சங்கிகள் நீதிபதிகளாக அமர்ந்து கொண்டு சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள். ம.பி மாநிலத்தில் ஒரு கூத்து நடந்திருக்கிறது.

1954ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் நோக்கமே ”வெவ்வேறு மதத்தினருக்கு இடையில் நிகழும் திருமணங்களை சட்டப்படி பாதுகாப்பது தான். ஆனால் இப்படி நடக்கும் திருமணங்கள் செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறார் ஒரு சங்கி நீதிபதி.

இந்துப் பெண்ணும், முஸ்லிம் ஆணும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடிவு செய்கிறார்கள். பெண் வீட்டாரின் கொலை மிரட்டலால் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தை அணுகினார்கள் அந்த தம்பதியினர். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, பாதுகாப்பு வழங்க முடியாது என்று கூறியதோடு, முஸ்லீம் மத சட்டத்தின் படி உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாத இந்த திருமணம் செல்லாது என்று வழக்கின் நோக்கத்திற்கு அப்பால் சென்று தீர்ப்பு வழங்குகிறார்.

திருமணம் என்பது கூட ஒரு பக்கம் இருக்கட்டும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி பாதுகாப்பு கேட்டாலே அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் சட்டம் 21 கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது தான் சட்டம். அதைக்கூட பரிசீலிக்க இந்த நீதிபதி தயாராக இல்லை.

சங்கிகள் முழங்கும் ‘லவ் ஜிகாத்’ என்ற முழக்கத்திற்கு சட்ட வடிவம் அளிக்க முயல்கிறார் இந்த சங்கி நீதிபதி. சிறப்புத் திருமணத்தை மேலும் எளிமையாக்க வேண்டும் என்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மற்றொரு செய்தியையும் குறிப்பிட வேண்டும். இப்போது தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட், மத மறுப்பு திருமண வழக்கு ஒன்றில் தெளிவான தீர்ப்பை வழங்கியிருக்கிறார் (Shafin jahan VS Asokan KM 2018). சந்திரசூட் நீதிபதியாக இருந்த போது வழங்கிய தீர்ப்பில், திருமணத்துக்கான அடிப்படை இணையர்களுக்கு உள்ளேயான நெருக்கம், அது முற்றிலும் அவர்களுக்கான தனித்துவமான உரிமை, அதை சமூகம் ஏற்கிறதா? இல்லையா? என்ற கேள்விக்கு இடமில்லை (Social approval for intimate personal decisions is not the basis for recognising them) என்று தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறார்.

சட்டம் இப்படி தெளிவாக இருந்தாலும் சங்கி நீதிபதிகள் ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டு சட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து வருகிறார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களிலும் தான்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It