கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kolathur mani‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (4)

• இரட்டை வாக்குரிமையை காந்தி மிரட்டலுக்காக விட்டுக் கொடுத்து விடாதீர் என்று பாரீஸ் பயணத்திலிருந்து அம்பேத்கருக்கு பெரியார் தந்தி கொடுத்தார்.

• ரஷ்யாவிலும் இங்கிலாந்திலும் புதிதாக நான் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை என்றார், பெரியார்.

• இங்கிலாந்தில் பேசிய பிரிட்டிஷ் எதிர்கட்சித் தலைவர் சர்ச்சில், பார்ப்பனர் பிடியில் இந்தியாவை காந்தி ஒப்படைப்பது ஆபத்து என எச்சரித்தார்.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

இங்கிலாந்தில் தொழில் கட்சி மாநாட்டில் பங்கேற்று அக்கட்சியையே விமர்சித்துப் பேசிய பெரியார், அங்கிருந்து பாரீஸ் போகிறார், பிரான்சு போனபோது தான், இங்கே இரட்டை வாக்குரிமை கேட்டு போராடிய அம்பேத்கருக்கு எதிராக காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார். அந்த செய்தி பாரீஸிலிருந்த பெரியாருக்குப் போகிறது, அங்கிருந்து தந்தி கொடுக்கிறார். இந்த நாட்டிலிருக்கிற ஏழுகோடி தாழ்த்தப்பட்ட மக்களைவிட, காந்தியினுடைய உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள், பின் வாங்காதீர், என்று தந்தி கொடுக்கிறார்.

செத்துப் போனால் செத்துப் போய்விட்டுப் போகிறார். ஏழு கோடி மக்களுக்கு நன்மை வருகிறது. ஆறு கோடி என்று சொல்கிறார். அதை விட்டுவிட்டு காந்தி உயிர் ஒன்றும் பெரியது இல்லை, இவர்களை விட; மக்கள் உரிமை தான் பெரிது, நீங்கள் உறுதியாக நில்லுங்கள், விட்டுக் கொடுக்காதீர், காந்தி பின்வாங்கினாலும் கை விட்டு விடாதீர்கள், என்று பாரீஸிலிருந்து தந்தி கொடுக்கிறார்.

அதற்கு பின்னால் அவர் இலங்கை வழியாக திரும்பி வருகிறார்., எல்லா கம்யூனிச நாடுகளிலும் அங்கிருக்கிற பொதுவுடைமை கட்சிகளை சந்தித்த பின்னால், பெரியாருடைய கருத்து என்னவாக இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

திரும்பி வருகிற வழியில், இலங்கையிலிருக்கிற சில அமைப்புகள் பெரியாருக்கு வரவேற்பு கொடுக் கின்றன. அங்கே இருக்கிற பொதுவுடமை சிங்கள இளைஞர்களெல்லாம் சேர்ந்து வரவேற்பு கொடுக்கிறார்கள். சிங்களர்கள் பொதுவுடமை கட்சியில் இருந்தனர். கொழும்பில் முதலில் வரவேற்பு. அதற்கப்புறம் தமிழ்ப் பகுதிகளுக்கெல்லாம் பெரியார் போகிறார். ஒரு வார காலம் அங்கிருந்து விட்டு தான், இந்தியா திரும்புகிறார்.

அப்பொழுது அங்கு பேசிய உரையில்தான் பெரியார் ஒன்றைச் சொல்கிறார். இங்கிலாந்தைப் பார்த்த பின்னால், ரஷியாவை பார்த்தப் பின்னால் அவருக்கு என்ன கருத்து வந்திருக்கிறது என்பதைச் சொல்லுகிறார். நமது நாடுகளில் ஏழை - பணக்காரன், உயர்ந்தவன் - தாழ்ந்தவன், முதலாளி - தொழிலாளி, அரசன் - பிரஜைகள் இப்படியெல்லாம் வித்தியாசம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைகள் எத்தனை காலமாக இருந்து வருகிறது.

இன்றா நேற்றா, இது அன்னிய அரசு ஆட்சியாலா, அல்லது சுய ஆட்சி இல்லாததாலா, தர்மதேவதை ஆட்சி, அவதார ஆட்சி, தெய்வாம்ச ஆட்சி இல்லாததாலா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே. அதற்கு அடிப்படையாகவும் அரணாகவும் இருந்து வரும் காரணங்கள் எவை என்பதை நீங்கள் சற்று நடுநிலையிலிருந்து சிந்தித்துப் பார்த்தீர்களேயானால், இக்கொடுமைகளுக்கு முக்கிய காரணம் கடவுள், மதம், ஜாதீயம், தேசியம் (இந்திய தேசியத்தைச் சொல்கிறார்) என்பவையாகிய மயக்க உணர்வை மக்களுக்கு ஏற்றி, அதன் பயனாக பெரும் பான்மையான மனித சமூகத்தை மடமையாக்கி ஏய்த்து அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவர்கள் சுயநலமே பிரதானமாகக் கருதிக்கொண்டு சோம்பேறிகளாக இருந்துக்கொண்டு நம்மை ஆட்டி வைப்பது ஒரு காரணமே தவிர, வேறு காரணம் ஒன்றுமே கிடையாது. மீண்டும் மீண்டும் அவர் தன் கருத்தில் இருந்து மாறவில்லை. ஜாதீயமும் இங்கிருக்கிற மத கட்டமைப்பும், மக்களை போராட்ட உணர்விற்கு கொண்டு செல்லாமல் தடுக்கிற கருவிகளாக, இங்கிருக்கிற முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள்.

வேறு நாட்டில் வேறு மாதிரியாக இருக்கலாம், ஆனால் இங்கு அப்படித்தான் இருந்திருக்கிறது. பெரிதும் மேல் நிலையில் அவர்கள் இருந்து கொண்டும், சரீரத்தில் சிறிதும் பாடுபடாமல் சோம்பேறி வாழ்க்கையில் இருந்து கொண்டும், அன்னியன் உழைப்பில் சுகம் அனுபவிக்கும் ஒரு சிறு கூட்டத்தாரும், பார்ப்பனர்களைச் சொல்லுகிறார், இப்படித் தான் அவையெல்லாமே காரணம், மேற்கண்ட உயர் நிலையை நிரந்தரமாக காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற கருத்தின் மீது செய்துக் கொண்டு இருக்கும் ஏற்பாடுகளான, கடவுள் மதம் தேசியம் தேசம் ஆகிவற்றின் சாதனங்களும், அவற்றிற்குள்ள கவசமும், காப்பும், அவை சம்பந்தமான பிரச்சாரங்களுமே ஆகும் என்று பெரியார் பேசினார்.

போய் வந்தாரே தவிர, தனியாகப் பொதுவுடமை என்பது வந்து விடாது, இவற்றின் மீது தாக்குதல் நடத்தி குறைந்தபட்சம் தளரச் செய்யாமல், தகர்ப்பது கூட முடியுதோ இல்லையோ, இவற்றை தளரவாவது செய்யாமல் நாம் அதை சாதிக்க முடியாது என்ற கருத்தைத் தான் பத்து மாத பயணமாக எல்லா பொதுவுடமை நாடுகளிலும் பார்த்துவந்த பின்னால், அந்த நாடுகள் வேறு, நம்முடையது வேறு. நான் சொன்னேன், 1931-ல் அவர் பேச்சு மொழி பெயர்த்துப் போட்ட அதே கருத்து தான், 1933-ம் ஆண்டிலும் அவருக்கு இருந்திருக்கிறது.

சரி. ஒரு முறை ஈரோட்டில், உண்மை நாடுவோர் சங்கம் சார்பாக பெரியாரை அழைத்து பேச வைக்கிறார்கள், பயணத்தைப் பற்றி. நான் ரஷியாவிலும் இங்கிலாந்திலும் எல்லாம் போய் புதிதாக ஒன்றும் தெரிந்துக் கொள்ளவில்லை, நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது சரியானது என்பதை மட்டும் தான் அங்கே போய் தெரிந்துக் கொண்டேன், புதிதாக ஒன்றும் தெரிந்துக் கொள்ளவில்லை, என்று அவர் பேசுகிறார்.

1931ஆம் ஆண்டு அவர் ரஷியா போவதற்கு முன்னாலேயே கோட்டாறு சுயமரியாதை சங்கத்தில் அவர் பேசுகிறார். இன்றைய தினம் பணக்கார னுடைய பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு பங்கு போட்டு கொடுத்துவிட்டால், இந்த ஏழை நாளைக்கு என்ன செய்வான்? கயா சிரார்த்தமும் மதுரை வீரன் பூஜையும் காவடி அபிஷேகமும் செய்து வீட்டில் உட்கார்ந்துக் கொண்டே பணத்தைத் தொலைத்து விடுவான் என்பதுவும், பிறகு பழையபடி புரோகிதனும் தந்திரக்காரனும் ஏமாற்றுக்காரனும் தான் மறுபடியும் பணக்காரன் ஆகிவிடுவான் என்பதுவும் எனக்கு தெரியும். அது தான், அவர் அய்ரோப்பிய நாடுகளுக்கு போவதற்கு முன்னால் சொன்னது.

அதற்கு பின்னால் 1944ஆம் ஆண்டு ஒரு செய்தியையும் ஒரு கட்டுரையும் தலையங்கத்தில் எழுதுகிறார். பொதுவுடமை இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும். பொதுவுடமையா? பொது உரிமையா? என்கிற கட்டுரை எழுதப்படுகிறது. அதில் தான் பல்வேறு செய்திகள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. பெரியார் என்ன சொல்கிறார் என்றால், மேல் நாட்டில் ஜாதி என்பது ஒன்று இல்லை. அங்கே அந்த பிரச்சனை கிடையாது.

ஜாதி இல்லாததனால் வர்க்கம் மட்டுமே அங்கு இருக்கிறது. அது பிரச்சனை இல்லை. ஆனால் இங்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பாருங்கள். என்ன என்ன இருக்கிறது என்பதை பாருங்கள். இந்திய பார்ப்பனர்கள் இந்நாட்டு பொதுவுடமைகாரர்களும் சேர்ந்திருக்கிறார்களே, அதன் அர்த்தம் என்ன என்கிற ஒரு கேள்வியைக் கேட்டார். இதற்கு இந்தியா மந்திரி சிரித்தாராம், என்று சொல்லி, இது இங்கிலாந்து பார்லிமெண்ட்டில் நடந்ததைச் சொல்கிறார். இந்த நேரத்தில் மற்றொரு கருத்தையும் கூறவேண்டும்.

1931இல் காந்தி - இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர், நிறைய அரசியல் மாற்றம் நடக்கிறது, அப்பொழுது தான் 2ஆவது வட்ட மேஜை மாநாடு நடக்கப் போகிறது, அப்பொழுது எதிர்க்கட்சியில் இருந்த வின்செண்ட் சர்ச்சில் ஒரு கூட்டத்தில் இங்கிலாந்தில் பேசுகிறார்.

ஆல்பர்ட் ஹால் என்ற புகழ்பெற்ற ஹாலில் நடந்தது. Our Duty in India என்பது தான் அவருடைய பேச்சின் தலைப்பு. ஒரு வேளை இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து குடியேற்ற நாடு என்ற தகுதியை கொடுத்து விடுவார்கள். (அப்பொழுது கனடாவிற்கு அந்த அந்தஸ்தை கொடுப்பதாக முடிவு செய்யப் பட்டிருந்தது. கென்யா போன்ற நாடுகளுக்கு கூட).

இந்தியாவிற்கும் கொடுக்கலாம் என்கிற பொழுது, அப்பொழுது அதை சர்ச்சில் எதிர்க்கிறார். அது தான் அந்த பேச்சினுடைய சாரம். அவர் என்ன சொல்கிறார் என்றால், காந்தியைப் பற்றி நீங்கள் (பிரிட்டிஷ் அரசு) சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை. காந்தி எதற்கு உழைக்கிறார் என்றால், பிரிட்டிஷ் என்கிற சொல்லில், இந்த B-க்கு பதிலாக, இன்னொரு B-யை உட்கார வைக்கப் பார்க்கிறார்.

British என்கிற இடத்தில் Brahmin-ஐ உட்கார வைப்பது தான் அவருடை விடுதலைப் போராட்டம் என்று நினத்துக் கொண்டிருக்கிறாரே தவிர, to substitute the Brahmins in the place of British என்று சொல்கிறார். நீங்கள் குடியேற்ற நாட்டுத் தகுதியை இந்தியாவுக்குக் கொடுத்து விட்டால், சுய ஆட்சியைக் கொடுத்துவிட்டால், 60 மில்லியனாக இருக்கிற மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற பெயரால், இருக்கிறார்கள்.

அவர்கள் அழிக்கப்பட்டு போய்விடுவர், ஒரு பெரிய மக்கள் கூட்டமே அழிவை சந்திக்க நேரிடும், அவர்கள் கையில் ஆட்சியை நீங்கள் இப்பொழுது கொடுக்காமல், நிதானமாக கொடுக்கலாம். கனடாவிற்கு கொடுத்துவிடு அதைப் பற்றிய பிரச்சனை இல்லை, கென்யாவிற்கு கொடு, ஆனால் இந்தியாவிற்கு கொடுக்காதே என்பது தான் அந்த முழுப் பேச்சின் சாராம்சம்.

திரும்பத் திரும்ப பார்ப்பன ஆதிக்கம் என்பதை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள் என்கிறார். அந்தப் பேச்சில் தான் சொல்கிறார். காந்தியை அரை நிர்வாணப் பக்கிரி, இதில் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார். காந்தியை நம்பி கொடுத்து விடாதீர்கள். அங்கிருக்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆபத்தாகப் போய்விடும். இழந்து விட்ட ஆதிக்கத்தை பார்ப்பனர்கள் தங்கள் கையில் எடுத்துக் கொள்வார்கள். அது தான் சர்ச்சிலுடைய கருத்தாக இருக்கிறது.

அந்த நேரத்தில் பெரியார் பேசிய பேச்சு, ஒரு ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு மொழியில், 1932இல் பேசுகிறார். ரஷியாவில் எப்படி ரஷியப் புரட்சி வந்தது என்றால், டால்ட்டாயிசம் என்கிற பிடுங்கலிசம் ஒன்று இருந்தது, நம்மூர் காந்தி யிசத்தைப் போல, அது அழிந்த பின்னால் தான் அங்கே புரட்சி வந்தது. இங்கு எப்போது காந்தியிசம் ஒழியுமோ அப்பொழுது தான் இங்கே புரட்சியும் வரும் என்று இங்கே பெரியார் பேசுகிறார். இதையெல்லாம் சேர்த்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

பெரியார் கருத்தையே சொல்வதை விட, இதை பொதுவுடமை சிந்தனையாளர்கள் என்னவாகப் பார்த்தார்கள்? மார்க்ஸ் என்ன பார்த்தார்? இப்பொழுது இந்தியாவில் இருக்கிற கம்யூனிஸ்ட்களுக்கு இந்தப் புரிதல் ஏன் இல்லை என்பதற்கு, அதற்கு முன்னாலே பல செய்திகளை உங்களிடம் சொல்லிவிட வேண்டும். இந்த கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த இந்திய நாட்டுத் தலைவர்களுக்கு ஜாதீய சிக்கலைப் பற்றித் தெரியாமல் இருக்கவில்லை.

எம்.என்.ராய்-யைப் பற்றி நமக்குத் தெரியும். நாம் பல பேர் கேள்விப்பட்டிருப்போம், அந்தப் பெயரை. அவர் மெக்சிகோவில் போய் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுகிறார். மெக்சிகோ கட்சியுனுடைய பிரதிநிதியாகப் போய் மூன்றாம் அகிலத்தில் போய் கலந்துக் கொள்கிறார். அதற்கு பின்னால், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். கருத்து வேறுபாட்டால் பின்னர் விலகிக் கொள்கிறார். அவர் பார்ப்பன ஆதிக்கத்தைத் தான் எதிர்க்கிறார்.

அப்பொழுது தான் 1933இல் (Fascism) பாசிசம் என்கிற ஒரு புத்தகத்தை எழுதினார். பாசிசத்திற்கும் பிராமணிசத்திற்கும் உள்ள உறவை நீங்கள் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள் என்பது தான் அந்த புத்தகதில் முக்கியமாக எழுதப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிந்தனை உள்ளவர்களாக கம்யூனிஸ்ட்கள் பலர் இருந்தார்கள் என்பதற்கு, இரண்டு பேரினுடைய அறிக்கையை நான் உங்களிடம் சொல்லவேண்டும்.

 (தொடரும்)

- கொளத்தூர் மணி