ஜனநாயக சக்திகள் வேட்டையாடப்படும் சுடுகாடாக மாறிவருகிறது இந்தியா. நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறையையும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் விமர்சித்ததாகக் கூறி மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவருமான துஷ்யந்த் தவேவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது அகிலஇந்திய பார் கவுன்சில்.

jayant patel

சமீபத்தில் என்.டி.டி.வி.நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற தவே, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயந்த் பட்டேலின் இராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்தபோது நீதிபதிகளின் நியமன அமைப்பான 'கொலிஜியத்தின் சுயேட்சைத் தன்மை பெயரளவில் மட்டுமே இருக்கிறது' என்றும் 'நீதித் துறையில் இது ஓர் கருப்பு நாள்' என்றும் குறிப்பிட்டார். இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பாரபட்சமான போக்கு குறித்தும், இதில் உள்ள அரசியல் தலையீடு குறித்தும் பேசிய தவே நீதிபதி ஜெயந்த் பட்டேலின் நேர்மைத் தன்மையை அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

தேசத்தின் மாபெரும் கலங்கமான 'இர்ஷத் ஜகான்' போலி எண்கவுண்டர் வழக்கில் தைரியமாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டவர்தான் நீதிபதி ஜெயந்த் பட்டேல். வெறும் உத்திரவிட்தோடு மட்டுமல்லாமல் அதை கண்காணிக்கவும் செய்து வந்தார். அவர் அப்போது அகமதாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை (பொறுப்பு) நீதிபதியாக இருந்தார். அவரின் இந்த உத்திரவானது தற்போதைய பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவையும், அம்மாநில காவல்துறையையைும் உலுக்கியது மட்டுமல்ல பா.ஜ.க மோடி அரசின் மதவெறி முகத்தையும் அம்பலப் படுத்தியது என்ற கதை நாம் அறிந்ததே.

சி.பி.ஐ விசாரணைக்குப் பின் சூடுபிடித்த வழக்கு இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட நால்வரும் பச்சைப் படுகொலை செய்யப்பட்டுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியது. 22 குஜராத் காவலர்கள்மேல் வழக்கு தொடர்ந்த சி.பி.ஐ அப்போதைய மோடியின் அமைச்சர் அமித்ஷாவையும் வழக்கு வட்டத்துக்குள் கொண்டுவந்தது. வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் சிறையில் இருந்த டெபுடி ஐ.ஜி வன்சாரா கூறினார் "நான் அமித்ஷாவால் தவறாக வழிநடத்தப் பட்டேன்" என்று. மோடியை கொலைசெய்ய முயன்றதாகக் கூறி இர்ஷத் ஜகான் என்ற 19 வயது கல்லூரி மாணவி உள்ளிட்ட 4 நபர்களை மோடி தலைமையிலான குஜராத் அரசு போலி மோதல் படுகொலை செய்யததின் மூலம் ஒரே இரவில் சூப்பர்ஸ்டாராகி விட்டார் மோடி. இஸ்லாமிய பயங்கரவாதிகளின் குறி எனறால் சும்மாவா!? நரேந்திர மோடியை ஆல்இந்தியா சூப்பர்ஸ்டாராக்க அமித்ஷா செய்த பல்வேறு லீலைகளில் முக்கியமானது இது.

பல்வேறு தகிடு தித்தங்களுக்கு பிறகு அமித்ஷா வழக்கில் இருந்து விடுதலையானார். டேவிட் ஹெட்லியிடம் 'போட்டு' வாங்கிய அரசு வழக்கறிஞர் உஜ்வல் நிகம், இஷ்ரத் ஜகானை இஸ்லாமிய தற்கொலைப் படையைச் சேர்ந்தவர் என்பதை ஆழமாக 'நிறுவி' விட்டார். உலகிலேயே குற்றவாளி பெயரை சாய்ஸ் கேட்டு பெற்ற ஒரே நபர் உஜ்வலாக மட்டுமே இருக்க முடியும். பிரதிபலனாக பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தீர்ப்புக்கு பிறகு தலைமை நீதிபதியாக அனைத்து தகுதிகள் இருந்தும் ஜெயந்த் பட்டேல் கடந்த 2016 பிப்பிரவரியில் கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு சாதாரண நீதிபதியாகவே தூக்கி வீசப்பட்டார். தற்போது தலைமை நீதிபதியாக வேண்டிய சூழலில் மீண்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு சாதாரண நீதிபதியாகவே கொலிஜியத்தால் பணிமாற்றம் செய்யபட, வெறுத்துப்போன நீதிபதி நீதிப்பரிபாலன முறையின்மீதே நம்பிக்கை இழந்து ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தவே 'தி வயர்' பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையிலேயே '2001ம் ஆண்டு டிசம்பர் 3ல் பதவி ஏற்ற 5 நீதிபதிகளில் 4 பேர் ஏற்கனவே தலைமை நீதிபதிகளாக பதவி வகிப்பதை குறிப்பிட்டு பட்டேல் இதுவரை தலைமை நீதிபதியாக நியமிக்கப் படாதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் ஒன்பது உயர்நீதிமன்றங்களில் தலைமை நீதிபதிகள் பட்டியல் ஒன்று கொலிஜியத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் அதில் எல்லோருமே பட்டேலுக்கு இளையவர் என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

தற்போது குஜராத் மாநில வழக்கறிஞர் சங்கம் நீதிபதி ஜெயந்த் பட்டேல் நடத்தப் பட்ட விதம் குறித்து கண்டணம் தெரிவித்துள்ளதோடு வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டுள்ளது. மேலும் கொலிஜிய நியமனம் தொடர்பாக வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளது. நாடு முழுக்க வழக்கறிஞர் போராட்டம் பரவுவதற்கான சூழலும் உள்ளது.

மோடியின் பாசிச கொள்கைக்கு எதிராக யார்பேசினாலும் ஒன்று சுட்டுக் கொல்வது அல்லது நெருக்கடியையும் மன உலைச்சலையும் உருவாக்கி வீட்டுக்கு அனுப்புவது என்ற வழிமுறைகளை இந்துத்துவ கும்பல் வெளிப்படையாகவே செய்து வருகிறது. இத்தகு ஜனநாயகப் படுகொலை குறித்து யார்கேள்வி எழுப்பினாலும் அர்களை மிரட்டும் செயலை அது தொடர்ந்து செய்கிறது. அதில் ஒன்றுதான் துஷ்யந்த் தவேவுக்கு அனுப்பிய நோட்டிஸ்.

ஆளும் கும்பலின் கைப்பாவைகளாய் இழிந்துபோய் நாற்றமடிக்கும் இந்த சட்டமுறையும் அடிமைகளின் கூடாரமான இந்த பார் கவுன்சிலும் நமக்குத் தேவையா?

இருக்கின்ற ஒருசில நேர்மையான அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு சமரசமில்லாத இந்துத்துவ பாசிசத்தை கட்டமைக்க பா.ஜ.க முயலுக்கின்ற இந்த சூழலில் ஒரு குறைந்தபச்ச செயல் திட்டத்தையாவது முன்வைத்து அனைத்து சனநாயக சக்திகளும் ஒரு குடையின் கீழ் திரளுவது அவசியம் என்பதை இதுபோன்ற ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன.

- பாவெல் இன்பன்

Pin It