ஒரு காலத்தில் ஓட்டல் தொழில் என்பது ’பிராமணர்களின்’ வசமே இருந்தது. பிராமணாள் கஃபே என்று பெயர் சூட்டினார்கள், ஆரிய பவன்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறது, இதற்கு என்ன காரணம்?

சனாதன வாழ்க்கை என்று பெருமை பேசுகிற இந்த வாழ்க்கைமுறையில் ஒரு ஜாதிக்காரர் மற்றொரு ஜாதிக்காரர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள், இதுதான் கடந்த காலத்தில் இருந்த நடைமுறை. ஆனால் பார்ப்பனர்கள் சமைத்தால் அவர்களிடம் மட்டும் சாப்பிடுவார்கள், அதன் காரணமாகத்தான் திருமணங்களில் சமையல்காரர்களாக பார்ப்பனர்களை மட்டுமே அமர்த்தினார்கள். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட பார்ப்பனர்கள் ஓட்டல் தொழிலிலும் இறங்கினார்கள்.

ஓட்டல் தொழில் நடத்துவது என்பது பிராமண தர்மத்திற்கு எதிரானது என்று மனுதர்மம் கூறுகிறது. மனுதர்மம் அத்தியாயம் 3; சுலோகம் 249, என்ன கூறுகிறது என்று சொன்னால் “எவன் சிரார்த்தம் செய்து அன்னம் முதலியவற்றை சூத்திரனுக்கு போடுகிறானோ அந்த மூடன் கால சூத்திரம் எனும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான்” என்று அந்த சுலோகம் சொல்கிறது. ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் வசதிக்காக எதையும் மாற்றிக் கொள்வார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பெரியார் நடத்திய பார்ப்பனரல்லாத இயக்கத்தால் பார்ப்பனரல்லாதாரும் ஓட்டல் துறையில் நுழைந்து கொடிகட்டிப் பறந்தனர்.

இதற்கு உதாரணம் சரவணபவன் ஓட்டல் நடத்திய ராஜகோபாலன் ஆவார். நாடார் என்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர், பார்ப்பனர்களிடம் இருந்து ஓட்டல் ஆதிக்க உரிமையை கைப்பற்றி தமிழ்நாடெங்கும் தனது கிளைகளைத் தொடங்கி வெற்றிநடை போட்டார்.

இன்று A2B என்ற ஓட்டல் தமிழ்நாடெங்கும் வெற்றிநடை போடுகிறது. இவர்களுடைய சிறப்பான உணவு, உபசரிப்பு ஆகியவற்றை மக்கள் மிகவும் விரும்புகின்றனர். தமிழ்நாடு முழுவதும் மிகச்சிறப்பாக நடைபெற்றுவருகிற அந்த ஓட்டல் பார்ப்பனரல்லாதாருக்கு உரிமையுடையது.

A2B ஓட்டல் உரிமையாளர் கடந்த வாரம் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் :- தன்னுடைய ஒரு ஓட்டலில் கடவுள் படங்களுடன் பெரியார் படங்களையும் வைத்திருப்பதை சுட்டிக்காட்டினார். ஏன் பெரியார் படம் வைத்திருக்கிறேன் என்பதை பற்றி அவர் கூறுகையில் நாங்களெல்லாம் ஓட்டல் நடத்துவதற்கு வழிவகை செய்தவர் தந்தை பெரியார் என்று அவர் துணிச்சலோடு கூறியிருக்கிறார். உடனே சங்பரிவார கும்பலுக்கு கோபம் வந்துவிட்டது. பிராமணர்களை புண்படுத்துகிறார்கள், A2B ஓட்டலை புறக்கணிப்போம் என்று முகநூல் மற்றும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து இயக்கம் நடத்துகிறார்கள்.

2023லும் கூட இப்படி ஒரு சிந்தனை மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டு மதவாதம் ஆழமாக புதையுண்டு கிடப்பதை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எனவே ஓட்டல் துறையில் சாஸ்திரத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் ஈடுபட்டாலும் அது குற்றமில்லை, ஆனால் பார்ப்பனரல்லாதார் கொடிகட்டிப் பறந்ததற்கு காரணம் பெரியார் என்று கூறினால் அவர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது.

விடுதலை இராசேந்திரன்

Pin It