உள்நோக்கத்தோடு வழங்கப்படும் தீர்ப்புகள்

பிறர் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக Voice of South யூடியூப் சேனலுக்கு கழகத் தலைவர் அளித்த நேர்காணல்.

நெறியாளர்: ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புகார் மனு அளித்து உள்ளீர்களே! எதனால்?

கொளத்தூர் மணி : கரூர் மாவட்டம் நெரூரில் ஒரு துறவியின் சமாதிக்கு வருகிறவர்கள் உண்ணும் எச்சில் இலைகளில் பக்தர்கள் உருளுவதை ஒரு பழக்கமாக வைத்திருந்துள்ளார்கள். அதை நீண்டகாலமான பழக்கம் என்றுசொல்லி, மனித மாண்புக்கு எதிரான ஒரு செயலை செய்து கொண்டிருந்தார்கள். இதைத் தடை செய்ய வேண்டுமென்று தலித் பாண்டியன் என்பவர் 2015ஆம் ஆண்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி திரு மணிக்குமார், நீதிபதி திரு வேலுமணி ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், கர்நாடகாவின் தென் கடலோரப் பகுதியில் இதேபோன்று நடந்த நிகழ்வையும், அந்த வழக்கில் 2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை செய்து அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டினர். மனித மாண்புக்கு எதிரான அந்த நிகழ்வு இங்கும் தடை செய்யப்பட்டது.

ஆனால் இவ்வளவு ஆண்டுகள் கழித்து இப்போது மீண்டும் அந்த பழக்கத்தை தொடர வேண்டுமென்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஒருவர். எச்சில் இலையில் உருளுவதற்கு அனுமதி வேண்டுமென்று 22ஆம் தேதி அரசு அதிகாரிகளிடம் முறையிட்டிருக்கிறார். அந்த மனு அதிகாரிகளின் கைகளை சென்றடையவே 2 அல்லது 3 நாட்கள் ஆகியிருக்கக்கூடும். ஆனால் அதுவரை அவரால் காத்திருக்க முடியாமல், ஏப்ரல் 25ஆம் தேதி வழக்கு தொடுத்தார். நான்கே நாட்களில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. ஏப்ரல் 29ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் காவல்துறையை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை என்று, நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் தானாகவே சேர்த்துக்கொண்டார்.

உடனே காவல்துறை பதிலளிக்க வேண்டுமென்று கூறி விசாரணையை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த மாதம் (மே) 18ஆம் தேதிதான் அந்த நிகழ்ச்சி நடக்கவே போகிறது. ஆனாலும் நீதிபதி விசாரணைக்கு அவ்வளவு அவசரம் காட்டினார். அடுத்த நாள் விடுமுறை வருகிறது என்பதால், அதற்குள் தானே தீர்ப்பு வழங்கிவிட வேண்டுமென்று ஜி.ஆர்.சாமிநாதன் அவசரம் காட்டியிருக்கிறார் என்று இதைப் புரிந்து கொள்கிறேன். அடுத்தநாள், அதாவது ஏப்ரல் 30ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பு விவரங்களை சேகரித்து வாதாடுவதற்கு கூட உரிய வாய்ப்பு வழங்கப்படவில்லை. உடனடியாக ஒரே நாளில் இரு நீதிபதிகள் அமர்வின் முந்தைய தீர்ப்பை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார் ஜி.ஆர்.சாமிநாதன்.

சரி, அதன்பிறகு இந்த வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கியிருக்கலாம். நீண்ட விசாரணை தேவைப்படும் வழக்கு அல்ல இது. குறைந்தது 10ஆம் தேதிக்குள்ளாவது தீர்ப்பை வழங்கியிருக்கலாம். ஆனால் மே 18-ஆம் தேதி அந்த நிகழ்வு நடைபெறும் நிலையில், மே 17-ஆம் தேதிதான் தீர்ப்பை வழங்கினார். “எச்சில் இலையில் உருளுவதற்கு உனக்கு உரிமை உண்டு, மதம் அந்த சுதந்திரத்தை வழங்கியிருக்கிறது” என்பது அத்தீர்ப்பு. இது தவறானது என்று அரசுத் தரப்பு கருதினால் கூட, மேல்முறையீட்டுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்காத வகையில் தாமதித்து தீர்ப்பு கொடுத்திருக்கிறார். எனவே இவையெல்லாம் திட்டமிட்டு நடந்தது போல தெரிகிறது.

உச்சநீதிமன்றம் தடை செய்த ஒன்றை, அதனை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்து, இப்போது ஒரு நீதிபதியான ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். மதச் சுதந்திரம் என்றாலும் மனித மாண்புக்கு எதிராக இருக்கக்கூடாது என்பது முன்பு அவர்கள் அளித்த தீர்ப்பு. அரசியலமைப்பு நெறிக்கு எதிரானது என்பதையெல்லாம் கருத்தில்கொண்டே அத்தீர்ப்பு வழங்கப்பட்டது. மதத்தின் பெயரால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் ‘உடன்கட்டை ஏறுதல்’ இப்போதுவரை தொடர்ந்திருக்கும். இப்போது ஜி.ஆர்.சாமிநாதன் அளித்திருக்கும் தீர்ப்பில், “இரு நீதிபதிகள் அமர்வு நடத்திய விசாரணையில் எதிர் மனுதாரர்களாக பக்தர்களை சேர்த்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பதால் அந்தத் தீர்ப்பை ரத்து செய்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

ஒருவேளை ஜி.ஆர்.சாமிநாதனுக்கு இதில் முரண்பட்ட கருத்து இருக்குமானால் கூட, தலைமை நீதிபதிக்கு இதைத் தெரிவித்து 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க பரிந்துரைக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாமல், இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பு செல்லாது இன்று இவராகவே அறிவிக்கிறார். இதுபோல இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை ஒரு நீதிபதி ரத்து செய்யலாமா என்பது குறித்த அரசியலமைப்புச் சிக்கல்கள் தொடர்பாக ஏற்கெனவே சில வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளன. அது தவறு என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் ஒரு நீதிபதி, அடுத்து இரு அமர்வு, அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, பிறகு அமர்வுகள் என முறையீட்டுக்கு செல்லலாம். ஐந்து நீதிபதிகள் அல்லது 13 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு கூட செல்ல அரசியலமைப்புச் சட்டத்தில் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை ஒரு நீதிபதியான ஜி.ஆர்.சாமிநாதன் செல்லாது என அறிவிப்பது அரசியலமைப்பு நடைமுறைக்கு முரணானது.

நெறியாளர்: ஆனால் “இது பழமையான நிகழ்ச்சி, 150 ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறார்கள், பக்தர்கள் தானாகவே உருளுகிறார்கள். யாரும் வற்புறுத்திச் செய்யவில்லை. எனவே அனுமதி கொடுக்கலாம்” என்று ஜி.ஆர்.சாமிநாதன் குறிப்பிட்டுள்ளாரே?

கொளத்தூர் மணி: 150 ஆண்டுகளாக நடைபெறுகிறது என்று சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? அவர்கள் விருப்பம்போல சொல்லிக் கொள்வார்கள். இந்து மத புராணக் கதைகள் கூட அப்படித்தான் உள்ளன. உச்சநீதிமன்றம் தடை செய்த கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம், 500 ஆண்டுகளாக பழக்கத்தில் இருந்தது. எனவே அப்படிப் பார்த்தால்கூட இதில் கர்நாடகாவின் பழக்க வழக்கத்தை விட கரூர் நிகழ்வின் பழக்க வழக்கம் என்பது சுமார் 350 ஆண்டுகள் குறைவுதான். சரி, காவல்துறையை வழக்கில் இவராகவே இணைத்தார். காவல்துறையை விசாரிப்பதற்கு என்று வேறு அமர்வு இருக்கிறது. இவர் ரிட் மனுவை விசாரிக்கும் அமர்வில் உள்ளார். எனவே உரிய அமர்வுக்கு விசாரணையை மாற்றாமல், இவர் விசாரித்து தீர்ப்பை வழங்கியிருக்கிறார். இதை சுட்டிக்காட்டி நாளை ஒரு மாவட்ட நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பை ரத்து செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். நீதித்துறையின் மாண்பு என்ன ஆவது என்று யோசித்துப் பாருங்கள். ஜி.ஆர்.சாமிநாதன் அளித்த தீர்ப்பும் அப்படித்தான் நீதிமன்றத்தின் மாண்பை சீர்குலைக்கிறது. நீதிமன்றப் படிநிலைகளை மீறி ஜி.ஆர்.சாமிநாதன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார். இது வீண் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்னொன்றையும் ஜி.ஆர்.சாமிநாதன் அந்தத் தீர்ப்பில் கூறியிருக்கிறார். “Right to move ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்கின்ற உரிமை உள்ளது. இதில் move என்பதை நடந்து செல்வதையோ அல்லது வாகனங்களில் செல்வதையோ மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. அங்கபிரதட்சனமும் ஒரு move-தான். அதுவும் Right to move-தான்” என்று சொல்லியிருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். சரி, இதையே எடுத்துக் கொண்டு, நாளையே ஒரு பத்து பேர் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று உருண்டு செல்வதற்கு எங்களுக்கு உரிமை உண்டு, போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு இடதுபுறமாகவே உருண்டு செல்கிறோம் என்று கூறி, உருண்டு சென்றால் போக்குவரத்து என்ன ஆவது? எனவே இப்படியெல்லாம் அபத்தமான விளக்கங்களைச் சொல்லி, ஒரு தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதே நமது கேள்வி.

“உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். ஆனால் கரூர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, எல்லா சமூகத்தினரும் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருளுகிறார்கள். எனவே அதுவும் இதுவும் ஒன்றல்ல” என கூறியிருக்கிறார் ஜி.ஆர்.சாமிநாதன். இதையெல்லாம் தீர விசாரித்து அறிந்த பிறகே இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியது. அரசியல் சட்டம் தனி மனிதர்களைத்தான் சொல்கிறதே பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்றெல்லாம் பிரித்துச் சொல்லவில்லை. யார் சாப்பிட்ட எச்சில் இலையாக இருந்தாலும் அதன் மீது உருளுவது மனித மாண்புக்கு எதிரானது.

மறுமணம் குறித்து பெரியார் போன்ற தலைவர்கள் பேசினார்கள், பரப்புரை செய்தார்கள். அது பார்ப்பனர் அல்லாதோருக்கு மட்டும்தான் என்று பார்ப்பனப் பெண்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டார்களா? முன்பெல்லாம் கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் மொட்டை அடிக்கப்பட்டு, மூலையில் அமர வைக்கப்படுவார்கள். ஆனால் இப்போது மிக இயல்பாக பொதுவெளிக்கு வருகிறார்கள். மறுமணம் செய்கிறார்கள். அது வரவேற்கப்பட வேண்டியதுதான். பார்ப்பனர் அல்லாதோருக்கு மட்டும் பெரியார் இதைச் சொல்லவில்லை. பார்ப்பன சமூகத்துப் பெண்களுக்கும் சேர்த்தே சொன்னார், அவர்களும் அதனால் இன்று பயன் பெற்றார்கள் என்பதற்காக இதை ஒப்பிடுகிறேன்.

மத உரிமையை அடிப்படை உரிமை என்று சொல்கிறார்கள். சரி அடிப்படைக் கடமைகள் சிலவற்றையும் அரசியல் சட்டம் சொல்கிறது. கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் கோரிக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவியல் மனப்பான்மை வேண்டும், எதைப்பற்றியும் ஆய்ந்து பார்க்கிற மனப்பான்மை வேண்டும், மனிதநேயம் வேண்டும், சமூகத்தை சீர்திருத்த வேண்டும் என்றும் அரசியல் சட்டம் சொல்கிறது. இவையெல்லாம் கடமைகள். எச்சில் இலையில் உருளுவது இதற்கெல்லாம் எதிராகத்தானே இருக்கிறது?

எச்சில் இலையில் உருண்டால் ஆன்ம பலம் வருகிறது, தோல் நோய்கள் தீர்க்கப்படுகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள். பார்ப்பனர் அல்லாதோருக்கு ஆன்ம பலம் வந்தால் மட்டும் போதுமா? பார்ப்பனர்களுக்கு வர வேண்டாமா? பார்ப்பனர்களின் தோல் நோய்கள் தீர வேண்டாமா? அவர்கள் ஏன் எச்சில் இலைகள் மீது உருளுவது இல்லை? சரி, மத உரிமை என்ற பெயரில் உடன்கட்டை ஏறுகிறேன் என்று எந்த பெண்ணாவது கேட்டால், அனுமதிக்க முடியுமா? மூடநம்பிக்கையின் அடிப்படையில் மத உரிமையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று ஏற்கெனவே வேறொரு தீர்ப்பில் ஜி.ஆர்.சாமிநாதனே கூறியிருக்கிறார். இப்போது அவரே இப்படி மாற்றிச் சொல்கிறார். அதுமட்டுமல்ல, நீதிமன்றத்திற்கு இதைத் தடை செய்ய உரிமையில்லை, அரசுதான் தடை செய்திருக்க வேண்டுமென்றும் கூறுகிறார். நீதிமன்றத்திற்கு அனுமதிக்க மட்டும் உரிமை இருக்கிறதா என்று நாம் கேட்கிறோம்.

(தொடரும்)

Pin It