விடுதலைக்கு முந்தைய சென்னை மாகாணத்தின் பிரச்சனைகளையும், விடுதலைக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த பிறகு தமிழ்நாட்டின் சமூக, அரசியல், பண்பாட்டு, பொருளியல் பிரச்சனைகளையும் கறாராகப் பேசிய பெரியார், பிரச்சனைகளுக்கான தீர்வையும் சுட்டிக் காட்டினார்.
ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சென்னை மாகாணம் இந்தியாவிலிருந்து பிரிந்துவிடுவதுதான் என்றார். மொழிவாரி மாநிலங்கள அமைந்த பிறகு, தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திலிருந்து பிரிந்துவிடுவது ஒன்றே தீர்வு என்று வலியுறுத்தினார்.
திராவிடர் கழகத்தின் இலக்கைத் ‘தமிழகத்தின் விடுதலை’ என்றும், சுயமரியாதை இயக்கத்தின் இலக்கை ‘மூடநம்பிக்கைகள் ஒழிப்பு’ என்றும் வரையறுத்தார். தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டால் திராவிடர் கழகம் கலைக்கப்படும் என்றார்.
இந்திய தேசியத்தையும், இந்தியா ஒரு நாடு என்பதையும், இந்தியர் ஓர் இனம் என்பதையும், கட்டோடு மறுத்தவர் பெரியார். இதுதான் பெரியார் அரசியலின் சாரம்.
1928ஆம் ஆண்டு முதல் இந்திய தேசியத்தை ஏற்க மறுத்து, இந்தியத்தின்மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்ட பெரியார், சென்னை மாகாணத்தைத் ‘திராவிட நாடு’ என்று அழைத்து, திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கையை முன்வைத்தார்.
01.11.1956 அன்று மொழிவழி மாநிலங்கள் அமைந்த உடனேயே, 05.11.1956 அன்று திராவிடர் கழகப் பொதுக் குழுவைக் கூட்டி, “இனி தமிழ்நாடு விடுதலையே இலக்கு” என்று வரையறுத்தார்.
இந்திய தேசியச் சகதியில் மாட்டி அழுந்திக் கொண் டிருக்கும் தமிழர்களை மீட்க படாத பாடுபட்டார் பெரியார் :
“பாழும் தேசியத்தால் தமிழர்களாகிய நாம் 50 ஆண்டுகளைப் பழாக்கிவிட்டோம். உதைக்கும் காலுக்கு முத்தம் இட்டுப் பூசை செய்கிறோம், மலத்தை முகருகிறோம், மானம் இழந்தோம், மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம்”. (‘குடிஅரசு’ - தலையங்கம், 23.10.1938)
“... தமிழ்நாடும் பிற நாடுகளுக்கு, அதாவது ஆங்கிலேய நாடுகளுக்கு அடிமையாக இருப்பதுபோல், வட நாடுகளுக்கு அடிமையாய் இருப்பதிலிருந்து விடுபட வேண்டுமானால், தமிழ்நாட்டுக்குச் சுயநிர்ணய உரிமை இருத்தல் வேண்டும்”. (‘குடிஅரசு’, 11.02.1940)
“தமிழனின் ஈன நிலைக்குக் காரணம் இந்து மதத்தைத் தனது மதம் என்று கருதியதும், இந்தியா பூராவையும் தன் நாடு என்று கருதியதும், இவ்விரண்டுக்கும் உழைக்கும் தொண்டே தேசத்தொண்டு என்று கருதியும் வருவதுமே ஆகும். இந்தியத் தேச அபிமானம் என்பது தமிழன் பல நாட்டாரின் நலனுக்கு உழைத்து, பல நாட்டாருக்கு அடிமையாய் இருப்பது என்பதாகும்.”
“உலக நாடுகளை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பெரிது. உலகத்தில் 85 நாடுகள் உள்ளன. இவற்றில் 74 நாடுகளுக்கு மேல் பரப்பிலும் சரி, ஜனத்தொகையிலும் சரி மேலானவர்களாகவே நாம் இருக்கிறோம். மற்ற 74 நாட்டுக்காரர்கள் பிழைக்கும்போது, நம்மைத்தானா காக்கை தூக்கிக் கொண்டு போய்விடும்?”
“நான் பிறந்த நாடு எனக்கு வேண்டும் என்று நான் கேட்கக் கூடாதா? எதைச் செய்தாலும் சகித்துக்கொள்வேன்; ஆனால், நாடு பிரிவதை மட்டும் சகிக்கமாட்டேன் என்பது எவ்வளவு திமிர் ?...”
“நம் நாடு தனியாகப் பிரிந்தே ஆகவேண்டும். ஒரு சுண்டைக்காய் ‘எகிப்து’ உலகத்தையே கலக்கிவிட்டதே! நம்மால் முடியாதா? நான் சொல்லுகிறேன். பிரிந்தால் - நாம் சிறந்த வல்லரசாக வாழ்வோம்”. (‘விடுதலை’, 01.12.1957)
தம் இறுதிக்காலத்திலும்கூட, பெரியாரின் 95ஆவது பிறந்தநாள் மலரில் (17.09.1973) பெரியார் இவ்வாறு பதிவு செய்தார் : “நாம் உடனடியாக விடுதலை பெற்று, இந்தியக் கூட்டாட்சியிலிருந்து விலகி, சுதந்தரத் தமிழ்நாட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டாக வேண்டியவர்களாக இருக்கிறோம். சுதந்திரத் தமிழ்நாடு எனது இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச் சொல் லாகக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.”
பெரியார் வாழ்ந்த காலத்தை விடவும் இப்போது தமிழகத்தின் உரிமைகள் மீதான, தமிழ்மொழியின் மீதான, தமிழ்ப் பண்பாட்டின் மீதான, தமிழர் வாழ்வாதாரங்கள் மீதான, இந்துத்துவ, பார்ப்பன - பனியா இந்தி தேசியத் தாக்குதல் பலமடங்கு அதிகரித்துள்ளது.
பெரியாரியவாதிகள் பெரியார் கூறிய தீர்வைத் தமிழகத் திற்கு அளிக்க முன்வரவேண்டும். பெரியார் கூறிய தீர்வு உண்மையில் ஒரு தமிழ்த்தேசியவாதி முன்மொழிய வேண்டியத் தீர்வு ஆகும். திராவிடம் பேசிய பெரியார் எட்டு அடி பாய்ந்தால், தமிழ்த் தேசியம் பேசுவோர் பதினாறு அடி பாய்வார்கள்தானே! பாயவேண்டும்தானே!
தமிழ்த் தேசிய அரசியல் என்பது தமிழ்நாட்டின் விடுதலை அரசியல்தான். அதையன்றி இன்னொரு பொருள் அச் சொல் லுக்குக் கிடையாது. தமிழ்த்தேசியம் என்பது இந்தியத்துக்குள் அடங்கிய இணக்க அரசியலான தேர்தல் அரசியலில் ஈடு படாது. அப்படி ஈடுபட்டால் அது தமிழ்த்தேசியம் அல்ல என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.
திராவிடம் பேசிய பெரியாரே தமிழ்நாட்டின் விடுதலை கோரி இயங்கியிருக்கும் நிலையில், தமிழ்த்தேசியம் பேசுவோர் தமிழ்நாட்டின் விடுதலைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிக்க வேண்டும். சுதந்தரத் தமிழ்நாட்டை வென்றெடுக்க முனைய வேண்டும். தமிழ்த் தேசியர்கள் தமிழ்த்தேச விடுதலைப் போராட்டத்தை வீரியத் துடன் முன்னெடுப்பதைத்தான் தமிழ்ச் சமூகம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்