பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணலின் தொடர்ச்சி.

இந்த வழக்கு மட்டுமல்ல, பல வழக்குகளில் ஜி.ஆர்.சாமிநாதன் நியாயமாக நடந்து கொள்ளவில்லை. அண்மையில் சவுக்கு சங்கர் என்பவரின் வழக்கில் கூட, 15 வழக்குகளை தள்ளிவைத்துவிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 2 செல்வாக்கு உள்ள நபர்கள் அவருடைய அறைக்குச் சென்று, சவுக்கு சங்கர் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று வற்புறுத்தினார்கள் என்றும், அது நீதிமன்ற நடவடிக்கைக்கு எதிரானது என்பதால் உடனடியாக விசாரித்தேன் என்றும் ஜி.ஆர்.சாமிநாதன் கூறியிருக்கிறார். அது ஒருவேளை உண்மை என்றால், தானாகவே (suo moto) அவர்கள் மீது விசாரணை நடத்தலாம் அல்லது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதலாம்.

g r swaminathanநான் கூட 3 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளேன். என்னுடைய வழக்கை உடனே விசாரிக்கக்கூடாது என்பதற்காக, நான் ஜி.ஆர்.சாமிநாதனை சந்தித்து, “ஒழுங்காக என்னுடைய வழக்கை இன்றே விசாரி” என்று சொன்னால் விசாரிக்காமல் ஒத்தி வைத்து விடுவாரா என்ற சந்தேகம் வருகிறது. யாராவது இப்படிக் கேட்டால், வரிசைப்படிதான் விசாரிப்போம் என்று ஒரு நீதிபதியால் சொல்ல முடியாதா? இப்படி நீதிபதி அலுவலகங்களை தேடிச்சென்று முறையிடுவது வழக்கத்தில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஒரு நீதிபதியின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிப்பதாக ஜி.ஆர்.சாமிநாதனின் செயல் இல்லை. இதில் உள்நோக்கம் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். சவுக்கு சங்கர் வழக்கில் மட்டுமல்ல, இதற்கு முன்பு மாரிதாஸ் வழக்கிலும் ஜி.ஆர்.சாமிநாதன் செயல்பாடு அப்படித்தான் இருந்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த மறுநாளே அதை ரத்து செய்தார். விசாரணையே நடத்தாமல் எப்படி தள்ளுபடி செய்யலாம் என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முதல் தகவல் அறிக்கையை ஒரே நாளில் தள்ளுபடி செய்யும் அளவுக்கு என்ன அவசரம் வந்தது என ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவுக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

பள்ளி மாணவர்கள், காவல்துறை, இராணுவத்தைப் போல நீதிபதிகளுக்கும் சீருடை உள்ளது. ஆனால் ஜி.ஆர்.சாமிநாதன் முறையாக சீருடை அணிவதே இல்லை. தான் யார் என்பதை மற்றவர்களுக்கு வெளிக்காட்டிக் கொள்ளும் வகையில் ஜி.ஆர்.சாமிநாதன் உடை அணிகிறாரா என்று தெரியவில்லை. மைக்கேல்பட்டியில் உள்ள கிறிஸ்தவப் பள்ளியில் மதமாற்றம் நடந்ததாகக் கூறி, ஆசிரியை கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை விசாரித்த ஜி.ஆர்.சாமிநாதன், “மக்களிடம் செல்லுங்கள், மதத்தைப் பரப்புங்கள்” என்று பைபிளில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, இவர் மதமாற்றம் செய்திருப்பார் என்பதைப் போன்ற கருத்தை தெரிவித்தார். எப்படி இத்தகையக் கருத்துக்களை ஒரு நீதிபதியால் சொல்ல முடியும்? இதுபோன்ற கருத்துகள் வழக்கை நடத்தும் மாவட்ட நீதிபதியிடம் தாக்கத்தை ஏற்படுத்தாதா? இவையெல்லாம் மிகத் தவறான போக்காகும்.

ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் இல்லை, இந்த சமயத்திலாவது இப்படிப்பட்ட சில நீதிபதிகள் குறித்து நாம் பேசியாக வேண்டும். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி சனாதனத்திற்கு எதிராகப் பேசினார், எனவே அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று ஒருவர் வழக்கு தொடுத்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, அவரவர் கருத்தைச் சொல்ல யாருக்கும் உரிமை உண்டு, எனவே தகுதி நீக்கம் செய்ய முடியாது எனத் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அனிதா சுமந்த். ஆனால் அதே தீர்ப்பில் சனாதனம் என்றால் என்ன? அது எவ்வளவு பெருமைக்குரியது? என்று 10 பக்கங்கள் குறிப்பிட்டார் அந்த நீதிபதி. அதையெல்லாம் கூட்டங்களில் சென்று பேசலாம். ஜி.ஆர்.சாமிநாதன் கூட ஒரு கூட்டத்தில் பேசினார். “ஆத்துக்கு என்று சொல்லதான் விருப்பம்... ஆனால் வீட்டுக்கு என்று சொல்கிறேன்” என்று கூறினார். தான் யார் என்பதை பதிவு செய்வதற்காக அப்படிக் கூறினார்.

அதே நிகழ்ச்சியில் இன்னொன்றையும் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். “என்னுடைய அலுவலகத்தில் பெரியவா (சங்கராச்சாரி) படத்தை வைத்திருந்தேன். ஒருவர் வந்தார். யார் இவர்... உங்களுடைய தாத்தாவா என்று கேட்டார். அவர் அறநிலையத் துறை அமைச்சராகக் கூட இருந்தவர்” என்று அவரைப் போலவே பேசிக்காட்டி, “திராவிட மாடல் போல திராவிடக் குரல் ஒன்று உள்ளது” என நக்கலடித்துச் சொன்னார். ஒரு அரசு தன்னைப் பெருமையாகச் சொல்கிற திராவிட மாடலை, ஒரு இயக்கத்தை பொது இடத்தில் ஒரு நீதிபதி இழிவுபடுத்திப் பேசலாமா? பாரதிய சம்பிரதாயங்களைப் பின்பற்றுங்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் சொல்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். அதென்ன பாரதிய சம்பிரதாயம்? வருணாசிரம சம்பிரதாயம் என்றுச் சொல்லாமல் அதற்கு மாற்றான சொல்லாக பாரதிய சம்பிரதாயம் என்று கூறினார். இவரைப் போன்றவர்களை நீதிக்காக நாம் நம்பியிருக்க முடியுமா?

உச்சநீதிமன்ற நீதிபதி, இரு அமர்வு நீதிபதிகள் சொன்னதை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி ரத்து செய்தால், நாளை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன தீர்ப்பை மாவட்ட நீதிபதி ரத்து செய்யலாம், மாவட்ட நீதிபதி கொடுத்த தீர்ப்பை மாஜிஸ்திரேட் ரத்து செய்யலாம். இது இப்படியே போய்க் கொண்டிருக்கும். இப்படியே போனால் நீதித்துறை என்ன ஆகும்? அதன் மாண்பு என்ன ஆகும்? என்ற நோக்கம்தான் நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதக் காரணம். ஏன் அரசு வழக்கறிஞர்கள் இதை சுட்டிக் காட்டவில்லை என்ற கவலையும் எழுகிறது. அரசு நியமிக்கிற வழக்கறிஞர் சமூக அக்கறை அற்றவர்களாகவோ அல்லது கொள்கைப் புரியாதவர்களாகவோ இருந்திருப்பார்களா எனத் தெரியவில்லை. இதைப் பற்றி அரசு சிந்திக்க வேண்டும்.

நெறியாளர்: பாஜகவைச் சேர்ந்த நபர் தொடுத்த வழக்கில்தான் ஜி.ஆர்.சாமிநாதன் இப்படியொரு தீர்ப்பைக் கொடுத்திருக்கிறார். அவர் கொடுக்கும் தீர்ப்புகள் எல்லாமே குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் விமர்சனங்கள் எழுகின்றனவே?

கொளத்தூர் மணி: பாஜகவைச் சேர்ந்தவர்தான், ஆனால் “எனக்கு உருள வேண்டும் என்று ஆசையாக உள்ளது” எனச் சொல்கிறார். உடலை தேய்த்துக் கொள்ள சில விலங்குகள்தான் அவ்வாறு செய்து கொள்ளும் பழக்கத்தை வைத்துள்ளன. இங்கு மனிதர் ஒருவர் கேட்கிறார்! 2016-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சரே, கர்நாடகா மற்றும் கரூரில் எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் சம்பவங்களைக் குறிப்பிட்டு, இரண்டும் மனித மாண்புக்கு எதிராக உள்ளது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. பாஜகவின் அமைச்சரே இதற்கு எதிராகத்தான் வழக்கு தொடுத்திருக்கிறார் என்பதை இப்போது வழக்கு தொடுத்தவர் புரிந்துகொள்ள வேண்டும்.

(நிறைவு)

ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்புக்கு அதிருப்தி!

பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஜி.ஆர்.சாமிநாதன், பாலாஜி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில் ஜி.ஆர்.சாமிநாதன் மட்டும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் உடனே விசாரணைக்கு எடுத்ததாகக் கூறினார் ஜி.ஆர்.சாமிநாதன். அத்துடன் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தையும் ரத்து செய்தார். நீதிபதி பாலாஜி குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யாததால், வழக்கு மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரனுக்கு மாற்றப்பட்டது.

“நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவரசர கதியில் உத்தரவு பிறப்பித்துள்ளார். மற்றொரு நீதிபதி பாலாஜியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. காவல்துறைக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளார். பதில்மனு தாக்கல் செய்ய அரசுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எந்தவொரு நபரும் நியாயமான விசாரணை இல்லாமல் தீர்ப்பளிக்கக் கூடாது என்பது சட்டக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் முதல் பாடம்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஒருதலைப்பட்சமாக உள்நோக்கத்தோடு ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்குகிறார் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக நீதிபதி ஜெயச்சந்திரனின் கருத்து அமைந்துள்ளது.

Pin It