“திருமணம் என்பதில் சம்மந்தபட்ட ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தவிர, மற்ற எவருக்கும் அதில் முடிவெடுக்க உரிமையில்லை. கட்டாயத் திருமணங்கள் ஒழிக்கப்பட்டு, மேலை நாடுகளைப் போல நம் நாட்டிலும் அவரவர் வாழ்க்கைத் துணையை அவரவரே தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்” என்று ஒரு நூற்றாண்டுக்கு முன்பே பேசியவர் பெரியார். பேசியதோடு மட்டுமில்லாமல் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன மதச் சடங்குகளில் இருந்து விடுவித்துக் கொண்டு, சுயமரியாதை உணர்வோடு இணையர்களாய் கரம் கோர்ப்பதற்கான சுயமரியாதைத் திருமண முறையையும் பெரியார் அறிமுகப்படுத்தினார்.

முதல் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது 1928ஆம் ஆண்டில். இன்னும் 4 ஆண்டுகளில் சுயமரியாதைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்து ஒரு நூற்றாண்டு ஆகப்போகிறது. பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடைத்து விட்டது. ஆனால் இன்றைக்கும் தமிழ்நாட்டைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் இத்தகைய சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. அதனாலேயே காதல் திருமணங்களோ அல்லது ஜாதி கடந்த திருமணங்களோ பிற மாநிலங்களில் நடைபெறுவதும் சுலபமான ஒன்றாக இல்லை.

அந்த நிலை இனிவரும் காலங்களில் மாறக்கூடும் என்பதற்கான அறிகுறியாய் அமைந்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு. ஜெர்மனியில் முதுகலை மாணவராக இருக்கும் ஒருவர், கேரளாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண்ணை காதலிப்பதாகவும், இதைத் தெரிந்து அவரது குடும்பத்தினர் அப்பெண்ணை வீட்டுச் சிறையிலேயே வைத்திருப்பதாகவும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். காணொளி காட்சி மூலம் இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள், “பெற்றோரின் அன்போ அக்கறையோ, வயது வந்தவரின் விருப்பத்தை, உரிமையைப் பறித்து விடாது” என்று மிக அழுத்தமாக கூறியுள்ளனர். வயது வந்த இளம்பெண்ணை சட்டவிரோதமாக வீட்டில் அடைத்து வைத்த பெற்றோர் உடனடியாக அப்பெண்ணை விடுவிக்க வேண்டும் என்றும், மனுதாரரான அவரது காதலருடன் செல்லலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருமண விவகாரத்தில் பெற்றோராக இருந்தாலுமே இணையர்களை தாண்டி, வேறு எவருக்கும் தலையிட உரிமையில்லை என்ற முன்மாதிரியான இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டியது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It