மிகவும் பிற்படுத்தப்பட்ட (வன்னியர்) சமூகத்தில் பிறந்த கண்ணகியும், பட்டியல் இனப் பிரிவில் பிறந்த முருகேசனும் ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொண்டு திருமணத்தையும் சட்டபூர்வமாக பதிவு செய்து ஊரைவிட்டு வெளியேறி குடும்ப வாழ்க்கையைத் தொடங்கியப் பிறகும் ஜாதி வெறி அவர்களை வாழவிடவில்லை. 2003ஆம் ஆண்டு விருத்தாசலம் அருகே புதுக்கூரைப் பேட்டை கிராமத்தில் கண்ணகியின் உறவினர்கள் கிராமத்து சுடுகாட்டுக்கு இழுத்துப் போய் வாயிலும் மூக்கிலும் நஞ்சைத் திணித்து எரித்துப் பிணமாக்கினார்கள். இந்தக் கொடூர சம்பவத்தை 300 பேர் கொண்ட கும்பல், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது என்பது கொடுமையிலும் கொடுமை. கண்ணகியைப் பிரித்து நீங்கள் விரும்புகிறவருக்கு மணம் முடித்து விடுங்கள் என்று முருகேசன் மரணப்பிடியில் மன்றாடிய போதும் ஜாதிவெறியர்கள் காதுகளில் விழவில்லை.
18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் செப்டம்பர் 24ஆம் தேதி கடலூர் மாவட்ட நீதிபதி, ஒருவருக்கு மரண தண்டனையும் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
குற்றத்தை மறைக்க துணை நின்ற இரண்டு காவல் துறையினருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட் டுள்ளது. ‘கண்ணகி எரிப்பே தமிழ்நாட்டின் கடைசி எரிப்பாக இருக்கட்டும்’ என்று நீதிபதி எஸ். உத்தம ராஜா தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். தூக்குத் தண்டனைக்கு உள்ளாகியிருப்பவர், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியன். சொந்த சகோதரியையே ஜாதி வெறி பிணமாக்குகிறது. குற்றத்தில் தொடர்பே இல்லாத தலித் தோழர் முருகேசன் உறவினர்கள் மூவரையும் இணைத்து பொய் வழக்கு புனைந்ததை நீதிபதி சுட்டிக் காட்டி, அவர்களை விடுதலை செய்து, மூவருக்கும் தனித்தனியாக ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனையோடு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தூக்குத் தண்டனை ஒழிய வேண்டும் என்ற நமது கருத்தில் மாற்றமில்லை; அது ஆயுள் தண்டனையாக்கப்பட வேண்டும்.
அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான உயிர் வாழும் உரிமையைத் தனது பிடிக்குள் எடுத்துக் கொள்கிறது ஜாதி வெறி. ஜாதியவாதிகள் கும்பலாகக் கூடும்போது, கும்பல் கலாச்சாரத்தில் மூழ்கிய ஒவ்வொருவரும் மனிதத்தை இழந்து மிருகமாகி விடுகிறார்கள்.
ஜாதியை சமூகத்தின் கவுரவமாக மாற்றி யமைத்ததன் வழியாக பார்ப்பனியம் இப்போதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. வாழும் கிராமமும் ஜாதியத்தால் கட்டமைக்கப்படும் உறவுகளும் ஜாதிவெறிக்கு உரமூட்டுகின்றன. சமூகத்தில் புனிதமாக்கப்பட்ட மதம், சடங்கு, சாஸ்திரங்களில் ஜாதி வேர் பிடித்து நிற்கிறது. ஜாதியக் கட்டமைப்பும் அதன் மூல ஊற்றான மதம், சாஸ்திரம், ஆச்சாரம் வழியாக கட்டமைக்கப்பட்டுள்ள போலிப் புனிதங்களும் தகர்க்கப்படாதவரை இந்த வெறித் தனமான கொலைகள் அரங்கேறிக் கொண்டே இருக்கும். எனவே ஜாதிய சமூகப் பிடியிலிருந்து விலகி, சுய ஜாதி மறுப்பு அணிகள் உருவாக வேண்டும்.
தேர்தல் அரசியலில் ஜாதிப் பிரிவுகளை வாக்கு வங்கிகளாக அணி திரட்டுவதற்கு அரசியல் கட்சி களுக்கு ‘ஜாதி’ உணர்வு கட்டாயத் தேவையாகி விட்டது. பெரியார் அதனால்தான் ஜனநாயகத்தை பார்ப்பன நாயகம் - ஜாதி நாயகம் என்றார்.
பெரும்பான்மை ஜாதி மக்கள் வாழும் பகுதியில் அதே ஜாதியைச் சார்ந்தவரை வேட்பாளராக்கக் கூடாது என்று தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி பரிசீலிக்க வேண்டும். ‘தமிழ்த் திருமண மய்யங்கள்’ என்ற பெயரில் மணமகள், மணமகன்கள் குறித்து தகவல்களைத் திரட்டி வைத்திருக்கும் “திருமண சேவை மய்யங்கள்” இப்போது ஒவ்வொரு ஜாதிக்கும் தனித்தனியே மய்யங்களை உருவாக்கிக் கொண்டு அதை தொலைக் காட்சியில் விளம்பரங்கள் செய்கின்றன. இவைகள் தடை செய்யப்பட வேண்டும்.
இந்த வழக்கில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு குடும்பம் சூட்டியது கண்ணகி என்ற தமிழ் அடையாளப் பெயர். தூக்குத் தண்டனைக்கு உள்ளாகி நிற்கும் கண்ணகியின் சகோதரர் பெயர் கூட தமிழ் மருதுதான். தண்டிக்கப்பட்ட காவல்துறை அதிகாரியின் பெயர் தமிழ் மறவன். இப்படித் தமிழ் பெயர், உள்ளீடற்ற அடையாளங்களாக மட்டுமே நிற்கிறது; ஜாதியற்ற தமிழர்களாக அவர்களை மாற்றவில்லை என்பதையும் பார்க்கிறோம்.
தமிழர்களுக்கான அடையாளப் பெருமை, ஜாதி ஒழிப்பிலும் சுயமரியாதையிலுமே அடங்கி இருக்கிறது என்ற கருத்தை, மக்களிடம் விதைக்க இயக்கங்கள் முன் வரவேண்டும்.
- விடுதலை இராசேந்திரன்