பம்பாயில் இம் மாதம் 15, 16, 17, 18 தேதிகளில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நாடகம் கவனித்தவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றாமல் இருக்காது. ஒரு ஸ்ரீயின் விபசாரத்தனத்திற்காக அவளது நடத்தையை கண்டிக்கக்கூடிய கூட்டத்தில் அந்த ஸ்ரீயின் விபசாரத்தனத்தினால் அனேகம் மக்கள் திருப்தி அடைகிறார்கள், ஆதலால் அந்த ஸ்ரீயின் பரோபகாரத்தைப் பாராட்டுகிறோம் என்று ஒரு தீர்மானம் செய்யப்பட்டது போல், அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்தில் சென்னை சுயராஜ்யக் கட்சியார் காங்கிரஸ் தீர்மானத்துக்குத் துரோகம் செய்த விஷயம் முடிவு பெற்றுவிட்டது. ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் ஒரு மாத காலமாக வடநாடு சுற்றுப் பிரயாணம் செய்து கொண்டிருந்த கருத்தே இதுதான். அனேகமாக காங்கிரஸ் கமிட்டியில் மாகாண சுதந்திரம் பெற்று இம்மந்திரிகளை தோற்கடித்து தாங்களே மந்திரியாக வேண்டிய பிரயத்தனம் செய்தார். ஆனால் மற்ற மாகாணங்களில் உள்ள “காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சி தேசபக்தர்களுக்கு” இம்மாதிரி வேட்டை கிடைக்க மார்க்கமில்லாததால் அவர்களின் யோக்கியதை அந்தந்த மாகாணங்களில் கெட்டுப் போய்விடும் என்கிற பயத்தின் பேரில் அதற்கு ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை.

 periyar 592சென்னை அய்யங்கார் கூட்டத்தார் தங்கள் செல்வாக்கால் மந்திரி ஸ்தானம் ஒப்புக் கொள்ளலாம் என்பதாகத் தீர்மானம் செய்வதற்கு மற்றொரு சிறிய தடையும் தோன்றிவிட்டது. அதாவது சென்னையில் ஒரு பார்ப்பனர்தான் மந்திரியாக வரக்கூடும். அந்த ஒரு ஸ்தானத்திற்கும் இரண்டு வகுப்பு சண்டையிடுகிறது. ஒன்று அய்யங்கார் வகுப்பு மற்றொன்று ஸ்மார்த்த வகுப்பு. அய்யங்கார் வகுப்புக்கு ஸ்ரீமான் சி. வி. வெங்கிட்டரமணய்யங்கார் நாக்கில் 6 வருஷ காலமாக நீர் வடிந்து கொண்டிருக்கிறது. ஏறக்குறைய மூன்று தேர்தலுக்கும் சுமார் லட்சம் ரூபாய் வரை செலவு செய்தவர். அவருக்குக் கிடைக்க வேண்டியது நியாயம். அல்லாமலும் அவருக்குப் பணமும் உண்டு. ஸ்ரீமான் ஏ. ரங்கசாமி அய்யங்காருக்கும் சம்மந்தி. ஸ்மார்த்த பார்ப்பன வகுப்புக்கோ ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு 7, 8 வருஷமாகவே ஏதாவது ஒரு வேலைக்கு நாக்கில் நீர் ஒழுகிக் கொண்டே இருக்கிறது. ஒரு காலத்தில் ஸ்மார்த்த “குருவான” ஸ்ரீமதி பெசண்டம்மையாரை அய்யங்கார் கூட்டங்கள் எதிர்த்த காலமாகிய காஞ்சீபுரம் மகாநாடு முதலே ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யங்கார் கூட்டத்திற்கு உழைத்து வந்திருக்கிறார். அதற்காக அவ்வப்போது அய்யங்கார் கூட்டம் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்குப் பணப்பை உதவி வந்தாலும் அதுகள் ஸ்ரீமான் மூர்த்தியின் குடும்பச் செலவுக்குத்தான் ஆயிற்றே ஒழிய மிச்சப்படுத்த உதவவேயில்லை. அய்யங்கார் கூட்டம் தங்களது பத்திரிகையில் தூக்கிவிட்டார்கள் என்றாலும் அதுகள் தங்கள் சுயநலத்துக்கே அல்லாமல் ஸ்ரீமான் மூர்த்தி பிழைப்புக்கு இவர்கள் உதவிய பணம் தவிர பத்திரிகை விளம்பரத்தால் ஒரு காசும் லாபம் இல்லை.

 சப் ஜட்ஜ் முதலிய வேலைகள் கிடைத்திருக்குமானாலும் ஸ்ரீமான் சி. பி. அய்யர் பழைய விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு “உன் யோக்கியதைக்கு சப் ஜட்ஜி வேலைக்கு போவது மிகவும் குறைவானது. மந்திரி, பிரசிடெண்ட், கமிட்டி மெம்பர் முதலியதுகள்தான் தக்கது” என்று சொல்லிவிட்டாராம். ஆகவே அவருக்குக் கண்டிப்பாய் ஒரு மந்திரி வேலை கொடுத்துத்தான் தீர வேண்டும். அப்படியே கொடுக்க வேண்டும் என்று ஆரம்ப முதலே ஸ்மார்த்த பிராமணர்கள் சிபார்சு செய்தும் வருகிறார்கள். ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு மந்திரி வேலை கொடுப்பதில் அய்யங்கார்கள் கூட்டத்தாருக்கு மற்றொரு பயமும் இருக்கிறது. என்னவென்றால் ஸ்ரீமான் சத்தியமூர்த்தியிடம் அய்யங்கார்களுக்கு உள்ளுக்குள் நம்பிக்கையுமில்லை. யாரையும் நன்றாய் திட்டுகிறார் என்பதும், யார் திரும்பித் திட்டினாலும் கொஞ்சமும் சலிக்காமல் அவ்வளவையும் வாங்கி மூட்டை கட்டிக் கொள்கிறார் என்கிறதினாலும் அவரை உசுப்படித்திவிட்டு மற்றவர்களைத் திட்டச் சொல்கிறவரையில்தான் அய்யங்கார்களுக்கு அவரிடம் நம்பிக்கையே அல்லாமல் வேறு வழியில் அய்யங்கார்களுக்கு அவரிடம் நம்பிக்கையில்லை. அன்றியும் ஒரு சமயம் தங்கள் மீதும் ஏதாவது திரும்பிவிடுமோ என்கிற பயமும் எப்போதும் அய்யங்கார் கூட்டத்திற்கு உண்டு. அதினால் தான் அவரை லீடராக்காமல் ஸ்ரீமான் சாமி வெங்கிடசலத்தை லீடராக்கினதும் காங்கிரசுக்கு காரியதரிசி ஆக்காமல் சுயராஜ்யக் கட்சியோடு நிறுத்தி விட்டதுமே தவிர வேறில்லை. இக்காரணங்களாலேயே சுயராஜ்யக் கட்சிக்கு மந்திரி பதவி இப்பொழுது அழுவாரற்ற பிணங்களாக நாறிக் கொண்டிருக்கிறதே அல்லாமல் வேறில்லை.

நிற்க, சென்னை சுயராஜ்யக் கட்சியார் செய்த காங்கிரஸ் துரோகத்தைப் பற்றிய கண்டனத் தீர்மானம் வந்த சமயம் தலைமைப் பதவியில் இருந்த ஸ்ரீமான் நேரு “11 மணிக்கு 10 நிமிஷம் இருக்கிறது. இந்த விஷயம் 10 நிமிஷத்துக்குள் முடிந்துவிட வேண்டும். இத்தீர்மானத்தின் மேல் யாரும் அதிகமாய் பேசக்கூடாது” என்று அடக்குமுறை உத்திரவிட்டாராம், இதன் பேரில் கூட்டத்தில் பெரிய குழப்பமும் கூச்சலும் உண்டாயிற்றாம். இந்தியாவிலுள்ள எல்லா பத்திரிகைகளும் ஏறக்குறைய பார்ப்பன சம்பந்தமுடையதாகவேயிருப்பதால் ஒன்றாவது இக்குழப்பத்தின் விவரத்தையும் அங்கு நடந்த வாக்குவாதத்தையும் சரியாய் போடவேயில்லை. பார்ப்பனர்களுக்கு விரோதமாக ஏதாவது ஒரு காரியம் நடைபெறுவதானால் சட்டம் என்பதின் மூலமாகவோ குழப்பத்தின் மூலமாகவோ தப்பித்துக் கொள்கிற வழக்கமானதால் இதிலும் அப்படியே குழப்பம் செய்து மெல்ல தீர்மானத்தை காரியக் கமிட்டிக்குத் தள்ளிவிட்டார்கள். அக்கிராசனாதிபதி பார்ப்பனர், குற்றம் செய்தவர் பார்ப்பனர், தீர்மானம் கொண்டு வந்தவர் அரைப் பார்ப்பனர், கலகம் செய்தவர் பார்ப்பனர். இந்நிலைமையில் இத்தீர்மானம் என்ன ஆகும் என்று யாரும் யோசிக்க வேண்டியதே இல்லை. கடைசியாகக் காரியக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அங்கு என்ன முடிந்தது என்றால் “சென்னை சுயராஜ்யக் கட்சியார் காங்கிரசுக்கோ கௌகத்தி தீர்மானத்திற்கோ விரோதமாக ஒன்றும் செய்துவிடவில்லை. தவிரவும் அவர்கள் சென்னை மந்திரி விஷயத்தில் நடந்து கொண்டதைப்பற்றி இந்த சபை பாராட்டுகிறது” என்கிற மாதிரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது எப்பேர்ப்பட்ட அயோக்கியத்தனமான பித்தலாட்டம் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

இதை ஆந்திர தேசத்து பார்ப்பனரும் ஒப்புக் கொண்டார்கள் என்றால் அவர்களின் அயோக்கியத்திற்கும் இதைவிட வேறு சாட்சி என்ன வேண்டியிருக்கிறது. “நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு” என்கிற மாதிரி தமிழ்நாடு பார்ப்பனரும் ஆந்திர நாட்டுப் பார்ப்பனரும் சேர்ந்து பாமர ஜனங்களை ஏமாற்றும் பித்தலாட்டமே அல்லாமல் மற்றபடி வேறென்ன? என்று கேட்கிறோம்.

இந்து முஸ்லீம் ஒற்றுமை

தவிர, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாக ஒரு வேஷம் புதிதாகக் கட்டிவிட்டிருக்கிறார்கள். ஏதோ ஆங்கிலம் படித்த நான்கு மகமதியர்கள் உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு “நாங்கள் ராஜியாய் விட்டோம்” என்று சொன்னால் அது 7 கோடி முஸ்லீம்களைக் கட்டுப்படுத்தி விட்டதாக அர்த்தமா? என்று கேட்கிறோம். சென்னையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காருக்கு கிடைத்துள்ள மகமதிய ஜனாப் பிரதிநிதிகளைப் போலவே வடநாட்டிலும் உத்தியோகம், பதவி முதலிய ஆசை கொண்ட சில ஜனாப்புகள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு எப்படி மந்திரி, பிரசிடெண்ட், நிர்வாக சபை மெம்பர் முதலியதுகள் கிடைக்கும் என்கிறதைத் தவிர வேறு நிலையான சமூகாபிமானம் இல்லை. அவர்களுடைய அறிவும், ஆராய்ச்சி ஆற்றலும் பொது ஜனங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு உதாரணம் காட்டுகிறோம். அதாவது ஒரு மகமதிய கனவான் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரைப் புகழ்ந்த போது ஸ்ரீ அய்யங்கார் “தமிழ்நாட்டில் பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டையை அடியோடு ஒழித்துவிட்ட வீரர்” என்று சொன்னாராம். இது எப்படி இருக்கிறது என்றால் “பஞ்ச பாண்டவர்களை எனக்குத் தெரியாதா? கட்டில் குத்துக்கால்கள் போன்று மூன்று பேர்கள் என்று சொல்லி இரண்டு விரலைக் காட்டினானாம்.” அது போல் சீனிவாசய்யங்காரையாவது தமிழ் நாட்டையாவது பிராமணர் - பிராமணரல்லாதார் சண்டையையாவது அது எது பற்றியது என்பதையாவது சரிவரத் தெரிந்திருந்தால் இம்மாதிரிப் பேசி இருக்கவே மாட்டார்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சண்டை ராஜியாய் விட்டதா? அல்லது ஒழிந்துவிட்டதா? ஜஸ்டிஸ் கட்சி மறைந்துவிட்டதா? இவற்றை எந்த யோக்கியராவது சீனிவாசய்யங்கார் செய்துவிட்டார் என்று சொல்லக்கூடுமா? வேறு வழியில் மனிதனாக முடியாதவர்களையும் வேறு வழியில் ஜீவிக்க முடியாதவர்களையும் கூலி கொடுத்து சுவாதீனம் பண்ணிக் கொண்டு அவர்களை உசுப்படுத்தி பார்ப்பனரல்லாதாரையும் அவர்களது இயக்கத்தையும் வையும்படி சொல்லி விட்டதினாலும் ஏதோ சில கஞ்சிக்கு வழியில்லாமல் வயிற்றுக்கொடுமையால் அவதிப்படும் ஆள்கள் ஊரூராய்த் திரிந்து பலரை வைதே வயிறு வளர்க்கவேண்டி ஏற்பட்டுவிட்டதினாலேயும் அவர்களைப் பிடித்துப் பாமர ஜனங்களிடம் பொய்யும் புளுகும் சொல்லி காசு பணம் செலவு செய்து ஏமாற்றி ஒன்று இரண்டு தடவை ஓட்டு வாங்கிவிட்டதினாலேயும் மூன்றரை கோடி மக்களுடைய உணர்ச்சியை அடக்கி விட்டதாகுமா? அல்லது ஜெயித்து விட்டதாகுமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

“இந்து முஸ்லீம் சமாதானம்” என்பது என்னவென்றால் முஸ்லீம்களுக்கென்று பிரித்துவிட்டிருக்கும் வகுப்புவாரித் தொகுதியை ஒழித்து கலப்புத் தொகுதியை ஏற்படுத்திக் கொள்ள மகமதியர்கள் சம்மதித்து விட்டார்களாம். இந்த தந்திரம் செய்த தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் உத்தேசமென்னவென்றால் நமது மாகாணத்தில் வகுப்புவாரி உரிமை அதாவது பார்ப்பனர்களுக்கும் நமக்கும் தனித்தொகுதி வேண்டுமென்று நாம் கேட்பதை ஒழிப்பதற்காக “மகமதியர் கூட வேண்டாம் என்கிறார்கள்” என்று சொல்லவே இந்த தந்திரம் செய்கிறார்கள்.

இதை ஆங்கிலம் படித்து உத்தியோகத்திற்கு நத்திக் கொண்டிருக்கும் ஏதோ சிலர் தவிர மற்ற மகம்மதியர் கண்டிப்பாய் ஒத்துக்கொள்ளப் போவதில்லை என்பது நமக்கு நன்றாய் தெரியும். ஏனெனில் இதற்கு முன் ஒரு தடவை இவ்வகுப்புவாரி உரிமையை ஒழிக்கும் சூழ்ச்சியாக “தேசீய ஒப்பந்தம்” தயாரிக்கும்படி டாக்டர் அன்சாரி, லாலாஜி ஆகியவர்களை ஒரு கமிட்டியாகப் போட்டதில் அவர்கள் முனிசிபாலிடி, தாலூகா போர்டுக்கும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று ரிப்போர்ட் செய்தார்கள். தனித் தொகுதியை எடுத்து கலப்புத் தொகுதி ஏற்படுத்தலாம் என்று இருவர் சொன்ன அபிப்பிராயத்தை மற்ற மகமதியர்கள் அப்போதே நிராகரித்து விட்டார்கள். இவ்வகுப்புவாரி உரிமை மகமதியர்களுக்கு கிடைத்த பிறகுதான் அவர்கள் மனிதர்களாக பார்ப்பனர்களால் மதிக்கப்படுகிறார்கள். அதற்கு முன் மகமதியரைத் தொட்டால் தொட்ட விரலை வெட்டிவிட வேண்டும் என்றும், மிலேச்சர் என்றும் எழுதி வைத்துக் கொண்டிருந்தவர்கள் என்பதற்கு இன்னமும் ஆதாரமிருக்கிறது. ஆதலால் சுயமரியாதை உள்ள எந்த மகமதியரும் இந்தப் பார்ப்பனர்களின் இப்போதைய சில நல்ல வார்த்தைக்கும் இரண்டொருவருக்குப் பணம் சிலவு செய்து முனிசிபாலிடி, சட்டசபை முதலியதுகளுக்கு ஸ்தானம் சம்பாதித்துக் கொடுத்திருப்பதையும் நிரந்தர நன்மையாய் நினைத்துக் கொண்டு ஏமாந்து விடமாட்டார்கள் என்றே உறுதி கூறுவோம்.

 சமீபத்தில் கூட்டப்போகும் திருச்சி மஜிலிஸ் உலமா கான்பரன்சு இந்த விஷயத்திற்காக கூட்டப்படுகிறதென்றே கேள்விப்படுகிறோம். தவிரவும், சென்னை ஐகோர்ட் ஜட்ஜி பதவிக்கு ஒரு மகமதிய கனவானையும் நியமிக்க வேண்டுமென்று தமிழ்நாட்டு பிரபல மகம்மதிய கனவான்கள் கூடி ஒரு தீர்மானம் செய்ததை வாங்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு “பிரமாவின் முகத்தில் பிறந்த பிராமணோத்தமர்களாகவே” போட்டிருப்பதையும் மகமதிய கனவான்கள் பார்க்காமலில்லை. ஆதலால் மகமதியர்களுக்கு அளித்திருக்கும் வகுப்புவாரி உரிமையை அவ்வளவு சீக்கிரத்தில் பார்ப்பனர்கள் அழித்துவிடும்படி விட்டுவிட நமது முஸ்லீம் சகோதரர்கள் அவ்வளவு ஏமாளிகள் என்று நாம் நினைக்கவில்லை.

சுயராஜ்ஜியத் திட்டம்

சுயராஜ்ஜியத்திற்குத் திட்டம் போட மறுபடியும் ஒரு கமிட்டி நியமித்திருக்கிறார்களாம். இது எல்லாவற்றையும் விட பெரிய பித்தலாட்டம் என்றே சொல்லுவோம். இதற்கு முன் ஒரு தடவை ஸ்ரீமான் நேரு முதலியவர்கள் மிதவாதிகளுடனும் சுயேச்சைக் கட்சிக்காரருடனும் ராஜி செய்து கொண்டு குறைந்த அளவு சுயராஜ்யத் திட்டம் (நேஷனல் டிமாண்டு) என்னும் பேரால் ஒரு திட்டம் தயாரித்து 1924 பிப்ரவரி 18 இந்தியா சட்டசபையில் வைத்து நிறைவேற்றியது இப்போது என்ன ஆயிற்று என்று கேட்கிறோம்? “சர்க்காரார் தங்கள் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளாவிட்டால் அல்லது மாற்றிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாவிட்டால் சட்ட மறுப்பு, முட்டுக் கட்டை, வெளியேற்றம் முதலிய காரியங்கள் செய்வது” என்ற வீரமொழிகள் என்னவாயிற்று? சர்க்கார் இத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளாததாலும் யாதொரு பதிலும் தெரிவிக்காமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டதாலும் மனமாற்றத்தைக் காட்டாததாலும் வெளியே போகிறோம் என்று சொல்லி சட்டசபையை விட்டு ஒரு தரம் வெளியேறி மறுபடியும் கொஞ்சமாவது மானயீனமின்றி உள்ளே போய் இதுகாலவரையில் இருந்தும் விட்டு இப்போது மறுபடியும் ஒரு புதுத்திட்டம் தயாரிக்கத் திட்டம் என்றால் இது யாரை ஏமாற்றுவதற்கு என்றுதான் கேட்கிறோம்?

 முன் திட்டமே குறைந்த அளவுத் திட்டமாய் இருந்தும் அது குப்பைத் தொட்டியில் இருக்கும்போது இத்திட்டம் இனி அதைவிடக் குறைவாய்த்தானே இருக்க வேண்டி வரும். ஆகவே சுயராஜ்யக் கட்சி ஏற்பட்டது முதல் ஒத்துழையாமையை ஒழித்ததோடல்லாமல் மகாத்மாவையும் மூலையில் உட்கார வைத்ததோடல்லாமல் சர்க்காரோடு திருட்டுத்தனமாய் ஒத்துழைப்பதோடல்லாமல் இனியும் திட்டம் திட்டம் என்று சொல்லிக் கொண்டு தேசத்தைப் பாழாக்குகிறார்கள் என்பதைப் பற்றி யாருக்காவது கவலை இருக்கிறதா? இவர்களுடைய திட்டம் எல்லாம் இனியும் கொஞ்சம் உத்தியோகமும் அதிகாரமும் அல்லாமல் வேறு என்ன? இம்மாதிரி மானம், வெட்கம், நாணயம், யோக்கியம் ஒன்றுமில்லாத கடைந்தெடுத்த அயோக்கியர்களாக சேர்ந்து தேசத்தைக் காட்டிக்கொடுத்து பாழாக்கி அதிகாரம் பெற்று பணம் சம்பாதித்துத் தான் வாழ ஆதாரமாய் ஒரு கட்சியையும், சபையையும் ஏற்படுத்திக்கொண்டு அதை தேசத்தின் பிரதிநிதித்துவ சபை என்றும் அதில் உள்ளவர்கள் தேசாபிமானிகள் தேசப் பிரதிநிதிகள் என்றும் சொல்வதானால், இதுகளை உடைய நாடு சுயமரியாதை உடைய நாடு என்றாவது, சுதந்திரம் பெற யோக்கியதை உடைய நாடு என்றாவது, சுயபுத்தி உள்ள நாடு என்றாவது எந்த முட்டாளாவது சொல்லக் கூடுமா? சொல்லக் கூடுமா? சொல்லக் கூடுமா? என்று மும்முறை கேட்கிறோம்.

 இம்மாதிரி சபைக்கு ஆள் பிடிக்க இனியும் நமது நாட்டில் வயிற்றுச் சோற்றுக் கங்காணிகள் ஏற்பட்டுக் காங்கிரஸ் காங்கிரஸ் என்று சொல்லிக் கொண்டே வந்தால் மற்றவர்கள் பேசாமல் பார்த்துக் கொண்டு தேசத்தையும் மக்களையும் பலி கொடுப்பதா என்று யோசித்துப் பாருங்கள். சென்ற தேர்தலில் காங்கிரஸ் புரட்டுக்குக் கொஞ்சம் வெற்றிகள் ஏற்பட்டு விட்டதால் “தினமும் நெய்ச் சோற்றுப் பிச்சை கிடைக்கும்” என்பது போல் உத்தியோகத்திலும், சட்டசபையிலும், தாலூகா, ஜில்லாபோர்டு, முனிசிபாலிட்டியிலும் ஆசை உள்ள கூட்டங்களுக்கு இப்போது காங்கிரசிடம் கொஞ்சம் இழுப்பு அதிகமாய் இருந்துகொண்டு வருகிறது. ஜஸ்டிஸ் கட்சிக்கும் இதில் கொஞ்சம் மயக்கம் இருக்கிறது போல் தெரிகிறது. இந்தக் காங்கிரசும் இந்தக் காங்கிரசில் உள்ள சிகாமணிகளும் இந்த காங்கிரசால் ஏற்பட்ட உத்தியோகங்களும் பதவிகளுமேதான் நமது நாட்டின் ஒற்றுமையைக் குலைத்ததற்கும் தரித்திரத்தை உண்டாக்கியதற்கும் ஏழைக் குடியானவர்களுக்கு வரியை அதிகமாக்கியதற்கும் மக்களுக்கு தேசாபிமானம், பரோபகாரம் முதலிய குணங்கள் போய் தேசத்துரோகம், சுயநலம் முதலிய கெட்ட குணங்கள் உண்டாகியதற்கும் அடிப்படையான ஜவாப்புதாரித் தத்துவங்கள் என்பதை தைரியமாய் சொல்லுகிறோம். பல தடவை சொல்லியும் இருக்கிறோம். அதுகளுக்கு இதுவரை எந்த “தேசபக்தராவது,” “தேசத் தொண்டராவது” “தேசியப் பத்திரிகையாவது,” “சுயராஜ்ஜிய வீரராவது” பதில் சொல்லவே இல்லை. கங்காணி வேலையை விட்டுவிடவும் இல்லை. ஆனாலும் ஜனங்கள் முட்டாள்களாயிருக்கும் வரை நாட்டில் இதுகளுக்கு யோக்கியதை இருந்து கொண்டுதானிருக்கும். புத்திவரும் நாள் என்னாளோ?

(குடி அரசு - தலையங்கம் - 22.05.1927)

Pin It