்த செயல்பாடு, மக்கள் உயர்வின் மீதமைந்த உண்மையான ஒருங்கிணைப்பு ஆகும்.

ஆசான் தமக்கு இயற்கை அளித்த காலத்தை மிகச் சரியாக மக்களுக்காகப் பயன்படுத்தினார். தாம் மக்களுக்காகப் பயன்பட்டதில் அதன் காலம் மற்றும் அர்ப்பணிப்பை, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலாக உருமாற்றம் செய்வதில் தொடர்ந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். அவ்வெற்றியின் உள்ளடக்கம் சாதி ஆதிக்கம் உருவாக்கி வைத்த படிமத்தை அழித்தலும்; அதனுடைய எந்தவொரு வெளிப்பாட்டிலும் உண்மையைத் திரும்ப திரும்ப உணர்த்தத் துடிக்கும், வாழும் எதார்த்தத்தை ஆக்குதலும் ஆகும்.

ஆசானுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு, ஒரு சிற்பிக்கும் சிற்பம் வடிக்கத் தேவையான கல்லுக்கும் இடை யிலான உறவு போன்றதாகும். ஆசானின் உயிர் வாழ்க்கைக்கு மூலப் பொருட்கள் மக்கள்தான். இந்தத் தேர்ந்தெடுப்பின் மதிப்பின் மகிழ்ச்சியில்தான் அவர் வரலாற்று நாயகரானார்.
Pin It